பூரண மதுவிலக்கு எனும் மாயை

சென்னையில், “விடிவெள்ளி வாசகர் வட்டம்” சார்பாக “குடி: அரசியல் பொருளாதாரம் பண்பாடு” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. கள் எப்படி ஒரு இயற்கை உணவு, அதைத்தடை செய்துள்ளது எத்தனை அபத்தம் என்பதை இதைத் தொடர்ந்து வற்புறுத்தி வரும் பெரியவர் நல்லுசாமி அவர்கள் விரிவாகப் பேசினார்கள். தோழர் வேணி, மருத்துவர் ராமசாமி, எழுத்தாளர் போப்பு, திரைப்படக் கலைஞர் ராமு ஆகியோர் குடி பற்றி இங்கு கிளப்பப்படும் பீதி எத்தனை தேவையற்றது எனப் பேசினர். இறுதியாக முத்தையா வெள்ளையன் நிறைவுரை ஆற்றினார்.

நான் பேசும்போதுகுடிப் பழக்கம் ஒரு பிரச்சினையே இல்லை என நாம் கருதவோ சொல்லவோ வேண்டியதில்லை. குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது, இளைஞர்கள் மாணவர்கள் மத்தியிலும் குடிப் பழக்கம் வளர்ந்துள்ளது கவலைக்குரிய விடயம்தான். ஆனால் இதற்கு என்ன செய்வது என்பதில்தான் நான் இங்குள்ள மதுஎதிர்ப்பு அரசியல் கட்சிகளுடன் வேறுபடுகிறேன் என்றேன். பூரண மது விலக்கு என்பதை நாம்ஏற்றுக் கொள்ளக் கூடாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அ.தி.மு.க அரசை வீழ்த்துவதற்கு வேறு வழியே இல்லைஎன விரக்தியுற்ற கட்சிகளின் கடைசி ஆயுதமான மது விலக்கு உள்ளது.

மதுவிலக்கு கூடாதுஎன்பதற்கு இரண்டு காரணங்களை நாம் (அதாவது மதுவிலக்கு கூடாது என்போர்) சொல்வதாகவும் அது தவறு எனவும் இவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் மதுவிலக்கை ஆதரித்து தமிழ் இந்து நாளிதழில் எழுதப்பட்ட தொடர் கட்டுரையிலும் கூட அப்படித்தான் சொல்லப்பட்டது. முதல் காரணமாகஅவர்கள் சொல்வது மது மூலம் வரும் அரசின் அரசின் வருமானம் (25 ஆயிரம் கோடி) இல்லாமல்போய்விடும் என நாம் சொல்கிறோமாம். இது முற்றிலும் தவறு. நாம் அப்படிச் சொல்லவில்லை. இப்படி அரசு வருமானம் தேட வேண்டும் என்பது நம் விருப்பமும் அல்ல. அதேபோல டாஸ்மாக் மற்றும் மதுத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை போய்விடும் என்பதும் இங்கு முக்கியபிரச்சினை அல்ல. டாஸ்மாக் கடைகளை வேறு ஏதாவது விற்பனை செய்யும் கடைகளாக மாற்றலாம். ஏற்கனவே அரசு உணவு, மருந்துக்கடைகளை நடத்தவில்லையா, அதுபோல பலசரக்குக் கடைகளையும் நடத்தட்டுமே. தமிழகம் முழுவதும் உள்ள 6,826 டாஸ்மாக் கடைகளிலும் மலிவாக பலசரக்கு சாமான்கள் விற்றால் நல்லதுதானே. அதேபோல இங்குள்ள சுமார் 20 IMFL ஆலைகளையும் வேறு ஏதாவது தொழிற்சாலைகளாக ஆக்கட்டும். இது பிரச்சினை அல்ல.

இரண்டாவதாக அவர்கள்சொல்வது: மது விலக்கு வந்தால் கள்ளச் சாராயம் வந்துவிடும் என்று நாம் சொல்கிறோமாம். உண்மை. நாம் அப்படித்தான்சொல்கிறோம். ஆனால் அப்படி நேராதாம், கள்ளச் சாராயத்தை இவர்கள் கட்டுப்படுத்தி விடுவார்களாம். இதை நாம் கடுமையாக மறுக்கிறோம். உண்மைக்கு மாறான படு அபத்தம் என்கிறோம். மது விலக்கு அமுல்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் ஆறாய்ப் பெருக்கெடுத்தோட அதைக் கட்டுப் படுத்த இயலாமல்தான் மீண்டும் இந்த நாடுகளும்மாநிலங்களும் மதுவை அனுமதித்தன.

சென்ற ஆண்டு (2014) காங்கிரஸ் ஆண்ட மூன்று மாநிலங்களில் இந்தப் பிரச்சினை மேலெழுந்தது. மதுப் பழக்கம் மித மிஞ்சி விட்டதாகக் கூறி கேரள அரசு படிப்படியாக மது விலக்கை அமலாக்கப்போவதாகச் சொல்லியது. இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது உள்ள மதுக் கொள்கையில் IMFL எனப்படும் ‘உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டுச் சரக்குகள்’ மட்டுமே தயாரிக்க, விற்க, குடிக்க அனுமதி உண்டு. இது வேறு இரண்டு முக்கிய மது வகைகளைத் தடை செய்கிறது. அவை: 1. கள் 2.சாராயம். கேரளா அப்படி அல்ல. அங்கு கள் தாராளமாகக் கிடைக்கிறது. லிட்டர் சுமார் 45 ரூபாய். முதல் அமைச்சர் உமன் சாண்டி இப்போது சொல்வது படிப்படியாக IMFL விற்பனை குறைக்கப்படும் என்பதுதான். கள் அங்கு தொடரும் என்பது மட்டுமல்ல அதன்விற்பனை அதிகரிக்கவும் படும்.

