கொரோனாவும் சிறுபான்மையினரும்

முஸ்லிம்களுக்கு மருத்துவம் இல்லை! கர்ப்பிணிகளாயின் அட்மிஷன் இல்லை!! அம்மா உணவகத்தில் உணவு இல்லை!!!

(கொரோனா  தடுப்புப்விழிப்புணர்வுக்காக அமைத்துச் செயல்பட்டுவரும் “Awareness Centre for Corona Preventive Action  (ACCP) சார்பாக நேற்று ) ஏப்ரல் 08,2020  மாலை பேசிய உரை)

“கொரோனா தடுப்பு விழிப்புணர்வுச் செயல்பாட்டு மையம்” சார்பாக எல்லோருக்கும் வணக்கம்.

இன்று உலகம் மிகப் பெரிய அழிவு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. எத்தனையோ துறைகளில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்த உலகம் இன்று கோரோனா முன் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் நம்மால் இன்னும் எந்தத் தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியான ஒரு சூழலில்தான் இன்று இந்தப் பேரழிவை எதிர்கொண்டு சமாளிக்கும் பணியில் நம்மைப் போன்றவர்களும் அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி உள்ளது. அந்த வகையில் உருவானதுதான் நமது இந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வுச் செயல்பாட்டு மையம்.

அரசுடன் இணைந்து நோய்ப் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சில கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவது மட்டுமின்றி, அரசுகள் தங்களின் சார்பு நிலைகளின் விளைவாகப் புறக்கணிக்கும் துறைகளிலும் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி உள்ளது. அந்த வகையில்தான் இந்த அமைப்பின் சார்பாக இரண்டு நாள் முன்னர். மதிப்பிற்குரிய மருத்துவர் அமலோற்பவநாதன் அவர்களின் இந்த நோய் மற்றும் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு உரையை ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான தரவுகளையும் குறிப்புகளையும் நமது தோழர்கள் இவ் அமைப்பின் தளத்திலும் இந்த முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர். இம்முயற்சியில் ஒத்துழைக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொள்ளை நோய்கள் ஒன்றும் உலகிற்குப் புதிதல்ல. கடந்த நூற்றாண்டுகளில் இப்படியான கொள்ளை நோய்களில் இலட்சக் கணக்கில் மக்கள் மடிந்துள்ளனர். உரிய வைத்தியம், தடுப்பு மருந்துகள் இல்லாமல் நோய் முற்றியவுடன் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே விட்டுவிட்டு மக்கள் அனைவரும் தம் கிராமங்களிலிருந்து வெளியேறி எங்கேனும் தொலைதூரத்திற்குச் சென்று ஒர் ஆறுமாதம் அல்லது ஒரு வருடத்திற்குப் பின் ஊர்களுக்குக்குத் திரும்பி வந்த வரலாறுகள் உண்டு. எல்லாத் தொற்று நோய்களுக்கும் இம்மாதிரி நோய் தோன்றி ஒரு உச்ச கட்டத்தை அடைந்து, அதனூடாக எதிர்ப்பு சக்திகள் உருவாகி நோய் தானாக வலுவிழக்கும் நிலைதான் முற் காலங்களில் இருந்துள்ளது. இன்று பிரச்சினை என்னவெனில் மருத்துவ வசதிகள் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதும் மக்கள் இடப்பெயர்வும் இயக்கமும் உலக அளவில் இருப்பதும் நோய்  அதி வேகமாக உலகம் முழுவதும் பரவி விடுவதுதான். முதன் முதலில் இன்றைய கொரோனா தாக்குதல் மிகப் பெரிய அளவில் வெடித்த சீனாவின் வூகான் மாவட்டத்திலிருந்து உலகெங்கும் ஒரு நாளைக்கு 120 விமானங்கள் – Flights – செல்கின்றன என்பதைப் பார்த்தோம். கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம் ஆகியவற்றுக்காக உலகம் பூராவும் மக்கள் புலம் பெயர்வதும், பயணிப்பதும் இன்று உலகை, ஒரு கிராமம் ஆக்கியுள்ளன. எனவே எந்தக் கொள்ளை நோய் வந்தாலும் அது இப்போது உலக அளவில் அதி வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையை எட்டிவிட்டோம். இந்நிலையில் இதை எதிர்கொள்ளும் செயல்பாடுகளும் இன்று நாம் உலக அளவில் ஒன்றுபட்டு ஒரே நோக்குடன் மேற்கொள்ளும் செயல்பாடுகளாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் நாம் தவறினால் வரலாறு காணாத பேரிழப்புகளை நாம் சந்திப்பது உறுதி.

டி 2

பெரிய அளவில் அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்த போதிலும் இப்படியான கொள்ளை நோய்க் கொடுந் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பெருந்தடையாக இருப்பது இன்று உலகில் வேரூன்றி கிடக்கும் இன மத வெறுப்புகள்தான். இந்த வெறுப்பு அரசியலை நாம் உரிய முறையில் எதிர்கொள்ளாவிட்டால் பேரிழப்புகளைச் சந்திப்பது உறுதி. அந்த வகையில்தான் இன்று நாம் இந்தக் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எந்த அளவு முக்கியம் அளிக்கிறோமோ அதே அளவு இந்த வெறுப்பு அரசியலை எதிர்கொள்வதற்கும் முக்கியம் அளிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கட்சி, மற்றும் அரசியல் வெஏறுபாடுகள் இல்லாமல் இன்று நாம் அரசோடு ஒத்துழைக்க வேண்டிய அம்சங்களில் ஒத்துழைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் இங்கு கடந்தகால அரசியல் நோக்கங்களுக்காவும், குறுகிய பலன்களுக்காகவும் வளர்துவிடப்பட்ட மதவாத, இனவாத அரசியல் நமது ஒன்றுபட்ட முயற்சிகளைக் கவிழ்ப்பதாகவும், அழிப்பதாகவும் உள்ளது. கொரோனா தாக்குதல் பரவிக்கொண்டுள்ள நிலையில் போதிய தயாரிப்புகள், தடுப்புகள் ஆகியவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், ஒரே நேரத்தில் பண் ட பாத்திரங்களைத் தட்டி ஓசை எழுப்புவது, விளக்குக் கொளுத்திப் பிடிப்பது என்பது போன்ற அர்த்தமற்ற செயல்பாடுகளை அரசே முன்னின்று செயல்படுத்தும்போது, நாம் அவற்றில் பங்கேற்காதபோதும் எதிர்ப்பதில்லை.

ஆனால் இவற்றின் ஊடாக இன்று வழக்கமான வெறுப்பு அரசியலை சில அமைப்புகள் மேற்கொள்வதும், அதை அரசுகள் கண்டிக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் ஒரு இகழ்ச்சிப் புன்னகையோடு வேடிக்கை பார்ப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. இது குறித்த கவனத்தை நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

உலக அளவில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வெறுப்பு அரசியலைச் செய்கிறார். ‘சைனா வைரஸ்’, ‘வூகான் வைரஸ்’ எனத் தொடர்ந்து அவர் பொது வெளிகளில் பேசினார். ஒரு ‘பயோ வார்’ திட்டத்துடன் சீனாதான் இந்த கோவிட் 19 எனும் வைரசைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பியது எனும் ஆதாரமற்ற தகவல் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகளும் அரசியலாரும் பரப்பினர். ஆனால் வூகானில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வந்த விளையாட்டு வீரர்கள்தான இந்த நோயை இங்கும் கொண்டு வந்தனர் எனச் சீன வெளியுறவு அமைச்சர் பதிலடி கொடுத்தார்.

