காந்தியின் மெய்யியல் நோக்கு

முதல் பதிப்பு வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இந்நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது. தனது நூலின் அடுத்தடுத்த பதிப்புகளுக்கு முன்னுரை எழுதுவதைக் காட்டிலும் ஒரு ஆசிரியனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அனுபவம் ஏதும் இருக்க இயலாது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நூல் மீது நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இந்த விவாதங்களின் ஊடாக காந்தி குறித்துத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய மதிப்பீடுகளில் சில மாற்றங்கள் நேர்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. குறிப்பாக சாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்த காந்தி அடிகளின் கருத்துகளாக தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சில தவறான மதிப்பீடுகளில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காந்தியை வாசிக்காமலேயே அவரை விமர்சிப்பவர்களைப் போல காந்தி எந்த நிலையிலும் தேங்கிப் போனவர் அல்ல. அவர் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும், அது குறித்து வெட்கப் படாமல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தார். ஒரே கருத்தில் உறுதியாக இருப்பது என்பதை அவர் என்றும் பெருமைக்குரிய ஒரு பண்பாகக் கருதவில்லை. 1933 ஏப்ரல் மாத ‘ஹரிஜன்’ இதழில் அவர் தன்னைப் பற்றிக் கூறியுள்ள இந்தக் கூற்று கவனத்துக்குரிய ஒன்று அது:

“என் எழுத்துக்களைக் கவனமாக வாசிப்பவர்களுக்கும், எனது எழுத்துகளில் ஆர்வம் கொண்ட பிறருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொண்ட கொள்கைகளில் மாறாதிருப்பவன் எனக் காட்டிக் கொள்ள வேண்டும் என நான் கவலைப்பட்டதே இல்லை. உண்மை குறித்த என் தேடலின் ஊடாக ஏற்கனவே கொண்டிருந்த பல கருத்துக்களை நான் கைவிட்டுள்ளேன்; பல புதியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்….. கணந்தோறும் வெளிப்படும் சத்தியத்தின், என் கடவுளின் அழைப்பிற்குச் செவிகொடுக்கத் தயாராக இருப்பது என்பது குறித்து மட்டுமே நான் கவலை கொண்டவன். எனவே எனது எந்த இரு கருத்துக்களுக்கும் இடையே ஒருவர் மாறுபாட்டைக் காண நேர்ந்தால், அவர் என் அறிவு நலத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டிருந்தால், ஒரே பொருள் குறித்து நான் வெளிப்படுத்தியுள்ள இரண்டாவது கருத்தை எடுத்துக் கொள்வதே சரியானது.”
(I would like to say to the diligent reader of my writings and to others who are interested in them that I am not at all concerned with appearing to be consistent. In my search after Truth I have discarded many ideas and learnt many news things…. What I am concerned with is my readiness to obey the call of Truth, my God, from moment to moment, and therefore, when anybody finds any inconsistency between any two writings of mine, if he still has any faith in my sanity, he would do well to choose the later of the two on the same subject.)

காந்தி இப்படிச் சொன்னது மட்டுமல்ல இந்தப் பிரக்ஞையோடு அவர் வாழ்ந்தார் என்பது இன்னும் முக்கியமானது. இதன் பொருள் என்ன? அவர் என்றுமே தான் கொண்டுள்ள அறக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் மட்டுமே சரியானவை என இறுக்கமாக இருந்ததில்லை. அது தவறாகவும் இருக்கக் கூடும் என்கிற புரிதலுடனேயே அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அரசியல் களத்தில் செயல்படுபவர் எப்படித் தன் கருத்துக்கள் மீது இறுதி நம்பிக்கை வைக்காது செயல்பட முடியும்? மற்றவர்களது கருத்துக்களும் சரியாக இருக்கக் கூடும் என்றால் எப்படி முன் நகர்வது? தன் கருத்துகள் மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என அவர் நம்பாவிட்டாலும், எந்த ஒரு கணத்திலும் தனது கருத்துக்கள் ஒப்பீட்டளவில் சரியானது என்கிற நம்பிக்கையோடு அவர் செயல்பட்டார். அந்த வகையில் தத்துவார்த்த தளத்தில் நாம் அவரை ஒரு relativist ஆகக் கருத இடமுண்டு.

இதன் பொருள் அவர் Absolute Truth (முற்றுண்மை – சத்யம்) என்பதை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதல்ல. அவர் ‘இறுதி உண்மை’ என ஒன்று உண்டு என்பதை ஏற்றுக் கொண்டவர்தான். அதைத்தான் அவர் ‘சத்யம்’ என்றார். அப்படியான ஒரு முற்றுண்மையை ஏற்றுக் கொண்ட வகையில் அவரை அத்தனை எளிதாக ஒரு relativist எனவும் வகைப்படுத்திவிட இயலாது என்பதும் உண்மைதான்.
சத்யம் குறித்த தேடல் என்பது அவரது இன்னொரு அடிப்படை அணுகல் முறையான ‘அஹிம்சை’ என்பதுடன் பிரிக்க இயலாததாக இருந்தது. நான் சத்தியத்தை, அதாவது இறுதி உண்மையை உணர்ந்து விட்டேன் என்றுணர்வதே மற்றவர் மீதான வன்முறைகளில் ஒன்று என அவர் கருதினார். மற்றவர்கள் உண்மை அறியாதவர்கள், அறமற்றவர்கள், நான் ஒருவனே அறத்தின்பால் நின்று செயல்படுபவன் என்கிற சிந்தனையே மற்றவர் மீதான வன்முறைகளில் ஒன்று என அவர் கருதினார். எனவே அவரது செயல்பாடுகளில் மற்றவர்களை “அறமற்றவர்கள்” எனக் குற்றம் சாட்டும் moral condemnation க்கு இடமிருக்கவில்லை.
வன்முறை என்பது உடல் சார்ந்த வன்முறையை மட்டும் குறிப்பதல்ல. பொருளாதாரம், பண்பாடு எனப் பலதுறைகளில் அதன் வெளிப்பாடுகள் உண்டு.
ஒரு முற்றுண்மை உண்டு என ஏற்றுக் கொண்ட வகையில் அவர் அடிப்படையில் ஒரு மதச் சிந்தனையாளர் என்பதில் தவறில்லை. ஆனால் அது எந்த ஒரு குறிப்பிட்ட மதமும் சார்ந்ததல்ல. குறிப்பாக அது இந்து மதம் சார்ந்ததல்ல. அவர் உச்சரித்த ‘ஹே ராம்’ என்பது நிச்சயமாக அத்வானியின் ராமனல்ல. காந்தி எல்லா மதங்களின் ஊடாகவும் ஊடுபாவி விரவியுள்ள ஒரு பொதுமைக் கூறைத் தேடினார்; கண்டடைந்தார். மீண்டும் தேடி அடையத் தயாராகவே எப்போதும் திறப்புடன் இருந்தார்.

அவரது அஹிம்சை என்பதும் மிகவும் சிக்கலான ஒரு. கோட்பாடு. அவர் ரத்தம் சிந்தப்படுவதற்கு எதிரானவர் இல்லை. ஒரு போராட்டக் களத்தில் நம்முடைய ரத்தத்தைச் சிந்துவதற்கு நாம் தயங்கக் கூடாது. ஆனால் நம் எதிரே நிற்பவர்களின் ரத்தம் சிந்தப்படுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது அஹிம்சை குறித்த அணுகல்முறையாக இருந்தது. இதன் பொருள் அஹிம்சை என்பது அவரைச் செயலூக்கமற்றவராக ஆக்கிவிடவில்லை என்பதுதான். மிகவும் செயலூக்கமுள்ள போராட்டங்களே அவரது வாழ்க்கையாக இருந்தது.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காந்தி ஒரு தொழில் ரீதியான அறிவுஜீவி (professional intellectual) அல்ல. அதே போல அவர் ஒரு தொழில்ரீதியான தத்துவவியலாளரும் (professional philosopher) அல்ல. அவர் தனக்கென ஒரு இறுதித் தத்துவம் அல்லது இறுதிக் கருத்தியல் என ஒன்றை வரையறுத்துக் கொண்டதில்லை. நடைமுறையிலிருந்து கணமேனும் விலகி நிற்காத அவர் கற்றுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தார். தான் கற்றுக் கொண்டதையும், சிந்தித்தவற்றையும் அவ்வப்போது ஆவணப்படுத்தவும் அவர் தவறவில்லை. அவரளவுக்கு எழுதிக் குவித்தவர்கள் சிலரே. ஒரு சிறந்த வழக்குரைஞரான அவர் எழுதியவை எந்தத் தொழில்ரீதியான அறிஞர்களின் கறார்த் தன்மைக்கும் இறுக்கத்திற்கும் குறையாதவை. எனினும் அவை எந்த ஒரு புள்ளியிலும் தேங்கி விடாதவை. அனுபவங்களின் ஊடாகக் காலந்தோறும் வளர்ந்து வந்தவை. நடைமுறை சார்ந்தவை (practical ideology / philosophy). அவருக்குப் பின்னும் வளர்வதற்குச் சாத்தியமான திறப்புகள் உடையவை. எந்நாளும் ஒரு கோட்பாட்டு முறையாக (system) நிலைநிறுத்திக் கொள்ளாதவை.

‘சுயராஜ்யம்’ எனும் அவரது கருத்தாக்கமும் இப்படி மிகவும் சிக்கலான ஒன்றுதான். அவரது ‘இந்திய சுயராஜ்யம்’ (Hind Swaraj) எனும் கருத்தாக்கத்தில் உள்ள ‘சுயம்’ (Self) என்பது வெறும் சுதந்திர அரசு என்கிற பொருளில் ஆனதல்ல. உலக வரலாறு என்பது குறித்து இன்றளவும் நிலவி வரும் ஒரு மேலைக் கருத்தாக்கத்திற்கு எதிராக அவர் தனது ‘ஹிந்த் சுயராஜ்’ என்பதை முன்வைத்தார். இந்த மேலைக் கருத்தாக்கத்தின்படி உலக வளர்ச்சி என்பதற்கு முன்மாதிரியாக மேற்குலகம் (குறிப்பாக ஐரோப்பா) உள்ளது. நேற்று ஐரோப்பாவில் நிகழ்ந்தது நாளை உலகின் பிற நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் நடக்கும் என்கிற ஐரோப்பியச் சிந்தனையை அடியோடு தகர்ப்பதுதான் காந்தியின் ஹிந்த் சுயராஜ் எனும் கருத்தாக்கம்.. அடிமைச் சமூகத்திற்குப் பிறகு நிலவுடைமைச் சமூகம், அதன்பின் தொழிற் புரட்சி, ஏகாதிபத்தியம், உலகமயம் என முன்னதாக ஐரோப்பாவில் நிகழ்வது அடுத்தடுத்துத் தவிர்க்க இயலாமல் இந்தியாவிலும் நிகழும் என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரானது. அப்படி நிகழக் கூடாது. அப்படி நிகழ்வது வளர்ச்சிக்கல்ல, அழிவுக்கே இட்டுச் செல்லும். அந்த அழிவு என்பது வெறும் பொருளியல் அழிவு மட்டுமல்ல; அது ஒருவகையில் ஆன்மாவின் அழிவாகவும் அமையும் என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது.

மார்க்சீயமும் உலக வளர்ச்சி என்பது மேலை நாடுகளைப் பின்பற்றி அடிமை முறை, நிலப்பிரபுத்துவ முறை, முதலாளியம் என்கிற வரிசையில் அமையும் என்றுதானே சொன்னது என ஒருவர் கேட்கலாம். ஆனால் இதை இப்படித் தவிர்க்க இயலாத உலகப் பொதுமையாகக் கார்ல் மார்க்ஸ் முன்வைக்கவில்லை. அவரது ஆசிய உற்பத்தி முறை என்கிற கோட்பாடும், ரஷ்யா பற்றிய இறுதிக்கால ஆய்வுகளும் இந்த வகையில் முக்கியமானவை. வேறு வகையான வளர்ச்சிச் சாத்தியங்களை அவை முன்வைத்தன.
காந்தியும் இப்படித்தான் இந்த மேற்குலக வளர்ச்சி முறைக்கு எதிரான சுய உருவாக்கத்தைக் கனவு கண்டார். இன்று காந்தியின் ஜென்மப் பகைவர்களான இந்துத்துவவாதிகள் சொல்லும் “சுயராஜ்யம்” இந்தக் காந்திய சுயராஜ்யத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்துத்துவவாதிகளின் வளர்ச்சி அணுகல் முறை என்பது மேற்குலக வளர்ச்சிப் பாதையை அதி தீவிரமாக செயல்படுத்துவதுதான் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் அவசியம்.

மீண்டும் ஒருமுறை இந்தப் பத்தாண்டுகளில் காந்தி குறித்த ஒற்றைப் பார்வையில் ஏற்பட்டுள்ள நெகிழ்வை நான் மகிழ்வோடும் சற்றுப் பெருமிதத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மூன்றாம் பதிப்பிற்கு மிக அற்புதமான ஒரு முன்னுரையை எழுதியுள்ள அன்பு நண்பர் ராட்டை, ஒரு சிறந்த எழுத்தாளராக உருப்பெற்றுள்ள பூ.கோ.சரவணன், அரசியல் களத்தில் செயல்படும் முருகானந்தம், இந்த நூலைக் காந்தியின் மேலுள்ள ஆர்வத்தால் வெளியிட ஆவலுடன் முன்வந்துள்ள விலாசினி. தஞ்சை ரமேஷ், ஆசைத்தம்பி முதலான பத்திரிகையாளர்கள் என ஒரு இளைய தலைமுறை காந்தியைச் சரியாகப் புரிந்து கொள்வதிலும் அறிமுகப் படுத்துவதிலும் ஆர்வம் கொண்டுள்ளமை மிக்க நம்பிக்கையை அளிக்கிறது. நண்பர் ராட்டையைக் காந்தியியல் குறித்த ஒரு களஞ்சியம் எனலாம். ஏதேனும் காந்தியியல் குறித்து எனக்கு ஐயம் ஏற்பட்டாலோ, தகவல் தேவை என்றாலோ நான் அவரைத்தான் தொடர்பு கொள்கிறேன். உடனடியாகத் தொடர்புடைய ஏராளமான தகவல்களை அனுப்புவார். அவரது முகநூல் பக்கம், இணையத் தளம் முதலியன காந்தியை அறிந்து கொள்ள முயல்வோருக்குப் பெரிதும் உதவும்.

இந்த நூலின் முதல் இரு பதிப்புகளிலும் 1932 ல் வெளியிடப்பட்ட மா.நீலகண்ட சித்தாந்தியார் எழுதிய “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை)” எனும் முழு நூலும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது. காந்தி அடிகளின் தலைமையில் அன்றைய காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அரிஜன ஆலயப் பிரவேசத்தை ஒட்டி இந்துச் சனாதனிகள் காந்தி மீது எத்தனை வெறித்தனம் மிக்க ஆத்திரத்தைக் கொண்டிருந்தனர் என்பதை விளக்கும் முகமாக அபூர்வமாகக் கிடைத்த அந்நூலை இணைத்திருந்தோம். சுமார் 67 பக்கமுள்ள இந்நூலின் இணைப்பால் ஏற்படும் சுமையைக் குறைக்க வேண்டி இந்தப் பதிப்பில் அது இடம்பெறவில்லை.
இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ள காந்தி கொலை பற்றிய கேள்வி பதில் வடிவிலான பகுதி அச்சிடப்பட்டு சென்ற ஆண்டு நாமக்கல் பகுதியில் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது. கோட்சேக்குச் சிலை வைப்பதாக இப்பகுதியில் இந்துத்துவ அமைப்பு ஒன்று சொன்னதை ஒட்டி மூத்த வழக்குரைஞர் ரத்தினம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இது தயாரிக்கப்பட்டது. அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று ஒரு வாழ்நாளை தலித் மக்களுக்காக அர்ப்பணித்துச் செயல்பட்டுவரும் ரத்தினம் அவர்கள் இதனை ஆர்வத்துடன் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.

ஆனால் புதிய கட்டுரைகள் பல இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ‘தி இந்து’ நாளிதழில் சென்ற ஆண்டு இளம் நண்பர் ஆசைத்தம்பி (ஆசை) நேர்கண்டு வெளியிட்ட என் நேர்காணலும் இத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் வாசகர்கள் படித்துப் பாராட்டிய நேர்காணல் அது. நண்பர் ‘ஆசை’ யும் காந்தியில் ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞர். அவருக்கும் என் நன்றிகள்.
இந்நூலைச் சிறப்புற வெளியிடும் ப்ரக்ஞை பதிப்பகத்திற்கும் இனிய நண்பர்கள் பாண்டியன் மற்றும் விலாசினி ஆகியோருக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *