சாதிப்பிரச்சனைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்

வழக்குரைஞர் ராஜேஷ் சுக்லா EPW இதழில் எழுதிய ஒரு கட்டுரையை தழுவி எழுதப்பட்டது

நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள் நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால் “நீதிமன்ற அவமதிப்பு”க்குள்ளாக நேரிடும். இத்தகைய பாதுகாப்பு வளையத்துக்குள் கீழ் உள்ள நீதிமன்றங்களின் உயர்சாதிச் சார்பு குறித்துச் சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டியது அவசியம்.

இன்றைய நீதிமுறைக்கும் சாதி அமைப்பிற்குமுள்ள உறவை விளங்கிக் கொள்ள புகழ்பெற்ற வழக்குரைஞர் ஃபாலி எப். நாரிமன் கூறிய கூற்று ஒன்று உதவக்கூடும். அவர் சொன்னார் “முன்னாள் சட்ட அமைச்சரும் ஒரு தலித்துமாகிய பி.சிவசங்கர் ஒருமுறை கூறினார்: ஒரே நாளில் இரு நீதிபதிகள் பதவி ஏற்றால் அவர்களில் மேல்சாதிக்காரரை முதலில் பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பது என்பதை சில மாவட்டங்களில் கொள்கையாகவே வைத்துள்ளனர். அப்போதுதான் பதவி உயர்வு வரும் போது அவருடன் பதவி ஏற்ற குறைந்த சாதிக்காரரைக் காட்டிலும் அவருக்கு முன்னுரிமைகிட்டும்”.

சில வழக்குகளும் தீர்ப்புகளும்:

மே 2005ல் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) யின் தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (1939) கீழ் கைது செய்யப்பட்டார். அவ்வங்கியின் பொது மேலாளரான பாஸ்கர் ராம்டெக் என்ற தலித் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இக்கைது நடந்தது. “பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில்” பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்துதல் என்கிற நிபந்தனை இவ் வழக்கில் பொருந்தி வரவில்லை என மும்பை உயர்நீதிமன்றம் கூறியது. ஒரு தனி அறையில் சம்பவம் நடந்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற் பறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது என்பது போல தீர்ப்பை வாசிக்கும் ஒருவருக்குத் தோன்றக் கூடும். உண்மை என்னவெனில் உலக வர்த்தக மையத்தில் உள்ள IDBI வளாகத்தில் இருக்கும் தலைவரின் அறையிலேயே இச்சம்பவம் நடந்தது.

பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான நிரப்பப்படாத காலியிடங்களைப் பின்னோக்கி நிரப்புவது தொடர்பாகப் பேசப்போன சந்தர்ப்பத்தில்தான் சம்பவம் நடைபெற்றது. வன்கொடுமைச் சட்டத்திற்குப் பதிலாக “சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1969”ல் வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது. காவல் துறையும் அவ்வாறே செய்தது. இவ்விரு சட்டங்களின் அடிப்படையிலும் நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்புகள் வழங்கியுள்ளது என்று அறிவது பலனுடையதாக இருக்கும்.

1996ல் PCRA சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் நாயனார் என்பவர் மீது வழக்கொன்று தொடரப்பட்டது. தலைச்சேரித் தொகுதிக்கு நடைபெற்ற கேரளச் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின்போது குட்டப்பன் என்பவர் பற்றி உதிர்த்த “சாதியக்” கருத்துக்களுக்காக அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன் நாயனார் பேசும் போது “அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்” என இகழ்ந்து பேசினார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அவர் பேசியதை சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறினார். “தீண்டாமை நோக்கில் இந்த அவமானம் மேற்கொள்ளப்பட்டது அல்லது அவமதிக்க முயற்சி செய்யப்பட்டது” என்கிற அடிப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது என கூறமுடியாது என்பதால் PCRA சட்டத்தின்கீழ் இக்குற்றம் நடந்ததென்று சொல்ல இயலாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரி, வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வருமா என்றால், மேற்படி சம்பவம் பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றதுதான் என்றாலும் தீண்டாமை அடிப்படையில் அவமதிக்கப்படுதல் என்கிற குற்றம் இங்கே முழுமையடையவில்லை. ஏனெனில் கிருஷ்ணன் நாயனார் அவ்வாறு பேசும்போது குட்டப்பன் எதிரில் இல்லை என்றது நீதிமன்றம். மலசலம், குப்பை, செத்த உடலின் பகுதிகள், இவை போன்ற எதையேனும் பட்டியல் சாதியினரின் வீட்டுக்குள் அல்லது அருகில் வீசி எறிவது போன்ற நடவடிக்கைகளில் வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தின் போது எதிரே இருக்கவேண்டும் என்பது தேவையில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

புல்சிங் வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீண்டாமை நோக்கில் அவமதிக்கும் உத்தேசத்துடன் சம்பவம் நிகழ்ந்ததா என்கிற பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘லோதி தாக்கூர்’ என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபு புல்சிங், ‘சமர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லாவின் வீட்டை இடித்ததோடு பல்லாவின் மனைவியையும் 5 நாட்கள் கடத்திச்சென்று விட்டான். டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்லி பல்லாவை மிரட்டவும் செய்தான். இது குறித்து போலீசில் புகார் செய்ததற்காக பல்லாவை நோக்கி, “ஏய் சமரா, என்னைப்பற்றி புகாரா செய்தாய்? என்னை அவமதித்ததற்காக உன்னிடம் 5000 ரூபாய் வாங்கியே தீருவேன்” என்றான்.

புல்சிங் மீது இன்னொரு வழக்கும் உண்டு. சமர் சாதியைச் சேர்ந்த பர்சாதி என்பவருடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பாக ஒரு நிகழ்வில் பர்சாதியை நோக்கி, “ஏய் சமர்…! இங்கிருந்து ஓடு. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொல்வேன்,” என்றான். சாலை வழியே தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பர்சாதியின் மனைவியை நிறுத்தி, “ஏய் சமரிச்சி, இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா, இந்த வழியே நீ போனால் உன்னை உதைப்பேன்’ என்றும் கூறினான்.

PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழ் இவ்விரு சம்பவங்களின் அடிப்படையிலும் இரு தனித்தனி வழக்குகள் புல்சிங்கின் மீது பதிவு செய்யப்பட்டன. இப்பிரிவின் கீழ் புல்சிங்கின் குற்றங்கள் அமைகின்றனவா என்பதை அறிய உயர்நீதிமன்றம் இரு அளவு கோல்களை உருவாக்கியது.

(i) பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சார்ந்தவராக இல்லாத போதிலும் கூட இந்த அவமானம் நேர்ந்திருக்குமா? ஆம் எனில் 7(d) பிரிவு இதற்குப் பொருந்தாது. மாறாக பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே இந்த அவமானம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், அதாவது அவர் உயர்சாதியாக இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திராது என்றால் புல்சிங் செய்தது தீண்டாமை எனக் கருதலாம் எனக் கூறிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமிடையே வேறு பிரச்சினைகள் இருக்குமானால் சாதி ரீதியாக திட்டினாலும் கூட அது “தீண்டாமை”யைக் கடைபிடித்ததாகாது என்று வரையறுத்தது. 7(d) பிரிவில் இல்லாத “மட்டுமே” என்கிற சொல்லை நீதிமன்றம் இங்கே தன் வசதிக்கேற்ப சேர்த்துக் கொண்டது.

(ii) இரண்டாவது கேள்வி: உயர்சாதிக்காரர்களுக்கும் தாழ்ந்த சாதிக்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினை தனிப்பட்ட காரணங்களினால் இருக்கிற தென்றால் செய்யப்பட்ட அவமானம் “தீண்டாமை” அடிப்படையிலாகாது. சண்டை, தகராறு எதுவும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட அவமானமே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றது நீதிமன்றம்.

PCRA சட்டத்தின் மூலவடிவம், “தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் – 1955’, என்பது 1976ல் தான் அதற்கு PCRA சட்டம் எனப்பெயரிடப்பட்டது. தீண்டாமை பேசுவது, கடைபிடிப்பது ஆகியவற்றைத் தண்டிப்பதற் காகவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. தீண்டா மையை ஒழிப்பது என்கிற அரசியல் சட்ட குறிக் கோளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே இது. ஒரு சட்டத்திற்கு இவ்வாறு பல விளக்கங்கள் சாத்தியமானால், சட்டம் என்ன குறிக்கோளுக்காக இயற்றப்பட்டதோ அதை நோக்கியதாக உள்ள விளக்கத்திற்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக தனது அளவுகோல்களை நிர்ணயித்துக் கொண்டது நீதிமன்றம். சாதீய ரீதியான இழிவுகள் தொடர்புள்ள எந்தச் சண்டை, தகராறுகளுக்கும் சாதீயக் காரணங்களே காரணமாக உள்ளன என்பதே எதார்த்தம். அவை என்னவோ இரு “சமமானவர்களுக் கிடையே” நடைபெறும். தனிப்பட்ட சண்டை அல்ல. “ஒரு சமரை ‘சமர்’ என அழைப்பது அவரை அவ மதிப்பதாக இருக்கலாம். ஆனால் அது தீண்டாமை அடிப்படையிலான அவமதிப்பாக இருக்க வேண்டியதில்லை”, எனவும் நீதிமன்றம் கூறத்துணிந்தது.

மேற்கண்ட இரு அளவுகோல்களின் அடிப்படையில் பல்லா, பர்சாதி என்கிற இரு சமர்களும் புல்சிங்குடன் தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த தால் மேற்படி குற்றங்கள் இரண்டுமே “சாதாரண அவமதிப்புகள்” (Insults simpliciter) தானே ஒழிய தீண்டாமை அடிப்படையிலானதல்ல எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். பல்லா, பர்சாதி, பார்சாதியின் மனைவி ஆகியோர் பட்டியல் சாதியில் பிறந்தவர்கள் என்பது வழக்குடன் தொடர்பில்லா ஒரு சம்பவம். பல்லா எந்த சாதியில் பிறந்திருந்த போதிலும் அந்த அவமானம் அன்று நிகழ்ந்திருக்கும். PCRA சட்டத்தின் 12ம் பிரிவின்படி குற்றச்சம்பவம் தீண்டாமை அடிப்படையிலானது என்பதை நீதி மன்றம் முன் ஊகித்துக் கொள்ளவேண்டும். (Presume). ஆனால் உயர்நீதி மன்றமோ பிரிவு 12ன் படியான முன் ஊகிப்பு என்னவாக இருந்த போதிலும் இவ்விரு வழக்குகளையும் பொருத்தமட்டில் 7(d) பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என அதிரடியாகக் கூறியதோடு புல்சிங்கை இரு வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தது.

1997ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு: ஹரிதாஸ் என்பவர் பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்தி மிரட்டியதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இது குறித்த புகாரைச் சற்று தாமதமாகவே கொடுத்திருந்தார். இந்தத் தாமதமத்திற்கு கூட ஹரிதாஸ் தான் காரணம் எனவும், புகார் கொடுத்தவர் சொல்லியிருந்தார். புகாரில் வெளிப்படும் வெறுப்பிற்கும், தாமதம் குறித்துச் சொல்லப்படும் காரணத்திற்கும் இருவருக்கும் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட ஹரிதாசுக்கும் பாதிக்கப்பட்ட தலித்துக்கும்) இடையே இருந்த விரோதச் சூழலே காரணம் எனக் கூறிய நீதிமன்றம் ஹரிதாஸை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இரட்டை டம்ளர் வழக்கம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று: தேநீர்க் கடைகள், ஓட்டல்கள், தர்மசாலைகள், முதலியவற்றில் தீண்டாமை காரணமாக இத்தகைய வழக்கம் கடை பிடிக்கப்படுவது PCRA சட்டத்தின்படி குற்றம். 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் காரணம் கூறி நீதிமன்றம் ஒரு ஓட்டல் உரிமையாளரின் மீதான இத்தகைய இரட்டை டம்ளர்கள் வழக்கொன்றைத் தள்ளுபடி செய்தது. டம்ளர்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன எனப் புகார் தெளிவாக எழுதப்படவில்லை என்பதும் பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் உறவினர்களாக இருந்தனர் என்பதும் வழக்கைத் தள்ளுபடி செய்தவற்கான மேலும் இரு காரணங்களாகச் சொல்லப்பட்டன.

தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பட்டியல் சாதியினருக்கு மறுப்பது PCRA சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் ஒரு குற்றம் அதே போல யாரேனும் ஒருவரையோ இல்லை ஒரு சிலரையோ சைகைகளாளோ, வார்த்தைகளாளோ தீண்டாமை கடைப்பிடிக்குமாறு தூண்டுவதும், பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமானப்படுத்த முனைவதும் கூட PCRA சட்டத்தின் கீழ் குற்றங்களே.

துனிசந்த் என்னும் ஒரு நபர், தலித்துகள் உள்பட அந்தக் கிராமத்திலுள்ள அனைவரையும் தன் மகளின் திருமண விருந்திற்கு அழைத்திருந்தார். நங்கு, சனா என்கிற இரு பட்டியல் சாதியினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த உயர்சாதியினர் ஏழுபேர் தாங்கள் அங்கே சாப்பிட மாட்டோம் என்றனர். நங்கு, சனா இருவரும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. துனிசந்தும், நேரடி சாட்சிகளும் அளித்த சாட்சியங்கள் “பொதுத் தன்மையில்” (General nature) இருந்தது எனவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும், கூறியது என எந்தக் குறிப்பிட்ட சொற்களும் கூறப்படவில்லை எனவும் கூறிய உச்சநீதி மன்றம் PCRA 7ம் பிரிவின் கீழான குற்றமல்ல இது எனக்கூறி குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.

இதுவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் PCRA சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பட்டியல் சாதியினருக்கு எதிராகவும், உயர்ந்த சாதியினருக்கு ஆதரவாகவும் உயர்நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் செயல்பட்ட சில நிகழ்வுகளைப் பட்டியலிட்டோம். இனி ‘சதி’ (உடன்கட்டை) தொடர்பான வழக்கொன்றில் குற்றம் புரிந்த உயர் சாதியினரை காப்பாற்றிய கதையைப் பார்ப்போம்:

1987 செப்டம்பர் 4ம் தேதியன்று ராஜஸ்தானிலுள்ள தியோராலா என்னுமிடத்தில் ரஜபுத்திரர்கள் நடத்திய உடன்கட்டை, அன்று இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வு. ரூப் கன்வர் என்கிற 18 வயதுப் பெண் இறந்து போன தன் கணவனின் (மால்சிங்) சடலத்துடன், ஆடை ஆபரணங்கள் எல்லாம் அணிவிக்கப்பட்டு உறவினர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கணவனின் சிதை மீது ஏற்றி “சதிமாதாகி ஜே” என்ற முழக்கங்களுடன் குடும்பத்தாராலேயே எரித்துக் கொல்லப்பட்டாள். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அது நடைபெற்றது.

பெண்கள் இயக்கங்கள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக 1987 அக்டோபர் 9 அன்று “ராஜஸ்தான் சதி (தடுப்பு) அவசரச்சட்டம் – 1987” இயற்றப்பட்டது. சதி நிகழ்வைக் கொண்டாடுவதற்கும் இது தடை விதித்தது. ‘சதி தர்ம சுரக்ஷண சமிதி” என்னும் அமைப்பு தன் பெயரிலிருந்த ‘சதி’ என்னும்சொல்லை நீக்கிவிட்டு ‘தர்ம சுரக்ஷண சமிதி’ என்ற பெயரில் உருவிய வாளுடன் ரூப்கன்வரைப் புகழ்ந்ததும், சதியை ஆதரித்தும், முழக்கங்கள் இட்ட வண்ணம் பெரும் பேரணி ஒன்றை நடத்தியது. ஆல்வார், சிகார் போன்ற இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. புதிய அவசரச்சட்டத்தின்படி 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. (பின்பு இந்த அவசரச் சட்டம் ‘ராஜஸ்தான் சதி தடுப்புத் சட்டம் – 1987’ என்ற பெயரில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது).

1996 அக்டோபர் 11 அன்று நீம்காதாணா மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரூப்கன்வரை எரித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட 32 பேரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். எரித்துக் கொன்றதற்கு நேரடி சாட்சியங்கள் கிடையாது எனவும் ரூப்கன்வர் சிதை மீது அமர்ந்திருந்தபோது அவர் உயிருடன் இருந்தார் என்பதை நிறுவ பிராசிகியூஷன் தவறிவிட்டது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

2004 ஜனவரி 31 அன்று சதியைக் கொண்டாடியதற்காகத் தொடுக்கப்பட்ட நான்கு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். (முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரசிங் ராதோர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் தின் மருமகனும் ‘பாரதீய யுவ மோர்ச்சா’ தலைவருமான பிரதாப்சிங் கச்சாரியா, ராஜ்புத் மஹா சபைத் தலைவர் நரேந்திரசிங் ரஜாவத், முன்னாள் IAS அதிகாரி ஓம்கார் சிங், வழக்கறிஞர் ராம்சிங் மனோகர் முதலானோர் சதி கொண்டாட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் சிலர்)

sபுதிய சட்டப்படி கணவனின் இறந்த உடல் அல்லது கணவருடைய ஏதேனும் ஒரு பொருளுடன் அவரது விதவையை உயிருடன் எரிப்பதோ புதைப்பதோ குற்றம். எரிக்கப்படுபவரின் சம்மதத்துடன் அது நிறைவேற்றப்பட்டதா என்பது கேள்வியல்ல. இது தொடர்பான சடங்குகள் நிகழ்த்துவது, ஊர்வலங்கள் செல்வது முதலின தண்டனைக்குரிய “கொண்டாட்டங்கள்” ஆக வரையறுக்கப்படும். கோயில்கட்டுவது, நிதி திரட்டுவது முதலியனவும் இதில் அடங்கும்.

சதி குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள மேற்படி வரையறையைப் புறந்தள்ளிய நீதிமன்றம் சதி என்றால், “உறுதியான குணம், கற்பு, கணவனுக்கு அர்ப்பணிப்பு, முழு வாழ்விலும் ஒரு ஆடவனுடன் மட்டுமே உறவு வைத்திருத்தல்” என்று பொருள்படும் எனப் புது விளக்கம் அளித்தது. இந்த வகையில் சீதை, அனுசுயா முதலியவர்கள் எல்லாம் ‘சதிகள்’ எனவும் அவர்கள் பெயரை முழங்குவது சதியைக் கொண்டாடுவது ஆகாது எனவும் விளக்கமளித்தார் நீதிபதி. குறிப்பான ஒரு சம்பவத்தைப் புகழ்ந்து கொண்டாடினால் மட்டுமே அது குற்றமாகும் என்றும் கூறப்பட்டது. ரூப்கன்வர் எரிக்கப்பட்டது ‘சதி’ நடவடிக்கை என்பதே (நீதிமன்றத்தில்) நிறுவப்படாததால் அந்த நிகழ்வைக் கொண்டாடியது சதி கொண்டாட்டமாகாது எனவும் நீதிமன்றம் கூறியது.

பன்வாரி தேவி வழக்கு: ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்கிற கிராமப்பணியாளர் ஒருவரை 1992 செப்டம்பர் 22 அன்று ராம்கரன் குஜார் தலைமையில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்முறைக்குட்படுத்தியது. 1985 முதல் அரசின் வளர்ச்சித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த பன்வாரிதேவி குழந்தைத் திருமணத்திற்கு எதிராக வெற்றிகரமான இயக்கம் நடத்தியவர். ராம் கரன் குஜாரின் ஒரு வயது மகளின் ‘திருமணம்’ உள்பட பல குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். 1995 நவம்பர் 15 அன்று ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் நடுத்தர வயதினர், பொறுப்பான குடிமக்கள் எனக் கூறப்பட்டது. பொதுவாகப் பதின் வயதிலுள்ளவர்கள் தான் பாலியல் வன்முறைக் குற்றங்களை இழைப்பர் என்று கூறியதோடு நிற்காத நீதிமன்றம், “குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோரும் உயர்சாதி ஆண்கள், பன்வாரியோ, தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள். எனவே, பாலியல் வன்முறை சாத்தியமில்லை” எனக் கூறியது.

நன்றி: EPW அக்.21, 2006