ஸ்டூவர்ட் ஹால் குறித்து காயத்ரி ஸ்பிவக்

hall
ஸ்டூவர்ட் ஹால்

2014 பிப்ரவரியில் தனது 82 வது வயதில் காலமான அறிஞரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஸ்டூவர்ட் ஹாலைப் பற்றி கூறுகையில் Cultural Politics என்கிற கருத்தாக்கத்தையும் பேரா ஸ்டூவர்ட் ஹாலையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க இயலாது என்பார்கள்.

ஹால் குறித்த இந்த அற்புதமான இரங்கல் கட்டுரையை எழுதியுள்ளவர் வாழும் மிக முக்கியமான மெய்யியல் சிந்தனையாளர் காயத்ரி ஸ்பிவக். “2003ல் எட்வர்ட் செய்த் இறந்தார். 2004ல் ழாக் தெரிதா இறந்தார், சென்ற ஆண்டு கோஃபி அவூனோர் கொல்லப்பட்டார். ஒரு தலைமுறை அறிவாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், அறிவாளிக் களச் செயல்பாட்டாளர்கள் (Intellectuals, Activists and Intellectual Activists) இப்படி மறைந்து வருகின்றனரே” என இக் கட்டுரையைத் தொடங்குகிறார் ஸ்பிவக்..

இவர்கள் மட்டுமா? சென்ற மார்ச்சில் பேராசிரியர் பிரியான் பார்ரி, ஏப்ரலில் ஏர்னஸ்டோ லகூலா என ஒவ்வோருவராக நமது களச் செயல்பாட்டுச் சிந்தனையாளர்கள் இறந்து கொண்டுள்ளனர். ரேமன்ட் வில்லியம்ஸ். ரிச்சர்ட் ஹோகார்ட், ரால்ஃப் மிலிபான்ட் எனத் தொடங்கும் இந்தப் பாரம்பரியம் முன்வைத்த இலக்கிய, கலாச்சார, அரசியல் கோட்பாடுகள் என்பன இவர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாற்றிலிருந்தும் அரசியலிலிருந்தும் பிரிக்க இயலாதவை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய பனிப்போர்க் காலத்திய உலக அரசியலின் பின்னணியில் உருவான ‘புதிய இடது’ச் சிந்தனை மரபில் வந்தவர்கள் இவர்கள். Universities and Left Review மற்றும் New Reasoner முதலான அன்றைய நவ இடதுச் சிந்தனை மரபில் உதித்த இதழ்கள் இரண்டும் இணைந்து New Left Review ஆக வடிவெடுத்தபோது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்டூவர்ட் ஹால். இதிலும் Marxism Today யிலும் அவர் எழுதிய கட்டுரைகள் பிரிட்டிஷ் இடதுசாரிகள் மத்தியில் மட்டுமின்றி பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் போக்கிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தாட்சரின் பொருளாதார அரசியல் கொள்கைகளின் மீதும் கடும் விமர்சனங்களை வைத்தார் ஹால். ‘தாட்சரிசம்’ என்கிற சொல்லாடல் அவர் உருவாக்கியதுதான். அதேபோல டோனி ப்ளேயரை பிரியான் பார்ரி கடுமையாக விமர்சித்தார்.

1964ல் ரிச்சார்ட் ஹோகர்ட்டால் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட Contemporary Cultural Studies Programme ல் முதல் ஆய்வாளாராக இணைந்த ஹால், ஹோகார்ட்டுக்குப் பின் அதன் இயக்குனர் ஆனார், கலாச்சாரம், அரசியல், அதிகாரம் ஆகியவை பின்னிப் பிணைந்திருப்பது மற்றும் மாறிவரும் பண்பாட்டு அடையாளங்கள் குறித்த அவரது பங்களிப்புகள் முக்கியமானவை. மொழி இயல், கலாச்சார மானுடவியல், இலக்கியக் கோட்பாடு ஆகிய பன்முகக் கல்விப் புலங்களின் சங்கமிப்பாக கலாச்சார ஆய்வுகள் அமைந்தன. ரோலான் பார்த்ஸ், உம்பர்டோ ஈகோ ஆகியோரது Semiotics ஐ உள்வாங்கி ஹால் உருவாக்கிய ஊடகக் கோட்பாடும் (encoding and decoding philosophy) முக்கியமான ஒன்று.

காயத்ரி ஸ்பிவக்கின் இக்கட்டுரையைக் கருத்தூன்றிப் படியுங்கள். ஒரு மிக முக்கியமான தத்துவவியலாளராகவும், கோட்பாட்டாளராகவும் மட்டுமே காயத்ரி ஸ்பிவக்கை அறிந்திருப்பவர்களுக்கு அவர் இக்கட்டுரையில் வெளிப்படுத்தும் மிக நுணுக்கமான அரசியல் பார்வை வியப்பை அளிக்கும். 1950க்குப் பிந்திய உலக வரலாற்றில் ஸ்டூவர்ட் ஹாலை அடையாளப்படுத்தி நிறுத்தும் காயத்ரி 1983ல் சாம்பெய்னில் இருந்த Marxist Cultural Interpretation Institute ல் ஸ்டூவர்ட் ஹாலைச் சந்தித்தது தனது நல்லதிர்ஷ்டம் என்கிறார்.

After Pan-Africanism : Placing Stuart Hall, Gayatri Chakravorty Spivak

https://www.radicalphilosophy.com/obituary/stuart-hall-1932-2014