தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப் போராடியபோது அவருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என வெள்ளையர்கள் அறிவித்திருப்பார்கள். ஊமைத்துரை அடைக்கலம் தேடி சிவகங்கைக்கு வருவார். அப்போது சிவகங்கையை மருது சகோதரர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். சின்ன மருது ஊமைத் துரையை மறைந்திருக்கச் சொல்லிவிட்டு அண்ணனிடம் வந்து அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பார். தற்போதுள்ள சூழலில் ஆங்கிலேயரைப் பகைத்துக் கொண்டு வாழ இயலாது என்று மறுப்பார் பெரிய மருது.

அப்போது அருகிலுள்ள அறையிலிருந்து ஊமைத்துரை உள்ளே வருவார். என்ன காரியம் செய்துவிட்டாய் எனப் பெரியவர் தம்பியைக் கண்டித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வரும் ஆங்கிலத் தளபதி ஊமைத் துரையின் மடியைப் பிடித்துக் கைது செய்ய முயல்வான். அப்போது பெரிய மருது, “என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் அடைக்கலம் வந்த ஒருவரை என் கண்முன்னே கைது செய்வாய்?” எனச் சீறி அவனை வெளியே அனுப்புவார். அவனும் இதன் விளைவுகளை நீ அனுபவிப்பாய் என எச்சரித்து அகல்வான். பின்னர் வெள்ளையரின் படை இதைச் சாக்காகக் கொண்டு சிவகங்கை மீது படை எடுத்து மருது சகோதரர்களை அழிப்பதாகக் கதை செல்லும்.

முன்னதாக ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலப் படைகளால் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம்தான் இந்த மருது சகோதரர்களும் ராணி வேலுநாச்சியாரும் அடைக்கலம் கோரிச் சென்றனர், ஹைதரும் அவரது மகன் திப்புவும் தங்கள் திண்டுக்கல் கோட்டையில் இவர்களுக்கு ஏழாண்டுகாலம் அடைக்கலமளித்துக் காத்ததோடு, இறுதியில் அவர்கள் மீண்டும் இழந்த ஆட்சியைப் பிடிக்க படைகளும் பொருளும் உதவினர் என்பது வரலாறு.

இப்படி உயிரைக் கொடுத்தேனும் அடைக்கலம் வந்தோரைக் காப்பது என்றொரு மரபு நமக்குண்டு. புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் வந்த ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டி, அதை வேட்டையாட வந்த பருந்துக்கு புறாவின் எடைக்குச் சமமான சதையைத் தன் தொடையிலிருந்து வெட்டித் தருவான். இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படியான மரபு நமக்கு உண்டெனினும் இன்றும் நமது நாடு அகதிகளுக்கு உரிய பாதுகாப்புகளும் உரிமைகளும் அளிப்பது தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாட்டிலும் (UN Convention on the Status of the Refugees), 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தத்திலும் (optional protocol) கையொப்பமிடவில்லை. ஆனாலும் சுதந்திரத்திற்குப் பிந்திய பிரிவினைக் கலவரம் தொடங்கி இன்றுவரை சுமார் இரண்டரை கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாக ஒரு கணக்கு உள்ளது. 53,000 சக்மாக்கள் உட்பட 150,000 பர்மியர்கள், 90,000 திபெத்தியர்கள், 70,500 ஈழத் தமிழர்கள், 19,000 ஆஃப்கானியர்கள் என இப்போது 4,50,000 ஏதிலியர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் ரோகினியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களில் இருந்து, ஆஃப்கன் மற்றும் பாக்கிலிருந்து வந்துள்ள சீக்கியர்கள், இந்துக்கள் எனப் பல மதத்தினரும், இனத்தினரும் உள்ளனர். இதில் பலர் இனி சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

அப்படி இருந்தும் இந்திய அரசு இது தொடர்பான ஐ.நா ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ, தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் கொள்கையை உருவாக்கவோ தயாராக இல்லை. பின் எந்த அடிப்படையில் ஏதிலியர் இந்திய அரசுகளால் கையாளப்படுகின்றனர்? அவ்வப்போதைக்குத் தற்காலிகமாக உருவாக்கப்படுகிற அணுகல்முறைகளே (ad hocism) கடைபிடிக்கப்படுகின்றன. இதன்விளைவாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான வகையில் வெவ்வேறு நாட்டு அகதிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுல்ளது.

