ரோஹிங்யா முஸ்லிம்கள்

(“தம்மத்தின் பெயரால்” எனும் தலைப்பில் செப் 6, 2015 ல் ‘புதிய விடியல்’ எனும் இதழில் எழுதிய கட்டுரை)

சுமார் 6 கோடி மொத்த மக்கள்தொகை உள்ள மியான்மரில் (முன்னாள் பர்மா) வெறும் 4 சதவீத அளவே ரோஹிங்யா முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட பர்மியப் பேரினவாதம் பவுத்தத்தை எவ்வாறெல்லாம் திரிக்கிறது எனப் பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. புத்தன் இருந்தால், பாவம் அந்தப் போதி மரத்தில் நாண்டு கொண்டு செத்துப்போயிருப்பான்.

பவுத்தத்தில் வன்முறைக்கும் போருக்கும் இடமில்லை. அது சீலங்களின் மதம். தனது பாதையை ‘மஜ்ஜிம் பதிபாதம்’ (நடுநிலைப் பாதை) என அறிவித்தவர் அந்த போதி மாதவர்.

அவர் துறவு பூண்டது குறித்த அந்த “நான்கு தரிசனங்கள்” எனும் பவுத்த நம்பிக்கையை விரிந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டவிழ்க்கும் அண்ணல் அம்பேத்கர் உலகின் அந்த ஆகப் புகழ் பெற்ற துறவிற்குப் பின்புலமாக இருந்த சம்பவத்தை இப்படி உரைப்பார்:

ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட நாள் பகை. அப்போதைக்குப்போது பிரச்சனை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சனை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம்.

முடுவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.

இனக்குழு மரபுப் படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவதே அது. புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:

  1. ஆயுதம் தாங்குவது பயங்கரவாதமாகத் தோன்றியது. இந்த மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
  2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
  3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று.”

இலங்கையிலும், மியான்மரிலும் புத்த பிக்குகள் அத்த கண்ட சுத்தத்தை புத்த வாக்குகளின் தொகுப்புகளிலிருந்து அழித்து விட்டார்களா? இல்லை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இரண்டு குழந்தைகள் மேல் பெறக்கூடாது. அதுவும் 36 மாத இடைவெளிக்குப் பின்னேதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளதே அப்படி அத்தகண்ட சுத்தத்தை யாரும் உச்சரிக்கக்கூடாது என மியான்மரிலும் இலங்கையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

  1. ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரின மேற்குப் பகுதியில், வங்க தேசத்தை ஒட்டியுள்ள ரகைன் மாநிலத்தில் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தில் அவர்கள் 60 சதம். ஆனால், இப்போது இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பின் அது 30 சதமாகக் குறைந்துள்ளது.

பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் பர்மியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இனவாதிகளால் குற்றம் சாட்டப்படுகின்றர். இது ஒரு அப்பட்டமான பொய். கட்டுமானப் தொழிலில் உள்ள மிகச் சில ரோஹிங்கியாக்களைத் தவிர பிற அனைவரும் தொழிலாளிகள், சிறு கடைக்காரர்கள் அவ்வளவுதான்.

“அவர்கள் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களால் அவர்கள் லாபம் அடைகிறார்கள். வசதியாகிறார்கள். பர்மியப் பவுத்தப் பெண்களைக் கவர்கிறார்கள். பின் அவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.”

“இவர்கள் ஏராளமாகப் பிள்ளை பெறுகிறார்கள். இனத்தைப் பெருக்கிறார்கள். விரிவாக்க நோக்குடன் செயல்படுகிறார்கள்.”

இப்படிச் செல்கிறது இனவாதிகளின் பிரச்சாரம்.

இவை எங்கேயோ கேட்ட குரல்கள் போல இல்லை?

ஆம். கேட்ட குரல்தான். மக்களைப் பிளவுப்படுத்தி, இரத்த ஆறு பெருகச் செய்து அதிகாரச் சுகங்காணும் இயக்கங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இதைத்தான் செய்கின்றன. எனவே, இது நாம் பல இடங்களிலும் கேட்ட குரல்தான். இந்தியாவில் நாம் தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்தான்.

மியான்மரில் பிக்கு அஷின் விராத்து என்பவரால் உருவாக்கப்பட்டுடிள்ள “969” எனும் இயக்கம்தான் இந்தக் குரலை உரத்து ஒலிக்கிறது. விராத்து 2003ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012ல் இன்றைய தெய்ன் செய்ன் அரசு அளித்த பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் அங்கு பெரிய அளவில் முஸ்லீம்களின் மீது வன்முறைகள் ஏவப்பட்டன. உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு ஓடியும் இலட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர்

இன்று உள்நாட்டில் உள்ள எந்த அடிப்படை வசதிகளும் அற்ற அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள் உள்ளனர். அங்கு அவர்களுக்குத் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் கூட இல்லை. “எல்லை கடந்த மருத்துவர்கள்” எனும் புகழ் பெற்ற சேவை அமைப்பினரையும் வன்முறையாளர்கள் விரட்டியுள்ளனர். கட,ந்த 25 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00,000. கடந்த பல ஆண்டுளாக நடைபெற்று வரும் வன்முறைகளில் தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் 3,00,000ம் மேற்பட்டோர் அகதிகளாய் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அதென்ன “969” இயக்கம்?

அது ஒரு பெரிய நகைச்சுவை. கருப்பு நகைச் சுவை.

முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள “பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம் (…) எனும் புனித வாக்கியத்தைக் குறிக்கும் “786” எனும் எண்ணை அவர்களது கடைகளின் பெயர்ப்பலகைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொறித்துக் கொள்வது வழக்கம்.

அதற்கு இப்படி விளக்கமளித்தார் விராத்து: 7+8+6= 21. அதாவது, அவர்கள் (முஸ்லிம்கள்) 21ம் நூற்றாண்டில் மியான்மரை முழுமையாக கையகப்படுத்துவது என்பதைக் குறிக்கும் குறியீடாக இதைப் பயன்படுத்துகின்றனர். இதை அனுமதிக்கக்கூடாது.

சின்ன வயதில் நாம் கேட்ட ஆற்றில் நீரருந்த வந்த குட்டி ஆடு, அதைத் தின்ன வந்த ஓநாய் கதை போல இல்லை?

“786க்குப் பதிலாக நாம் 969 என்பதை நம் அடையாளமாக்குவோம்” என்கிறார் விராத்து.

புத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை மும்மணிகள் எனப் போற்றுவது பவுத்த மரபு. விராத்து 969ஐ இப்படி விளக்கினார். 9 என்பது புத்தத்தின் மேன்மைமிகு ஒன்பது பண்புகளைக் குறிக்கிறது. 6 என்பது தம்மத்தின் ஆறு மேன்மைப் பண்புகள், கடைசி 9 சங்கத்தின் மேன்மையுரு பண்புகள்…

எப்படி இருக்கிறது கதை?

பவுத்ததின் மும்மணிகளை இப்படிக் கொலையையும் வன்முறைகளையும் நியாயப்படுத்தி இதை விட யாரும் இழிவு செய்துவிட இயலாது.

969 எனும் எண் இத்தகைய உன்னதங்களை அடையாளப்படுத்துவன என்றால் அவற்றிற்கும் அவற்றின் இன்றைய கொடு விளைவுகட்கும் என்ன தொடர்பு?

“குறி”க்கும், “குறி சுட்டும் பொருளுக்கும் எந்தக் தர்க்க பூர்வமான தொடர்பும் இல்லை. அவை தன்னிச்சையானவை (அணூஞடிtணூச்ணூதூ) எனும் சசூரியக் கோட்பாட்டிற்கு வாழும் எடுத்துக்காட்டோ பிக்கு அஷின் விராத்து கண்டுபிடித்த 969 எனும் குறி?

  1. 2012க்குப் பிந்திய கலவரத்திற்குப் பிந்தி மட்டும் 239 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அரசு கணக்குக் காட்டுகிறது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம் என்கிறது ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச். 2013 கலவரத்தில் மட்டும் 828 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன என்றும் 8,000 பேர்கள் இடப் பெயர்வுக்கு உள்ளாகினர் எனவும் அது பட்டியலிடுகிறது. கடந்த மூன்று ஆண்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்திகள் மூலம் புலம் பெயர்ந்து அவதிப் படுவோர் 1,20,000 பேர்.

பாதுகாப்பில்லாமல் இன்று நாட்டைவிட்டு வெளியேறுவோர் அப்படி ஒன்றும் எளிதாகச் சென்று விடவும் இயலாது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு நபர் ஒன்றிற்கு 200 டாலர் வரை பணம் கொடுக்க வேண்டும். பிறகு பன்னாட்டு ஆட்கடத்திகளுக்கு நபர் ஒன்றுக்கு 1000 டாலர் வரை கொடுத்து அவர்கள் தாய்லாந்திற்கோ மலேசியாவிற்கோ செல்ல வேண்டும். இந்த ஆட்கடத்திகள் அவர்களைப் பாதுகாப்பில்லாத படகுகளில் அது தாங்கக் கூடியதை விட அதிக அளவில் மனிதர்களை ஏற்றிப் பின் கடலுக்குள் தொலை தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏற்றி, அது நிரம்பும் வரை காத்திருந்து, போதிய உணவு முதலிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்களைக் கடத்திச் செல்வர். எந்த நாட்டை நோக்கிச் சென்றனரோ அதன் கரையை அடைந்த பின் காடுகளில் எவ்வித வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்படுவர். செல்லும் நாடுகள் கடும் பாதுகாப்புகள் மூலம் அவர்களை ஊடுருவ இயலாமல் செய்து விட்டால் பல நாட்கள் கடலிலேயே அவர்கள் தாங்க நேரிடும். நடுக்கடலில் கப்பலை விட்டுவிட்டுக் கடத்தியவர்கள் தப்பிச் செல்வதும் உண்டு.

கடத்தல்காரர்களால் உருவாக்கப்படும் இந்தக் கரையோர முகாம்கள் இருந்த இடங்களில் இறந்துபோன பலர் புதைக்கப்பட்டுள்ளது. (Mச்ண்ண் எணூச்திஞுண்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது நாட்டில் 28 இடங்களில் இத்தகைய 139 கல்லறைகளை மலேசிய அரசு கண்டுபிடித்துள்ளது. தாய்லாந்து அரசு 33 கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளது. ஒவ்வொன்றிலும் பல உடல்கள்.

டோனி அப்போட் ஆட்சிக்கு வந்த பின் (2013) ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் ரோஹிங்யாக்களை இரக்கமில்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் “துன்புறுத்தலின்” விளைவாக இங்கு வரவில்லை. “பொருளாதாரக் காரணங்களுக்கே” (அதாவது சம்பாதிப்பதற்காக) வருகின்றனர் என அப்பட்டமாகப் பொய்யுரைத்து அவர்களைத் துரத்துகிறது ஆஸ்திரேலியா. அது மட்டுமல்ல, பிற நாடுகள் எதுவும் அப்படி ரோஹிங்யா முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பினால் நாங்கள் அதைக் கண்டிக்கவும் மாட்டோம் எனவும், அது கூறியுள்ளது. மியான்மர் அரசு இதை வரவேற்றுள்ளது.

  1. ராகைன் மாநிலத்தில் இன்று வாழும் ரோகிங்யா மொழி பேசும் முஸ்லிம்கள் தம்மை அம்மாநிலத்தின் பூர்வகுடிகள் என உரிமை கோருவதையும், ரோகிங்யா இனத்தவர் என அடையாளப்படுத்திக் கொள்வதையும் மியான்மர் அரசு அனுமதிப்பதில்லை. அவர்களை அது ‘வங்காளிகள்’ என்றே அடையாளப்படுத்துகிறது. தாம் வங்காளிகள் என்பதை ஒத்துக் கொள்ளாத ரோஹிகியாக்களுக்கு எந்த வகைக் குடியுரிமையையும் அளிக்க இயலாது என்கிறது மியான்மர் அரசு.

இன்று ரோஹிங்யாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலம் ஆங்கிலோ பர்மிய யுத்தத்தின் போதுதான் (1826) பர்மாவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு முற்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அது வங்க மாநிலத்தின் கீழ்தான் இருந்தது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் (1860) பெரிய அளவில் அன்றைய வெள்ளை அரசு வங்கதேசத்தினரை இங்கு குடியேற்றியது. இப்படித்தான் அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிலும் விவசாயத்திற்கென வங்க முஸ்லிம்களைக் கொண்டு வந்து அது குடியமர்த்தியது. இது தவிர வங்கதேசச் சுதந்திரப் போரின்போது 197172 காலக்கட்டத்திலும் சுமார் 5,00,000 பேர் இன்றைய வங்க தேசத்திலிருந்து ராகைன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

எனினும் 1978ல் நடந்த இராணுவத் தாக்குதலின் ஊடாக சுமார் 2,00,000 வங்க முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குள் விரட்டப்பட்டனர். 199192ல் மேலும் சுமார் 2,70,000 முஸ்லிம்கள் வங்க தேசத்திற்குள் விரட்டப்பட்டனர். இனி மேலும் ஒருவரைக்கூட அனுமதிக்க இயலாது எனக் கறாராக இன்று அறிவித்துள்ளது வங்க தேச அரசு.

மியான்மரில் இன்று சுமார் 138 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு குடியுரிமை உள்ள தனி இனமாக அங்கீகாரம் மறுக்கப்படுவது ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மட்டும்தான். 1941ல் ஜப்பானிய ஆக்ரமிப்பின் கீழ் பர்மா வந்தபோது ஆங் சான் சுய் கியின் தந்தை ஆங் சானின் தலைமையில் இயங்கிய பர்மிய விடுதலைப் படை ஜப்பானை ஆதரித்தது. ரோஹிங்கியாக்கள் பிரிட்டீஷ் ஆட்யை ஆதரித்தனர். அதேபோல இந்தியத் துணைக் கண்டத்தில் பாகிஸ்தான் என்கிற தனி நாடு உருவாக்கப்பட இயக்கம் நடந்தபோதும் இவர்கள் தாம் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலத்தை பாகிஸ்தானுடன் (அதாவது இன்றைய வங்க தேசத்துடன்) இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

ஒரு பேரின ஒடுக்குமுறையின் கீழ் வாழ நேர்ந்த சிறு இனங்கள் இப்படி நடந்து கொள்வதும், அது மேலும் பகை வளர்வதற்குக் காரணமாவதும் எங்கும் நடக்கக் கூடியதுதான்.

1982ல் நீ வின் தலைமையிலிருந்த இராணுவ அரசால் இயற்றப்பட்ட பர்மியக் குடியுரிமைச் சட்டம் (ஆதணூட்ஞுண்ஞு Nச்tடிணிணச்டூடிtதூ ஃச்தீ) ரோகிங்யாக்களுக்குக் குடியுரிமையை மறுத்தது. அவர்களை ‘வங்காளிகள்’ எனவும் மூன்றாம் நிலைக்குடிகள் (Nச்tதணூச்டூடிண்ஞுஞீ இடிtடித்ஞுணண்) எனவும் வகைப்படுத்தியது. அதற்கும் கூட அவர்கள் தம்மை வங்காளிகள் என அடையாளப்படுத்திக் கொள்வது தவிர 1948க்கு முன்னதாகவே அங்கு வாழ்ந்ததை நிறுவுவதும் நிபந்தனையாக்கப்பட்டது.

  1. மியான்மர் இன்று உலகிலேயே பின்தங்கிய, வறுமை மிக்க ஒரு நாடு. சுமார்5 பில்லியன் டாலர் கடனை அது சுமந்து நிற்கிறது. அதன் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் பாதிச் செலவு கடனைத் திருப்பிக் கொடுப்பதிலேயே கழிகிறது.

சுமார் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நாடு அது. 1987ல் அன்றைய இராணுவ அரசு 100,75,35,25 கியாட் மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாதவை என அறிவித்தபோது மிகப்பெரிய மாணவர் எழுச்சி அங்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் 8,1988ல் தொடங்கிய அந்த இயக்கம் ‘8888’ இயக்கம் என அழைக்கப்படுகிறது. சுமார் 350 பேர்கள் அப்போது கொல்லப்பட்டனர். ஆங் சான் சுய் கி ஒரு தேசியத் திரு உருவாக வெளிப்போந்தார். 1990ல் நடைபெற்ற தேர்தலில் 485 நாடாளுமன்றத் தொகுதிகளில் 392ஐ அவரது கட்சி கைப்பற்றியது. எனினும் அவர் பதவி ஏற்க அனுமதிக்கப்படவில்லை. அவரது சிறைவாசம் தொடர்ந்தது. 2010ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

2011ல் குடியரசுத் தலைவராகப் பதவியேறிய முன்னாள் ஜெனரல் தெய்ன் சேய்ன் மியான்மரின் பொருளாதாரத்தைத் திறந்துவிட்ட வைகிய்ல உலக முதலாளித்துவத்தின் ஆதரவுக்குப் பாத்திரமாகியுள்ளார். சுய் கியைப் பொருத்தமட்டில் தேர்தல் மூலம் விரைவில் மியான்மரின் ஆட்சியைக் கைப்பற்றிவிட இயலும் என்கிற நம்பிக்கையுடன், பெரிய அளவில் தெய்ன் செய்னை எதிர்க்காமல் அரசியல் பண்ணிக் கொண்டுள்ளார். எக்காரணம் கொண்டும் அவர் பர்மிய பவுத்த ஓட்டு வங்கியை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளைப் பொருத்தமட்டில் மியான்மரைத் தம் கைக்குள் வைத்துக் கொள்வதை மிக முக்கியமாக்கக் கருதுகின்றன. திறந்த பொருளாதாரத்தின் ஊடாக திறக்கப்பட்டது. தவிர இன்று உலக முதலாளியத்தின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படும் சீனாவுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த நாட்டை அவை எந்த வகையிலும் தம் பிடியிலிருந்து நழுவ விடத் தயாராக இல்லை.

இந்த நிலையில் அந்தப் 14 லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்படுவது குறித்து சுய் கியும் சரி, அமெரிக்கா அல்லது ஐ.நா. யாரும் எந்த எதிர்ப்பையும் காட்டப்போவதில்லை.

2012ல் ஒரு பர்மிய பவுத்தப் பெண் மூன்று முஸ்லிம் இளைஞர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி இன்றைய வன்முறை தொடங்கியது. ரோஹிங்யாக்கள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் ஐ.நா. அவையின் மனித உரிமை அமைப்பு தீர்மானம் இயற்றியபோது சுய்கியின் கட்சி அதை தங்களின் இறையாண்மையில் தலையிடுவதாகக் கண்டித்தது. இன்று சுய் கி மௌனமாக இருப்பதை தலாய்லாமா உள்ளிட்ட எல்லோரும் கண்டித்தும் கூட அவர் மௌனத்தைக் கலைக்கத் தயாராக இல்லை.

ரோஹிங்யா மக்கள் மீதான இந்த வன்முறைகளுக்கு மத்தியில் 2014 அக்டோபரில் தெய்ன் செய்ன் அரசு ‘ராகைன் மாநிலச் செயல்த்திட்டத்தை” (கீச்டுடடிணஞு அஞிtடிணிண கடூச்ண) அறிவித்தது. 1818லிருந்து ரகைன் மாநிலத்தில் வசிப்பதற்கு உரிய ஆதாரங்களைக் காட்டுவோருக்கு முழுக் குடியுரிமை எனவும், 1948 முதல் இருப்பதற்கு உரிய ஆதாரங்களைக் காட்டுவோருக்கு அரைக் குடியுரிமை எனவும் அறிவித்தது. பிரச்சனை என்னவெனில் அரசு கோரும் அத்தகைய ஆதாரங்கள் எதையும் காட்ட இயலாதவர்களாகவே பெரும்பாலான ரோஹிங்யாக்கள் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக்கூடாது, மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும் என்றெல்லாம் வேறு சில நாடுகளிலும் கூடப் பேசப்பட்டாலும் எந்த நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவின் மீது மட்டும் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதில்லை. இது தவிர மதமாற்றத் தடைச் சட்டம், மதங்களுக்கு இடையே திருமணங்கள் கூடாது எனச் சட்டம், அனுமதியின்றி இடம் பெயரக்கூடாது என்கிற தடை, பொதுப்பள்ளிகளில் மேற்படிப்பு படிக்கத் தடை, அரசுப் பணிகளுக்குத் தடை என இத்தனைக்கும் மத்தியில்தான் இன்று ரோஹிங்யாக்கள் “உலகிலேயே அதிகமாகத் துன்றுபுறுத்தப்படுகிறவர்கள்” என்கிற பெயரைச் சுமந்துகொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து கொண்டுள்ளனர்.

பிக்கு விராத்துவின் 969 இயக்கம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் பவுத்த அமைப்பான ’பொதுபலசேனா’ வுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகிறது.சென்ற ஆண்டு பொதுபல சேனா இலங்கையில் நடத்திய மாநாட்டிலும் அது கலந்து கொண்டுள்ளது.

எனினும் இந்தப் பிரச்சினைகளில் பவுத்தம் மற்றும் பிக்குகளின் பங்கை முன்னிட்டு பவுத்தத்தையே ஒரு எதிரியாகக் கட்டமைக்கத் தேவை இல்லை. இதே பர்மிய பவுத்த பிக்குகள்தான் 2007ல் பர்மிய இராணுவ அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்தினர். ‘காவிப் புரட்சி‘ (குச்ஞூஞூணூணிண கீஞுதிணிடூதtடிணிண) என இன்று அது அழைக்கப்படுகிறது. தலாய் லாமா மட்டுமின்றி இந்தக் காவிப் புரட்சியில் பங்கு பெற்ற பிக்குகளும் 8888 இயக்கத்தில் பங்கு பெற்ற பலரும் இன்று ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். மியான்மரில் இயங்கும் பெண்கள் அமைப்புகள் இரண்டும் முஸ்லிம் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதற்குத் தடை விதிக்கும் சட்டங்களைக் கண்டித்துள்ளனர்.

இனம், மதம், மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல்கள் உலக வரலாற்றில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் எந்த மதமும், எந்த மொழி அரசியலும், இனப் போராட்டங்களும் விதி விலக்கல்ல. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை பவுத்தப் பேரின வாதம் மட்டுமல்ல, அதை எதிர்த்து நின்ற தமிழ் இன வாதமும் நிகழ்த்தியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சாராம்சமாக எந்த ஒரு மதத்தையும், மொழியையும், இனத்தையும் நாம் பகையாகக் கருதத் தேவையில்லை. நமது உரிமைகளுக்கு எதிரான போராட்டம் இத்தகைய வெறுப்புக்ளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

  1. இறுதியாக ஒன்று. ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சினையில் மோடி அரசு காக்கும் மௌனத்தைப் புரிந்து கொள்வது கடினமல்ல. ஆட்சிக்கு வந்தவுடன் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி ஆயிரத்திற்கு மேற்பட்டோரைக் கொன்றபோதும் அது இப்படித்தான் இறுதி வரை மௌனியாக இருந்தது. தவிரவும் வங்க தேச முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் ஊடுறுவுகின்றனர் எனறு அரசியல் பண்ணி வரும் பாஜக அரசு இப்படி இன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நிற்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டாததில் வியப்பில்லை.

இந்தியா இன்று தென் ஆசியாவில் தன்னை ஒரு பெரிய சக்தியாக நிலை நிறுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் நாம் அறியாததல்ல. பர்மாவில் இராணுவ ஆட்சி உருவானபின் அதனுடனான உறவை நிறுத்திக் கொண்ட இந்திய அரசு 1990 களில் மீண்டும் அதனுடன் நெருக்கமாக உறவைப் பேணத் துவங்கியது. பல துறைகளில் இன்று இந்தியா மியான்மருக்கு உதவி செய்கிறது. இந்தப் பிரச்சினையில் காட்டும் மௌனம் அது இன்று பேணும் நெருக்கமான உறவுக்கு எந்த வகையிலும் பொருத்தமாக இல்லாததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்ரனர்.

இது போன்ற தருணங்களில் அறம்சார்ந்த ஒரு நிலைபாட்டை மேற்கொள்வதே நேரு காலந்தொட்டு இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. இன்றைய அதன் நிலைபாடு அது எந்த அளவிற்கு அறம் சார்ந்த அயலுறவுப் பாரம்பரியத்திலிருந்து அது விலகிச் செல்கிறது என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது.

‘வாசுதேவக் குடும்பகம் என்றெல்லாம் மோடி பேசித் திரிவதில் ஏதேனும் உணமை இருக்குமானால் ரோஹிங்ய முஸ்லிம்கள் விடயத்தில் மியான்மர் அரசு நடந்து கொள்வதை ஆது கண்டிக்க வேண்டும். அவர்கள் இப்படி வெளியேற்றப்படுவதை அது எதிர்க்க வேண்டும். ஆட்கடத்திகளால் அல்லலுற்று நிற்கும் ரோஹிங்யாக்களைக் காப்பாற்றுவதற்கான புலம் பெயர்பவர்களுக்கான பன்னாட்டு அமைப்புக்கு அது தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும்.