இஸ்லாமியப் புனித  நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு

 

சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான” துறையின் சார்பில் “மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது” குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன். வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று – இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் அப்படி ஒன்றும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும், பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா’ குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.

எனினும் புனித நூற்கள் (Scriptures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்’ பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் (arbitrary) தன்மை  சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். “எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது” என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர், “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்’ பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.

சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது. துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான’ அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் சொல்லப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வார்த்தைகட்கு விஞ்ஞானத்திடம் சான்றிதழ் கோருவதுதான் எத்தனை முரண்?

இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்’துகள் என்றே அழைக்கப்படும். அதாவது Parables, நீதிக்கதைகள், உருவகக் கதைகள். சுவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான். என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.

இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.

இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

  1. திருக்குர்ஆன் – இறைவனால் நேரடியாக அருளப்பட்டது என்பது முஸ்லிம்களின் மிக அடிப்படையான நம்பிக்கை.
  2. `ஹதீஸ்’ மற்றும் `சீறத்’கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்’கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.
  3. `ஷரியத்’கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.

இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:

(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.

(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.

(இ) 634-644 : கலிபா உமர் – இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.

(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.

இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: சன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்’களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன.  1.அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம்  2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம் 3. ஷாஃபி (இ.820) சட்டம்  4.இப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம். எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.

இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்’திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்’தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா’ விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (முடா) அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்’ முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதூத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி’ எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்’ அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். “நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்” என்கிறார் அஸ்மா.

திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (hermeneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல.

தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.

அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி’ _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91). வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை “நாம் நிச்சயமாக விசாரிப்போம்” என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (misogyny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தந்தைமையையும் (fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன் தான் `போராடி’ உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார். மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா’. இதற்கு `அடிப்பது’ என்பது தவிர `பிரிப்பது’ என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது’ என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?

`நுஷூஸ்’ என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை’ என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்’ குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு. இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது’ என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு.