இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’

 நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  26                                                    

ஆசீவகவாதியின் கருத்துக்களத் தொகுத்துக் கொண்டோம். இந்நெறியை முன்வைத்த மற்கலி கோசலர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் என்பதால் கோசலர் எனப் பெயர் பெற்றார் என்பர். மற்கலி என்பதற்கு “இடறி விழாதே” ((மா – கலி) எனப் பொருள்கொண்டு அவாறு அவர்தம் சீடர்களுக்கு அறிவுரைத்ததால் அப்பெயர் பெற்றார் எனக் கூறுவதுமுண்டு. “எதுவும் செய்யாது சும்மா இரு” என்பது ஆசிவகர் கோட்பாடு. என்னும் பொருளில் “மோனாந்து இருந்தனன்” என நீலகேசி ஆசீவகர் குறித்துக் கூறுவதும் குறிப்பிடத் தக்கது.

ஆசீவகரை விட்டு அடுத்து நிகண்டவாதியை நோக்கி மணிமேகலை அகல்வதைக் குறிக்கும் இடத்தே “சொல்தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு” என்பார் சாத்தனார். இதனூடாக ஆசீவகர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்கள் என அவர் கருதுவதை அறிகிறோம். ஆசீவகன் தன் நெறியை விளக்கும்போது முதலில், “நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின், மலை,மரம், உடம்பு எனத் திரள்வதும் செய்யும்” ((27: 116-117) எனக் கூறுவதையும் அடுத்துச் சில வரிகளில் (27 :129) “முது நீரணு, நில அணுவாய்த் திரியா” என அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதில்லை எனச் சொல்வதையும் ஒப்பிட்டுக் காட்டி, அந்த அடிப்படையில் ஆசீவகர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறவர்கள் எனச் சாத்தனார் கூறுவதாக உரையாசிரியர்கள் இதற்கு விளக்கம் அளிப்பர்.

நிகண்டவாதி

மணிமேகலை அடுத்துச் சந்திக்கும் நிகண்டவாதியை ‘நிக்கந்தவாதி’, ‘நிர்க்கிரந்தவாதி’ என்றெல்லாம் குறிப்பிடுவர். ‘நிக்கிரண்டம்’ என்பதற்கு அம்மணம், ஆடையின்மை எனப் பொருள். எனவே இவர்களைச் சமணர்களுள் ஒரு பிரிவினரான திகம்பரர் எனக் கூறுவதுமுண்டு. “ஆசீவக வாதமும் நிகண்ட வாதமும் ஒருவகையினும் அடங்கும்” என உ.வே.சா குறிப்பிடுவார்.

நிகண்டவாதியை அணுகிய மணிமேகலை அவனது தலைவன் யார் எனவும் அவனது நூற்பொருள், அதன் வரலாறு, அது முன்வைக்கும் கட்டு (பந்தம்), அந்தக் கட்டிலிருந்து விடுதலை பெறல் ஆகியவற்றை விளக்கிக் கூறச் சொன்னவுடன் அவன் தொடங்குவான்.

“எம் இறைவன் இந்திரர்கள் அனைவராலும் வணங்கப்படுபவன். தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், காயம், காலாகாயம், தீதற்ற சீவன், பரமாணுக்கள், நல்வினை தீவினை, அவ்வினைகளால் உருவாகும் பந்தம் (கட்டு), வீடுபேறு ஆகிய பத்தும் அவன் தந்த ஆகமப் பொருள். அப்[பொருள் அதன் தன்மையிலும், அது தோன்றும்போதுள்ள சார்பின் தன்மையிலும் நிலைத்தும் நிலையற்றும் நின்று, நுனித்து அறியப்படும் பண்பினால் ஒர் கணத்திற்குள்ளேயே தோன்றுதல், நிலை பெறுதல், கெடுதல் எனப்படும் மாற்றற்கரிய மூன்று இயல்பும் உடைத்தாகும்.

வேம்பின் முளை வேம்பாக முளைப்பதே நித்தியம். அப்படி முளைத்த வேம்பில் அதன் ஆதாரமாக அமைந்திருந்த வித்து அழிவதே அநித்தியம். பயறை வேகவைத்துக் கும்மாயம் (பாயசம் போன்ற ஒரு உணவு) காய்ச்சும்போது அப்பயறு அழியும். எங்கும் அமைந்திருந்து அனைத்தையும் அவ்வவற்றின் வினைகளுக்கு ஏற்ப செயற்படுத்துவதே ஏது தர்மாத்தி காயம் ஆகும். இப்படி ஒவ்வொன்றையும் அவ்வவற்றின் இயல்பில் நிற்க வைப்பதே அதன் மாத்தி காயம் எனப்படும். ‘கணிகம்’ எனும் குறு நிகழ்ச்சி, ‘கற்பம்’ எனும் நெடு நிகழ்ச்சி என கால அளவைகளை உண்டாக்குவதே ‘காலம்’ எனப்படும். எல்லாப் பொருள்களும் அமைய விரிந்து இடமளிக்கும் செயலிற்குரியதே ‘ஆகாயம்’. உடம்போடு ஒத்திருந்து தூய சுவை முதலான புலன்களை உணர்வதே ‘சீவன்’ ஆகும்.

‘புற்கலம்’ என்பது ‘பரமாணு’ எனப்படும் ஒற்றை அணு. அதுவே பொருள்களின் புற உருவமும் ஆகும். நல்வினை, தீவினை இரண்டையும் ஆற்றும்., முன்செய்த அரிய வினைகளின் பயன்களை அனுபவித்துக் கழித்தலே வீடுபேறு ஆகும்”

– எனத் தன் சமயப் பொருளை விளக்கி முடிப்பான் நிகண்டவாதி. அதன்பின் சாங்கிய நெறியாளன் தன் சமய உண்மைகளைச் சொல்லத் துவங்குகிறான்.

சாங்கிய நெறி

பகுத்தறிதல் எனப் பொருள்படும் ”சங்க்யா’ எனும் வேர்ச்சொல்லின் அடியாக உருவானதே ‘சாங்க்யம்’ எனும்சொல். ‘பிரகிருதி’ எனும் ஒரே மூலத்திலிருந்து உலகம் தானாகவே பரிணாமம் அடைந்தது எனக் கூறுவதே சாங்கியம். எனவேதான் அதனை ‘பரிணாமவாதம்’ எனவும் ‘சுபாவவாதம்’ எனவும் கூட அழைப்பதுண்டு. இயல்பாய்த் தோன்றியதே உலகு என்கிற வகையில் இங்கே கடவுள் தேவையற்றவர் ஆகிறார். இனி மணிமேகலையில் சாங்கியவாதி கூறுபவற்றைக் கேட்போம்.

“இதுதான் சாங்கிய மதம்” எனச் சொல்லி வருபவன் ‘மூலப்பகுதி’ எனச் சாத்தனாரால் குறிப்பிடப்படும் பிரகிருதியை விளக்கியவாறு தொடங்குவான்.

“தன்னை இத்தன்மையானது என அறிதற்கு அரியதாகவும், தானே மூவகைக் குணங்களாகவும், அது குறித்த மன நினைவுகளும் இல்லாததாய், மாண்புமிக்க பொது நிலையாய் இருந்து எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமானது எதுவோ அதுவே மூலப் பகுதி ஆகும்.

சித்தம் எனும் இம்மூலப் பகுதியிலிருந்து ‘மான்’ எனக் கூறப்பட்ட புத்திதத்துவம் வெளிப்படும்; அதிலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து வாயுவும், அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும் வெளிப்படும். நீரிலிருந்து நிலம் வெளிப்பட்டுப் பின் அக் கூட்டத்திலிருந்து ‘மனம்’ வெளிப்படும்.

ஆரவாரம் நிறைந்த. அம்மனத்திலிருந்து எழும் ஆங்கார விகாரம், ஆகாயத்தினாலே செவிக்கு அமையும் ஒலி விகாரம், வாயுவினாலே தோன்றும் ஊறு எனும் விகாரம், நெருப்பினாலே கண்ணுக்குத் தோன்றும் ஒளி விகாரம், நீரினால் நிகழும் வாய்ச் சுவை எனும் விகாரம், நிலத்தினால் மூக்குக்குப் புலனாகும் நாற்றமாகிய விகாரம், என்றெல்லாம் சொல்லப்படும் இவற்றுள் மெய்யின் விகாரமாய் வாய், கால், கை, பாயுரு (ஆசனவாய்) உபத்தம் (பிறப்புறுப்பு) என உண்டாகிய இந்த ஐந்தும் வெளிப்படும். இங்கு கூறப்பட்ட பூத விகாரத்தால் மலை, மரம் முதலியனவாகச் சொல்லப்பட்ட எல்லாமே வெளிப்பட்டு, உலகம் நிகழும். பின் அவை அவையும் தாம் வந்தவழியே சென்று அடங்கி, முடிவற்ற பிரளயமாய் ஒடுங்கும்.காலை, ஒன்றாகி எங்கும் பரந்து நித்தியமாகும்.

அறிந்து கொள்ள எளிதாய்,, சாத்விகம், இராட்சதம், தாமசம் எனப்படும் முக்குணங்களும் இல்லாததாய், ஐம்புலன்களும் உணர்விக்கும் பொதுத் தன்மையும் இல்லாது, எப்பொருளும் தோன்றுதற்கு இடமில்லாததாகவும் ஆகி, அப்பொருள்களை எல்லாம் அறிவதற்கான உணர்வாகி, ஏகமாய் எங்கும் பரந்து என்றென்றுமாக நின்று உள்ள உணர்வாக நிலவுவதே புருட தத்துவம்.

இந்தப் புருட தத்துவத்தாலே அறிய[ப்படும் பொருள்கள் இருபத்தைந்து. அவை: நிலம், நீர், தீ, வளி எனப்படும் பூதங்கள் ஐந்து; மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் புலன்கள் ஐந்து; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் உணர்வுகள் ஐந்து, வாக்கு, கை, கால், பாயுரு’  உபத்தம் எனும் ஐந்தும், மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் எனும் நான்கும், இவற்றுடன் உயிர் என ஒன்றும் சேர்ந்து ஆக அவை இருபத்தைந்து பொருள்களாம்.”

எனச் சாங்கியவாதி சொன்னவற்றைக் கேட்டுக் கொண்ட மணிமேகலை அடுத்து வைசேடிக வாதியை அணுகினாள்.

வைசேடிக வாதி

“நின் வழக்கு உரை” என மணிமேகலை கேட்டதும் வைசேடிகவாதி தொடங்கினான்.

“பொய்மையற்ற பொருள் (கெடாத பொருள்), குணம், கருமம் (செயல்), சாமானியம் (பொதுவானவை), விசேடம் (சிறப்பானவை), கூட்டம், (சமவாயம்) எனப் பொருள்கள் ஆறு வகைப்படும்.

இவற்றுள் முதலாவதாக அமையும் .பொருள் என்பது குணமும் தொழிலும் உடையதாகவும், அதன் தொகுதியில் உள்ள பொருள்கள் வகைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயும் அமையும். அப் பொருள்கள் ஒன்பது வகைப்படும். அவை: ஞாலம் (நிலம்), நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் என்பன. இவற்றுள் ஞாலம் என்பது, ஒலி, ஊறு (ஸ்பரிசம்), நிறம், சுவை, நாற்றம் என்கிற ஐந்து குணங்களும் கூடியது. ஏனைய நீர், தீ, காற்று, விண் என்கிற நான்கும் ஓவ்வொரு குணம் குறைவுடையன.

ஓசை, தொடு உணர்வு (ஸ்பரிசம்), நிறம், நாற்றம், சுவை என்பனவும் குற்றமற்ற பெருமை, சிறுமை, வன்மை, மென்மை, சீர்மை, நொய்ம்மை, வடிவம் எனப்படும் பண்புகளும், இடம், வலம் எனும் பக்கம், மேன்மை, கீழ்மை, முன்மை, பின்னம் முதலான அனேகமும் கூறப்பட்ட பொருள்களின் குணங்களாகும்.

பொருள், குணம் எனும் இரண்டும் கருமம் (செயல் அல்லது தொழில்) மேற்கொள்வதற்கு உரியன. பொருள்களின் உண்மைத் தன்மையை உணர்த்துவனதான் முதன்மையான பொதுவாகும். போவதும் நிற்பதும் எல்லாப் பொருள்களுக்கும் பொதுக்குணம். அதுபோல சாதலும், நிகழ்தலும் (இருத்தலும்) அவ்வப் பொருளின் (முதன்மையற்ற) பொதுத்தன்மை. இது சாமானியம். சிறப்பு (விசேடம்) என்பது பொதுவானதாக அன்றி ஒன்றுக்கே உரிய சிறப்புத் தன்மைதான்.

கூட்டம் (சமவாயம் / ஒற்றுமை) ஆவது குணமும் குணியும்தான்”

– என வைசேடிகவாதி தன் நெறியை விளக்கி முடித்தான்.. அப்போது அங்கு வந்த பூதவாதியை நோக்கி, “நீ சொல்” என்றாள் மணிமேகலை..

பூதவாதி

பூதவாதி தன் நெறியுரைக்கலானான்.

“ஆத்திப்பூ, வெல்லம் ஆகியவற்றை இன்னும் பல பொருட்களுடன் கலந்து களியூட்டும் மது பிறந்ததுபோல பொருத்தமான பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். எனினும் அப்பூதங்களின் கூட்டம் கலையும்போது பறை ஓசை ஒன்று செல்லச் செல்ல தேய்ந்து மறைந்தாற்போல அதுவும் தேய்ந்து மறைந்து தன் முதலோடு இணைந்து விடும்.

உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதமும், உயிரற்ற உணர்வற்ற பூதமும் அந்தந்தப் பூதங்களின் வழியாகவே அவை அவை பிறக்கும். உண்மை இதுவே. இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாதயர்களின் உணர்வுதான். காட்சி அளவை அல்லாது வேறு கருத்துக்கள் நிலை பெறாது அழியும் என்பதால் நாங்கள் ஏற்பதில்லை. இவ்வாழ்வும், இவாழ்வின் பயன்களும் இப்பிறப்போடு கழியும். மறு பிறவி உண்டென்றும், இப்பிறவியின் வினைப்பயன்களை அப்பிறவியில் நுகர வேண்டும் என்பதும் பொய்”

-என்று முடித்துக் கொண்டான் பூதவாதி.

எல்லா மார்க்கங்களையும் அவரவர்தம் வாயாற் கேட்ட மணிமேகலை, “இவை நன்றல்ல என்றபோதும் நான் இவற்றை மறுத்தொன்றும் கூறேன். தான் பிறந்த முற்பிறவியை அறிந்தார் உண்டோ என்ற பூதவாதியின் கருத்தைக் கேட்ட மணிமேகலை அவ்வாறு தன் முற்பிறப்பை அறிந்திருந்த தன்னிடமே அவன் இப்படிக் கூற நேர்ந்ததை எண்ணி நகைத்ததோடு, அதை, அவனிடம் அதைச் சுட்டிக் காட்டவும் செய்தாள்.

“தெய்வ மயக்கத்தாலும், கனவு காணும் திறத்தாலும் மையலுறுவோரின் உரைவகை உன்னுடையது. இது ஐயத்திற்கு இடமாகிறதே ஒழிய உண்மை ஆகாது” என அவன் பதிலுறுத்தான்.

அதற்கு, “உன் தந்தை தாயரை அனுமானத்தில் அல்லாது நீ வேறெப்படி அறிவாய்? மெய்யுணர்வுக்கு ஏதுவான அனுமானம் முதலான அளவைகளால் (தர்க்கங்களால்) அன்றி மெய்ப்பொருள்கள் பலவற்றையும் எவ்வாறு அறிவாய்? ஐயம் என்று உரைப்பதன்றி, இதன் உண்மையை நீ அறியப் பெறாதவன் ஆகிறாய்”- எனத் தன்னை மறைத்திருந்த ஆண் கோலத்திலேயே நின்று தன் கருத்தைச் சொல்லிய மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்தவள் ஆயினள்.

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை இத்துடன் நிறைவுறுகிறது.

பெரும் புலவராக மட்டுமின்றிப் பேரறிஞராகவும் தமிழ்ப் பாரம்பரியத்தில் வெளிப்படும் சாத்தனார் இவ்வாறு தமிழ் மண்ணில் அக்காலத்தே சமயக் களத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உரையாடல்களைத் தொகுத்து அளிக்கிறார். இந்தியத் தத்துவங்களை ஒரே தொகுப்பில் அளிக்கும் ஒப்பற்ற ஆக்கம் என மாதவாச்சார்யரின் ‘சர்வ தர்சன சங்கிரகம்’ எனும் நூலைச் சொல்வர். 14ம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் செழித்திருந்த பதினாறு இந்தியத் தத்துவங்களை அது ஒரே நூலில் அருகருகே நிறுத்தும் நூல் அது எனினும் அதற்குச் சுமார் எட்டு நூற்றாண்டுகள் முன்பே தமிழில் இவ்வாறு சாத்தனார் தம் பெரும் காப்பியத்தின் ஓரங்கமாய் அன்று ஓங்கியிருந்த அளவைவாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவவாதம், வேதவாதம், நிகண்டவாதம், சாங்கியவாதம், ஆசீவகவாதம், பூதவாதம் எனப் பத்துவகை நெறிகளையும் நுணுக்கமாய்த் தொகுத்து அளித்திருப்பது வியப்புக்குரியது. அது மட்டுமல்ல கி.பி ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இப்படிப் பல்வேறு சித்தாந்தங்களுக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடந்த மண்ணாகத் தமிழகம் விளங்கியதும் வரலாற்றில் நாம் சந்திக்கும் ஒரு வியப்பு.

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்

மீமாம்சகமாம் சமய ஆசிரியர்

தாம் பிருகற்பதி சினனே கபிலன்

அக்கபாதன் கணாதன் சைமினி

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சத்தம்

உவமானம் அருத்தாபத்தி அபாவம்

இவையே இப்போதியன்றுள அளவைகள் (27: 78 – 85)

 

என இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பற்சமயவாதத் தொகுப்பை ஆக்கியவர் என்கிற பெருமைக்குரியவர் ஆகிறார் சாத்தனார். எனினும் இந்தியத் தத்துவங்களாக இன்று முன்வைக்கப்படும்தொகுப்புகளில் காட்டப்படும் வேறு சில தரிசனங்கள் இங்கு விடுபட்டுப் போயுள்ளனவே எனத் தோன்றலாம். சாத்தனாரின் காலத்தில் (6ம் நூ) நையாயிகம், சாங்கியம், வைசேடிகம், மீமாம்சம் ஆகிய இந்த நான்கு ‘ஷட்தரிசனகள்’  தான் மேலோங்கி இருந்தன. சாத்தனாரின் சம காலத்தவரான தின்னாகரும் அரிபத்திரரும் கூட இந்த நான்கைத்தான் குறிப்பிடுகின்றனர் என்பது கருதத் தக்கது.

தம் தொகுப்பில் பத்து சமயக் கணக்குகளைத் தொகுத்தளிக்கும் சாத்தனார் இறுதியாக, “ஐவகைச் சமயமும் அறிந்தனள் – ஆங்கு என்” அவற்றை ஐந்தாகச் சுருக்கி முடிப்பதும் இங்கே கவனத்துக்குரியது. இந்தியச் சமயங்கள் குறித்துப் பொதுவாக ‘அறுவகைச் சமயம்’ எனச் சொல்வதே வழக்கம். சாத்தனார் இங்கு பத்து சமயங்களை விளக்கிய போதும் தொகுப்பாக ‘ஐவகைச் சமயம்’ என அவற்றைச் சுருக்குவதைக் காணும்போது இங்கு பயிலப்பட்ட மொத்தத் தத்துவங்களையும் சுருக்கித் தொகுக்கும் இடத்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வோரு வகையில் அவற்றில் சில மேலுக்கு வந்துள்ளன என்பதும் தேர்வுகளுக்கு இடையே அமையும் வேறுபாடுகளும் நம் கவனத்திற்கு வருகின்றன.

(அடுத்த இதழில் தமிழ் இலக்கியத்தில் காஞ்சிபுரம் ஓர் முக்கிய நகராக இடம்பெறுதல் என்பதன் பொருள்).