அடுத்து மணிப்பூர். இங்கு 1991 முதல் மதுவிலக்கு அமுலில் இருக்கிறது. மெய்ரா பெய்பி எனும் மக்களியக்கம் வலுவான போராட்டங்களை நடத்தியதன் பின்னணியில்தான் 24 ஆண்டுகளுக்கு முன் அங்குமது விலக்கு கொண்டுவரப்பட்டது. அதிலும் கூட பட்டியல் பிரிவினர் (SC/ST) தங்கள் பகுதிகளில் தங்களின் பாரம்பரிய மது வகைகளை அவர்களின் கலாச்சாரத் தேவைகளுக்காகத் தயாரித்துக் கொள்ளஅனுமதி அளிக்கப்பட்டது. நடந்தது என்னவெனில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மதுவகைகள் பண்டிகைப் போதுகள் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் தயாரிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்பட்டது. இந்த பாரம்பரிய மது வகைகள் மிக எளிதாகப் பெரிய அளவில் எல்லா இடங்களிலும்கிடைத்து வந்தது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தபோதெல்லாம் பெரிய அளவில்பட்டியல் சாதியினர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். இன்னொரு பாக்கம் IMFL வகையறா மது வகைகள் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மியான்மரில் இருந்தும் கடத்தப்பட்டு வந்தது. இதைத்தடுக்க வழியற்றுப் போனதை ஏற்றுக் கொண்டுதான ஓக்ரம் இபோபி சிங் அரசு இன்று மதுவிலக்கைரத்து செய்து மீண்டும் மதுவை அனுமதிக்கப்போவதாக அறிவித்தது.

அத்தோடு நிற்கவில்லை.உள்நாட்டு சாராய (country liquor) வகைகளை அரசுக் கட்டுப்பாட்டில் தரமாகத் தயாரித்துக்குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க வழி செய்வதாகவும் இபோபி சிங் கூறியுள்ளார்.

மிசோராமும் காங்கிரஸ்ஆளும் மாநிலம்தான். அங்கும் 17 ஆண்டுகளாக மதுவிலக்கு இருந்து வந்தது. சென்ற ஆண்டு மேற்சொன்ன இதே காரணங்களுக்காக மதுவிலக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதான் நிலைமை.அமெரிக்க அரசு 1920ல் மது விலக்கு அறிவித்தபோது கனடாவுக்கு அருகில் ஃப்ரெஞ்ச் ஆளுகையில்இருந்த செய்ன்ட் பியரி தீவு வழியாக ஏராளமாக ஃப்ரெஞ்ச் மது வகைகள் கடத்தப்பட்டன. செய்ன்ட்பியரி தீவுக்கு உல்லாசப் பயணம் வருவது, கப்பலிலேயே குடித்துக் கொண்டாடுவது என்பதான நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மதுவிலக்கை நீக்கிக் கொண்டது.

இப்போது கேரளா IMFL ஐத் தடை செய்தால் என்ன நிகழப் போகிறது? வட கேரள மக்கள் புதுச்சேரி அரசின் கீழுள்ளமாஹேக்கு உல்லாசப் பயணம் செல்வர்; புதுச்சேரி மது வகைகள் ஏராளமாக கேரளாவுக்குள் கடத்தப்படும். தென் கேரள மக்களுக்கு அடுத்த 20 கி.மீ தொலைவில் களியக்காவிளை, தமிழ்நாடு. பிறகென்ன?

தமிழகத்தில் மதுவிலக்குவந்தால் என்ன ஆகும்? சென்னை மக்களுக்குப் பிரச்சினை இல்லை. இப்போதே புதுச்சேரியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் அங்கு விடுதிகளில் அறை கிடைப்பதில்லை. பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து செல்லும் IT துறை ஆண்களும் பெண்களும் அதிகச் செலவில்லாமல்இப்படிக் குடி உல்லாசப் பயணங்கள் வரும் தலமாகிவிட்டது அது. தமிழகத்திலும் மது விலக்குஅமுல்படுத்தப்பட்டால் இனி புதுச்சேரியிலும் காரைக்காலிலும் வார நாட்களிலும் விடுதிகளில் இடம் கிடைக்காது. பயனடையப் போவது புதுவை முதல்வர் ரெங்கசாமிதான். இன்னும் ஏராளமான இலவசங்களைத் தம் மாநில மக்களுக்கு அளித்து தன் ஆட்சியை இன்னும் பத்தாண்டுகளுக்கு பா.ஜ.க ஆதரவுடன்ஜாம் ஜாம் என நடத்துவார்.

வசதி மிக்க தமிழ்க் குடியர்களுக்கு மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பாதிக்கப்படப்போவதும் குற்றவாளிகளாக்கப்பட்டுச் சிறைகளை நிரப்பப் போவதும் அப்பாவி ஏழை எளிய தமிழ்க்’குடி’ மக்கள்தான்.

