கடந்த சில நாட்களில் நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி மனதை நெகிழ்த்தியது. அசாமிய மொழிக் கவிஞரும் நாவலாசிரியருமான ரீடா சவுத்ரியுடன் தொடர்புடைய செய்தி அது. ரீடா அசாமிலுள்ள காட்டன் கல்லூரியில் ‘அரசியல் அறிவுத் துறை’ பேராசிரியையும் கூட. அவரது 602 பக்க நாவல் “மகம்” சாகித்ய அகாதமி பரிசை (2008) மட்டுமல்ல இதுவரை நான்கு பதிப்புகளையும் கண்டுள்ளது. ‘மகம்’ என்கிற சீன மொழிச் (Cantonese) சொல்லுக்குத் தங்கக் குதிரை என்று பொருளாம்.
அசாம் போராட்டத்தின்போது தலைமறைவாக இருந்த நிலையில் அவர் எழுதிய “அபிரத ஜாத்ரா” (நில்லாத நெடும்பயணம்) எனும் நாவலுக்காக அசாம் சாகித்ய சபா பரிசும் (1981) அவருக்குக் கிட்டியது.
‘மகம்’ சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் (1962) இந்திய அரசு இழைத்த ஒரு பெருங் கொடுமையை மையமாக வைத்து இயங்கும் ஒரு நாவல். அசாமின் மேற்பகுதி எண்ணைக்கு மட்டுமல்ல தேயிலைக்கும் புகழ் பெற்றது. அருகிலுள்ள மார்கரிடாவைச் சேர்ந்த ரீடா சவுத்ரி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பதின் வயதுச் சிறுமியாக அவ்வழியே பயணம் செய்தபோது இந்திய அரசின் கொடுங் கரங்களால் கசக்கி எறியப்பட்ட ஒரு சிறு சமூகத்தின் எச்ச சொச்சங்களைக் கண்டாள். அவர்கள் “சீனர்கள்’” என அடையாளப்படுத்தப்பட்டார்கள். இவர்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என அந்தச் சிறு வயதில் அப் பெண் கொண்ட மன உறுதி பின்னாளில் விரிந்த ஆய்வாகவும், அற்புத இலக்கியமொன்றாகவும் முடிந்தது.
19ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிடிட்டிஷ் தேயிலைத் தோட்ட முதலாளிகளால் சீனாவிலிருந்து கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளிகள் அசாமியப் பெண்களை மணந்து கொண்டு இங்குள்ள மக்களுடன் ஒன்றிணைந்தனர்,
நவம்பர் 19, 1962 அவர்களுக்கு மறக்க இயலாத துன்ப நாளாக விடிந்தது. இந்திய சீனப் போர் அவர்களின் வாழ்வைக் குலைத்தது. நூறாண்டுகளுக்கும் மேலாகத் தம் வேர்களை இழந்து, இம்மண்ணையே தாயகமாக வாழ்ந்திருந்த இந்த அப்பாவித் தொழிலாளிகளைச் சீனர்களாக மட்டுமல்ல. ”தேச எதிரிகளாகவும்” இந்திய அரசு அடையாளம் கண்டது. உருவத் தோற்றம், சீன மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனர்கள் என்றும், இந்தியர்கள் என்றும் அடையாளங்கண்டு, மகூம் என்னுமிடத்திலிருந்த சீனப் பட்டியிலிருந்த 1500 “சீனர்களை’க் கைது செய்து ராஜஸ்தானிற்குக் கொண்டு சென்றது. டியோல் எனும் இடத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் அவர்களை அடைத்தது. குடும்பங்கள் சிதைந்தன. கணவரிடமிருந்து மனைவியர், பெற்றோரிடமிருந்து குழந்தைகள் எல்லாம் வன்முறையாகப் பிரிக்கப்பட்டனர்.
வெற்றி முகத்துடன் இருந்தபோதும் சீனா தன்னிச்சையாகப் போரை நிறுத்திக் கொண்டதோடன்றி, கைப்பற்றிய பகுதிகளிலிருந்து பின் வாங்கவும் செய்தது. அதன் பின் இந்திய அரசு இந்த 1500 பேரையும் சீனத்திற்கு நாடுகடத்தியது. அது மட்டுமல்ல அவர்களின் சொத்துக்களை “எதிரிகளின் சொத்து” (enemy property) என அறிவித்துத் தான் எடுத்துக் கொண்டது.
இந்திய அரசின் தவறான அணுகல்முறைகள் இந்திய சீனப் போருக்கு வழியமைத்ததையும், இந்தியா இதன் மூலம் தோல்வியை மட்டுமின்றிப் பெரிய அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததையும் பலரும் எழுதியுள்ளனர். நானும் இந்திய சீனப் போரின் 50ம் ஆண்டு நிறைவை ஒட்டி எழுதிய கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இந்திய அரசு இப்படி ஒரு மனித விரோதச் செயலை செய்தது பலருக்கும் தெரியாது.
இது குறித்து ஆய்வு செய்த ரீடா இந்த மக்களில் (Assamese People of China Origin) சிலர் ஹாங்காங்கில் இருப்பதை அறிந்து தொடர்பு கொண்டார்.. இவர்கள் இன்னும் அசாமிய மொழியில் அல்லது இந்தி கலந்த அசாமிய மொழியில்தான் பேசுகின்றனர். “நாங்கள் சீனாவுக்கு உளவு பார்த்ததில்லை. எங்களை ஏன் இப்படிச் செய்தார்கள்?” என அவர்கள் கேட்டபோது ரீடாவால் தலை குனிய மட்டுமே முடிந்துள்ளது. “இன்னும் அவர்கள் இந்தியாவைத்தான் தங்களின் ‘ஜனம் ஜகா’வாக’க் (தாயகமாக) கருதுகிறார்கள்” என்கிறார் ரீடா. அது மாத்திரமல்ல இன்னும் கூட மகூமில் ஒன்பதக்சீன வம்சாவழிக் குடும்பங்கள், தாங்கள் அடையாளம் காணப்படும் நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உறைந்து வாழ்வதையும் ரீடா அறிந்தார்.
நாவல் எழுதியதோடு தன் வேலை முடிந்து விட்டதாக ரீடா நினைக்கவில்லை. ஹாங்காங்கில் வாழும் இவர்களை அரசு அனுமதியுடன் மீண்டும் அசாம் அழைத்து வந்து தாம் வாழ்ந்த இடங்களை, சின்ன வயதில் ஓடி ஆடித் திரிந்த வீதிகளை, படித்த பள்ளிகளைப் பார்த்துக் கடந்த கால அனுபவங்களைக் கண நேரம் உயிர்பிகத்துக் கொள்ளவும் வழி வகுத்தார்.
முதலமைச்சர் தாருண் கோகோயும் பெரிய மனது பண்ணி, ‘அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை வந்து பார்த்துச் செல்ல’ அனுமதி அளித்ததோடன்றி, தான் அவர்களை முறைப்படி வரவேற்பதாகவும் சொல்லச் சொன்னார். சென்ற சனியன்று (அக் 19) அவர்களில் சிலர் கவ்ஹாதி வந்து சேர்ந்தனர்.
ரீடாவின் ‘மகம்’ நாவலின் முக்கிய பாத்திரம் இப்படியாகப் பிரிக்கப்பட்ட ‘சீனப்’ பெண் ஒருத்திதான்.. பெயர் பார்வதி கோவாலா. அவரது மகள் ஹோ யுஇட் மிங்’கிற்கு அப்போது வயது எட்டு. அவரது அசாமியப் பெயர் அஞ்சலி கோவாலா. வந்துள்ளவர்களில் அவரும் ஒருவர்,
“அசாமுக்கு வந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் கூட எனது சின்ன வயது நண்பர்கள் சிலரின் பெயர்கள் நினைவில் இருக்கின்றன. நான் மகூமுக்குச் செல்வேன். அவர்களைச் சந்திப்பேன்” என்றார் அஞ்சலி. அவரது தந்தை ஹோ கோங் வா ஒரு கைவினைத் தொழிலாளி. பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகளால் கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவர். அசாம் அமைப்புகள் சிலவும், தோட்டத் தொழிலாளிகளின் மாணவர் அமைப்பு ஒன்றும், இதர சில சமூக இலக்கிய அமைப்புகளும் வந்திருக்கும் ஏழு பேர்களுக்கும் வரவேற்பளிக்கின்றன. டிப் புயான் இயக்கத்தில் ரீடா தயாரித்துள்ள இந்தச் சீன வம்சாவழியினர் குறித்த “The Divided Soul” எனும் ஆவணப்படமொன்றும் திரையிடப்பட்டது. அசாம் அரசு தமக்குப் பிறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என கவ்ஹாத்தி வரவேற்பின்போது மிங் வேண்டிக் கொண்டார்.
ஹாங்காங்கில் முதன் முதலாக தான் மிங்கைச் சந்தித்தபோது அவர் உணர்ச்சி வயமாகி, “மகூமுக்கு ஒரு முறை வருவது என் வாழ் நாள் கனவு” எனக் கூறியதை ரீடா நினைவு கூர்ந்தார்.
“அவர்களுக்கு இழைத்த தீங்கிற்கு நாம் ஈடு செய்துவிட இயலாது. குறந்தபட்சம் இந்த 48 ஆண்டுகளில் அவர்கள் பட்ட வேதனைகளுக்கு நம் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவிக்கலாம். இந்தியா இதை முறைப்படி அறிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை நாம் திருப்பித் தந்துவிட இயலாது. அவை ஏலமிடப்பட்டுவிட்டன. குறைந்தபட்சம் அரசு அவர்களிடம் மன்னிப்புக் கோரலாம். அவர்களின் குடியுரிமையை மீள் அளிப்புச் செய்யலாம். இந்த அநீதி மேற்கொள்ளப்பட்டபோது நமது ஜனநாயகம் அரும்புப் பருவத்தில் இருந்தது. நமது ஊடகங்களோ, மனித உரிமைச் சிந்தனைகளோ போதிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை” என்றும் ரீடா கூறியுள்ளார்.
இந்தச் செய்திகளை நான் வாசித்தபோது இந்திய அரசின் கொடுஞ் செயல்கள், அந்தச் சீன வம்சாவளியினர் அடைந்த ஈடு செய்ய இயலா இழப்புகள் எல்லாவற்றைக் காட்டிலும் எழுத்தாளர் ரீடா சவுத்ரியின் மன விசாலிப்பும் மற்றமையின் மீதான கரிசனமும்தான் நெஞ்சை நெகிழ்த்தியது.
1984ல் இந்திரா கொலையை ஒட்டி டெல்லியில் சீக்கியர்கள் மீது நடந்த வன்முறையின் நேரடி சாட்சியாக இருக்க நேர்ந்த எழுத்தாளர் அமிதவ் கோஷ் அதை எவ்வாறு அணுகினார் என்பதை இந்தப் பக்கங்களில் நான் எழுதியுள்ளேன். அவரது இது தொடர்பான முழுக் கட்டுரையையும் கூட இங்கே பகிர்ந்து கொண்டேன்.
அவரது முதல் நாவல் The Circle of Reason 1985ல் வெளிவந்தது. சீக்கியர்கள் மீதான வன்முறைக்கு அடுத்த ஆண்டு. இது குறித்து அவர் சமீபத்தில் சுனில் சேத்தியிடம் பகிர்ந்து கொண்ட போது (Outlook, Sep 30, 2013), 1984 சம்பவங்கள்தான் தன் நாவலுக்குத் தூண்டு பொறியாய் அமைந்ததாகக் கூறியுள்ளார். “எனது வாழ்க்கை எவ்வாறு கலவரங்கள் என்கிற வலையால் சூழப்பட்டுள்ளது என்பதைத்தான் 1984 எனக்குச் சுட்டிக் காட்டியது” என்றுள்ளார்.
யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோருமே இப்படியான வலைப்பின்னலுக்குள்தான் சிக்கி வாழ்ந்து கொண்டுள்ளோம். உலகளவில், இந்திய அளவில், தமிழக அளவில் இப்படியான வன்முறைகள், வெறுப்பு அரசியல், மற்றமை மீதான வன் கொடுமைகள், ‘அந்நியர்’ குறித்த வித விதமான வரையறைகள் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன. அவற்றுக்குள்தான் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம். தமிழ் எழுத்துக்கள் எந்த அளவிற்கு இவை குறித்த பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன? மாறாக மிக வெளிப்படையாகவும் வெட்கமில்லாமலும் மற்றமைகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் வெறுப்பை விதைக்கும் இயக்கங்களோடும் சிலர் தம் எழுத்தை அடையாளப்படுத்தப்படும் சூழல் தமிழில் உருவாகி வருவது எதைக் காட்டுகிறது?
ரீடா சவுத்ரியின் முயற்சிகளை வாசித்தபோது என் நெஞ்சில் கிளர்ந்த கேள்விகள் இவை.