எடுத்துக்காட்டாக, திபெத்திய அகதிகளுக்கு இமாசலப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் கூடத் தரப்பட்டுள்ளன. பிள்ளைகள் படிக்கத் தனிப் பள்ளிக்கூடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 113 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு (designated refugee camps) வரும் ஏதிலியர் அங்கு பிரித்தனுப்பப் படுகின்றனர். பூடான் மற்றும் நேபாளத்திலிருந்து வந்துள்ளோர் இரு நாட்டு நட்புறவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றனர். சிலருக்கு வேலை அனுமதியும் கூட (work permit) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பர்மா, ஆஃப்கன் முதலான பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் நிலை படு மோசம்.

இந்தியாவுக்குள் பெரிய அளவில் ஒரு நாட்டிலிருந்து அகதிகள் வந்து குவியும்போது அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்படுகின்றனர். தென் ஆசிய நாடுகள் அல்லது அவ்வளவு சுமுகமான உறவுகளில்லாத பிற நாடுகளிலிருந்து வருவோர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், ஆய்வுகளுக்குப் பின் ‘அடைக்கலம் தேடுவோர்’ (asylum seekers) என்பதாக ஏற்கப்படுகின்றனர். அவர்களுக்கு விரிவான ‘அகதிகள் நிலை’ (refugee status) அளிக்கப்படுவதில்லை. பிற நாடுகளிலிருந்து வரும் சிலர் ஐ.நா அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கு அதன் விதிகளுக்குட்பட்டுத் தங்களுக்குத் தனிநபர் அடிப்படையில் அகதி நிலை அளிக்குமாறு விண்ணப்பிக்கின்றனர். இந்த அலுவலகம் டெல்லியில் மட்டும் உள்ளது. மற்றபடி தமிழகத்திலும் அது சிறிய அளவில் உதவிகள் அளிக்கின்றது.

ஆக இந்தியாவில் உள்ள ஏதிலியரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (அ) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் (எ.கா: ஈழ மற்றும் திபெத் அகதிகள்). (ஆ) ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படாத உரிமையுடன் முழு அகதி நிலை வழங்கப்பட்டோர் (பர்மிய மற்றும் ஆஃப்கன் அகதிகள்) (இ) இந்திய அரசாலோ, ஐ.நா ஆணையத்தாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள் (மிசோராமில் வாழும் பர்மிய சின் அகதிகள்).

இந்திய அரசுக்கு அகதிகளுக்கான ஏதாவது ஒரு கொள்கை உள்ளது என்றால் அது திபெத்திய அகதிகள் குறித்து நேரு அப்போது சொன்னதுதான். இந்தியா தன் நாட்டுக்கு வரும் அகதிகளைப் பொருத்தமட்டில் மூன்று அடிப்படைக் காரணிகளின் அடிப்படையில் நடத்தப்படுவர் என்றார். அவை:

எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டுடன் உள்ள நட்புறவு.,
தேச மற்றும் எல்லைப் பாதுகாப்பு..
அகதிகளின் மீதான அனுதாபம்.
ஆக, இருநாட்டு அரசியலே இங்கு முதன்மை ஆகிறது. பன்னாட்டு ஒப்பந்தங்கள், அவற்றுக்கான கடப்பாடுகள் இங்கு ஒரு பொருட்டல்ல. இதன் விளைவுதான் மேற்குறிப்பிட்ட அகதிகளுக்கான அணுகல்முறைகளில் உள்ள சீரற்ற தன்மைகள்.

இந்தியா அகதிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிடாதபோதும் எல்லா நாடுகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட, “வரும் அகதிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமை” என்கிற Non-refoulement கொள்கையைப் புறக்கணிக்க இயலாது. தவிரவும் இந்திய அரசு 1966ம் ஆண்டின் ஐ.நா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டையும், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா அவையின் குழந்தைகள் உரிமைக்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளது இவை அகதிகளின் உரிமைகளையும் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. அதோடு குடிமக்களுக்கிடையே சமத்துவம், அவர்களின் வாழ்வுரிமை. மத உரிமை ஆகியவற்றை ஏற்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 21, 25 ஆகிய பிரிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இங்கு வரும் அகதிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளிலேயே நமது நீதிமன்றங்கள் பன்னாட்டு உடன்பாடுகளில் உள்ள உரிமைகள், அந்த உடன்பாடுகளில் இந்தியா கையொப்பமிடாதபோதும், இங்கு வாழும் அகதிகளுக்கும் உண்டு என்கிற நெறிமுறையை (judicially evolved principle) உருவாக்கியுள்ளன. சக்மா அகதிகள் வழக்கில் (National Human Rights Commission v State of Arunachal Pradesh, AIR 1996 SC 1234). உச்ச நீதிமன்றம் மேற்குறித்த அரசியல் சட்ட உரிமைகள் இங்கு வாழநேர்ந்த அகதிகளுக்கும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அதேபோல இந்திய அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பர்மிய அகதிகளை வெளியேற்ற முயற்சித்தபோது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் (Malvika Karlekar v Union of India-Criminal Writ Petition No 243 of 1988), அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதை நிறுத்துமாறு ஆணையிட்டது.

இந்தியா இவ்வாறு அகதிகளுக்கான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காவிட்டாலும் பொதுவில் ‘அகதிகளைத் திருப்பி அனுப்பாமை’ முதலான நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகக் கூறுவது வழக்கம். ஆது ஓரளவு உன்மைதான் எனினும் பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காததன் விளைவாக மேற்குறித்தவாறு அகதிகளைக் கையாளுவதில் சீரற்ற தன்மை இருப்பது முதலிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிரவும் அரசியல் காரணங்களை முன்னிட்டு அகதிகளைத் திருப்பி அனுப்பாமை என்கிற கொளகையையும் கூட இந்திய அரசு விட்டு விடக்கூடியதுதான் என்பதற்கு ராஜீவ் கொலையை ஒட்டிப் பெரிய அளவில் ஈழஅகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு.

இப்படியான நிலையை இந்தியா எடுப்பதற்கு அடிப்படையாக இருப்பது இன்று அகதிகளைக் கையாள்வதற்கு அது பயன்படுத்தக் கூடிய 1939ம் ஆண்டு வெளிநாட்டார் பதிவுச் சட்டம், 1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் மற்றும் இங்குள்ள பல கடவுச் சீட்டுச் சட்டங்கள் முதலியவைதான். இச்சட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டார் சட்டம் அகதிகளுக்கானதல்ல. இச்சட்டம் (அ) தங்களது நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வரும் அகதிகளையும், (ஆ) இங்குள்ள வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புகள் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் வருகிற புலம் பெயர்ந்தவர்களையும் (legal and illegal migrants) (இ) உரிய பயண ஆவணங்களுடன் இங்கு வருபவர்களையும் வேறுபடுத்தி அணுகுவதில்லை. இந்தச் சட்டமும், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1971ல் வெளியிடப்பட்ட ஆணையும், 2004ல் வாஜ்பாயி அரசாங்கத்தால் இச்சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அபரிமிதமான அதிகாரங்களை இந்திய அரசுக்கு அளிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத யாரையும் கைது செய்யவும், தடுத்து நிறுத்தவும், சிறையிலடைக்கவும், தேவையானால் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டமும் வெளிநாட்டாருக்கு எதிரான அரசின் அதிகாரங்களை வலுவாக்குகிறது.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளுக்கென செங்கல்பட்டு, பூந்தமல்லி முதலான இடங்களில் ‘சிறப்பு அகதிகள் முகாம்கள்’ எனப்படும் நிழற் சிறைகளையும் (shadow prisons) செயல்படுத்துகின்றன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தாங்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருவது அறிந்த ஒன்று.

தங்கள் நாட்டில் வாழவே இயலாது துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதையும் அங்கு கண்ணியமாக அவர்கள் நடத்தப்படுவதையும் ஒரு உரிமையாக ஏற்கும் கடப்பாடு, பன்னாட்டுச் சட்டங்களில் கையெழுத்திடாதபோதும் இந்தியாவிற்கு உண்டு என்பதைச் சற்று முன் பார்த்தோம். அப்படி வருகிறவர்களிடம் உரிய பயண ஆவணங்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அப்படி இல்லை என்பதற்காக வெளிநாட்டார் சட்டம் அல்லது உகாண்டா நாட்டினருக்கான 1972ம் ஆண்டு ஆணை முதலியவற்றின் அடிப்படையில் அவர்களைத் திருப்பி அனுப்புவது அல்லது சிறையிடுவாது எப்படிச் சரியாகும்?

ஐ.நா உடன்பாடு மற்றும் விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிடாததற்கு இந்தியா மூன்று காரணங்களைச் சொல்கிறது. அவை:

1. 1951ம் ஆண்டு உடன்பாடு ஐரோப்பிய நலன்களை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. பனிப்போர் காலத்திய பின்னணியில் உருவாக்கப்பட்டது அது.

2. தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியன தலைதூக்கியுள்ள சூழலில் இவ்வாறு அகதிகளை எளிதாக அனுமதித்துவிட இயலாது.

3. அகதிகளுக்கு இத்தனை உரிமைகளைக் கொடுத்தால் அருகிலுள்ள நாடுகளிலிருந்தூ ஏராளமானோர் இங்கு வரக்கூடும்.

இதில் சில உண்மைகள் இருந்தபோதிலும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்தியா ஐ.நா உடன்பாடுகளில் கையெழுத்திடாமலும், அகதிகளுக்கான பொதுச் அட்டம் ஒன்றை உருவாக்காமலும் உள்ளதை ஏற்க இயலாது. இந்திய அரசியல் சட்டத்தின் 51(c) பிரிவின்படி இந்தியா பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க வேண்டிய கடப்பாடுடையதாக உள்ளது. தவிரவும் தென் ஆசியாவில் ஒரு முக்கியமான வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிற, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகத் துடிக்கிற, பன்னாட்டு அரசியலில் முக்கிய பங்காற்ற விழைகிற ஒரு நாடு இத்தகைய அடிப்படைப் பன்னாட்டுக் கடப்பாடுகளை மறுப்பதை எப்படி ஏற்க இயலும்? பனிப்போர்க் காலத்திய உடன்பாடு என்றால் இன்று பனிப்போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் அதன் பொருளென்ன? தேவையான திருத்தங்களுடன் புதிய உடன்பாடுகளை உருவாக்க இயலாதா? 1951ம் ஆண்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அரசு இன்னும் அந்த அடிப்படை உடன்பாட்டிலேயே கையொப்பமிடாதிருப்பது பெருங் கேலிக் கூத்து.

அகதிகள் என வருகிற யாரும் அப்படியே உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பரிசீலனைகள், விசாரணைகளுக்குப் பின்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தவிரவும் ‘சார்க்’ நாடுகளின் 2004ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒபந்தம் ‘பயங்கரவாதிகள் என சந்தேகப்படக் கூடியவர்களுக்கு அகதிகள் நிலை அளிக்கக் கூடாது எனக் கூறுகிறது. அதை விதியை இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானால் இன்னும் விளக்கமாக பாதுகாப்பு அடிப்படையில் இன்னும் இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை இணைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் அண்டை நாட்டார் இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கே வரக்கூடும் என்கிற அச்சமும் ஏற்புடையதல்ல. பா.ஜ.க வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் விளைபொருளாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கதேச முஸ்லிம்கள் இவ்வாறு அதிக அளவில் ஊடுருவி விட்டனர் என்று பிரச்சாரம் செய்வது அவர்களின் வழமையான அரசியல்களில் ஒன்று. இன்று வங்கதேச எல்லையில் இரட்டை முள்வேலிகள் இடப்பட்டும் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டும் தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டும் அத்தகைய நுழைவு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. பிற இத்தகைய பகுதிகளிலும் இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய அரசு அகதிகள் தொடர்பான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்க இயலாது எனச் சொல்வதற்கான காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. தென் ஆசிய நாடுகளில் சீனாவும், ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே 1951ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

2004ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபது பி.என். பகவதி அவர்கள் இந்தப் பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென அகதிகள் நிலைக்கான ஒரு மாதிரி சட்ட வடிவை உருவாக்கினார். பின் 2006ல் அந்த அடிப்படையில் அகதிகள் நிலைக்கான ஒரு சட்ட வரைவையும் இந்திய அரசு உருவாக்கியது. எனினும் இன்றுவரை அதைப் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவில்லை. அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் இந்தச் சட்ட வரைவை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார். வேறு பலரும் இவ்வரைவு குறித்துக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வரைவைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தித் தேவையான திருத்தங்களுடன் சட்டமாக்க வேண்டும். பிற நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறுபவர்கள் உரிய விசாரணைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவது, அவர்கள் எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படாமல் கண்ணியமான வாழ்வொன்றை அமைத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது என்கிற வகையில் இச் சட்டம் அமைய வேண்டும்..

இப்படிப் புலம் பெயர நேர்ந்தவர்களுக்கு உரிய முறையான, முறைசாராத மற்றும் தொழிற் கல்விகளை அளிப்பது, அவர்களது (உடல்) நலத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வேலை வாய்ப்புக்களுக்கு வழி செய்வது, அவர்கள் அவர்களது சொந்தப் பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் ஆகியவற்றைத் தொடர்வதற்கு வாய்ப்பளிப்பது, கொடும் பாதிப்பிற்குரிய வகையில் உளவியல் ரீதியில் தாக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உரிய வகையில் ஆதுகாப்பு அளிப்பது என்கிற வகையில் அது அமைய வேண்டும். அவர்களுக்கும் பிற குடிமக்களைப் போலவே இந்த நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவது, எங்கு வேண்டுமானாலும் நிரந்தரத் தங்குமிடத்தை அமைத்துக் கொள்வது, பிற குடிமக்களைப் போலவே எந்தத் தொழிலையும் செய்வது, தம் நலனுக்கான அமைப்புக்களை உருவாக்குவது, பத்திரிகைகள் உள்ளிட்ட கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலான உரிமைகள் வழங்கபட வேண்டும்.

1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் முதலியன இதற்குரிய முறையில் திருத்தப்பட வவேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் நிழற் சிறைகளை அமைக்கும் விதிமுறைகளை நீக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாக நான் பலமுறை தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அறிக்கைகள் இணையத் தளங்களில் உள்ளன. சமீபகாலமாக எல்லா முகாம்களிலும் மேலெழுந்துள்ள ஒரு பிரச்சினை இளைஞர்கள் இந்தியாவிலிருந்து பிற மேலை நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இருப்பதுதான். ஈழ அகதி முகாம்களில் இருப்போர் நிறையப் பணம் கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து இதற்கான முகமைகளின் மூலம் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதும் அம்முயற்சியில் பலர் உயிரிழப்பதும், கைதாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே ஈழ அகதிகள் வாழ்ந்து கொண்டுள்ளனர். சொந்த மண்ணின் வாசத்தை நுகராத ஒரு தலைமுறை இந்த மண்ணில் பிறந்து வளர்ந்துள்ளது. குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளும், அகதிகளுக்குரிய சட்டப் பாதுக்காப்புகளுமின்றி ஆனாலும் ‘அகதி’ப் பட்டத்தைச் சுமந்து கொண்டு எந்நாளும் ‘அந்நியராக’ வாழ்வதை இவர்கள் வெறுக்கின்றனர். இதே நேரத்திலும், ஏன் அதற்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தவர்களுக்கெல்லாம் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளபோது தொப்பூள் கொடி உறவு குறித்து முழங்கும் அரசியல்வாதிகள் மலிந்த நமது நாட்டில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்காதிருப்பது வருந்தத் தக்கது.

எனவே உருவாகும் சட்டத்தில் இபடி நீண்ட ஆண்டுகளாக இங்கே அகதிகளாக வாழ்வோருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வழிமுறைகளையும் உள்ளடக்க வேண்டும்.

1951ம் ஆண்டு அகதிகள் உடன்பாட்டில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கும், உரிய வகையில் தேசிய அளவிலான ஏதிலியர் கொள்கை ஒன்றையும் சட்டமொன்றையும் உருவாக்குவதற்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இங்கு வாழும் ஏதிலியர்களுக்கும் நம் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்கி இம்மக்கள் நம்மவர்களுடன், காந்தியடிகள் சொன்னதுபோல, “பாலில் சக்கரை கலப்பதுபோல” இரண்டறக் கலப்பதற்கு ஏதிலியர் பிரச்சினையில் அக்கறையுள்ளோர் உதவ வேண்டும். காந்தியடிகளின் இந்த உதாரணம் கூட இங்கு முழுமையாகப் பொருந்தாது. பாலில் சர்க்கரை போலத் தம் அடையாளங்களை ஏதிலியர் இழக்க வேண்டியதில்லை. தத்தம் அடையாளங்களுடன் அவர்கள் நம்மவர்களாக ஆகவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *