பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு

{இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது முந்தைய கட்டுரைகளுடன் சேர்த்துப் படித்தால் இன்னும் வரலாறு விளக்கமாகும். ‘ஏரியல் ஷரோன்: மாவீரனா போர்க்குற்றவாளியா?’ (2013), ‘காஸாவில் ஒரு கண்ணீர் நாடகம்’ (2005), ‘காஸா : போரினும் கொடியது மௌனம்’ (2014) முதலிய என் கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. சுருக்கத்தின் விளைவாக முக்கிய செய்திகள் ஏதும் விடுபட்டு விட்டதாகக் கருதினால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம்.}

இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை (வெஸ்ட் பாங்க்) என்கிற மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் ‘பலஸ்தீன்’ என்கிற ஒரே பகுதியாக அறியப்பட்டன. பலஸ்தீனிய அரபியர்கள் (பெரும்பாலும் முஸ்லிம்கள், ஒரு சிறிய அளவில் கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ்கள்) மற்றும் யூதர்கள் இரு சாரரும் இதைத் தமக்குரிய நிலம் என்கின்றனர்.

கி.மு நூற்றாண்டுகளில் இங்கு வாழ்ந்த யூதர்கள் பெரிய அளவில் புலம் பெயர்ந்து சென்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தனர். யூத வெறுப்பு அரசியல் (Anti Semitism) ஒன்று எழுந்ததை ஒட்டி 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் தமது பூர்வ நிலமான பலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்வது என முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்து, அங்கு பல நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் மத்தியில் குடியேறத் தொடங்கினர். புனித பைபிளைச் சான்று காட்டி, இறைவனால் தங்களுக்கு “வாக்களிக்கப்பட்ட நிலம்” இது என உரிமை கோரினர்.

1882ல் பலஸ்தீனத்திற்குள் இப்படி முதல் யூதக் குடியிருப்பு உருவானது. 1884ல் இதை நியாயப்படுத்தும் நோக்கில் ‘ஸியோனிச’ கோட்பாட்டையும் உருவாக்கினர். இதற்கு முன் பலஸ்தீனத்திற்குள் வாழ்ந்த யூதர்கள் வெறும் 4 சதம் மட்டுமே. (முஸ்லிம்கள் 86 சதம், கிறிஸ்தவர்கள் 9 சதத்திற்கும் மேல்.) தொடர்ந்து இரண்டாம் உலகப் போர், இட்லரின் யூதப் படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டி பெரிய அளவில் அகதிகளான யூதர்களை ஸியோனிஸ்டுகள் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். முதல் உலகப் போருக்குப் பின் பலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

முதலில் இக் குடியேற்றத்தை பலஸ்தீனியர்கள் பெரிதாக எடுத்துக் கொள்லாவிட்டாலும் தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.

1947ல் ஐ.நா அவை இதில் தலையிட முடிவு செய்தது. அப்போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதம்; அவர்கள் வசமிருந்த நிலம் 7 சதம். எனினும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பலஸ்தீனின் 55 சதப் பகுதியில் யூதர்களுக்கென இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க ஐ.நா பரிந்துரைத்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட யூதர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக் காலம் முடியும்போது சுதந்திர இஸ்ரேலைப் பிரகடனம் செய்தனர். பலஸ்தீனியர்கள் அதை எதிர்த்தனர்.

1947 -48 அரபு- இஸ்ரேல் போர்: மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாடுகள் யூதர்களுக்கு எதிராகப் படை எடுத்து வந்தன. ஐந்து அரபுப் படைகள் அதில் பங்குபெற்ற போதும் யூதர்களின் மூர்க்கமான தாக்குதலின் ஊடாக போர் முடியும்போது அவர்கள் பலஸ்தீனத்தின் 78 சதப் பகுதியைக் கைப்பற்றி இருந்தனர். சுமார் 500 நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டிருந்தன. கைப்பற்றிய இடங்களுக்கெல்லாம் ஹீப்ரு மொழியில் பெயர்கள் இடப்பட்டன.

“உலகிலுள்ள 11 மில்லியன் யூதர்களில் 10 மில்லியன் பேரேனும் குடியமர்த்தப்பட்ட ஒரு இஸ்ரேலைக் கனவு காண்கிறேன்” என்றார் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன்,“பலஸ்தீனம் என்று எதுவும் கிடையாது” என்றார் இஸ்ரேலின் முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றவர், முதல் பெண்பிரதமர், இரும்புப் பெண் என்றெல்லாம் பெயர் பெற்ற கோல்டா மேய்ர். போரின் முடிவில் எகிப்து வசம் காஸாவும் மேற்குக் கடற்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் வசமும் கோலான் மேடுகள் சிரியா வசமும் இருந்தன.

பலஸ்தீனியர்கள் அகதிகளாகும் வரலாறு தொடங்கியது.

1967 போர்: ஆறு நாள் யுத்தத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் எல்லாவற்றையும் கூடுதலாக சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது. ஐ,நா அவை பலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற இரு நாட்டுத் தீர்வு குறித்த 242 வது தீர்மானத்தை இயற்றியது. எனினும் இன்றுவரை அது நடைமுறைப் படுத்தப்பட வில்லை. பலஸ்தீனத்திற்கு இறையாண்மை உடைய நாடு எனும் நிலை இன்னும் வழங்கப்படவில்லை.

இடையில் மீண்டும் 1973ல் ஒரு போர்.

1964ல் பல்வேறு பலஸ்தீனியக் கெரில்லாக் குழுக்கள் இணைந்து பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) உருவானது. ஜோர்டான், லெபனான் முதலான அரபு நாடுகளைத் தளமாகக் கொண்டு அது இயங்க வேண்டி இருந்தது

யாசிர் அராஃபத்தின் தலைமையில் இயங்கிய பலஸ்தீனிய விடுதலை அமைப்பிற்கு காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பலஸ்தீனியப் பகுதிகளுக்கான முழு அதிகாரத்தையும் வழங்குவதாக அரபு நாடுகளின் குழுமம் (Arab League) 1974ல் அறிவித்தது. ஐ.நா. அவையில் பார்வையாளர் நிலையும் அதற்கு வழங்கப்பட்டது.

1982 போர்: லெபனான் மீதான ஆறு மாதப் படையெடுப்புக்குப் பின் பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) லெபனானிலிருந்து வெளியேறி துனீசியாவிலிருந்து இயங்கியது. 1988 ல் அது அல்ஜியர்சிலிருந்து, ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீனிய நாட்டிற்கான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தது (Government in Exile).

1988- 03 காலகட்ட பலஸ்தீனிய எழுச்சிகளில் (Intifadas) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்தது.

1993 ல் ஆஸ்லோவில் முதன்முதலாக பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸா, மேற்குக்கரை இரண்டையும் பாதை (corridor) ஒன்றின் மூலம் இணைத்து நிர்வகிப்பதற்கான “பலஸ்தீனிய தேசிய ஆணையத்திற்கு” (PNA) இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. காசா, மேற்குக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை வெளியேற்றிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இரு பகுதிகளும் இரு பலஸ்தீனிய அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தீவிர இயக்கமான ஹமாசின் கட்டுப்பாட்டில் காஸாவும் ஃபடா வின் கட்டுப்பாட்டில் மேற்குக் கரையும் தற்போது உள்ளன.

எனினும் எதார்த்தநிலை அப்படியேதான் தொடர்ந்தது. 1995 முதல்2007 வரை எத்தனையோ ‘சம்மிட்’கள், பேச்சுவார்த்தைகள் எதிலும் பயனில்லை. பலஸ்தீனியர்களின் நிலை மேலும் மேலும் மோசமாகியது.

இன்று தங்களை ஒரு நாடாக அங்கீகரிக்க பலஸ்தீனியர்கள் ஐ.நா அவையையும் பிற நாடுகளையும் கெஞ்சித் திரிகின்றனர்.