சாலைக்கடை பாப்பாநாடு ஆன கதை

{‘சாதி மோதல்களும் இலக்கியப் பதிவுகளும்’ எனும் தலைப்பில் தம்பி மதியரசன் மெற்கொண்ட முனைவர் ஆய்வு இப்போது நூலாக (காவ்யா வெளியீடு) வந்துள்ளது. அதற்கு எழுதிய முன்னுரை இது. வெறும் முன்னுரையாக இல்லாமல் கடந்த 75 ஆண்டுகளில் சாதி ஓர்மை கிராமங்களில் எவ்வாறு உருக்கொண்டுள்ளது, அதன் பௌதிக வெளிப்பாடுகள் எவ்வாறுஉள்ளன என்பது குறித்த ஒரு case study ஆக நினைவிலிருந்து தொகுக்கப்பட்ட எனது கிராமத்தின் கதை இது. அவசியம் வாசியுங்கள்}
ஒன்று
மதியரசனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ தான் எங்கள் ஊர். எனது பால்ய காலம், 9 வயதிலிருந்து 27 வயது வரை, கிட்டத்தட்ட 18 ஆண்டுஅள் இங்குதான் கழிந்தன. எனினும் இதைச் சொந்த ஊர் எனச் சொல்லிக் கொள்ள எனக்கு உரிமை உண்டா என்பது ஐயத்திற்குரிய ஒன்றுதான். சொந்த ஊர் என்பது சாதி, நிலம் ஆகியவற்றுடன் பிரிக்க இயலாது பிணைந்த ஒன்று. எனக்கு அப்படியான ஒரு உறவு இங்கு இல்லை. என் தந்தை மலேயாவில் தலைக்கு விலை கூறப்பட்டுப் பின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் இங்கு வந்தவர். ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள ‘வெள்ளூர் – மேலப்பத்தை’ என்னும் கிராமத்தில் வசித்து வந்த தன் வயது முதிர்ந்த பெற்றோருக்குச் சொந்தமான பத்து மா நிலத்தை விற்றுவிட்டு பாப்பாநாட்டில் ஒரு சோடா கம்பெனியைத் தொடங்கியபோது எனக்கு வயது ஒன்பது. இப்போது இந்த ஊருடன் என்னைப் பிணைத்திருப்பது என் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, அப்பாயி ஆகியோரின் கல்லறைகளும் இங்கு உள்ளன என்கிற ஒன்றுதான். அதுவும் பத்தாண்டுகளாகக் கல்லறைத் திருவிழாவுக்கும் அங்கு நான் போவதில்லை.
ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பாப்பாநாட்டுக் கடைத்தெருவில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன். அப்போது எட்டாம் வகுப்பில் ESLC என்றொரு அரசுத் தேர்வு சில பள்ளிகளில் உண்டு. அதை முடித்துப் பின் ஒரத்தநாடு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். பாப்பாநாட்டில் அப்போது எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கலாம்.
பாப்பாநாடு என்பது அந்த ஊரின் பூர்வ பெயர் அல்ல. ‘சாலைக்கடை’ என்பதுதான் அதன் பெயர். என் அப்பாயி (அப்பாவின் அம்மா) சாகும் வரை “சாலக்கடை” என்றுதான் சொல்வார். வருவாய்த்துறை ஆவணங்களில் அதன் பெயர் ‘ஆவிட நல்ல விஜயபுரம்’. ‘பாப்பாநாடு’ என்பது மத்திய கால நிர்வாக முறையான ‘நாடு’, ‘பெரிய நாடு’ என்பன போன்ற அமைப்பொன்றின் எச்ச சொச்சமாக இருக்கலாம். “பாப்பாநாடு பதினெட்டு கிராமம்’ என்கிற சொலவடை அங்கு உண்டு. இந்தப் பதெனெட்டு கிராமங்களும் ‘கள்ளர்’ சாதியினர் பெரும்பான்மையாக வசிப்பவை. இந்தக் கிராமங்களின் பொதுக் கோவிலாக பாப்பாநாட்டுக்கு மேற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தப் பதினெட்டு கிராமத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் திருமேனி அம்மனுக்கு திருவிழா எடுப்பர். பத்து நாட்களுக்கு மேல் மண்டகப்படிகள், இரவில் புகழ் பெற்ற நாடக ‘செட்’ களின் நாடகங்கள், வாண வேடிக்கை எல்லாம் நடக்கும். இறுதி நாள் பல்லக்குத் திருவிழா அன்று திருமேனி அம்மன் பாப்பாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, கணக்கன் குளத்தருகில் உள்ள ஊர்ச் சாவடியில் வைக்கப்படுவார். நாள் முழுவதும் வழிபாடுகள் மேற்கொண்டு இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுவார். இந்தத் திருவிழாவைத் திட்டமிட்டு நடத்தும் உரிமை, பாரம்பரியமாக அக்கிராமங்களின் கள்ளர் சாதியினருக்கே உண்டு.
இந்தக் கிராமங்கள் அனைத்தும் பழைய தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்தவை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் கல்லணைக் கால்வாய் வெட்டப்படும் வரை ஆற்றுப் பாசனம் இல்லாத வரண்ட பூமிகள். தஞ்சைக்குக் கிழக்கே உள்ள உளூர் (கீழ் வேங்கை நாடு), ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், அறந்தாங்கி முதலான பகுதிகளில் ரயத்துவாரி முறை அமுலாக்கப்படவில்லை. இனாம்தாரி மற்றும் ஜமீந்தாரி முறைகளே நடைமுறையிலிருந்தன. பாப்பாநாடு, மதுக்கூர் முதலியன அப்படியான ஜமீன்தாரி பகுதிகள். கள்ளர் சாதியினரே இங்கு ஜமீன்தார்கள். அப்போதைய பாப்பாநாடு ஜமீன்தார் பூண்டி வாண்டையாரின் மருமகன். பாப்பாநாட்டுக்குக் கிழக்கே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள வெளுவாடி கிராமத்தில் இந்த ஜமீந்தாருக்கு ஒரு ‘அரண்மனை’ உண்டு. இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன்.
பாப்பாநாடு அதன் பூர்வீகத்தில் ஒரு கள்ளர் கிராமம் கிடையாது. அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் முத்தரையர்கள், சேர்வைகள், வலையர்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் சாதியினரும் தலித்களும்தான். பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சாதியினர் அங்கு அந்தப் பெயரில் அடையாளம் காணப்பட்டதில்லை. ‘அம்பலகாரர்கள்’ என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் பூர்வ தொழில் உள்ளக மீன்பிடிப்பு, வேட்டை (inland fishing முதலியன). தலித்கள் அங்கு இரண்டாவது பெரிய சாதியினர். ஊருக்குத் தெற்காக, சாலைக்கு மேற்புறம் உள்ளது அவர்களின் சங்கரன்தெரு.
தஞ்சாவூர் பட்டுகோட்டை சாலை என்பது மராட்டிய மன்னர் காலத்திலேயே ஒரு முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் அன்னா சத்திரம், முத்தம்பாள் சத்திரம், ராஜாமடம் சத்திரம் முதலானவை மராட்டிய மன்னர் காலத்தில் செயல்பட்டிருந்தன. திருவையாறு, ஒரத்தநாடு, ராஜாமடம் முதலான ஊர்களில் இருந்த இந்த மராட்டிய காலச் சத்திரங்கள் பின்னர் அரசு பள்ளிகள், கல்லூரி, மற்றும் மாணவர் விடுதிகளாக ஆக்கப்பட்டன. என் தந்தை ராஜாமடம் சத்திரம் விடுதியில்தான் படித்திருகிறார். நான் ஒரத்தநாடு சத்திரத்தில் இயங்கிய அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.
எனினும் பஸ் போக்குவரத்து தொடங்கியபோது சுற்றியுள்ள கள்ளர் கிராமங்களில் இருப்போர் வந்து பஸ் ஏறும் முக்கிய சந்தியாக பாப்பாநாடு ஆகியது. எனினும் ‘பாப்பாநாடு’ என்கிற பெயரில் ஊர் ஏதும் இல்லாததால் அது அப்போது சாலைக்கடை என்றே அழைக்கப்பட்டது. முக்கிய பஸ் நிறுத்தம் என்பதால் அங்கு சாலையோரத்தில் கடைகள் முளைத்ததால் அந்தப் பெயர். எனினும் பின்னாளில் அந்தப் பெயர் மறக்கப்பட்டு அது பாப்பாநாடு ஆகியபோது ‘பாப்பாநாடு’ என்கிற ‘நாடு’ அடையாளத்துடன் கூடிய சாதி அடையாளமும் அதனுடன் சேர்ந்தது.
சாலையோரத்தில் கடைகள் உருவான போது பாரம்பரிய வணிகச் சாதியினரான கோமுட்டிச் செட்டியார், நாட்டுக்கோட்டைச் செட்டியார், முஸ்லிம்கள் ஆகியோர் அங்கு இடம் பெயர்ந்து கடைகள் அமைத்தனர். அங்கு. நெல் வணிகம், உணவு விடுதிகள், இறைச்சிக்கடைகள், துணிக்கடைகள், பலசரக்குக் கடைகள் முதலியன இவர்கள் வசமே இருந்தன. இதுவரை சொல்லப்பட்டவர்கள் தவிர பாரம்பரியமாக இருந்தவர்களுள் ஒரு வண்ணார், ஒரு முடி திருத்துவோர், ஒரு பண்டாரம், ஒரு குருக்கள், ஓரு கருணீகர் வகுப்பைச் சேர்ந்த கணக்கர், ஒரு பார்ப்பன மணியக்காரர், தூய்மைப் பணிக்கான ஒரு அருந்ததியர் ஆகியோரது குடும்பங்களும் இருந்தன. இரண்டு கிறிஸ்தவ நாடார் குடும்பங்களும் அங்கிருந்தன. அவர்கள் எப்போது வந்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள இந்து ஆலய வழிபாட்டிற்கு பூ கொண்டு சென்று கொடுக்கும் கடமை அவர்களுக்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. மலையாளத்தார் ஒருவரது தேநீர்க்கடையும் அங்கிருந்தது. பாரம்பரியமான கள்ளர் குடும்பங்கள் அங்கு மிக மிகக் குறைவு. குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் டாக்டர்தான் அங்கு முக்கிய வைத்தியர். அருகிலுள்ள ஆம்பலாப்பட்டு அவரது சொந்த ஊர்.
எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் பாப்பாநாட்டுப் பஞ்சாயத்துத் தலைவராக குறைந்த பட்சம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோவிந்தச் செட்டியார். இவர் மிக மிகச் சிறுபான்மையான கோமுட்டிச் செட்டியார் என்கிற பிரிவினர். பலசரக்குக்கடை முதலாளி. அதன் பின் தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த ஊரின் பெரும்பான்மைச் சாதியினரான அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்த வீராசாமி அம்பலம் அவர்கள். அதன் பின் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியை சேர்ந்த நண்பர் நாடிமுத்து அவர்களும் அவர் சகோதரர் கதிரேசன் செட்டியாரும் சிலமுறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஐந்தாண்டுகளாக அங்கு தலைவராக உள்ளவர் எனது இளமைக்கால நண்பர்களில் ஒருவரும் , ஓய்வு பெற்ற ஆசிரியருமான காளிமுத்து அவர்கள். இவர் பாப்பாநாட்டை ஒட்டியுள்ள கள்ளர் கிராமமான சின்னக்குமுளையைச் சேர்ந்த கள்ளர் சாதியினர்.
இந்த இடைக்காலத்தில் முன்னாள் சாலைக் கடையான இந்நாள் பாப்பாநாட்டில் ஏற்பட்ட சில மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கள்ளர்கள் சாலையோர மையமான பாப்பாநாட்டில் குடியேறத் தொடங்கினர். அவர்களில் வசதி மிக்கோர் தமது எல்லாவிதமான செல்வாக்குகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி அங்கு குடியேறினர். நகர்ப்புற முதலீடுகளிலும் கவனம் செலுத்தினர். அவர்களே இப்போது அங்கு ஆதிக்கம் வகிக்கும் முக்கிய பிரிவினராக ஆயினர். ‘தங்களது’ கிராமத்தில் தங்களது சாதியினரே தலைவராக வேண்டும் என இம்முறை அவர்களது சாதியினர் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். இனி அது தொடரும் என நம்புகிறேன்.
இந்த நிலை இன்று அரசியல் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் அங்கு எதிரொளிப்பதையும் காணலாம். திமுக பெரு வீச்சுடன் வளர்ந்த காலத்தில் எனக்குத் தெரிந்து பாப்பாநாட்டில் திமுக என்றால் சாலையோரத்தில் தேநீர்க்கடை வைத்திருந்த அழகரசன், மடத்திவாசலைச் சேர்ந்த பண்டாரம் சாதியினரான துரைஅரசன், சங்கரன் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி எனும் தலித் பெரியவர் ஆகியோர் தான். ஆனால் 1967 தேர்தலில் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர் பெரியவர் எல்.கணேசன் அவர்கள். இவர் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சாதியர். அழகரசனின் பிள்ளைகள் இப்போதும் தேநீர்க்கடைதான் வைத்திருப்பதாக அறிகிறேன். துரைஅரசனின் குடும்பத்தார் இப்போது என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
இரண்டு
மதியரசனின் நூலுக்கு முன்னுரை எனச் சொல்லி ஏதோ கதை அளக்கிறேன் என உங்களுக்குத் தோன்றலாம். அப்படியல்ல. சாதி ஓர்மையில் ஒரு மிகப் பெரிய அளவு மாற்றமும் பண்பு மாற்றமும் ஏற்பட்ட ஒரு காலகட்டத்தைப் (1948 -2004) பின்னணியாக வைத்து இந்த ஆய்வைச் செய்துள்ளார் மதியரசன். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக் கிராமங்களின் சாதிய ஓர்மையிலும் பங்கேற்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்விற்கு பாப்பாநாடு கிராமம் ஒரு அற்புதமான களமாக இருக்கும் என நம்புகிறேன். பாப்பாநாடு கிராமத்தை முன்வைத்து நவீன ஆய்வு முறைகளின் அடியாக விரிவான தரவுகளைச் சேகரித்து சமூகவியல் ஆய்வொன்றை ஆர்வமுள்ள தனி நபர்களோ, நிறுவனங்களோ செய்தால் மிக மிகப் பயனுடையதாக இருக்கும். அந்த வகையில் நினைவிலிருந்தவற்றிலிருந்து இவற்றை இங்கே பதிவு செய்துள்ளேன். இந்த ஆய்வு நூல் கவனம் குவிக்கும் புள்ளிகளைப் புரிந்து கொள்வதற்கும் இது உதவக் கூடும்.
பெற்றோர் மறைவுக்குப் பின் நான் குடும்பத்தோடு எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு பாப்பாநாட்டை விட்டு நான் வெளியேறிய பின் அங்கு பிறந்து வளர்ந்தவர் மதியரசன். அவர் மாநிலக் கல்லூரியில் ஆய்வு மாணவராக இருந்தபோது நான் அங்கு ஆசிரியனாகப் பணியாற்றியபோதும் அவர் வேறு துறை என்பதால் பழக்கமில்லை.
நான் பாப்பாநாட்டுப் பள்ளியில் மாணவனாக இருந்தபோது மதியரசனின் சங்கரன் தெருவில் நடந்த ஏதோ ஒரு விழா நினைவில் நிழலாடுகிறது. என்ன நிகழ்ச்சி என நினைவில்லை, அப்போது அம்பேத்கர் விழாக்கள் எல்லாம் பெரிதாகக் கொண்டாடப் படுவதில்லை. எனினும் ஏதோ தீண்டாமை ஒழிப்பு தொடர்பான அரசு நிகழ்ச்சி அது. அதனால்தான் அது சங்கரன் தெருவில் நடைபெற்றது. பாப்பாநாடு பள்ளியில் நான் படித்தபோது சங்கரன் தெருவைச் சேர்ந்த இரண்டு தலித் ஆசிரியர்கள் அங்கு பணியாற்றினர். ஒருவர் கைத்தொழில் ஆசிரியர் அப்பாவு வாத்தியார். பாய்முடைதல் அங்கு கற்பிக்கப்பட்ட கைத்தொழில். ஆனால் அது அங்கு அப்படி ஒன்றும் சீரியசாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டதில்லை. யாரேனும் ஆசிரியர்கள் வராதபோது அந்த வகுப்புக்கு அனுப்பப்படும் ஆசிரியராகத்தான் அப்பாவு வாத்தியார் இருந்தார். “கள்ளத் தோணி கதை சொல்லுங்க சார்..” என ‘கோரசாக’ எல்லோரும் ஒலிப்போம். அவரும் சலிக்காமல் தான் சின்ன வயதில் கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்த கதையைச் சொல்வார். நாங்களும் அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்போம். இன்னொருவர் முனுசாமி வாத்தியார். சங்கரன்தெருவில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அவர் என்.எஸ்.கிருஷ்ணனின் ‘கிந்தனார்’ நாடகத்தை அரங்கேற்றினார். நான் அதில் சின்ன வயது கிந்தனாக நடித்தேன். பெரிய வயது கிந்தன் முனுசாமி சார்.
என் பள்ளியில் அப்போதிருந்த இன்னொரு தலித் ஆசிரியர் சுப்பிரமணியம் சார். அப்பாவின் நண்பர். அருந்ததியர் வகுப்பினர். பூதலூர்க்காரர். மிகச் சிறப்பாகக் கணக்குச் சொல்லிக் கொடுப்பார் என அவருக்குப் பெயர். தலைமை ஆசிரியர் ரத்தின வாண்டையார். அருகிலுள்ள கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார். கண்டிப்பு மிகுந்த தலைமை ஆசிரியர் எனப் பெயர் பெற்றவர். உளூரைச் சேர்ந்த குப்புசாமி மாலையிட்டார் அவர் மனைவி மாணிக்கத்தம்மாள் டீச்சர் இருவரும் அங்கு பணியாற்றினர். அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் என் இளமைக் கால நண்பர்கள். இன்னொரு ஆசிரியர் இராமநாதன் பார்ப்பனர். ஸ்டெல்லா டீச்சரும் இன்னொருவரும் கிறிஸ்தவர்கள். எனது வகுப்பாசிரியர் யோகநாதராவ் ஒரத்தநாட்டிலிருந்து பஸ்சில் வருவார். எல்லோரும் அற்புதமான மனிதர்கள். சிறந்த ஆசிரியர்கள். இருந்த போதிலும் வாண்டையார் அவர்களுக்கும் மாலையிட்டார் அவர்களுக்கும் சிறப்பு மரியாதைகள அங்கிருந்தது. ஓய்வு பெற்ற பின்னரும் கூட மாலையிட்டார் அவர்கள் பள்ளி வகுப்பறை ஒன்றிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்.
சாலக்கடை பாப்பாநாடு ஆன கதைச் சுருக்கம் இதுதான்.
சங்கரன்தெருவிலிருந்து இப்போது மதியரசனையும் சேர்த்து மூன்று முனைவர் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர்; அவர்கள் மூவரும் நல்ல பணிகளிலும் உள்ளனர் என்பதை அறியும்போது மனம் நெகிழ்கிறது.
மூன்று
‘தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் இலக்கியப் பதிவுகளும்’ என்பது மதியரசனின் ஆய்வுத் தலைப்பு. ‘ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகள்’ என்பதைப் பொறுத்தமாட்டில் 1948 தொடங்கி 2004 வரை உள்ள சாதி மோதல்கள் பலவும் ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ‘இலக்கியப் பதிவுகள்’ என்பதைப் பொறுத்தமட்டில் 1993 தொடங்கி 2004 வரையான பதிவுகள்தான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதிலும் கூட 2000 க்குப் பிற்பட்ட பதிவுகள்தான் பெரும்பாலும் உள்ளன. இதை நான் ஆய்வாளரின் குறையாகச் சொல்லவில்லை.
அதுதான் எதார்த்தம். சாதிய ஒடுக்குமுறைகள், அவற்றுக்கெதிரான பதிவுகள் என்பன காலங் காலமாக இருந்து வந்த போதிலும் அவை குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமாகவே உள்ளன. முற்றிலும் இல்லை என்று கூடச் சொல்லலாம். 90 களுக்குப் பின்தான் அப்படியான பதிவுகள் இலக்கியப் படைப்புகளின் கருப்பொருட்களாயின. முன்னதாக அப்படி இல்லாமற் போனதற்குக் காரணம் இலக்கியத்தின் பாடுபொருளாக நம் இலக்கணங்கள் வகுத்தவற்றில் பாடப்படும் தகுதி உடையனவாக சாதிப் பிரச்சினைகள் அங்கீகரிக்கப்பட்டதில்லை என்பதுதான். “இழிசனர் வழக்குக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இறந்தோடும்” எனப் பேராசிரியர் “முனைவன் கண்டது முதனூலாகும்..” எனும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு (649) உரை எழுதியதை நாம் மறந்துவிட இயலாது.
இந்த நிலை 1990 களில் மாற்றம் காணத் தொடங்குகிறது. தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகியன குறித்து இங்கு உருவான பிரக்ஞையும், விவாதங்களும், வெளிவந்த மொழியாக்கங்களும், இலக்கிய அமைப்புகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக அளவில் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் புதிய வீச்சுடன் மெலெழுந்த அடையாள அரசியல் இந்தியாவில் தலித் அரசியலாக வெளிப்போந்தது. இலக்கிய வெளியில் அது தலித் இலக்கியமாக வெளிப்பட்டது. அடையாள அரசியலின் பலங்களோடு மட்டுமின்றி பலவீனங்களோடும் இவை வெளிப்போந்தன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் 90களின் பிற்பகுதியில்தான் சாதி மோதல்கள் இலக்கியப் பதிவுகளில் இடம்பெறலாயின.
எனினும் இலக்கணக் கெடுபிடிகளையெல்லாம் மீறியும், தொகுப்பாசிரியர்களின் கவனத்தையெல்லாம் தாண்டியும் தமிழ்ப் பாரம்பரியத்தில் சாதி ஒதுக்கல்கள் குறித்த பதிவுகள் மிகச் சிலவேனும் அடையாளம் காணக் கூடியவையாக உள்ளன (பார்க்க: பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ‘தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சாதி எதிர்ப்புக் குரல்’, நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு, 1994). ‘இழிபிறப்பாளன்’, ‘இழிசினர்’, ‘புலையன்’, ’புலைத்தி’, ‘துடியன்’ முதலான சொல்லாட்சிகள் இழிவு தொனிக்கும் விளிப்புடன் சங்கப் புறப்பாடல்களில் (புறம், 17:5-6; 289:8-1; 287:1-2; 82:3-4; 311:1-2; 259:5-6) மலிந்து கிடக்கின்றன.
பார்ப்பன – வேளாள மயமாதல், சடங்காச்சாரங்களைப் புகுத்துதல், பழங்குடியினரும் அவர்களின் வழமைகளும் ஓரங்கட்டப்படுதல், பழங்குடியினரின் உணவுமுறை உட்பட எல்லாம் கீழானவையாக ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு ஆதிக்க எதிர்ப்புக் குரலாக புறநானூறின் அந்தப் புகழ் பெற்ற 335 ம் பாடலை (அடலருந் துப்பின்….. துடியன், பாணன், பறையன், கடம்பன் என இந்நான் கல்லது குடியும் இல்லை….) வாசிக்க இயலும்.
ஆசாரம் மிகுந்த பார்ப்பனர்களைக் களிமகன்களினூடாகக் கேலி செய்வது என்பதை நாம் காப்பியங்களிலும் காண முடிகிறது (மணிமேகலை, காதை 3, வரிகள் 92-103: பெருங்கதை, உஞ்சைக் காண்டம், வரிகள் 92-98).
மு. அருணாசலம் அவர்களின் 15ம் நூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் காணப்படும் உத்திரநல்லூர் நங்கை எனும் பறையர் சாதியைச் சேர்ந்த மாடுமேய்க்கும் பெண்ணுக்கும் வேதம் ஓதும் பார்ப்பன இளைஞன் ஒருவனுக்கும் ஏற்பட்ட காதலைக் கண்டித்துச் சேரிக்குத் தீயூட்ட வந்த பாய்ச்சலூர் கிராமத்தாரை நோக்கி நங்கை பாடியதாகக் கூறப்படும் 9 விருத்தப் பாடல்கள் இடம்பெறுகின்றன. “ஓதிய நூலும் பொய்யே உடலுயிர்தானும் பொய்யே / சாதியும் ஒன்றேயல்லால் சகலமும் வேறதாமோ..” எனத் தொடங்கும் அந்தப் பாடல்கள் பிற்காலத்திய சித்தர்களின் சாதி எதிர்ப்புப் பாடல்களுக்குக் கட்டியங் கூறுபவையாக உள்ளன.
இதற்குச் சற்று முந்திய கபிலரகவல், சற்றுப் பிந்திய சித்தர் பாடல்கள் ஆகியவற்றிலும் கடும் சாதி எதிர்ப்புக் குரல்களைக் காண இயலும்.
நான்கு
மாதவய்யா போன்ற தொடக்க கால நாவலாசிரியர்கள். பாரதி, பாரதிதாசன் போன்ற பெருங் கவிஞர்கள் ஆகியோரின் படைப்புகளிலும் சாதி மற்றும் ஆசார எதிர்ப்புக் குரல்களைக் காண இயலும் எனினும் பிரக்ஞை பூர்வமான ஒரு சாதி எதிர்ப்பு அரசியலை முன்வத்த தமிழ் தலித் இலக்கியம் எனச் சொல்லும்போது ஈழத்துத் தலித் படைப்பாளிகளின் பங்களிப்பை நாம் கவனத்தில் கொள்ளாதிருக்க இயலாது.. ‘தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி’ என்கிற விளிப்பிற்கு எல்லாவிதத்திலும் தகுதி பெற்ற கே.டானியல் அவர்களின் ‘பஞ்சமர்’ வரிசை நூற்கள் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்தவை. இங்கு அவை பல பதிப்புகள் கண்டவை. விரிவான விமர்சனகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டவை. தமிழ் ஈழப் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் தமிழ் ஈழத்திற்குள் நிலவிய, நிலவுகிற சாதிக் கொடுமைகளைப் பேசத் தயங்குவதால் டானியல் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க தமிழக தலித்திய அரசியலார் தவறிவிட்டனர். எனினும் ஆய்வாளர்கள் அதைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
அதேபோல இங்கு கடந்த முப்பதாண்டுகளில் மேலெழுந்து தடம் பதித்துள்ள தலித் அரசியல் என்பது தலித் இலக்கிய உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது போலவே, தலித் இலக்கியவாதிகள், தலித் பண்பாட்டு அமைப்புகள், தலித் ஆதரவு அறிவுஜீவிகள், விடியல் பதிப்பகம் போன்ற புத்தக வெளியீட்டாளர்கள், கிறிஸ்தவ அமைப்பினர் ஆகியோர் படைப்புத் துறையிலும், பதிப்புத் துறையிலும் மேற்கொண்ட முயற்சிகள் தலித் அரசியல் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. அம்பேத்கரின் நூற்களை மொழி பெயர்த்து வெளியிட்டதில் கருணா மனோகரன், விடியல் சிவா முதலானோரின் பங்களிப்புகளும், அயோத்திதாசரின் எழுத்துக்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த அலோஷியஸ், தலித் இலக்கியச் சிறப்பிதழை வெளியிட்டதோடு, தலித் தலைவர்கள் பலரையும் கூட்டி விவாதம் ஒன்றை நடத்தி ‘தலித் அரசியல்’ ஆவணம் ஒனறை வெளியிட்ட ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவினர் ஆகியோரின் பங்களிப்புகள் இந்த வகையில் குறிப்பிடத் தக்கவை. பாமா அவர்களின் தலித் படைப்புகளை வெளியிட்ட மதுரை ‘ஐடியாஸ்’ நிறுவனம். ஆண்டுதோறும் தலித் கலை இலக்கிய விழாவை நடத்திய அரசரடி இறையியல் கல்லூரி ஆகிய கிறிஸ்தவ அமைப்புகளின் பங்களிப்புகளும் தலித் இலக்கிய உருவாக்கத்தில் மட்டுமின்றி தலித் அரசியல் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளும் தலித் இலக்கிய உருவாக்கத்திற்கு ஆதாரங்களக இருந்துள்ளன. பல்கலைக் கழகங்களும் ஆர்வமுடைய தனியார்களும் நடத்திய எண்ணற்ற கருத்தரங்குகளும் இந்தத் திசையில் முக்கிய பங்காற்றியுள்ளன.
ஐந்து
மதியரசனின் இந்நூல் ஆய்வு முறைக்குரிய இலக்கணங்களுக்கு உட்பட்டு இறுக்கமாக எழுதப்பட்டுள்ளது. விரிவாகப் பல தரவுகளையும், தகவல்களையும் தொகுத்து அவர் இந்த ஆய்வைப் படைத்துள்ளார். தலித் மக்கள் மீதான வன்முறைகள் என்பன வெண்மணியையும், சங்கரலிங்கபுரத்தையும், தருமபுரியையும்போல கொடுந் தாக்குதல் என்கிற வடிவில் மட்டும் நிகழ்வதல்ல. அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், உயர் கல்வி நிறுவனங்களிலும் கூட நிலவும் நவீனமான ஒதுக்கல்கள் என்பனவெல்லாம் பெரிய அளவில் கவனத்தைப் பெறாமலேயே தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருப்பவை. பாமாவின் ‘கருக்கு’ முதலிய படைப்புகள் இந்த வகையில் முக்கியமானவை. அதேபோல ராஜ்கவுதமன், கே.ஏ.குணசேகரன் முதலானோர் எழுதியுள்ள தன்வரலாற்று எழுத்துக்கள் ஆகியனவும் எதிர்கால ஆய்வாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தலித்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆதிக்க சாதி அரசியலலைப் பேசுவது, ஆதிக்க சாதிக் கூட்டமைப்புகளை உருவாக்குவது என்பதெல்லாம் எப்படி தலித் வாழ்வின் துயரச் சுமைகள் கூடக் காரணமாகின்றன என்பவற்றை எல்லாமும் வருங்கால ஆய்வாளர்கள் கவனத்தில் இருத்த வேண்டும்.
தீவிரமாக உழைத்து ஒரு சிறந்த ஆய்வு நூலைப் படைத்துள்ள மதியரசன் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். இந்த ஆய்வு நூல் வெளிவருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நானே பொறுப்பு. பொறுமை காத்த மதியரசனுக்கு என் நன்றிகளும் அன்புகளும்.
வாழ்த்துக்களுடன்,
அ.மார்க்ஸ்,
ஏப்ரல் 17, 2016,
கும்பகோணம்.