நேற்றிரவு (06-04-2020) ‘டைம்ஸ்’ குரூப்பின் உமேஷ் இசால்கர் பெயரில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் குறிப்பு முகநூலில் இங்குள்ள ஒரு மருத்துவரால் பகிரப்பட்டிருந்தது, மும்பை – புனே மருத்துவமனை ஒன்றில், டெல்லியில் நடந்த சர்ச்சைக்குரிய தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவர் விபத்தொன்றில் சிக்கி அனுமதிக்கப்படுகிறார். அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் 40 பேர்கள் இன்று கொரோனா தாக்குதலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் இன் பாக்சில் வந்து “டாக்டர் அது தவறான செய்தி, உடனே அதை நீக்குங்கள்” என்கிறார். இது நான் நேற்று இரவு 12 மணிக்குப் பார்த்தது. அந்த நண்பரை இன்பாக்சில் தொடர்பு கொண்டு என்ன விடயம் என்றேன். அவர் வேறொரு ‘க்ளிப்பிங்’ இன்று எனக்கு அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி குறித்து ‘அவுட்லுக்’ இதழ் விசாரித்து அது தவறான தகவல் என எழுதியுள்ளது. அந்த மருத்துவ மனையின் பெயர் “டி.ஒய்.. படீல் ஹாஸ்பிடல்”. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என இன்று அங்கு 92 பேர்கள் குவாரன்டைனில் உள்ளனர் என்கிற வரையில் ‘டைம்ஸ் குரூப்’ செய்தி உண்மை. ஆனால் எப்படி அவ்வளவு பேர்கள் பாதிக்கப்பட்டர்கள் என்றால் விபத்துகாளான ஒரு டாக்ஸி டிரைவருக்கு சிகிச்சை அளித்தபோது ஏற்கனவே அவரைப் பாதித்திருந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அப்படி எல்லோருக்கும் பரவி இருக்கிறது.. ஆனால் அந்த டாக்சி டிரைவருக்கும் தப்லிகி ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதுமட்டுமல்ல அவர் ஒரு முஸ்லிமும் இல்லை என்பதுதான் அந்தச் செய்தி. ஆனால் அத்ற்குள் அந்தப் பதிவின் அடிப்படையில் முஸ்லிம்கள் மீது அத்தனை வெறுப்பு கக்கப் பட்டிருந்தது,

இந்த மாதிரிச் செய்திகள் பரவுவதில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தவறு எனத் தெரிந்தாலும் வெளியிட்டவர்கள் அதற்கு வருத்தம் தெரிவிப்பதும் இல்லை. நான்கு நாட்கள் முன்னர் ஒரு தமிழ் சேனல் டெல்லி தப்லலிகி ஜமாத் கூடுகை பற்றிய ஒரு 5 நிமிடச் செய்தியை வெளியிட்டது.. அதில் சொல்லப்பட்ட செய்திகளில் ஒன்று அந்தக் கூடுகையில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அகமதுவும் கலந்து கொண்டார் என்பது அந்தக் கூடுகை சென்ற மாதம் நடந்தது. ஃபக்ருதீன் அகமது பல ஆண்டுகளுக்கும் முன்பு அவர் பதவியில் இருக்கும்போதே இறந்து போனார். இதைச் சுட்டிக்காட்டிக் கண்டனங்கள் பெரிய அளவில் தெரிவிக்கப் பட்டுள்ள போதும் இன்றளவும் அதற்குக் காரணமானவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இப்படியான சந்தர்ப்பங்களில் மீடியா தரப்பில் சொலப்படும் சமாதானம் என்னவெனில் அப்படியான தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தால் அந்த சானலின் ‘ரெபுடேஷன்’ போய்விடுமாம். ஒரு சமுதாயம், அதுவும் சிறுபான்மைச் சமுதாயத்தின் ‘ரெபுடேஷன்’ பாதிக்கப்படுகிறதே என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. ஒரு சிறுபான்மைச் சமுதாயம் இப்படியான வெறுப்புத் தாக்குதலுக்கு ஆளாகும்போது அது என்ன மாதிரி பாதிப்புகளை எல்லாம் அம்மக்களுக்கு விளைவிக்கும் என்பது பற்றி இங்கு யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கவலைப்படுவதில்லை.

ஆனால் இப்படி ஒரு சமுதாயமே இன்று குற்றம் சாட்டப்படும்போது, ஒரு அரசே இப்படியான பொய் அவதூறுகளுக்குப் பக்கபலமாக இருக்கும்போது என்ன ஆகிறது? அந்தச் சமுதாயம் இன்று அச்சத்தில் உறைந்துள்ளது. அந்த மக்கள் இன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இப்றகீம் சையத் எனும் நண்பர் ஒரு பதிவைச் செய்துள்ளார். கோவைக்கு அவர் எதோ காரணமாகச் செல்கிறார். காலையில் அவர் அங்குள்ள தமிழக அரசின் ‘அம்மா உண்வகத்தில்’ உணவருந்தச் சென்று வரிசையில் நிற்கிறார். கொரோனாவை முன்னிட்டு இடைவெளி விட்டு வரிசையில் நின்றிருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது சிலர் அங்கு நின்ற அத்தனை பேரிலும் இவரை மட்டும் கூப்பிட்டு ஓரமாகப் போகச் சொல்லுகின்றனர். இவர் காரணம் புரியாமல், “அடுத்தது நான்தான். வாங்கிக் கொண்டு போகிறேன்” என்கிறார். ஆனால் அவர் அங்கிருந்து கட்டாயமாக வரிசையிலிருந்து அகலும் நிலை ஏற்படுகிறது. காரணம்? “நீ முஸ்லிம்..”

இன்னொரு முஸ்லிம் நண்பர் சொல்கிறார். பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கடைக்கு மூணு அட்டை முட்டை அனுப்ப வேண்டும் என அவர் ஒரு ‘ஆர்டர்’ தருகிறார் அவர். வழக்கமாக முட்டை ஏற்றி வரும் ஆட்டோ காரருக்கு போன் செய்து சொல்கிறார். அவர் முடியாது என்கிறார். இவர் மறுபடியும் சரி கொஞ்ச நேரம் கழித்தாவது கொண்டுபோய்க் கொடு என்கிறார். “பாய்! மன்னிச்சிடுங்க. நான் பள்ளிவாசல் பக்கம் எல்லாம் சவாரி வரமாட்டேன். நீங்க வந்து பைக்கில வச்து கட்டி எடுத்துட்டுப் போயிடுங்க..” என்கிறார் அவர்.

தந்தை பெரியார் மூட நம்பிக்கைகளைக் கண்டித்து ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து, “அமெரிக்காவில் கூடத்தான் அப்படி நடக்குது..”என்றார். உடனே பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? “ஏன் அமெரிக்காவிலே முட்டாப் பசங்களே இருக்க மாட்டாங்களா?”..நேற்று ஒரு செய்தியைப் படித்தபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது. அந்தச் செய்தி இதுதான்: 5G டவர்கள் அதி வேகமாக ‘டேடா’ க்களை அனுப்புவதால் அதன் மூலம் வேகமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதுதான் அது. படு அபத்தமான ஒரு சந்தேகம் அது. ஆனால் நேற்று இங்கிலாந்தில் ஐந்து 5G டவர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. அதெல்லாம் கூடப் பரவாயில்லை. டவர்களோடு போச்சு. ஒரு சமுதாயமே இப்படி குற்றவாளிக் கூண்டுக்குள் நிறுத்தப்படும்போது?

காவல்துறையும் விதிவிக்கல்ல. பெரிய அளவில் இந்த வெறுப்பு அரசியலுக்கு அது பலியாகி உள்ளது நேற்று இளம் தமிழகத்தைச் சேர்ந்த ரஃபீக்ராஜாவின் தந்தை அப்துல் ரஹீம் கொல்லப் பட்டுள்ளார். ரஹீம் 70 வயதுப் பெரியவர். அவர் எந்நாளும் முஸ்லிம் அடையாளங்களை, தாடி வைப்பது, தொப்பி போடுவது என்பதை எல்லாம் பின்பற்றியதில்லை. சமீபத்தில் அவர் பேரன் ஒருவர் இப்படியான வெறுப்புப் பின்னணியில் கொல்லப்படுகிறார். அதற்குப் பின் தன் இறுதிக் காலத்தில் அவர் தொப்பி, அணிந்துள்ளார். தாடியும் வைத்துள்ளார்.

இப்படி சிறுபான்மை மக்கள் தங்களின் அடையாளங்களை இப்போது தீவிரமாகத் தரித்துக் கொள்வது பற்றிய ஒரு உளவியல் ஆய்வு உண்டு. இதைப் ‘பதுங்கு குழி’ மனப்பானமை என  மனோவியலாளர்கள் வகைப் படுத்துகொன்றனர். அடையாளங்கள் என்பன மனிதர்களின் உளம் சார்ந்த ஒரு அடிப்படையான உரிமை. அது பறிபோகும்போது தங்களால் அதைக் காக்க முடியவில்லையே என்கிற நிலை அவர்களை வாட்டுகிறது, மிகப் பெரிய உளவியல் பிரச்சினையாக அது அமைகிறது. தமது அடையாளங்களையும் தனித்துவங்களையும் காப்பாற்றும் முகமாக அவர்கள் ஆண்களாயின் தாடி வைத்துக் கொள்ளுதல், தொப்[பி அணிதல், ஐந்து வேளை தொழுதல். பெண்களாயின் ஹிஜாப் அணிதல்… என்கிற வகைகளில் அவர்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

டி 3

ரஃபீக்கின் தந்தை அப்துல் ரஹீமின் கதைக்கு வருவோம்.. கருப்பாயி ஊரணி பகுதியில் அவரது கறிக்கடைஉள்ளது. அந்தப் பகுதியில் ஆதிக்க சாதியினர் மத்தியில் இப்போது மதவாத பாஜக வலுவாக உள்ளது. அச்சத்தோடுதான் சாலையோரத்தில் உள்ள தன் கடையை அவர் நடத்திக் கொண்டுள்ளார். தற்போது எடப்படி அரசு கடந்த சில நாட்களாக கரிக்கடையைத் தடை செய்தவுடன் அவர் கறி வியாபாரத்தை நிறுத்தியுள்ளார். கடையை மூடிவிட்டு நேற்று பாதுகாப்பாக கடைக்குள் தங்கி இருந்தவரைத்தான் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அவர் இறந்து போயுள்ளார். இது நேற்று நடந்தது.

நாடெங்கிலும் முஸ்லிம்கள் கொரானாவை ஒட்டிய இன்றைய  கெடுபிடிகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனவும் அவர்களைச் சோதனைக்கு அழைத்துச் செல்ல வரும் போலீஸ்காரர்களைத் தக்குகிறார்கள், முகத்தில் உமிழ்கின்றனர் என்றும் செய்திகள் பரப்புவதிலும் உண்மைகள் இல்லை. போலீஸ்காரர்கள் முகத்தில் உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அபத்தமான அவதூறு இது.

கோவில்பட்டி கயத்தாரில் அப்படித்தான் இரண்டு நாள் முன்னர் ஒரு செய்தி பரவியது. ஒரு குடும்பத்தினர் கோரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என அளிக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்ல வந்த அதிகாரிகளை முஸ்லிம் இளைஞர்கள் அடித்தார்கள் என்பதுதான் அச்செய்தி. எழுத்தாளர் சம்ஷுதீன் ஹீரா உண்மை நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இப்போது அளித்துள்ளார். இன்று பரப்பப் படும் வெறுப்புச் செய்திகளை ஒட்டி அங்குள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்றின்மீது பக்கத்து வீடுகளிலிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் போகிறது.. அந்த வீட்டில் கொரோனா தொற்று உள்ளவர்கள் உள்ளார்கள் என. இரவில் போலீஸ் வந்து எல்லோரையும் வேனில் ஏறச் சொல்லி ஏக அமர்க்களம் பண்ணுகிறார்கள், தெருவெங்கும் மக்கள் வெளியில் வந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த வீட்டில் வயதுக்கு வந்த மூன்று இளம் பெண்கள் உள்ளனர் எனவும் இரவில் வரமாடோம், காலையில் வருகிறோம் எனவும் சொல்கிறார்கள் .சரி எனக் காலையில் காவல்துறை வருகிறது. முஸ்லிம் வீட்டினர் வேனில் ஏறும்போது ஒரு கோரிக்கை வைக்கின்றனர். பெண்கள் வேனில் ஏறும்போது போட்டோ  எடுக்கக் கூடாது என்பதுதான் அந்தக் கோரிக்கை. போலீஸ் ஒத்துக் கொள்கிறது. ஆனால் இளம் பெண்கள் வேனில் ஏறும்போது மஃப்டியில் இருந்த ஒருவர் படம் எடுக்கிறார். அந்த வீட்டுப் பையன்கள் அவரை அடித்துவிடுகின்றனர்.

இதுதான் பிரச்சினை. செய்தி எப்படிப் பரவுகிறது? நோய்த்தொற்று உள்ளவர்களை செய்தி அறிந்து போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்தபோது முஸ்லிம்கள் தாக்கிவிடுகிறார்கள் என்று. ஆனால் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் உள்ள நிறைய செய்திகள் மறைக்கப்பட்டுதான் இப்படியான செய்திகள் பரவுகின்றன. இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின்னாலும் ஒரு கதையுள்ளது. அப்படி அந்தப் பெண்களை போட்டோ எடுத்தவர் போலீஸ்காரரே இல்லை. அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் ஏன் இளம் முஸ்லிம் பெண்களை அங்கு வைத்து மருத்துவத் துறையினர் ‘போட்டோ’ எடுக்க வேண்டும்? பதில் இல்லை. ஆத்திரத்தில் தாக்கிவிடார்களே ஒழிய குற்றத்தை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவில் அக்குடும்பம் ஒத்துழைத்துள்ளது..

இப்படியான ஒரு பின்னணியில்தான் சென்ற வாரம் மதுரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முஸ்தபா ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவில் தொழிலாளியாக இருந்த முஸ்தபா ஊரடங்கை ஒட்டி சொந்த ஊர் வந்து மதுரை முல்லை நகர் பகுதியில் உள்ள தன் அக்கா வீட்டில் தங்குகிறார். உடல் நலிவுற்று வீட்டில் இருந்த அவரை கொரோனா நோயாளி எனச் சொல்லி அங்குள்ளவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். அவரைக் காவல்துறை ஒரு குற்றவாளியைப்போல தெருவே வேடிக்கை பார்க்குமாறு இழுத்துச் சென்று சோதிக்கிறார்கள். அவரிடம் கொரோனா தாக்குதல் எல்லாம் இல்லை. வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் புகார் செய்ய மறுபடியும் அவர் போலீஸ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு சோதனை செய்யப்படுகிறார். மறுபடியும் ‘நெகட்டிவ்’ ‘ரிசல்ட்’தான். மறுபடியும் திருப்பி அனுப்புகின்றனர். நொந்துபோன முஸ்தபா விடிகாலையில் சுமார் 6 கிமீ நடந்து சென்று வந்து கொண்டிருந்த ரயில் முன் வீழ்ந்து செத்துப் போகிறார்.

