டாக்டர் பாலகோபாலின் பார்வையில் இந்துத்துவம் (முன்னுரை)

2009 அக்டோபர் 8 அதிகாலை. தோழர் வ.கீதாவிடமிருந்து தொலைபேசி. அவர் என்னுடன் அடிக்கடி உரையாடுபவர் அல்ல. மிகவும் பதட்டத்துடன் அந்தச் செய்தியைச் சொன்னார். அதைச் சொல்லி முடிக்கையில் அவர் தேம்பி அழுதார். பின் சட்டென்று போனை நிறுத்தினார். டாக்டர் பாலகோபால் மறைந்தார் என்கிற தாள முடியாத துயரத்தையும் அதிர்சியையும் தாங்கிய செய்திதான் அது. என்னை விடச் சில ஆண்டுகள் வயதில் குறைந்தவராயினும் நான் மிகவும் மதித்துப் போற்றிய, பின்பற்ற விரும்பிய களப் போராளி, அறிஞர் அவர்.

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, பன்னாட்டளவில் முக்கியமான ஒரு ஆய்விதழில் ஆசிரியராக இருந்து அந்தத் துறையில் தடம் பதித்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் ஆந்திரமாநிலத்தில் அப்போது நக்சலைட் வேட்டை என்கிற பெயரில் கடும் மனித உரிமை மீறல்கள் நடந்தன. அந்த அநீதியைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க இயலாது என்கிற நிலைபாட்டை எடுத்த அவர் தனது துறையில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இந்த மனித உரிமை மீறல்களை எதிர்த்துச் செயல்படலாம் என நினைக்கவில்லை. முழுமையாகத் தன்னை அந்தத் தருணத்தில் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்குடன் அவர் தன் கணிதத் துறையைத் துறந்தார். அவர் இறந்த போது ஒரு நாளிதழ் இப்படி எழுதியது: “அவர் கணிதத் துறையில் தொடர்ந்திருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பார்.”

நக்சல்பாரி இயக்கத்துக்குச் சார்பான ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக’த்தில் (APCLC) இணைந்து செயல்படத் தொடங்கினார். தனது பணிக்குப் பயன்படும் வகையில் வழக்குரைஞருக்குப் பயின்று ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்குரைஞர் ஆனார். அவரது இறுதிச் சடங்கன்று சுமார் 500 க்கும் மேற்பட்ட அவரது கட்சிக்காரர்கள் (clients) திகைத்து நின்றிருந்ததை இனொரு பத்திரிக்கை எழுதியது.
மனித உரிமை அமைப்புச் செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் அறம் சார்ந்த பிரச்சினைகள் அவரை உலுக்கிய போது கட்சி சார்ந்த ஒரு அமைப்பிலிருந்து பணியாற்றுவது என்பதைக் காட்டிலும் சுயேச்சையாகப் பணியாற்றுவதே சரியாக இருக்கும் என்கிற அறப் பிரக்ஞையின் (moral consciousness) தூண்டுதலால் முந்தைய அமைப்பிலிருந்து விலகி ‘மனித உரிமை மேடை’ (Human Rights Forum- HRF) எனும் அமைப்பை உருவாக்கி இறுதிவரை அதிலிருந்து செயல்பட்டார். காவல்துறை தாக்குதல்களுக்கு அவர் இலக்காகிய சம்பவங்களும் உண்டு. ஒரு முறை ஆந்திரக் காவல்துறை அவரைக் கடத்தவும் செய்தது.
டாக்டர் பாலகோபால் ஒரு களப்போராளி மட்டுமல்ல. சமகாலப் பிரச்சினைகள் குறித்து மிக ஆழமாக ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதியவர். உலக அளவில் புகழ்பெற்ற EPW இதழில் அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் தனி நூலாக வெளி வந்துள்ளது. தெலுங்கு இதழ்களில் அவர் நிறைய எழுதியுள்ளார். பத்திக் கட்டுரைகளும் அவர் தொடர்ந்து எழுதியதுண்டு. அவையும் தொகுக்கப்பட்டுள்ளன.
மிக நவீனமான கோட்பாடுகள், நவீனமான சிந்தனையாளர்களின் பெயர்கள் இவற்றையெல்லாம் ஆங்காங்கு தெளித்துத் தன் கட்டுரைகளுக்கு பாலகோபால் அதிகாரம் சேர்த்ததில்லை. அவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை. நூறு சதம் சுயமானவை. அதே நேரத்தில் மிக நுண்மையாகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து நம்மை வியக்க வைப்பவை. மேற் தோற்றத்தில் வெளிப்படும் எளிமைக்கு அப்பால் மிக ஆழமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டுபவை. மிக நவீனமான கோட்பாடுகள் தெளிக்கப்பட்ட எந்தக் கட்டுரையைக் காட்டிலும் வாசிப்பவரைப் பிரமிக்க வைப்பவை.

காங்கிரசை வீழ்த்தி சந்திரபாபு நாயுடு மேலெழுந்த வரலாறு குறித்த ஒரு ஆய்வு, மரண தண்டனைக்கு எதிரான அவரது தர்க்கம், வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழி முறைகளுக்கும் அப்பால் சிதிக்க வேண்டியதன் அவசியம் குறித்த அவரது சிந்தனை உசுப்பல் ஆகியவற்றைக் கண்டு அவ்வாறு பிரமித்தவர்களில் நானும் ஒருவன். பாலகோபாலுடன் அவரது கடைசி ஆண்டுகள் சிலவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாத ஒன்று. இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஈழத் தமிழர்கள் படுகொலையை (2009) கண்டித்து நாங்கள் நடத்திய கருத்தரங்கில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவு முக்கியமான ஒன்று. அவர் இறந்த சிலநாட்களில் அவரது ‘வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்’ எனும் கட்டுரை மற்றும் மனித உரிமைப் பணிகள் குறித்த அவரது விரிவான நேர்காணல் ஆகியவற்றை மொழிபெயர்த்து அவர் குறித்த ஒரு விரிவான அறிமுகத்துடன் வெளியிட்டோம். Public Intellectual என இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் உயிர்ப்புமிகு அறிவுஜீவி (Organic Intellectual) என்பதன் மேன்மையான பொருளில் வாழ்ந்து மறைந்தவர் பாலகோபால். ஒரு Public Intellectual மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பொது வெளியில் பேசினால் மட்டும் போதாது. அது எவ்வகையிலும் அரசியல் நிலைபாட்டிற்காக அற நிலைபாட்டைப் பலி கொடுத்ததாகவும் அமைந்து விடக் கூடாது என்பதைத்தான் ‘அதன் மேன்மையான் பொருள்’ எனக் குறிப்பிட்டேன். நாம் யாரோ ஒருவருக்குச் சாதகமாகத்தான் பேசுகிறோம். ஆனால் அதற்காக நாம் யாருக்காக நிற்கிறோமோ அவர்களுக்காக எதையும் மிகைப்படுத்துவதுவதோ, இல்லை குறைத்துச் சொல்வதோ கூடாது என்பதுதான் அது.