இரண்டு : மதுப்பழக்கம் நம் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த ஒன்று

குடி என்பது நம்கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்று. ஒவ்வொரு பகுதிகளிலும் அங்குள்ள தென்னை, பனை,ஈச்சம் முதலான பாளை வெடித்துக் காய்க்கும் தாவரங்களிலிருந்து கள் வடிக்கப்பட்டன; அப்பகுதியில்கிடைக்கும் பூக்கள், பழங்கள், மரப்பட்டைகள் ஆகியவற்றை ஊற வைத்து, ஈஸ்ட் கலந்து நொதிக்கச்செய்து, காய்ச்சி வடிக்கும் உள்ளூர் சாராயங்களும் உண்டு. விருந்தினர்கள் வருகை, பிறப்பு,இறப்பு, திருமணம் முதலான சமூக ஒன்று கூடல்கள், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடும்பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றில் குடி என்பது தவிர்க்க இயலாத ஒன்று. பெண்ணடிமைத் தனம் உச்சமாகஇருந்த உயர் சாதியினர் தவிர பிற சமூகப் பெண்கள் குடித்தார்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டன.இவற்றையெல்லாம் நான் ஆதாரபூர்வமாக எனது முந்தைய கட்டுரைகளில் (‘குடியும் குடித்தனமும்’)குறிப்பிட்டுள்ளேன். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ப் பண்பாட்டை விரித்துரைக்கும் முகமாகக் கபிலர் சொல்கையில், “மனையோள் மடுப்ப தேம்பிழி தேறல் மகிழ் சிறந்து” என்பார். அன்பு மனையாள் ஊற்றிக் கொடுத்த தேம்பிழி தேறலை மாந்தி மகிழ்ந்தானாம் அந்தத் தமிழ்க் கணவன்.

ஒன்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இது ஒரு சமுதாயக் குடி. தனி நபர் அறையில் உட்கார்ந்து தள்ளாடி விழும்வரை குடிக்கும் பழக்கமல்ல. சமுதாயக் குடியில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் மதுஅளவுக்கு மிஞ்சிப் போவதில்லை.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் எனக்குத் திருமணம் ஆனபோது கள்ளுக் கடைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. என் மனைவியின்ஊர் கொரடாச்சேரி. ஒரு தென்னந் தோப்புக்குள்தான் அவர்களின் வீடு. தென்னை மரங்களை அவர்கள் கள் இறக்கக் குத்தகைக்கு விட்டிருந்தனர். தினம் அதிகாலையில் கள் இறக்க வரும் தொழிலாளிகள்இறக்கி முடித்தவுடன் ஒரு பெரிய சொம்பு நிறைய ஒரு மரத்துக் கள்ளை வீட்டில் வைத்து விட்டுப்போய்விடுவார்கள். அதை வீட்டில் யாராவது குடிப்பார்கள், அல்லது விருந்தினர் வந்தால்கொடுப்பார்கள். நான் அங்கு இருக்கிற நாட்களில் அந்தச் சொம்பு என் அறைக்கு வந்துவிடும்.ஆம், மருமகனை அவர்கள் அப்படி உபசரித்தனர். எதற்குச் சொல்கிறேன் என்றால் இது நம் கலாச்சாரத்தில்பின்னிப் பிணைந்த ஒன்று.

பிரிட்டிஷ் ஆட்சிஇங்கு வந்தபோது அது கைவைத்த பல அம்சங்களில் குடியும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சியில் அதன்மூன்றில் ஒரு பங்கு வருமானம் குடி மூலமாகத்தான் வந்தது. எனவே அவர்கள் விரிவான ஆய்வுகளைச்செய்து அதன் அடிப்படையில் இந்த ‘அக்பரி’ வருமானத்தை உச்சபட்சமாக் ஆக்குவது எப்படி எனத்திட்டமிட்டார்கள். அவர்கள் முதலில் செய்தது பெரும் ஆலைகளை அமைத்து உரிமம் அளித்துச்சாராயம் தயாரிப்பதும், ஏல முறையில் கள்ளுக் கடைகளைத் திறப்பதுந்தான்.

அதன் இன்னொரு பக்கமாகவீடுகளில் கள் இறக்குவதும் சாராயம் வடிப்பதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன. பெரும் பணக்காரர்கள்சாராய ஆலைகளை அமைத்தார்கள்; உள்ளூர்ப் பெரியதனக்காரர்கள் கள்ளுக் கடைகளை ஏலம் எடுத்தனர்.குடி அதிகம் செலவைக் கோரும் வழமை ஆகியது; அதோடு குடி வியாபாரப் பொருள் ஆகியதும் அதில் போதையை அதிகப்படுத்த கண்ட தீங்கு விளைவிக்கும்பொருட்கள் கலக்கப்பட்டன.

பாரம்பரியமாகக்காய்ச்சி வடித்துக் குடித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்; அழுதார்கள்; கெஞ்சினார்கள்;அந்த முட்டாள் ஜனங்கள் காசு திரட்டி நகரங்களுக்குச் சென்று புதிதாய் உருவாகியிருந்தநீதிமன்றங்களை அணுகி இருந்த காசையும் அழித்தார்கள்; திருட்டுத்தனமாகக் காய்ச்சிப் பிடிபட்டுச்சிறை ஏகினார்கள்; குடி பெயர்ந்து சென்று இந்தத் தடைகள் இல்லாத சமஸ்தானங்களில் குடியேறமுயற்சித்தார்கள்.

