என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? – என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம் என்ன சொல்லுகிறது?

//தற்காப்புக்காக – தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக்கிறது. //

இதில் இரு அம்சங்கள் கவனிக்கத் தக்கன.

1) தற்காப்புக்காகக் கொலையும் செய்யலாம். இது காவல் துறையினருக்கு மட்டுமல்ல சாதாரணக் குடிமக்களுக்கும் பொருந்தும். ஆனால் அது கொலக் குற்றமாகவே பதிவு செய்யப்பட்டு, தான் தற்காப்புக்காகத்தான் கொல்ல நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே அவர் வழக்கிலிருந்து விடுபட இயலும். இந்த நடைமுறை காவல்துறையினர் செய்கிற என்கவுன்டர்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2) கைது செய்யச் செல்லும் இடத்தில் வரமறுப்பவர்களைக் கொலை செய்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டம் ஒரு நிபந்தனை விதிக்கிறது. கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருந்தால் மட்டுமே அவரைக் கொல்லும் எல்லைக்குச் செல்லலாம். வங்கிக் கொள்ளை என்பது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமல்ல. பொம்மைத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பதே இக் கும்பலின் வழக்கம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ள செய்தி இன்றைய (22, பிப்ரவரி) இந்து நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கும் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐவரையும் கொல்வது என்கிற அளவிற்குச் செல்லாமல் கால நீடிப்புச் செய்து அவர்களைக் கைது செய்வதற்கே காவல்துறை முயன்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்து நாளிதழ் செய்தியில் இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கொள்ளையச் செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நேற்றே காவல் துறையினர் இந்து நாளிதழிடம் கூற முடிந்துள்ளது. இது எப்படி? ஏற்கனவே மகாராஷ்டிர மானிலத்தில் இதெ வடிவிலான வங்கிக் கொள்ளைகளை பீகாரைச் சேர்ந்த கும்பல் செய்துள்ளது. அங்கு பிடிபட்ட சுபோத் கந்த் சிங் என்கிற பீகாரி இளஞன் பல தகவல்களைக் கூறியுள்ளான். சென்னையில் கொள்ளையிடும் திட்டமும் அவர்களிடம் இருந்துள்ளது. நமது காவல்துறை இவ்வளவு எளிதாக இந்தக் கொள்ளையில் துப்புத் துலக்க முடிந்ததற்கு இந்தத் தகவல்களே உதவியுள்ளன. இந்த ஐவரையும் உயிருடன் பிடித்திருந்தால் மேலும் பல உண்மைகளை அறிந்திருக்கக் கூடும். இந்தக் கொலைகள் மூலம் அந்த வாய்ப்பும் இன்று இழக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக என்கவுன்டர் கொலைகளில் செய்யப்படுவது யாதெனில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீதே காவல் துறையினரைக் கொல்ல வந்ததாக வழக்கொன்றைப் பதிவு செய்வார்கள். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்துபோனார் எனச் சொல்லி வழக்கை முடிப்பார்கள். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

மனித உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக சென்ற 2007 ஆகஸ்ட் 8 அன்று தமிழக அரசு என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக ஒரு நெறிமுறையை வழங்கியது. அதன்படி என்கவுன்டர் செய்த அதிகாரிகளுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுக்கக் கூடாது. இதற்கெனப் பதவி உயர்வு கொடுக்கக் கூடாது. ஆனாலும் தொடர்ந்தும்கூட அப்படிப் பரிசுகள் கொடுக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது.

மனித உரிமைப் போராளியின் அடிப்படைத் தேவை நம்பகத்தன்மை

தமிழக NCHRO கிளை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை

இந்திய அளவில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வது தவிர, தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நின்று நீதி கிடைக்கப் போராடுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் முன்னணியில் நின்று செயல்படும் அமைப்புகளில் ஒன்று தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு. (National Confederation of Human Rights Organisations- NCHRO). கேரளத்தில் மனித உரிமைப் பணிகளில் முன்னோடியாக இருந்து செயல்பட்ட மறைந்த போராளி முகுந்தன் சி.மேனன் அவர்களால் கேரள மாநிலத்திற்குள் ‘மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது தேசிய அளவில் விரிவாக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டுவருகிறது. கேரளம் மட்டுமின்றி தற்போது தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் முதலான மாநிலங்களில் வலுவான அமைப்புகளைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரம், டெல்லி முதலிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. டெல்லியில் தலைமை அலுவலகம் உள்ளது. வரும் பிப்ரவரி 20 அன்று கோவா மாநிலத்தில் அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்திய அளவில் சிறப்பாக மனித உரிமைக் களத்தில் செயல்பட்டு வரும் முன்னோடிகளில் ஒருவருக்கு ஆண்டு தோறும் முகுந்தன் சி மேனன் பெயரில் சிறந்த மனித உரிமைப் போராளி எனும் விருதையும் NCHRO அளித்து வருகிறது. இந்த ஆண்டு அவ் விருதைப் பெறுபவர் பேரா. ராம் புனியானி அவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவ்விருது தமிழகத்தைச் சேர்ந்த அணு உலை எதிர்ப்புப் போராளி .உதயகுமாருக்கு அளிக்கப்பட்டது.

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)’ மூலம் இந்தியா முழுமையும் போராடும் இயக்கங்கங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படுவதையும் ஏராளமானோர் கைது செய்யப்படுவதையும் எதிர்த்துத் தொடர்ந்து இந்தத் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு போராடி வருகிறது. ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு நாளில் (ஜனவரி 26) சாத்தியமான பகுதிகள் எல்லாவற்றிலும் சுவரொட்டிப் பிரச்சாரம், அறைக் கூட்டங்கள் முதலானவற்றின் ஊடாக பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் கண்டிப்பதோடு டாக்டர் பினாயக் சென், கோபாட் காந்தி, சாய்பாபா, ஜிதேன் யும்நாம்,, எம்.என்.ராவுண்னி போன்ற மனித உரிமைப் பொராளிகள் மற்றும் இயக்கவாதிகள் கைது செய்யப்பட்டபோது கண்டித்தும், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காகத் தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வருகிறது.

இவை தவிர பெரிய அளவு மனித உரிமை மீறல்கள், பொய்க் கைதுகள், போலி என்கவுன்டர்கள், காவல் நிலையக் கொலைகள் நடக்கும்போது உடனடியாக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணர்கிறது. அசாம், புனே (மகாராஷ்டிரம்), முசாஃபர்நகர் (உ.பி), மாராட் (கேரளம்), அலேர் (தெலங்கானா) முதலான பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தேசிய அளவிலான குழுக்களை அமைத்து வெளிக் கொணர்ந்ததில் NCHRO வின் பங்கு முக்கியமானது. இது தவிர மாநில அளவிலும் பல்வேறு சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து இத்தகைய பணிகளைச் செய்து வருவதற்கு எடுத்துக்காட்டுகளாக செஷாசலம் காட்டில் 20 தமிழர்கள் போலி மோதலில் கொல்லப்பட்ட நிகழ்வு, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கழிவு நீர்த் தொட்டி வெடித்து ஒன்பது வட மாநிலத் தொழிலாளிகள் உட்பட பத்து பேர்கள் கொல்லப்பட்டது, திருநாள்கொண்ட சேரியில் தலித் பிணங்கள் பொது வீதியில் தூக்கிச் செல்லப்படுவது மறுக்கப்பட்ட பிரச்சினை முதலானவற்றில் NCHRO வின் பங்களிப்புகளைச் சொல்லலாம்.

உண்மைகளை அறிந்து  வெளிக்கொணர்வது என்பதோடு நில்லாமல் தொடர்ந்து அப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, வழக்குகள் பதிவு செய்து தொடர் பணிகளைச் செய்வதில் NCHRO வின் வழக்குரைஞர் குழுவின் பங்கு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அசாம் மற்றும் முசாபர் நகர் மத வன்முறைகளை ஒட்டி இவ்வழக்குரைஞர்களின் குழு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இப்பணியைச் செய்தனர்.  இப்போது முசாஃபர் நகர் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 50 வழக்குகளை NCHRO நடத்திக்கொண்டு இருக்கிறது. இவற்றில் இப்போது ஐந்து வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அதேபோல அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள சார்பாக NCHRO ‘வெளிநாட்டார் தீர்ப்பாயத்தில்’ நடத்திக் கொண்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 88. சுமார் 45 பேர்களுக்கு அவர்கள் உள்நாட்டவர்கள்தான் என்பதை NCHRO வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் யாசின் என்கிற 12 வயதுச் சிறுமி காவல் நிலையத்தில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, அக்ரம் ஷா என்பவர் காவல் நிலையத்தில் அடித்து முடமாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றையும் NCHRO தான் நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இழப்பீடுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல்நிலையத்தில் சையத் அலி என்கிற அப்பாவி முஸ்லிம் இளைஞர் காவல்துறை துணை ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் NCHRO உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் விளைவாக அந்த ஆய்வாளர் இன்று சிறையில் உள்ளார். அதேபோல கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் எனும் முஸ்லிம் இளைஞர் காவல்துறையால கொல்லப்பட்ட வழக்கில் மூன்று காவல் கண்காணிப்பாளர் உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் இறந்துள்ளனர். ஒரு உயர் அதிகாரி  தன்னை வழக்கிலிருந்து நீக்குமாறு செய்த முறையீட்டை நீதிமன்றம ரத்து செய்துள்ளது. மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்கு 8.56 இலட்சம் இழப்பீட்டையும் NCHRO தான் பெற்றுத் தந்துள்ளது.

பானைச் சோற்றுப் பதமாகச் சில வழக்குகளை மட்டுயமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த அளவிற்குத் தொடர்ந்து வழக்குகளி நடத்திக் கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை எனலாம். தமிழகத்திப் பொருத்தமட்டில் முகமது யூசுஃப், அப்துல்காதர், ஷாஜகான் முதலான அர்ப்பணிப்பு மிக்க இளம் வழக்குரைஞர்கள், ப.பா.மோகன், லஜபதி ராய், ஜின்னா முதலான புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர்களும் NCHRO வில் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவது குறிப்பிடத் தக்கது.

NCHRO வின் பணிகளையும், முக்கிய அறிக்கைகளையும் http://www.nchro.org/ எனும் இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.

2.

தமிழக எல்லைக்குள் நடந்த ஒரு எட்டு மனித உரிமை மீறல்களில்  NCHRO  அமைப்பு உண்மை அறியும் குழுக்களை அமைத்து வெளியிட்ட  அறிக்கைகளை நண்பர்கள் இங்கே தொகுத்துள்ளனர். இவை அனைத்தும் 2013 – 15 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை. இதில் நான்கு குழுக்களில் நான் பங்கு பெற்றுள்ளேன். இந்த நூலில் உள்ள அறிக்கைகளில் இரண்டு காவல் நிலையச் சாவுகள் தொடர்பானவை. ஒன்று போலி என்கவுன்டர் பற்றியது. ஒன்று இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ஒன்று பற்றியது. மற்றவை முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மற்றும் பொய்க் கைதுகள் தொடர்பானவை. ஆக, தற்போது நடை பெறும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் மாதிரிக்கு ஒன்று இதில் உள்ளது.

பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் காவல்துறை அத்துமீறல்கள் என்கிற வடிவிலேயே உள்ளன என்பதற்கு இந்தத் தொகுப்பு மேலும் ஒரு சான்றாக அமைகிறது. காவல்துறை எது செய்தாலும், அது எத்தனை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டாலும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் காவல்துறையின் உறுதி குலையும் என்கிற ஒரு மிக மோசமான அணுகல் முறையை அரசுகள் மேற்கொண்டிருக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.

இந்த முன்னுரையை எழுத்திக் கொண்டிருக்கும்போது சற்று முன் தொலை பேசியில் ஒரு செய்தி. இந்த தொகுப்பில் உள்ள கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை குறித்த அறிக்கையில் நாங்கள் கேட்டுள்ளபடி அந்த போலி என்கவுன்டரில் பங்கு பெற்ற 12 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மாவட்ட விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்திதான் அது. போலி என்கவுன்டர் வழக்குகளைக் கையாள்வது குறித்து நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் முதலியன எத்தனையோ நெறிமுறைகளை வழங்கி இருந்த போதும் அவை அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை.ஈதன் விளைவாக காவல்துறை எந்த அச்சமோ, நீதி, நேர்மை, அடிப்படை மனித இரக்கம் ஏதுமின்றி இப்படி ‘மோதல்’ என்கிற பெயரில் படுகொலைகளைச் செய்கிறது. தங்களுக்கு தண்டனை விலக்கு (immunity) உண்டு என்கிற திமிர் ஒவ்வொரு காவலர்களிடமும் உள்ளவரை இது தொடரவே செய்யும்.

இந்தக் கிட்டப்பா கொலை வழக்கைப் பொறுத்த மட்டில் அவர் மீது ஏகப்பட்ட வழ்க்குகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காகக் காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட இயலாது. அப்படிக் கொன்றால் நாம் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனாலும் கொன்றார்கள். கொலையின் பின்னணி இதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைகள் , கலவரங்கள் மிகுதியாகி விட்டன எனப் பத்திரிகைகள் எழுதின. எனவே காவல்துறை தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிணையில் வெளி வந்து, மாமியார் வீட்டில் இருந்து கொண்டு, திருந்தி வாழும் முடிவுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிட்டப்பாவைப் பொய் சொலி அழைத்துச் சென்று, முஸ்லிம் ஒருவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டுக்குள் வைத்து அவரைக் கதறக் கதறச் சுட்டுக் கொன்றார்கள் (ஜூலை 13, 2015). மிக மிக மிக ஏழைக் குடும்பம். நாங்கள் விசாரிக்கச் சென்ற போது கிட்டப்பாவின் இரண்டு வயதுக் குழந்தை அப்போதுதான் மொட்டை அடிக்கப்பட்டு, என்னவென்று தெரியாமலேயே தந்தைக்குச் சிரார்த்தம் செய்து கொண்டிருந்தான்.

போலி என்கவுன்டர்கள் என்றால் சில சடங்குகள் அடுத்தடுத்து முறையாகக் கடைபிடிக்கப்படும். ஒரு இரண்டு மூன்று போலீஸ்காரர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் ஒரு நான்கைந்து நாட்கள் அங்கு தங்கி விடுமுறையை சுகித்துக் கொண்டிருப்பார்கள். இங்கும் அப்படித்தான் நடந்தது. மருத்துவமனையில் இருந்த ஸ்டாஃப் நர்ஸ், அவர்களுக்கு ஒன்றும் இல்லை எனவும், மேலதிகாரிகளின் ஆணையினால்தான் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் வைத்திருப்பதாகவும் சொன்னார். இது போல எத்தனை நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம். மனைவி மக்களுடன் வார்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் நாங்கள் யார் எனத் தெரிந்தவுடன் கழற்றி வைத்திருந்த ‘பேன்டேஜ்’ களை அவசர அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்ட காட்சியை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் பார்த்துள்ளோம். அட்மிட் ஆகியுள்ள போலீஸ்காரர்கள் எங்கே எனக் கேட்டபோது அங்கிருந்த ஸ்டாஃப் நர்ஸ், மென்று விழுங்கிக் கொண்டு, அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க , வந்திடுவாங்க எனப் பதிலளித்ததை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கண்டுள்ளோம்.

ஆக மக்களின் உயிர்கள் மயிருக்குச் சமம் என்று காவல்துறை கருதுகிறது என்றால் அதற்கு ஆதாரமாகவும் பக்க பலமாகவும் இருப்பது அரசுதான்.

காவல் நிலையச் சாவுகளும் இப்படித்தான் நேர்கின்றன. கைது செய்வது, காவலில் வைத்து விசாரிப்பது முதலானவற்றிற்கும் உரிய நெறிமுறைகள் உள்ளன. அவை எங்கும் கடைபிடிக்கப்படுவதே இல்லை. கைது செய்து பல நாட்கள் வைத்து சித்திரவதை செய்து பின்னர்தான் நீதிமன்றத்திற்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரும்பாலும் திருட்டு வழக்குகளிள் கைது செய்யப்படுபவர்களும், தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்படுகிறவர்களுந்தான் இப்படிக் கொல்லப்படுகின்றனர். திருடிய பொருளை எங்கே வைத்திருக்கிறாய் எனக் கேட்டு அடிப்பது, சித்திரவதை செய்வது என்பன கொலைகளில் முடிகின்றன. உண்மையிலேயே திருடி இராதவன் என்ன செய்வான்? இந்தத் தொகுப்பில் மிக அழகாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள ஒரு அறிக்கை கானாத்தூர் ஹுமாயூன் என்பவர் காவல் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. வேலை செய்யப் போன இஅடத்தில் ஒரு கம்மலைத் திருடினார் எனும் குற்றச்சாட்டில் கொண்டுபோகப்பட்டவர் அவர். எஸ்.பி பட்டினம் காவல் நிலையச் சாவில் கொல்லப்பட்ட சையது முகமது வின் கொலைக்கு அந்தக் கொலையைச் செய்த காவல் துணை ஆய்வாளர் காளிதாசின் வக்கிர புத்தி காரணமாக இருந்துள்ளது. அந்தக் காளிதாஸ் சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என ஒரு தகவல் உண்டு. கொல்லப்பட்டவரோ ஒரு முஸ்லிம்.

இப்படிக் கொல்லப்படுபவர்கள், சித்திரவதை செய்யப்படுகிறவர்கள் என்ன குற்றச்சாட்டுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுதான்  அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இப்படிக் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் தலித்கள், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஏழை எளியவர்கள், பழங்குடி மக்கள் இப்படியாகவே இருப்பதை நாம் வேறு எப்படிப் புரிந்துகொள்வது? காவல் நிலையங்களுக்கு வெளியே இன்று கட்டமைக்கப்படும் வெறுப்பு அரசியல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயக்கவாதிகள் உளவுத் துறையுடன் வைத்துள்ள உறவுகளும் பெரும்பாலும் இயக்கவாதிகளுக்கு பாதிப்பில்தான் முடிகின்றன என்பதையும் இயக்கங்களில் உள்ளவர்கள் உணர வேண்டும். இப்படியான உறவுகள் முஸ்லிம் இயக்கங்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக என்ன விதமான போராட்டம் நடத்துவது, என்ன தேதியில் நடத்துவது என்பதையெல்லாம் உளவுத் துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் பழக்கம் இந்த இயக்கங்களில் உண்டு. அது அவர்களுக்குத்தான் ஏதோ ஒரு கட்டத்தில் ஆபத்தாக முடியும் என்பதற்கு பாபுலர் ஃப்ரன்ட் ஊர்வலத்தின் மீது இராமநாதபுரத்தில் நடந்த கொடுந் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு.

ஊர்வலம் செல்லும் பாதை என எழுத்து மூலம் கொடுப்பது ஒன்று. ஆனால் வாய் மொழியாக உளவுத்துறை சொல்வது வேறொன்று. கேட்ட பாதையைக் கொடுக்க முடியாது என எழுத்து மூலம் சொல்லிவிட்டு, வாய்மொழியாக, “பாய், நீங்க கேட்ட பாதை வழியாவே போகலாம் கவலைப்படாதீங்க..” எனச் சொல்வது. எல்லாம் நல்லபடியாகவே நடந்தால் ஓகே. ஆனால் பிரச்சினை என வந்தால் வாக்குறுதி அளித்த உளவுத் துறை அதிகாரி செல் போனை நிறுத்திவிட்டு எங்காவது தூங்கப் போய் விடுவார். நம்பிய ஊர்வலத்தினர் இங்கே தடியடி படவேண்டியதுதான். அப்படித்தான் இராமநாதபுரம் ஊர்வலத்தில் நடந்தது. அதுவும் என்கவுன்டர் கொலைகளைச் செய்தே பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை போன்றோரிடம் தடியைக் கொடுத்தால் வேறென்ன நடக்கும்?

ஆனால் இந்த பாபுலர் ஃப்ரன்ட்டின் சுதந்திர தின ஊர்வலத்தின் மீது தமிழக அரசுகள் மேற்கொள்ளும் அடக்குமுறையை விட ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் வேறென்ன இருக்க இயலும்? சுதந்திர தினத்தன்று அந்த அமைப்பினர் சீருடை அணிந்து தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். முறையாக அனுமதி பெற்று நடக்கும் அந்த அணி வகுப்பு அல்லது ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது அல்லது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குவது என்பதை காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப் பயிற்சி எடுக்கின்றன; மத வெறுப்பை விதைத்து திரிசூலங்களை விநியோகிக்கின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் நமது அரசியல் சட்டம் ஆகியவற்றை மதிப்பதுமில்லை. அவற்றிற்கு தாராளமாக அனுமதியும் பாதுகாப்புகளும் வழங்கும் நமது மத்திய மாநில அரசுகள் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பு நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பைத் தடை செய்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சார்பின்மையை இழந்து கொண்டுள்ளோம் என்பது தவிர இதற்கு வேறென்ன பொருள்?

இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு அவர்கள் கேட்ட பாதையில் அனுமதி வழங்காதபோதும், உளவுத்துறை அதிகாரிகள் கடைசி வரை அவர்களிடம் நீங்கள் கேட்ட வழியிலேயே அணிவகுப்பை நடத்தலாம் எனச் சொல்லியுள்ளனர். ஆனால் அணிவகுப்பு தொடங்கும்போது அந்த வழியில் போகக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்களுக்கு அனுமதி உண்டு எனச் சொல்லி வந்த அந்த உளவுத்துறை அதிகாரி செல்போனை நிறுத்திவிட்டுப் போயே போய் விட்டார். விளைவு ஊர்வலத்தின் மீது கடுமையான தாக்குதல். போலி என்கவுன்டர் ‘புகழ்’ வெள்ளத்துரை வேறு இப்போது அங்கு உயர் அதிகாரி. கேட்கவா வேண்டும்.

உளவுத்துறை அதிகாரிகளில் நல்லவர்கள் என்ன கெட்டவர்கள் என்ன, அவர்கள் உளவுத் துறை அதிகாரிகள். அவ்வளவுதான். அவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விசுவாசிகள்.ஈந்த விசுவாசிகளின் வழிகாட்டல்களை ஏற்பது குறித்த எச்சரிக்கை இயக்கங்களுக்குத் தேவை என்பதுதான் இராமநாதபுரம் அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ள அனுபவம்.

காவல்துறை அத்துமீறல்கள் என்பன பல வழிகளில் முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. ஏதேனும் ஒரு வன்முறை அல்லது தாக்குதலுடன் தொடர்புபடுத்தி உண்மையில் அந்தச் சம்பவத்தில் பங்கு பெறாதவர்களை எல்லாம் கைது செய்வது, உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தாமல் பலநாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்வது, பொய்வழக்குப் போடுவது என்னும் நிலை தொடர்கிறது. கைது செய்யப்படுகிறவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணச் சாத்தியங்கள் மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இப்படி அப்பாவிகளைக் கைது செய்து ஒரு சமூகத்தின் மத்தியில் இந்த நாட்டில் நமக்கு நீதி கிடைகாது என்கிற அவநம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம், மதுரையில் உள்ள நெல்பேட்டை முதலான ஏழை எளிய முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் உற்பத்திசாலை என்பதைப்போல காவல்துறை அணுகுவதும் விளம்பரப்படுத்துவதும் மிக மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நெல்பேட்டையில் பாரம்பரியம் மிக்க அந்த மசூதிக்குள் தொழுபவர்களைப் படம் பிடிக்க ‘சிசிடிவி’ களைப் பொருத்தினார்கள். NCHRO வழக்குரைஞர்களின் எதிர்ப்புகளுக்குப் பின் மசூதிக்குள் பொருத்தப்பட்டிருந்த காமராக்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இது போன்ற பகுதிகளில் வாழும் இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்களின் செல்போன்களைப் பயன்படுத்து அதில் உள்ள தொடர்பு எண்கள் அனைத்திற்கும் போன் செய்து எல்லோரையும் வரவழைத்து அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்வது, கிரிமினல்களைப்போல அவர்களைப் படம் எடுப்பது என profile களை உருவாக்குகின்றனர். நெல்பேட்டையில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு profile செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஒருவர். அனாதரவாக உள்ளவர்களை மிரட்டி அவர்களைக் காவல்துறை உளவாளிகளாக (informers) இருக்கக் கட்டாயப்படுத்துவது என இப்பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் அத்துமீறல்களும் சட்ட விரோதமாக குடிமக்களின் அந்தரங்கங்களில் தலையிடல்களும் நடக்கின்றன. நெல்பேட்டையில் கணவனை இழந்து, சொந்தத் தொழில் செய்து தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வரும் ஒரு பெண்ணை NCHRO குழு சந்தித்தது. தன்னை ஒரு informer ஆக இருக்க மதுரை காவல்துறை எத்தனை கொடூரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சொல்லிக் கேட்டபோது அதிர்ச்சி அடைந்தோம்.

இப்படி ஒரு சமூகத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகம் வாழும் சில பகுதிகளையும் “சந்தேகத்திற்குரிய சமூகங்களாகவும்”. “சந்தேகத்திற்குரிய  பகுதிகளாகவும்” கட்டமைப்பது அடிப்படை மனித நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமானதும், தேச ஒற்றுமையை அழிப்பதும் கூட.

இதை எல்லாம் தட்டிக் கேட்கும் அளவிற்கு அரசியல் கட்சிகள் எதுவும் தார்மீக பலம் உள்ளவையாக இப்போது இல்லை. இன்னொரு பக்கம் அரசு ஆதரவுடன் வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல் இரையைப் பிடிக்க வரும் ஒரு பாம்பு போலத் ட்ய்ஹிறந்த வாயுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்து நெளிந்து இங்கே வந்து கொண்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரங்களிலும், சிறுபான்மையர் செறிந்து வாழும் பிற பகுதிகளிலும் இந்த நிலையை யாரும் காண இயலும்.

3

உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து அறிக்கை ஒன்றை எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. அது ஒரு கவனம் மிக்க கடினமான பணி மட்டுமல்ல. மிகவும் அறம் சார்ந்த பணியும் கூட. இரு தரப்பு நியாயங்களையும் கேட்டு தீர்ப்பு எழுதும் ஒரு நீதிபதியின் பணியை விட இது கடுமையானது. ஒரு நீதிபதிக்கு முன் எல்லாத் தரவுகளும் ஆய்வுக்கு வைக்கப்பட்டிருக்கும், வழக்குரைஞர்களின் வாதமும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். தவிரவும் நீதிபதிக்கு அபரிமிதமான அதிகாரமும் கையில்  உண்டு. அவர் கேட்கும் தரவுகளை அரசு தந்தாக வேண்டும். ஆனால் ஒரு உண்மை அறியும் குழுவோ இவை எதுவும் இல்லாமல் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீண்ட வரலாறு உடைய ஒரு பிரச்சினையை ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

சில நேரங்கலில் ‘போஸ்ட்மார்டம் ரிபோர்ட்’ போன்ற தகவல்கள் கூட நாம் போகிற நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் இருக்கும். அல்லது தர இயலாது, வேண்டுமானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தட்டிக் கழிக்கக் கூடும். இத்தனைக்கும் மத்தியில்தான் நாம் அறிக்கையை எழுதியாக வேண்டும்.

இத்தகைய தருணங்களில் எல்லா உண்மைகளையும் நம்மால் சொல்லிவிட இயலாது. சொல்லவும் தேவை இல்லை. எந்த விடயங்களில் ஐயம் உள்ளதோ, எந்த விடயங்களில் உண்மைகள் உள்ளதாக நாம் நமக்குக் கிடைத்த வாக்குமூலங்களின் ஊடாகவும் சாட்சியங்களின் ஊடாகவும் அறிகிறோமோ அவற்றை கவனப்படுத்தி அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும் எனச் சொன்னால் அதுவே பெரிய விடயம். ஒரு நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை ஆர்வலர்களின் குழு இவ்வாறு ஐயங்களை முன் வைக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிய வைப்பதே நமக்குக் கிடைக்கிற முதல் கட்ட வெற்றியாக இருக்கும்.

“நம்பகத்தன்மை” என்று சொன்னேன். ஒரு உண்மை அறியும் குழுவின் மிகப் பெரிய பலம் மட்டுமல்ல, ஒரே பலமும் அதுதான். இவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள், தாங்கள் கொண்டுள்ள கருத்து நிலையின் அடிப்படையில் பொய்யான தகவல்களையோ, மிகைப்படுத்திய தகவல்களையோ சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையைச் சம்பாதிப்பது ஒரு மனித உரிமைப் போராளிக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

இதன் பொருள் நாம் “நடுநிலையாளர்களாக” இருக்க வேண்டும் என்பதல்ல. “நடுநிலையாளர்கள்” மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதும் அல்ல.

நாம் எப்படி நடுநிலையாளர்களாக இருக்க இயலும்? காவல்துறை தன்னிடமுள்ள அபரிமிதமான அதிகாரத்தை வைத்து ஒரு எளிய மனிதனைச் சட்ட விரோதமாகக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து கொல்லும்போதும், ஒரு ஆதிக்க சாதிக் கும்பல் தலித் ஒருவரை எரித்துக் கொல்லும்போதும், ஒரு பெரும்பான்மைப் பிரிவு இன்னொரு சிறுபான்மையின் உரிமைகளையும் உயிரையும் பறிக்கும் போதும் எப்படி நாம் நடுநிலையாளர்களாக இருக்க முடியும்? நாம் பாதிக்கப்பட்டவர்களோடுதான் நிற்க இயலும்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. நடுநிலையாளர்கள் மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதல்ல.  சார்புடையவர்களும் உண்மையைச் சொல்ல இயலும். நாம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்புடையவர்கள். உண்மையைப் பேசுவது நமக்கு இன்னும் எளிது. பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை உள்ளதை உள்ளபடிச் சொன்னாலே நமக்குப் போதும். அதுதான் நமக்குப் பலம். அந்தான் நம்மைக் காப்பாற்றும். “உண்மை வெல்லும்” என்பது வேறெதற்குச் சரியோ இல்லையோ ஒரு உண்மை அறியும் குழுவுக்கு அது வேத வாக்கியம்.

உண்மை அறியும் குழுவில் செல்பவர்க்கு இது ஒரு சவாலான பணி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மட்டுமல்ல. பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடச் சொல்வது எல்லாம் உண்மை என நாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவற்றில் மிகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. பொதுவாகவே மிகைப்படுத்தும் பண்பு மக்களுக்கு உண்டு சற்றுப் பெரிய ஒரு பாம்பைப் பார்த்து விட்டு வந்தால், “தொடைப் பெரிசு ஒரு பாம்பைப் பார்த்தேன்” என்பார்கள். சில நேரங்களில் வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பதும் உண்டு. அதே போல அதிகாரிகள் அல்லது ஆதிக்க நிலையில் உள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக நாம் மறுத்துவிட வேண்டியதும் இல்லை. உண்மை வெல்லும் என்பதுபோல “எல்லாவற்றையும் சந்தேகி” என்பதும் நமக்கு ஒரு வழிகாட்டு நெறிதான். ஆனால் சந்தேகத்தின் ஊடாக அங்கே தெரியும் உண்மையின் கீற்றுகளை நாம் முற்றாகப் புறந்தள்ளவும் வேண்டியதில்லை.

நாம் மனித உரிமை மீறல்களைக் கண்டு உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். அந்த உணர்ச்சிவயம்தான் நம்மை இந்தப் பணிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த உணர்ச்சி வயத்தை நாம் நம் அறிக்கையில் வெளிப்படுத்தாமலும் இருக்க முடியாது. வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதும் இல்லை. ஒரு மிகப் பெரிய மனிதத் துயரம் நம் கண்முன் விரிந்து கிடக்கும்போது நாம் எப்படி உணர்ச்சிவயப்படாமல் இருக்க இயலும்? நாம் எப்படி அதிலிருந்து விலகி நின்று எதையும் பேச இயலும்? நாம் அந்தத் துயரத்தோடும் துயரர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் எழுத முடியும். நாம் பாதிக்கப்பட்டவர்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதா இல்லை, உண்மைகளைக் கண்டறிவதற்காகவும் சொல்வதற்காகவும் நம்மை அவர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதா என்பதல்ல பிரச்சினை. எப்படி இந்த இரண்டு நிலைகளையும் ஒரு புள்ளியில் குவிப்பது என்பதுதான் ஒரு மனித உரிமை எழுத்தாளனின் முன் உள்ள சவால். மிகவும் புறவயமாக விலகி நின்று எழுதும்போது அது வரட்டுத்தனமாக மட்டுமல்ல அது அடிப்படை மனித நேய நெறிகளுக்கு எதிரானதாகவும் அமையும்; அதே நேரத்தில் வெறும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து எழுதும்போது அது உண்மையற்றும் திரிக்கப்பட்டதாகவும் போய்விடக் கூடும்.

அதேபோல கோரிக்கைகளை வைக்கும்போது அவை உச்சபட்சமாக இருக்கும் அதே நேரத்தில் அவை காரிய சாத்தியமானதாகவும், நடைமுறையில் உள்ள எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அந்த எல்லைகளைக் கடக்க முயல்வதாகவும் அமைதல் அவசியம்.

இந் நூலிலுள்ள அறிக்கைகள் அனைத்தும் இந்த வகையில் எழுதப்பட்டவை என நான் உரிமை கோரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த லட்சியங்களுக்கு மிகவும் நெருக்கமாக முன்னேறிச் செல்வதுதான் எங்கள் நோக்கம். எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரது மனித உரிமை மீறல்களையும் பேசுவது என நாங்கள் எங்களை குறுக்கிக் கொள்ளவில்லை. எங்கள் அறிக்கைகளில் பலவும் தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் பாதிப்புகளைப் பேசுவதாக அமைவதென்பது இன்றைய சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான். அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காக் நாங்கள் கான்சாபுரம் கிட்டப்பாக்களின் பிரச்சினைகளை விட்டுவிடுவதுமில்லை.

இப்போதெல்லாம் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் ஏராளமான மனித உரிமை அறிக்கைகள் வெளிவருவது, அப்படிப் ‘பிரபலமாகாத’ பிரச்சினைகள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது என்கிற ஒரு நிலை ஏற்பட்டு வருவதையும் கவனிக்கலாம். நாங்கள் இந்த அம்சத்திலும் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறோம்.

மனித உரிமைப் பணி என்பது அவ்வளவு புகழுக்குரிய பணி அல்ல. நிறைய உழைப்பையும் செலவையும் கோரும் பணி. நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்கக் கூடிய பணியும் கூட. இந்தப் பணியில் ஈடுபாட்டுடன் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் தோழர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். பலநேரங்களில் சில நல்ல அதிகாரிகள் எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைத்துள்ளார்கள். அதேபோல எங்கள் அறிக்கைகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையங்கள் முதலியனவும் எங்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. எல்லோருக்கும் நன்றிகள்.

அ.மார்க்ஸ்,

பிப் 09, 2016

தலைவர், மனித உரிமை அமைப்புகLiன் தேசியக் கூட்டமைப்பு (NCHRO)

சென்னை

 

புனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்?

சென்ற ஜூன் முதல் வாரத்தில் புனே நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முஸ்லிம்கள் மத்தியில் இரட்டிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இழப்பு, அதன் மூலமாக உருவாக்கப்பட்ட அச்சம் என்பது ஒரு பக்கம். இது அரங்கேற்றப்பட்ட நேரம் உருவாக்கியுள்ள அச்சம் இன்னொரு பக்கம். பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் பதவி ஏறியுள்ள நிலை, “நான் ஒரு இந்து தேசியவாதி” எனத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் ஒருவர் பிரதமராகியுள்ள சூழல், இந்தப் பின்னணியில் ‘இந்து ராஷ்டிர சேனா’ என்கிற ஒரு அமைப்பு முன்நின்று, இதர முஸ்லிம் வெறுப்பு சக்திகளை இணைத்து நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய அச்சத்தை சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதை நேரில் கண்டபோது மிக்க வேதனை ஏற்பட்டது.

‘மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூடமைப்பு’ (NCHRO) சார்பாக அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பங்கேற்று புனே சென்ற போது சென்ற ஜூன் 17,18,19,20 ஆகிய தேதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட தாக்கப்பட்ட மசூதிகள், உடைத்து நொறுக்கிச் சேதம் விளைவிக்கப்பட்ட முஸ்லிம்களின் கடைகள் எல்லாவற்றையும் நேரில் சென்று பார்த்தோம். மாவட்ட ஆட்சியர் சவ்ரவ் ராய், துணை ஆட்சியர் சுரேஷ் ஜாதவ், இந்தத் தாக்குதல்களை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் பி.கே பந்தார்கர், கோபினாத் படீல் ஆகியோரையும் சந்தித்தோம்.

எங்கள் குழுவில் NCHRO அமைப்பின் தேசியச் செயலாளர் ரெனி எய்லின், மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஷபனா கான், பபிதா கேஷர்வாணி, பூனாவில் செயல் படும் கபீர் கலா மஞ்ச் அமைப்பின் சுதிர் தவாலே மற்றும் ரூபாலி ஜாதவ், பென்களூருவைச் சேர்ந்த பேரா ஜி.கே இராமசாமி ஆகியோர் இருந்தனர். உள்ளூர் நண்பர்கள் சிலரும், பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பின் பொறுப்பாளர்கள் இருவரும் தாக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காட்டினர்.

பிரச்சினை மே மாத இறுதியில் தொடங்கியது. யாரோ ஒரு நபர் அல்லது ஒரு சிலர் முகநூலில் மகாராஷ்ட்ர இந்துத்துவ அரசியலின் திரு உருக்களான (icons) சிவாஜி மன்னன், சிவசேனை நிறுவனர் பால் தாக்கரே ஆகியோரை இழிவு படுத்தி ஒரு பதிவைச் செய்துள்ளனர். இன்று வரை அது யார், எங்கிருந்து செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. பதிலி ‘சர்வர்’களின் (proxy servers) மூலமாக வெளி நாடுகளிலிருந்து இப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன; இதன் மூல நபர் அல்லது நபர்கள் யார் எனக் கண்டு பிடிப்பது அத்தனை எளிது அல்ல எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து நாங்கள் மாவட்ட இணை ஆட்சியரிடம் கேட்டபோது அவரும் இதையே திருப்பிச் சொன்னதோடு, கூடுதலாக, “தற்போது இந்தோனேசியாவிலிருந்து இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் இது உறுதியான செய்தி அல்ல” என்றார்.

ஆக இன்று வரை அது யார் செய்தது எனத் தெரியவில்லை. அந்தப் பதிவைப் பகிர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்ப்பு கிளம்பியவுடன் காவல் துறையின் சைபர் பிரிவு இந்தப் பதிவுகளையும் பகிர்வுகளையும் நீக்கியுள்ளது. இந்த அரசியல் உள் நோக்கமுள்ள பதிவை யார் வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும். சிவாஜியையும் தாக்கரேயையும் பிடிக்காதவர்களும் செய்திருக்கலாம்; முஸ்லிம்களின் மீது பழி போட்டு ஒரு வன்முறையைத் தூண்டத் திட்டமிட்டவர்களும் கூடச் செய்திருக்கலாம். முசாபர் நவர் கலவரம் இவ்வாறான ஒரு போலி வீடியோவை இணையத்தின் ஊடாகப் பரப்பியதன் மூலம் தூண்டப்பட்டது என்பது கவனத்துக்குரியது.

இங்கும் கூட, இந்த விஷமத்தனமான பதிவுக்கு யார் காரணமாக இருந்திருந்த போதிலும் அரசும், காவல் துறையும், பொறுப்பான அரசியல் தலைவர்களும் உடனடியாகக் களத்தில் இறங்கி உண்மையை விளக்குதற்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கவும் வேண்டும். ஆனால் அரசும் காவல்துறையும் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.

தனஞ்சை தேசாய் என்கிற நபரின் தலைமையில் சில ஆண்டுகளாக பூனா நகரில் இயங்கி வரும் ‘இந்து ராஷ்டிர சேனா’ எனும் அமைப்பு இந்த முக நூல் பதிவை ஒட்டி மே இறுதி வாரத்தில் ஆங்காங்கு வன்முறையில் ஈடுபட்டது. தொடக்கத்தில் அரசுச் சொத்துக்களே தாக்கப்பட்டன. 250 அரசுப் பேருந்துகளை வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சவ்ரவ் கூறினார். மே 31 முதல் வன்முறையின் இலக்கு முஸ்லிம்கள் மீது திருப்பப் பட்டது.

வன்முறைகள்

மே 31 இரவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஹான்டேவாடி, லோனி, லான்டேவாடி, போசெரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் தொழுகைத் தலங்கள், மதரசாக்கள், கடைகள் ஆகியன தாக்கப்பட்டன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் (இரவு 9 மணி முதல் 12 வரை) ஒரே மாதிரியாகத் தாக்கப்பட்டுள்ளன. மோட்டர் சைகிள்களில் வந்த 19 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இதைச் செய்துள்ளனர். எல்லோர் கைகளிலும் உருட்டுக் கட்டைகள். இரும்புத் தடிகள், ஹாக்கி மற்ரும் கிரிக்கெட் மட்டைகள், தல்வார் (கத்திகள்) ஆகிய ஆயுதங்கள் இருந்துள்ளன. தாக்கியவர்கள் பெட்ரோலும் கைவசம் வைத்திருந்துள்ளனர்.

“ஜெய் பவானி”, “ஜெய் மகாராஷ்டிரா” என்கிற முழக்கங்களுடன் தாக்குதல்கள் நடந்துள்ளது. தாக்குதல்கள் வெளியிலிருந்து கற்களை வீசி கண்ணாடி சன்னல்கள் மற்றும் கதவுகளை உடைப்பதுடன் தொடங்கியுள்ளன. போசெரி யில் உள்ள நூர் மொஹல்லா வில் முஸ்லிம்களின் 40 வீடுகள் இவ்வாறு சேதப்படுத்தபட்டுள்ளன. வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள லான்டேவாடியில் உள்ள மதீனா மசூதி அடித்து நொறுக்கப் பட்டுள்ளதோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கவும் பட்டுள்ளது. அப்போது மாடியில் 12 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்ட 35 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்துள்ளனர். எல்லோரும் பக்கத்து மாடிக்குத் தாவிக் குதித்துத் தப்பியுள்ளனர். தாவிக் குதிக்கும்போது மவுலவி முகம்மது ஆலத்தின் கால் முறிந்து இன்னும் அவர் சிகிச்சையில் உள்ளார்.

ஹான்டேவாடியில் உள்ள மேமன் மசூதி தாக்கப்பட்டபோதும் அங்கும் குழந்தைகள் படித்துக் கொண்டு இருந்துள்ளனர். தொழிலதிபர் மேமன் என்பவரால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த புதிய மசூதி குறி வைத்துத் தாக்கப்படுள்ளது. இரவு 9 மணிமுதல் அரை மணி நேர இடைவெளிகளில் மும்முறை தாக்குதல் நடந்ததாகவும் போலீசுக்குப் பலமுறை தகவல் கொடுத்தும் எல்லாம் முடிந்தபின் இரவு 12 மணிக்குத்தான் அவர்கள் வந்தனர் என்றும் மேமன் நிர்வாக மேலாளர் முகம்மது அசீஸ் ஷேக் கூறினார். அதே நேரத்தில்தான் வான்டேவாடி மசூதியும் எரிக்கப்பட்டது, அடுத்த கட்டிடத்தில் இருந்த தீயணைப்பு அலுவலகத்தைப் பலமுறை தொடர்பு கொண்டும் தீயை அணைக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஹான்டேவாடியில் மஸ்ஜித் ஏ சுடேஜா என்ற இன்னொரு தொழுகைத் தலமும் தாக்கப்பட்டுள்ளது. அதன் மவுலவி தலைக் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார்.

புனே நகர விளிம்பில் உள்ள சோனி என்னுமிடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ரோஸ் பேகரி, பெங்களூர் பேக்கரி, மகாராஷ்ட்ரா பேக்கரி ஆகியவை கற்கள் வீசித் தாக்கப்பட்டு கண்ணாடி ஷோ கேஸ்கள், ஃப்ரிட்ஜுகள், ஷட்டர் கதவுகள் முதலியன நொறுக்கப்பட்டுள்ளன. தனது பேக்கரியில் இருந்த 35,000 ரூபாய் பணத்தையும் தாக்க வந்தவர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாக ரோஸ் பேக்கரி உரிமையாளர் ஷபான் சுலைமான் ஷேக் கூறினார். போகிற வழியில் உள்ள ஆலம்கிர் மசூதியையும் கல்வீசித் தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.

இறந்தவர்கள் மீதும் கலவரக்காரர்கள் இரக்கம் காட்டவில்லை. லான்டேவாடியில் உள்ள ஒரு கபர்ஸ்தானில் இருக்கும் கல்லறைகளையும் ஒரு தகரம் வேய்ந்த தொழுகைத் தலத்தையும் அவர்கள் உடைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி நடந்துள்ளன என்பதையும். இவற்றில் 35 லிருந்து 70 அல்லது 80 பேர்கள் வரை பங்கு பெற்றுள்ளனர் என்பதையும் மீண்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஜூன் 2 கொடுந் தாக்குதல்

தாக்குதல் நடந்தபோது எங்குமே உடனடியாகக் காவல்துறை வந்து பாதுகாப்பு அளிக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதன் பின் அடுத்த நாளும் கூட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறப்புக் காவல் படை முதலியவற்றை நிறுத்துவது முதலான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதன் விளைவு ஜூன் 2 புனே முஸ்லிம்களுக்கு இன்னும் கொடிய பொழுதாக விடிந்தது. ஒன்றைப் புரிவது அவசியம். புனே முஸ்லிம்கள் பெரிய அளவு வசதியானவர்கள் அல்ல. தாக்கப்பட்ட மசூதிகள் பலவும் மிகவும் எளிமையானவை. தகரக் கூறைகள், இரும்பு ஏணி மாடிப் படிகள் இப்படியாலானவை. புனே மக்களுக்கு ரொட்டி (bread) ஒரு முக்கிய உணவு. ரொட்டிக் கடைகள் பலவும் உ.பி முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. இவர்களில் பலருக்கு மராட்டி மொழியும் தெரிந்திருக்கவில்லை. மகாராஷ்டிர இந்துத்துவ சக்திகள் தற்போது வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்து தொழில் செய்யும் ‘இந்திக்காரர்களை’க் குறி வைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருள் தாக்குதல் காரர்களின் இலக்கு மகாராஷ்டிர முஸ்லிம்கள் அல்ல என்பதல்ல. அடுத்த இரண்டு நாளில் கொல்லப்பட்ட மொஹ்சின் ஒரு மகாராஷ்ட்ர முஸ்லிம்தான்.

ஜூன் 2 இரவிலும் இதேபோல இதே நேரத்தில் இதே வடிவத்தில் பல இடங்களில் முஸ்லிம்களின் பேக்கரிகள், ஓட்டல்கள், மசூதிகள், வீடுகள் முதலியன தாக்கப்பட்டன. காலேபடேல், சையத் நகர், ஹடாஸ்பர் மார்கெட், உன்னதி நகர் முதலிய பகுதிகள் அன்று குறிவைக்கப்பட்டன. படேல் பேக்கரி, வெல்கம் பேக்கரி, பாரடைஸ் பேக்கரி, சகாரா ஓட்டல், நல்பந்த் மசூதி முதலியன நாங்கள் நேரில் சென்று பார்த்தவற்றில் ஒரு சில. சகாரா ஓட்டலை ஒட்டி முஸ்லிம்களுடன் நெருக்கமாக வசித்துக் கொண்டுள்ள தலித் பவுத்தக் குடியிருப்பு ஒன்றையும் கலவரக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. நீலா படுகோம்பே எனும் பெண்மணியும் மாருதி பாபா ஷின்டே எனும் பெரியவரும், “நாங்க 45 வருசமா இங்கே இருக்கிறோம். இப்படி நடந்ததே இல்லை” என்றனர். உருளி தேவாச்சி எனுமிடத்திலும் ஒரு ஜும்மா மசூதி தாக்கப்பட்டுப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் பார்த்தோம்.

இந்தத் தாக்குதல்களின் ஓரம்சமாகத்தான் சோலாப்பூரிலிருந்து வந்து இங்கு ஸ்வார்கேட் பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த அந்த இளம் பொறியாளர் ஷேக் மொஹ்சின் (28) அடித்துக் கொல்லப்பட்டது. ஹடாஸ்பரில் உள்ள உன்னதி நகர் ஷைன் அஞ்சுமன் மசூதியில் இரவு நேரத் தொழுகையை முடித்துவிட்டு, நண்பன் ரியாஸ் அகமது முபாரக் ஷெந்த்ருவைத் தனது பைக்கின் பில்லியனில் அமரவைத்துக் கொண்டு இரவு 9 மணி வாக்கில் மொஹ்சின் புறப்பட்டபோது அவருக்கு இந்த மசூதியில் தான் தொழுவது இதுதான் கடைசி முறையாக இருக்கும் எனத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஒரு முன்னூறு மீட்டர் தொலைவு கூடச் சென்றிருக்க மாட்டார்கள். “ஜெய் பவானி”, “ஜெய் மகாராஷ்ட்ரா” என வெறித்தனமாக முழங்கிக் கொண்டு பைக்கில் இரும்புத் தடிகள், ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டைகளுடன் வந்த கும்பலைக் கண்டு தங்களின் பைக்கை ஓரமாக ஒதுக்கி நிறுத்தியுள்ளனர். மொஹ்சினின் குறுந்தாடியும் அவர் அணிந்திருந்த ஷெர்வானியும் அவரை அடையாளப் படுத்தின. கிரிக்கெட் மட்டைகளும் இரும்புத் தடிகளும் அவர் மீது உக்கிரமாக இறங்கின. பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரியாஸ் முபாரக் உடற் காயங்களுடன் தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் மொஹ்சினை விட்டுவிட்டு அந்தக் கும்பல் புறப்பட்டபோது சுமார் நூறு மீட்டர் தொலைவில் இத்தனையையும் கண்களில் அச்சத்துடன் கண்டு திகைத்து நின்றிருந்த இசாஸ் யூசுஃப் பாக்வான், அமீர் ஷேக் ஆகிய இருவரையும் பார்த்துள்ளது. தம்மை நோக்கி அந்தக் கும்பல் வருவதைக் கண்டு ஓடிய இசாஸ் அப்படியே தன் கிராமத்திற்குச் சென்றவர்தான். இன்னும் திரும்பவில்லை. கையில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பிய அமீர் ஷேக்கின் கண்களில் இன்னும் அச்சம் விலகவில்லை.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மொஹ்சின் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

அஞ்சுமன் மசூதிக்கு நாங்கள் சென்றபோது மதிய நேரத் தொழுகையை முடித்துவிட்டு இமாமும் மற்றவர்களும் வெளியே வந்தனர். மொஹ்சின் அந்த மசூதிக்கு நேரம் தவறாமல் தொழுகைக்கு வரும் இளைஞன். தனது சம்பாத்தியத்தில் சோலாப்பூரில் இருந்த தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவர். எந்த இயக்கம் அல்லது அரசியல் தொடர்பும் இல்லாதவர். கண்களில் நீர் மல்க எல்லோரும் மொஹ்சினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை அங்கே ‘பாதுகாப்பு’க்கு அமர்த்தப்பட்டிருந்த காவலர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

அமீர்ஷேக்கின் நிலை பரிதாபமானது. 29 வயது. திருமணமானவர். இரண்டு குழந்தைகள். பழைய இரும்பு வணிகம். சம்பவத்திற்குப் பின் அவரிடம் யாரும் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. மொஹ்சினின் கொலைக்கு அவர் நேரடி சாட்சி. அதுவே அவரது உயிருக்கு ஆபத்தும் கூட.

நாங்கள் என்ன செய்ய இயலும். கைகளைப் பற்றி தைரியம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றோம்.

இன்று அங்கே…

எங்கள் மதிப்பீட்டின்படி 40 வீடுகள், 25 மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 5 எரிக்கப்பட்டுள்ளன. 35 டூ வீலர்கள், 29 சைக்கிள்கள். 5 டெம்போக்கள், 10 பழ வண்டிகள் (தேலாக்கள்), ஒரு பெட்ரோல் பங்க், சுமார் 30 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மொத்த சொத்திழப்பு சுமார் 4.5 கோடி ரூபாய்கள் இருக்கலாம். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மரணம்.

இந்துக்கள் தரப்பில் நால்வர் காயமடைந்துள்ளனர். கஸ்பாபேட் என்னுமிடத்தில் மசூதியைத் தாக்க வந்த கும்பலை அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் எதிர்த்தபோது இது நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடைபெற்றுள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் சுமார் 20 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 200 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹ்சின் கொலை தொடர்பாக 23 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹ்சின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கலவர இழப்பு நிதியிலிருந்து மேலும் 5 லட்சமும், மத்திய அரசிடமிருந்து 3 லட்சமும் பெற்றுத் தர இயலும் எனவும் மாவட்ட ஆட்சியர் எங்களிடம் கூறினார். காயம்பட்டவர்களுக்கும், சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கும் எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது இதற்கான பரிந்துரை எதுவும் காவல்துறையிடமிருந்து வரவில்லை என்றார். காவல்துறை அந்தத் திசையில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் கடைகள் தாக்கப்பட்டவர்கள் தம் சொந்தச் செலவில் ரிப்பேர் வேலைகளைச் செய்து கொண்டு அடுத்த பத்துப் பதினைந்டு நாட்களில் மீண்டும் கடைகளைத் திறந்துள்ளனர். இனி இழப்பீட்டை மதிப்பிடுவதற்கு யாரும் வந்தால் உரிய தடயங்களும் இருக்கப்போவதில்லை. வெல்கம் பேக்கரி வாசலில் எரிக்கப்பட்ட ரொட்டி சுடும் எந்திரம் கிடந்ததைப் பாத்தோம்.

காயம்பட்டவர்களுகான இழப்பீடு குறித்துக் கேட்டபோது ஏழு நாட்களுக்கு மேல் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு மட்டுந்தான் இழப்பீடு தர சட்டத்தில் இடமுண்டு என்றனர். ஆனால் அச்சம் காரணமாகக் காயம் பட்ட ஏழு பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் உடனடியாக வீடு திரும்பியுள்ள்னர்,

மொத்தத்தில் சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களும் நடந்தது நடந்து விட்டது; இழப்பீட்டிற்குக் காத்திராமல் வணிகத்தைத் தொடர்வோம் என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர்.

இழப்பீட்டுத் தொகைகளைத் தாக்கியவர்களிடமே வசூலிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என மாவட்ட ஆட்சியரைக் கேட்டபொழுது, ஒரு கணம் திகைத்த அவர், தாக்கியவர்கள் யார் என உறுதியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கும் முயற்சிப்போம் என்றார்.

இந்து ராஷ்ட்ர சேனா

தாக்குதல்களில் முக்க்கிய பங்கு வகித்த இந்து ராஷ்டிர சேனா அமைப்பு தடை செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது குறித்துக் கேட்டபோது அது தொடர்பாக காவல் துறை ஆணையரிடமிருந்து பரிந்துரை வரவேண்டும் எனப் பதில் வந்தது. அதோடு தாக்குதலில் இந்து ராஷ்டிர சேனா மட்டும் பங்கு கொள்ளவில்லை. வேறு சிலருக்கும் பங்கிருந்ததற்கு வாய்ப்புள்ளது என்றும் பதில் வந்தது. கைது செய்யப்பட்ட எல்லோரும் இந்து ராஷ்ட்ர சேனா உறுப்பினர்கள் தான் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இவ் அமைப்பு உறுப்பினர் பட்டியல் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்றார் விசாரணை அதிகாரி கோபினாத் படீல்

அதிகாரிகள் சொல்வதில் சில உண்மைகள் இல்லாமலும் இல்லை. இந்தத் தாக்குதலை முனெடுத்தது இந்து ராஷ்ட்ர சேனாதான் என்ற போதுலும் சில இடங்களில் தன்னை ஒரு மதச்சார்பற்றக் கட்சி எனச் சொல்லிக் கொள்ளும் தேசியக் காங்கிரஸ் கட்சியினரும் (NCP) தாக்குதலில் பங்கு பெற்றுள்ளனர். இது இன்று மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி என்பது குறிப்பிடத் தக்கது. ஜாமாத் ஏ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த பேரா, அசார் அலி வார்சியும் இதைக் குறிப்பிட்டார்.

இதில் கவனத்திற்குரிய அம்சம் என்னவெனில் இந்துத்துவத்தின் பிளவு அரசியல் மகாராஷ்டிரத்தின் மதச் சார்பற்ற சக்திகளிடமும் புரையோடிப் போயுள்ளது என்பதுதான். திலகர், சாவர்க்கர் காலத்திலிருந்து இந்துத்துவம் ஆழ வேர் பாய்ச்சியுள்ள ஒரு மாநிலம் அது. சமீப காலங்களில் இந்துத்துவ பயங்கரவாதத்தின் தலை நகரமாகவும் அது உள்ளது. மல்கேயான், நான்டிட் முதலான இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள், சாத்வி ப்ரக்ஞா கும்பலுடன் இராணுவ அதிகாரிகள் பலர் தொடர்பு கொண்டிருப்பது, இந்துத்துவ சக்திகள் நடத்தும் போன்சாலா இராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகியன மகாராஷ்ட்ராவை மையம் கொண்டு செயல்படுவதை நாம் மறந்துவிட இயலாது.

இந்துத்துவ பயங்கரவாதத்தைப் புலனாய்வு செய்த நேர்மையான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரேயின் கொலையில் ஒளிந்துள்ள மர்மம் இன்னும் முழுமையாகக் கட்டவிழ்க்கப்படவில்லை. இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் மகாராஷ்டிரத்தை மையங் கொண்டு செயல் பட்டு வருவது குறித்த கவன ஈர்ப்பை 2010 தொடங்கி பல்வேறு நல்லெண்ணங் கொண்ட அமைப்புகளும் மகாராஷ்ட்ர மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் காவல்துறை அதைப் பொரருட் படுத்தவில்லை என்கிறார் முன்னாள் மகாராஷ்ட்ர காவல்துறை ஐ.ஜி முஷ்ரிஃப்.

இந்தப் பின்னணியில் இருந்துதான் கடந்த சில ஆண்டுகளாக புனேயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிற மும்பையைச் சேர்ந்த தனஞ்சய் தேசாயுடைய இந்து ராஷ்ட்ர சேனாவின் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அமைப்பு குறித்து பல கட்டுரைகள் மராட்டிய ஆங்கில இதழ்களில் கிடைக்கின்றன. புனேயில் மட்டும் சுமார் 4000 பேர் தேசாயின் பின்னுள்ளனர் எனக் கூறப்படுகிறது. உயர் சாதியைச் சேர்ந்த தனஞ்சை தேசாயின் இந்த ஆதரவாளர்கள் அனைவரும் பெரும்பாலும் அடி நிலையினர். அவ்வளவு பேரும் வேலை இல்லாத இளைஞர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்வது, நிலத் தகராறுகள், ரியல் எஸ்டேட் பிரச்சினைகளில் தலையிடுவது முதலான செயல்பாடுகளினூடாக இந்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வருமானம் ஈட்ட வழி செய்யப் படுகிறது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.

தேசாய் மீது மும்பையிலும் புனேயிலும் குறைந்த பட்சம் 22 வழக்குகள் உள்ளன. அவற்றில் மூன்று கொள்ளை மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பானவை. பிற அனைத்தும் வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பானவை, 2007ம் ஆண்டில் ஒரு இந்துப் பெண் முஸ்லிம் இளைஞனைக் காதலித்து ஓடிப் போனது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்தபோது தேசாய் மற்றும் இந்து ராஷ்ட்ர சேனாவினர் கவனத்திற்கு வந்தனர். பின்னர் வெடி குண்டு வழக்குகளில் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது இவர்கள் நீதிமன்றத்தின் முனறந்தக் கைதுகளைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

புனேயைப் பொருத்த மட்டில் 12 சதம் மக்கள் முஸ்லிம்கள். இன்று தாக்குதல் நடந்துள்ளவை அவர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதிகள் லான்டேவாடி, ஹடாப்சர் முதலான பகுதிகளில் இந்து ராஷ்ட்ர சேனா வலுவாக உள்ளது. அங்குதான் தாக்குதல்களும் வலுவாக நடந்துள்ளன.

வரலாற்று ரீதியாக மராட்டிய ஆட்சியின் மையமான புனேயில் கரந்த 15 ஆண்டுகளாக வலதுசாரி இந்துத்துவ சக்திகள் தீவிரமாக வேலை செய்கின்றன. சென்ற ஜனவரி 5, 2004ல் ‘சாம்பாஜி பிரிகேட்’ என்கிற அமைப்பினர் புனேயின் புகழ் பெற்ற ‘பன்டார்கர் கீழைத் தேய ஆய்வு நிறுவனத்தை’ (BORI) தாக்கி புத்தகங்கள் முதலியவற்றை அழித்தனர். சில பேராசிரியர்களும் தாக்கப்பட்டனர். ஜேம்ஸ் லெய்ன் என்கிற அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய “சிவாஜி: முஸ்லிம் நாட்டில் ஒரு இந்து அரசன்” என்கிற நூலில் உள்ள கருத்துக்கள் சில தங்களுக்குப் பிடிக்காததால், அந்த நூலாசிரியர் நன்றி சொல்லியுள்ள ஆந்த ஆய்வு நூலகத்தையும் பேராசிரியர்களையும் தாங்கள் தாக்கியதாக சாம்பாஜி பிரிகேட் கூறியது. ஜனவரி 13, 2010ல் தகவல் உரிமைப் போராளி சதீஷ் ஷெட்டி என்பவர் தால்கேயான் என்னுமிடத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். 2013 ஆகஸ்ட் 20 அன்று புகழ்பெற்ற பகுத்தறிவுவாதி டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து நாளிதழில் இதைக் கண்டித்து எழுதிய திரைப்படம் மற்ரும் நாடகத் தயாரிப்பாளரும் நடிகருமான அமோல் பலேல்கர், “இந்த ஆண்டு இதுவரை 10 சமூகப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் புனேயில் கொல்லப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். இந்த 5 பேர்களில் ஜூலை 8, 2013ல் கொல்லப்பட்ட பிரகாஷ் கோந்தாலே ஒருவர். இந்துத்துவ வெறுப்பு அரசியலைக் கடுமையாக எதிந்த்து வந்த கோந்தாலேயைக் கொன்றதற்காக இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளோர் இந்து ராஷ்ட்ர சேனா அமைப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று புனே முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள் இந்தத் தாக்குதல்களை இந்தப் பின்னணிகளிலிருந்து நாம் பார்க்க வேண்டும். மொஹ்சினின் கொலை என்பது அவரது தாடி மற்றும் அவர் அணிந்திருந்த ஷெர்வானி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வெறும் தற்செயலான நடவடிக்கை அல்ல. அதற்குப்பின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையும் சதிச் செயலும் உள்ளன. மொஹ்சின் இல்லாவிட்டால் தாடியும் தொப்பியும் அணிந்த வேறொரு முஸ்லிம் அன்று கொல்லப்பட்டிருப்பார் என்பதுதான் உண்மை.

பிரச்சினை மிகவும் ‘சீரியசான’ ஒன்று. தனஞ்சய் தேசாய் மீது இன்று சதித்திட்ட வழக்கு போடப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. காவல்துறை, நிர்வாகம், ஆளும் கூட்டணிக் கட்சி எல்லாவற்றிலும் புரையோடிப்போயுள்ள இந்துத்துவக் கருத்தியல் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதி கிடைக்காது என்கிற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. தனஞ்சை தேசாய் மற்றும் இந்து ராஷ்டிர சேனாவை ஏதோ இன்னொரு இந்துத்துவ அமைப்பு எனக் காணாமல் இந்தத் தாக்குதலின் பின்னணி இன்னும் விரிவான பயங்கரவாதத் தொடர்புகளுடையது என்கிற நோக்கிலிருந்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இன்றைய சூழலில் இது சாத்தியமா?

சாத்தியமாகாவிட்டால் இது போன்ற தாக்குதல்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் அதிகமாகலாம்.

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்

இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை டைப் செய்து அனுப்பினேன். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவனை நான் சென்ற வாரம் ஹைதராபாத்தில் பார்த்தேன். இதே UAPA சட்டத்திற்கெதிரான கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில்தானே முடியும்.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று விரிவாகப் பேசமுடியவில்லையே ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார்.ஆயுதங்களுடன் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவது, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி.

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வானில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் முன்னால் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல். தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுத்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானிற்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா/”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

லேடி போயிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உடகார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன். ‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’…”

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லவில்லையா இம்ரான்?”

“இல்லை. கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா சொன்னா உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டிடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச 120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையறவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்’

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷப்னம் கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷப்னத்தின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.