1. இந்திய அரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?
சற்று முன் வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப் படை வீரர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுமான சைமன், ஞானப் பிரகாசம், பிலவேந்திரன், மாதையன் ஆகிய நால்வரது தண்டனை நிறைவேற்றத்தைத் தடை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நிரந்தரத் தடை இல்லை என்றபோதிலும் அஜ்மல் கசாப், அஃப்சல் குரு இருவரையும் மூன்று மாதத்திற்குள் அடுத்தடுத்துத் தூக்கிலிட்டுக் கொன்றதைப் போல இவர்களையும் கொல்ல இருந்த உடனடிச் சூழல் தற்போது விலகியுள்ளது.
இந்த நால்வரது கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற வாரம் ஏற்க மறுத்ததை ஒட்டி அவர்கள் உடனடியாகத் தூக்கிலிடப்படக் கூடிய நிலை உருவானது. சென்ற ஞாயிறன்று அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்கிற நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் இவர்கள் நால்வரின் சார்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி இந்தத் தடையைப் பெற்றுள்ளனர்.
இந்தியச் சட்டங்களின்படி உச்ச நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தால் அவருக்குக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்க உரிமையுண்டு. ஆரசியல் சட்டத்தின் 72ம் பிரிவின்படி அவருக்கு மன்னிப்பு அளித்துத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அவருக்கு அதிகரமுண்டு. எனினும் அவர் இதைத் தன்னிச்சையாகச் செய்துவிட இயலாது. அரசிடம், அதாவது உள்துறை அமைச்சகத்திடம் கருத்தைக் கேட்டு அந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கப் பரிந்துரை செய்த போதிலும் குடியரசுத் தலைவர் அப்படிச் செய்யாமல் காலந்தாழ்த்தலாம். முந்தைய தலைவர் பிரதீபா பட்டீல் 35 பேர்களின் மரண தண்டனைகளை ஆயுள்தண்டனைகளாகக் குறைத்து ஆணையிட்டார். அதற்கும் முந்தைய தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலத்தில் தனஞ்சய் சட்டர்ஜி என்பவருக்கு மட்டும் தன்டனை நிறைவேற்றப்பட்டது (2004).
குடியரசுத் தலைவராக ஆவதற்கு முதல் நால் வரையிலும் விசுவாசமான காங்கிரஸ்காரராகத் தீவிர அரசியல் செய்து வந்த பிரணாப் பதவியேற்ற மூன்று மாதத்திற்குள் ஆறு பேர்களின் கருணை மனுக்களை நிராகரித்துச் ‘சாதனை’ புரிந்துள்ளார். அவர்களில் இருவாரது தண்டனைகள் இரகசியமாக நிறைவேற்றப்பட்டும் விட்டன.
நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின் நீண்ட காலம் ஒருவர் தூக்கிலிடப் படாமல் இருந்து இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டால், இது தொடர்பாக இடைக்காலத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய அச்சம்,கவலை, துயரம், மன அழுத்தம் (agony of suspense) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தனது தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தை நாடலாம் எனக் குறைந்த பட்சம் நான்கு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது.
சென்ற ஏப்ரலில் (2012) தேவேந்திரபால்சிங் புல்லார், நரேந்திரநாத் தாஸ் என்கிற இருவர் இவ்வாறு 11 ஆண்டுகளுக்குப் பின் தூக்கிலிடப்பட இருந்த நிலையில் நீதிமன்றம் மேற்சொன்ன அடிப்படையில் அதற்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை விசாரணக்கு எடுத்துக் கொண்டது. அதேபோல ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் சென்ற ஆண்டில் தண்டனை நிறைவேற்றத்திற்குத் தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டதையும் அதை ஒட்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெறப்பட்டதையும் அறிவோம். இவ்வழக்கும் முன் குறிப்பிட்ட புல்லார் வழக்குடன் இணைத்து விசாரிக்கப் பட்டு வருகிறது. தற்போது வீரப்பன் கூட்டாளிகளின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு புல்லார் வழக்குத் தீர்ப்பு வந்தவுடன் அதனடிப்படையில் இதுவும் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது..
புல்லார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்திய அளவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாகக் காத்திருப்பவர்களின் பட்டியலை அரசிடம் கோரிப் பெற்றுக்கொண்டது. காத்திருக்கும் எல்லோரது வழக்குகளையும் இதன்மூலம் அதன் ஆய்வுக்குட்பட்டதாகியது. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய (amicus curiae) அந்தியாருஜினா என்கிற மூத்த வழக்குரைஞரையும் நியமித்தது. அவர் அஃப்சல் குரு உள்ளிட்ட அனைவரது வழக்கு விவரங்களையும் தந்துள்ள நிலையில் விசாரணை சென்ற ஏப்ரல்19 (2012) அன்று முடிவுற்றது. தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக அவசர அவசரமாக ஒரு திருடனைப்போல டில்லி திகார் சிறைக்குள் நுழைந்த இந்திய அரசு சென்ற 9 ந்தேதி அன்று காலை எட்டரை மணிக்கு அஃப்சல்குருவின் மனைவி, பதின்வயது மகன் உள்ளிட்ட யாருக்கும் தெரியாமல் சுருக்கிட்டு அவரது உயிரைப் பறித்துக் கொண்டது.
நீதிமன்றத்தின் பார்வையில் வழக்கு இருப்பது ஒரு பக்கம்; தூக்கிலிடப்படுவதற்கு முன்னம் ஒரே ஒருமுறை மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்கும் உலக அள்வில் கடைபிடிக்கப்படும் அடிப்படை மனித நாகரீகமும் மறுக்கப்பட்டது இன்னொருபுறம்; இவை இன்று இந்திய அளவில் மரண தண்டனை குறித்த மிகப் பெரிய விவாதத்தையும் இந்திய அரசின் மீதான கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
சென்ற 2001 டிசம்பர் 13 அன்று இந்தியப் பாராளுமன்றத்தை ஜெய்ஷ் ஏ முகம்மத் என்கிற தீவிரவாதிகள் தாக்கினர், தாக்குதலில் ஈடுபட்ட ஐவரும், ஒன்பது படைவீரர்களும் அப்போது கொல்லப்பட்டனர். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் அஃப்சல். டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கீலானி, அஃப்சலின் நெருங்கிய உறவினர் ஷௌகத் குரு, அவரது மனைவி அஃப்சான் ஆகியோரும் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.
கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களில் கீலானி, அஃப்சான் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். தகவல் மறைப்பு என்பதற்காகப் பத்தாண்டு காலச் சிறைவாசத்திற்குப் பின் ஷௌகத் இரண்டாண்டுகளுக்கு முன் விடுதலை ஆனார். 2005 ஆகஸ்ட் 4 அன்று அஃப்சலுக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம்.
காஷ்மீர்த் தீவிரவாதியாக இருந்து இந்தியப் படையிடம் சரணடைந்தவர் அஃப்சல். சரணடந்தவர்களை அவ்வளவு எளிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இந்தியப் படையினர் அனுமதிப்பதில்லை. அடிக்கடி அதிரடிப்படை அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள். உளவு வெலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். கைது செய்து வைத்துக் குடும்பத்தாரிடம் காசு வாங்கிக்கொண்டு விடுவிப்பார்கள். ஒரு சிறிய மருந்து விற்பனை நிறுவனத்தைத் தொடங்கி அமைதியான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முனைந்த அஃப்சலுக்கும் இவ்வளவும் நடந்தது. அதிரடிப்படை அலுவலகத்தில்தான் பாராளுமன்றத் தாக்குதலில் பங்கேற்றுக் கொல்லப்பட்ட முகம்மதும், இன்னும் கைது செய்யப்படாத தாரிக்கும் அஃப்சலுக்கு அறிமுகமானார்கள். இந்த அறிமுகமே இன்று அஃப்சலின் உய்யிர் பறிப்ப்புக்குக் காரணமாகியது.
இன்று அஃப்சலை இந்தத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தக்கூடிய நேரடி சாட்சிகள் ஒன்று குற்றம் நிரூபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் (கீலானி, அஃப்சான்) அல்லது கொல்லப்பட்டுள்ளனர் (முகம்மது) அல்லது தலைமறைவாகியுள்ளனர் (தாரிக்). அஃப்சலே அஃப்சலுக்கு எதிரான சாட்சியாக நிறுத்தப்பட்டார். சித்திரவதைகளினூடாகப் பெற்ற வாக்குமூலம் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. நீதிமன்றங்களில் அவருக்கு வாதிட முறையான வழக்குரைஞர்கள் இல்லை. விசாரணை நீதிமன்றத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அவரிடம் மிகவும் வெறுப்புடன் நடந்து கொண்டார். உயர் நீதிமன்றத்தில் அவருக்காக வாதிடுவதாக வந்தவர் அஃப்சலைத் தூகிலிடாமல் விஷ ஊசி செலுத்திக் கொல்லலாம் என நீதிமன்றம் முன் தெரிவித்தார். அப்படி எந்த விருப்பையும் அஃப்சல் அவரிடம் தெரிவித்ததில்லை.
விசாரணைத் தரப்பு முன்வைத்த வாதங்களிலும் பல ஒட்டைகள் இருந்தன. அஃப்சல் பயன்படுத்திய ‘சிம்’ கார்டு ஒன்று முக்கிய ஆதாரமாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. அந்த சிம் அவருக்கு விற்கப்படுவதற்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. அஃப்சல் தாக்குதலில் தொடர்புகொண்டிருந்தார் என்பது டெல்லி விசாரணையில் ‘கண்டுபிடிக்கப்பட்டு’, அவரைக் கைது செய்ய ஆணை அனுப்பப்படுமுன்னரே அவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருந்தார். இப்படி நிறையச் சொல்லலாம். இது குறித்து தீர்ப்பு வந்தபோது நிறைய எழுதியுள்ளேன்.
இப்படி சந்தேகத்திற்கிடமின்றி அஃப்சல்மீதான குற்றம் நிறுவப்படாமலேயே அவருக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம். “(அஃப்சலுக்கு) மரணதண்டனை அளிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தியுறும்” என நீதிபதி தீர்ப்பில் கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. சட்டம், சாட்சியம், ஆதாரம் மற்றும் முந்தைய தீர்ப்புகளின் வழி நின்று மட்டுமே நீதி வழங்க இயலும். சமூகத்தின் மனச்சாட்சி, அரசியல் கோரிக்கைகள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலெல்லாம் தீர்ப்பு வழங்கிவிட இயலாது. ஆனால் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இப்படியெல்லாம் சொல்லித்தான் தீர்ப்புகள் வழங்குகின்றன. தவிரவும் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி அஃப்சல் கொல்லப்படத்தான் வேண்டும் எனக் கூறுகிறது என்பதை நீதிபதி எந்த அளவுகோலை வைத்து அளந்தார்?
“தண்டனை நிறைவேற்றம் குறித்து மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது” என இரகசியத் தூக்கிற்குக் காரணம் சொல்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. விதிப்படி ஏன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கேட்டால், “விரைவுத் தபாலில் செய்தி அனுப்பினோம். அவர்களுக்குக் கிடைக்கவில்லை” எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்படி மக்களையும், எதிர்க் கருத்துக்களையும், ஆர்பாட்டங்களையும் கண்டஞ்சுவதை என்னென்பது? தூக்கிலிட்ட கையோடு காஷ்மீர் முழுதும் ஊரடங்குச் சட்டம், தொலைக்காட்சிகளுக்கு சென்சார், எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம் என நடவடிக்கைகள் தொடர்ந்தன, அஃப்சலின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தனி நபர்கள் யாரேனும் இப்படி விதிமுறைகளை மீறுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு, ஒரு மக்கட் தொகுதி என்பன ஏற்றுக்கொண்ட விதிகளையும் நெறிமுறைகளையும் மீறாதிருப்பது அவசியம். ஏனெனில் அப்போதுதான் அது மக்கட் தொகுதியின் சராசரி விருப்பை சரியாக நிறைவேற்றுவதாக அமையும்.
மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிப்பது என்பது நீதிமன்றத்தின் உரிமை அல்ல. இஸ்லாமிய நாடுகளில் மன்னிப்பு அளிக்கும் உரிமை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும். ஜனநாயக அரசுகளில் அரசே மன்னிப்பு அளிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொள்கிறது. தனிப்பட்ட நாபர்களின் பொறுப்பில் விடாமல் அரசு அதை மேற்கொள்வது என்பது மன்னிப்பில் பழிவாங்கலுக்கு இடமிருக்கக் கூடாது என்கிற அடிப்படியில் அமைகிறது. அதேபோல மன்னிப்பு என்பதில் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதில்லை. தண்டனை அளிக்கப்பட்டவரின் குடும்பம், எதிர்காலம், நன்னடத்தை, ஒட்டு மொத்தமான சமூக நலன் ஆகியவற்றிற்கு மன்னிப்பளிப்பதில் முக்கிய பங்குண்டு.
வெறும் சட்ட விதிகளுக்கு அப்பால் கருணை, அன்பு, மனிதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மன்னிபு வழங்கு அதிகாரம் நீதித் துறையிடமிருந்து விலக்கப்படுகிறது..
ஆனால் இந்திய அரசோ மன்னிப்பை அரசியலாக்குகிறது. இன்று இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டவர்கள் இருவரும் முஸ்லிம்கள். பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அஃப்சலை உடனடியாகத் தூக்கிலிட வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.. முஸ்லிம் ஓட்டுகளுக்காகாத் தேசப் பாதுகாப்பை அரசு கைவிட்டு விடுகிறது என்று அது அரச்சைக் குற்றம் சாட்டி வந்தது. இந்தக் குற்றச் சாட்டினடியாகப் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளை இழக்க விரும்பாத இந்திய அரசு இப்படி இரகசியத் தூக்குகளை நிகழ்த்திக் கோண்டுள்ளது. பா.ஜ.கவைப் பொருத்த மட்டில் அதற்கு நீதி என்றால் மரண தண்டனைதான். இத்தகைய பிரச்சினைகளில் மரண தண்டனைக்குக் குறைவான எதையும் அது தண்டனையாகக் கருதுவதில்லை. நீதியையும் பழிவாங்கலையும் அது பிரித்துப் பார்ப்பதில்லை. அஃப்சலின் மரணத்தை அக்கட்சியினர் லட்டு தின்று கொண்டாடும் காட்சிகள் அன்றைய ஊடகங்களில் இடம் பெற்றன.
இன்று இந்திய அரசும் பா.ஜ.க வழி நின்று நீதியையும் பழிவாங்கலையும் ஒன்றாக்கியுள்ளது. குறுகிய அரசியல் நலன்களுக்காக அப்படிச் செய்துள்ளது. அப்படிச் செய்ததன் மூலம் இன்று காஷ்மீர் மக்களிடமிருந்து அது மேலும் அந்நியமாகியுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவைப் பழி வாங்கப்போவதாக அறிவித்துள்ளன. இதற்கு எதிர்வினையாகப் பாக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் இந்தியரான சரபத் சிங்கை அது தூக்கிலிடலாம். அஃப்சல் பாகிஸ்தானை ஆதரித்தவரல்ல. தீவிரவாதத்தில் வெறுப்புற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர். இந்திய அரசு தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் அடிப்படை நெறிகளிலிருந்து பிறழ்ந்துள்ளது.
சமூகம் நாகரீகத்தில் மேம்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரதில் (penal culture) வெளிப்படும். தண்டனைகள் மேலும் மேலும் மனிதாயப் படுவதே சமூகம் நாகரீகமடைந்து வருவதன் அடையாளம். இப்படிக் குடும்பத்தவர்களுக்கும் அறிவிக்காமல் தூக்கிலிட்டு உயிரைப் பறிப்பது இதற்கு எதிர்மாறானது.
2 – உச்ச நீதிமன்றம் தான் தவறாக மரண தண்டனை வழங்கிவிட்டதாகச் சொல்வதன் பொருள் என்ன?
இரண்டு நாட்கள் முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வருக்குத் தனது தலைமையில் அமர்ந்த உச்ச நீதிமன்ற அமர்வு மரண தண்டனை அளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது என நீதியசர் கே.டி.தாமஸ் கூறினார். முன்னதாகச் சென்ற ஜூலை 25 (2012) அன்று புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் 14 பேர் அப்போதுதான் பதவி ஏற்றிருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியச் சந்தித்து நமது நீதி வழங்கு வரலாற்றில் இதுவரை காணாத வகையில் மனு ஒன்றை அளித்தனர். ஆறு வழக்குகளில் மரணதண்டனை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கும் 13 பேர்களின் மரண தண்டனைகளை, குடியரசுத் தலைவருக்கு அரசியல்சட்டத்தின் 72ம் பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அம்மனுவில் வேண்டப்பட்டிருந்தது.
ஒன்றைச் சொல்ல வேண்டும். மரண தண்டனை ஒழிப்பு என்கிற அடிப்படையிலிருந்து அவர்கள் இதைக் கோரவில்லை. அவர்களில் சிலர் மரண தண்டனை ஒழிப்பில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோரிக்கை அந்த அடிப்படையிலிருந்து எழவில்லை, மாறாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள இந்த மரண தண்டனைகள் அனைத்தும் தற்போதைய நீதி வழங்கு நெறிமுறைகளுக்கு மாறாகவும் தவறாகவும் அளிக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படையிலேயே அவர்கள் இதைக் கோரினர். ஓய்வு பெற்ற இந்நீதிபதிகள் தன்னிச்சையாக இதைக் கூறவில்லை. உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய மூன்று வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது முன்னதாக அது ஏழு வழக்குகளில் அளித்துள்ள மரண தண்டனைகள் “தவறுதல் அல்லது அறியாமையின்” (per incurium) கரணமாக அளிக்கப்பட்டவை என ஏற்றுக் கொண்டுள்ளது.
சந்தோஷ் குமார் பாரியார் ( 6SCC 498 /2009), திலிப் திவாரி (1 SCC 775 /2010), ராஜேஷ் குமார் (13 SCC 706 /2011) ஆகிய சமீபத்திய மூன்று வழக்குகளில்தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தவறை ஒத்துக் கொண்டது. மரண தண்டனை வழங்குவதில் தற்போதைய மிக அடிப்படையான கட்டுப்டுத்தும் நெறியான (binding dictum), “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும்” எனும் நிபந்தனைக்கு மாறானவையாக மேற்குறித்த ஏழு வழக்குகளின் தீர்ப்புகளும் அமைந்து விட்டன என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதன் அடிப்படையிலேயே பதினான்கு நீதிபதிகளும் இந்த மனுவைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தனர்.
“மரண தண்டனை வேண்டுமா, கூடாதா என்கிற அகன்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை. மரண தண்டனை என்பதை மிக்க நேர்மையுடனும், நடுநிலையுடனும் நீதியுடனும் மனச்சாட்சியின் உறுத்தலுடனுந்தான் கையாள வேண்டும். தவறாகத் தண்டனை வழங்கப்பட்ட ஒருவரைத் தூக்கிலிடுவது நமது குற்ற நீதி வழங்கு முறையின் நம்பகத் தன்மையையும், இத்தகைய தண்டனை நிறைவேற்றுகிற அரசு அதிகாரத்தையும் எதிர்காலத்தில் கேள்விக்குள்ளாக்கி விடும்” என அவர்கள் அம் மனுவில் எச்சரித்திருந்தனர்.
குற்ற நீதி வழங்குமுறையில் மாற்றங்கள்
மேலே செல்லுமுன் குற்ற நீதி வழங்குமுறை குறித்து ஒரு சொல். ‘குற்றம்’ என்பதையும், அதற்குரிய ‘தண்டடனை’யையும் நமது சட்டங்கள் வரையறுக்கின்றன. நீதிமன்றங்கள் இவ்ற்றின் வழி நின்று நீதி வழங்க வேண்டும். ஆம், நீதிமன்றங்கள் என்பன நீதி வழங்கும் நிறுவனங்கள்தானே ஒழிய அவை பலரும் நினைப்பதுபோல தண்டனை வழங்கும் நிறுவனங்கள் அல்ல. இது குறித்துப் பின்னர் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சட்ட நூற்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்குகின்றன என்பதில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியன. சட்டங்கள் என்பன நிரந்தரமானவை அல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் சட்டங்கள் மாறுகின்றன. மனித சமூகம் மேலும் மேலும் மனிதாயப் படுகிறது. அதன் அனுபவங்கள் விசாலிக்கின்றன. ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு சூழலில் பொருந்தா. அனுபவங்களின் ஊடாகச் சட்டங்களின் வரையறைகளிலும், அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் செய்வதும் தண்டனைகளை மேலும் மேலும் மனிதாயப்படுத்துவதும் தேவையாகின்றன. இது குறித்தும் பின்னர் விரிவாகக் காண்போம்.
ஒரு எடுத்துக்காட்டு: பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் 1886ல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. அதில் பல குறைபாடுகள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் இருந்தன. குற்றம் புரிந்த ஆண் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு ஆணாதிக்க மனநிலையில் உருவான அச்சட்டம் சமூக வளர்ச்சிப் போக்கிலும், சமூகத்திலும், பெண்கள் மத்தியிலும் உருவாகும் விழிப்புணர்வின் விளைவாகவும் இன்று பல மாற்றங்களுக்கு உள்ளாகி வர்மா ஆணைய அறிக்கை வரை வளர்ந்துள்ளது. 1973ல் மதுரா என்கிற பழங்குடிப் பெண் வன்புணர்சி செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து பெண்ணிய அமைப்புகள் போராடின. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காத அளவிற்கு இது தொடர்பான நம் சட்டங்கள் எவ்வளவு ஆணாதிக்கத் தன்மையுடன் உள்ளன என்பது குறித்து தேசிய அளவில் விவாதமொன்று உருவாவதற்கு இது வழி வகுத்தது. 1980ல் மும்பையில் ஒரு மிகப் பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டு விரிவான நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன.
இவ்வாறு ஒரு பிரச்சினை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் உருவாக்கும் நெறிமுறைகள் அனைத்தையும் ஏற்கும் அளவிற்குச் சமூகம் இணையாகப் பக்குவப்பட்டு விடுவதில்லை. எனினும் இவ்வாறு உருவாகி மேலெழும் நெறிமுறைகளிலிருந்து சமூகம் முற்றிலும் ஒதுங்கிக் கொள்ளவும் இயலாது. சமூக மதிப்பீடுகள் மாற்றமடைகின்றன. இந்த முரண்பாடுகளின் ஊடாகத்தான் சமூக வளர்ச்சி நடை பெறுகிறது. மும்பை மாநாடு உருவாக்கிய நெறிகள் அனைத்தும் சட்டமாக்கப்பட இயலவில்லை ஆயினும் 1983ல் இந்த அடிப்படையில் வன்புணர்ச்சி தொடர்பான சட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
“வன்புணர்ச்சி”, “ஒப்புதல் (consensual sex)” ஆகியவற்றின் வறையறைகள், விசாரணை முறை (in camera proceedings), குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத் தண்டனைகளை அதிகரித்தல் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சட்டத்தில் மாற்றங்கள் உருவாயின.. கணவனாக இருந்தபோதிலும் பிரிந்துள்ள மனைவியின் மீது மேற்கொள்ளும் விருப்பத்திற்கு மீறிய பாலியல் அத்துமீறலை வன்புணர்ச்சியாகவே கருதுதல் முதலியனவுவம் இன்று சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் கணவனாக இருந்த போதிலும் மனைவியின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்படும் புணர்ச்ச்சியை வன்புணர்ச்சியாகவே கருத வேண்டும் என்பது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தில் அதுவும் கூட மாறலாம்.
இப்படிச் சட்டங்கள் காலப் போக்கில் மாறுவது என்பது ஒன்று. மற்றது சட்ட நூல்களில் கூறப்பட்டதற்கு அப்பால் சமூக வளர்ச்சிப் போக்கு மற்றும் பன்னாட்டு நீதி வழங்கு நெறிமுறை வளர்ச்சி ஆகியவற்றின் ஊடாக இருக்கும் சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் புதிய விளக்கங்களை அளித்துப் புதிய நெறிமுறைகளை உருவாக்குவது என்பது மற்றொன்று. உச்ச நீதிமன்றத்தின் விரிந்த ஒரு அமர்வு இவ்வாறு ஒரு புதிய விளக்கத்தை அளிக்கும்போது, பின் அது போன்ற வழக்குகளில் இந்த விளக்கம் ஒரு கட்டுப்படுத்தும் நிபந்தனையாக (binding dictum) ஆகிவிடுகிறது, இத்தைய புதிய விளக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு (ratio decidendi) மீற இயலாத வழிகாட்டு நெறி அல்லது ‘வரைநெறி’ (ratio)) ஆகிவிடுகிறது, ஒரு விரிந்த நீதிமன்ற அமர்வு (எ.கா: ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு) உருவாக்கிய ஒரு அடிப்படை நெறியை, அதைவிடக் குறுகிய ஒரு அமர்வு (எ.கா: மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு) மாற்றி அமைத்து விட இயலாது.
மரண தண்டனை தொடர்பான அப்படியான ஒரு அடிப்படை வரைநெறியை (ratio) உருவாக்கிய ஒரு தீர்ப்புதான் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க இயலும் என்கிற பச்சன்சிங் வழக்குத் தீர்ப்பு. சமூகம் மேலும் மேலும் மனிதாயப்பட்டு வருவதற்கேற்ப நமது தண்டனைக் கலாச்சாரமும் மனிதாயப்பட வேன்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பச்சன் சிங் தீர்ப்பின் பின்னணியும் முக்கியத்துவமும்
‘பச்சன்சிங் எதிர் பஞ்சாப் அரசு’ (SCC 2 684 /1982) அரசு’ என்கிற புகழ்பெற்ற வழக்கில் நீதியரசர் பகவதி அவர்களளுள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு உருவாக்கிய மரண தண்டனை தொடர்பான அடிப்படை நெறி உருவாக்கப்படும் வரை கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை என்பதே இயல்பான தண்டனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியில் 1898ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குற்ற நடைமுறைச் சட்டத்தின் 367 (5) வது பிரிவின்படி, மரண தண்டனைக்குரிய குற்றமொன்றில் ஒரு நீதிமன்றம் மரண தண்டனை அல்லாமல் குறைந்த (அதாவது சிறை) தண்டனை அளித்தால் அது அதற்கான விளக்கத்தை அலிக்க வேண்டும். அதாவது மரண தண்டனை என்பது விதி. ஆயுள் தண்டனை என்பது விதி விலக்கு. 1950ல் உருவான நமது அரசியல் சட்டமும் இதை ஏற்றுக் கொண்டது 1956வரை இது நீடித்தது.
எனினும் 1898ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டம் 1973 வரை நீடித்தது. 41வது சட்ட ஆணையப் பரிந்துரைகளின் (41st Law Commission) அடிப்படையில் 1973ல் இதில் இரு முக்கிய, வரவேற்கத்தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய சட்டத்தின் 235 (2) பிரிவின்படி தண்டனை வழங்குமுன் நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் தண்டனை குறித்து அவரது கருத்தைக் கேட்க வேண்டும். 354 (3) பிரிவின்படி மரண தண்டனை வழங்கப்படும் வழக்குகளில் அதற்கான “சிறப்புக் காரணங்களை” நீதிமன்றம் குறிப்பிட வேண்டும். இந்த இரு முக்கிய பிரிவுகளே “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்கிற வரைநெறி உருவாவதற்கு இட்டுச் சென்றது. அதன் வழியாக ஆயுள் தண்டனை என்பது விதியாகவும், மரண தண்டனை என்பது விதிவிலக்காகவும் மாறியது.
1973ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டம் செயலுக்கு வருவதற்கு முன்னதாக அதே ஆண்டில், ஜக்மோகன்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியது, 35வது சட்ட ஆணையப் பரிந்துரையில் (1967) ‘இந்தியா போன்ற (சமூகப் பொருளாதார) வேறுபாடுகள் நிறைந்த நாடுகளில் மரண தண்டனையை நீக்க இயலாது’ எனக் கூறப்பட்டிருந்ததன் அடிப்படையில் இப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதியரசர் பகவதி தலைமையில் அமைந்த அமர்வு (1982), 1973ம் ஆண்டுச் சட்டத் திருத்தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அது அளித்த விளக்கம் இரு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது.
(அ) மரண தண்டனை அளிப்பதற்குச் சிறப்புக் காரணங்களைக் கூற வேண்டும் எனச் சொல்ல வரும்போது, குற்றத்தின் சூழலை மட்டுமின்றிக் குற்றவாளியின் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. “தண்டனையின் அளவை நிர்ணயிக்கும்போதோ, அல்லது கொலைக் குற்றம் உட்பட (இ.த.ச 302) வெவ்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளைத் தேர்வு செய்யும்போதோ நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்டக் குற்றத்தின் தன்மையில் மட்டுமின்றி, குற்றவாளியின் சூழலிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்கிற கூற்றில் (i) குற்றத்தின் தன்மை, அளவு, நோக்கம், பாதிக்கப்பட்டவரின் தகுதி முதலானவற்றோடு (ii) குற்றவாளி யார், அவரது நிலை, பின்புலம், குடும்பம், வயது உட்பட அவரது சூழல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனப் பொருளாகிறது. குற்றவாளியின் சூழல் என்பதில் அவரது மன அமைப்பு, சாதி முதலான சமூகக் காரணிகள் அவர் மீது செலுத்திய பிடிப்பு முதலியனவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
(ஆ) மரண தண்டனை வழங்கப்படுகிற நபரின் இருப்பு சமூகத்திற்கு மிகப் பெரிய ஊறாகவும் (menace), அவர் திருத்தப்படவே முடியாத நபராகவும் இருக்க வேண்டும் என்பது பச்சன் சிங் வழக்கு அளிக்கும் அடுத்த முக்கிய நிபந்தனை. இந்த நிபந்தனை உண்மையில் தண்டனையின் அளவைத் “தணிக்கும் ஒரு காரணி” (mitigating factor). அதாவது, ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டுமானால் அவர் இப்படியாகத் திருத்தப்பட முடியாத, சமூகத்தின் நிரந்தரத் தொல்லையாக இருக்க வேண்டும்.
ஒரு எடுத்துக்காட்டு: சமீபத்தில் நடைபெற்ற டில்லி பாலியல் வன்கொடுமைக் குற்றம் மிகக் கொடூரமானது என்பதை அறிவோம். அதில் பங்கு பெற்ற ஒரு 16 வயதுப் பையன் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதும் தெரியும்.. ஆனால் குற்றத்தின் இந்தத் தன்மைகள் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் போதா. அவன் ஒரு சிறுவன்: இன்னும் திருந்தக் கூடிய வாய்ப்பு உள்ளவன்; சிறு வயதிலேயே ஏழ்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தவன்; இதனூடாகத் தன் சிறு பிராயத்தை, கல்வி வாய்ப்பை எல்லாம் தொலைத்தவன். இவை அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கி வைக்கக் கூடிய தணிக்கும் காரணிகளாகச் செயல்படும். தண்டனையின் நோக்கம் பழிவாங்கலோ (revenge), ஈடு செய்தலோ (retribution) அல்ல. குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழவைத்தலே அதன் முதன்மையான நோக்கம் என்பதை நாம் மறதுவிடலாகாது.
இந்தப் பதின்மூவருக்கும் தவறாக மரணதண்டனை அளித்தது எப்படி?
பச்சன்சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஒன்று இத்தகைய அடிப்படை நெறி ஒன்றை உருவாக்கிப் பதினாலு ஆண்டுகளுக்குப் பின் வேறொரு வழக்கில் இந் நெறிமுறை மீறப்பட்டது. ராவ்ஜி என்கிற ராம்சந்திரா என்னும் வழக்கில் (2 SCC 175 /1996) இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று, “குற்ற விசாரணை ஒன்றில் பொருத்தமான தண்டனை அளிப்பதற்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது அக் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவைதானே தவிர குற்றவாளியின் சூழல், தன்மை அல்ல” என பச்சன் சிங் வழக்கில் உருவான அடிப்படை நெறிமுறைக்கு மாறான நெறி ஒன்றை வரையறுத்தது.
ராவ்ஜி வழக்கில் உருவாக்கப்பட்ட இந் நெறிவரையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு வழக்குகளில் குற்றத்தின் தன்மையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, பச்சன்சிங் நெறிவரையில் கூறப்பட்ட குர்றவாளியின் சூழல், தன்மை ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஏழு பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள உண்மையை உச்ச நீதிமன்றம் பதிமூன்றாண்டுகளுக்குப் பின் சந்தோஷ் குமார் பாரியார் என்னும் வழக்கில் (2009) கண்டுபிடித்தது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனை, “ஆயுள்தண்டனைதான் விதி, மரண தண்டனை ஒரு விதிவிலக்குதான்” என்பதை நிறுவியுள்ளது. விதிவிலக்குகளை மிக அரிதாகவே பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நிறுவப்படட் சட்ட நடைமுறை. எனவே அரிதினும் அரிதான வழக்கு என்னும் நிபந்தனை நீதிமன்றத்தின் மீது ஒரு அசாதாரணமான சுமையை ஏற்றுகிறது. தனது விருப்பாக அது மரணதண்டனையை தேர்வு செய்தால், அரிதினும் அரிது என்னும் நிபந்தனையில் பொதிந்துள்ள விதிவிலக்குகளைத் திருப்தி செய்ய அது முற்றிலும் புறவயமாக உண்மைகளை மதிப்பிட வேண்டும்” எனக் கூறிய உச்ச நீதிமன்றத்தின் பாரியார் அமர்வு, ராவ்ஜி வழக்கைப் பின்பற்றிக் கடந்த ஒன்பதாண்டுகளில் குறந்த பட்சம் ஆறு வழக்குகளில் தவறுதலாகத் (per incurium) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது எனத் திட்டவட்டமாக அறிவித்தது. இந்த ஆறு வழக்குகளில் ஏழு பேர் இப்படித் தவறுதலாக மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.
சந்தோஷ் குமார் பாரியார் பணத்திற்காக ஒரு சிறுவனைக் கடத்திச் சென்று கொன்றான். எத்தகைய கொடூரமான குற்றமானாலும் குற்றவாளியின் சூழலைக் கணக்கில் கொள்ள வேன்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் அவனது மரண தண்டனைய ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஆணையிட்டது. பாரியாரின் சூழலிலிருந்த தண்டனைகளைக் குறைக்கும் காரணிகள், அவனது வழக்கை அரிதினும் அரிது அல்ல என முடிவு செய்யப் போதுமானது என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. குற்றவாளி ஒரு பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தவன் என்கிற உண்மை குற்றத்தின் தன்மையை நீர்க்கச் செய்யாது என்ற போதிலும், அந்தப் பின்னணியை ஒரு தணிக்கும் சூழலாகக் (mitigating circumstance) கொள்ளலாம் எனவும், அவன் திருந்துவதற்கு உள்ள வாய்ப்பு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது. திருந்தி மறுவாழ்வு வாழ பாரியாருக்கு சாத்தியமே இல்லை என வழக்கு தொடுத்திருப்போர் (prosecution) நிறுவுதல் என்பது அவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்நிபந்தனையாக உள்ளது என பச்சன்சிங்கை மேற்கோள்காட்டி நீதிமன்றம் இறுதியுரைத்தது.
பாரியார் வழக்கு விசாரணையில் இருந்தபோதே, தீர்ப்பு வருவதற்குச் சற்று முன்னதாக அங்குஷ் மாருதி ஷிண்டே என்னும் வழக்கில் (6 SCC 667 /2009) ஆறு பேர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் பச்சன்சிங் நெறிவரைக்கு எதிரானது என்கிற வகையில் இதையும் சேர்த்து மொத்தம் (7+6=13) பதிமூன்று பேர்களது மரணதண்டனைகள், அவை தவறாக வழங்கப்பட்டவை என்கிற அடிப்படையில் குறைக்கப்பட வேண்டும் எனப் பதினான்கு நீதிபதிகள் கையொப்பமிட்ட மனு குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட பின்னணி இதுவே. இரண்டு நாட்களுக்கு முந்திய நீதியரசர் கே.டி.தாமசின் கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் அவரது அமர்வால் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரையும் சேர்த்துக் குறைந்தபட்சம் பதினேழு பேர்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டுகளில் தவறாக மரண தண்டனைகளை வழங்கியுள்ளது எனலாம். ஒப்புதல் வாக்குமூலத்தின் அடியாகப் பெறப்பட்ட எண்ணிக்கை இது. ஒப்புக்கொள்ளப் படாத தவறுகளியும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் பெரிய அளவில் அதிகமாகலாம்.
நல்லவேளையாக இவர்களின் தண்டனைகள் இதுவரை நிறைவேற்றப் படாததால் இன்று அவர்கள் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பிச் சரி செய்ய இயலாத இத் தண்டனைகள் ஒருவேளை நிறைவேற்றப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
குறிப்பு 1. மனுவில் கையொப்பமிட்ட 14 நீதியரசர்கள்: பி.பி.சாவந்த், ஏ.பி.ஷா, பிலால் நஸ்கி, பி.கே.மிஸ்ரா, ஹோஸ்பெட் சுரேஷ், பனசந்த் ஜெயின், பிரபா ஶ்ரீதேவன், சிவசுப்பிரமணியம், பி.சி,ஜெயின், எஸ்.என்.பார்கவா, பி.ஜி.கோல்சே படீல், ரன்விர் சஹாய் வர்மா, பி.ஏ.கான், பி.எச்.மார்லபள்ளி.
இதுவும் இதர முக்கிய தகவல்களும் வி.வெங்கடேசனின் கட்டுரை மற்றும் நீதியரசர் ஏ.கே.கங்கூலி அவர்களின் பேட்டி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டன (Frontline, Sept 7, 2012).
குறிப்பு 2 பாரியார் அமர்வு ‘சைபண்ணா எதிர் கர்நாடக அரசு’ (2005 என்கிற இன்னொரு வழக்கையும் சுட்டிக் காட்டியது. ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சைபண்ணா பரோலில் சென்று தன் மனைவியையும் மகளையும் கொலை செய்கிறார். ஆயுள் தண்டனை அனுபவிப்பவர் கொலை செய்தால் அவருக்குக் கட்டயமாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்கிற விதிப்படி (இ.த.ச 303) உச்சநீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் முன்னதாக ‘மிது எதிர் பஞ்சாப் அரசு’ (1983) என்னும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இ.த.ச 303 பிரிவை ரத்து செய்திருந்தது. ஏனெனில் முன் குறிப்பிட்ட 1973ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டத்தின்படி குற்றவாளியிடம் தண்டனை குறித்து நீதிமன்றம் கேட்க வேண்டும்; ஏன் மரண தண்டனை தேர்வு செய்யப்படுகிறது என்பதற்குச் சிறப்புக் காரணங்கள் சொல்ல வேண்டும். பச்சன்சிங் வழக்கினூடாக உருவாக்கப்பட்ட நெறிவரையின்படி அரிதினும் அரிதான வழக்கு என நிறுவ வேண்டும். ஆயுள் தண்டனையிலுள்ளவர்களுக்கு இப்படியான சூழலில் மரண தண்டனை கட்டாயம் என்றால் இப்படி அவரிடம் தண்டனை குறித்துக் கேட்பது, மரண தண்டனை வழங்குவதற்குச் சிறப்புக் காரணங்கள் சொல்வது, அரிதினும் அரிது என நிறுவுவது முதலியன தேவையற்றதாகிவிடுகின்றன. இந்த முரணின் அடிப்படையில் 303வது பிரிவு ரத்து செய்யப்பட்டது.
சைபண்ணா வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் ஒரே நேரத்தில் ஒருவர் எவ்வாறு இரு ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க இயலும் என்கிற கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீதிமன்றம் 303வது பிரிவின்படி அவருக்கு மரணதண்டனை அளித்தது. பாரியார் வழக்கில் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சைபண்ணா வழக்கில் தான் அளித்த மரண தண்டனை, மிது மற்றும் பச்சன்சிங் தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதால் தவறு என ஏற்றுக் கொண்டது.
எனினும் சென்ற ஜனவரி 4 அன்று சைபண்ணாவின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். மீண்டும் ஒரு முறை உள்துறை அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்ம் எனப் பரிந்துரைத்ததன் அடிப்ப்படையில் அவர் இதை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றம் இதைத் தவறு எனச் சொன்னால் என்ன, 14 முன்னாள் நீதியரசர்கள் கருணை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டால் என்ன, தான் ஒரு ‘இரும்பு அரசு’ எனக் காட்டிக் கொள்கிறது இந்திய அரசு. பிரதீபா படீலைப் போலன்றி அரசுக்குத் தாளம் போடுகிறார் பிரணாப்
அரிதினும் அரிது என்பது முற்றிலும் புறவயக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றதா? அரிதினும் அரிது என்கிற விலக்கின் பயன் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளதா?.. (அடுத்த பதிவில்)
3 : ‘அரிதினும் அரிது’ முறையாகத் தீர்மானிக்கப் படுகிறதா?
குற்ற விசாரணை மற்றும் நீதி வழங்கு நிறுவனங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் தண்டிக்க்ப்பட்டவர்கள் மீது காட்டும் வெறுப்பு அலட்சியம் முதலியன, அவர்கள் இழைத்த அல்லது இழைத்ததாகக் கருதப்படுகிற குற்றங்களின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பு அல்லது ஆத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது என்பதைக் காட்டிலும் குற்றத்தைச் செய்தவர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பின் அடிப்படையில்தான் உருவாகிறது என்னும் பொருளில் மறைந்த மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவார். தண்டனை வழங்கப்பட்டவர்கள், குறிப்பாக மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள், பொதுவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறவர்கள் பெரும்பாலோர், ஏன் கிட்டத்தட்ட தொண்ணூறு சத்திற்கு மேற்பட்டோர் அடித்தள சாதி, வர்க்கம் மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், விசாரணை செய்பவர்கள் மற்றும் நீதி வழங்குபவர்கள் பெரும்பான்மையும் இதற்கு நேர் மாறாக இருப்பதும்தான் இதற்குக் காரணங்கள்.
தண்டிக்கப்பட்டுச் சிறைகளில் வதியும் கைதிகள், கைதிகளுக்கான பிரிட்டிஷ் காலச் சட்டங்கள் வழங்குகிற அடிப்படை உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச வசதிகளும் அளிக்கப்படாமல் மிகக் கேவலமாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுவதற்கும் இத்தகைய கண்ணோட்டங்களே பின்புலமாக உள்ளன. இவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனைகள் போதாது, இன்னும் கடுமையாக நடத்தப்படவேண்டும் என்கிற மனநிலை பொதுவாகச் சமூகத்தில் நிலவுகிறது. ஊடகங்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அஃப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப் பிரச்சினையில் ‘தினமணி’, ‘தினமலர்’, ‘தினத்தந்தி’, ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பெரும்பான்மையான நாளிதழ்கள் (இந்து தவிர) குறைந்த பட்ச ஊடக அறமுமின்றி வெறுப்பைக் கக்கியது இதற்கொரு சமீபத்திய சான்று.
நீதிவழங்கும் பொறுப்பில் அமர்ந்துள்ளவர்கள், அந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளதாலேயே, தமது வாழ்நிலையினூடாகவும், தமது விரிந்த படிப்பு மற்றும் தொடர்ந்த பயிற்சியினூடாக விசாலித்த இதயத்தினூடாகவும் உருவாகியுள்ள அகவயக் கண்ணோட்டங்களின் தாக்கங்களிலிருந்து விடுபடுவதில்லை. புகழ்பெற்ற வழக்குரைஞரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ஒருமுறை சொன்னதுபோல ‘குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்கு வேறெல்லாவற்றையும் விட அன்று தீர்ப்பை எழுதும் வாய்ப்புப் பெற்று அந்த நாற்காலியில் அமர நேர்ந்த நீதிபதியின் நல்ல மனதைத் தவிர வேறு உத்தரவாதமில்லை’.
இந்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் வழக்குகளை எல்லாம் ஆராய்ந்தால் ஒரே மாதிரியான குற்றத்தைச் செய்த, அல்லது ஒரே குற்றத்தில் ஒரே அளவு பங்குபெற்ற இரண்டு அல்லது மூன்று குற்றவாளிகளுக்கு (அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு) எப்படி வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகள் வெவ்வேறு தீர்ப்புகளை எழுதி, எப்படி ஒருவர் தூக்கில் தொங்குவதற்கும், ஒருவர் தண்டனைக் குறைப்பிற்கும், ஒருவர் விடுதலையாகி வீட்டுக்குச் செல்லவும் நேர்ந்தது என்பதை அறிந்து அதிர்ச்சி அடையலாம். ஒருவர் தூக்கில் தொங்க நேர்வது என்பது ‘திடீரென தலையில் இடி விழுவது போல ஒரு எதிர்பாராத கொடூரம்’ என அமெரிக்க நீதியரசர் பாட்டர் ஸ்டூவர்ட் ஒருமுறை கூறியதைச் சுட்டிக் காட்டுவார் மும்பை வழக்குரைஞரும் இது குறித்து விரிவாக ஆய்வு செய்பவருமான யுக் மொஹித் சவுத்ரி. நான்கு பேர் வீதியில் மழையில் நனைந்து கொண்டு செல்லும்போது திடீரென ஒருவர் தலையில் இடி விழுந்து அவர் மட்டும் மரணமடைய நேர்வது போலத்தான் மரண தண்டனைகளும் உலகெங்கிலும் விதிக்கப்பட்டு விடுகின்றன. அதை எதிர் பார்க்கவும் முடியாது, தடுத்துக் கொள்ளவும் முட்டியாது. அதனால்தான் மரணதண்டனை விதிப்பை ஒரு ‘திருவுளச் சீட்டுக் குலுக்கலுடன்’ (lethal lottery) ஒப்பிடுவார்கள்.
மொஹித் சவுத்ரி சொல்லும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். முதலில் ஹர்பன்ஸ் சிங் வழக்கு (1982). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்ற வழக்கில், இந்தக் குற்றச் செயலில் சம அளவில் பங்கு பெற்ற ஜீடாசிங், கஷ்மீரா சிங், ஹர்பன்ஸ் சிங் என்கிற மூவரது மரண தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் சென்ற அக்டோபர் 1975ல் உறுதி செய்தது. மூவரும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். (i) ஜீடாசிங்கின் மேல்முறையீட்டை ஒய்.வி.சந்திரசூட், வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்.எல்.உன்ட்வாலியா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. ஜீடாசிங் தூக்கிலிடப்பட்டார். (ii) கஷ்மீராசிங்கின் மரணதண்டனையை எம் ஃபசல் அலி மற்றும் பி.என்.பகவதி என்னும் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. (iii) ஹர்பன்ஸ் சிங்கின் மேல்முறையீடு மற்றொரு உச்ச நீதி மன்ற அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டு அவரும் ஜீடாசிங்குடன் தூக்கு மேடை ஏற இருந்த தருணத்தில் அவர் மறு முறையீடு செய்தார், இம்முறை அவரது தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரது மன்னிப்பிற்குப் பரிந்துரைத்தது. அவ்வாறே மன்னிப்பும் வழங்கப்பட்டது.
அதேபோல தர்மேந்திரசிங் (2002) என்பவரும் ஹேராஜ் ராம் (2003) என்பவரும் தங்களின் மனைவியரின் நடத்தைகளில் சந்தேகம் கொண்டு அவர்களையும், பிறந்த குழந்தைகளையும் கொன்றனர். இந்த இரு தனித்தனி வழக்குகளில் முன்னவருக்கு மரண தண்டனையும் பின்னவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. மூன்று குழந்தைகLளைப் பலி கொடுத்து ஏதோ ஒரு பூசை செய்த தாமு (2000) என்பவருக்கு மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்த உச்ச நீதிமன்றம் ஒரு குழந்தையைப் பலி கொடுத்த சுஷில் முர்முவுக்கு (2004) மரண தண்டனையை உறுதி செய்தது. தாமுவை மரணதண்டனையிலிருந்து விடுவித்தபோது சொன்ன காரணம், “அறியாமை மற்றும் மூட நம்பிக்கையின் விளைவாக“ அவர் இப்படிச் செய்து விட்டார் என்பது. இதே காரணம் அளவில் இதைவிடக் குறைந்த குற்றம் செய்த முர்முவுக்கும் பொருந்தும்தானே.
பச்சன்சிங் வழக்கில் “மரண தண்டனைகள் தன்னிச்சையாகாவும் மனம்போன போக்கிலும்” (arbitrarily and freakishly) அளிக்கப்படுவதாக நீதியரசர் பகவதி குறிப்பிட்டதற்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் இருக்க முடியும்? முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட சந்தோஷ்குமார் பாரியார் வழக்கில் உச்சநீதிமன்றம் “அரிதினும் அரிது” என்பதைக் கண்டறிவதற்கு சீரான அணுகல் நெறி எதையும் இதுவரை கண்டறியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டது நினைவிற்குரியது.
மொஹிட் சவுத்ரி மூன்று உச்ச மூன்று நீதிபதிகள் பங்கு பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுகள் எவ்வாறு மரண தண்டனைகளைக் கையாண்டன எனச் செய்துள்ள ஒப்பாய்வு மிக முக்கியமான ஒன்று. நீதிபதி அர்ஜித் பசாயத் பங்குபெற்ற அமர்வுகளின் முன் வந்த 12 மரண தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இருவரது ஆயுள் தண்டனைகள் மரண தண்டனையாக உயர்த்தப்பட்டன. கீழ் நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆக நீதிபதி பசாயத் முன் வந்த 22 வழக்குகளில் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரையும் அவர் விடுதலை செய்யவும் இல்லை. அது மட்டுமல்ல ஐந்து வழக்குகளில் அவர் வழங்கிய 11 மரண தண்டனைகள் தற்போது “அறியாமை மற்றும் தவறுதலாக” (per incurium) வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
நீதியரசர் எஸ்.பி.சின்ஹா அவர்களின் முன் 17 வழக்குகள் வந்தன. அவர் ஒரு வழக்கில் கூட மரண தண்டனையை உறுதி செய்யவில்லை. யாருடைய ஆயுள் தண்டனையையும் மரண தண்டனையாக உயர்த்தவில்லை. விடுவிக்கப்பட்ட யாருக்கும் மரண தண்டனை வழங்கவுமில்லை. கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரை அவர் விடுதலை செய்தார்.
நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் முன் வந்த 13 வழக்குகளில் 6 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரும் ஆயுள் தண்டனை எதையும் மரண தண்டனையாக்கவோ, விடுதலை செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை வழங்கவோ இல்லை. மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை அவர் விடுதலை செய்தார்.
ஆக, நீதிபதி பசாயத் வழங்கிய மரணதண்டனை வீதம் 73 சதம். நீதிபதி பாலகிருஷ்ணன் 46 சதம். நீதிபதி சின்ஹாவின் மரண தண்டனை வீதம் சுழி. உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் மரண தண்டனைகளின் சராசரி வீதம் 19 சதம் என்பதை இவர்களின் வீதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இவர்கள் ஒவ்வொருவரின் அகநிலை உருவாக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
உச்ச நீதிமன்றத்தில் 14 அமர்வுகள் (benches) உள்ளன. இதில் எந்த அமர்வுக்குத் தன் முறையீடு அனுப்பப்படும் எனத் தீர்மானிக்கும் உரிமை தனது மரண தண்டனை குறித்து மேல்முறையீடு செய்ய வந்தவருக்குக் கிடையாது. ஒரு வேளை அது நீதியரசர் சின்ஹாவின் அமர்வு முன் வந்தால் அவரது மரண தண்டனை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு நீதிபதி பசாயத்துடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட நூறு சதமாக இருக்கும். நீதிபதி பாலகிருஷ்ணன் முன் வந்தால் அது சுமார் 50சதமாக இருக்கும். உச்ச நீதிமன்றச் சராசரியுடன் ஒப்பிடும்போது நீதிபதி பசாயத்தின் முன் ஒருவரது மேல் முறையீடு வராமல் வேறு எந்த ஒரு அமர்வின் முன்னாவது விசாரணைக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் வாய்க்குமேயானால் அவர் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு நான்கு மடங்கு வாய்ப்பு அதிகமாகிறது. நீதிபதி பசாயத் முன் ஒருவரது முறையீடு வருமேயானால் இந்தப் பிறவியில் குற்றம் மட்டுமல்ல முற்பிறவியில் ஏதேனும் பாவமும் செய்திருக்க வேண்டும் என அவர் சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான். வேறென்ன சொல்ல முடியும்?
புறநிலை எதார்த்தங்கள், முந்தைய வரை நெறிகள், சான்றுகள் எல்லாவற்றையும் காட்டிலும் தீர்ப்பை எழுதும் நீதிபதிகளின் அகநிலைக் கண்ணோட்டங்கள், மனநிலை ஆகியவற்றைச் சார்ந்தே மரணதண்டனைக் கைதிகளின் விதி உள்ளது. சுவாமி சிரத்தானந்தா வழக்கிலும் பச்சன்சிங் வழக்கிலும் உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒருவேளை மரணதண்டன அளிப்பது தொடர்பான அனைத்து விதிகள் நெறிகள் ஆகியவற்றை ஒரு கணினியில் உள்ளீடு செய்து தீர்ப்பை எழுதும் பொறுப்பை அதனிடம் கையளித்தால் இன்றுள்ளதைவிட நீதியான தீர்ப்புகளைப் பெறமுடியும் போல. இயந்திரங்களைக் காட்டிலும் மனித மனங்கள், அதிலும் நீதி வழங்கும் மனங்கள் இப்படி இறுகிப் போகிற கொடுமையை என்ன சொல்வது?
ஒரே மாதிரியான சூழலில் குற்றங்களுக்குக் காரணமான, அல்லது ஒரே குற்றத்தில் சம அளவு பங்குபெற்ற வெவ்வேறு குற்றவாளிகளுக்கு வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்குவது குடிமக்களுக்குச் சமப் பாதுகாப்பை வழங்கும் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவிற்கும், குடிமக்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் 21 வது பிரிவிற்கும் எதிரானது என்பதை அரசியல் சட்டத்தின் காவலர்களான நமது உச்சநீதிமன்றமும் குடியரசுத் தலைவரும் கண்டுகொள்வதில்லை.
தன்னிச்சையாகவும், அகவயமான நிலைபாடுகளாலும் மனம்போன போக்கில் (arbitrary) மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதைத் தவிர டாக்டர் பாலகோபால் சொன்னது போல சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலும் (discriminatory) மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் இதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ராஜேந்திர பிரசாத் வழக்கில் (1979) நீதியரசர் கிருஷ்ணய்யர், மரணதண்டனை விதிப்பதில் வர்க்க மற்றும் நிற வேறுபாடுகளும் கூட (class and colour bias) ஒரு பங்கு வகிக்கின்றன போலும் என்றார். நிறம் என்பது நமது சூழலில் சாதியை அர்த்தப்படுத்துவதாகவே கொள்ள வேண்டும். பச்சன்சிங் வழக்கில் இதை மீண்டும் ஒலித்த நீதியரசர் பகவதி, “ஏழைகளும் அடித்தள மக்களுமே (poor and downtrodden) இந்தக் கொடுந்தண்டனைக்கு அதிகம் பலியாகின்றனர்” என்று கூறி மரண தண்டனை விதிப்புகளில் சமூக ஏற்றத்தாழ்வுகளின் பங்கைச் சுட்டிக் காட்டினார்.
மரணதண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதைச் சுட்டிக்காட்டும் மொஹித் சவுத்ரி, ”ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2009 வரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் 30 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனைகளை வழங்கியுள்ளது. இவர்களில் 14 பேருக்கு இலவசச் சட்ட உதவிகளின் மூலமே வழக்குகள் நடத்தப்பட்டன. கீழ் நீதிமன்ரங்களில் மேலும் பலரது வழக்குகள் இலவசச் சட்ட உதவிகளின் மூலமே நடத்தப்பட்டன.” என்கிறார். இந்தப் 14 பேரில் 12 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைகள் தவறானவை என உச்ச நீதிமன்றம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தப் பன்னிரண்டு பேரில் ராவ்ஜி ஏற்கனவே தூக்கிலிடப் பட்டுவிட்டார். இவரது வழக்கும் இலவசச் சட்ட உதவியின் மூலமே நடத்தப்பட்டது. இலவசச் சட்ட உதவியில், அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்குப் போதிய ஊதியம் வழங்குவதில்லை. பெரும்பாலும் இளைஞர்கள், போதிய அனுபவம் இல்லாதவர்களே இலவசச் சட்ட உதவி பெறுபவர்களுக்கு வழக்குரைஞர்களாக நியமிக்கப் படுகின்றனர். இவர்களில் பலர் அக்கறையோடு வழக்கை நடத்துவதில்லை என்பதோடு, சில நேரங்களில் அவர்களே தமது கட்சிக்காரர்களை வெறுப்போடு அணுகுவதும் உண்டு, அஃப்சல் குருவுக்கு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் இப்படி அவரிடம் வெறுப்புடன் நடந்து கொன்டது குறித்து முன்பே குறிப்பிட்டுள்ளேன். அஜ்மல் கசாப் வழக்கு சர்வதேச கவனம் பெற்றதால் அவருக்குத் தகுதியான வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் பொறுப்புடன் செயல்பட்டனர். எனினும் அவர்களின் முக்கிய வேண்டுகோள்கள் பலவற்றையும் நீதிமன்றங்கள் நிராகரித்தன. உலகெங்கிலும் இப்படிப்பட்ட நிலைதான். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க், “மரணதண்டனை உறுதி செய்யப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகள் எதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக விசாரணை நீதிமன்றங்களில் முறையாக வழக்கு நடத்தப்பட்டதில்லை” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இங்கு மரணதண்டனையை நீக்க முடியாது என 35வது சட்ட ஆணையம் உறுதிபடக் கூறியதற்கு ஆதாரமாக இந்தியாவின் விரிந்த பரப்பு, பலதரப்பட்ட மக்கள், அவர்களுக்கிடையேயான கல்வி முதலான அம்சங்களில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியது, இந்தக் கருத்துரையின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றமும் ஜக்மோகன்சிங் (1973), பச்சன்சிங் (1982), சசி நாயர் (1992)ஆகிய வழக்குகளில் மரண தண்டனையைச் சட்டத்திலிருந்து நீக்க முடியாது எனக் கூறியது. ஆனால், எந்தக் காரணங்களுக்காக மரணதண்டனையை நீக்க இயலாது என்று சட்ட ஆணையம் சொன்னதோ அந்தக் காரணங்களுக்காகவே மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டியாதாக இருகிறது என்பதுதான் மேலே உள்ள அனுபவங்கள் உணர்த்தும் உண்மை.
ஒரு நாகரிகச் சமூகத்தில் தண்டனைகளின் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை மரணதண்டனை நிறைவேற்றுகிறதா? அடுத்த பதிவில்….
4. குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை
காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெரிகிறது.
காந்தியின் பல கொள்கைகள் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. தண்டனைகளே கூடாது என்றால் எப்படி? அதனால்தான் அவரது கொள்கைகளை இன்று யாருமே பொருட்படுத்துவது இல்லை. அவர் உயிருடன் இருந்தபோது அவர் கட்சிக்காரர்களே அவரது பேச்சைக் கேட்டதில்லை. அவர் இறந்த பின் அவரது ‘வாரிசு’களாகக் கருதப்பட்டவர்கள் புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் உதாசீனப் படுத்தியது முதலில் அவரது கொள்கைகளைத்தான். நாம் உட்பட யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்போம்.
ஏன்? இன்றைய சமூக நடைமுறைகளுக்கு அவை பொருந்தாது என்பதுதான்.
ஆனால் இந்தப் பிரச்சினையை இப்படி உடனடி நடைமுறை சார்ந்து பார்க்காமல் தர்க்க பூர்வமாகப் பார்த்தால் என்ன ஆகும்? “இன்றைய நடைமுறைக்கு ஒன்று பொருந்தாது” என்கிற எடுகோளை எடுத்துக் கொள்வோம். அப்படியானால் “இன்றைய நடைமுறையை”ச் சரி என ஏற்றுக் கோள்கிறோமா? நமது நோக்கம் இன்றைய நடைமுறைகளை, இன்றைய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வதுதானா? நிச்சயமாக இல்லை. இன்றைய நடைமுறையும் அமைப்பும் மாற்றப்பட வேண்டியவை என்கிறபோது, இன்றைய நடைமுறைக்கும் அமைப்பி.ற்கும் பொருந்தாது என்பதற்காக ஏதொன்றையும் கைவிடுவது என்பது எப்படிச் சரியாக இருக்கும்?
இந்த எளிதில் விடை கூற இயலாத கேள்வியை நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நடைமுறையில் இருப்பவர்கள் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
குற்றம், சட்டம், தண்டனை ஆகியவற்றிலும் நாம் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சட்டங்கள் இல்லாவிட்டால் சமூக ஒழுங்கு சிதையும். வலுவானவர்களிடமிருந்து எளியவர்களைக் காக்க சட்டங்கள் தேவை என்பதுதான் சட்ட ஒழுங்கு நிறுவனங்கள் முன்வைக்கும் நியாயம். ஆனால் சமூக மாற்றம் என்கிற நோக்கில் இயங்குபவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். சட்டங்களின் நோக்கம் என அவர்கள் நேரெதிரான ஒரு கருத்தை முன் வைப்பார்கள். அவர்களின் கருத்துப்படி சட்டங்கள் என்பன எளியவர்களிடமிருந்து வலியவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களாலேயே உருவாக்கப்பட்டவை. உண்மைதான். சொத்துரிமை என்கிற சட்டத்தை எடுத்துக் கொள்வோமே. ஏராளமான நிலங்களையும், மூலதனத்தையும் வைத்துக் கொண்டு சுரண்டிக் கொழுப்பவர்களைச் சுரண்டப்படுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் சொத்துரிமை குறித்த சட்டங்களின் நோக்கம்.
சரி, சட்டங்களே வேண்டாம் என ஒதுக்கினால் என்ன ஆகும்? அது எளியவர்களை இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளாதா? நூறு ஏக்கர் நிலமுள்ள ஒருவன் அருகிலுள்ள இரண்டு ஏக்கர் நிலமுடைய ஒருவனது நிலத்தை ஆக்ரமித்துக் கொள்வதையும், ஒரு கார்பொரேட் நிறுவனம் தனது தேவைகளுக்காக விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொள்வதையும் சொத்துரிமை என்கிற சட்டம் இல்லாத சூழல் எளிதாக்கிவிடாதா? இன்னொரு எடுத்துக்காட்டு இந்த நிலையை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது தலித் மக்களை அதிகாரத்திலும் எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக உள்ள உயர் சாதியினரிடமிருந்து தலித் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்க நமக்குத் தேவையாக இருக்கிறது. இதை வேண்டாம் எனச் சொல்லிவிட இயலுமா?
இதுபோன்ற சிலவற்றைச் சுட்டிக்காட்டித்தான் சட்டங்கள் எல்லாமே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே உள்ளன என்கிற கருத்து மிக எளிதாகப் பொதுப்புத்தியில் பதிக்கப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் என்ன பார்வையைக் கொண்டிருக்க முடியும்? எவ்வளவுதான் சட்டங்கள் ஊறுமிக்கவையாக இருந்தபோதிலும், வலியவர்களைப் பாதுகாப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தபோதும், சட்டங்கள் இல்லாத நிலை எளியவர்களைப் பொருத்தமட்டில் இன்னும் மோசமானதாக இருக்கும். எனவே சட்டங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அவற்றின் சமூக உள்ளடக்கங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான சட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்த கடும் விமர்சனச் செயற்பாடுகளை நாம் எந்நாளும் கைவிட்டுவிட முடியாது.
அதேபோல ஒரு சமூக அமைப்பிற்குள் சட்டம் வன்மையாகச் செயல்பட வேண்டுமானால் அது அச் சமூகம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் சட்டங்கள், குற்ற வரையறைகள் என்பன பல்வேறு வேறுபாடுகள் நிறந்த ஒரு சமூக முழுமைக்கும் ஒரேபோல இருக்க இயலாது. ஒரு சமூகப் பிரிவினரது அற மதிப்பீட்டில் குற்றமாகக் கருதப்படுவது இன்னொரு சமூகப் பிரிவினரில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். எனினும் ஒரே சீரான சட்டத்தொகுதியும் நமக்குத் தேவைப்படுகிறது. எனவே இந்தச் சீரான சட்டத் தொகுதி எல்லோருக்கும் நியாயம் செய்வது இல்லை, அப்படி இல்லாதவரைக்கும் அது குறைபாடுடைய சட்டத் தொகுப்புதான் என்கிற புரிதலும் குற்ற உணர்ச்சியும் சட்டத்தைக் கையாள்பவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் சிந்திக்கிற, நீதி வழங்கு அனுபவமிக்க மனங்களிடமும் கூட அந்தப் புரிதல் இருக்கது என்பதுதான் பிரச்சினை. இச்சூழலில் நமது பணி அத்தகைய குற்ற உணர்வைத் திரும்பத் திரும்பச் சமூகத்தின் முன் வைத்துக் கொண்டே இருப்பதுதான்.
சட்டம் உருவாக்கும் தடைகளும் தண்டனைகளும் மட்டுமல்ல அது வழங்கும் தடையற்ற உரிமைகளும் கூட ஒரு ஏற்றத்தாழ்வான சமூகங்களில் வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம்கூட இப்படி வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். ஆக சட்டங்கள் எப்போதும் முழுமையற்றவை, குறைபாடுடையவை என்கிற உணர்வுடன் அவற்றைக் கையாளும்போதுதான் குற்ற விசாரணை நடைமுறையும் அது சார்ந்த நீதி மற்றும் தண்டனை வழங்கலும் மனிதாயப்படும்.
சில நேரங்களில் இது போன்ற தொடர்ச்சியான விமர்சனங்கள் விவாதங்கள், முன்னோடி முயற்சிகளின் ஊடாகவும் விளைவாகவும் சட்டங்கள் மேலும் மனிதாயப் படுதலை நோக்கி நகரும்; அதாவது திருத்தப்படும். சிலநேரங்களில் இத்தகைய மாற்றங்கள் நீதியியல் அடிப்படையிலான கொள்கை உருவாக்கங்களுக்கு (judicially evolved principles) இட்டுச் செல்லும். முன்னதற்கு எடுத்துக்காட்டாக நமது குற்ற நடைமுறைச்சட்டத்தில் 1973ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைச் சொன்னால், இரண்டாவதற்கு எடுத்துக்காட்டாக பச்சன் சிங் வழக்குத் தீர்ப்பைச் சொல்லலாம்.
எனவே “சட்ட வழமை” (legal order) என்பது சமூக வளர்ச்சியினூடாக வளர்சியுற்று வருகிறது. ஆனால் அது தன்னிச்சையாக வளர்ச்சி பெறுவதில்லை. “சமூக அற ஒழுங்கின்” (normative order) எதிரொளிப்பாகவே அது நடைபெறுகிறது. நடைமுறையில் குறைபாடுகள் இருந்தபோதும் சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரியான விழுமியங்களையே ‘சமூக அற ஒழுங்கு’ அல்லது ‘சமூக விழுமியத் தொகுதி’ என்கிறோம். சட்ட வழமைக்குப் பின்னால் இந்த சமூக அற வழமைத் தொகுதி உள்ளது. காலப்போக்கில் சமூக விழுமியங்கள் மேலுயர்கின்றன, மனிதாயமடைகின்றன, ஜனநாயகப்படுகின்றன. அதற்குத் தக சட்ட வழமையும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
ஒன்றை மனங்கொள்ளவேண்டும். இவ்வாறு சமூகத்தில் வளர்ந்து வரும் அற ஒழுங்கு அல்லது விழுமியத் தொகுப்பு என்பது பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களின் தொகுப்பு அல்ல. பெரும்பான்மையான மக்களின் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இன்னும் ஒரு உயர் தளத்தில் அற ஒழுங்கு (Normative Order) உருப்பெறுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்று. சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடு என்பது சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு வழமை. இங்குள்ள ஒரு பெரும்பான்மை மதத்தால் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் நமது சமூக அற ஒழுங்கில் (Normative Order) அதற்கு இடம் கிடையாது; அது ஏற்கத் தகாத ஒன்று. இந்த அடிப்படை நமது சட்ட வழமையிலும் ஏற்கப்பட்டு தீண்டாமை மற்றும் சாதி வேறுபாடு ஒரு குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம். இந்தச் சட்ட ஒழுங்கின் வலிமையும் நியாயப்பாடும் சமூக அற ஒழுங்கின் அடிப்படையிலேயே பெறப்படுகிறது. சட்ட விதிக்கு வேறென்ன மகத்துவம் இருக்க இயலும். அச்சில் எழுதப்பட்ட சட்ட விதியை மீறினால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? உண்மையில் குற்றச் செயல் என்பது சட்டத்தை மீறுவதல்ல. சமூக ஒழுங்கைச் சிதைப்பதாலேயே ஒன்றைக் குற்றம் என்கிறோம். அது சமூக விழுமியத் தொகுதியில் ஒரு கிழிசலை ஏற்படுத்துகிறது.
மேலே செல்வதற்கு முன் ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இந்தச் சமூக அற ஒழுங்கு என்பது சராசரியாகச் சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் இன்னொரு உயர்ந்த தளத்தில் இயங்கினாலும் இதுவும் கூட முழுமையானதோ குறைபாடற்றதோ அல்ல. (1) மிக்க ஏற்றத் தாழ்வுகளும் குறைபாடுகளும் உள்ள ஒரு சமூகம், (2) அதனினும் மேம்பட்ட விழுமிய வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் குறைபாடுகள் நிறைந்த ஒரு சமூக அற ஒழுங்கு, (3) இதனடியாக வெளிப்படுகிற ஒரு சட்ட வழமை ஆகியவற்றினூடே இங்கு குற்ற விசாரணை நடைமுறையும் தண்டனை வழங்கலும் செயல்படுகின்றன.
ஆக ஒரு குற்றச் செயல் என்பது இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அற ஒழுங்கு வரையறுத்துள்ள எல்லையை மீறுவது என்பதாகிறது. இந்தக் குற்ற நடவடிக்கையின் மூலம் யாரோ ஒருவர் அல்லது சிலர் பாதிக்கப்படுவது என்பதைக்காட்டிலும் இதன் மூலம் சமூக அற ஒழுங்கில் ஏற்படும் கிழிசலே கவலைக்குரிய.து உடனடியாகச் சரிசெய்யப்பட வேன்டியது. எந்தக் குற்றமும் அது திருடு, வன்புணர்ச்சி அல்லது கொலை எதுவாக இருந்தாலும் அது முதலில் சமூகத்திற்கு எதிரானது; இரண்டாவதாகத்தான் அது பாதிக்கப்பட்டவருக்கு எதிரானது என்பதை உலக அளவில் இன்றைய சட்டவியலும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தக் கருத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். சமூகத்தின் பிரதிநிதி என்பதாக அறிவித்துக் கொண்டு நீதி தேடும் முகமையாக அரசு இடைபுக இது வழிவகுக்கிறது என்பது இக் குறைபாடுகளில் ஒன்று. வன்முறையே வடிவமாக உள்ள ஒரு அரசு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் அப்பாவித்தனத்தின் பின் ஒளிந்துகொண்டு மேலும் ஒரு வன்முறையைச் செய்ய இது வழிவகுக்கிறது. எனினும் இது பழிக்குப் பழி, இன்னொரு கொலை என்பதாகவெல்லாம் அமையாமல் நடந்த குற்றச் செயலின் மூலம் கிழிந்த அல்லது பாதிக்கப்பட்ட சமூக அற ஒழுங்கைச் சரிசெய்தல் என்பதை நோக்கி நீதி வழங்கலின் தளத்தை விரிவுபடுத்துகிறது.
ஒரு சிவில் குற்றத்திற்கும் (எ.கா : மோசடி) கிரிமினல் குற்றத்திற்கும் நீதி வழங்கலில் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. சிவில் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வது. கிரிமினல் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது சமூகத்திற்கு ஏற்பட்ட ஊறைச் சரிசெய்வது. கிரிமினல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்துவிடவும் முடியாது.
இந்த இடத்தில் பொது நீதிவழங்கல் (public justice) என்பதற்கும் பழிவாங்கு நீதி (retributive justice) என்பதற்கும் உள்ள வேறுபாடு கருதத் தக்கது. பொது நீதி வழங்கலில் பழி வாங்கலுக்கு இடமில்லை. குற்றச் செயலுக்குக் குற்றம் புரிகிறவன் மட்டுமே பொறுப்பல்ல; சமூகத்திற்கும் அதில் சம அளவு அல்லது சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்பதையும், அதேபோல குற்றச் செயலின் பாதிப்பு என்பது அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கே அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் பொது நீதிவழங்கல் ஏற்றுக் கொள்கிறது. எனவே அது குற்றச் செயலுக்குத் தனிமனிதனை மட்டும் பொறுப்பாக்குவதில்லை. எனவே அது அந்தத் தனி மனிதனுக்குத் தண்டனை வழங்குவதை மட்டுமே நீதி வழங்கலாக நினைப்பதில்லை. பொது நீதி அமைப்பு என்பது சமூகத்தின் பிரதிநிதியாக நின்று சமூகத்தின் அற ஒழுங்கில் ஏற்பட்டுள்ள ஊறைச் சரி செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. தான் பிரதிநிதிதுவப்படுத்தும் சமூகம் முழுமையானதல்ல. அது குறைபாடுகள் நிறைந்தது என்பதை உணர்ந்து செயல்படுகிறது. தனது பக்கம் குறைபாட்டை வைத்துக் கொண்டு அது எவ்வாறு மரண தண்டனை போன்ற ஒரு கொடுந்தண்டனையை வழங்க இயலும்?
நீதி வழங்கு முறையின் குறைபாடு அல்லது போதாமை (imperfection) என்பதை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் தமது முக்கிய வாதங்களில் ஒன்றாக முன் வைப்பர். எந்த நீதி வழங்கு முறையும் தவறுதலுக்கு அப்பாற்பட்டவை அல்ல, சட்டங்களுக்கு விளக்கமளிப்பது, தவறான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வது, தனிமனித விருப்பு வெறுப்புகளின் அடியாகச் செயல்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் தவறுதலாக மரண தண்டனை வழங்கப்பட்ட நிகழ்வுகளை இந்திய அநுபவங்களின் அடிப்படையிலும், உலக அளவு எடுத்துக்காட்டுகளின் மூலமும் நிறுவுவர். நாமும் சிலவற்றை முந்திய கட்டுரைகளில் பார்த்தோம். இந்த அடிப்படையில் திருப்பித் திருத்த இயலாத மரண தண்டனையை ஒருவருக்கு அளிப்பது என்ன நியாயம் என்கிற கேள்வியை அவர்கள் முன்வைப்பர். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் சமூக அற ஒழுங்குக் குறைபாடு என்பது இதிலிருந்து முற்றிலும் வேறானது என்பதை விளக்கத் தேவையில்லை.
வாய்ப்பு மறுக்கப்படுதல், மனித கண்ணியம் இழிவுக்குள்ளாதல், நீதி, சுதந்திரம் முதலியன பொருளற்றுப் போதல் என ஒரு சமூக மனிதன் அச் சமூகத்திலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் அந்நியப்பட்டுப் போவதற்குப் பல காரணிகள் உண்டு. ஆல்பர்ட் காமூ சொல்வதுபோல எல்லா மனிதர்களும் அடிப்படையில் சமூக ஒழுங்குகளை மீறக் கூடியவர்களாகவே உள்ளனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் positive law எனச் சொல்லும் கருத்தாக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். காமூவைப் பொருத்த மட்டில் சமூக அற ஒழுங்கிற்குப் பொறுப்பாக ஒரு குடிமகனை வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. மனிதனைச் ‘சமூக மிருகம்’ (social animal) என்னும் ஸ்பினோசாவின் கருத்துக்கு இது எதிரானது. சமூகத்துடன் ஒத்திசைந்து வாழ்தலே நல்லது என மனிதனின் பகுத்தறிவு அவனுக்குச் சொல்கிறது. எனவே அவன் சமூகச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் ஆகிறான் என்பது ஸ்பினோசாவின் கருத்தினடியாக வந்தடையும் முடிவு. காமூவின் கருத்துப்படி மனிதன் சமூக மிருகமல்ல. சமூக விதிகளை மீறுவதே அவனது இயல்பு. எனவே அவ்வாறு மீறாமல் வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. சமூகம் தன்னைக் குறைபாடற்றதாகவும் நீதியாகவும் அமைத்துக் கொள்ளாதபோது அவன் அதன் விதிகளிலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் பிறழ்வானேயானால் தவறு யார் பக்கம் இருக்கிறது? மனிதர் மீது பகுத்தறிவு ஒரு கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்றே கொன்டாலும் சமூக அநீதிகள் அந்தக் கட்டுப்பாடுகளை வலுவிழக்கச் செய்யக் கூடியவையாக உள்ளன
ஆக, (1) சமூக அற ஒழுங்கில் உள்ள குறைபாடு, (2) சமூக அற ஒழுங்கிற்கும் எதார்த்தமாக உள்ள சமூக நிலைகளுக்கும் உள்ள முரண்பாடு, (3) குற்றவாளியின் குறை எனப் பல காரணிகள் குற்றச் செயலுக்குக் காரணமாகின்றன.
சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறையை எடுத்துக் கொள்வோம். ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணுடல் மீது செலுத்திய வன்கொடுமை அது. அதில் ஒரு சிறுவனின் பங்கு ரொம்பக் கொடூரமாக இருந்தது என்கிறார்கள். ஒரு சிறுவனுடைய உள்லத்தில் இத்தனைக் கொடூரம் குடிபுகுந்தது எங்ஙனம்? அந்தச் சிறுவன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து நகரத்தில் வாழ நேரிட்டவன். அதன் மூலம் அவன் தனது சிறு பிராயத்தையும், குழந்தைமையையும், கல்வியையும் இழந்தவன். பள்ளி சென்று சக குழந்தைகளோடு வளர வேண்டிய சூழலில் பெரு நகரமொன்றில் அவனது வயதுக்கு மீறியவர்களோடு தனது சிறார் பருவத்தைக் கழிக்க நேர்ந்தவன். இத்தகையவன் இப்படி ஆனதன் பொறுப்பை அவன் தலை மீதே சுமத்துவது எப்படிச் சரியாகும்?
ஆனால் அதுதான் இப்போது நடக்கிறது. எப்படியும் அவனைத் தூக்கில் தொங்கவிட்டே ஆக வேண்டும் என்கிற திசையில் இன்று அரசு நகர்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை கூடாது என்கிற சட்ட விதியையும் மாற்றி அவனுக்கு மரண தண்டனை வழங்க முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் சமூக அற ஒழுங்கையும் அடு வளர்ந்து வந்த திசையிலிருந்து பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கிறது.
டெல்லி பாலியல் கொடுமையில் இன்னும் பல்வேறு அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேன்டும். ஒரு பெண் இப்படித் தன் காதலனோடு முன்னிரவு வரை சுற்றித் திரியலாமா என்கிற ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்து, இன்றைய சூழலில் ஒரு பெண் தன்னை ஒரு ஆளுமை மிக்க சமூக உயிரியாக முன்நிறுத்திக் கொள்வதைக் கண்ட மரபு வழிப்பட்ட ஆண் மனது துணுக்குறுவதிலிருந்து, சமூக ரீதியாக இன்று பெரு நகரங்கள் பிளவுற்றுக் கிடக்கும் சூழல் உட்பட டெல்லி வன்முறையின் காரணிகள் பல உண்டு. அதில் ஒரு காரணி மட்டுமே குற்றவாளிகளில் குவிந்திருந்ததாகக் கருதப்படும் வக்கிரம். சமூகம் தன்னிடம் இத்தனை குறைபாடுகளை வைத்துக் கொண்டு கொடுந்தண்டனை ஒன்றை எப்படிக் குற்றவாளிகளுக்குத் தர இயலும்?
சமூகம் குறைபாடுடையதாக இருக்கும் வரை அதில் கொடுந் தண்டனைக்கு இடமில்லை.
5.மரண தண்டனை கொடுங் குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது சரிதானா?
மரண தண்டனையை நீதிமன்றங்களும் பிற நிறுவனங்களும் நியாயப் படுத்தும்போது முக்கியமாக இரண்டு அம்சங்களை முன்வைப்பர். ஒன்று, சமூகத்தின் அறச் சீற்றத்தைத் தணிக்க வேண்டி இந்தத் தணடனை அளிக்க வேண்டியதாயிற்று என்பது. மற்றது இப்படியான கொடுங்குற்றங்கள் சமூகத்தில் நிகழாமல் தடுப்பதற்கு ஒரு அச்சுறுத்தும் கருவியாக மரண தண்டனை தேவையாக இருக்கிறது என்பது.
இரண்டுமே குற்றச் செயல்களுக்குக் குற்றம் புரிந்த தனிமனிதனை மட்டுமே பொறுப்பாக்கி, சமூகத்தின் பொறுப்பைக் காட்சியிலிருந்து மறைக்கின்றன. ஊன்றிக் கவனித்தால் குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்பதைப் பழி வாங்கும் வாய்ப்பாக அணுகும் நோக்கிலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்பதை உணரலாம். ராஜீவ் கொலையாக இருக்கட்டும், பாராளுமன்றத் தாக்குதலாக இருக்கட்டும் நிறைய அப்பாவிகளும் பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்ட கொடும் நிகழ்வுகள் அவை என்பதை யாரும் மறுக்க இயலாது. எதிர்காலத்தில் எந்த நியாயம் அல்லது அரசியலின் அடிப்படையிலும் இவ்வாறு அப்பாவிகள் கொல்லப்படுவதை நாம் ஏற்க இயலாது.
ஆனால் இந்த இரு நிகழ்வுகளிலுமே மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் நேரடியாகக் குற்றத்தில் பங்குபெற்றவர்கள் அல்ல. குற்றச் செயலில் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு வகையில் சிறு உதவிகள் புரிந்தவர்கள்தான் இவர்கள். நேரடியாகப் பங்குபெற்றவர்கள் ஒன்று கொல்லப்பட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர் அல்லது இன்னும் பிடிபடவில்லை. ஒருவேளை இவர்கள் எல்லோருமோ சிலரோ பிடிபட்டிருந்தால் நிச்சயம் அவர்களுக்குத்தான் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும். இப்போது மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பர் அல்லது குறைந்த தண்டனை அளிக்கப்பட்டிருப்பர். ஆக குற்றத்தின் நேரடிப் பங்கேற்பாளர்கள் கிடைக்காததற்காக இப்படிக் கிடைத்தவர்களைப் ‘பதிலி’யாகத் தூக்குக் கொட்டடிக்கு அனுப்புவது எப்படி அற அடிப்படையிலோ சட்ட அடிப்படையிலோ நியாயமாகும்?
அரசும் நீதிமன்றங்களும் இப்படிப் ‘பதிலி’ மரண தண்டனைகளை நிறைவேற்றுவது என்பது பழிவாங்கலன்றி வேறென்ன? ஒரு முன்னாள் பிரதமரைக் கொன்றுவிட்டு, பாராளுமன்றத்தைத் தாக்கிவிட்டு யாரும் பதிலுக்குக் கொல்லப்படாமல் தப்புவதை ஒரு இறையாண்மை மிக்க அரசும் அதன் நீதி வழங்கும் நிறுவனமும் எப்படி அனுமதிக்க இயலும்? குற்றத்தில் நேரடியாகப் பங்கேற்றவர்கள் கொல்லப்பட்டபோதும் சட்டத்தின் அடிப்படையைக் காட்டியும், உரிய சடங்குகளை நிகழ்த்தியும் நாங்கள் பதிலுக்கு ஒருவரையேனும் கொன்றாக வேன்டும் என்பதுதானே இந்த மரணதண்டனைகளின் நியாயம்.
‘பழிவாங்கல்’ (revenge) அல்லது ‘பதிலுக்குப் பதில்’ (retribution) என்பது போன்ற பண்பாட்டு வளர்ச்சி பெறாத காலத்து மொழியில் இன்றைய ஜனநாயகக் குடியரசு பேசலாகாது என்பதனாலேயே ‘அச்சுறுத்தல்” (deterrance), ‘அறச் சீற்றம்’ (moral outrage) முதலான மொழிகளில் தஞ்சம் புகுகின்றனர். இதன்மூலம் தனிநபர் பழிவாங்கலுக்கும் (private vengeance) பொது நீதிக்கும் (public justice) இடையிலான வேறுபாட்டை அழிக்கின்றனர். தனிநபர் பழிவாங்கல் என்பது குற்றத்திற்குக் குற்றவாளியை மட்டுமே பொறுப்பாக்கிச் சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும். அது வழங்கும் ‘நீதி’ என்பது குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர் (victim)) அல்லது அவரது சந்ததியினருக்கு மட்டுமே ‘நீதி’ வழங்கும். ஆனால் பொது நீதி என்பதோ பாதிக்கப்பட்டவர், குற்றமிழைத்தவர் என குற்றச் செயலின் இரு முனைகளில் உள்ளவர்களுக்குமே நீதி வழங்கும். ஆம், இந்தக் குறைபாடுகள் நிரம்பிய சமூகத்தின் உறுப்பினரானவும் விளைபொருளாகவும் உள்ள குற்றவாளி தண்டனை வழங்கப்பட வேண்டியவராக மட்டுமின்றி நீதி வழங்கப்பட வேண்டியவராகவும் உள்ளார்.
எதார்த்தத்தில் ‘அச்சுறுத்தல்’
மரணதண்டனை என்பது எதார்த்தத்தில் ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்பதற்கு உலக அளவிலிருந்தும் இந்திய எடுத்துக்காட்டுகளிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர். முன்னாளைய திருவாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தை அடிப்படையாகக் கொண்டு மோகன் குமாரமங்கலம் செய்துள்ள ஒரு ஆய்வை பச்சன் சிங் வழக்கில் நீதியரசர் பகவதி எடுத்துக்காட்டுவார். இங்கு 1945க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் மரணதண்டனை வழங்குதல் தடுக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்தாண்டு காலத்தில் இப்பகுதியில் 962 கொலைக் குற்றங்கள். நிகழ்ந்தன. அடுத்த ஐந்தாண்டுகள் (1951- 1956) இந்தத் தடை நீக்கப்பட்டு கொலைக் குற்றங்களுக்கு மீண்டும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன. இப்போது கொலக் குற்றங்களின் எண்ணிக்கை 967ஆக அதிகரித்திருந்ததே தவிரக் குறையவில்லை.
யுக் மொஹித் சிங் முன்வைக்கும் இன்னொரு ஆய்வைக் காணலாம்.. பச்சன்சிங் தீர்ப்பு இந்திய மரண தண்டனை வரலாற்றில் ஒரு எல்லைக்கல் என்பதை அறிவோம். ‘அரிதினும் அரிது’ என்கிற நிபந்தனையின் அடிப்படையில் மரண தண்டன வழங்கல்களும், நிறைவேற்றங்களும் வரலாறு காணாத வகையில் குறைந்தன. கொலை வழக்கு என்றாலே மரண தண்டனை என்கிற நிலை மாறியது.
பச்சன் சிங் தீர்ப்பிற்கு முன்னதாக, 1974- 1978 காலகட்டத்தில், இந்தியாவில் 85,000 கொலைகள் நடந்தன. 25 பேர் தூக்கிலிடப்பட்டனர். அதாவது இலட்சம் கொலைகளுக்கு 34 தூக்குகள் நிறைவேற்றப்பட்டன. 1980க்குப் பின் 10,11,703 கொலைகளுக்காக 83 பேர் தூக்கிலிடப்பட்டனர். அதாவது, இலட்சம் கொலைகளுக்கு 8.2 பேர் (0.0082 சதம்) என்பதாகத் தூக்கிலிடப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது, பிந்திய காலங்களில் இன்னும் அதிகப் பேருக்குக் கருணை அளிக்கப்பட்டது. 1995க்குப் பின் தூக்கிலிடப்படுபவர்களின் வீதம் 0.0042 சதமாகவும், 1999க்குப் பின் இது 0.0002 சதமாகவும் மேலும் குறைந்தது. 2005க்குப் பின் நடைபெற்ற 2,30,293 கொலைகளில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதாவது நிறைவேற்று வீதம் சுழி (தனஞ்சய் சட்டர்ஜி, அஜ்மல், அஃப்சல் ஆகியோரின் தண்டனை நிறைவேற்றங்களுக்கு முன்னதான தரவு). இந்தத் தரவுகள் கிட்டத்தட்ட முற்றிலும் சரியானவை. பிற குற்றங்களைப் போல கொலைக் குற்றங்கள் அவ்வளவு எளிதாக மறைக்க இயலாதவை. குற்றங்கள் தொடர்பான இந்திய அளவிலான வருடாந்திரக் கணக்கெடுப்புகள் இவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றன.
ஆக, பச்சன் சிங் தீர்ப்பிற்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றல் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. மரண தண்டனை கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என நம்புகிறவர்களின் வாதப்படி இந்நிலை கொலைக் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. மக்கள் தொகைக்கும் கொலைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம் குறித்த வருடாந்திரத் தரவுகள் வேறுவகையான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. 1952ல் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 2.81 கொலைகள் நடந்தன. படிப்படியாக 1959ல் இது 3ஆக அதிகரித்தது. 1978 வரை இது 2.5க்கும் 3க்கும் இடையில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. அடுத்து படிப்படியாக இது அதிகரித்து கொலை வீதம் 1992ல் 4.6ஐ எட்டியது. 1992 லிருந்து இது தொடர்ந்து குறையத் தொடங்கி 2007ல் 2.8ஆகக் குறைந்தது. அதற்குப் பின் 2012 வரை இது அதே அளவில் தொடர்கிறது.
மரண தண்டனையை நீக்கினால் கொலைக் குற்றங்கள் அதிகரிக்கும் என்கிற கருத்தை இந்தத் தரவுகள் தவிடுபொடியாக்குகின்றன. இப்படிக் கொலைகளின் வீதம் குறைந்ததற்குச் சமூகப் பொருளாதார வளர்ச்சிகள் காரணமாக இருக்கலாம் எனச்சொல்லவும் வழியில்லை. இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்த இடைக் காலத்தில் அப்படி ஒன்றும் சமூக வளர்ச்சிக் குறியெண்கள் மாறிவிடவில்லை. தனி நபர் வருமான வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, குழந்தை பிறப்பு இறப்பு வீதங்கள், மனித வளர்ச்சிக் குறியெண் ஆகிய சமூக வளர்ச்சிக் காரணிகள் எல்லாவற்றுடனும் ஒப்பிட்டு இவற்றுக்கும் கொலை வீதங்கள் குறைவதற்கும் எந்தப் பொருத்தமும் இல்லை என்பதை மொஹித் சவுத்ரி நிறுவி உள்ளார். இந்த வளர்ச்சி எண்கள் எல்லாம் அதிகரித்த போதும் கொலை வீதம் குறைந்தே உள்ளது.
ஒரே ஒரு சமூக வளர்ச்சிக் குறியெண் மட்டுமே இந்தவகையில் நம் கவனத்தை ஈர்க்கிறது. ஆண் பெண் பாலியல் வீதம், அதாவது 1000 ஆண்களின் எண்ணிக்கைக்கு எதனை பெண்கள் உள்ளனர் என்பது ஒரு முக்கியமான சமூக வளர்ச்சி எண். பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கைக்கு எந்த அளவிற்குச் சமமாக உள்ளதோ அந்த அளவிற்குச் சமூகம் வளர்ச்சியுற்றிருப்பதாகப் பொருள். இந்த ஆண் பெண் வீதம் அதிகரிக்கும்போது, அதாவது பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்குச் சமமாக உயர உயரச் சமூகத்தில் கொலைகளின் வீதம் குறைகிறது. இது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதும் தான்.
எந்த வகையிலும் மரண தண்டனை வீதத்திற்கும் கொலை வீதத்திற்கும் தொடர்பில்லை, மரணதண்டன வீதம் குறைவதனால் கொலைக்குற்றங்கள் பெருகுவதற்கான சான்றுகள் இல்லை என்பதே இந்தத் தரவுகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு.
மரண தண்டனை அல்லது பொதுவில் தண்டனை ஒரு அச்சுறுத்தல் என்பது அற அடிப்படையில் சரியாகுமா?
அச்சுறுத்தல் என்கிற அடிப்படையில் தண்டனையை விளக்குவோர் மூன்று காரணங்களைச் சொல்வர். அவை (1) தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் மக்களைக் குற்றச் செயல்களிலிருந்து தடுக்கும் (2) தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் ஒரு குற்றவாளியை மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கும். (3) ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களைக் குற்றச் செயல்களிலிருந்து தடுக்கும். கடுமையான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து இந்த அடிப்படைகளிலிருந்துதான் உருவாகிறது.
இதில் முதலாவது காரணத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சரி எனலாம். அதையும் கூட முழுமையாகச் சரி எனச் சொல்ல இயலாது என்பதைத் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். இரண்டாவது காரணம் முற்றிலும் ஏற்புடையதல்ல. ஒரு குற்றவாளி மீண்டும் குற்றம் புரிவதைத் தண்டனை குறித்த அச்சம் தடுக்கும் எனில் அந்த மனிதனிடம் ஏதோ ஒரு மாறாத அம்சம் இருந்து குற்றச் செயலை நோக்கித் தூண்டுகிறது எனப் பொருளாகிறது. உளவியல் ரீதியில் வக்கிரமான ஒரு மன நோயாளிக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்குமே ஒழிய எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தாது. அப்படியே இருந்தாலும் கூட அவனை மீண்டும் குற்றச் செயலிலிருந்து தடுப்பதற்கான வழி அவனுக்கு மீண்டும் தண்டனை கொடுப்பதல்ல. மாறாக அவனை நாம் ஏதோ ஒரு வகையில் சீர்திருத்த (reform), சிகிச்சையளிக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் என்பது ஏதோ ஒரு வகையில் அவனை ஓரிடத்தில் தடுத்து வைத்துத் திருத்துவது என்கிற அளவில் மட்டுமே அது தண்டனையாக இருக்க முடியும்.
தவிரவும் மீண்டும் ஒருவர் குற்றச் செயலில் ஈடுபடுவது என்பது அவரை மட்டும் பொருத்த விஷயமல்ல. அவரை அச் செயலை நோக்கித் தள்ளுகிற அவரது சூழலும் கவனத்திற்குரிய ஒன்று. அந்த வகையில் சீர்திருத்தம் என்பது குற்றவாளியை மட்டுமல்ல குற்றச் சூழலையும் சீர்திருத்துவதாக இருக்க வேண்டும். மொத்ததில் எந்தத் தண்டனையும் குற்றவாளியைச் சீர்திருத்துவதை நோக்கியே அமைய வேண்டும். சீர்திருத்ததில், தடுத்து வைத்தல் போன்ற தண்டனை அம்சம் தவிர்க்க இயலாது என்ற போதிலும், அந்தத் தண்டனை அவரை உள்நோக்கிச் சிந்திக்கவும் அதனடிப்படையில் தனது குற்றச் செயலுக்காக வருந்தவும் வைப்பதை நோக்கியே இருக்க வேண்டும். அச்சுறுத்தல் என்பது இந்த வகையில் தண்டனையின் நோக்கமாக இருக்க இயலாது. அதுவும் மரண தண்டனை என்பது இதற்கு எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது. ஒருவரைத் தூக்கிலேற்றித் துள்ளத் துடிக்கக் கொல்லுவதன் மூலம் எப்படி அவரைத் தன் குற்றம் பற்றிச் சிந்திக்க வைத்துத் திருத்த இயலும்?
ஒருவருக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவரை அச்சுறுத்தி அவரைக் குற்றச் செயலிலிருந்து தடுக்கும் என்கிற மூன்றாவது காரணியையும் முற்றிலும் ஏற்க இயலாது. சவூதி போன்ற நாடுகளில் பொது இடத்தில் தலையச் சீவி அதை எல்லோரும் கட்டாயமாகக் காண வேண்டும் என்பது கொடூரமானது மட்டுமல்ல. ஏற்புடையதுமல்ல. ஒருவர் குற்றம் செய்துவிடக் கூடாது என்பதற்காக இன்னொருவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? ஒரு குற்றச் செயலுக்குக் குற்றவாளி மட்டுமின்றி அவரது சூழலும் அதில் பங்குவகிக்கிறது என்கிற நிலையில், அவரைத் தண்டிப்பது மட்டுமே தீர்வாக்கப்படும்போது, தண்டிக்கப்படும் அவர், தனது சூழலின் குற்றத்திற்கும் பொறுப்பேற்றுத் தண்டனையச் சுமக்க வேண்டியவராகிறார். அத்தோடு இப்போது மற்றவர்கள் எதிர்காலத்தில் குற்றம் செய்துவிடக் கூடாது என்கிற பொறுப்பையும் ஏற்று அவருக்காகவும் தண்டனையைச் சுமக்க வேண்டியவராகிறார்.
தண்டனை என்பது ஒருவரைத் தன் குற்றச் செயல் குறித்து உள் நோக்கிச் சிந்திக்க வைத்துத் திருத்தும் முகமாகத்தான் இருக்க முடியுமே ஒழிய மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்காக் ஒருவரைத் தூக்கில் தொங்கவிடவோ சிறையில் அடைக்கவோ இயலாது.
6. மரணதண்டனை ஒரு சாவுக் குலுக்கல் சீட்டு
அஃப்சல்குருவை மனைவி மக்களுக்குக் கூடத் தெரியாமல் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொன்றதையும், வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப் படை வீரர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுமான சைமன், ஞானப் பிரகாசம், பிலவேந்திரன், மாதையன் ஆகிய நால்வரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையும் ஒட்டி மரண தண்டனை குறித்த விவாதம் மீண்டும் மேலுக்கு வந்துள்ளது.
எனினும் மனித உரிமைப் போராளிகளின் முயற்சியால் இன்று இந்த நால்வரின் தண்டனை நிறைவேற்றத்தைத் தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நிரந்தரத் தடை இல்லை என்றபோதிலும் அஜ்மல் கசாப், அஃப்சல் குரு இருவரையும் மூன்று மாதத்திற்குள் அடுத்தடுத்துத் தூக்கிலிட்டுக் கொன்றதைப் போல இவர்களையும் கொல்ல இருந்த உடனடிச் சூழல் தற்போது விலகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தபோதும். ஆரசியல் சட்டத்தின் 72ம் பிரிவின்படி அவருக்கு மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. எனினும் அவர் இதைத் தன்னிச்சையாகச் செய்துவிட இயலாது. அரசிடம், அதாவது உள்துறை அமைச்சகத்திடம் கருத்தைக் கேட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கப் பரிந்துரை செய்த போதிலும் குடியரசுத் தலைவர் அப்படிச் செய்யாமல் காலந்தாழ்த்தலாம். முந்தைய தலைவர் பிரதீபா பட்டீல் அப்படிச் செய்தார். அவரது பதவிக் காலத்தில் 35 பேர்களின் மரண தண்டனைகள் ஆயுள்தண்டனைகளாகக் குறைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவராக ஆவதற்கு முதல் நால் வரையிலும் விசுவாசமான காங்கிரஸ்காரராகத் தீவிர அரசியல் செய்து வந்த பிரணாப் பதவியேற்ற மூன்று மாதத்திற்குள் ஆறு பேர்களின் கருணை மனுக்களை நிராகரித்துச் ‘சாதனை’ புரிந்துள்ளார். அவர்களில் இருவாரது தண்டனைகள் இரகசியமாக நிறைவேற்றப்பட்டும் விட்டன.
நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின் நீண்ட காலம் ஒருவர் தூக்கிலிடப் படாமல் இருந்து இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டால், இது தொடர்பாக இடைக்காலத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய அச்சம்,கவலை, துயரம், மன அழுத்தம் (agony of suspense) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தனது தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தை நாடலாம் எனக் குறைந்த பட்சம் நான்கு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது. இந்த அடிப்படையிலேயே இன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூவர், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர், காளிஸ்தான் போராளி தேவேந்திரபால்சிங் முதலானோரின் தண்டனை நிறைவேற்றங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இந்த விசாரணையின்போது இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகக் காத்திருப்போரின் பட்டியலை உச்சநீதிமன்றம் தன் பார்வைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதில் அஃப்சல் குருவின் பெயரும் உள்ளது. எனினும் நள்ளிரவில் ஒரு திருடனைப்போல திஹார் சிறைக்குள் நுழைந்து அஃப்சலைத் தூக்கிலிட்டது இதிய அரசு.
நீதிமன்றத்தின் பார்வையில் வழக்கு இருப்பது ஒரு பக்கம்; தூக்கிலிடப்படுவதற்கு முன்னம் ஒரே ஒருமுறை மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்கும் உலக அள்வில் கடைபிடிக்கப்படும் அடிப்படை மனித நாகரீகமும் மறுக்கப்பட்டது இன்னொருபுறம்; இவை இன்று இந்திய அரசின் மீது கடும் கண்டனத்திற்குக் காரணமாகியுள்ளன.
“தண்டனை நிறைவேற்றம் குறித்து மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது” என இரகசியத் தூக்கிற்குக் காரணம் சொல்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. விதிப்படி ஏன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கேட்டால், “விரைவுத் தபாலில் செய்தி அனுப்பினோம். அவர்களுக்குக் கிடைக்கவில்லை” எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்படி மக்களையும், எதிர்க் கருத்துக்களையும், ஆர்பாட்டங்களையும் கண்டஞ்சுவதை என்னென்பது? தூக்கிலிட்ட கையோடு காஷ்மீர் முழுதும் ஊரடங்குச் சட்டம், தொலைக்காட்சிகளுக்கு சென்சார், எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம் என நடவடிக்கைகள் தொடர்ந்தன, அஃப்சலின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தனி நபர்கள் யாரேனும் இப்படி விதிமுறைகளை மீறுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு, ஒரு மக்கட் தொகுதி என்பன ஏற்றுக்கொண்ட விதிகளையும் நெறிமுறைகளையும் மீறாதிருப்பது அவசியம். ஏனெனில் அப்போதுதான் அது மக்கட் தொகுதியின் சராசரி விருப்பை சரியாக நிறைவேற்றுவதாக அமையும்.
வெறும் சட்ட விதிகளுக்கு அப்பால் கருணை, அன்பு, மனிதாயம், சமூக விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மன்னிப்பு வழங்கு அதிகாரம் நீதித் துறையிடமிருந்து (Judiciary) விலக்கி நிர்வாகத்திடம் (Executive) அளிக்கப்பட்டுள்ளது…
ஆனால் இந்திய அரசோ மன்னிப்பை அரசியலாக்குகிறது. இன்று இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டவர்கள் இருவரும் முஸ்லிம்கள். பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அஃப்சலை உடனடியாகத் தூக்கிலிட வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.. முஸ்லிம் ஓட்டுகளுக்காகாத் தேசப் பாதுகாப்பை அரசு கைவிட்டு விடுகிறது என்று அது அரசைக் குற்றம் சாட்டி வந்தது. இந்தக் குற்றச் சாட்டினடியாகப் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளை இழக்க விரும்பாத இந்திய அரசு இப்படி இரகசியத் தூக்குகளை நிகழ்த்திக் கோண்டுள்ளது. பா.ஜ.கவைப் பொருத்த மட்டில் அதற்கு நீதி என்றால் மரண தண்டனைதான். இத்தகைய பிரச்சினைகளில் மரண தண்டனைக்குக் குறைவான எதையும் அது தண்டனையாகக் கருதுவதில்லை. நீதியையும் பழிவாங்கலையும் அது பிரித்துப் பார்ப்பதில்லை. அஃப்சலின் மரணத்தை அக்கட்சியினர் லட்டு தின்று கொண்டாடினர்.
இன்று இந்திய அரசும் பா.ஜ.க வழி நின்று நீதியையும் பழிவாங்கலையும் ஒன்றாக்கியுள்ளது. குறுகிய அரசியல் நலன்களுக்காக அப்படிச் செய்துள்ளது. அப்படிச் செய்ததன் மூலம் இன்று காஷ்மீர் மக்களிடமிருந்து அது மேலும் அந்நியமாகியுள்ளது.
சமூகம் நாகரீகத்தில் மேம்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரதில் (penal culture) வெளிப்படும். தண்டனைகள் மேலும் மேலும் மனிதாயப் படுவதே சமூகம் நாகரீகமடைந்து வருவதன் அடையாளம். இப்படிக் குடும்பத்தவர்களுக்கும் அறிவிக்காமல் தூக்கிலிட்டு உயிரைப் பறிப்பது இதற்கு எதிரானது.
இந்நிலையில் சென்ற வாரம் மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் நியாயங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னொரு செய்தி வந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வருக்கு மரண தண்டனை அளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது என அந்த மரண தண்டனைகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை ஏற்றிருந்த நீதியசர் கே.டி.தாமஸ் கூறினார். இதை அவர் தன்னிச்சையாகக் கூறவில்லை. அதற்கும் ஒரு பின்னணி இருந்தது.
சென்ற ஜூலை 25 (2012) அன்று புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் 14 பேர் அப்போதுதான் பதவி ஏற்றிருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து நமது நீதி வழங்கு வரலாற்றில் இதுவரை காணாத வகையில் மனு ஒன்றை அளித்தனர். ஆறு வழக்குகளில் மரணதண்டனை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கும் 13 பேர்களின் மரண தண்டனைகளை, குடியரசுத் தலைவருக்கு அரசியல்சட்டத்தின் 72ம் பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அம்மனுவில் வேண்டப்பட்டிருந்தது.
மரண தண்டனை ஒழிப்பு என்கிற அடிப்படையிலிருந்து அவர்கள் இதைக் கோரவில்லை. அவர்களில் சிலர் மரண தண்டனை ஒழிப்பில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோரிக்கை அந்த அடிப்படையிலிருந்து எழவில்லை, மாறாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள இந்த மரண தண்டனைகள் அனைத்தும் தற்போதைய நீதி வழங்கு நெறிமுறைகளுக்கு மாறாகவும் தவறாகவும் அளிக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படையிலேயே அவர்கள் இதைக் கோரினர்.
ஓய்வு பெற்ற இந்நீதிபதிகளின் இக்கோரிக்கையும் தன்னிச்சையாக முன்மொழியப்பட்ட.தல்ல.. உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய மூன்று வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது முன்னதாக அது ஏழு வழக்குகளில் அளித்துள்ள மரண தண்டனைகள் “தவறுதல் அல்லது அறியாமையின்” (per incurium) கரணமாக அளிக்கப்பட்டவை என ஏற்றுக் கொண்டுள்ளது. விரிவாக இது பற்றிப் பேச இங்கு இடமில்லை. சுருக்கமாகக் காண்போம்.
மனித சமூகம் நாகரீகத்தில் பண்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரத்தில் (penal culture) வெளிப்படும். மேலும் மேலும் தண்டனைகள் மனிதாயப் படுத்தப்படும். சட்டங்கள் அதற்கேற்ற முறையில் மாற்றியமைக்கப்படும். சில நேரங்களில் சட்டங்களுக்கு அப்பால், நீதிவழங்கு நெறிமுறைகளின் ஊடாகவும் புதிய தண்டனைக் கோட்பாடுகள் (judicially evolved principles) உருவாகும், நீதித் துறையில் அவ்வப்போது அபூர்வமாக வெளிப்படும் சில நல்ல உள்ளங்கள் இதற்குக் காரணமாகியுள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நமது குற்ற நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 367 (5)வது பிரிவின்படி கொலைக் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது கட்டாயம். அப்படியில்லாமல் அவருக்கு ஆயுள் தண்டனை போன்ற குறைந்த தண்டனை அளித்தால் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அதாவது மரண தண்டனை என்பது விதி. ஆயுள் தண்டனை என்பது விதிவிலக்கு.
1973ல் நமது குற்ற நடைமுறைச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டபோது இது தலைகீழாக மாற்றப்பட்டது. கொலைக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதியாகவும் மரண தண்டனை விலக்காகவும் மாற்றப்பட்டது. எனவே ஒரு நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை அளித்தால் அதற்குச் “சிறப்புக் காரணங்கள்” சொல்லி விளக்கமளித்தாக வேண்டும். தண்டனை அறிவிக்குமுன் அது குறித்துக் குற்றவாளியிடம் கருத்துக் கோரவேண்டும் என்கிற நெறியும் இப்போதுதான் உருவாக்கப்பட்டது. நமது தண்டனைக் கலாச்சாரம் ஒருபடி முன்னேறியதற்கு இது ஒரு சான்று..
1982ம் ஆண்டு நீதியரசர் பி.என்.பகவதி அவர்கள் புகழ்பெற்ற பச்சன்சிங் வழக்கில் இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்தி மரண தண்டனை வழங்குவதில் ஒரு புரட்சிகரமான வரை நெறியை (ratio dicidendi) உருவாக்கினார். “அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை அளிக்க முடியும்” என்கிற வரையறை இவ்வழக்கில்தான் உருவாக்கப்பட்டது. நீதியரசர் பகவதி அவர்கள் உருவாக்கிய வரை நெறி இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது,
‘அரிதினும் அரிது’ என்பதை நிறுவும்போது குற்றத்தின் சூழல் அளவு, தன்மை, கொடூரம் ஆகியவற்றை மட்டுமின்றி குற்றவாளியின் சூழல், வயது, சமூகப் பின்னணி, இப்படியானதற்கான காரணம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது ஒன்று. மற்றது மரணதண்டனை வழங்கப்பட்டவர் சமூகத்திற்கு ஒரு நிரந்தரத் தொல்லை (menace), திருத்தவே முடியாதவர் என நீதிமன்றம் நிறுவ வேண்டும் என்கிற கூடுதல் சுமையையும் எதிர்கால நீதிமன்ற அமர்வுகளின் மீது நீதியரசர் பகவதி சுமத்தினார். இது குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் ஒரு தண்டனைத் தணிப்புக் காரணியாக (mitigating factor) பிந்தைய வழக்குகளில் செயல்பட்டது. 1982க்குப் பின் மரண தண்டனை வழங்கலும், நிறைவேற்றலும் மிகப் பெரிய அளவில் குறைந்தன.
எந்த ஒரு குற்றச்செயலுக்கும் குற்றத்தைச் செய்த தனிமனிதன் மட்டுமே பொறுப்பாளி அல்ல. இந்த ஏற்றத்தாழ்வான, கொடூரமான, நீதியற்ற சமூகத்திற்கும் அதில் பெரும் பொறுப்பு உண்டு. தூக்குக் கொட்டிலுக்கு அனுப்பபப்படுகிற பெரும்பாலோர், ஏன் கிட்டத்தட்ட அவ்வளவு பேருமே அடித்தள சாதி, வர்க்கம், சிறுபான்மை மதம் ஆகிய பின்னணிகளில் வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற டில்லி பாலியல் வன்கொடுமைக் குற்றத்தை எடுத்துக் கொள்வோம். இது மிகக் கொடூரமான ஒரு நிகழ்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. அதில் பங்கு பெற்ற ஒரு 16 வயதுப் பையன் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதும் தெரியும்.. ஆனால் குற்றத்தின் இந்த அளவும், தன்மையும், சூழலும் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் போதா. அவன் ஒரு சிறுவன்: இன்னும் திருந்தக் கூடிய வாய்ப்பு உள்ளவன்; சிறு வயதிலேயே ஏழ்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தவன்; இதனூடாகத் தன் சிறு பிராயத்தை, கல்வி வாய்ப்பை எல்லாம் தொலைத்தவன். இப்படியானதற்கு அவன் மட்டுமே பொறுப்பு அல்ல. இந்தச் சமூக அமைப்புக்கு இதில் முக்கிய பங்குண்டு. எனவே அவனது இந்தப் பின்னணியும் சூழலும் அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கி வைக்கக் கூடிய தணிக்கும் காரணிகளாகச் செயல்படவேண்டும். தண்டனையின் நோக்கம் பழிவாங்கலோ (revenge), குற்றத்திற்குக் குற்றம் என ஈடு செய்தலோ (retribution) அல்ல. குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழவைத்தலே அதன் முதன்மையான நோக்கம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
ஆனால் இப்படியான ஒரு புரட்சிகரமான நெறிமாற்றம் ஒன்று பச்சன்சிங் வழக்கை அடுத்து உருப் பெற்றுள்ளதைக் கண்டுகொள்ளாமல் பதினாலு ஆண்டுக்ளுக்குப் பின் வேறொரு வழக்கில் இந் நெறிமுறை மீறப்பட்டது. ராவ்ஜி என்னும் வழக்கில் (2 SCC 175 /1996) இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று மரண தண்டனை அளிப்பதற்குக் “கவனத்தில் கொள்ள வேண்டியது அக் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவைதானே தவிர குற்றவாளியின் சூழல், தன்மை முதலியன அல்ல” என பச்சன் சிங் வழக்கில் உருவான அடிப்படை நெறிமுறைக்கு மாறான நெறி ஒன்றை வரையறுத்தது.
ராவ்ஜி வழக்கில் உருவாக்கப்பட்ட இந் நெறிவரையின் அடிப்படையில், குற்றத்தின் தன்மையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, பச்சன்சிங் நெறிவரையில் கூறப்பட்ட குற்றவாளியின் சூழல், தன்மை ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் குறைந்த பட்சம் ஐந்து வழக்குகளில் ஏழு பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள உண்மையை உச்ச நீதிமன்றம் பதிமூன்றாண்டுகளுக்குப் பின் 2009ல் சந்தோஷ் குமார் பாரியார் என்னும் வழக்கில் கண்டுபிடித்தது. அதே நேரத்தில் இதேபோல இன்னொரு வழக்கில் ஆறு பேருக்குத் தவறாக மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான், எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 13 பேர்களுக்குத் தவறாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் இன்று கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
இப்போது நீதியரசர் கே.டி.தாமஸ் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தம் 17 பேர்களுக்கு இதுவரை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை தவறானது என்றாகிறது. இதில் ராவ்ஜி என்பவருக்கு ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.
பச்சன்சிங் அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு (constitutional bench). இதில் உருவாக்கப்பட்ட வரைநெறியை ராவ்ஜி அமர்வு போன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மீற இயலாது என்பது மட்டுமல்ல, இப்படி உருவாக்கப்பட்ட நெறிமுறையைப் பின் வரும் அமர்கள் ஏற்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை. இருந்தும் இந்த எட்டு வழக்குகளில் இப்படிப் 17 பேர்களுக்குத் தவறாகத் தண்டனை வழங்கப்பட்டதை எவ்வாறு புரிந்து கொள்வது?
இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ராஜீவ் காந்தி வழக்கு போன்ற “பயங்கரவாதம், தேசப்பாதுகாப்பு” தொடர்பான வழக்குகளில் யாரையாவது தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்கிற நிலை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ராஜிவ் கொலையில் நேரடியாகப் பங்குபெற்ற (perpetrators) பத்து பேர்கள் ஒன்று இறந்து போனார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் மரண தண்டனை வழங்கப்பட்ட அவ்வளவு பேரும் பேட்டரி வாங்கித் தந்தது போன்ற தெரிந்தும் தெரியாமலும் குற்றத்தில் உதவி புரிந்தவர்கள் (abettors) மட்டுமே. ஒருவேளை இந்தப் பத்து பேரும் அல்லது அவர்களில் ஒரு சிலரேனும் பிடிபட்டிருந்தால் இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்குமா? அஃப்சலின் கதையும் இப்படித்தானே.
மற்றது நமது நீதியரசர்களின் உள்ளத்தில் பொதிந்துள்ள சாதி மற்றும் வர்க்கச் சார்பு நிலை. இதுவும் பச்சன்சிங் வழக்கில் நீதியரசர் பகவதி அவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட ஒன்றுதான். புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டஅக்டர் பாலகோபால் ஒருமுறை கூறியது போல’ “நமது குற்ற விசாரணை மற்றும் தண்டனை வழங்கு நிறுவனங்கள் காட்டும் இத்தகைய ஆத்திரம், வெறுப்பு முதலியன உண்மையில் குற்றத்தின் மீது கொண்ட வெறுப்பின் விளைவு அல்ல. மாறாக அது குற்றவாளிகளின் மீது கொண்ட வெறுப்புத்தான்.”
உச்ச நீதிமன்றத்தில் 14 பெஞ்சுகள் உள்ளன. இதில் யாருடைய அமர்வுக்குத் தன் மேல்முறையீடு செல்லும் என மரண தண்டனை விதிக்கப்பட்டவன் அறியான். ஒருவேளை அது நீதியரசர்கள் பகவதி, எஸ்.என்.சின்ஹா முத்லானோர் பங்கு பெறும் அமர்வுக்குச் சென்றால் அவன் தண்டனை குறைக்கப்படுவது உறுதி. நீதிபதி அர்ஜித் பசாயத் போன்றோரின் அமர்வுக்குச் என்றால் மரண தண்டனை உறுதி செய்யப்படுவது நிச்சயம். அதனால்தான் இதை ஒரு “மரணக் குலுக்கல் சீட்டு” (lethal lottery) என்கிறோம்.