இப்படி எளிய மக்கள் மட்டுமல்ல. புகழ்பெற்றவர்களாக இருந்த போதும்  இன்று நிலைமை இதுதான். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவும் இன்று ஆங்காங்கு அவமானப் படுத்தப் படுவது நிகழ்கிறது அவரது தந்தை  ஆந்திராவைச் சேர்ந்தவர், தாய் ஒரு சீனப்பெண்ணாம் அதனால் போகும் இடமெல்லாம் அவர், “சீனச்சி”, “அரை சீனச்சி”, “சிங்கி” இப்படியெல்லாம் இழிவுபடுத்தப் படுகிறார்.. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய முக வடிவம் உள்ள யாரும் இன்று இப்படி ‘சீனர்கள்’ எனச் சொல்லி இழிவு செய்யப்படும் நிலை உள்ளது..

‘வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை ஒன்று நேற்று கண்ணில் பட்டது. பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் நடந்த ஒரு உரையாடலைக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். “ஆசிய மாணவர்கள் எல்லோரையும் குவாரண்டைனில் வைக்கப் போறாங்களாம்..”.என்கிறது ஒரு குழந்தை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது சைனீஸ் உணவுவிடுதிகளில் யாரும் சாப்பிடுவதில்லை. எனப் புலம்புகிறார் ஒரு சீனக் கடைகாரர்..

முதன் முதலில் சீனாவில் இந்த கொரோனா வைரஸ் பெருந் தாக்குதலை ஏற்படுத்தியபோது அமெரிக்க அரசின் வணிகத்துறைச் செயலர் வில்பர் ரோஸ் சொன்னது : “சீனாவில் வந்துள்ள இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி நாம் நமது நாட்டில் (அமெரிக்க்கா) வேலைவாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.” இப்படி அவர் சொன்னபோது அவர் அறிந்திருக்கவில்லை – அதைவிடப் பெரிய கொரோனா தாக்குதலை அவர்கள் விரைவில் சந்திக்கப்போகிறார்கள் என்று.

வரலாறு பூறாவும் எப்போதெல்லாம் கொள்ளை நோய்த் தாக்குதல்கள் நடந்துள்ளனவோ அப்போதெல்லாம் அதைஒட்டிப் பெரிய அளவில் “மற்றமை” மீதான வெறுப்பும் கூடவே கட்டமைக்கப் பட்டுள்ளது. அந்தக் கால பிளேக் நோயிலிருந்து சமீபத்திய ‘எய்ட்ஸ்’ வரைக்கும் வரலாறு அப்படித்தான் இருந்துள்ளது.

19 ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியரான பார்த்தோல்ட் ஜார்ஜ் நெய்புர் கூறியதைப் போல, “மனித மனத்தின் ஆக வன்முறையானதும் கொடூரமானதுமான கூறுகள் மேலெழுவது என்பது பிளேக் முதலான கொள்ளை நோய்த் தாக்குதல்கள் ஏற்படும்போதுதான் நிகழ்கிறது”. 1950 களில் ஃப்ரான்ஸ் நாட்டு வரலாற்றாசிரியர் ரெனே பேய்ச்ரெல் சொன்னார்: “கொள்ளைநோய்கள் வர்க்க வெறுப்புகளை விசிறி விடுகின்றன..இத்தகைய உணர்வுகள் நம் மனத்தோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கொள்ளை நோய்களின் போது அவை வெடித்து வெளிப்படுகின்றன”.. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஃப்ரான்ஸ் தேச வரலாற்றாசிரியர் கார்லோ கின்ஸ்பெர்க் சொன்னார்: ”நமது அச்சங்கள், வெறுப்புகள், மன அழுத்தங்கள் ஆகிய அனைத்தையும் கொட்டித் தீர்ப்பதும், ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து யார்மீதாவது பழி சுமத்தி ஆறுதல் அடைவதும் நம் பண்பு.  இந்தமாதிரியான் கொள்ளைநோய்த் தாக்குதல் காலங்களில்தான் இது அதிகமாக வெளிப்படுகிறது.“

வெறுப்பு உமிழ்தல்களுக்கு இப்படியான விளக்கங்கள் அளிப்பது அவசியம்தான். ஆனால் விளக்கம் அளிப்பது மட்டுமே போதுமானதல்ல.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *