என்ன நடக்குது காஷ்மீரில் (2016)

(சென்ற ஆக. 4 2016 அன்று திருநெல்வேலியில் ‘இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும்’ ‘சிறுபான்மை மக்கள் நலக்குழுவும்’ நடத்திய கருத்தரங்கில் பேசியது)

ஒன்று

காஷ்மீரில் இன்று ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தொடங்கி இன்றோடு (ஆக, 04, 2016) 28 நாட்கள் ஓடிவிட்டன. புர்ஹான் வானி கொல்லப்பட்டு 18 நாட்களுக்குப் பின் ஊரடங்குச் சட்டத்தை சற்றே தளர்த்திப் பார்த்தபோது இந்திய அரசுக்கும் அங்கு குவிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆயுதப் படைகளுக்கும் எதிராக வரலாறு காணாத அளவில் வீதிகளை நிறைத்தனர் காஷ்மீர மக்கள். இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. கண்களைக் குருடாக்கும் பெல்லட் குண்டுகளை உமிழும் இந்தியத் துப்பாக்கிகளைக் கண்டு இம்மியும் கலங்காமல் தம்மிடம் உள்ள ஒரே ஆயுதமான கற்களை ஏந்தி வீதிகளை நிறைத்தனர் அம்மக்கள். இந்த முறை தலைநகர் ஸ்ரீநகரில் அமைதி தவழ்கிறது என்கிற கூற்றையும் அவர்கள் பொய்யாக்கினர். ஸ்ரீநகரிலும், பள்ளத்தாக்கு முழுமையிலும் ஆங்காங்கு தன்னிச்சையாகத் திரண்ட மக்கள் தொழுகை நேரங்களில் வீதிகளையே தொழுகைத் தலங்களாக மாற்றினர். இந்தியப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகளில் ஆயிரமாயிரமாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆம், இன்றளவும் அங்கு மக்கள் சோர்ந்துவிடவில்லை. கடந்த 18 நாட்களில் 50 உயிர்கள் பலியான பின்னும், 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தம் எஞ்சிய வாழ்நாளை பார்வை இல்லாமல் கழிக்க நேர்ந்த பின்னும், ஆயிரக் கணக்கானோர் மருத்துவமனைகளை நிறைத்த பின்னும், இந்திய அரசு மேலும் 11,000 ஆயுதப் படைகளை அந்தச் சின்னஞ்சிறு பள்ளத்தாக்கிற்குள் கொணர்ந்து நிறைத்த பின்னும் அங்கு மக்கள் சோர்ந்துவிடவில்லை.

நாற்பது லட்சம் மக்கள்தொகை உள்ள அந்தப் பள்ளத்தாக்கில் இன்று ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆம், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு காஷ்மீரிக்கும் ஒரு படைவீரன். உலகிலேயே இந்த அளவிற்கு சிவிலியன்கள் மத்தியில் படைவீரர்கள் நிறுத்தப்பட்ட புவிப் பகுதிகள் மிகச் சிலவே. அப்படி நிறுத்தப்பட்ட அந்த இராணுவ வீரர்கள் கையில் கொடும் கொலை ஆயுதங்கள் மட்டுமில்லை. அதைவிடக் கொடூரமான ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும்’ (AFSPA) இருக்கிறது. அந்தச் சட்டம் தண்டனை விலக்குடன் (impunity) கூடிய அபரிமிதமான அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்கள் யாருடைய வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம்; பயன்படுத்தலாம். கொல்லலாம். பரிசுகள் வாங்கலாம். பதவி உயர்வுகள் பெறலாம். உண்மை, மிகையில்லை.

ஷோபியான், மச்சில், கன்டர்பால், பத்ரிபால்…. இப்படி பள்ளத்தாகில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு கொடுங்கதை உண்டு. மாநில அரசுக்கோ மனித உரிமை ஆணையங்களுக்கோ அந்தக் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை. ‘அஃப்ப்சா’ சட்டம் கோலோச்சும் பகுதிகளில் இத்தகைய கொலைகாரர்களைக் கைது செய்ய வேண்டுமானால் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் இருக்க வேண்டும். பிரதமர் கையொப்பமிட வேண்டும். ஒரு முறை, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சித்தார்த் வரதராஜன் அன்ற்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம், “ஏன் அந்த இராணுவக் கொலையாளிகளைக் கைது செய்ய நீங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை?” எனக் கேட்டபோது உலகின் மிகப் பெரிய ‘ஜனநாயக’ நாட்டின் அந்தப் பிரதமர் தலைகுனிந்தாரே ஒழிய வாய் திறக்கவில்லை,

அங்கே இளைஞர்கள் கைகளில் கற்களுடன் வீதியில் இறங்கிய போதெல்லாம் பின்னணியில் இப்படியான சம்பவங்கள்தான் இருந்துள்ளன. ஷோபியானில் இரு சகோதரிகள் பாலியல் வன்புணர்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது, மச்சிலில் வேலை தருகிறேன் என அழைத்து சென்று மூன்று இளைஞர்களை உபேந்திர குமார் எனும் இராணுவ அதிகாரி கேவலம் பதவி உயர்வுக்காகவும் பணப் பரிசுக்காகவும் கொன்று விட்டு ‘எல்லை தாண்டிய பயங்கரவாதி’ எனச் சொல்லிப் புன்னகைத்தபோதும், கண்டர்பாலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து “வெளிநாட்டு  பயங்கரவாதிகளும்” உண்மையில் உள்ளூர் அப்பாவி மக்கள்தான் என உறுதியானபோதும் இப்படித்தான் அங்கு கிளர்ச்சிகள் கிளர்ந்தன.

1989 முதல். அதாவது தீவிரவாதம் அங்கு தலையெடுக்க நேர்ந்தது தொடங்கி கொல்லப்பட்ட காஷ்மீர மக்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 80.000. இன்று வரை பிடித்துச் சென்று கொல்லப்பட்டுக் ‘காணாமலடிக்கப்பட்டவர்களின்’ எண்ணிக்கை 8,000. நினைவிருக்கட்டும் இந்த எண்ணிக்கைகள் குறைந்தபட்சக் கணக்கீடுகள். இறுதிச் சடங்குகள் செய்ய உடல்களும் கூடக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதவர்கள்தான் காணாமல் அடிக்கப் பட்டவர்கள்.. இவர்களின் மனைவியர்களும் வாரிசுகளும், அடுத்த ஏழாண்டுகள்வரை அப்படிக் காணாமடிக்கப்பட்டவர்ககளின் வாரிசுரிமையையும் கோர முடியாது. உலகிலேயே “அரை விதவைகள்” எனும் பெயரில் இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் நிறைந்திருக்கும் சமூகம் காஷ்மீர் ஒன்றுதான்.

இன்று ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ எனும் தீவிரவாத அமைப்பின் கமான்டர் எனச் சொல்லப்படும் புர்ஹான் முஸாஃபர் வானி எனும் 22 வயது இளைஞன் கொல்லப்பட்டது ஒரு வரலாறு காணாத எழுச்சிக்கு வித்தான பின்பு, இராணுவமும் மாநில முதலமைச்சர் மெஹ்பூபாவும் கொல்வதற்கு முன்புவரை அது புர்ஹான் வானி என்று எங்களுக்குத் தெரியாது எனக் கதை விரிக்கின்றனர். யாரோ மூன்று தீவிரவாதிகள் கோகர்நாக் அருகிலுள்ள ஒரு கிராமப் பழத் தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக அறிந்து சென்று அவர்களைச் சுட்டுக் கொன்ற பின்புதான் அது புர்ஹான் வானி எனத் தெரியுமாம். இல்லாவிட்டால் உயிருடன் பிடித்திருப்பார்களாம்.

இப்படிச் சொல்லும் மெஹ்பூபா கூடவே இன்னொன்றையும் சொல்கிறார். 2013 ல் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அந்தத் தகவல் முன்கூட்டியே மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதால் உரிய முன்னெச்சரிக்கை எடுக்க முடிந்தது எனவும் அதனால் அப்போது கிளர்ச்சிகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது எனவும், இப்போது புர்ஹான் வானி கொல்லப்படுவது முன்னதாகத் தெரியவில்லை என்பதால் அத்தகைய முன்னெச்சரிக்கை எடுக்க இயலவில்லை எனவும் கூறுகிறார். இதன் பொருளென்ன? இன்றும் இராணுவம் முன் கூட்டியே புர்ஹான் வானியைக் கொல்லப்போவது தெரிந்திருந்தால் ஆங்காங்கு இராணுவத்தை வீதியில் இறக்கி புர்ஹானின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் பேர்கள் திரண்டதைத் தடுத்திருப்போம், தொடர்ந்த எழுச்சியை முடக்கி இருப்போம் என்பதுதானே?

இதுதான் “மைய நீரோட்டக் கட்சிகள்” (mainstream parties) என்பவற்றின் பார்வை. உமர் அப்துல்லா வின் ‘தேசிய மாநாடு’ (NC) கட்சி, மெஹ்பூபா வின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (PDP) ஆகிய இந்த இரண்டு மைய நீரோட்டக் கட்சிகளின் அரசியலும் சுயாட்சி உரிமைகளுடன் இந்தியாவின் ஓரங்கமாக இணைவதுதான் என வாயளவில் சொன்னாலும், நடைமுறையில் இராணுவ ஒடுக்குமுறைகளையும், சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்தையும் பற்றி எல்லாம் கவலைப் படாமல்  இந்திய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்கிற அளவில் சுருங்கி விடுகிறது. இது தவிர இன்று ஜம்மு காஷ்மீரில் இனும் மூன்று அரசியல் போக்குகள் உள்ளன. Separatist Outfits என இந்திய ஊடகங்களால் குறிப்பிடப்படும் ஹூரியத் அமைப்புகள் உறுதியாக இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்கிற கருத்துடையவை. எனினும் ஹூரியத்  அமைப்புகளுக்குள் பாக் ஆதரவு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துதல் ஆகியவை குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.  மிர்வாஸ் உமர் ஃபாரூக் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார். சையத் அலி ஷா கீலானி இந்திய அரசுடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார். முஜாஹிதீன் அமைப்புகளை மூன்றாவது அரசியல் பாதை எனலாம், இவை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிப்பது, இந்த நோக்கில் பாகிஸ்தானிடமிருந்து உதவிகளைப் பெறுவது என்பன இவர்களின் அணுகல்முறை. இறுதியாக உள்ள நான்காவது போக்கு பா.ஜ.க உடையது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் சிறப்புரிமைகளையும் முற்றாக மறுத்து எல்லா இதர இந்திய மாநிலங்களையும் போல காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பது, இதற்கு எதிரான அனைத்தையும் இராணுவ பலங் கொண்டு ஒடுக்குவது என்பன இதன் அணுகல் முறை. இந்த நான்கும்தான் இன்று காஷ்மீருக்குள் செயல்படும் நான்கு அரசியல் பாதைகள்.

இரண்டு

புர்ஹான் வானி கொல்லப்பட்ட கதைக்குத் திரும்புவோம். இந்த 22 வயது இளைஞன் இன்று சேகுவாரா அளவிற்கு ஒரு விடுதலை நாயகனாக அம்மக்களால் கொண்டாடப்படுகிறான். அவனைச் சுற்றி வீர சாகசப் புனைவுகள் உருப்பெற்று சமூக ஊடகங்களில் மட்டுமின்றி மரபு வழி ஊடகங்களிலும் தீயாய்ப் பரவுகிறது. காஷ்மீரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் இந்த அளவு மக்கள் ஆதரவு பெற்ற ஒரு போராளி இதுவரை உருப்பெற்றதில்லை. அவனுடைய உடல் அடக்கத்தின்போது இந்திய இராணுவக் கெடுபிடிகளையும் மீறி அவனது சொந்த ஊரான த்ராலில் அன்று கூடியிருந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சம். இதுவரை எந்த ஒரு விடுதலைப் போராளியின் மரணத்தையும் கண்டித்து இத்தனை நாட்கள் தொடர்ந்து மக்கள் போராடத் துணிந்ததில்லை. இத்தனை பேர்  உயிர்த்தியாகங்கள் செய்ததில்லை. இத்தனை பேர் தம் பார்வைகளை இழந்ததில்லை.

பலவகைகளில் புர்ஹான் வானி முந்தைய தீவிரவாதிகளிலிருந்து வேறுபட்டவன். அவன் எப்போதும் முகத்தைக் கருப்புத் துணியால் மறைத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் மட்டுமே காட்சி அளித்தவன் இல்லை. அவன் தன் அழகிய முகத்தைச் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. “நாங்கள் அன்பை உயிர்ப்புடன் கொணர்ந்துள்ளோம், காயம்பட்ட மனங்களை வென்று” எனும் பாடலை முணுமுணுத்துக் கொண்டு காஷ்மீரின் அழகை ரசித்துக் கொண்டு கும்பலாய் அமர்ந்திருக்கும் அந்தச் சிறார்களைக் கண்டு யாருக்கும் பிரியம் செலுத்தத்தான் தோன்றும்.  சென்ற ஜூலை 8 அன்று தன்னொத்த இளைஞர்கள் இருவரோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போதுதான் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஒரு நல்ல, படித்த, வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவன் அவன். தந்தை முசாபர் வானி அப்பகுதியில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர். அவன் அம்மா அறிவியலில் பட்டமேற்படிப்புப் படித்தவர். 2010ல் ஒரு நாள், எம்.காம் படித்திருந்த அண்ணன் காலித் வானியுடன் புதிதாக வாங்கிய ஒரு மோட்டார் சைகிளில் புர்ஹான் சுற்றி வந்து கொண்டிருந்த போதுதான் எல்லா காஷ்மீர இளஞர்களுக்கும் நடப்பது இவர்களுக்கும் நடந்தது. அவர்களைக் கண்ட படையினர் நிறுத்தச் சொன்னார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அடிக்கப்பட்டனர். அவர்களின் புதிய வண்டியும் சேதப்படுத்தப்பட்டது.

இது காஷ்மீர் இளைஞர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நடப்பதுதான். ஆனால் எதிர்வினைகள் ஒன்றே போல இருப்பதில்லை. அவர்களின் தந்தை முசாஃபர் வானி கூறுகிறார்: “எல்லோருக்கும் ஏற்படுவதுதான். இதற்கு எதிர்வினை என்பது அவரவர் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. சுயமரியாதை திரும்பத் திரும்பப் பாதிக்கப்படும்போது ஒருவர் என் மகனின் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். சிலர் பொறுத்துப் போகலாம். என் மகனால் இந்த அநீதிகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு இருக்க இயலவில்லை.”

அவன் தலைமறைவானான். ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன.

“இன்றோடு 2190 நாட்கள் ஓடிவிட்டன. குறைந்தபட்சம் 5000 வேளைகள் நான் அவனை விட்டுவிட்டுத் தனியாகச் சாப்பிட நேர்ந்துள்ளது. தினசரி அந்த இரண்டு வேளை உணவை அவன் எங்கு சாப்பிடுகிறான்? அவனுக்கு உடல் நலமில்லாது போனால் யார் பார்த்துக் கொள்கிறார்கள்? யாரோ அவனைப் பார்த்துக் கொள்ளத்தான் செய்கின்றனர். அதன் பொருள் அவனது பாதையை  ஆதரிப்பவர்களும் உள்ளனர் என்பதுதான்..”

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் முசாஃபர் வானி பேசியதை இணையத்தில் பார்க்கலாம். 2015 ல் அவர் தன் மூத்த மகன் காலித் வானியை இழந்தார். தம்பி புர்ஹானைச் சந்தித்து வந்தான் எனச் சொல்லி அவனை ரைஃபில் பட்டால் முகத்தில் அடித்தே கொன்றது இராணுவம். அவனது உடல் முசாஃபரிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவன் வாயில் ஒரு பல் கூட இல்லை.

இரண்டு மகன்களையும் இழந்த நீங்கள் எப்படி இதைத் தாங்கிக் கொள்கிறீர்கள் எனக் கேட்டபோது அந்த முதியவர், “இறைநம்பிக்கை உள்ள காஷ்மீரிகள் இறைவனின் பாதையில் மரணத்தைச் சந்தித்தால் கவலை கொள்ள மாட்டார்கள். என் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்குப் பெரிது அல்லாஹ்,. திருக்குர்ஆன், இறைத்தூதர் நபிகள் நாயகம் தான்” எனச் சொல்வதை நீங்கள் யூ ட்யூபில் பார்க்கலாம்.

அவர் சொன்னது ஒரே ஒரு அம்சத்தில் பொய்யாய்ப் போய்விட்டது. “இன்னும் ஆறேழு ஆண்டுகளில் அவன் இராணுவத்தால் கொல்லப்படுவது நிச்சயம்” எனச் சொல்லி இரண்டு மாதங்களில் அது நிகழ்ந்து விட்டது. அது எப்படி நிகழ்ந்தது என ‘அவுட்லுக்’ ஆங்கில வார இதழ் எழுதுகிறது மெஹ்பூபா சொல்வது போல யாரெனத் தெரியாமல் இராணுவம் புர்ஹானைக் கொல்லவில்லை என்கிறது அந்த இதழ். கோகர்நாக் அருகில் அவன் இருக்கும் செய்தி அறிந்து ஶ்ரீநகரிலிருந்து ஒரு தாக்குதல் படை யாருக்கும் அறிவிக்காமல் வந்தது எனவும், பழத்தோட்டம் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த புர்ஹானைச் சுட்டுக் கொல்லும்போது அவனிடம் ஆயுதம் ஏதும் இல்லை என மக்கள் சொல்வதாகவும் அந்த இதழ் எழுதுகிறது.

அந்தச் சிறிய பள்லத்தாக்கு முழுவதும் குறைந்த பட்சம் 54 இராணுவ முகாம்கள் உள்ளன. இவர்கள் ஒளிந்துள்ள தகவல் கிடைத்தவுடன்  அருகில் உள்ள படைப் பிரிவுகளுக்குச் சொல்லாமல் 80 கிமீ தொலைவிலுள்ள ஶ்ரீநகரிலிருந்து இவர்கள் இரகசியமாக வருவானேன் என்பதற்கும் கட்டுரை ஆசிரியர் பதில் சொல்கிறார். புர்ஹானின் உயிருக்கு 10 இலட்சம் ரூ அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதை யார் கைப்பற்றுவது என்கிற போட்டிதான் காரணம் என்கிறார்.

