கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் (1726–1798)

Christian Frederick(h) Schwarz

{நான்காண்டுகளுக்கு முன் எழுதியது. முகப்புப் படம் இரண்டாம் துளசாஜி மன்னன் மரணப் படுக்கையில் தன் வளர்ப்பு மகன் சரபோஜியை ஸ்வார்ட்சிடம் அடைக்கலமாக ஏற்கச் சொல்லும் காட்சி)

Schwartz

இன்று தஞ்சாவூர் மாநம்புச் சாவடியில் உள்ள ஒரு திருமண அரங்கில் உறவினர் ஒருவர் வீட்டுத் திருமணம். கலப்புத் திருமணம். மாப்பிள்ளை வீட்டார் புராடஸ்டன்ட் கிறிஸ்தவர் என்பதால் அவர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தஞ்சாவூர் நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி செய்த இடம். நண்பர்களைப் பார்க்க வசதியாக இருக்கும் என குடந்தையிலிருந்து என் டூ வீலரிலேயே புறப்பட்டுவிட்டேன்.

திருமண அரங்கிற்கு எதிரே புகழ்பெற்ற பிளேக் ஹை ஸ்கூல் மற்றும் செய்ன்ட் பீடர்ஸ் சர்ச். 20 ஆண்டுகள் தஞ்சையில் இருந்தபோதும் ஒருமுறை கூட இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயத்திற்குள் நுழைந்ததில்லை. இத்தனைக்கும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் கல்லறை அந்த ஆலயத்திற்குள்தான் அமைந்துள்ளது எனத் தெரிந்தும் கூடப் போய்ப் பார்த்ததில்லை.

தஞ்சை எல்லையில் அந்த மராட்டியப் பார்ப்பன நங்கையை அவள் விருப்பத்திற்கு மாறாக உடன் கட்டை ஏற்றியபோது கடைசி நிமிடத்தில் வந்து காப்பாற்றிய ஆங்கிலத் தளபதி லிட்டில்டனின் வீடு மாநம்புச் சாவடியில்தான் இருந்தது என மாதவையாவின் நாவலில் படித்துவிட்டு ஏதாவது அந்த வீட்டின் தடயம் தென்படுகிறதா என 30 ஆண்டுகளுக்கு முன் நான் சைக்கிளில் தேடித் திரிந்த போதும் தூய பேதுரு ஆலயத்திற்குள் நுழைந்ததில்லை.

ஊரை விட்டுப் போன பின்புதானே அட இதையெல்லாம் பார்க்கவில்லையே என்கிற எண்ணம் வரும். திருமண நிகழ்ச்சி முடிந்த கையோடு பேதுரு ஆலயத்திற்குள் நுழைந்தேன். ஆலயம் இப்போது சீரமைக்கப்பட்டு புதிய கோலத்துடன் காட்சியளிக்கிறது. ஆலயத்திற்குள் நுழையும் முன் அருகிருந்த அந்த விசாலமான பிளேக் ஹை ஸ்கூல் மைதானத்திற்குள் நுழைந்தேன். தஞ்சையின் கடைசி மன்னன் இரண்டாம் சிவாஜியின் உதவி பெற்றுக் வெட்டப்பட்ட குளத்தின் தடயத்தைத் தேடினேன்.

மாநம்புச் சாவடி என்பது இன்னும் கூட சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஸ்வார்ட்ஸ் தொடங்கி ஜி.யு.போப், வேதநாயகர் காலத்தின் ஊடாக உருப்பெற்றிருந்த சீர்திருத்தக் கிறிஸ்தவச் சமூகத்தின் இருப்பிடமாக அது இருந்தது. போப் தமிழை நேசித்தவர் மட்டுமல்ல, தூய பேதுரு ஆலயத்தின் பங்கு குருவாகவும் இருந்தவர். புதிதாக உருவாகியுள்ள  கிறிஸ்தவ சமூகத்திற்கென போப், வேதநாயகர் முதலானோர் அன்றைய தஞ்சை மன்னர், அவர்தான் கடைசி மராட்டிய மன்னரும் கூட, சிவாஜியிடம் வேண்டிக் கொள்ள, அவருடைய நிதி உதவியுடன்  வெட்டப்பட்டதுதான் அந்தக் குளம். இப்போது அது பள்ளி விளையாட்டு மைதானமாகி விட்டது. அதன் தென் கரையில் எஞ்சி இருந்த இடிபாடுகளுக்கிடையில் “சிவாஜி மன்னரின் உதவியில் கட்டப்பட்ட குளம்” எனும் ஆங்கிலக் கால்வெட்டு சிதைந்து அழிந்த நிலையில் இன்னும் இருக்கிறது.

பேதுரு ஆலயக் கதவொன்று திறந்திருந்தது. நுழைந்தேன். சமீபத்தில் புதுப்பித்திருந்தார்கள். பழைய ஆலயம் என்பதற்குச் சாட்சியாக ஸ்வார்ட்ஸ், பிளேக் உட்பட பல வெள்ளைப் பாதிரிமார்களின் கல்லறைகளை உள்ளடக்கி தளம் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்வார்ட்ஸ் தொடங்கி இன்று வரை பேதுரு ஆலயத்தின் குருமார்கள் பட்டியலும் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

மாநம்புச் சாவடி பேதுரு ஆலயத்தில் 1770 முதல் 1795 வரை முதல் ஆலய குருவாக ஸ்வார்ட்ஸ் இருந்துள்ளார். 1851 முதல் 1856 வரை ஜி.யு போப் ஆலய குருவாக இருந்துள்ளார். கடைசியாக ஆலய குருவாக இருந்த அய்ரோப்பியர் டபிள்யூ. எச். கேய். இவர் 1778 முதல் 82 வரை குருவாக இருந்துள்ளார். அதன் பின் தமிழர்கள் ஆலய குருக்களாக வருகின்றனர். முதல் தமிழர் ரெவரென்ட் என்.ஞானப்பிரகாசம் (1892 -1920).

#    #    #

CSI_Schwartz_Memorial_Church,_Tanjore

ரெவெரன்ட் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் (1726 -1798) குறித்து நான் முதன் முதலில் அறிந்து கொண்டது ஏதும் வரலாற்று நூல் அல்லது கட்டுரைகளிலிருந்து அல்ல. தமிழ் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவையா அவர்களின் ‘கிளாரிந்தா’ நாவல் மூலம்தான் அவரது பெயரை அறிந்தேன். நிறைய நாவல்கள் படித்து திரிந்த என் இளம் பிராயம் அது.

அந்த நாவல் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. முக நூலில் நான் அது குறித்து விரிவாக எழுதியுள்ளேன். தஞ்சையில் நடந்த அந்த உடன்கட்டை ஏற்றம், ஆங்கில தளபதி ஹாரிஸ் லிட்டில்டன் அந்தப் பார்ப்பன இளம் விதவையைக் காப்பாற்றுதல், பின் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்தல், லிட்டில்டன் மறைவுக்குப் பின் அந்த அம்மை கிளாரிந்தா, திருநெல்வேலியில் முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவஆலயம் அமைத்தல், அடித்தள மக்களுக்காகக் கிணறு வெட்டுதல், பள்ளி ஒன்று அமைத்தல் என வாழ்ந்த அந்த வரலாறு மாதவையா அவர்களின் கரங்களில் அற்புதமான ஒரு புதினமாக உருப்பெற்றது. பாளையங்கோட்டையில் இன்றும் உள்ள அந்த ஆலயத்தை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியவரும் ஸ்வார்ட்ஸ் அவர்கள்தான். கிளாரிந்தா, லிட்டில்டன் ஆகியோரின் கல்லறைகளும் அங்குதான் உள்ளன.

#    #    #

Interiors_of_the_CSI_Schwartz_Memorial_Church,_Tanjore

ஸ்வார்ட்ஸ்  அக்டோபர் 22, 1726ல் அன்றைய பிரஷ்யாவில் இருந்த சோனென்பர்க் எனும் இடத்தில் பிறந்தவர். இன்று அது போலந்தில் உள்ளது. சிறு வயதிலேயே அவருக்கு இப்படியான ஒரு மிஷனரியாக வாழ வேண்டும் என்கிற ஆர்வம் மேலிட்டு அந்தத் துறையில் பயில்கிறார். எழுத்துக் கோர்ப்பு அச்சுக்கலையைத் தமிழுக்கு அறிமுகம் செய்த பார்த்தலேமியஸ் சீகன்பால்குவின் (1682 – 1719) அதே டேனிஷ் மிஷனின் “கிறிஸ்தவ அறிவைப் பரப்புவதற்கான கழகத்தின்” (SPCK) சார்பாக மிஷனரிப் பணிக்கென 1750 ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்கிறார் ஸ்வார்ட்ஸ். சீகன்பால்கு இறந்து 7 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் ஸ்வார்ட்ஸ். அவர் இறந்து 52 ஆன்டுகளுக்குப் பின் அதே தரங்கம்பாடிக்கு வந்து சேர்கிறார். 1750 ஜனவரி 29 அன்று புறப்பட்ட அவரது கப்பல் ஜூன் 17 அன்று கடலூர் துறைமுகத்தை அடைகிறது. பின் அங்கிருந்து தரங்கம்பாடி வந்து சேர்கிறார்.

முன்னதாக ஹாலே பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே  நவீன ஐரோப்பிய மொழிகள் தவிர கிரீக், ஹீப்ரு, லத்தீன் மொழிகள், ஐரோப்பிய மறுமலர்ச்சிச் சிந்தனைகள், தத்துவங்கள் ஆகியவற்றில் ஸ்வார்ட்ஸ் தேர்ச்சி பெற்றிருந்தார். பின் தமிழ் உட்பட தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, தக்கினி உருது, பெர்சியன், கடலோர மக்களின் போர்த்துகீஸ் முதலான உள்ளூர் இலக்கிய மற்றும் வழக்கு மொழிகளிலும் தேர்ச்சி பெறுகிறார்.

டேனிஷ் மிஷனின் பணி குறித்து நான் எனது ஸீகன்பால்கு குறித்த நூலில் விரிவாக எழுதியுள்ளேன். மதப் பிரச்சாரம் தவிர, அச்சுக்கலையை அறிமுகம் செய்தல், பள்ளிகளை உருவாக்கி நவீன முறையில் கல்வியை உள்ளூர் மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் என்பன அவர்களின் முக்கிய பணிகளாக இருந்தன.

ஸ்வார்ட்ஸ்  பாதிரியாரின் எஞ்சிய தமிழக வாழ்வு என்பது திருச்சிராப்பள்ளி, தஞ்சை என முடிந்தது. இடையில் திருநெல்வேலியில் ஒரு சீர்திருத்தக் கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குவாதில் கிளாரிந்தா முதலானோருடன் இணைந்து செயல்பட்டது,  இலங்கை போன்ற பகுதிகளுக்குச் சென்றது ஹைதர் அலியிடம் ஒரு அரசியல் தூதுவராக ஶ்ரீரங்கப்பட்டினம் சென்றது என்பதெல்லாம் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஆயினும் இறுதியில் தஞ்சை என்பதே அவரது நிரந்தர இருப்பிடமாகியது.

ஒரு மிஷனரி, தஞ்சை மன்னர்களின் ராஜ குரு, போர்க்கால மக்கள் சேவகர், எதிரிகளாலும் மதிக்கப்பட்ட சமாதானத் தூதுவர், ஆசிரியர், கல்வியாளர் எனப் பல துறைகளில் மிகவும் ஆழமாகத் தடங்களை இட்டவர் ஸ்வார்ட்ஸ்.

Memorial_Stone_at_the_CSI_Schwartz_Memorial_Church,_Tanjore

1700 கள் என்பன தமிழகத்தில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த கொடுங் காலம், கொஞ்சம் கொஞ்சமாக பிரெஞ்சியரையும் இதர ஐரோப்பியக் காலனிய சக்திகளையும், உள்ளூர் அரசுகளையும் வீழ்த்தி கிழக்கிந்தியக் கம்பெனி தன்னை உறுதியாக்கிக் கொண்ட காலம். போர் அழிவுகள், விவசாயம், உள்ளூர்த் தொழில்கள் அழிதல், கொலை, கொள்ளை. லஞ்சம், ஊழல் எனப் பாழ்பட்டிருந்த காலம். ஒரே நேரத்தில் கம்பெனி அதிகாரமும், அதை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி போன்றோரும் அவரை நம்பினர். தூதுவராக அனுப்புவதென்றால் ஸ்வார்ட்ஸை அனுப்புங்கள் என்றார் ஹைதர். அவரது படைக்குள் ஸ்வார்ட்ஸ் குழுவினர் தங்குதடையின்றி ஊடுருவிச் செல்லவும், போகுமிடங்களில் மதப் பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளித்தார் ஹைதர்.

இத்தகைய மதப் பிரச்சாரகர்களுக்கும் கம்பெனி அதிகாரத்திற்கும், நாமெல்லாம் எதிர்பார்ப்பது போல, பெரிய அளவில் சுமுகமான உறவு இருந்ததில்லை. இவர்களின் மதப் பிரச்சாரம் மற்றும் சமூகப் பணிகள் என்பன தங்களது காலனீயக் கொள்ளைக்கும், அதிகார நிர்மாணத்திற்கும் ஊறு விளைவிக்கும் எனத் தெரிய வரும்போது கடுமையாக அவர்களை எதிர்கொள்ள கம்பெனி நிர்வாகம் தயாராக இருந்தது. இன்று தரங்கம்பாடிக் கோட்டையில் தரைமட்டத்தில் உள்ள சிறைக் கொட்டடிகள் ஒன்றில் சீகன்பால்குவை சுமார் 4 மாத காலம் கோட்டைத் தலைமை அடைத்து வைத்திருந்த வரலாற்றை எனது சீகன்பால்கு பற்றிய குறுநூலில் காணலாம்.

ஆனால் கம்பெனிப் படைகளும் கூட போர்க்காலங்களிலும், போர் முடிந்த தருணங்களிலும் ஒரு போர்ப்படையின் மதகுருவாக மட்டுமின்றி, ஆன்மிகப் பணிகளுக்கும் அப்பால் ஸ்வார்ட்சின் சேவையை எதிர்நோக்கி இருந்தன. போரில் அழிந்திருந்த மக்களும் அவரை நம்பினர். போர் முடிந்தபின் விவசாய நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட விவசாயிகள் திரும்பி வந்து விவசாயம் செய்ய ஸ்வாஎட்ஸ் தன் செல்வாக்கைப் பயன் படுத்தினார். கடனுதவி முதலியன பெறவும் இவரது பரிந்துரைகள் பயன்பட்டன. இவரது பரிந்துரைகளுக்கு அத்தகைய செல்வாக்கும் இருந்தது. போரில் காயமடைந்தோர் மத்தியில் சேவை செய்யவும் இவரால் பயிற்றுவிக்கப்பட்ட உள்ளூர் உதவியாளர்கள் பயன்பட்டனர்.

#    #    #

1762 ல் திருச்சிக்கு வந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாரை அங்கிருந்த இராணுவத் தளபதி மேஜர் ஏ ப்ரெஸ்டன் இராணுவத்தினருக்கு மதச்சேவை செய்ய  (military chaplain) வேண்டிக் கொண்டான். விரைவில் மதப் பிரச்சாரகராக வந்த வர் 100 பவுண்ட் ஊதியத்தில் கிழக்கி இந்தியக் கம்பெனிச் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டார்.

இதற்கிடையில் எங்கெல்லாம் புதிய கிறிஸ்தவச் சமூகங்கள் உருவாயினவோ அங்கெல்லாம் அவரது நவீன பள்ளிகளும் உருவாயின. நவீன கல்வி உருவாக்கத்தில் ஸ்வார்ட்சின் பங்கு குறிப்பிடத்தகதாய் இருந்தது.

1773ல் நவாபின் படைகளால் தஞ்சை சூறையாடப்பட்டபோது அங்கு வந்த ஸ்வார்ட்ஸ் குழுவினர் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மத வேறுபாடுகள் இன்றி அவரது சேவை அடித்தள மக்களைச் சென்றடைந்தது. 1776ல் மீண்டும் மராட்டிய அரசன் துளசாஜி தஞ்சை அரசனான போது அவன் ஸ்வார்ட்ஸை நிரந்தரமாக தஞ்சையில் தங்கிவிடுமாறு வேண்டிக் கொண்டான். தன் உதவியாளர் கிறிஸ்டியன் ஜோசப் பொஹ்லேயை திருச்சியில் நிறுத்திவிட்டு தஞ்சை வந்து போரால் பாதிக்கப்பட்ட தங்களின் பள்ளிக் கட்டிடங்கள், வணக்கத் தலங்கள் ஆகியவற்றைச் செப்பனிடத் தொடங்கினார் ஸ்வார்ட்ஸ். கல்லால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றை அமைக்க மன்னன் துளசாஜியும் உதவினான். 1780 ஏப்ரல் 16ல் கோதிக் கட்டிடக் கலை அம்சத்துடன் இன்றைய தூய பேதுரு ஆலயத்தின் முந்தைய வடிவம் புனிதப்படுத்தப்பட்டது.

1770 களில் திருந்ல்வேலியில் கிளாரிந்தா முதலானோருடன் இணைந்து கிறிஸ்தவச் சமூகம் ஒன்றைக் கட்டமைப்பதற்கென ஸ்வார்ட்ஸ் அங்கு வந்தார். 1778ல் அந்தத் தஞ்சை மராத்தியப் பார்ப்பனப் பெண்மணிக்குத் திருமுழுக்குச் செய்து கிளாரிந்தா எனப் பெயரிட்ட்டார். அப்பகுதியில் இப்படிக் கிறிஸ்தவச் சமூக உருவாக்கத்தோடு கல்விக் கூடங்களும் உருவாயின.

இதற்கிடையில்மீண்டும் தஞ்சையைப் போர் அலங்கோலப்படுத்தியது. மக்களின் துயரங்களுக்கு எதிரிப்படைகள் மட்டும் இன்றி மராட்டிய அரசு அதிகாரிகளும் காரணமாயிருந்ததை அறிந்த ஸ்வார்ட்ஸ் அவர்களைக் களையெடுக்க அரசனுக்கு உதவினார். போர்க் கொடுமைகளால் வெளியேறியிருந்த சுமார் 7000 மக்களும் ஸ்வார்ட்ஸின் அழைப்பை ஏற்றுத் திரும்பி வந்தனர்.

#    #    #

1787 ல் மரணப் படுக்கையில் இருந்த துளசாஜி 10 வயதுள்ள ஒரு உறவுக்காரச் சிறுவனைத் தத்தெடுத்தார். அவனுக்குக் காப்பாளராக (guardian) இருக்க வேண்டும் என்கிற அவனது கோரிக்கையை ஸ்வார்ட்ஸ் ஏற்கவில்லை. துளசாஜியின் மரணத்திற்குப் பின் கம்பெனி உதவியுடன் அமர்சிங் மன்னனானான். தத்துக் குழந்தையைக் கொல்ல அவன் முயற்சித்தபோது ஸ்வார்ட்ஸ் கம்பெனித் தலைமையை அணுகி நிலைமையை விளக்கி கம்பெனியின் அங்கீகாரத்துடன் அந்தக் குழந்தையின் காப்பாளர் ஆனார். அந்தக் குழந்தையைக் கல்வி கேள்விகளில் தேர்ச்சியுற்ற ஒரு அறிஞனாக ஆக்கியதோடு தக்க வயதில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அமர்சிங்கை வெளியேற்றி  துளசாஜியின் தத்துப்பிள்ளையும் தன் வளர்ப்புப் பிள்ளையுமான இரண்டாம் சரபோஜியை அரசனாக்கினார் (1798) ஸ்வார்ட்ஸ். சரஸ்வதி மகால் எனும் அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கிப் புகழ்பெற்ற  சரபோஜி தன்னை இப்படி உருவாக்கிய ஸ்வார்ட்ஸை எந்நாளும் மறக்கவில்லை.

மரணப்படுக்கையில் சரபோஜியை அழைத்து ஆசீர்வதித்தார் ஸ்வார்டஸ். வளர்ப்பு மகனின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. சிற்பி ஃப்லாக்ஸ்மென் இக்காட்சியைச் சிலை வடிவமாக்கியுள்ளார்.

ஸ்வார்சுக்கு நடந்த நினைவஞ்சலியில் தன் நினைவுகளை சரபோஜி மன்னன் ஆங்கிலத்தில் கவிதையாக வாசித்தான்.

அதன் சில வரிகளை ஸ்வார்ட்ஸ் புதைக்கப்பட்ட கல்லறை மீது நான் இன்று படிக்க நேரிட்டபோது ஒரு மன்னன், ஒரு மதப்பிரச்சாரகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு ஒரு கணம் என்னை நெகிழ்த்தியது.

அந்த வரிகள்…

Firm Was Thou Humble and Wise,

Honest, Pure, Free From Disguise,

Father of the Orphans, the Widows

Support

 

Comfort in Sorrow of Every Sort

To the Benighted Dispenser of Light,

Doing and Pointing That Which

Is Right,

 

Blessings to princes to People to Me,

May I my Father be Worthy of Thee,

Wishes and Prayeth Thy

 

  • Sarabojee