இத்தனையும் வரலாறுகள்தானே.

சில நாட்களுக்குமுன் யாரோ இரண்டு கிராமத்தவர்கள் ஒரு குழந்தைக்கு சாராயம் ஊட்டியது வாட்ஸ் அப் முதலானவற்றில்விஷமாய்ப் பரவி கடும் கண்டனத்துக்குள்ளாகி, அவர்கள் கைது செய்யப்பட்டதை மறந்துவிட இயலாது.போகிற போக்கைப் பார்த்தால் அவர்களைத் தூக்கில் போட்டு விடுவார்களோ என்று கூட எண்ணத்தோன்றியது. நிச்சயமாக அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அப்படி ஊட்டியவர்கள் அந்தக் குழந்தையைக் கடத்தி வந்துஅப்படியான பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தும் சதித்திட்டத்தோடு செய்யவில்லை. அதற்காகச் செய்த ஆர்பாட்டம் ரொம்ப ஓவர். இதெல்லாமும் கூடநமது பண்பாடு குறித்த ஒரு பிரக்ஞை இல்லாததன் விளைவுதான்.

மூன்று

அறுபது ஆண்டுகளுக்குமுன் ஒரு காட்சி: எனக்கு அப்போது ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்; ஒரத்தநாடு வட்டத்தில்உள்ள பாப்பாநாடு கிராமத்தில் இருந்து கண்ணுகுடி மற்றும் மதுக்கூர் செல்லும் வழியில்மூன்று கி.மீ தொலைவில் இருந்த குத்தகைக்காடு எனும் கிராமத்தில் இருந்தோம். அப்பா மலேசியாவிலிருந்துநாடுகடத்தப்பட்டு இங்கு வந்து, கூடவே இரண்டு யாருமற்ற இளைஞர்களையும் அழைத்து வந்து(அவர்களில் ஒருவரும் அப்படி நாடுகடத்தப்பட்டவர்) மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தகாலம் அது. வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள வெளுவாடி எனும் கிராமத்தில்ஒரு சிறிய சோடா கம்பெனி வைத்துப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் அம்மா,நான், தங்கை.

எங்கள் வீட்டிலிருந்துசுமார் இரண்டு ஃபர்லாங் தூரத்தில் ஒரு குடிசை; 45 வயதிருக்கும் ஒரு பெண்மணி. அவரதுகணவன் ஒரு மனநோயாளி; அவர் அந்த அம்மையை வீட்டுவிட்டு எங்கோ போய்விட்டார். பல ஆண்டுகளுக்குஒரு முறை அவர் எப்போதாவது வருவார். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் காணாமற்போய்விடுவார். அவர் உருவம் எனக்கு நினைவில்லை. தலையில் கொண்டை ம்போட்டிருப்பார். அதுமட்டும் நினைவில்.

வேறு யாருமே அந்தஅம்மைக்குக் கிடையாது. பக்கத்தில் உள்ள உடையார் கடையில் ஏதேனும் பலசரக்கு சாமான் வாங்கச்செல்கையில் அந்த அம்மை என்னைப் பார்த்துச் சிரிப்பார். அவர் வீட்டுக்குப் போகக் கூடாதுஎன என் அம்மா என்னை எச்சரித்து வைத்திருந்தார். நான் அச்சத்தோடும், ஒரு வகை ஆர்வத்தோடும்அவரின் குடிசைக்குள் எட்டிப் பார்ப்பேன். யாராவது ஒருவர் அல்லது இருவர் உட்கார்ந்திருப்பார்கள்.

நீங்கள் ஊகிப்பதுதான்.அவரது ஒரே வருமானம் கள்ளச் சாராயம் விற்பதுதான். எங்கிருந்தோ வாங்கி வருவார். மக்கள்வந்து சாப்பிட்டுப் போவார்கள். போலீஸ்காரர்கள் வந்து வாரந்தோறும் மாமூல் பெற்றுச் செல்வார்கள்.

எல்லாம் சரியாகத்தான்நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் குடிசை வாசலில் ஒரு போலீஸ் ஜீப். நான்கைந்து போலீஸ்காரர்கள்.வெளியில் கூட்டம். போலீஸ் அவரைக் கைது செய்ய வந்திருந்தது. அமலாக்கத்துறையினருக்குமாதம் சில வழக்குகளும் போட்டு ஆக வேண்டுமல்லவா. இம்முறை அந்த அம்மை. அவர் ஏதோ பேரம்பேசிப் பார்த்தார். அவர்கள் கேட்ட தொகையை அவரால் கொடுக்க இயலவில்லை. அந்த நேரத்தில்அப்பா சோடா கம்பெனியிலிருந்து சைக்கிளில் வந்தார்.

பிரச்சினையை அறிந்தவுடன் அங்கு சென்றுபோலீஸ்காரர்களுடன் பேசிப் பார்த்தார். அவர்கள் கேட்ட தொகையை அப்பாவாலும் கொடுக்க இயலவில்லை.அந்த அம்மையையும் ஒரு சாராயப் பானையையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் நகர்ந்தது. அந்தக்குடிசையின் தட்டிக் கதவில் ஒரு பூட்டைப் பூட்டி அப்பாதான் சாவி வைத்திருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்குப்பின்அந்த அம்மை விடுதலை ஆகி வந்தார். அவர் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சிஇன்னும் என் மனதில். அப்போதெல்லாம் சிறைச்சாலைகளில் கைதிகளின் சிகை வழிக்கப்படும்.

அந்த அம்மையின்பெயரும் உருவமும் இன்னும் நினைவில் உள்ளது. அவர் பெயர் “பரிசுத்தம்”

ஒரு பழக்கம் குற்றச் செயலாக மாற்றப்படும் கொடுமை
மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டால் உடனடியாக IMFL ஐக் காட்டிலும் இரட்டிப்பு விலையில் கள்ளச் சாராயம்கிடைக்கத் தொடங்கி விடும். வீட்டில் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.

கள்ளச்சாராயம்ஒரு வகையான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். ஆனால் அவை அனைத்தும் அரசால் குற்றம்என வரையறுக்கப் பட்டவையாகவே அமையும். கள்ளச் சாராயத் தயாரிப்பு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்துIMFL கடத்தல், கள்ளச் சாராய வினியோகம், விற்பனை என்று பல வகைகளில் வேலை வாய்ப்பும்வருமான வாய்ப்புகளும் உருவாகும். இவை அனைத்தும் ஆங்க்காங்குள்ள மிக வலுவான அரசியல்சக்திகளால் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். பல்வேறு படிநிலைகளினூடாக வந்துசேரும் லஞ்சப் பெருந்தொகை உள்ளூர் முதல் மேல்மட்டம்வரை காவல் அதிகாரிகள், கலால் பிரிவினர், அமலாக்கத்துறை அமைச்சர், முதலமைச்சர் என்பதாகப்பெருந்தொகை கைமாறிக் கொண்டே இருக்கும்.

அதே நேரத்தில்அரசாங்கம் இருப்பதையும் காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா. அவ்வப்போது கடத்தல் லாரிகள் பிடிபடும்;கைதுகள் நடக்கும்; ரெய்டுகள் நடக்கும். அதிலும் பெரிய கைகளுக்கும் அரசு மற்றும் காவல்துறைக்கும்இடையே எழுதப்படாத ஒப்பந்தம் மிக்க அற நெறிகளோடு கையாளப்படும். காய்ச்சுபவர்களும் கடத்துபவர்களுமேமாதம் அல்லது வருடத்திற்கு இத்தனைபேர் என வழக்குகளுக்கென ஆட்களைக் கொடுப்பார்கள். அவர்கள்சிறைகளை நிரப்பிவிட்டு வந்து தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்வார்கள்.

கள்ளச் சாராயம்காய்ச்சும்போது அதில் போதைக்காக நவச்சாரம், ஊமத்தங்காய் முதலான விஷப் பொருட்களைச் சேர்த்துஈடாக நிறையத் தண்ணீர் ஊற்றி கொள்ளை தொடரும். காய்ச்சும்போது ஏற்படும் தவறுகளால் EthylAlchohal க்குப் பதிலாக Methyl Alcohol உற்பத்தியாகி மிகப் பெரிய விஷச் சாராயச் சாவுகள்நிகழும்.

இன்னொன்றையும்நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மது விலக்கு வந்தால் சட்ட விரோதக் கள்ளச் சாராயம் மட்டுமல்ல,சட்டபூர்வமான கள்ளச் சாராயங்களும் புழக்கத்துக்கு வந்துவிடும். கடும் மதுவிலக்கு அமுலில்இருந்த காலங்களில் ஊருக்கு ஒரு மது கஷாயக் கடை இருக்கும். பாப்பாநாட்டில் நாங்கள் வசித்தபோதுஎங்கள் சோடா கம்பெனியை ஒட்டி அப்படி ஒரு கடை உண்டு. வேறொன்றும் இல்லை. அரசு உரிமம்பெற்று ‘ஆயுர்வேத மருந்து’ (அரிஷ்டம்) விற்கும் கடைகள்தான் அவை. அங்கே ஒரே ஒரு ‘மருந்து’தான் கிடைக்கும். அது வியாதியைக் குணமாக்கும் மருந்தல்ல; வியாதியை உருவாக்கும் மருந்து.அதுதான் மதுகஷாயம். கடுமையான போதை அளிக்கும் ஒரு திரவம். அதற்கு கிராமங்களில் ‘வேலிமுட்டி’, ‘சுவர் முட்டி’ என்கிற பெயர்களும் உருண்டு. அதைக் குடித்தவுடன் அந்த நபர்தள்ளாடிச் சென்று அருகிலுள்ள வேலி அல்லது சுவரில் முட்டிக் கொண்டு விழுந்து விடுவார்.இந்த விற்பனையாளர்களும் முறையாகக் காவல்துறைக்குக் கப்பம் செலுத்தி விடுவர். உடலுக்குமிகவும் தீங்கு செய்யும் கடும் போதைப் பொருள் இது.

திருச்சி திருவானைக்கோவிலில் என் மாமா பணியாற்றிய ஒரு அலுமினியக் கம்பெனிக்கு அருகில் ஒரு ‘வார்னிஷ்’ கடைஇருந்தது. பெயின்ட் விற்பனைக்கான உரிமம் பெற்று நடத்தப்படும் கடை அது. அங்கே ஒரே வகையான’வார்னிஷ்’ அடைக்கப்பட்ட புட்டிகள்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு தட்டில்எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி வைத்திருப்பார்கள். வருபவர்கள் ஒரு பாட்டில் வார்னிஷ்வாங்கி அதில் எலுமிச்சையைப் பிழிவார்கள். உடன் கச்சா ஸ்பிரிட்டில் கலக்கப்பட்டிருந்தஅரக்கு திரண்டு கீழே கட்டியாகச் சிவப்பு நிறத்தில் ஒதுங்கும். மேலே உள்ள ஸ்பிரிட்டைஒரு கிளாசில் ஊற்றி ஒரே மடக்கில் குடித்துத் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டு தள்ளாடியவண்ணம் சென்றுவிடுவர். அரக்கு கலக்கப்பட்ட அந்த ஸ்பிரிட்டும் உடம்புக்கு அத்தனை கேடு.தொடர்ந்து குடிக்கும் யாரும் இரண்டாண்டுகளில் ஈரல் பாதிக்கப்படுவது உறுதி

இதெல்லாம் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பெரிய அளவில் ஆதரவற்ற பெண்கள் இந்தக் கள்ளச் சாராயத் தொழிலில்ஈடுபடுத்தப் படுவர். தயாரிப்பு, கடத்தல், விற்பனை எனப் பல மட்டங்களில் இது நடக்கும்.இந்த வகையில் பெண்கள் அதிக அளவில் சிறைகளை நிரப்பும் கொடுமையும் நிகழும்.

அப்படி ஒரு பாதிக்கப்பட்டஅம்மைதான் நான் சற்று முன் சொன்ன பரிசுத்தம் அன்னை. மொட்டைத் தலையுடனும், கையில் ஒருபையுடனும் என் வீட்டுத் திண்ணையில் அந்த அம்மை அமர்ந்து என் அம்மா கொடுத்த காப்பியைக்குடித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி என் மனதில் அழியாமல் படிந்து போன படிமங்களில்ஒன்று.

நான்கு

ஆம், ஒரு பழக்கம்(custom) குற்றமாக (crime) ஆக்கப்படும் நிலைக்குப் பெயர்தான் மது விலக்கு. அப்பாவிஏழை எளிய மக்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு காவல்துறைக் கொடுமைகளுக்கு ஆளாவர். அதேநேரத்தில் வசதியானவர்கள், வெளி நாட்டு பாஸ்போர் வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும்IMFL அருந்த உரிமம் வழங்கப்படும். மதுவிலக்கு அமுலில் உள்ள குஜராத்தில் விமான நிலையத்திலேயேபாஸ்போர்ட்டைக் காட்டி நூறு ரூபாய் செலுத்தி குடி உரிமம் பெற்று வரலாம்.

பூரண மதுவிலக்குபற்றிப் பேசும் வாய்கள் எல்லாம் நான் சற்று முன் சொன்ன அந்த முதல் இரண்டு மறுப்புக்களைமட்டுந்தான் சொல்வார்கள். அதுவும் எத்தனை அபத்தம் எனக் கண்டோம். ஆனால் நம்மைப் பொருத்தமட்டில் இந்த இரண்டைக் காட்டிலும் அவர்கள் சொல்லாத, சொல்ல விரும்பாத இந்த மூன்றாவதுபிரச்சினைதான் கொடிது. அதற்காகத்தான் மதுவிலக்கு கூடாது என்கிறோம்.

குடிப்பழக்கம்என்கிற காலங் காலமாக நம் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்து போயுள்ள ஒரு பழக்கம் குற்றச்செயலாக மாற்றப்பட்டு ஏழை எளிய மக்கள் குற்றவாளிகளாக சிறைகளை நிரப்பும் கொடுமைதான் இந்தமதுவிலக்கின் மூன்றாவது விளைவு.

மதுவிலக்கை ஆதரிக்கும்பிரிவினர் ஏன் இப்படி ஒரு பிரச்சினை உள்ளதைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்? வேறொன்றும்இல்லை. ஏழை எளிய மக்கள் மீது அவர்கள் உள்ளார்ந்து கொண்டுள்ள வெறுப்பே இதன் அடிப்படை.

ஐந்து : குடியை உன்னதப் படுத்தவும் வேண்டாம், அதைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஆக்கவும் வேண்டாம்

தொடங்கிய இடத்திற்கு வருவோம். இத்தனையையும் நான் சொல்வதால் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாக நினைக்க வேண்டாம். அப்படியான ஒரு தவறு கேரளத்தில் நடந்தது என்பார்கள். ஜான் ஆப்ரஹாம் முதலான கலைஞர்களை எடுத்துக் காட்டி குடிப் பழக்கத்தை அங்கு சிலர் உன்னதப் (romanticise) படுத்தினர். நடிகர் பாலகிருஷ்ணன் போன்றோர் முன்வைத்த Forum for Better Spirit போன்றவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். “மூத்த குடிமக்களுக்குக் குறைந்த விலையில் சரக்கு கொடு” என்றெல்லாம் முழக்கங்களும் கூட அங்கு வைக்கப்பட்டன. இங்கும் கூட இன்றளவும் இலக்கியவாதிகள் மத்தியில் குடியை ஆகா ஓகோ என உன்னதப்படுத்தும் ஒரு நிலைபாடு உண்டு.

நான் இதை ஏற்கவில்லை. குடி இப்போது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை மறுக்க முடியாது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகியிருப்பதை நாம் கவலையோடு பார்க்க வேண்டித்தான் உள்ளது. மாநிலக் கல்லூரியில் நான் பணியாற்றும்போது எனது இயற்பியல் துறையை ஒட்டி அமைந்துள்ள திடலில் மாணவர்களில் சிலர் கல்லூரி நேரத்தில் குடித்திருப்பதைக் கண்டு நாங்கள் சென்று அவர்களைக் கண்டித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அதேபோல இது குறித்து ஆய்வு செய்பவர்கள் குடிப்பழக்கத்தால் ஆகும் செலவுகளால் ஏழைக் குடும்பங்கள் பாழாவது குறித்தும் சொல்கின்றனர். ஆனால் அதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆவதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இன்று டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் குடி வகைகளைப் பொருத்த மட்டில் அவற்றுக்கு விதிக்கப்படும் விலையில் 85 சதம் வரிதான். இந்த அளவுக்கு வரி வேறு எந்தப் பொருளுக்கும் விதிக்கப்படுவதில்லை. நூறு ரூபாய்க்கு ஒரு குவார்டர் வாங்கினால் அதன் தயாரிப்புச் செலவு வெறும் 15 முதல் 20 ரூ தான். மீதமுள்ள 80 ரூ வரியாகத்தான் உறிஞ்சப்படுகிறது. இது குறித்து எந்த அரசியல் கட்சியும் முணு முணுப்பது கூட இல்லை. சரக்குகளில் செய்யப்படும் கலப்படம், குடிசாலைகள் மிக மிக அசுத்தமாகக் காணப்படுதல் ஆகியன குறித்தெல்லாம் யாரும் கவலைப் படாததையும், அது குறித்துப் பேசாதத்தையும் நிச்சயமாகப் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்க இயலாது.

அதிகரித்து வரும் குடிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை எனச் சொன்னேன். ஆனால் அந்தப் பிரச்சினையை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதும், குடிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அதிகாரத்தையும் காவல்துறையிடம் கொடுப்பதுந்தான் இங்கு கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

குடிப் பழக்கத்தைக் குறைப்பது குறித்து நாம் சட்ட ஒழுங்குக் கோணத்தில் அல்லாமல் வேறு கோணத்தில் ஒரு சமூகக் கலாச்சாரப் பிரச்சினையாக இதை அணுக வேண்டும்.

முதலில் இப்படி அரசே கடைகளை அமைத்து , விற்பனை இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இன்று மது அதிகமாகப் பாவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டிலுமே இப்படி இந்தத் துறையில் அரசு ஏகபோகம் இருப்பது குறிப்பிடத் தக்கது. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த வரை மதுவிலக்கு அமுலில் இருந்தது. 1967ல் கம்யூனிஸ்டுகள் தலைமையில் கூட்டணி ஆட்சி வந்தபோது மதுவிலக்கு நீக்கப்பட்டது.. எனினும் நிறைய கலப்படச் சாராயம் புழக்கத்தில் இருப்பதும், இது ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பதும் 1970களின் இறுதியில் பெரும் பிரச்சினை ஆகியது. 1980களின் தொடக்கத்தில் இது குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 1984ல் ‘கேரள அரசு குடிபானங்கள் கழகம்’ (Kerala State Beverages Corporation – KSBC) உருவாக்கப்பட்டது. இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், கடும் வரி இவையெல்லாம் இல்லாமல் நியாயமான விலையில் தரமான சரக்குகளை அளிப்பது என்பதை நோக்கமாக அறிவித்து உருவாக்கப்பட்ட இந்தக் கழகம் அதுவே ஆலைகளிலிருந்து ஸ்பிரிட்டை வாங்கி, கலந்து, புட்டிகளில் அடைத்து, வினியோக்கிக்கும் பணியை ஏற்றுக் கொண்டது. இப்படி அரசு ஏகபோகத்தில் 2010க்குள் 337 கடைகள் உருவாயின.

இந்தக் கழகம் உருவான அதே நேரத்தில்தான் கேரள இளைஞர்கள் பெரிய அளவில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் கேரளத்தில் தொழில் மந்தம் ஏற்பட்டது. வளைகுடாவிலிருந்து வந்த பணம் இங்கே வங்கிகளில் முடங்கியது. சேமிப்பு உள்ள துணிச்சலில் வேலைக்குப் போனவர்கள் நாடு திரும்பினர். இந்தப் பின்னணியில்தான் அங்கே குடிப்பழக்கமும் அதிகமாகியது.

தமிழகத்திலும் இதேபோல டாஸ்மாக் ஏகபோகம் வந்தபின் ஏற்பட்ட குடிப்பெருக்கம் குறித்துப் பெரிதாக விளக்க வேண்டியதில்லை.

இன்று ஏன் IT இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் குடிப்பழக்கம் ஏற்படுகிறது? வேலைப் பளு, கடும் கார்பொரேட் அழுத்தம், ஒரு அரசு ஊழியருக்கு இருக்கும் சுதந்திரம் இன்மை, முற்றிலும் பணிச் சூழல் அந்நியப்பட்டுள்ள கொடுமை, ஒப்பீட்டளவில் ஏகப்பட்ட வருமானம் இவற்றையெல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

குடிப்பழக்கம் மிகுவது என்பதன் பின்னணியில் அரசியல் பொருளாதார, சமூகக் காரணங்கள் உள்ளன. இவற்றைச் சுருக்கி, கடைகள் அதிகமாக இருப்பதுதான் எல்லாவற்றிற்கும் காரணம் எனப் பார்க்க இயலாது. கடைகளின் எண்ணிக்கையையும், மது விற்பனை நேரத்தையும் குறைப்பது தேவைதான். ஆனால் அது மட்டுமே பிரச்சினை அல்ல.

இங்கிலாந்தில் குடிப்பழக்கம் குறித்து ஆய்வு செய்தவர்கள் பெருந் தொழிற்சாலைகள் உருவாகி, இடப் பெயர்வுகள் ஏற்பட்டு, உற்பத்தியிலிருந்து தொழிலாளிகள் அந்நியப்பட்ட காலத்தில்தான் (alienation) அங்கு முதன் முதலாக குடிப் பழக்கம் பெரிய அளவில் அதிகரித்தது என்கின்றனர். சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் இந்தியப் புலம்பெயர் தொழிலாளிகள் மத்தியில் அதிகக் குடிப் பழக்கம் உள்ளது என்பது அங்குள்ளவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. பொய் வாக்குறுதிகளுடன் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வது, எந்த வசதிகளுமர்ற தங்குமிடம், வேறு எந்தக் கேளிக்கைகளுக்கும் வாய்ப்பும் வசதியுமில்லாத சூழல் இத்தனையும் அவர்களின் குடிப்பழக்கம் மிகைத்திருப்பதற்கான காரணங்களாக உள்ளதை இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் யோசிப்பதில்லை.

தஞ்சையில் நான் வடக்கு அலங்கத்திலுல்ள அம்மாலயம் சந்தில் ஐந்தாண்டுகள் வசித்தேன். பின்புறமுள்ள வடக்கு வீதியில்தான் துப்புரவுத் தொழிலாளிகளின் வீடுகள் இருந்தன. பழைய நகரமான தஞ்சையில் அப்பகுதி முழுவதும் உலர் கழிப்பறைகள்தான். காலையில் இந்தத் துப்புரவுத் தொழிலாளிப் பெண்கள்தான் தலைகளில் சுமந்து மலம் அள்ளிச் செல்வர். ஆண்களுக்குப் பிணம் எரிப்பது, மருத்துவ மனைகளில் பிரேத be பரிசோதனை உதவியாளராக இருப்பது முதலான வேலைகள். எந்த நவீனப்படுத்தலும் இல்லாமல் அப்படியே அந்த வேலைகள் அவர்கள் மீது இன்றும் திணிக்கப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் மாலை நேரமானால் குடிப்பர். அவர்களிடம் போய் இது தவறு என ஒழுக்கவாதம் பேசும் யாரையும் பார்த்து என்ன இரும்பு இதயமடா உங்களுக்கு எனக் கேட்பதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?

நண்பர்களே ! குடிப்பழக்கத்தை நாம் உன்னதப் படுத்த வேண்டாம். ஆனால் அதே நேரத்தைல் அதைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கவும் வேண்டாம். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் காவல்துறையிடம் கொடுக்கும் தவறைச் செய்யவே வேண்டாம்.

இது சமூகப் பெரியவர்கள், சிந்தனையாளர்கள், மனநிலை வல்லுனர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி. அரசே கடைகளை நடத்தும் நிலையை மாற்றுவோம். கடைகளின் எண்ணிக்கை, வேலை நேரம் ஆகியவற்றைக் குறைப்போம். பள்ளி கல்லூரிகளில் மது குறித்த பிரச்சாரங்கள், கவுன்சிலிங் வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவோம்.

விற்கும் மதுவைப் பொருத்த மட்டில் தரக் கட்டுப்பாட்டை அதிகப் படுத்துவோம். கலப்படத்தை ஒழிப்போம். தரமான குறைந்த விலைச் சாராயத்தை அனுமதிப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக IMFL கடைகளைப் படிப்படியாகக்க் குறைத்து கள் விற்பனையை அனுமதிப்போம்.. உள்நாட்டு இயற்கை உணவான கள்ளைத் தடை செய்து IMFL ஐ மட்டும் விற்பனை செய்வது நம் ஆட்சியாளர்களின் ஆகக் கீழான நோக்கத்தைதான் காட்டுகிறது. இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு இன்று திடீரென மதுவிலக்கு ஆர்பாட்டம் செய்யும் நமது அரசியல்வாதிகளின் படு கேவலமான அரசியலையும் இனம் காண்போம்.

கள்ளை அனுமதித்து டாஸ்மாக் கடைகளைக் குறைக்கக் கோருவோம். தரமான உள்நாட்டுச் சாராயத்தை அளித்து இந்த IMFL சரக்குகளின் பயன்பாட்டைக் குறைப்போம். சிறார்களுக்கு விற்பது முதலியவற்றை இன்னும் கவனமாகத் தடுப்போம்.

எக்காரணம் கொண்டும் பூரண மதுவிலக்கு எனும் அபத்தத்தைச் செய்யாமல் இருப்போம்.