கே. ராஜேந்திர குமார் எனும் அதிகாரி  டி.ஜி.பி ஆகப் பதவி ஏற்ற பின் தீவிரவாதிகளைக் கொல்பவர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகையும் பதவி உயர்வும் என நிலைபாடு எடுத்ததன் விளைவு இது எனவும் அந்த இதழ் எழுதுகிறது. இன்று காஷ்மீரில் 23,000 உள்ளூர் இளைஞர்கள் ‘சிறப்பு போலீஸ் அதிகாரிகள்” (Special Police Officers) எனும் பெயரில்  இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் “தீவிரவாதத்தை ஒழிப்பதில் திறமையை நிறுவுகிறவர்கள்” மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் பதவிகளை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்காக அத்து மீறுகின்றனர் எனவும் அதே இதழில் இன்னொருவர் கூறுகிறார்.

மூன்று

காஷ்மீரில் இன்று ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி அதன் விடுதலைப் போராட்டத்தில் மூன்றாம் கட்டம் என்பர். 1947 தொடங்கி 1989ம் வரை அம்மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடினர். காஷ்மீர் மக்கள் பொதுவில் அமைதி விரும்பிகள். இந்தக் காலகட்டத்தில் பெரிதாக அங்கு வன்முறைகள் ஏதும் இல்லை. இது முதல் கட்டம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும், பல்வேறு வழிகளில் அவர்கள் ஏமாற்றப்பட்டதாலும் 1989ல் அங்கு ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இது இரண்டாம் கட்டம். 2003 வரை இது நீடித்தது. இக் காலகட்டத்தில்தான் அம் மக்கள் முன் குறிப்பிட்ட மிகப் பெரிய இழப்புகள் அனைத்தையும் சந்தித்தனர். 2003 முதல் 2008 வரை அங்கு மீண்டும் அமைதி நிலவியது. 2008 ல் காஷ்மீர் அமைப்புகள் பலவும் இணைந்து கூட்டுக் குழு ஒன்றை அமைத்து அமைதி வழியில் தங்கள் போராட்டத்தைத் தொடரத் தயாராயினர் 2008 அக் 6 அன்று ஸ்ரீநகர் லால் சவுக்கில் அவர்கள் அறிவித்த பேரணி அரசால் கொடுங்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. பார்வையாளராகச் சென்றிருந்த எங்கள் குழு கூட மூன்று நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு இராணுவ அடக்குமுறைகள் அதிகமாயின. ஷோபியான், மச்சில் போன்ற இடங்களில் பெண்களும் இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டது பெரும் எழுச்சிகளை ஏற்படுத்தின. 2008 லிருந்து மீண்டும் ஒரு எழுச்சி அங்கு ஏற்பட்டது. இது மூன்றாம் கட்டம்.

இந்த மூன்றாம் கட்டம் முந்தைய காலகட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. இப்போது போராட்டத்தை முன்னெடுத்தவார்கள் இளைஞர்கள்; பெண்கள். இவர்கள் கைகளில் கொலை ஆயுதங்கள் ஏதும் இல்லை. இவர்களின் பின்னால் பாகிஸ்தானோ இல்லை வேறு ஏதும் வெளிநாடுகளோ இல்லை, இவர்கள் இந்தியப் படைகளை நோக்கி வீசியது வெறும் கற்களைத்தான். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்த அதே வடிவில் எழுந்த இந்த எதிர்ப்பையும் ‘இன்டிஃபடா’ என்றே பத்திரிகைகள் எழுதின.  “முதற்கட்டத்தில் காஷ்மீர மக்கள் அன்றைய தலைவர்கள் பின் நின்றனர். இரண்டாம் கட்டத்தில் அவர்கள் புதிய தலைவர்களைத் தேடினர். இந்த மூன்றாம் கட்டத்தில் அவர்கள் தலைவர்களைப் பொருட்படுத்தவே இல்லை” என இது குறித்து எழுதும் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுவார்.

2016 ல் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்டம். இப்போதும் தெருவில் இறங்கிக் கற்களை வீசுவோர் எந்த வழிகாட்டலும் இல்லாத இளைஞர்கள்தான். பெரியவர் சையத் அலை ஷா கீலானி போன்றோரின் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து விட்டு இன்று அவர்கள் களத்தில் நிற்கின்றனர். புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் ஆயுதப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் இன்றைய ஆயுதப் போராட்ட இயக்கத்திற்கும் முந்தைய ஆயுதப் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் சிலவற்றை முன்பே குறிப்பிட்டேன். சற்றே வெளிப்படைத் தன்மை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களை வெகுவாகப் பயன்படுத்துதல் முதலியன அந்த வேறுபாடுகள். அதைக் காட்டிலும் முக்கியம் புர்ஹானின் இன்றைய இய்க்கத்தில் ‘அந்நிய’ ஊடுருவல் குறைவு. கட்டுப்பாட்டுக் கோட்டைத் (LoC) தாண்டி இங்கு வந்த தீவிரவாதிகளை அந்நியர் எனக் கொண்டால் இப்போது இந்திய இராணுவ உளவுத்துறை வெளியிட்டுள்ள கணக்குப்படி  புர்ஹானின் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் உள்ள 145 பேர்களில் 91 பேர் காஷ்மீரிகள். 54 பேர்கள்தான் வெளியிலிருந்து வந்தோர். முன்னர் அப்படி இல்லை. அதோடு முன்னர் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் சென்று பாகிஸ்தான் படைகளிடம்தான் பயிற்சியையும் ஆயுதங்களையும் பெற்று வந்தனர். இப்போது அதுவும் இல்லை.

இந்த மாற்றத்தையும் இன்று இந்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது. இன்றைய எழுச்சிக்கு பாகிஸ்தானையே குற்றம் சாட்டுகிறது. இப்படி நாம் சொல்லும்போது பாகிஸ்தானுக்கு இதில் பங்கே இல்லை எனச் சொல்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. காஷ்மீரில் ஒரு சொலவடை உண்டு. “எல்லோருக்கும் ஒரு நிழல்தான். ஆனால் காஷ்மீரிக்கு மூன்று நிழல்கள்” என்பதுதான் அது. மற்ற இரண்டு நிழல்களில் ஒன்று இந்திய உளவுத் துறையுடையது; மற்றது பாக் உளவுத்துறையுடையது. ஆனால் இப்படி எல்லாவற்றிற்கும் பாகிஸ்தானையே காரணம் சொல்லிக் கொண்டிருப்பது பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவாது. இன்னொரு வகையில் அது நம் கையாலாகாத்தனத்தைக் காட்டுவதாகவும் அமையும்.

சென்ற வாரம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கு வந்தபோது அவர் ஆளுநரையும், முதல்வரையும் மட்டுந்தான் முக்கியமாகச் சந்தித்தார். உமர் அப்துல்லாவின் சார்பாக ஒரு விரிவான மனு கொடுக்கப்பட்டது. அவருக்கு காஷ்மீரத் தலைவர்களிடமிருந்து வந்த முக்கிய வேண்டுகோள் உடனடியாகக் காஷ்மீரைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதெல்லாம்கூட அல்ல. மாறாக எல்லோரும் கேட்டுக் கொண்டது முதலில் பாகிஸ்தானுடனும் பிரிவினைவாதிகள் எனச் சொல்லப்படும் ஹூரியத் தலைவர்களுடன் பேசுங்கள் என்பதுதான். அதற்கு இம்மியும் செவி கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டார் ராஜ்நாத் சிங். காஷ்மீரத் தலைவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் வைத்த கோரிக்கை முற்றிலும் நியாயமானது. இன்று அணைக்க முடியாதபடி பற்றி எரியும் இந்தப் பிரச்சினை மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்ட ஒன்று. இந்தியா. பாகிஸ்தான், ஜம்மு – காஷ்மீர் மாநில மக்கள் ஆகிய மூன்று தரப்பும்  இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள நாம் சற்றே வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

நான்கு

காஷ்மீர்ச் சிக்கலின் பின்னணியில் ஜம்மு  காஷ்மீர் மக்கள் செய்து கொண்ட மூன்று ஒப்பந்தங்கள் உள்ளன.

1.அமிர்தசரஸ் உடன்படிக்கை (Treaty of Amritsar) (1846)

அன்றைய காஷ்மீரின் இந்து டோக்ரா மன்னன் குலாப் சிங்கிற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையில் செய்துகொண்ட உடன்படிக்கை இது. அப்போது நடைபெற்ற ஆங்கிலோ – சீக்கியப் போருக்கிடையில் சீக்கிய மன்னன் தன்னிடம் காட்டிய விசுவாசத்திற்குப் பரிசாகக் காஷ்மீரை குலாப்சிங்கிற்கு அளித்தான். ஆனால் இனி எதிர்கால வரலாறு ஆங்கிலேயர்களுடையதுதான் என்பதை உணர்ந்த குலாப்சிங் பிரிட்டிஷ்காரர்களிடம் பணிந்தான். 75 லட்ச ரூபாய் விலைக்கும், ஆண்டுக் குத்தகையாகச் சில ஆடுகள், ஒரு காஷ்மீர்ச் சாலவை ஆகியவற்றுக்கும் ஈடாக காஷ்மீரை ஆளும் பொறுப்பை ஆங்கிலேயர்கள் குலாப் சிங்கிடம் அளித்தனர். இதில் கவனத்துக்குரிய அம்சம் என்னவெனில் காஷ்மீர் என்றைக்கும் முழுமையாக பிரிட்டிஷ் அரசால் காலனியப் படுத்தப்படவில்லை என்பதுதான். இந்த ஒப்பந்தப்படி பிரிட்டிஷ் அரசு ஒரு பாதுகாவலன் (protectorate) மட்டுமே.

  1. இணைப்பு ஒப்பந்தம் (Instrument of Accession) (1947, Oct 26)

காஷ்மீரின் அன்றைய டோக்ரா மன்னன் ஹரி சிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் இது. 1947 ல் ஜம்மு காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையில் 87 சதம் முஸ்லிம்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 93 சதம் முஸ்லிம்கள். மிகச் சிறுபான்மையான இந்து டோக்ரா மன்னர்களிடம் ஆட்சியும் காஷ்மீரப் பண்டிட்கள் வசம் நிர்வாக அதிகாரங்களும் இருந்தன. இந்நிலையில் பிரிவினைக் கலவரங்கள் ஜம்முவைப் பெரிதும் பாதித்தன, சீக்கிய மன்னனின் படை உதவிகளுடன் ஜம்முவிலிருந்த சுமார் 5 லட்சம் முஸ்லிம்கள் கொல்லவும் பாகிஸ்தான் பகுதிக்குள் விரட்டவும் பட்டனர். அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த பண்டிட்களும் சீக்கியர்களும் முழுப்பாதுகாப்புடன் இருந்தனர். இதைச் சுட்டிக்காட்டி காஷ்மீர் முஸ்லிம்களை மகாத்மா காந்தி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை இன்னொரு பக்கத்திலிருந்து உருவாகியது. பாக் எல்லையோரத்தில் இருந்த ஜம்மு பூஞ்ச் பகுதியிலிருந்து இப்றஹீம் கான் தலைமையில் ஒரு ஆயுத எழுச்சி ஏற்பட்டது. இன்னொரு பக்கம் பாக்கின் வட மேற்கு மாகாணத்திலிருந்து பாக் தளபதி அக்பர் கான் தலைமையில் பழங்குடி முஸ்லிம்களின் கோடூரமான தாக்குதல் தொடங்கியது. நிலை குலைந்த ஹரிசிங் புதிதாக உருவாகியிருந்த இந்திய அரசின் உதவியை நாடினான்.

இந்திய அரசு நிபந்தனையுடன் பாதுகாப்பு அளிக்க ஒத்துக் கொண்டது. அந்த நிபந்தனைகளில் முதலாவது அது ஒரு தற்காலிக இணைப்பு என்பது. ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு அமைதி திரும்பியவுடன் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி பாக் விருப்பப்படி இந்தியாவுடன் இணைந்திருப்பது அல்லது முழுச் சுதந்திர நாடாவது அல்லது பாக்குடன் இணைபவர்கள் இணையலாம் என முடிவு செய்யப்படும் என்பது.

இரண்டாவது நிபந்தனை: இந்தத் தற்காலிக இணைவும் கூட முழுமையான இணைவு அல்ல. மற்ற இந்திய மாநிலங்களிடமிருந்து காஷ்மீர் பெரிய அளவில் வேறுபடும். பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் இருக்கும். மற்ற அனைத்து அதிகாரங்களும் காஷ்மீர் அரசிடமே இருக்கும். காஷ்மீருக்குப் புதிய அரசியல் சட்ட அவை அமைக்கப்பட்டுத் தனி அரசியல் சட்டம் உருவாக்கப்படும். காஷ்மீர் மாநில அமைச்சரவைத் தலைவர் பிரதமர் (முதல்வர் அல்ல) என அழைக்கப்படுவார். அரசியல் சட்டத் தலைவரை அந்த மாநிலச் சட்டமன்றமே தேர்வு செய்யும். (பிற இந்திய மாநிலங்களைப்போல மாநில கவர்னரை  இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிகக் மாட்டார்). அவர் கவர்னர் என அழைக்கப்படாமல் ‘சத்ர் ஏ ரியாசத்’ என அழைக்கப்படுவார். நெருக்கடி நிலை அறிவிப்பும் மாநிலச் சட்ட சபையைக் கலைப்பது முதலான அதிகாரங்களும் சத்ர் ஏ ரியாசத்திடமே இருக்கும். இந்தியக் குடி அரசுத் தலைவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்திய உச்ச நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியப் பொதுக்கணக்காயரின் (CAG) தணிக்கை அதிகாரம் முதலியன ஜம்மு காஷ்மீரைக் கட்டுப்படுத்தாது. இந்தியத் தேர்வாணையங்களால் தேர்வு செய்யப்படும் IAS, IPS பட்டதாரிகள் காச்மீரில் உயர் அதிகாரிகளாக நியமிக்கபட மாட்டார்கள்.

இவை அனைத்தும் உள்ளடக்கப்பட்டு இந்திய அரசியல் சட்டத்தில் 370 ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. அதில். ஆக இந்தியா –காஷ்மீர் இணைப்பு ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதும் இந்த இணைப்பின் பாலமாக 370வது அரசியல் சட்டப் பிரிவு அமையும் என்பதும் இதில் முக்கியமாகக் கவனத்தில் இருத்தப்பட வேண்டியவை.

இதில் கவனத்துக்குரிய இன்னொரு அம்சம் என்னவெனில் 1947 டிசம்பர் 31 அன்று இந்தியா தன்னிச்சையாக ஐ.நா அவையை அணுகித் தான் கருத்துக் கணிப்பு நடத்தக் காஷ்மீர மக்களுக்கு வாக்களித்திருப்பதைப் பதிவு செய்தது. அந்த அடிப்படையில் ஆக 13, 1948 அன்றும் ஜன 5, 1949 அன்றும் ஐ.நா அவையில் இரு தீர்மானங்களும் இயற்றப்பட்டன. இந்தியா – பாக் – ஐ.நா ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

  1. அசையா.நிலை ஒப்பந்தம் (Stand Still Agreement) (1947, டிச 31)

இது இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

பின்னணி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு அதைத் தன்னோடு இணைத்துக் கொண்டதற்கு எதிர்வினையாக காஷ்மீருக்குள் பாக் இராணுவம் நுழைந்தது. முதல் இந்திய – பாகிஸ்தான் போர் தொடங்கியது. போர் முடிவில் இரண்டு அரசுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இது. இதன்படி இந்திய மற்றும் பாக் படைகள் அன்றைய தேதியில் (1949 ஜன 1) தம் வசம் வைத்திருந்த பகுதிகள் போர் நிறுத்த எல்லைகளாகக் (Cease Fire Line) கொள்ளப்படும். இந்த போர் நிறுத்தக் கோடே 1963 போருக்குப் பின் ‘கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of control – LoC) ஆக ஏற்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்ப் பிரச்சினையின் அடிப்படையாகவும் பின்னணியாகவும் இந்த மூன்று ஒப்பந்தங்களும் உள்ளன. இவற்றிலிருந்து நான் மனங்கொள்ள வேண்டியவற்றைக் கீழ்க் கண்டவாறு சுருக்கலாம்:

  1. காஷ்மீர் ஒரு ஒரு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்குரிய பகுதி (Disputed Area).
  2. இந்தப் பிரச்சினையில் மூன்று தரப்புகள் (stake holders பங்குபெறுகின்றன). அவை i. இந்திய அரசு ii. பாகிஸ்தான் அரசு iii. காஷ்மீர் மக்கள். இந்த மூவரும் பங்கு பெறாமல் யார் ஒருவரோ அல்லது இருவரோ எந்த முடிவையும் எடுக்க முடியாது.
  3. காஷ்மீர் – இந்திய இணைப்பு முற்றிலும் தற்காலிகமானது.
  4. இந்த இணைப்பின் அடிப்படையாகவும் நிபந்தனையாகவும் இந்திய அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு உள்ளது.
  5. பிரிவினைக் கலவரத்தின் ஊடாக உள் நுழைந்த ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்பட்டபின் காஷ்மீர் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே காஷ்மீர் சுதந்திரம் அடைவதா, இல்லை எந்த நாட்டுடன் இணைவது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஐந்து

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில் காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்ட துரோக வரலாறு யாரும் எளிதில் நம்பக்கூடிய ஒன்றல்ல. உலகளவில் சமாதானத்தின் தூதுவராக வலம் வந்தவரும் இந்தியக் குடியரசை ஒரு மதச்சார்பற்ற அரசாக அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பதற்காக இந்துத்துவவாதிகளால் இன்றுவரை விஷம் என வெறுக்கப்படுபவரும், உலக அளவில் மதிக்கப்படும் ஒரு அறிஞருமான ஜவஹர்லால் நேருவுக்கு இப்படியும் ஒரு துரோக வரலாறு இருப்பதை அறியும் யாரும் அதிர்ச்சி அடைவர். இந்தத் துரோகம், அதனடியான அமைதி வழிப் போராட்டங்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய இராணுவ அட்டூழியங்கள் என எல்லாவற்றையம் முழுமையாகப் பேச இங்கு இடமில்லை. மிக மிகச் சுருக்கமாகச் சில மட்டும் இங்கே.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தொகையில் 87 சதம் முஸ்லிம்களாக இருந்த போதும் அதிகாரத்தில் அவர்களுக்குப் பங்கில்லாமல் இருந்த நிலையைக் குறிப்பிட்டேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக அங்கும் சுதந்திர வேட்கை வெளிப்பட்டது. அப்துல் காதர்  என்பவர் மீது தேசத் துரோக வழக்கு ஒன்று சுமத்தப்பட்டு அந்த விசாரணை நடந்து கொன்டிருந்த போது 1933 ஜூலை 13 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 722 காஷ்மீரிகள் கொல்லப்பட்டது காஷ்மீர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. காஷ்மீர மக்கள் மத்தியில் இந்தப் பின்னணியில் உருவான தேசிய வேட்கைக்கு இயக்க வடிவு கொடுத்தார் ஒரு பள்ளி ஆசிரியர். பின்னாளில் “காஷ்மீரச் சிங்கம்” என அழைக்கப்பட்டவரும் நேரு அரசால் நீண்ட நாட்கள் வீட்டுக் காவல் கைதியாக வைக்கப்பட்டவருமான அவர்தான் ஷேக் அப்துல்லா. 1939 ல் அவர் தொடங்கிய தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரசுடன் பிரிட்டிஷ் எதிர்ப்பில் இணைந்து செயல்பட்டது. காஷ்மீரப் பண்டிதரான நேருவுக்கும் அப்துல்லாவுக்கும் இடையில் நல்ல உறவும் இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் 1946 ல் அப்துல்லா தொடங்கிய “காஷ்மீரை விட்டு வெளியேறு” (Quit Kashmir) இயக்கத்தைக் கண்டு டோக்ரா மன்னன் ஹரிசிங் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். 1947 – 48 பிரிவினைக் கலவரம் காஷ்மீரில் எதிரொலித்த விதத்தையும் அதன் விளைவாக உருவான காஷ்மீர் இணைப்பு குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்ட பின் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம் ஆனால் அவர்கள் விரட்டப்பட்ட பின்னும் கருத்துக் கணிப்பு பற்றிய பேச்சை இந்திய அரசு எடுக்காதது காஷ்மீர் மக்கள் மத்தியில் ஐயமும் அதிருப்தியும் உருவாகக் காரணமாகியாது. இந்நிலையில் 1951 ல் காஷ்மீருக்கான அரசியல் சட்ட அவை உருவாக்கப்பட்டது. ஷேக் அப்துல்லா காஷ்மீர் பிரதமர் ஆனார். 1952 நவம்பர் 11 அன்று டோக்ரா மன்னர்களின் அரசுரிமையை நீக்கம் செய்யும் ஆணையைப் பிறப்பிக்கவும் செய்தார். முதல் ‘சதார் ஏ ரியாசத்’ ஆக டோக்ரா இளவரசர் கரண் சிங் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி வற்புறுத்தலின் விளைவாகத்தான் கரன்சிங்கிற்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டது என்பார்கள்.

மேலும் ஓராண்டு பொறுத்திருந்த பின்னும் இந்திய அரசு கருத்துக் கணிப்பு பற்றி வாய் திறக்காத நிலையில் அது குறித்த கவலையை காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா பொது வெளிகளில் வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரது ‘தேசிய மாநாட்டுக் கட்சி’ இது குறித்து தீர்மானங்களையும் இயற்றியது. 1952 ஏப்ரல் 10 அன்று ஷேக் அப்துல்லா ஆற்றிய ரண்பீர் சிங் உரையில் இது குறித்து வன்மையாகத் தன் கருத்தை முன்வைத்தார்.  இதை ஒட்டி நேரு பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். 1952 ஜூலை 24 அன்று காஷ்மீர் பிரச்சினையில் இன்னொரு எல்லைக்கல்லான “டெல்லி ஒப்பந்தம்”  நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் நிறைவேற்றப் பட்டது. இந்த ஒப்பந்தப் பிரிவுகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தோமானால் நேரு 370 வது பிரிவின் ஊடாக காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு உரிமைகளைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளதையும் ஷேக் அப்துல்லா அவ் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருக்கத் தவித்துள்ளதையும் காண இயலும்.

அடுத்த சில நாட்களில் (1952 ஆகஸ்ட்) சோன்மார்கிலிருந்து ஷேக் அப்துல்லாவிற்கு நேரு எழுதிய கடிதம் யாரையும் அதிர்ச்சி அடைய வைக்கும். கருத்துக் கணிப்பு சாத்தியமில்லை எனத் தான் 1948 லேயே முடிவு செய்துவிட்டதாக நேரு அதில் குறிப்பிட்டிருந்தார். அப்படியே கருத்துக் கணிப்பு செய்ய வேண்டுமானால் தற்போதுள்ள அரசு மற்றும் அரசியல் சட்ட அவை உறுப்பினர்களின் கருத்துக்களையே மக்களின் முடிவாகவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். 1948 லேயே கருத்துக்கணிப்பு சாத்தியமில்லை என நேரு முடிவெடுத்திருந்தால் அதை மறைத்துக் கொண்டு செயல்பட்டதேன்? மக்கள் மத்தியில் சுய நிர்ணய உரிமை தொடர்பான கருத்துக் கணிப்பு என்பதில் மக்களுக்கு இடமில்லை என்றால் அதன் பொருளென்ன?

அது மட்டுமல்ல. இந்த அரசியல் சட்ட அவைத் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அறிந்தால்தான் இது எந்த அளவுக்கு மக்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்திய அவையாக இருந்தது என்பது விளங்கும். இந்தத் தேர்தலில் பள்ளத்தாக்கைப் பொருத்த மட்டில் தேசிய மாநாட்டுக் கட்சியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஜம்முவில் அப்படி எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில் ஜம்முவில் இந்துத்துவ அரசியல் தனது பிளவு வேலைகளைத் தீவிரமாக்கியது. இந்திய காஷ்மீர் இணைப்பு நடந்த பின்னணியில் ஜம்முவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பால்ராஜ் மதோக் ‘ஜம்மு பிரஜா பரிஷத்’ என்றொரு அமைப்பை உருவாக்கினார். இதுகாறும் அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்திருந்த  பெரும்பான்மை முஸ்லிம்கள் புதிய ஒப்பந்தங்களின் ஊடாகவும், காஷ்மீர் தேசிய உணர்வின் ஊடாகவும் அதிகாரத்தில் பங்கு பெறுவதை ஆர்.எஸ்.எஸ் வெறுத்ததன் விளைவாகவே இந்த பிரஜா பரிஷத் இயக்கம் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதலே இது காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370. வது பிரிவை நீக்குவது என்பதைக் கோரிக்கையாக வைத்து இயங்கியது. பிரிவினையை ஒட்டி உருவாகியிருந்த இந்து உணர்வை ஊதிப் பெருக்கி இந்துக்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்துவதில் அது வெற்றி காணத் தொடங்கியது.

காங்கிரசுக்குள் இருந்து கொண்டு நேரு காந்தி ஆகியோரின் மதச்சார்பற்ற அணுகல்முறைக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருந்த இந்துத்துவ சக்திகள் காந்தி கொலைக்குப் பின் காங்கிரசை விட்டு விலக நேந்தது. ஒரே நேரத்தில் இந்துமகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் ஒருவர் இருக்க முடியாது என காங்கிரஸ் முடிவெடுத்ததன் விளைவு இது.  நேரு அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்து இப்படிப் பதவி விலகிய சியாமா பிரசாத் முகர்ஜிதான்  இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான ‘பாரதீய ஜனசங் கட்சியை’ தொடங்கியவர்.. இந்தப் பின்னணியில்தான் 1952 ல் மதோக்கும் முகர்ஜியும் 370 வது பிரிவை நீக்க வேண்டும் என்கிற முழக்கத்தோடு காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்களைக் கைது சிறையில் அடைத்தார் ஷேக் அப்துல்லா. முகர்ஜி சிறையிலேயே மாண்டார். அது இயற்கை மரணமல்ல, திட்டமிட்ட சதி எனக் கூறி அதிலும் இந்துத்துவவாதிகள் அரசியல் லாபம் தேட முனைந்தனர்.

இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் இந்திய அரசுக்கும் ஏற்பட்ட முரண் தொடர்ந்து அதிகரித்து வந்தது.  1953 ஆகஸ்ட் 8 அன்று ஷேக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நேரு அரசின் வற்புறுத்தலில் காஷ்மீரின் சத்ர் ஏ ரியாசத்தாகப் பதவி அளிக்கப்பட்டிருந்த கரன்சிங்கைக் கொண்டு இது நிறைவேற்றப்பட்டது. அப்துல்லா மீது பொய் வழக்குகளும் போடப்பட்டன

அடுத்த ஆறு மாதங்களில் (1954 பிப்ரவரி) பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் மட்டுமின்றி பிற துறைகளிலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு அளித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையிட்டார். தொடர்ந்து 1956 க்குள் காஷ்மீர் தொடர்பாக 42 அரசியல் சட்ட ஆணைகள் இடப்பட்டன. பிரதமர், சதார் ஏ ரியாசத் முதலான பதவிப் பெயர்களும் மாற்றப்படன. அவர்களின் சிறப்பு அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. இந்திய நிர்வாகத் தேர்வாணையங்கள் தேர்வு செய்யும் IAS, IPS அதிகாரிகளே இனி ஜம்மு காஷ்மீரிலும் உயர் அதிகாரங்களை வகிப்பர்.

1956 நவம்பர் 17 அன்று ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் ஆக்கப்பட்டது.

இன்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.  மீதமுள்ள 135 பிரிவுகளும் கூட ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளதால் அவை இருந்தும் பயனில்லை.

ஆறு

காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியே வலுமிக்கதாக இருந்த நிலையில் அதைப் பலவீனப்படுத்துவது இந்திய அரசின் அடுத்த முக்கிய தந்திரமாக இருந்தது. அந்த நீண்ட வரலாற்றை விரிவாக இங்கு பேச நேரமில்லை. தேசிய மாநாட்டுக் கட்சி பலமுறை உடைக்கப்பட்டது. பின் ஒரு கட்டத்தில் சிறிது காலம் அது அந்தப் பெயரில் இயங்கவும் முடியவில்லை. இங்கொன்றைக் கவனத்தில் நிறுத்துவது அவசியம். தேசிய  மாநாட்டுக் கட்சியும் அதன் தலைவரான ஷேக் அப்துல்லாவும் எந்தக் காலத்திலும் மதவாத அரசியல் பேசியதில்லை. ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே அது தன்னை முன்னிறுத்திக் கொண்டது. அதை உடைத்துச் சிதைத்த இந்திய அரசு ஒரு கட்டத்தில் மதவாத அமைப்பான “முஸ்லிம் ஐக்கிய முன்னணி”யுடன்கூட அணி சேரத் தயங்கவில்லை.

நேருவுக்குப் பின் அதிகாரத்துக்கு வந்த இந்திரா நேருவின் போற்றத்தக்க பண்புகள் எதற்கும் வாரிசாக இருந்ததில்லை. நேருவிடம் இருந்த மதச்சார்பற்ற அரசியலும் அவரிடம் இல்லை. இந்திரா ஜனநாயகவாதியும் இல்லை; மதச்சார்பற்றவரும் இல்லை. தன் ஆட்சியின் முதற் பாதியிலாவது அவர் மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகளை தேசிய உடமை ஆக்குதல் முதலான வரவேற்கத்தக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். நெருக்கடி நிலைக்குப் பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அப்பட்டமான இந்து மத அடிப்படைவாதத்தையும் தனக்குச் சார்பாகப் பயன்படுத்த அவர் தயங்கவில்லை.

தேசிய மாநாட்டுக் கட்சியை உடைத்து காஷ்மீரில் ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதற்கென அவரால் அங்கு ஆளுனராக அனுப்பப்பட்ட ஜக்மோகனின் ஆட்சியில்தான் காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகும் நிலை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அங்கு 1989ல் தீவிரவாதமும் தலை எடுத்தது.

ஜக்மோகன் இரண்டு முறை அங்கு ஆளுனராகப் பணி அமர்த்தப்பட்டார். முதல்முறை (1984 -89) அவரைப் பதவியில் அமர்த்தியது இந்திரா காந்தி. பதவி ஏற்ற கையோடு தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து எடுபிடி பொம்மை அரசொன்றை அங்கு நிறுவினார். இரண்டாம் முறை (1990) அவரை ஆளுநராக அனுப்பியது வி.பி.சிங் அரசு. கூட்டணிக் கட்சியாக இருந்த பா.ஜ.கவின் வற்புறுத்தல் அதற்குக் காரணமாக இருந்தது. இவரது ஆட்சியில் நடந்த காஷ்மீர் தேர்தல் (1987 மார்ச் 23) மிகப் பெரிய அளவில் ஏமாற்றும் பொய்யும் நிறைந்த ஒன்றாக இருந்தது என்பது உலகறிந்த ஒரு உண்மை. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுதல், வென்றவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுதல் என மிக வெளிப்படையாக இந்தத் தில்லுமுல்லுகள் நடந்தேறின. 30 சத வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் ஐக்கிய முன்னணி வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அப்படி அம்ரிக்தால் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னும் தோற்றவராக அறிவிக்கப்பட்ட ஷேக் ஜலாலுதீன் தான் முதன் முதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 தொடங்கியே சிற்சில வன்முறைகள், ஆட் கடத்தல்கள், கொலைகள் முதலியன நடந்தபோதிலும் மிகப் பெரிய அளவில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் முழு வீச்சுடன் செயல்பட்ட காலம் 1989 – 2003. இனி நீதி, நேர்மை, ஜனநாயகம், வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்தல் என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆயுதம் ஏந்துவது ஒன்றே வழி என்கிற நிலைக்கு காஷ்மீர் இளைஞர்கள் தள்ளப்பட்டது இப்படித்தான். இதற்கு முன்னும் சில வன்முறைகள் காஷ்மீரில் நடக்கத்தான் செய்தன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஷ்மீரக் கவிஞரும் போராளியுமான மெஹ்பூல் பட்டை விடுதலை செய்ய வேண்டும் என பிரிட்டனில் இருந்த இந்தியத் தூதராலயத் தலைவர் ரவீந்திர மேத்ரியைக் கடத்திக் கொன்றதும் (1986 பிப்), அதற்கு ஈடாக அடுத்த ஐந்தாம் நாள் மெஹ்பூல் பட்டை இந்திய அரசு தூக்கிலிட்டதும், அதற்குப் பழிவாங்க பட்டுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி நீலகாந்த் கொல்லப்பட்டதும் (1989 நவ) நடக்கத்தான் செய்தன. ஆனால் இப்படி அங்கொன்ரும் இங்கொன்றுமான வன்முறை என்பதைத் தாண்டி, மறுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆயுதப் போராட்டத்தை ஒரு சாதனமாக (technique) ஏற்கும் அரசியல் நிலைபாடு காஷ்மீரில் உருவானது இப்போதுதான்.

இப்படியான தீவிரவாத அமைப்புகளாக முதலில் காதில் விழுந்த பெயர்கள் அமானுல்லாகானின் ‘ஜம்மு காஷ்மிர் விடுதலை முன்னணி’. பாக் ஆதரவு ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ ஆகியவைதான். அதற்குப் பின்தான் எத்தனை தீவிரவாத இயக்கங்கள்! அல்லாஹ் புலிகள், அல் உமர், அல்பராக், அல் ஜிகாத், அல், ஹாதித், ஹர்கத் உல் அன்சார், லக்‌ஷர் ஏ தொய்பா…

கடும் அடக்குமுறை ஒன்றின் மூலம் இந்த ஆயுதப் போரட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்பதுதான் இந்திய அரசின் அணுகுமுறையாக இருந்தது. ஆயுதப் படைகட்கும் காவல்துறைக்கும் வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFSPA – JK), 1990 ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டது. இரண்டாண்டுகள் வரை யாரையும் விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கும் ‘ஜம்மு காஷ்மீர் கலகப் பகுதிச் சட்டம்’ (DDA), ‘பொதுப் பாதுகாப்புச் சட்டம்’ (PSA) என்பவையும் அங்கு தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன. 1993 அக்டோபருக்குள் பள்ளத்தாக்கிலுள்ள ஆறு மாவட்டங்களிலும் 54 ஆயுதப்படை முகாம்கள் உருவாக்கப்பட்டன. கையில் கொலை ஆயுதங்களும், தாங்கள் என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதமும் இருந்தால் அவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு அத்துமீறல்களையும் விளக்கிச் சொன்னால் ஒரு நாள் போதாது. முதல் ஐந்தாண்டுகளில் மட்டும் அதாவது 1995ன் முற்பகுதிவரை அங்கு நடந்த உரிமை மீறல்களை 13 மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது (‘காஷ்மீரின் தொடரும் துயரம்’ எனும் தலைப்பில் இந்த அறிக்கை தமிழிலும் வெளியிடப்பட்டது). இந்த முதல் ஐந்தாண்டுகளில் மட்டும் குறைந்தபட்சம் 20,000 பேர், அதிகபட்சம் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிறது இந்த அறிக்கை. இன்றுவரை குறைந்த பட்சம் 80,000 அதிகபட்சம் ஒரு லட்சம் பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். 8,000 பேர் அங்கு காணாமல் அடிக்கப்பட்டுள்ளனர்.

யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டுப் பதவி உயர்வும் பணப் பரிசும் பெறலாம் எனும் நிலையில் அப்படிக் கொன்ற சம்பவங்களுக்குச் சாட்சியாக மச்சில் கொலைகள் உள்ளன. உள்ளூர்க் காரர்களைக் கொன்றுவிட்டு அந்நிய ஊடுருவல்காரர்கள் எனச் சொல்லி விருது வாங்குவதற்கு கன்டர்பால் கொலைகள் சாட்சி. இப்படி நிறையச் சொல்லலாம்.

ஏழு 

கையில் ஆயுதங்களுடன் கூடிய தீவிரவாத இயக்கங்கள் என்றால் பின் அத்துமீறல்கள் நிகழாமல் இருக்குமா? பல்வேறு இயக்கங்கள் ஆயுதங்களுடன் திரிகையில் ஒன்றுக்கொன்று பகைக் கொலைகள் இல்லாமல் இருக்குமா? ‘மதச்சார்பற்ற சுதந்திர அரசு’ என அறிவித்து ஆயுதம் தாங்கிய ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தன் அணிகளை பாக் ஆதரவு ‘ஹிஜ்ஃபுல் முஜாஹிதின்’ கொன்றதாக குற்றஞ்சாட்டியது. அதேபோல உள்ளூர் பிரச்சினைகளில் கட்டைப் பஞ்சாயத்து செய்தல், ஆட் கடத்தல் செய்தல் முதலிய நிகழ்ச்சிகளும் நடந்ததுண்டு. எனது நூலில் (காஷ்மீர் : என்ன நடக்கிறது அங்கே?) குறிப்பிட்டுள்ள மசூதா பர்வீனின் கதையில் அவரது கணவர் வாங்கிய கடனைத் தரவில்லை என அவரது தொழிற் கூட்டாளி புகார் சொல்ல ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ அமைப்பு அவரைக் கொண்டுபோய் விசாரித்துப் பின் விட்டுள்ளது. அதன் பின் இராணுவ அதிகாரி புனியா என்பவன் தலையிட்டு இயக்கங்களிலிருந்து தப்பி வந்த ஓடுகாலிகளின் துணையோடு அவரைக் கொன்றான். இந்த ஓடுகாலிகள் ‘இக்வானிகள்’ என அழைக்கப்படுகின்றனர்.

தீவிர அமைப்புகளில் இருந்து ஏதோ காரணங்களுக்காக வெளியே வருவோர், கைது செய்து தண்டனை அனுபவித்து வெளியில் வருவோர் முதலானவர்கள் ‘இக்வானிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆயுதமும் பாதுகாப்பும் அளித்து நெருக்கமான தொடர்பில் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டாதவர்களை ஒழிப்பது, ஆள் கடத்துவது முதலான நடவடிக்கைகளுக்கு இராணுவம் இவர்களைப் பயன்படுத்துகிறது. அப்படியான ஒருவன்தான் பப்பா கிஷ்ட்வாரி. அவன் குறித்து விரிவாக என் நூலில் எழுதியுள்ளேன். இராணுவப் பாதுகாப்புடன் 150 கொலைகள் வரை செய்துள்ள அவன் இப்போது ஏதோ ஒரு வழக்கில் சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளான்.

காஷ்மீரிகள் எந்நாளும் தங்களின் சக குடிமக்களான பண்டிட்கள், சீக்கியர்கள் ஆகியோரைப் பகையாக நினைத்ததில்லை. ஆனால் ஆயுதம் என வரும்போது அந்த அறங்கள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. இதன் விளைவே அங்கொன்றும் இங்கொன்றுமாக காஷ்மீரத் தீவிரவாத இயக்கங்களால் பண்டிட்கள் கொல்லப்பட்டதும் நடந்தது. 2003 மார்ச் 23 அன்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள நதிமார்க் எனும் கிராமத்தில் வசித்துவந்த பண்டிட்கள் 24 பேர் நள்ளிரவில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் எழுப்பி அழைத்து வந்து நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை அதன் உச்சகட்டமாக அமைந்தது. இதைச் செய்தது தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதிகள் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த இராணுவம் ஓடுகாலிகளைக் கொண்டு நடத்திய படுகொலைதான் இது என்கிற மாற்றுக் கருத்தும் உண்டு. எப்படி இருந்த போதிலும் ஆயுதப் போராட்டம் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்கள் வெளியேறியதில் ஒரு பங்கு வகிக்கத்தான் செய்தது.

எனினும் பண்டிட்களின் வெளியேற்றத்துக்கும் இந்தக் குறிப்பிட்ட சம்பவத்திற்கும் தொடர்பில்லை. இதற்குப் பல ஆண்டுகளுக்கும் முன்னதாகத் தீவிரவாதம் தொடங்கிய காலத்தில் இனி இங்கிருந்தால் ஆபத்து என்கிற எண்ணத்தை விதைத்து, வளர்த்து அம்மக்களை வெளியேற்றியதில் ஆளுநர் ஜக்மோகனுக்கு முக்கிய பங்குண்டு. இங்கிருந்தால் ஆபத்து; நீங்கள் வெளியேறினால் உங்களுக்கு ஜம்முவில் பாதுகாப்புடன் வீடு, டெல்லியில் வணிகம் செய்ய சந்தைப் பகுதியில் கடைகள், அரசு ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில் ஓய்வு பெறும் வயதுவரை அவர்களுக்கு ஊதியம் என ஆசை காட்டி அவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்டனர்.

பண்டிட்கள் வெளியேறுவதைத் தடுக்க காஷ்மீர முஸ்லிம்கள் முயன்ற வரலாறும் உண்டு. இதற்கென முன்னாள் தலைமை நீதிபதி முக்தி பஹாவுதீன் ஃபரூக்கி மற்றும் காஷ்மீரப் பண்டிதர்களின் தலைவர் எச்.என். ஜேட்டோ ஆகியோர் அடங்கிய ‘இரு சமூக கூட்டுக் குழு’ ஒன்று உருவாக்கப்பட்டது. பண்டிட்கள் வெளியேற வேண்டாம் என முஸ்லிம் தலைவர்கள் தனியாக வேண்டுகோளும் விடுத்தனர். ஒரு நாள் ஜேட்டோவை ஒரு காவல்துறை வாகனம் விமான நிலையத்திற்குக் கொண்டு வந்தது. ஜம்முவில் அவருக்கு வீடொன்று அளிக்கப்பட்டு அவர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற்றப்பட்டார்.

“பள்ளத்தாக்கில் பண்டிட்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருப்பது ஆயுதப் படையினரின் மன உறுதியைக் கெடுக்கும்” என ஜக்மோகன் தன்னிடம் சொன்னதாக காஷ்மீர் பிரச்சினை குறித்து விரிவாக எழுதியுள்ள பால்ராஜ் பூரி கூறுகிறார்.

எட்டு

என்னதான் தீர்வு?

காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் நீதியான தீர்வு என்பாதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. வாக்குறுதி இல்லாவிட்டாலும் கூட ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய வேட்கைக்கு மதிப்பளித்தலே நீதியானது என்பதிலும் கருத்து மாறுபாடு இல்லை. எனினும் வேறு இதர நடைமுறைச் சிக்கல்களையும் நாம் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்டக் குறைந்தபட்சம் எழுபதாண்டுகால வரலாறு உள்ள போராட்டம் இது. நீண்ட காலம் ஆயுதப் போராட்டம் நடந்த பூமி இது. இங்கு திடீரென இப்போது கருத்துக் கணிப்பை நடத்தி காஷ்மீரின் விதியை முடிவு செய்துவிட முடியுமா? போஸ்னியா (1992), கிழக்கு திமோர் (1989) ஆகியவற்றின் ரத்த வரலாறுகளை நாம் அத்தனை எளிதாக மறந்துவிட இயலுமா?.

எப்போதும் இதுபோன்ற பிரச்சினைகளில் உச்சபட்சமான (maximalist) தீர்வுகள் கவர்ச்சிகரமாக மட்டுமல்ல மிகவும் எளிமையானதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். எனினும் நாம் சொல்லும் தீர்வுகள் நியாயமானவையா இல்லையா என்பதைப் போலவே அவை இப்போது எந்த அளவு சாத்தியம் என்பதும் முக்கியம். அவை எந்த அளவிர்கு மனிதத் துயர்களைத் தீர்க்க வல்லவையாக உள்ளன, எந்த அளவிற்குச் சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக உள்ளன என்பது முக்கியம். அதனால்தான் இத்தகைய நீண்டகாலப் பிரச்சினைகளில் குறைந்தபட்சம் (minimalist) என்பதிலிருந்து தீர்வுகளைத் தொடங்க வேண்டி இருக்கிறது. ஆனால் குறைந்த பட்சத் தீர்வுகள் என்பன அத்தனை எளிதாக இருப்பதில்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து எளிமைப் படுத்தப்பட்ட உச்சபட்சத் தீர்வுகளைச் சொல்வோர் சில உண்மைகளை மறந்து போகின்றனர். காஷ்மீர் ஒரு சிறிய பகுதிதான். ஆனால் அதற்குள்ளும் சாதி, மதம், இனம், பிரதேசம் முதலான அடிப்படைகளில் பல வேறுபாடுகள் உண்டு. அங்கு 12 மொழி வழக்குகள் உள்ளன. எழுபதாண்டு காலப் போராட்டம் இந்த வேறுபாடுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

புவியியல் அடிப்படையில் மட்டும் காஷ்மீரை, 1. காஷ்மீரப் பள்ளத்தாக்கு, 2. ஜம்மு, 3. லதாக், 4. ஆசாத் காஷ்மீர் 5. பாக்கின் நேரடி ஆட்சியின் கீழ் இருக்கும் கில்ஜித் மற்றும் பல்கிஸ்தான். என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் ஒத்த கருத்துக்கள் கிடையாது. பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் மத்தியிலேயே கருத்து மாறுபாடுகள் உண்டு. பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரியத் முஸ்லிம்கள் உறுதியாக ஆசாதியைக் கோரி நிற்பவர்கள். ஜம்முவில் உள்ள முலிம்களில் இரு பிரிவினர் உள்ளனர். குஜ்ஜார் முஸ்லிம்கள் இந்தியாவை ஆதரிப்போர்; பக்கேர்வால் முஸ்லிம்கள் பாக்கை ஆதரிப்பவர்கள்.

லதாக்கின் கார்கில் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் ‘லே’ யில் வாழும் பவுத்தர்களுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் உண்டு. கார்கில் போரின்போது அகதிகளாக வந்த முஸ்லிம்களைக் கூட தம் பகுதிகளில் பவுத்தர்கள் அனுமதிக்கவில்லை. ‘டிராஸ்’ பகுதியில் வாழும் ஷினா முஸ்லிம்கள் ஆசாத் காஷ்மீர் மக்களுடன் இன ஒற்றுமை உள்ளவர்கள். கார்கிலில் கொஞ்சம் ஷியா முஸ்லிம்களும் உண்டு.

இந்துக்களை எடுத்துக் கொண்டால் பள்ளத்தாக்கிலுள்ள பண்டிதர்களும் ஜம்முவில் உள்ள இந்துக்களும் முழுமையாக இந்தியாவுடன் இணைந்திருப்பதை ஆதரிப்பவர்கள். இந்துத்துவத்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் இவர்கள் மத்தியில் தீவிரமாக வேலை செய்கிறது.

ஆக, சுருக்கமாகச் சொல்வதானால் பள்ளத்தாக்கிலுள்ள பண்டிதர் தவிர்த்த பெரும்பான்மையும் ஜம்முவில் உள்ள ஒரு சிறுபான்மையும் ஆசாதி கோரிக்கையை முன்வைத்துப் போராடுகிறார்கள். ஜம்முவில் உள்ள இந்துக்கள், லதாக்கில் உள்ள பெரும்பான்மை மற்றும் பள்ளத்தாக்கிலுள்ள மிகச் சிறுபான்மையான பண்டிதர்கள் ஆகியோர் இந்தியாவை ஆதரிக்கின்றனர். பள்ளத்தாகிலுள்ள ஒரு சிறுபான்மையும், ஜம்மு மற்றும் லதாக்கிலுள்ள சில சிறுபான்மைகளும், ஆசாத் காஷ்மீரிகளும் பாக்கை ஆதரிக்கின்றனர்.

தேவகவுடா அரசு மத்தியில் ஆண்டபோது அளித்த வாக்குறுதியின்படி காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.  அவற்றில் “மாநிலசுயாட்சிக் குழு” அளித்த அறிக்கையை (1996) சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம். மீண்டும் 370 வது பிரிவில் வரையறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் காஷ்மீர மக்களுக்குத் திருப்பிக் கொடுப்பது என்பதுதான் அந்தத் தீர்வு. இன்னொரு குழு “வட்டார ஆட்சிக் குழு” என்பது. இந்தக் குழு அளித்த அறிக்கை (1999) ஜம்மு காஷ்மீரை, சற்று முன் நாம் குறிப்பிட்ட அடிப்படையில் எட்டு வட்டாரங்களாகப் பிரித்து அதிகாரத்தைப் பகிர்வது என்பதை முன்வைத்தது.

கருத்துக் கணிப்பு எடுக்கும்போது கூட அதில் என்னென்ன கேள்விகளை வைப்பது என்பதெல்லாமும் கூட பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையாகத்தான் உள்ளது.

எட்டு

எந்த ஒரு பிரச்சினையையும் மிக ஆழமாகவும், அனைத்துத் தரவுகளின் அடிப்படையிலும், சட்ட நுணுக்கங்களுடனும் ஆய்வு செய்து ஆணித்தரமாக ஒரு பிரச்சினையை விளக்குபவர் நான் மிகவும் மதிக்கும் ஏ.ஜி.நூரானி அவர்கள். இன்றைய சூழலில் காஷ்மீர்ப் பிரச்சினையில் தீர்வு நோக்கிய அணுகல் முறை எவ்வாறாக அமைய வேண்டும் என்பது குறித்து அவர் 2007 ல் கூறியது:.

1.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஒரு பிரச்சினை உள்ளது என்பதை முதலில் இந்தியா ஒத்துக்கொண்டாக வேண்டும். அதாவது காஷ்மீர் ஒரு disputed territory என்பதை இந்தியா ஏற்க வேண்டும். வெறுமனே Kashmir is an integral part of India என்கிற வசனத்தைப் பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் சாத்தியமில்லை.

2.இந்தப் பிரச்சினைக்குரிய சிக்கலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமல்ல அந்த மக்களையும் ஒரு மூன்றாவது அங்கமாக (third party) இந்தியா ஏற்க வேண்டும். வெறுமனே இந்திய அரசும் பாக் அரசும் மட்டும் பேசியோ போரிலோ தீர்மானிக்கும் பிரச்சினை அல்ல இது. சொல்லப்போனால் இதைத் தீர்மானிக்க உரிமையும் தகுதியும் உடையவர்கள் காஷ்மீர மக்களே. எதார்த்த நிலையஐயும் அராசியலையும் கணக்கில் கொண்டு இதைச் சொல்கிறேன்.

3.இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. காலம் ஏற்கனவே கடந்து விட்டது. இருக்கும் நிலை (status quo) தொடர்வது சகிக்க இயலாதது.

4.போரின் மூலம், அடக்குமுறையின் மூலம் எந்தத் தரப்பும் ஒரு தீர்வை உருவாக்கும் சாத்தியமே இல்லை. “ஆசாதி” முழக்கத்தை இந்திய அரசு நசுக்கி அடக்கிவிட முடியாது; ஒரு போர் மேற்கொண்டு பாகிஸ்தானால் காஷ்மீரைக் கைப்பற்றுவது சாத்தியமே இல்லை; ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலம் காஷ்மீரிகள் இந்தியாவை விரட்டிவிடவும் முடியாது. ஆக மூன்றும் இன்று உடனடிச் சாத்தியமில்லை.

5.இந்த மூன்று பிரிவினரும் (இந்திய அரசு, பாக் அரசு, காஷ்மீர மக்கள்) பங்குபெறும் ஒரு தீர்வில்லாமல் அங்கு அமைதி சாத்தியமே இல்லை.

சும்மா தடலடியாகப் பேசி கைதட்டல் வாங்குவது அல்ல முக்கியம் . அல்லது நமது அரசியல் லாபத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு சொல்லாடுவதும் முக்கியமில்லை. பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொண்டு காஷ்மீர் மக்களின் தீர்வையும் நன்மையையும் நோக்கிச் சிந்திப்பது அவசியம்.

இந்த மூன்று தரப்பும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு தீர்வு உருவாக வேண்டுமானால் அதற்கு உள்ள தடை அல்லது வரம்புகள் (limits) எவை?

  1. பா.ஜ.க வோ இல்லை காங்கிரசோ இல்லை வேறு எந்தக் கூட்டணி அரசோ காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுத்துவிட்டு இன்று ஆட்சியில் இருப்பது சாத்தியமே இல்லை. காஷ்மீரைக் கைப்பற்றிவிடுவதென பாக் 1965ல் மேற்கொண்ட போர் தோல்வியடைந்த பின்னர் வெறும் பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் அது காஷ்மீரை இந்தியாவின் பிடியிலிருந்து பிரித்துவிடவும் இயலாது.
  2. அதேபோல எந்த ஒரு பாக் அரசும் இப்போதுள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) பன்னாட்டு அங்கீகாரத்துடன் கூடிய எல்லைக் கோடாக ஏற்றுக் கொண்டு (அதாவது இப்போது உள்ளவாறு இந்தியப்பிடியில் உள்ள காஷ்மீரை அங்கீகரித்து) விட்டு அது பதவியில் தொடரவும் முடியாது. ஏற்கனவே நேரு அந்தத் திட்டத்தை முன்வைத்தபோது பாக் அதை ஏற்கவில்லை என்பது நினைவிற்குரியது.
  3. பிரிக்கப்படாத சுதந்திரக் காஷ்மீர் என்கிற கோரிக்கைக்குக் குறைந்து இந்தியாவும் பாக்கும் முன்வைக்கும் எந்த ஒரு தீர்வையும் காஷ்மீர மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.

சரி இந்நிலையில் என்னதான் சாத்தியம்? வேண்டுமானால் இப்போதுள்ள நிலை தொடரலாம். அதாவது ஒரு பக்கம் ஆசாதி போராட்டம், இன்னொரு பக்கம் இந்திய இராணுவ அடக்குமுமுறை என்கிற நிலை தொடரலாம். ஆக உடனடி அமைதி வேண்டுமெனில் இந்த முத்தரப்பும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தீர்வு ஒரு வகையில் “திருப்தியின்மைகளின் சமநிலை” ஆகத்தான் (balance of dissatisfactions) இருக்கும்.

இதற்கு அப்பால் நமது தீவிரத் தனமையைக் காட்டிக் கொள்ளும் முகமாக எந்தத் தீர்வைச் சொன்னாலும், அந்தத் தீர்வு சாத்தியமில்லாமல் போவது மட்டுமல்ல, அது ஒரு சமகாலத் தலைமுறையின் அழிவு மற்றும் அமைதியின்மைக்கே இட்டுச் செல்லும்.

அப்படியாயின் இந்தத் திருப்தியின்மையுடனேயே அம்மக்கள் தங்கள் வாழ்வைத் தொடர வேண்டியதுதானா? அப்படியல்ல. முதலில் அங்கு அமைதியும், மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையும் உரையாடலும் ஏற்படுத்தப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட கால அமைதியும் சமாதானமும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும்.

இந்த அடிப்படையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன?

 

அரசியல் தீர்வுகள்:

1. அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள 370 வது பிரிவு மீண்டும் முழுமையாக உயிர்ப்பிக்கப்பட வேண்டும். 1954 தொடங்கி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.

2. இந்திய அரசின் கைவசம் உள்ள காஷ்மீருக்கும் ஆசாதி காஷ்மீருக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு எளிதில் இருதரப்பும் கடக்கக் கூடியதாக – ஒரு porous border ஆக்கப்பட வேண்டும். முடிந்தால் காஷ்மீரப் பகுதிகளின் கூட்டு நாடாளுமன்ற அமர்வுகளையும் அவ்வப்போது நடத்தலாம்.

மனித உரிமைக் களத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை:

3. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFPSA), பொதுப் பாதுகாப்புச்சட்டம் (PSA), கலகப் பகுதிகள் சட்டம் (DDA) ஆகியன உடன் நீக்கப்பட வேண்டும்.

4. மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்து வழக்குகளும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.

5. பண்டிட்கள் மீண்டும் உரிய பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்பட  வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *