“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்

(பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். தடைம்ஸ்தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை,அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளைச் சொல்லுகிறார்ப் நேர்கண்டது: பீட்டர் துரைராஜ், டைம்ஸ் தமிழ்.காமில் ஏப்ரல் 2ஒஇ9ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன் வெளிவந்தது)

 

கேள்வி:பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக,திமுக சார்பில்  யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்

 

பதில்: இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார் : ” பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை.அது எங்களுக்கு அவசியமும்  இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று  சொல்லுவதற்குத்  தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப்  பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ,மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம்  உள்ள  40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின்   மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த  காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு  ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம்  கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

 

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

 

பதில் : 1930 களில்  பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன். அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர்.  கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த  ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு  மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும்  கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது. 1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம்  இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக  சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம்  முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம்  “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில்  மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த  ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை.  முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன்  (Samuel P.Huntington)  போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக,  இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய  சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே  இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே.  .

 

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்தசம வாய்ப்பு ஆணையம்என்ற கோரிக்கை யை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

 

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. .நிரந்தரமான வேலை,ஓய்வூதியம் ,பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவன த்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும்.தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என  ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம். ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.  தங்கள் தேர்தல் அறிக்கை யில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை.ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சி யும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிக மயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும்  இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித். உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள  வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழைமக்களை அதிகாரப் படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும்  தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை  நாம் புரிந்து கொள்ளலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி  பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின்  நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

 

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில்  இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.  மாட்டுக்கறியில் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynchng) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும்  எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

 

கேள்வி: வரவிருக்கிற  தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா

 

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை  தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்எஸ்எஸ் இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற  பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்  மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி  எனது  முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும். பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி  முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை  மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன..ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி  இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம்  கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம்  கட்டணத்தை  முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள்  எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான். விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக  வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. .பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி  ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு  கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.  ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

 

கேள்விமத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை.தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த  தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள்

 

பதில் :அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகளை  திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர். இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக  இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. .சிறுபான்மையினர் மட்டுமின்றி  தலித், ஆதிவாசிகள்  முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.   .

 

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை.தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

 

கேள்வி: சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள்  தங்கள் கட்சிகளின்  சின்னத்தில்  நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார்.திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே

 

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு  ஆதரவாக செயல்பட வைப்பது என்பது  கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத்  தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர்  வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

 

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே  ? 

 

பதில்: தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார்.  2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்  மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர். SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

 

கேள்வி:வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில்  ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடாகவில் நிற்கலாமே?  வயநாட்டில்  போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

 கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின்  விடுதலைக்கு அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் :மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல்  மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும்  ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் மட்டுமின்றி  இஸ்லாமியச் சிறைவாசிகள்,, வீரப்பன் வழக்கில்  சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.. சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA)  திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

 

கேள்வி : இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான   அமைப்புகளில் இயங்கி வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் : அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும்.  1905  தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது.காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை.அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று  இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான்  பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று  கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

 

கேள்வி ; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்

 

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *