மணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 27                    

அளவை வாதம் (பிரமாணங்கள்) தொடங்கி, சைவம், பிரமவாதம், வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டவாதம், சாங்கியவாதம், வைசேடிகம், பூதவாதம் என அன்று தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்ட இந்தப் பத்து மதங்கள் குறித்தும் அடுத்தடுத்து உரையாடல்கள் மூலமாக மணிமேகலை அறிந்துகொண்டாள் ஆயினும் இறுதியில் ஐவகைச் சமயமும் அறிந்தனள் எனச் சாத்தனார் அவற்றை ஐந்து மதங்களாகச் சுருக்கி முடிப்பதற்கு வேறு சில விளக்கங்களையும் உரை ஆசிரியர்கள் கூறுகின்றனர். அளவைவாதம், சைவம், பிரமவாதம், வைணவம், வைதிகம் ஆகியவற்றை ஒன்றாகவும், ஆசீவகத்தையும் நிகண்டவாதத்தையும் ஒன்றாகவும், ஏனைய சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய மூன்றையும் தனித்தனியாகவும் கொண்டு ஐவகைச் சம்யங்கள் எனச் சாத்தானார் கூறியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாம்சம் ஆகியவற்றை அறுவகைச் சமயங்கள் எனப் பொதுவில் குறிக்கப்படுவதை அறிவோம். இதில் பௌத்தம் தவிர்த்த மற்றவற்றை ஐவகைச் சமயங்கள் என சாத்தனார் குறித்தார் எனச் சொல்வதும் உண்டு. அப்படியாயின் இங்கு உரையாடல்களுக்கு உள்ளாகும் இந்தப் பத்தையும் எவ்வாறு ஐந்தாக வகைப்படுத்துவது? அளவை வாதம், சைவம், வைணவம் ஆகியன நையாயிகத்திற்குள்ளும், பிரமவாதம், வேதவாதாம் ஆகிய இரண்டையும் மீமாம்சகத்திற்குள்ளும், பூதவாதத்தை உலகாயதமாகவும் அடக்கி ஐவகைச் சமயம் என அன்றைய வழக்கு கருதி சாத்தனார் கூறினார் எனக் கொள்ளல் வேண்டும் என்பார்கள் இந்த விளக்கத்தை அளிப்பவர்கள். ஆனால்ஆசீவகமும், நிகண்ட வாதமும் இவ் விளக்கத்தில் அடங்காது.வஞி 1

“ஆற்றுளிக் கிளந்த அறுவகைச் சமயமும்” எனபெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் குறிப்பிடுவதும் (பெருங்கதை 1.36-242) இங்கே கருதத்தக்கது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது இக் காப்பிய காலகட்டத்தில் இருந்த இந்த அறுவகைச் சமயங்கள் என்பனவற்றில் முந்தைய பாசுர காலச் சமயங்களிற் சிலவான பாசுபதம், கபாலிகம் முதாலானவை அருகிவிட்டன என்பது விளங்குகிறது. வைதிகம் என்பது சைவமாகவும், வைணவமாகவும் பிரிந்து நிற்பதும் புரிகிறது. அளவைவாதமும் பின் முற்றாக மறைந்துவிடுகிறது. மணிமேகலையில் காணப்படும் இந்தச் சமயங்களுள் பௌத்தம் இங்கு இன்று சொல்லத்தக்க அளவில் இல்லையென்ற போதிலும் சீனம், ஜப்பான், இலங்கை, தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் அது செழித்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் சமணம் (நிகண்ட வாதம்) ஒரு சிறிதளவு தன் இருப்பைத் தக்கவைத்துள்ளது. தமிழகத்தில் ஏராளமான சமணக் கோவில்கள் இன்றும் உள்ளன. வந்தவாசி பகுதி இதில் குறிப்பிடத் தக்கது. சுமார் நாற்பதாயிரம் சமணர்கள் தமிழகத்தில் தர்போது உள்ளனர். வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னூர் மலையில் திருவள்ளுவரின் பாதகமலங்கள் வடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. வள்ளுவரை அவர்கள் ஆசார்யஸ்ரீ குந்தகுந்தர் என அழைக்கின்றனர்.

இனி மணிமேகலையைத் தொடர்வோம்.

சமயக்கணக்கர்களின் திறன்கேட்டறிந்த மணிமேகலைக்குத் “தாயரோடு அறவணர்” நினைவு வருகிறது. தாயர் எனப் பன்மையாய்க் குறிப்பிடுவதிலிருந்து அவள் சுதமதியையும் ஒரு தாயாகவே மதிப்பதை விளங்கிக் கொள்கிறோம். வஞ்சி மாநகரின் அரணைச் சுற்றியமைந்த ஆரவாரம் மிக்க புறஞ்சேரியை மணிமேகலை கடந்து சென்ற காட்சியைச் சாத்தனார் விரிவாகச் சொல்கிறார். காப்பியத்திற்குரிய மிகைக் கூறுகளுடன் கூடியதாயினும் அக்கால நகர்ப்புற வாழ்வைப் புரிந்துகொள்ள இப்பகுதி நமக்குப் பயன்படும்.

அரணைச் சுற்றியுள்ள அகழியில் விடப்பட்டுள்ள மீன்கள், முதலைகள் முதலான நீர் வாழ் இனங்கள் அவற்றுக்குரிய புலால் நாற்றமின்றி நறுமணத்துடன் திகழ்ந்தாகச் சாத்தானார் குறிப்பிடுவார். நகர்ப்புறத்திலுள்ள வீடுகள் மற்றும் தொழுகைத் தலங்களிலிருந்து நீர்த்தூம்புகளின் வழியே ஓடிவரும் வாசனைத் திரவியங்கள் செறிந்த நீரே அதற்குக் காரணம் என்பார் புலவர். நீர் தேங்காமல் ஓடுமாறு எந்திரங்கள் பொருத்தப்பட்ட நீர்வாவிகள், பகைவர் மீது ஆயுதங்களை  எறியும் பொறிகள் அமைக்கப்பட்ட கோட்டைக் கதவுகள், அழகிய மலர்கள் பூத்துக் கிடக்கும் அகழி நீர் எனக் கவித்துவ விவரணங்களுடன் கூடிய பகுதி இது. மன்னவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், ஆங்காங்கு நீர்ப்பந்தல்கள், பூசிக் குளித்த வாசனைத் திரவியங்கள் வழிந்தோடி வரும் வளம்மிக்க இல்லங்கள், கைகளிலிருந்து மணம் மிக்க நீர் சொட்டும் பௌத்த உபாசகர்கள் நிறைந்த அந்த நகர்ப்புறத்திலிருந்து ஓடிவரும் அந்த நீரெல்லாம் வடியும் அகழி சூழ்ந்த பிரும்மாண்டமான கோட்டைக் கதவின் வழியே நகரினுள் புகும் மணிமேகலை காணும் நகரக் காட்சி இங்கே குறிப்பிடத் தக்க ஒன்று. காவற்காடுகளைத் தாண்டித்தான் அந்தக் கோட்டையை அணுக முடியும்.

நகருக்குள் நுழைந்தவுடன் காணப்படுவது காவலர்களின் இருப்பிடங்கள் அமைந்த அகன்ற வீதி. தொடர்ந்து மீன் மற்றும் உப்பு வணிகர்கள், கள் விற்கும் பெண்கள்,, பிட்டு, அப்பம் முதலான உணவுப் பொருட்களை விற்போர், இறைச்சி, வெற்றிலை, வாசனைப் பொருட்கள் விற்போர் ஆகியோரது வீதிகள் அமைந்துள்ளன. இப்படியான காட்சி மதுரைக் காஞ்சி முதலான சங்க நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் உண்டு. அடுத்து சாத்தனார் பல்வேறு தொழிலாளிகளின் வீதிகள் அமைந்துள்ளதைப் பதிகிறார். இருங்கோவேள்கள் எனப்பட்ட மண்கலங்கள் ஆக்கும் குயவர்கள், செப்புப் பாத்திரங்கள் செய்வோர், வெண்கலக் கன்னார்கள் (கஞ்சகாரர்), பொன்செய் கொல்லர் ஆகியோரது வீதிகள் உள்ளன. மரத் தச்சர், சுண்ணாம்பு (சுதை) முதலான மண் கொண்டு உருவங்கள் சமைப்போர், வரந்தரு கடவுள் உருவம் வடிக்கும் சித்திரக்காரர், தோலைப் பதனிட்டுப் பொருட்கள் செய்வோர், தையற் கலைஞர்கள், மாலை தொடுப்போர், காலத்தைக் கணித்துச் சோதிடம் சொல்வோர், பண்ணும் இசையும் அறிந்த பாணர்கள்- என இப்படி அடுத்தடுத்து அமைந்த பலரது வீதிகளையும் பட்டியலிடுவார் புலவர்.

அடுத்து அரம் கொண்டு சங்கை அறுத்து அணிகலன் செய்வோரும் முத்துக்களைக் கோர்த்து ஆபரணங்கள் வடிப்போரும் சேர்ந்து வாழும் தெரு குறிப்பிடப்படுவதைக் காணும்போது., இதுகாறும் சொல்லப்பட்ட பல்வேறு தொழிலாளி மற்றும் வியாபாரிகளின் வீதிகள் தனித்தனியே இருந்தன என்பது உறுதியாகிறது.. அரம் கொண்டு அறுத்து வளையல்கள் செய்யும் வேதம் ஓதாத பார்ப்பனர்கள் குறித்து சங்கப் பாடலொன்றில் உள்ள பதிவு ஒன்று இங்கு ஒப்பு நோக்கத் தக்கது (“வேளாப் பார்ப்பான் வாள் அரந் துமித்த வளை”- அகம். 24).

அடுத்து உயர்ந்தோர்க்கு ஆடும் கூத்து (வேத்தியல்), மற்றும் ஏனைய சாதாரண மக்களுக்கு ஆடும் கூத்து (பொதுவியல்) ஆகிய இரண்டின் தன்மையும் அறிந்த நாட்டிய மகளிர் மறுகும் வீதி குறிப்பிடப்படுகிறது. இப்படி கூத்து உயர்ந்தோர்க்கானது, சாதாரண மக்களுக்கானது என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலை அப்போது இருந்ததை மணிமேகலை பிறிதோரிடத்திலும் குறிப்பிடுகிறது (2.18).

எண்வகைத் தானியங்களும் தனித்தனியே குவிக்கப்பட்டுள்ள கூலக் கடைத்தெரு, சூதர் மற்றும் மாதகர் வசிக்கும் தெரு ஆகியன அடுத்து காணப்படுகின்றன. சூதர் எனப்படுவோர் ‘நின்றேத்துபவர்’ எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் அவ்வப்போது அரசனின் பெருமைக்குரிய செயல்களைப் புகழ்ந்து பாடுபவர்கள். அரசன் துயிலெழும்போது இசைப்போரும் இவர்களே. மாதகர் என்போர் ‘இருந்தேத்துபவர்’. இவர்கள் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடுவோர். அடுத்து கூறப்படுவது போகத்தை வாரி வழங்கும் பொதுமகளிர் வசிக்கும் தெரு. நாட்டிய மகளிரையும் பொது மகளிரையும் இவ்வாறு தனித்தனியே பிரித்துரைப்பதும், அவர்கள் தனித்தனி வீதிகளில் வசிப்பதும் கவனிக்கத் தக்கன.

நூலால் நெய்யப்பட்டவை எனக் கண் பார்வையில் கண்டறிய இயலாத அளவிற்கு நுண்மையான வண்ண ஆடைகளை நெய்வோர், பொன்னை உறைத்து அது மாத்துக் குறையாததா எனக் காணும் பொற்திறன் காண்போரின் மனைகள் இருக்கும் வீதிகள், பல்வகை மணிகளை விற்போரின் வீதிகள் சொல்லப்படுகின்றன.4

அடுத்து மறையவர்களின் அருந்தொழில் குறையாது விளங்கும் தெரு, அரசாளுகை மற்றும் அமைச்சியல் ஆகிய பெருந்தொழில் செய்வோர்களின் வீதிகள் உள்ளன. வேதம் ஓதுதல் அருந்தொழிலாகவும், அரசாளுகை பெருந்தொழிலாகவும் போற்றப்பட்டு அவர்கள் வாழும் வீதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளதையும் காண்கிறோம். தொடர்ந்து நகர்மன்றங்கள், அம்பலங்கள், சந்திகள், சதுக்கங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

இறுதியாகப் புதிதாகக் கொணரப்பட்ட யானைகளையும், பொன்மணிகள் சூடிய குதிரைகளையும் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களின் அழகிய வீதி ஆகியவற்றைக் கண்டவாறே சென்றாள் மணிமேகலை.

மிக்க உயரத்திலிருந்து அருவி ஒன்று தாழ வீழுமாறு வடிக்கப்பட்ட ஒரு செய்குன்று, மிக்க ஆர்வத்தை ஊட்டும் நறுமணச் சோலை, தேவர்களும் கூடத் தம் வானுலகை மறந்து வந்தடைய நினைக்கும் நன்னீர் இடங்கள், சாலை, கூடம், பொன்னம்பலம், கொள்கைகளை விளக்கி வரையப்பட்ட காட்சிகள் என எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்தாள் மணிமேகலை என்று வஞ்சி நகர அமைப்பை விளக்கி முடிக்கிறார் சாத்தனார்.

ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் ஒரு நகரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிய நமக்கு இக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றன. சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவூரெடுத்த காதை’ இத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது. அது புகார் நகர அமைப்பை விரிவாகச் சொல்கிறது. மணிமேகலையின் இக்காதையில் விளக்கப்படும் வஞ்சிமாநகருக்கும், சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூரெடுத்த காதையில் விளக்கப்படும் நகர அமைப்பிற்கும் ஒற்றுமைகளும் உண்டு, வேறுபாடுகளும் உண்டு. அது இயற்கையே. ஒரு நகரைப் போலவே மற்றோர் நகரம் அமைய இயலாது. அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தில் அருகருகே உள்ள இரு நகரங்களுக்கும் இடையே பல பொதுமைகளும் இருக்கத்தான் செய்யும்.

சேர மன்னர்களின் தலைநகரமான வஞ்சி நகர் எங்கிருந்தது என்பது இன்னும் உறுதியாகசக் கண்டறியப்படவில்லை.. கொங்குநாட்டுக் கரூர், கொடுங்காளூர் முதலியனதான் வஞ்சியாக இருந்திருக்கலாம எனக் கூறப்படுகிறது. இன்றைய திருவனந்தபுரம் அருகில்தான் வஞ்சி இருந்ததெனச் சொல்வாரும் உண்டு. இளங்கோவடிகளின் காவிரிப்பூம்பட்டினத்தையும் (புகார்), சாத்தனாரின் வஞ்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரு நகரங்களிலும் செழித்திருந்த பல்வேறு தொழில்கள் குறித்து பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. சில அதே சொற்களாலேயே குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு தொழில் செய்பவர்களும் அங்கிருந்தனர் என்றாலும் தொழில் ரீதியாக அவர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர் என்பது விளங்குகிறது. ஒரே தொழில் செய்தோர் ஒரே இடத்தில் குவிந்திருந்த நிலை என்பதும் தொழில் ரீதியாக மக்கள் குறிப்பான பெயர்களில் அடையாளம் காணப்பட்டதும் செய்தொழில் அடிப்படையில் சாதிகள் கட்டமைக்கப்பட்டதை உறுதி செய்கின்றன.

இரு காப்பியங்களிலும் காணக் கிடைக்கும் இரு நகரங்களையும் ஒப்பிடும்போது தெரியும் ஒரு வேறுபாடு இங்கே கருதத்தக்கது. இளங்கோவடிகளின் புகார் நகரில் வெளிநாட்டார் குடியிருப்பு, குறிப்பாக யவனக் குடியிருப்பு சுட்டப்படுகிறது. பல்வேறு தொழில் செய்வோர்கள் குறித்து நாம் இவ்விரண்டு நூல்களிலும் காணும் ஒற்றுமையை வெளிநாட்டார் குடியிருப்பில் காண இயலவில்லை. அப்படியான குடியிருப்புகள் எதுவும் சாத்தனாரின் வஞ்சியில் சுட்டப்படவில்லை. இதனூடாக சேரநாட்டின் தலைநகராகக் கருதப்படும் வஞ்சிமாநகர் ஒரு கடற்கரை நகரமல்ல எனும் முடிவுக்கு நாம் வர ஏது உண்டு.

இரண்டு காப்பியங்களிலும் காணப்படும் இந்த வேறுபாடு போல இன்னொரு ஒற்றுமையும் இங்கே குறிப்பிடத் தக்கது. இரண்டிலும் புத்த சேதியங்கள் இருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் பௌத்த வணக்கத் தலங்களோடு சமண ஆலயங்களும் இருந்ததை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். சங்க காலத்திற்குப் பிந்திய தமிழகத்தில் பௌத்த, சமண அவைதீக மதங்களின் இருப்பிற்கும், அவை பெரிய அளவில் மக்கள் ஆதரவு பெற்றிருந்தமைக்கும் இன்னொரு சான்றாக இது அமைகிறது.

சங்க காலத்திற்குப் பிந்திய அப்படியான மாற்றங்களில் ஒன்றுதான் புதிதாகக் காஞ்சிமாநகரம் மேலெழுவது. இது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்கும் முன்பாக வஞ்சியில் நின்று கொண்டுள்ள மணிமேகலையைத் தொடர்வோம்.

தான் கொண்டிருந்த தவமுனி வேடத்துடனேயே வான்வழி பறக்கும் அந்தரசாரிகள் விரும்பிச் சென்று இனிது உறையும் இந்திர விகாரம் போன்ற எழிலுடன் விளங்கும் பௌத்த பள்ளி ஒன்றுக்குச் சென்றாள் மணிமேகலை. குற்றங்களை அறுத்த புத்தனின் நன்னெறிகளை விளக்கி உரைப்போர் உறையும் அறச்சாலை அது.

அங்கே அவள் இப்போது தவநெறி ஏற்று வாழும் தன் தாத்தாவும், கோவலனைப் பெற்றவனுமான மாசாத்துவானைக் கண்டாள். அந்த மாதவனின் பாதம் பணிந்து தான் பாத்திரம் கொண்டு உலகோர் பசியறுத்து வருதலையும், அப்பணியைத் தன் முற்பிறவியிற் செய்த ஆபுத்திரன் இன்று உலகாளும் நிலை பெற்றிருப்பதையும்,  அவனைச் சந்தித்துத் தான் மணிபல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்று அவன் முற்பிறப்பு உணர்த்தியது, காவிரிப்பூம்பட்டினம் அழிந்ததை ஒட்டி அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் வஞ்சிக்கு வந்துள்ளதைத் தான் அறிந்தது, வஞ்சியில் தான் சமயக் கணக்கர் திறம் கேட்டறிந்தது, எனினும் அவற்றில் தான் நம்பிக்கை கொள்ளாதது, இனி தான் புத்த நெறியை அறிந்துய்ய அறவண அடிகளைத் தேடி அங்கு வந்தது எல்லாவற்றையும் விளக்கினாள்.

(அடுத்த இதழில்  மணிமேகலை அறவணருடன் காஞ்சி சென்று தவத்திறம் பூண்டு புத்த தருமம் கேட்ட கதை)