இந்த நூலிலும் அதை நீங்கள் காணலாம். முஸ்லிம் மன்னர்களைக் கொடூரமாக இந்துத்துவம் சித்திரிக்கிறது என்பதற்காக முஸ்லிம் மன்னர்கள் இந்து ஆலயங்களை இடித்ததே இல்லை என்பது போலெல்லாம் நாம் பேச வேண்டியதில்லை. உண்மைகளே நம் நியாயங்களை முன்வைக்கப் போதுமானவை. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல்.
1983 தொடங்கி 2009 வரை தெலுங்கில் இந்துத்துவம் தொடர்பாக அவர் எழுதியவற்றை தெலுங்கு, தமிழ் இரண்டிலும் புலமையுடைய தோழர் மாதவ் மொழி பெயர்த்துள்ளார். இடதுசாரிக் கருத்தியலுடன் செயல்படும் தோழர் மாதவ் ஏற்கனவே பல தெலுங்கு நூல்களைத் தமிழில் பெயர்த்தவர். பாலகோபாலின் ஆங்கிலக் கட்டுரைகளை நாம் ஆங்கிலம் வழியாக எளிதில் படித்துவிட வாய்ப்புண்டு. தெலுங்குக் கட்டுரைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அரிய ஒரு பணியை மாதவ் செய்துள்ளார்.
தோழர் மாதவ் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.

2.
டாக்டர் பால்கோபால் மனுதர்மம் குறித்து ஆந்திர மாநில குடியுரிமைகள் சங்கத்தின் மாத வெளியீடான ‘ஸ்வேச்ச’ இதழில் தொடாராக எழுதிய கட்டுரைகள், பல்வேறு சூழல்களில் இந்துத்துவத் தாக்குதலுக்கு எதிராக இயக்கங்களின் சார்பாக வெளியிடுவதற்கென தயாரித்த அறிக்கைகள், பல இதழ்களில் அவர் அவ்வப்போது சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இது.
(1) இந்துத்துவத்தின் அடிப்படை அணுகல் முறைக்களின் ஊடாக வெளிப்படும் அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் (2) மனு தர்மம் குறித்த மிகவும் விரிவும் ஆழமும் மிக்க ஒரு ஆய்வு (3) கல்வித்துறையில் இந்துத்துவத்தின் செயல்பாடுகள் (4) பா.ஜ.க முதன் முறை ஆட்சியில் அமர்ந்தது தொடங்கி பாலகோபால் மறையும் வரை சங்கப் பரிவாரங்கள் மெற்கொண்ட செயல்பாடுகள், தொடுத்த தாக்குதல்கள், தலைவர்கள் பேசிய பேச்சுக்கள ஆகியவற்றை நுண்மையாக ஆய்வு செய்த கட்டுரைகள் என மேலோட்டமாக இந்நூலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1983 தொடங்கி 2009 வரை பாலகோபால் எழுதியவை இக்கட்டுரைகள். 1983 என்பது 1928 தொடங்கிய இந்துத்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் நான்காவது கட்டம் முளை விட்ட ஆண்டு (பார்க்க: எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ நூலின் முதல் பாகம்). காந்தி படுகொலைக்குப் பின் சற்றே அடங்கிப் பின்னணியிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த இந்துத்துவ சக்திகள் பொது வெளிக்கு வந்து மத மாற்றம், இராமர் கோவில் முதலான பிரச்சினைகளை முன்வைத்து வெகு மக்களைத் திரட்டிக் களத்தில் இறங்கிய ஆண்டு. மீனாட்சிபுரம் மதமாற்றம் நடந்த ஆண்டும் 1983 தான் என்பது குறிப்பிடத் தக்கது. 2009 என்பது முதல் முறை பா.ஜ.க கூட்டணி (1998 – 2002) முடிந்து மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இரண்டாம் முறையாகத் தொடங்கிய ஆண்டு. 1983 தொடங்கி எழுதப்பட்டவை எனினும் முதல் இரு கட்டுரைகள்தான் அந்த ஆண்டு எழுதப்பட்டவை. பிற, குறிப்பாக கல்வித் திட்டத்தில் மேற்கொண்ட மாறுதல்கள், குஜராத், ஒரிசா முதலான மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்த கட்டுரைகள் எல்லாம் பாலகோபாலின் இறுதிப் பத்தாண்டுகள் எழுதப்பட்டவை.

பாலகோபாலின் அணுகல்முறை குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். குஜராத், கந்தமால், மங்களூரு முதலான இடங்களில் நிகழ்த்தப்பட்ட இந்துத்துவ வன்முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டவர் அவர். இவை தொடர்பான அவரது கட்டுரைகளைப் பொருத்தமட்டிலளந்த வன்முறைகள் எவ்வாறு தோன்றின, எப்படிச் செயல்படுத்தப்பட்டன, எத்தனை பேர்கள் கொல்லப்பட்டனர், எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டன என்கிற விவரத் தொகுப்புகள் அல்லது கோப வெளிப்பாடுகளாக அவை இல்லாமல் இவற்றினூடாக இந்துத்துவத்தின் உண்மை வடிவம் மற்றும் நோக்கங்கள் குறித்த கூர்த்த அவதானிப்பாக அவை விளங்கும்.. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் எத்தனை மேலோட்டமானவை என்பது அப்போது விளங்கும்.

எடுத்துக்காட்டாக 2002 குஜராத் வன்முறைகள் குறித்த அவரது கட்டுரையில் அவர் அங்கு அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிறுவனங்கள் முஸ்லிம் அடையாளங்களுடன் விளங்கியவை அல்ல, அதே போல கொல்லப்பட்ட முஸ்லிம்களும் எவ்வித தீவிர முஸ்லிம் அடையாளங்களுடனும் வாழ்ந்தவர்கள் அல்ல என்கிற அம்சத்தின் மீது நம் கவனத்தை ஈர்ப்பார். அழிக்கப்பட்ட கடைகளின் பெயர்கள் ‘சர்வோதயா’, ‘பங்கஜ்’, ‘துளசி’, ‘அசிஷ்’, ‘ஆசீர்வாத்’ என்பனவாகத்தான் இருந்தன. கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஈஷான் ஜாஃப்ரி இடதுசாரிச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். தீவிர முஸ்லிம் அடையாளங்களில் அப்படி ஒன்றும் ஈடுபாடு இல்லாதவர். வீடும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பேரா. பந்துக்வாலா பி.யூ.சி.எல் அமைப்பில் இருந்து மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுபவர், மதச்சார்பின்மைக் கொள்கையை உடையவர். வேறு சில எடுத்துக்காட்டுகளையும் பாலகோபால் சுட்டுவார். குஜாராத்தி முஸ்லிம்கள் உருது மொழி பேசுபவர்கள் கூட இல்லை என்பார். ஆனால் இவர்கள்தான் கொல்லப்பட்டனர். இவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சங்கப் பரிவாரங்கள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்டு இந்தக் கொடுமைகளை இழைத்தவர்களிடம் இது குறித்துக் கேட்டால் பாகிஸ்தான் தீவிரவாதம் அல்லது கஜினி முகமதுவின் படை எடுப்பு குறித்துப் பேசுவார்கள். அவைகட்கும் இந்த அப்பாவிகளுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்டால் அவர்கள் ஆத்திரப்படுவார்கள்.
ஆக இவர்களிடம் திணிக்கப்பட்ட இந்த வெறுப்பு என்பது முஸ்லிம் மதவாதம் அல்லது, முஸ்லிம் தீவிரவாதத்தின் மீதல்ல. முஸ்லிம்கள் மீதே இந்த வெறுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நேற்றுவரை நண்பர்களாகவும் பழக்கமானவர்களாகவும் வாழ்ந்திருந்த அவர்கள் நூறு சதம் அப்பாவிகள் எனத் தெரிந்தபோதும் அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே இன்று எதிரிகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகளில் பெரிய அளவில் அடித்தள மக்கள், குறிப்பாகப் பழங்குடியினர், தலித்கள், பகுஜன்கள் எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் பங்குபெற்றுள்ளனர். சில இடங்களில் குறிப்பாக கந்தமால் (ஒரிசா) போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவ தலித்களுக்கு எதிராகப் பழங்குடியினர் நிறுத்தப்படுகின்றனர். பழங்குடியினர் மத்தியில் உள்ள போர்க்குணத்தை சங்கப் பரிவாரத்தினர் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒரு பக்கம் அவர்களின் இறுதி நோக்கம் இங்கு ஒரு இந்து ஆட்சிமுறையை நிறுவுவது. இதை இந்துக்களின் நாடாக அறிவிப்பது. இந்து தர்மத்தில் தலித்கள், பழங்குடியினர், பகுஜன்கள் ஆகியோர்தான் ஆகக் கீழான நிலையில் இருப்பவர்கள். அவர்களின் இந்த நிலையை நவீன உலகிற்கேற்ப மீள் நிர்மாணம் செய்வதே அவர்களின் நோக்கம். யாரைக் கீழ்நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றனரோ அவர்களையே அந்தப் பணிக்குத் திரட்டுவதன் பொருளென்ன?

பாலகோபால் இதை இப்படி விளக்குகிறார்:

பவுத்தத்தை வீழ்த்தி மீண்டும் இந்து ஆட்சி நிறுவப்பட்டபோதுதான் இங்கு மனுதர்மம் உருவாக்கப்பட்டது. ஒரு இறுக்கமான வருண அடிப்படையிலான சமூகத்தையும் ஆட்சியையும் நிறுவுவதே இதன் நோக்கம். எனினும் பின்னாளில் முகலாயர் ஆட்சி, பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சி இவற்றினூடாக சில முற்போக்கான மாற்றங்கள் சமூகத்தில் ஏற்பட்டன. சுதந்திர இந்தியாவில் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் வருண தரும ஆட்சியைக் கோட்பாட்டளவில் ஒழித்தது. இதில் நாம் பல குறைபாடுகளைக் கண்ட போதும் இப்படி வருண தரும ஆளுகை ஒழிக்கப்பட்டதை இந்துத்துவம் வெறுக்கிறது. அதன் விளைவே அவர்கள் முதல்முறை பதவிக்கு வந்த போது அரசியல் சட்டத்தைச் சீரமைக்க நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது என்பதெல்லாம்.

ஆனாலும் இன்றுள்ள சூழலில் அவர்களால் இன்றைய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. அதுதான் அவர்களின் இலட்சியமென்றாலும் அது சாத்தியமில்லை. ஆக, தாங்கள் விரும்பும் மாற்றத்தை மேலிருந்து உடனடியாகக் கொண்டுவர இயலாத அவர்கள் கீழிருந்து அதைத் தொடங்குகின்றனர். யார் நாங்கள் விரும்பும் வருண தருமத்தை நோக்கிய மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களே சொல்கிறார்கள் மாற்றம் வேண்டும் என என்று நமக்குக் காட்டத்தான் இதைச் செய்கின்றனர். அதே நேரத்தில் இந்த நடவடிக்கையின் மூலம், “ஜெய் ஶ்ரீராம்” எனச் சொல்லாவிட்டால் இங்கு வாழ இயலாது என்கிற அச்சத்தையும் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தியாக வேண்டும்..

வேறொருசந்தர்ப்பத்தில் இதன் இன்னொரு பக்கத்தைச் சுட்டிக்காட்டுவார் பாலகோபால். சங்கப் பரிவாரத்தினரின் இறுதி நோக்கமான வருண தருமத்தை அப்படியே நிலைநாட்டுவது என்பது இன்று சாத்தியமில்லமல் உள்ளது என்றோம். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் யார்? வேறு சொற்களில் கூறுவதானால் வருண தருமத்தின் முக்கிய கூறுகளான மேல் வருணத்தாரின் ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியன நவீன கால மாற்றங்களின் ஊடாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதால் “பாதிக்கப்பட்டிருப்பவர்கள்” யார்? மேல் தட்டு ஆண்கள்தான். இவர்கள் வருணம், சாதி, பணம், படிப்பு, பதவி ஆகியவற்றால் மேம்பட்டிருப்பவர்கள். இவர்கள் ஏற்கனவே இந்துத்துவக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இல்லாதவர்களையும் தமது தொடர்ந்த பிரச்சாரங்களால், கல்வி முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களால் தீவிர இந்துத்துவத்தை நோக்கி ஈர்ப்பதில் இன்று இந்துத்துவ சக்திகள் வெற்றி அடைகின்றன என்பதுதான் இங்கு கனத்தில் நிறுத்த வேண்டிய உண்மை.
பாட நூற்களில் அவர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களின் விளைவை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வெண்டும். முஸ்லிம்கள் வாளோடு வந்து மதம் மாற்றினார்கள், ஆலயங்களை அழித்தார்கள், இந்துப் பண்பாடு அழிக்கப்பட்டது மட்டுமல்ல, அழிக்கப்படுவது தொடர்கிறது முதலான கருத்துக்கள் ஏற்கனவே மெல்லிய அளவில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் படிந்துள்ளன. மீண்டும் அவை பாட நூற்களின் மூலமாக, கல்வி நிறுவனங்களில் ஊட்டப்படும்போது அந்த நம்பிக்கைகள் வலுப்படுகின்றன. ஒழுங்குபடுத்தப்படுகின்றன. நியாயப்படுத்தப்படுகின்றன. அவற்றின் மீது உண்மைத் தன்மை ஏற்றப்படுகிறது. அவர்களின் வேலை எளிதாகிறது.

3.
சென்ற முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது பாடத் திட்டங்களில் ஏராளமாக மாற்றங்களைச் செய்தனர். இது குறித்து பாலகோபால் எழுதும்போது அவர்கள் எப்படியெல்லாம் உண்மைகளைத் திரித்தனர் என்பதற்கு அழுத்தம் கொடுக்காமல் வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார்.

கம்யூனிஸ்டுகளோ, காங்கிரஸ்காரர்களோ இல்லை தலித் பகுஜன் கட்சியினரோ ஆட்சிக்கு வந்தாலும் கூடத்தான் அவர்கள் தத்தம் கருத்தியலுக்குத் தக்கவாறு பாட புத்தகங்களை எழுதுவார்கள், அப்படி இருக்கும்போது இவர்களை மட்டும் குறை சொல்வதேன்? இந்தக் கேள்வியைத்தான் அவர்களும் நம்மை நோக்கி வைக்கிறார்கள். நாம் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
எந்த ஒரு கல்வித் திட்டத்தையும் மதிப்பிடக் குறைந்த பட்சம் மூன்று கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். 1. மாற்றப்படும் கல்வி முறை எத்தகைய மதிப்பீடுகளை முன்வைக்கிறது? 2. தாங்கள் முன்வைக்கும் உலகக் கண்ணோட்டத்திற்கு மாறான கருத்துக்களை விவரித்து அவை எவ்வாறு தவறானவை என தர்க்க ரீதியாக விளக்கப்படுகிறதா? 3. தான் முன்வைக்கும் மதிப்பீடுகளை விஞ்ஞான ரதியான சோதனைகளுக்கு உட்படுத்த அது தயாராக இருக்கிறதா?

இந்தச் சோதனையில் அவர்கள் தோற்பது உறுதி. தவிரவும் பாலகோபால் இதன் இன்னொரு அம்சத்தின் மீதும் நம் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு குறிப்பிட்ட கருத்தியலைக் கொண்ட கட்சி தாங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்கள் முதலானவற்றிற்கு முன்னுரிமை அளிப்பர். தலித் பகுஜன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முதலானவற்றில் கவனம் செலுத்துவர். இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் பின் கூடுதலாக அவர்கள் கல்வித்துறை மார்றங்களையும் செய்வர். ஆனால் பா.ஜ.க ஆட்சி வரும்போதெல்லாம் அவர்கள் முதலில் செய்வது பாடத் திட்டங்களை மாற்றுவது, கல்வி நிறுவனங்களை அவர்களது ஆட்களைக் கொண்டு நிரப்புவது ஆகிய வைதான்.. அவர்களின் நோக்கம் என்ன என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவில் கணித அறிவியலில் வேத கால இந்தியர் உயர்ந்திருந்தனர் என அவர்கள் சொல்வதற்கு பாலகோபால் அளிக்கும் எதிர்வினை இப்படி அமைகிறது. சமகாலத்திய பிற சமூகங்களைக் காட்டிலும் சில கணிதக் குறிப்புகள் இந்தியாவில் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் கணக்குகளுக்கு விடை காணும் முறையைச் சுலோகங்களாகச் சொன்னால் மட்டும் போதாது. அவற்றை அருவப் படுத்திப் பொதுமையான விதிகளை உருவாக்கும் போதே அது கணித அறிவியலாக உருப்பெறும். அந்த வகையில் கிரேக்கர்களும், பிற்கால அராபியர்களும் சாதித்த அளவிற்கு நம்மால் இயலவில்லை எனச் சுட்டிக் காட்டும் பாலகோ[பால் கூடவே பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சி இங்கு தடைப்பட்டதேன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறார். பார்ப்பனீய மூட நம்பிக்கைகளில் அறிவியல் மூழ்கடிக்கப்பட்டதுதான் இதன் காரணம்.
பாடத்திட்டங்களைப் பொருத்தமட்டில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியதமென்பது எல்லாம் விஞ்ஞானபூர்வமாக இருகிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமல்ல. அவை மனிதத் தன்மையுடையதாக இருக்கிறதா? ஜனநாகபூர்வமாக இருக்கிறதா என்பதற்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி என்பது “நாம்” என்பதை எவ்வாறு வரையறுக்கிறது, யாரை எல்லாம் “நாமாக” முன் நிறுத்துகிறது என்பது முக்கியம்.
இந்துத்துவம் நாடெங்கிலும் உருவாக்கியுள்ள ஏராளமான அதன் கல்விக் கூடங்களின் ஊடாக இந்த “நாம்” எனும் வரையறையை அவர்களின் இந்துத்துவக் கருத்தியலுக்குத் தகக் கட்டமைக்கின்றனர்.
ஒன்றைச் சொல்ல வேண்டும். பிரச்சினைகளை நாம் எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால் அந்த ஆபத்து நம்மிடம் நிறையவே குடி கொண்டுள்ளது. மனு தர்மத்தை அவர்கள் மீண்டும் நிலை நிறுத்த விரும்புகின்றனர் என நம் தரப்பில் குற்றம் சாட்டுவது வழக்கம். வெங்கடாசலையா என்கிற பார்ப்பனரை வைத்து அம்பேத்கர் என்கிற தலித் எழுதிய அரசியல் சட்டத்தைத் திருத்த முயல்கிறார்கள் எனச் சிலர் சொல்கின்றனர். இததிப்படி மிகை எளிமைப்படுத்தப்படுதலுக்கு ஒரு சான்று. இதைத்தான் நாம் எதிர்க்கிறோம் எனில் அவர்கள் வெங்கடாசலையாவிற்குப் பதிலாக தமது கருத்துடன் ஒத்துப் போகிற தலித் ஒருவரை வைத்து புதிய அரசியல் சட்டத்தை எழுதிவிட இயலாதா?

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனுதர்மத்தை அப்படியே இந்தக் கால கட்டத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்திவிட இயலாது. மனுதர்மம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே அது எந்த அளவு அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்துச் சில ஆய்வாளர்கள் அய்யம் எழுப்புகின்றனர். இன்றைய இந்துத்துவவாதிகளப் பொருத்த மட்டில் மனுதர்மத்தை அந்த மத்திய காலப் பொருளில் நடைமுறைப்படுத்துவது அவர்களின் நோக்கமில்லை. அது சாத்தியமும் இல்லை. மனுதர்மம் என்பது இன்று அவர்களுக்கு ஒரு குறியீடு மட்டுமே.
மனு தர்மத்தில் குறிப்பிடப்படும் ‘தருமம்’ என்னும் கருத்தாக்கம் இவர்களின் நவீன இந்துத்துவத்தில் ‘தேசம்’ என்கிற கருத்தாக்கத்தால் மாற்றீடு செய்யப்படுகிறது என்கிறார் பாலகோபால்.
இந்த தேசியத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கும். அதை வரையறுப்பது சாதி, வேலை, பொருளாதாரம், குடியிருப்பு எதுவாகவும் இருக்கலாம். அந்த இடத்தைப் பொறுத்து அவர்களுக்கு ஒரு கடமை இருக்கும். அந்தக் கடமையை நிறைவேற்றுதலே தேச தர்மம். எந்த அளவிற்கு அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் மக்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தேசம் பலமாக இருக்கும். தம் தேசத்தை உலக அளவில் முதன்மையாகக் கொண்டு வருவதே ஒவ்வொருவரின் கடமை. தேசத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் உரிமைகளைக் கோருகிறவர்கள் தேசத் துரோகிகள். அவர்களை ஏற்க இயலாது.
சரி, உரிமைகளைக் கோரி நிற்பவர்கள் இந்நிலையை ஏற்பார்களா? உரிமைகள் என்கிற அடிப்படையில் பார்த்தால் ஏற்க முடியாதுதான். ஆனால் “உரிமைகள் குறைந்தவர்கள், உலகத்தை உரிமைகள் என்கிற கோணத்திலேயே பார்ப்பார்கள்” என்பது தவறு. இதுதான் இந்துத்துவத்தின் பலம்.

4.
மனுதர்மம் குறித்த முழுமையான ஆய்வு இந்நூலின் மிக முக்கியமான பகுதி. ஒரு வழக்குரைஞர் என்கிற வகையில் பாலகோபால் இதை மிக நுண்மையாகச் செய்கிறார்.

இரண்டு அம்சங்கள் இதிலிருந்து தெளிவாகின்றன. 1. மனுதர்மம் தண்டனையியலைப் பொருத்த மட்டில் மிக நுணுக்கமாகவும் நவீனமாகவும் எழுதப்பட்டுள்ள ஒரு நூல். 2. ஆனால் இதன் நோக்கங்கள்அனைத்தும் வருண தருமத்தை நிலைநாட்டுவது மட்டுமே. பவுத்தம் அழிக்கப்பட்டு மீண்டும் இந்து மதம் மேலுக்கு வந்த காலத்திய நூல் இது என்பது நினைவிற்குரியது.

ஒரு சமூகத்தின் ஜனநாயக அளவுகோல்களாக அந்தச் சமூகத்தின் குற்றவியல் சட்டங்கள், தண்டனைகள், அவை நிறைவேற்றப்படுதல் ஆகியவை உள்ளன. அந்த வகையில் மனு தர்மத்தை ஒரு அடையாளமா உயர்த்திப் பிடிக்கும் ஒரு அரசை மதிப்பிட அதுவே ஒரு சிறந்த அளவுகோலாக அமைகிறது. நவீன குற்றவியல் சட்டங்களுக்கும் மனு தருமத்திற்குமான முக்கிய வேறுபாடுகளாகச் சிலவற்றைக் கூறலாம். முதலில் மனுதர்மம் மனிதர்களை ‘மனிதர்கள்’ என்று பார்ப்பதில்லை. மாறாக பிராமணன், சதிரியன், வைசியன், சூதிரன், சண்டாளன், பெண் என்பதாகத்தான் பார்க்கிறது. அடுத்து நவீன குற்றவியல் சட்டத்தின் அடிப்படை சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது. மனுதர்மம் சட்ட ஒழுங்கின் இடத்தில் ‘தருமத்தை’ வைக்கிறது. குற்றவாளியைச் சீர்திருத்துவது என்பதற்கு மனுதருமத்தில் இடமில்லை. குற்றவாளி தண்டிக்கப்படாமல் போனாலும் போகலாம், ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிறது நவீன அணுகுமுறை. எக்காரணம் கொண்டும் குற்றவாளி தண்டிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்பது மனு தர்மம். அப்படிக் குற்றவாளி தண்டிக்கப்படாமல் தப்பித்தால் அந்தப் பாவம் அனைத்தும் அரசனுக்கே என அச்சுறுத்துகிறது மனுதர்மம்.

குற்றவாளிகளுக்குக் கொடுஞ் சித்திரவதைகளுடன் கூடிய மரணம் உட்பட மிகக் கொடூரமான தண்டனைகளை மனு தருமம் விதிக்கிறது. இது இந்துச் சமூகத்திற்கு மட்டுமே உரித்தான பண்பாகக் கூற இயலாது. பிற சமூகங்களிலும் இப்படியான தண்டனைகள் உண்டு. ஆனால் மனுதருமத்தில் மட்டுந்தான் அது வருண தரும அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒன்று மட்டும்: குற்றமிழைக்கும் நோக்கம் இல்லாமல் நடந்துவிடும் குற்றத்திற்கு அதே குற்றத்தைத் தெரிந்தே செய்யும்போது கொடுக்கப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையே கொடுக்கப்பட வேண்டும் என்பது இன்றைய நியதி. மனு தருமமும் இதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இந்தத் தண்டனைக் குறைப்பு வருண மற்றும் பால் வேறுபாட்டின் அடிப்படையில் இங்கு நிர்ணயிக்கப்படுகிறது. மேல் வருணத்தினருக்கு மட்டுமே இந்தத் தண்டனைக் குறைப்பு . பெண்களுக்கும் சூத்திரருக்கும் இது கிடையாது. இதற்குப் பல எடுத்துக்காட்டுளைத் தருகிறார் பாலகோபால். குருவின் மனைவியைப் புணர்வது, அவளது சம்மதத்துடன் கூடியதாயினும் கொடுங் குற்றமாக மனு தருமம் குறிப்பிடுகிறது. காரணம் குரு எப்போதும் பார்ப்பனாராகவே உள்ளார் என்பதுதான்.
அதே போல சில குற்றங்கள் அவை பொதுவாகக் கடும் தண்டனைக்கு உரியதாயினும், சில சந்தர்ப்பங்களில், எடுத்துக்காட்டாகத் தற்காப்புக்காக அவற்றைச் செய்ய நேர்கையில் அவை குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்பது நவீன குற்றவியல் நியதிகளில் ஒன்று. இதையும் மனுதருமம் ஏற்கிறது. ஆனால் இங்கும் வருண அடிப்படையில் இது செயல்படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது. இப்படித் தண்டனை விலக்கு அளிக்கப்படும் குற்றங்களில் வேள்விகளுக்கு இடையுறு செய்பவர்களைக் கொல்லுதலையும் உள்ளடக்குகிறது மனு தர்மம். அதே போல நெருக்கடியான கால கட்டத்தில் வருணக் கலப்பு ஏற்படும் ஆபத்து இருந்தால் யாரையும், அது குருவே ஆனாலும் கொல்லலாம். நாட்டு விடுதலையை ஒட்டி மிகப் பெரிய வன்முறைகள் நிகழ்ந்தபோது எல்லையோரத்தில் இருந்த இந்து ஆண்கள் பலர் தம் சொந்தச் சகோதரிகளையும், மகள்களையும் கொன்று குவித்தனர், இதெல்லாம் இந்த மனநிலையிலிருந்து உருவாவதுதான் என்கிறார் பாலகோபால்.

5.
இந்துத்துவவாதிகளின் பேச்சுக்களை, அவை வாஜ்பேயி போன்ற ரொம்பவும் கண்ணியமான இந்த்துத்துவவாதிகளின் வாய்களிலிருந்து உதிர்ந்திருந்த போதும் கூட மிகக் கவனமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பாலகோபால்.

13 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2008 ம் ஆண்டில் பா.ஜக ‘தொலைநோக்கு’ (Vision) எனும் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது குறித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அந்த ஆவணம் சொல்பவற்றை இப்படித் தொகுக்கிறார் பால கோபால். 1. நீதிமன்றத் தீர்ப்புக்கு இரு தரப்பாரும் கட்டுப்பட வேண்டும். 2. இந்துக்களும் முஸ்லிம்களும் பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். 2. அயோத்தியில் ராமஜன்ம பூமியில் கோவிலைக் கட்டுவோம்.
இத்தகைய முரண்பட்ட கூற்றுக்களை எவ்வாறு புரிந்துகொள்வது? இவை முரண்பட்ட கூற்றுகளே அல்ல. இவற்றைப் புரிந்து கொள்ள இந்த மூன்று கூற்றுகளையும் கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் என்கிறார் பால கோபால். அயோத்தியில் இராம ஜன்ம பூமியில் இராமர் கோவிலை கட்ட வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும் (அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும்). இந்தச் சமரசத்தை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.

இப்படி அனைத்தையும் நுட்பமாகப் பார்க்க நமக்குப் பயிற்சி அளிக்கிறார் பாலகோபால். அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை வழங்கிய போது தேச மகக்ளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அ.ந்தத் தண்டனையை வழங்கியதாக நீதிமன்றம் கூறியது. இது எத்தனை அபத்தம், விதிமுறைகளின் மீறல் என்பதையெல்லாம் விளக்கும் பாலகோபால் இறுதியாக இப்படியான தீர்ப்பின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தியா சட்ட நீதிகளை மதித்து நடக்கும் ஜனநாயக நாடு, எனவே அது சட்ட நியதிகளின்படிதான் நடக்கும் எனக் கனவு காணாதீர்கள் எனப் பாகிஸ்தானை எச்சரிக்கும் நோக்குடன்தான் அஃப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்கிறார் பாலகோபால். அவர் மறைந்து நாங்காண்டுகளுக்குப் பின் அது நிறைவேற்றவும் பட்டது.

6.
இந்த நூலில் உள்ள முதல் மூன்று கட்டுரைகள் தேசபக்தி, இந்து மதம், இந்து அரசு (இந்து ராஷ்டிரம்) என்பதெல்லாம் எவ்வாறு நவீன முதலாளியச் சுரண்டலுக்குத் துணைபுரிவதாகவும் இந்தச் சுரண்டல் அமைப்பைத் தக்க வைப்பதாகவும் உள்ளன என்பதை நுணுக்கமாக விளக்குகின்றன. முதலிரண்டு கட்டுரைகளும் 1983 லும் மூன்றாவது 1991 லும் எழுதப்பட்டது. ஒப்பீட்டளவில் அவரது இளமைக் காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் இந்துத்துவம் எவ்வாறு வருண தருமத்தை நவீனமாகக் கட்டமைக்கும் வகையில் உழைப்புச் சுரண்டல், மதம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றது என்பதைச் சொல்கின்றன.

பொதுவாக இந்துத்துவத்தை வரையறுப்போர் தேசியத்தை ‘புவிசார் தேசியம்’ (Territorial Nationalism / Geographical Nationalism) எனவும் ‘கலாச்சார தேசியம்’ (Cultural Nationalism) எனவும் பிரித்து விளக்குவது வழக்கம், முன்னதற்குக் காந்தியின் அணுகல் முறையும், பின்னதற்கு சாவர்கர், கோல்வால்கர் முதலானோரின் அணுகல்முறையும் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்படும். புவிசார் தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குட்பட்ட அனைத்து மக்கள் தொகுதியையும் வேறுபாடுகளின்றி ஒரே தேசிய இனத்தவராகவும், அந்த நாட்டின் சமமான குடிமக்களும் கருதுவது. கலாச்சார தேசியம் என்பது ஒரே நாட்டில் வாழ்பவராயினும் மொழி, இனம், மதம் என ஏதோ ஒன்றின் அடிப்படையில் தேசிய இனத்தை வரையறுக்கும். பாலகோபால் இதைச் சற்றே மார்க்சீய அடிப்படையில் இன்னும் கொஞ்சம் நுட்பமாக்குகிறார்.
மார்க்சீயம் தேசியத்தை முதலாளியத்திலிருந்து பிரிக்க இயலாது எனச் சொல்லும். தேசம் முழுமைக்குமான ஒரு விரிந்த சந்தை என்கிற அடிப்படையில் இந்த தேசிய உணர்வு கட்டமைக்கப்படுகிறது என்று கூறும். எதுவும் தேச எல்லையைத் தாண்டிய விசுவாசத்தை வெளிப்படுத்தக் கூடாது. கத்தோலிக்க மதத்தைப் பொருத்தமட்டில் அது தேச எல்லைகளைத் தாண்டிய விசுவாசத்தைக் கோரியதால் இங்கிலாந்து ஒரு தேசமாக் உருப்பெரும்போது அது கத்தோலிக்கமல்லாத Anglican Church ஐத் தன் மதமாக வரித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டும் பாலகோபால் தேசியத்தை மூன்று வகைகளாக முன்வைக்கிறார். முதலாவது தேச எல்லைக்குள் ஒன்றாக வாழ்ந்த எல்லோரையும் ஒரே தேசமாக இணைக்கும் தேசியம்; மற்றது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பல்வேறு அதிகார மையங்களாகப் பிரிந்து கிடந்த பகுதிகளை மொழி, இனம், மதம் என்கிற ஏதோ ஒன்றின் அடிப்படையில் ஒரே தேசமாக இணைக்கும் தேசியம். ஜெர்மனி, இத்தாலி முதலியன இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்த இரண்டு வகைத் தேசியங்களும் ஒரு தேசத்திற்குள் நிலவும் பொருளாதாரச் சுரண்டலைக் கேள்வி கேட்பதில்லை. அது மட்டுமல்ல இந்தச் சுரண்டலை மறைக்கவும் அது தேசிய உணர்வையும் தேசபக்தியையும் பயன்படுத்தும். புரட்சிகர தேசியம் என்பது இந்த முதலாளியச் சுரணடலை ஒழிப்பதை நிபந்தனையாக்கும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மட்டுமின்றி ஒரு சேர உள்ளூர் முஸ்லிம் ஜமீந்தார்களையும் எதிர்த்துப் போராடிய (1831) கிழக்கு வங்க முஸ்லிம்களின் வஹாபி கலகம் இதற்கு எடுத்துக்காட்டு.

இவற்றுள் இந்துத்துவவாதிகள் வரையறுக்கும் தேசியம் எத்தகையது? முன் குறிப்பிட்ட மூன்று வகைகளுள் அது இரண்டாவது. இந்து மதம் என்கிற அடையாளத்தின் கீழ் அது இந்த தேசத்தின்மீது முழுமையான பக்தியைக் கோருவது. அதற்கு மொழி, இனம், மாநிலம் என எதுவும் தடையாக இருக்கக் கூடாது. காந்தி முன்மொழிந்த மொழிவாரி மாநிலம் முதலானவற்றை கோல்வால்கர் “{விஷ வித்து” எனச் சாடினார்,. அடுத்து இந்துத்துவ தேசியம் முன்வைப்பது முதலாளியம் அல்லது பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான உரிமை கோரல்களும்கூட தேசியத்திற்கு எதிரானதுதான் என்பது. இப்படி தேச நலன், தேச பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் எல்லாவிதமான உரிமை கோரல்களையும் இவற்றிற்கு எதிரானது என இந்துத்துவம் வரையறுக்கும். அவற்றைக் குற்றமாக்கும். உழைப்பாளிகள் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடுவதை எதிர்க்க இந்துத்துவம் மதத்தைத் தன் ஆயுதமாக்குகிறது. எல்லா மதங்களுமே இந்த முயற்சிக்குத் துணை போகக் கூடியவைதான் என்றாலும் இந்து மதத்தின் வருணாசிரமம் இதற்கு அவர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது. உழைப்பு என்பது சூத்திர வருணத்தின் கடமை. அதை அவர்கள் சுரண்டலாகக் கருதக் கூடாது. மாறாக அதை அவர்கள் பிற வருணத்தாருக்குச் செய்யும் கடமை எனவும், அதை மீறுவது தர்மம் அல்ல எனவும் கோல்வால்கர் முதலானோர் சுரண்டலை நியாயப்படுத்தினர். உழைப்புச் சுரண்டலை அவர்கள் உழைப்பின் பெருமை (dignity of labour) என்றனர். சுயதர்மம் பேணுதல் என்றனர். தமது ஆளுகைக்கு நெருக்கடிகள் வரும்போது அவர்கள் இந்த அம்சங்களை அழுத்தமாக முன்வைத்தனர். தேசத்திற்கு ஆபத்து இப்போது வேலை நிறுத்தங்கள் கூடாது என்பதுபோல.. ஆக இந்துத்துவத்தின் மதவாத தேசியம் முஸ்லிம் வெறுப்பை மட்டும் முன்வைக்கவில்லை. அது சோஷலிசம், சமத்துவம் முதலான கருத்தாக்கங்களையும் கடுமையாக வெறுக்கிறது என்பதை நாம் மனம்கொள்ள வேண்டும். இந்து தர்மம் என்பது வர்க்க சமரசத்திற்குத் தோதாக உள்ளது என்பதையும் நாம் காணத் தவறக் கூடாது.

7.
இந்துத்துவத்தின் வளர்ச்சியை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவங்களாக பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உருக்கொண்ட தலித், பகுஜன் கூட்டணியை பாலகோபால் நம்பிக்கையோடு சுட்டிக் காட்டுகிறார். KHAM என ஒரு காலத்தில் அமைக்கப்பட்ட சத்திரியர், தலித், பழங்குடி மற்றும் முஸ்லிம் கூட்டணி என்பதும் சங் பரிவாரப் பரவலை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றது. ஆனால் இன்று அந்த முயற்சி சாத்தியமில்லாமல் இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் என்கிறார் பாலகோபால். அவை:

1.இந்துத்துவவாதிகள் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் ஆகியோரை நோக்கித் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். அவர்களை நோக்கி, “நீங்கள் எல்லோரும் இந்துக்கள். இந்துக்கள் என்கிற அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.” என விளிக்கின்றனர். அல்துஸ்ஸர் சொல்வது போல அந்த விளிப்பில் அவர்கள் இந்துக்களாக உணர்கின்றனர்.

2. நாம் வரலாற்று ரீதியாகவும், ஆய்வு பூர்வமாகவும் தலித்கள், பழங்குடிகள் எல்லோரும் இந்துக்கள் அல்ல என்பதை உணர்கிறோம். ஆனால் ‘இந்து’ எனும் சொல் அபத்தம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட என்பதை நாம் அவர்களிடம் கொண்டு சென்றோமா? தலித் மற்றும் ஆதிவாசிகளை நாம் இந்துக்கள் அல்ல எனச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அவர்களை இந்துக்கள் எனும் அடையாளத்தில் சரணடையாமல் தடுக்கும் அரசியல் பணியும் நமக்கு உண்டு.

3. ஒரு காலத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, “சங்கப் பரிவார அரசியல் .நம்முடைய அரசியல் அல்ல” எனும் செய்தியை தலித் பகுஜன்களிடம் கொண்டு சென்ற தலித் பகுஜன் அரசியல் இன்று ஊழல் மயமாகியுள்ளது. “எங்களவர்களும் உங்களுக்கு நிகராக ஊழலுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் பாருங்கள்” என உயர்சாதியினரின் ஊழலுக்குச் சவால்விட்டு மகிழ்ச்சி அடையும் தலித் பகுஜன் அறிஞர்கள் இருப்பது துரதிர்ஷ்டமானது”
என்று கூறும் பாலகோபால்,
“எது எப்படி இருந்தாலும் சங்கப் பரிவார அரசியலை மதச்சார்பின்மை எனும் வடிவமற்ற பெருமதியுடன் எதிர்கொள்வதை விட,
சிறுபான்மையினருக்கு எதிரானது என எதிர்கொள்வதை விட,
இந்து சமூகமாக அடையாளப்படுத்தப்படும் தலித் பகுஜன் சமூகத்திடம் சங்கப் பரிவார அரசியல் அவர்களுக்கு எதிரி என்பதை அடையாளப்படுத்தி அதை எதிர்கொள்ளும் போதுதான் அதன் வளர்ச்சியை நாம் தடுத்து நிறுத்த இயலும்” என முடிக்கிறார்.

டாக்டர் பாலகோபால் அவர்கள் தனது வாசிப்பு, அனுபவம், அவதானம், களப்பணி ஆகியவற்றின் ஊடாக வடித்துத் தந்துள்ள இந்தக் கருத்தாயுதத்தைத் தெலுங்கிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ள தோழர் மாதவ் அவர்களுக்கு நம் நன்றிகளைச் சொல்வோம்.
மிகவும் விரிவான, ஆழமான நூல் என்பதால் படிக்கத் துவங்குபவர்களுக்குத் துணை செய்யும் நோக்கில் இந்த முன்னுரையும் விரிவாக அமைகிறது. இதை எழுத வாய்ப்பளித்தமைக்காக நன்றிகளையும், சுமார் மூன்று மாத காலம் தாமதமாக இந்நூல் வெளி வருவதற்குக் காரணமாக இருந்ததற்காக மன்னிப்பையும் மாதவ் அவர்களிடம் கோரி விடை பெறுகிரேன்.
04 -11- 2015,
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *