வெள்ளம் கற்றுத் தந்த பாடங்கள்

சென்ற மாதம் தமிழகத்தைத் தாக்கி அழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் இன்று வடிந்திருந்த போதும். இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியிருந்த போதும், முழு பாதிப்புகளில் இருந்தும் மீண்டு வருவதற்கு இன்னும் ஓராண்டுக்கும் மேலாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தவிரவும் நவீன தொழில் நகரமாக உருப்பெறும் சென்னையைப் பொருத்த மட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அழிவு முதலீட்டு வாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சிகளையும் பெரிய அளவில் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையில் இந்த மழை வெள்ள அபாயத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 289. கணக்கில் வராமல் ‘காணாமல்’ போனவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். சென்னை வெள்ளத்தைப் பொருத்தமட்டில் நடுத்தர மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மொத்தத்தில் எல்லா மாவட்டங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்போர் வழக்கம்போல அடித்தள மக்கள்தான்.

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இந்த வெள்ள அழிவு குறித்த பார்வைகள் பலவற்றிலும் அவரவர் அரசியல் நோக்கங்கள் வெளிப்பட்டதை யாரும் எளிதில் கண்டு கொள்ள இயலும். இவற்றுக்கு அப்பால் நீர் மேலாண்மை குறித்தும், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் கரிசனம் கொண்டவர்கள் பலரும் ஆழம் மிக்க நடுநிலையான கருத்துக்களைச் சொல்லியுள்ளனர். இவை நம் கவனத்துக்குரியன. 

குறுகிய அரசியல் பார்வைகள் மிகவும் ஆபத்தானவை

சென்னை மற்றும் கடலூர் வெள்ள  அழிவு குறித்து முன்வைக்கப்படும் மூன்று பார்வைகளை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

  1. 114 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பெருமழை இ்ன்று பெய்துள்ளது. பாரிசில் நடைபெற்ற பருவ மாற்றங்கள் குறித்த உலகளாவிய மாநாட்டிற்குச் செல்லும் முன் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜவடேகர் புவி வெப்பமாதலே இந்தப் பெரு வெள்ள அழிவுக்குக் காரணம் எனவும், இத்தகைய வெப்ப நிலை உயர்வுக்கு மேலை நாடுகளே காரணம் எனவும் குற்றம் சாட்டினார். (எனினும் பாரிஸ் மாநாட்டில் இந்திய அரசு எந்தப் பெரிய எதிர்ப்பும் இன்றி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.)
  1. நீராதாரங்கள், நீர்ப்போக்கு வழிகள் முதலியன குறி்த்த அரசுகளின் அறிவின்மை இன்றைய அழிவில் முக்கிய பங்கு வகிக்கிறது.. நீர்மேலாண்மைத் துறையில் வல்லுனரான டாக்டர் ஜனகராஜன் குறிப்பிடுவது போல இது குறித்த அடிப்படைப் புரிதல்களுடன் அரசுகள் செயல்பட்டதே இல்லை. பெரிய அளவில் ஏரிகள் நீர்ப்போக்கு வழிகள் ஆகியவற்றில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் தலையிட்டு லாபம் சம்பாதிப்பதில் இதுவரை ஆண்ட அரசுகள் அனைத்தும் பெருந் தவறுகள் செய்துள்ளன. சென்னை விமான நிலைய விரிவாக்கம், மதுரை உயர்நீதிமன்ற வளாகம்முதலான அரசு திட்டங்கள் தொடங்கி கல்வி வியாபாரிகளின் பல்கலைக்கழக உருவாக்கங்கள் வரை இந்தத் தவறுகள் நடந்துள்ளன. இந்தக் கொடுமை அரசுகளின் முழு ஒத்துழைப்புகளுடன் நடந்துள்ளது. நீர்நிலைகள் பராமரிப்பு, முறையாகத் தூர் வாருதல், கரைகளை உயர்த்துதல் முதலியவற்றை இதுவரை ஆண்ட அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன.

3.இன்றைய வெள்ள ஆபத்து இந்தப் பின்னணியில் உருவானது என்பதை மனதில் கொண்டு இன்றைய இந்த ஆபத்தை எதிர்கொண்டதில் ஜெயா அரசு செய்துள்ள கடுந் தவறுகளை நாம் விமர்சிக்க வேண்டும். போதிய முன்னெச்சரிக்கைகள் இருந்தும் அரசு உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கத் தவறியுள்ளது. வீராணம் ஏரி, நெய்வேலி அனல்மின் நிலையச் சுரங்க நீர், செம்பரம்பாக்கம் எரி முதலியவற்றை முன்னெச்சரிக்கையின்றித் திறந்து விட்ட கொடுமைபெரிய அளவில் அழிவுகளுக்குக் காரணமாகியுள்ளன.. அதிகாரங்கள் பெரிய அளவில் மையப்படுத்தப்பட்டிருந்தது இ்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. நிவாரணப் பணி,மறு குடியமர்த்தும் பணி என அனைத்திலும் ஜெயா அரசு தோல்வியுற்றுள்ளது. இன்று நடந்துள்ள உயிர்ப்பலிகள் அனைத்திற்கும் இந்த அரசே பொறுப்பு.

இந்த மூன்று அம்சங்களையும் அவை அவைக்கு உரிய முக்கியத்துவங்களுடன் அணுகுதலும் பரிசீலிப்பதும் அவசியம்.

புவி வெப்பமடைவதைப் பொருத்த மட்டில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது நம் கையில் மட்டும் இல்லை.

அடுத்து இன்றைய ஆபத்தை எதிர்கொள்வதில் ஜெயா அரசின் தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது அவசியம். ஒரளவு ஊடகங்கள் இதைச் செய்துள்ளன.

ஆனால் இது மட்டுமே போதும் எனச்சொல்வது அப்பட்டமான அரசியல்மட்டுமல்ல உண்மையான காரணங்களையும் நிரந்தரமான தீர்வுகள் குறித்த பிரக்ஞையையும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் திசை திருப்பும் முயற்சிகளாக ஆகிவிடும். இன்றைய தவறுகளை மட்டுமே முன்னிறுத்தி இப்படிக் காலம் காலமாகச் செய்து வரும் தவறுகளைப் பேச மறுப்பது இந்த மூலாதாரமான தவறுகள் தொடர்வதற்கே இட்டுச் செல்லும். மீண்டும் இத்தகைய ஆபத்துகளை மக்கள் எதிர்கொள்வதற்கே இது இட்டுச் செல்லும்.

எதிர்காலத்தில் நீர்ப்போகு வழிகளில் தடை ஏற்படும் எந்தத் திட்டங்களையும் அனுமதிக்காததோடு ஏற்கனவே இவ்வாறு நீர்வழியை அடைத்து இருவாக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களை நீக்குவ்தற்கும் நாம் முன்னுரிமை அளித்தல் அவசியம்.

நாங்கள் கண்ட காட்சிகளும் பெற்ற அனுபவங்களும்

நான், புதுவை சுகுமாரன், கடலூர் பாபு, திண்டிவனம் முருகப்பன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழு தனித்தனியாகவும் குழுவாகவும் பலமுறை கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், நிவாரணப் பணிகளுக்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்த அரசு அதிகாரி காகன்சிங் பேடி மற்றும் எண்ணற்ற பல பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பலமுறை சென்றோம். எல்லாத் தரப்பு மக்களையும் நாங்கள் சந்தித்தபோதும் அதிக அளவில் அருந்ததியர்கள் இருளர்கள், இதர தலித்கள் வசித்த பகுதிகளுக்குச் சென்றோம்.

பண்ருட்டி காடாம்புலியூருக்கு அருகில் உள்ல பெரியகாட்டுப்பாளையத்தில் ஒரே வீட்டைச் சேர்ந்த ஏழு அருந்ததியர்கள் வெள்ளத்தில் மரித்திருந்தனர். அப்பால் விசூர் என்னுமிடத்தில் இரண்டு வன்னியர்கள் வெள்ளத்தில் இறந்திருந்தனர். பெரிய காட்டுப்பாளையத்திற்கு நாங்கள் சென்ற போது இந்த மாதிரி ஆபத்தான பகுதிகளில் எல்லாம் அரசே முன்னின்று தொகுப்பு வீடுகளைக் கட்டிக் கொடுக்க எப்படி மனந்துணிந்தது என எங்களுக்கு விளங்கவில்லை. நீர்வழிப் புறம்போக்கில் 23 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி ஆர் காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இவை.. சுமார் 110 வீடுகள் . இதில் 86 அருந்ததியர்கள் வீடு. மீதி ஆதி திராவிடர்கள் வீடு. கூலி வேலை, செருப்புத் தைத்தல், முந்திரிக்கொட்டை பொறுக்குதல், உடைத்தல், (3 கிலோ உடைத்தால் 30 ரூ), ஆடு மேய்த்தல் இவைதான் இம்மக்களின் தொழில்கள்.

இரண்டு ஓடைகள் இங்கு ஓடுகின்றன. மேலே ஒரு பாலமும் உண்டு. இந்த ஓடைக்கரையில் மட்டுமல்ல, இரண்டு ஓடைகளுக்கு இடையிலும் தொகுப்பு வீடுகள்.  ஓடைக்கரையில் மட்டுமின்றி  இரண்டு ஓடைகளுக்கிடையிலும் எப்படி இதைக் கட்டிக் கொடுக்க அதிகாரவர்க்கத்திற்கும் அரசுக்கும் மனம் துணிந்தது என விளங்கவில்லை.

பட்டா இல்லாத நிலம். இது ஓடைக்கரைப் புறம்போக்கு. நத்தம் புறம்போக்கு என்றாலும் கூட பட்டா வழங்க முடியும். ஆனாலும் அரசும் ரெவின்யூ அதிகார வர்க்கமும் இதைச் செய்திருக்கிறது…

இப்படியான குடியிருப்புகளில் ஒரு நிகழ்வை நீங்கள் அவதானிக்கலாம். சென்னை நகரத்திற்குள் உள்ள குடிசைப் பகுதிகளிலும் இதை நான் பார்த்துள்ளேன் முதலில் அங்கு 100 குடிசைகள் இருந்திருக்கலாம். பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் அந்தக் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.

அப்படி உருவான ஒரு குடும்பத்திலிருந்த எட்டு பேர்கள்தான்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அமிர்தம் என்கிற 70 வயது மூதாட்டியும் அவர் மகன்களில் ஒருவரும் ஒரு மருமகனும்தான் இன்று மிஞ்சியுள்ளனர். இரண்டு ஓடைகளுக்கு இடையில் இருந்த இரண்டு கான்க்ரீட் தொகுப்பு வீடுகளின் உச்சியில் ஏறி நின்றுதான் மற்றவர்கள் அன்று தப்பியுள்ளனர்.

வீடு, வீடுவீடுதான் சார் எங்களுக்கு இப்ப வேணும்…”

பெரிய காட்டுப் பாளையம் மக்கள் ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள். அவர்களில் எட்டுப்பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்புச் செய்தி ஆகிவிட்டதால் இன்று அவர்களுக்கு மட்டும் ஒரு தற்காலிகத் தகரக் கொட்டகையை அமைத்துள்ளனர். வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நடுக்காட்டுப் பாளையத்தில், அவர்களின் கோவில் நிலத்தில் இந்தத் தற்காலிகக் குடியிருப்பு அமைந்துள்ளது.

48 அறைகள். ஒவ்வொரு அறையிலும் நான்கு குடும்பங்கள் வரை அடைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் ஒரு மின் விளக்கும் ஒரு ‘அம்மா’ டேபிள் ஃபேனும் உண்டு. ஒரு குடும்பத்தில் சராசரியாக நால்வர் என்றால் சுமார் 800 பேர் அங்கு முடக்கப்பட்டுள்ளனர்.

நமது திறந்த வெளி மலம் கழிப்புப் பண்பாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அங்கு நான்கே நான்கு கழிப்பறைகள், நான்கு குளியலறைகள்தான். ஆண்களுக்கு இரண்டு; பெண்களுக்கு இரண்டு..

‘எக்யூடாக்’, ‘கிராம விடியல்’, ‘சிசிஎஃப்டி’, ‘லோக் மான்னாஜர்’ என சுய உதவிக் குழுக்களுக்கான மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகளில் இம்மக்கள் வாங்கிய கடன்களைக் கட்ட வேறு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்… ஒரு கடனுக்கு மாதம் 500 ரூ கட்ட வேண்டுமாம்; இன்னொன்று மாதம் 1110 ரூபாயும், இன்னொன்றுக்கு 900 ரூபாயும் கட்ட வேண்டுமாம். இன்னுஞ் சிலர் செருப்புத் தைக்க வாங்கிய கடன் செலுத்த வேண்டுமாம்.  ஐசிஐசிஐ பல்லவன் வங்கி நெருக்குகிறதாம்.

அரசு மீண்டும் அவர்களுக்கு வீடுகட்ட ஒதுக்கும் இடம் இதேபோல ஒரு ஓடைக்கரையாம். தற்போது அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி முதலானவற்றிலிருந்து அதிகத் தொலைவான இடமாகவும் அது உள்ளது. சிறப்பு அதிகாரி காகன் சிங் பேடியிடம் நாங்கள் பேசியபோது வீடு கட்டிக் கொடுக்க அருகே உள்ள ஒரு மேடான இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், கடன் வசூலை உடனடியாத தடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

வீடிழந்த மக்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டிக் கொடுப்பது அவசியம். “வீடு, வீடு… வீடுதான் சார் எங்களுக்கு இப்ப வேணும்..” என மக்கள் புலம்புவது வேதனையாக இருந்தது.

 

நிவாரணப் பணிகள்

வெள்ளத் தடுப்பு, நிவாரணம் ஆகியவற்றில் ஜெயா அரசு தோற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. நமது அரசு எந்திரத்திலேயே கோளாறு உள்ளது. இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்வதில் உரிய முன்னெச்சரிக்கை, விஞ்ஞானபூர்வமான அணுகல்முறை எதுவும் அரசிடம் இல்லை.

ஏராளமானோர் வியக்கத்தக்க வகையில் உதவிக் கரம் நீட்டியுள்ளனர். இவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு Nodal Agency மூலம் வினியோகித்தால் மட்டுமே தேவையானவர்களுக்கு தேவையான அளவுக்கு உதவிகள் போய்ச் சேரும் இல்லாவிட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு திரும்பத் திரும்ப உதவிகள் மலிவதும், பிற பகுதியினர்க்கு ஒன்றுமே போகாது இருப்பதும் என்கிற நிலை ஏற்படும். அரசு இதைச் செய்யத் தவறியபோது சமூக வலைத் தளங்கள் இந்தத் தேவையை ஓரளவு நிறைவேற்றின. சமூக வலைத் தளங்கள் மிக மிகச் சிறப்பாகச் செயல்பட்ட போதும் அவர்களிடமும் ஒருங்கிணைப்பு கிடையாது, அனுபவமும் கிடையாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு மைய அமைப்பு இருந்து எந்தப் பகுதிகளுகு உடனடியாக உதவி தேவை என்பதை ஒழுங்குபடுத்தாததன் விளைவாக தொலைவில் இருந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் சரியாகச் சென்றடையவில்லை. சாலைகளுக்கு அருகில் இருந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி பொருட்களை அவ்ர்களே பிரித்துக் கொண்டனர். இதனால் தலித்கள், இருளர்கள் முதலான அடித்தள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நிவாரணங்கள் ஒழுங்காகச் செல்லவில்லை. பெரிய காட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிகக் குடியிருப்பில் வதியும் மக்களுக்கு வந்த உணவுப் பொருட்களை இடையில் உள்ள வன்னியர்கள் தடுத்து நிறுத்திப் பகிர்ந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம்.

இந்த விநியோகங்களில் அரசு தலையிட்டபின் நடந்தது ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருந்தது. தங்களிடம் வந்து சேர்ந்தவற்றையும் வந்துகொண்டிருப்பவற்றையும் கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் அரசு வினியோகித்தது. அரசு எந்திரத்தை நேரடியாகப் பயன்படுத்தி இந்த வினியோகத்தைச் செய்யாமல் கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் இதைச் செய்தது என்பது  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் மூலம் வினியோகிக்க வேண்டும் என்கிற ஜனநாயக உணர்வினால் அல்ல. கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் பெரும்பாலும் அதிமுகவினர் என்பதால் ஜெயா அரசு இதைச் செய்தது.

விளைவை நாம் பார்த்தோம். அடிமைகளாக வளர்க்கப்பட்டுள்ள அதிமுகவினர் கட்சி ஆதாய நோக்குடன் இதைச் செய்தனர். தங்கள் பகுதி அதிமுக கவுன்சிலர் ஒருவர் பொது வினியோகத்தைச் செய்தபோது தங்களுக்கு வாக்களிக்கச் சத்தியம் வாங்கிக்கொண்டு கொடுத்தார் என ஒருவர் கூறினார்.

ஆனால் இதற்காக முழுக்க முழுக்க அரசு எந்திரத்திடமே நிவாரண விநியோகப் பொறுப்பை அளித்துவிட இயலாது. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில் அது ஆளுங்கட்சியின் அத்துமீறலாகவும் அமைந்துவிடக் கூடாது.

எதிர்க்கட்சியும் இணைந்த ஒரு குழுவை அமைக்கலாம். தேர்தலில் இரண்டாம் நிலை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவரையும் குழு உறுப்பினர் ஆக்கலாம். பகுதியில் உள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மக்கள் சேவகர்களையும் இணைக்கலாம். இம்மாதிரியான தருணங்களில் இத்தகைய குழுக்கள் உருவாக்குவது குறித்து அரசு நிரந்தரமான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்.

மாநில அளவில் வெள்ளப் பாதுகாப்புப் படை ஒன்றின் தேவை

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தவர்களுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லாமற் போனது. இராணுவம் களத்தில் இறக்கப்பட்டபோதும் பெரிய அளவில் சேவை அமைப்புகள் படகுகளை வாடகைக்கு அமர்த்தித்தான் பலரை மீட்க முடிந்தது. தேசிய அளவில் பேரிடர் எதிர்கொள்ளல் படை (NMRF) மற்றும் பேரிடர் எதிர்கொள்ளல் அமைப்பு (NDMA) முதலியன உருவாக்கப்பட்டுள்ளபோதும் அவையும் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பை அளிக்க இயலவில்லை. மாநில அளவில் இப்படியான பேரிடர் எதிர்கொள்ளல் அமைப்புகள் உடனடியாக உருவாக்கப்படுதல் அவசியம். இத்தகைய வெள்ள ஆபத்துகள் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் உள்ளூர் அளவிலும் அமைக்க வேண்டும்.

பொதுவாக ஒன்றை நாம் மனதிற்கொள்வது அவசியம். இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்வது என்பதை தன்னார்வக் குழுகள்,  சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வெள்ள ஆபத்தை எதிர்கொண்டதில் அரசைக் காட்டிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் முதலியவற்றின் பங்கு முக்கியமாக இருந்ததை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் அரசு இவர்களுடன் சேர்ந்து செயல்படும் வழிவகைகளை யோசிக்க வேண்டும்.

இத்தனை அழிவுகளுக்கும் அப்பால், மழை வெள்ள அழிவுகளின் காரணங்கள் குறித்து உருவாகியுள்ள பிரக்ஞையும், இந்த மழை வெள்ளத்தை எதிர் கொண்டதில் சாதி, மதம், இனம் என வேறுபாடுகள் இன்றி மக்கள் அசாத்தியமான ஒற்றுமை காட்டி மானுடத்தின மீதான் நம்பிக்கையை உறுதிப்படுத்தியதும் இந்த வெள்ள அழிவினூடே உருவான இரு வரவேற்கத்தக்க அம்சங்கள் எனலாம்.