நேற்று முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக நடந்த ம.ம.கவின் ஆர்பாட்டத்திலும், சி.பி.ஐ கட்சியின் ஆதரவில் உருவாகியுள்ள ‘இன்சாஃப்’ அமைப்பின் அறைக்கூட்டத்திலும் பேசினேன்.
பல்லாயிரம் பேர் திரண்டிருந்த மமக ஆர்பாட்டத்தில் நிறையப் பேர்கள் பேச இருந்ததால மிகச் சுருக்கமாகவும், இன்சாஃப் கூட்டத்தில் நானே சிறப்புரை என்பதால் மிக விரிவாகப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. நான் பேசியதன் சுருக்கம்: 1. கோவை தொடர்குண்டு வெடிப்பை ஒட்டி ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு , சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து அப்துல் நாசர் மதானி உட்பட ஏராளமான பலர் குற்றமர்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அப்போதும் இன்னும் 171 பேர்கள் சிறைகளில் இருந்தனர். அவர்களில் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் மிகச் சிலரே. மற்ற பலரும் அப்பாவிகள். ஆனால் யாருமமிந்த அப்பாவிகள் குறித்துப் பேச இயலாத நிலை. அப்படி பேசினாலும் மெல்லிய குரலில் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனச் சொல்லத்தான் முடிந்தது. அதுவும் முஸ்லிம்களின் உதடுகளிலிருந்து மட்டுமே அந்தக் கோரிக்கை ஒலித்துக் கொண்டிருந்தது. அந்நிலையில் மூன்று இளைஞர்கள், அப்துல் கய்யூம், நாகூர் இமானி, இப்றாஹீம் எனும் மூன்று இளைஞர்கள், அவர்களும் சிறையிலிருந்து விடுதலை ஆகி இருந்தவர்கள், சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் படும் துயரங்கள், சக கைதிகளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும் மறுக்கப்படும் அவலம் ஆகியவற்றை எல்லாம் தொகுத்துக் கொண்டு ஒவ்வொரு தலைவர்களாக அணுகிக் கொண்டிருந்தனர். அவர்களது நியாயமான கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய என்னைப் போன்றவர்களையும் பார்த்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகூர் நிஜாமுதீன் அவர்கள் அந்த இளைஞர்களுக்குத் துணையாக இருந்தார். 2. நான் அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இந்திய அளவிலான அமைப்பில் துணைத் தலைவராக இருந்தேன். இது தொடர்பாக ஒரு மாநாடு போடுவதென முடிவு செய்தோம். காவல்துறையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, சென்னை ருஷியன் கல்சுரல் சென்டரில் அம்மாநாடு ஜூலை 5, 2008ல் நடந்தது. டெல்லியிலிருந்து எஸ்.ஏ.ஆர்.கிலானி, கல்கத்தாவிலிருந்து அமி்த் பட்டாசார்யா, தமிழகத்தின் மூத்த அரசியல் கைதி தோழர் ஆர்.நல்லகண்ணு, இன்னொரு முக்கிய அரசியல் கைதி, தோழர் தியாகு, இன்னொரு முன்னாள் அரசியல் கைதி தோழர் சுகுமாரன், பார்த்திமா முசாஃபர் எனப் பலரும் அந்தக் கூட்டத்தில் பேசினர். த.மு.முகவின் அப்போதைய பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூட்டத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவரை வற்புறுத்தி அழைத்துப் பேசச் சொன்னேன். அவரும் மேடையேறி அன்றைய த.மு.மு.க பொதுக் குழுவில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தொடர்பாகத் தீர்மானம் இயற்றியதைப் பகிர்ந்து கொண்டார். 3. தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக அனைத்து முஸ்லிம் இயக்கங்குளும் களத்தில் இறங்கின. நூற்றுக்கணக்கான ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்… எனினும் பிற கைதிகளுக்கு கிடைத்த மன்னிப்பு, விடுதலை, பிணையில் வெளி வரும் வாய்ப்பு… எதுவும் முஸ்லிம் கைதிகளுக்குக் கிட்டவில்லை. திமுக ஆட்சியில் அண்ணா பிறந்த நாட்களில் சுமார் 1500 பேர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும் முஸ்லிம் கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்றைய தேதியில் இன்னும் 49 முஸ்லிம் கைதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். உயிருக்குப் போராடும் அபுதாஹிர் உட்பட. ஏற்கனவே ஒருவர் சிறையிலேயே இறந்துள்ளார். 4. இன்னும் கூட முஸ்லிம் கைதிகள் விடுதலை என்பது பொதுக் கோரிக்கையாக உருப்பெறவில்லை. ஏழு தமிழர்கள் விடுதலை எனும் நியாயமான கோரிக்கைகளை எழுப்புகிறவர்கள் கூட இந்த 49 முஸ்லிம் கைதிகளையும் சேர்த்து 56 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனச் சொல்வதில்லை. ஆனால் முஸ்லிம்கள், இன்று நடந்து கொண்டிருக்கும் ஆர்பாட்டத்திலும் கூட “பேரறிவாளன் உள்ளிட்ட..” என்றுதான் முழங்குகின்றனர். சட்டமன்றத்திலும் ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் எல்லோருடைய விடுதலைக்காகவும் சேர்த்துத்தான் பேசுகின்றனர். 5. சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரட் தலைமையில் ஒரு குழு சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 22 பேர்களின் வரலாற்றைக் காட்டி நாடெங்கிலும் சிஒறையில் அடைப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினர். இன்று சிபிஐ சார்பான இன்சாஃப் அமைப்பு இந்தக் கோரிக்கையை எழுப்புகிறது. இப்படி இந்தக் கோரிக்கை பரவலாவது மகிழ்ச்சி. 4.அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி சிறை கைதிகளை மன்னித்து விடுதலை செய்வதற்கு மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் 56 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் இன்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அரசுகளும், ஏன் உச்ச நீதி மன்றமும் CrPC 435 வது பிரிவைக் காட்டித்தான் அதை மறுக்கிறது. இந்தப் பிரிவு, வெடி மருந்துச் சட்டம் முதலான மத்திய சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டோரையும், மத்திய புலனாய்வு நிறுவனகளால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டவர்களையும் தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்கிறது. மத்திய அரசுடன் கலந்தாலோசித்தே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 5. கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணான இந்தச் சட்டப் பிரிவு உடன் நீக்கப்பட வேண்டும். மன்னிப்பு என்பதற்கும் செய்த குற்றத்திற்கும் தொடர்பில்லை. செய்த குற்றத்தின் தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனை அனுபவித்து முடிந்த பிறகு மன்னிப்பது என்பது அந்த நபரின் வயது, சூழல், இன்று அவர் குடும்பம் உள்ள நிலை, இடைப்பட்ட ஆண்டுகளில் குற்றம் செய்தவர் திருந்தியுள்ள நிலை ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு செய்யப்பட வேண்டிய முடிவு அது. அதனால்தான் ஜனநாயக நாடுகளில் இந்த அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லாமல் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்குத் தரப்பட்டுள்ளது. இந்தக் காரணிகளை ஆராய்ந்து மன்னிப்பு அளிக்கும் தகுதி அருகில் உள்ள மாநில அரசுக்குத்தான் உண்டே ஒழிய தொலைவில் உள்ள மத்திய அரசுக்குக் கிடையாது. சிறைக் கைதிகள் விடுதலைக்காகப் போராடும் நாம் எல்லோரும் இணையாக இன்னொரு பக்கம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ள CrPC 435ம் பிரிவை நீக்கவும் போராட வேண்டும். அரசியல் சட்டமே அனைத்து இதரச் சட்டங்களுக்கும் தாய். அதற்கு முரணான இதர சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும். |
|
பிப் 08, 2016
இந்தத் தேர்தலில் (2016) முஸ்லிம்கள்…
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழka முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது. ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது. இதை நான் மனதார வரவேற்கிறேன். முஸ்லிம்கள் போன்ற இன்றைய மதவாத பாசிசத்தால் இலக்காக்கப்படுகிற மக்கட் பிரிவினரிடம் இத்தகைய ஒற்றுமை அவசியம். எப்படியாவது ஆளுக்கொரு பிரிவை வளைத்துப் போட்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்கிற எண்ணம் பெரிய கட்சிகளுக்கு வந்துவிடக் கூடாது. ஆனால் அப்படித்தான் இதுவரை நடந்து வந்துள்ளது. ஆனால் இம்முறை அப்படி நாங்கள் பிருந்துபோய்விட மாட்டோம் என்பதை முஸ்லிம் அம்மைப்புகள் வெளிப்படுத்திவிட்டன. ஆணவத்தின் உருவமான ஜெயலலிதா உண்மையில் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும். அவருக்கு ஒரு நல்ல பாடம் இதன் மூலம் கற்பிக்கப்பட்டுவிட்டது. மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற முயன்றது, மோடியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவைப் பேணுவது. தங்களின் இயற்கைக் கூட்டாளி என ஒரு முறை அத்வானியால் பாராட்டப்பட்டது என முஸ்லிம்கள் அதிமுகவிடம் இருந்து விலகி நிற்கப் பல நியாயங்கள் உண்டு. அதே போல ஒப்பீட்டளவில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவுடன் நெருங்கி நிற்பதற்கும் பாரம்பரியமாகப் பல நியாயங்கள் உண்டு. உ்ண்மையில் கருணாநிதியின் நம்பிக்கைத் துரோகம்தான் முஸ்லிம்கள் முழுமையாகத் தம் ஆதரவை முந்திய தேர்தல்களில் திமுகவுக்கு அளிக்க இயலாமற் போனதற்கான அடிப்படையாக இருந்தது. கோவைக் கலவரங்களின் போது அதிகாரத்தில் இருந்த அவர் நடந்து கொண்ட முறை, சிறைக் கைதிகள் விடுதலை விஷயத்தில் நடந்து கொண்டது முதலியன சில எடுத்துக்காட்டுகள். பாபர் மசூதி இடிப்பிலும் கூட மிகவும் வன்மையான எதிர்ப்பை திமுக செய்யவில்லை. “ஏன் சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு கண்டனக் கூட்டம் போட்டோமே..” என ஒருமுறை கருணாநிதி அதை ஒரு சாதனையாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால் இதை எல்லாம் மறந்து இன்று முஸ்லி ம்கள் முழுமையாக திமுகவுடன் நிற்கத் துணிந்தது இன்றைய கால நிலையில் சரியான முடிவுதான்,அகில இந்திய அளவில் மதச்சார்பின்மையை முன்நிறு்த்தி இயங்கும் காங்கிரசும் இக்கூட்டணியில் இருக்கும் நிலையில் முஸ்லிகள் இங்கு நிற்பதே சரியானது. திமுக இதை உணர்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்கள் விஷயத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளூம் என எதிர்பார்ப்போம். இந்துத்துவ எதிர்ப்பில் மற்றவர்களைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் உண்மையாக இருந்த போதிலும் ஏன் இன்று முஸ்லிம்கள் அவர்களோடு இல்லை? இதற்கும் பாரம்பரியமாகப் பல காரணங்கள் உண்டு. கம்யூனிஸ்டுகள் வலுவாக உள்ள கேரளம், மே.வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் முப்புது ஆண்டுகளுக்கும் மேல் இடதுசாரிகள் ஆண்டும் மே.வங்கத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை படு மோசமாக உள்ளதை சச்சார் அறிகை சுட்டிக் காட்டியுள்ளது. இன்று முஸ்லிம்கள் அங்கு மம்தாவுடன் நிற்கின்றனர். கேரளத்திலும் SDPI யும் இடதுசாரிகளும் எதிர் எதிராக உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு போன்ற நிகழ்விலும் கூட கம்யூனிஸ்டுகள் இன்னும் வலிமையாகவும் உண்மையாகவும் முஸ்லிம்களோடு நின்றிருக்க வேண்டும். போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். பாபர் மசூதி இருக்கும் ஃபைசாபாத் நாடாளுமன்றத் தொகுதி பாரம்பரியமாக சிபிஐ வெற்றி பெற்ற தொகுதி என்பது நினைவிற்குரியது. இன்று அங்கும் அது தோல்வியைத் தழுவியுள்ளது. எப்படி இன்று கம்யூனிஸ்டுகள் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சங்கம் அமைத்தால் மட்டும் போதாது, தீன்டாமை ஒழிப்பிற்கும் சங்கம் வைத்து தலித் மக்களுக்காகவும் நிற்க வேண்டும் என முடிவெடுத்துச் செயல்படுகிறார்களோ அதே போல சிறுபான்மை மக்களுக்காகவும் இயக்கங்கள், வெகு ஜன அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி போராடி அவர்களின் நம்பிக்கையைக் கம்யூனிஸ்டுகள் பெற்றாக வேண்டும். விவசாயிகள் + தொழிலாளிகள்+ தலித்கள்+ சிறுபான்மையினர் என்பதாக இந்த இணைவு எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். சரி, தொடங்கிய இடத்திற்கு வருகிறேன். தமிழக முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுகள் ஏதும் இன்றி முழுமையாக இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து நி்ற்பதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன் |
மார்ச் 24, 2016