சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைகட்கே இவர்களும் முக்கியத்துவம் கொடுத்து இயங்கினாலும், தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உண்டு என்பதை ஏற்று சாதிப் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, கூடங்குளப் போராட்ட ஆதரவு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏதோ இதையும் செய்தோம் என்றில்லாமல் உண்மையான அக்கறையுடன் இவற்றையும் முன்னெடுப்பர்.

பல்லாயிரம் ஊதியம் பெறும் கார்பொரேட் ஊழியர்கள் குறித்தும் கார்பொரேட் பணிக் கலாச்சாரம் குறித்தும் சில கருத்துக்களைச் சில நாட்கள்முன் இப்பக்கத்தில் நான் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பார்த்திருக்கலாம். முதலாளியத்தின் அனைத்து ஊழல்களுக்கும் வாரிசாக உள்ள இன்றைய கார்பொரேட்களிடம் கை பொத்தி, மெய்யடக்கிச் சேவகம் புரியும் இவர்கள் என்னாளும் தம் நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், மூன்றாம் உலக மக்களின்மீது இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றி ஆகியன குறித்து ஒரு கேள்வியையும் கூட எழுப்பத் தயாராக இல்லாதவர்கள். எழுப்பினால் அடுத்த கணம் என்ன நடக்கும் என உணர்ந்த இவர்கள் தம் மனிதாபிமானத்தைக் காட்ட ‘நல்ல காரியங்களுக்கு’ நன்கொடை அளிப்பார்கள் நன்கொடை அளிப்பார்கள். சமூக நலப் பணி செய்வார்கள், உள்ளூர் அரசுடன் பெரிய அளவில் முரண்படாத வகையில் போராட்டங்களும் நடத்துவார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தம் நிறுவனத்தில் நடக்கும் அநீதிகள் குறித்துக் குரல் எழுப்ப மாட்டார்கள். ஒரு சங்கம் அமைக்க முயற்சிக்க மாட்டார்கள். கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அந்த வகையில் அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் அவற்றின் எத்தனையோ குறைகளுக்கும் அப்பால், ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதையும், தம் துறை சார்ந்த அரசு கொள்கைகளை விமர்சிக்கத் தயங்காததையும், சக ஊழியர்களுக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்பதையும், பல நேரங்களில் வெற்றி ஈட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சேவ் தமிழ் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அவர்களிடமும் இந்தக் குறைபாடுகள் உள்ளபோதும், இவற்றையெல்லாம் தாண்டி, உண்மையான சமூக அக்கறையும், ஏதாவது சமூகத்திற்குச் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பும் உள்ளவர்கள். பணியிடத்திலும் அநீதிகளை எதிர்க்கிற, தொழிற் சங்கம் அமைத்துப் போராடுகிற வாய்ப்பும் இவர்களுக்கு இருந்திருக்குக்குமேயானால் இவர்களின் பார்வையும் பணிகளும் இன்னும் கூர்மையடையுமே, ஒரு அறம் சார்ந்த அரசியல் விகசிப்பு ஏற்படுமே என நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்றைய கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

சரி, அது இருக்கட்டும். இன்று காலை இவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தோழி என்னுடன் தொடர்பு கொண்டு உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள தோழர் தியாகு அவர்கள் குறித்து உரிய ஊடகக் கவனம் இல்லாத நிலை குறித்துப் பேசினார். பேச்சு சமீபத்தில் இவர்களின் ‘சேவ் தமிழ் இயக்கம்’ முன்நின்று நடத்திய ‘பன்னாட்டு மாணவர் மாநாடு’ பற்றித் திரும்பியது. இலங்கையில் நடைபெற உள்ள ‘காமன்வெல்த்’ மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் “பன்னாட்டு” மாநாட்டில் முக்கியக் கதா நாயகனாக நிறுத்தபட்ட நபர் வை.கோ. அவரை மாநாட்டிற்கு அழைக்கப்போன நாளிலிருந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் முகநூல் பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குஜராத் 2002க்குப் பின்னும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் இந்த வைகோ. ‘திராவிட’ என்கிற சொல்லைத் தன் கட்சிப் பெயரில் சுமந்திருந்தாலும் எந்நாளும் இந்துத்துவ விசுவாசத்தைக் கைவிடாதவர். ‘சேவ் தமிழ் இயக்கம்’ சென்ற மாதம் நடத்திய அந்த ஈழ ஆதரவு மாநாட்டிலும்கூட வைகோ, “மதவாதம் குறித்த பிரசினைகளை எல்லாம் கூட இன்று சற்று மறப்போம். ஈழப் பிரச்சினையை முன்னெடுப்போம்” என்கிற பொருள்படப் பேசியுள்ளார்.

இன்று என்னுடன் தொடர்பு கொண்ட தோழியிடம் நான் இதுபற்றிச் சொன்னபோது, “அப்படியெல்லாம் அவர் அங்கே பேசினார்னு யாரும் சொல்லலியே” என்றார். மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பார் போலும். அதோடு தமது மாநாட்டில் முக்கிய பேச்சாளர் இவ்வாறு கூற நேந்தது குறித்த விவாதம் அவர்களுக்குள் நடைபெறவில்லை போலும். விவாதிக்கிற அளவுக்கு இதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

இறுதியில் அந்தத் தோழி, மோடியின் நண்பரும், இன்று இந்துத்துவ சக்திகளுடன் தேர்தல் கூட்டணியை வெட்கமின்றி அறிவித்துள்ளவருமான வைகோவைத் தங்கள் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைத்தது குறித்து இப்படிச் சொன்னார் : “இல்லை, நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர் என்கிற ஒரே அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே வைகோவை அழைத்தோம்”.

நான் என்ன சொல்வது? சரிதான். இங்குள்ள மக்களின் பிரசினைகள் ஒரு பொருட்டில்லை என்றால் அவர்களின் அளவுகோல் சரிதான். ஆனால் ஈழப் பிரச்சினையில் வைகோ அளவிற்குக் கடந்த காலத்தில் தீவிர ஆதரவு காட்டிய, இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பன்னாட்டு மாநொடொன்றில் பங்குபெற்று தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசிய பா.ம.க தலைவர்களுக்கு ஏன் வைகோவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அம் மாநாட்டில் அளிக்கப் படவில்லை?

நம்மைப் பொருத்த மட்டில் பா.ம.கவை அழைக்காததின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே தர்க்கம் ஏன் வைகோவுக்குப் பொருந்தவில்லை? பா.ம.கவை அழைக்கக் கூடாது, ஆனால் வைகோவை அழைக்கலாமா?

இங்கே மத அடிப்படையிலான ஃபாசிசம் உங்களுக்குப் பிரச்சினை இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு அளவில் இந்துத்துவக் கருத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளனவா? அதை உசுப்பி விடுவதுதான் இந்துத்துவ சக்திகளின் பணியாக உள்ளதா?

சரி, இப்படி ஈழப் பிரச்சினையே அடிப்படை அளவுகோல் என்பவர்கள் சாதி பிரச்சினைகளிலாவது முழு நியாயத்துடன் நடந்து கொள்வார்களா?

‘சேவ் தமிழ் இயக்கம்’ தற்போது ‘தமிழ்நாடு மக்கள் கட்சி’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக அறிகிறோம். நல்லதுதான் அமைப்புகள் பிளவுபட்டுக் கொண்டே போகிற நிலையில் இவ்வாறான இணைவுகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. இதுவரை அகில இந்திய மற்றும் பொதுவுடைமை அடையாளங்களின் கீழ் இயங்கிய ஒரு மா.லெ பிரிவு இப்போது இப்படியாக தம்மைத் தமிழ் அடையாளத்திற்குள் சுருக்கிக் கொண்டு தமிழ் நாடு மக்கள் கட்சி என்பதாக இயங்குகிறது.

சமீபத்தில் அவ்வமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள தோழர் தங்கத் தமிழ் வேலன் ஆசிரியர் வேலைகளுக்கான ‘டெட்’ தேர்வில் தமிழக அரசு இட ஒதுக்கீடு கடைபிடிக்காமை குறித்து ஒரு பிரச்சார இயக்கம் நடத்துவது குறித்து எங்களுடன் பேசினார். தங்கத் தமிழ் வேலன் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர். இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.

லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நான், பேரா. ப.சிவகுமார், பேரா. மு.திருமாவளவன் ஆகியோர் முன்நின்று இது குறித்து ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளித்தோம். ப்ரெஸ் மீட் ஒன்றும் நடத்தினோம். ஓரளவு இப் பிரச்சினையைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து அடுத்த ‘டெட்’ தேர்வும் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் டெட் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றை நடத்துவோம் என நாங்கள் சொன்னதைத் தங்கத் தமிழ் வேலனும் ஏற்றுக் கொண்டார். நாளும் குறிக்கப்பட்டது.

எங்கள் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு சென்ற மாதம் இந்தப் போராட்ட நாளில் எல்லோரும் காத்திருந்தோம். முதல் நாள் இரவு 11 மணிக்கு பேரா.மு.திருமாவளவனிடமிருந்து எனக்கொரு தகவல் வந்தது. அவரும் அக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றில் உள்ளார். ‘டெட்’ போராட்டம் காரணம் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் அவர் சொன்ன செய்தி.

தினம் என்னுடன் பேசி வந்த தமிழ் வேலன், அதற்குப் பின் இன்று வரை தொடர்பிலில்லை.

டெட் தேர்வில் இட ஒதுக்கீட்டிற்கான இப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான ஒரே காரணம், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு அவர்களிடம் முன்னுரிமை இல்லை என்பதுதான்.

பின் வேறெதற்கு முன்னுரிமை?

வைகோவைக் கதாநாயகனாக்கி ஈழ ஆதரவு மாநாடு நடத்துவதற்குத்தான். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டு முழக்கங்களுக்கிடையில் கரைந்து போனது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கியுள்ளதுபோல இங்கும் ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை.