நெருக்கடிநிலைக் காலத்தில் சங்கப் பரிவாரங்கள் என்ன செய்தன?

[மக்கள் களம், ஜூலை, 2015)

1972 க்குப் பின் ஜெயப்பிரகாசர் தலைமையில் ஒரு காங்கிரஸ் எதிர்ப்பு அலை மேலெழுந்தபோது அந்த எதிர்ப்பியக்கம் ஒரு கதம்பக் கூட்டணியாக இருந்தது. அதில் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், முலாயம் சிங், லல்லு பிரசாத் என முன்னாள் லோகியா வாத சோஷலிஸ்டுகள், மொரார்ஜி தேசாய் முதலான பழைய காங்கிரசார், இந்துத்துவ அமைப்பினர் எனப் பல தரப்பினரும் அதிலிருந்தனர். 1975 ஜூன் 25 அன்று இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து, ஜெயப்பிரகாசர் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும், கைது செய்த போதும் இப்படி எல்லாத் தரப்பினரும் கைது செய்யப்பட்டவர்களில் இருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் பாலா சாகேப் தியோரஸ் உட்படப் பலரும் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலைமுடியும் வரை அந்த இயக்கத்தின் பிற தலைவர்கள்சிலர்  தலை மறைவாகவும் இருந்தனர்.

அதே போல. இந்திரா ஆட்சி தோற்கடிக்கப்பட்டு ஜனதா ஆட்சி உருவானபோது அந்த ஜனதா கட்சியும் இப்படி சோஷலிஸ்டுகள் முதல் இந்துத்துவவாதிகள் வரை பங்கேற்ற ஒரு கலப்பட ஆட்சியாகவே இருந்தது. மொரார்ஜி தேசாய் போன்ற பழைய நேர்மையான காந்தியவாதிகள் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இறுதியில் ஜனதா கட்சியில் இருந்த ‘பாரதீய ஜன சங் கட்சியினர் (அதாவது இப்றைய பா.ஜ.க) தாங்கள் ஒரே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்சிலும் இருப்போம் ஜனதாவிலும் இருப்போம் எனப் பிடிவாதம் பண்ணி, ஜனதா கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்த்தனர். இந்திரா மீண்டும் பிரதமரானார்.

இப்படி இரட்டை உறுப்பினர் பிரச்சினையை எதிர்கொண்டு கட்சியை உடைப்பது இந்துத்துவவாதிகளுக்குப் புதிதல்ல. காந்தி கொலையை ஒட்டியும் அவர்கள் அப்படித்தான் செய்தனர். சுதந்திரத்திற்குப் பிந்திய நேரு அமைச்சரவையில் பங்குபெற்ற ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றோர் ஒரே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும், இந்துமகாசபைத் தலைவராகவும் இருந்தனர். இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததை ஒட்டி, யாரும் ஒரே நேரத்தில் காங்கிரசிலும் இந்து மகாசபையிலும் இருக்க முடியாது என்கிற நிலையைக் கட்சி எடுத்தபோது, அமைச்சரவையை விட்டுப் போகிறேன் என விலகிய சியாமா பிரசாத்தான் பின் ஆர்.எஸ்.எஸ்சின் கட்டளையை ஏற்று பாரதீய ஜன சங்கைத் தொடங்கினார். இன்று நான் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் எனப் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளும் ஒருவர் நாட்டின் பிரதமராகவும் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிற்க. இப்படி இந்துத்துவவாதிகளில் பலரையும் இந்திரா சிறையிலிட்டார் என்றேன்.  நெருக்கடி நிலையின்போது தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்த நிலையை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர்?

மன்னிப்புக் கேட்டனர். கெஞ்சினர். தம்மை விடுவித்தால், அமைப்பின் மீதான தடையை நீக்கினால் இந்திராகாந்திக்கு முழு ஒத்துழைப்பையும் நல்குவதாகச் சத்தியம் செய்தனர். இந்த விசயத்தைப் போட்டுடைத்து இந்துத்துவவாதிகளை வெட்கச் செய்த நபர் அப்போது பாரதீய ஜனசங்கின் மேலவை உறுப்பினராகவும் இப்போது பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ள சுப்பிரமணிய சாமி. உள் விவகாரம் இப்படி அம்பலமேறியது.

‘நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள்’ என்று ஆங்கில ஹின்டு நாளிதழில் (ஜூன் 13, 2000) எழுதிய கட்டுரையில் வாஜ்பேயியும் நெருக்கடி காலத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தியோரசும் மன்னிப்புக் கடிதம் எழுதினர் என்றார் சுப்பிரமணியசாமி. சுவாமியின் சுயசரிதையிலும் இது இடம் பெற்றுள்ளது. சுயசரிதையின் அப்பகுதி அவ்வுலுக் இதழிலும் (மார்ச் 1998) வெளி வந்தது. கூமி கபூர், அஜாஸ் அஷ்ரஃப் முதலான பத்திரிகையாளர்களும் இதை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் எழுதப்பட்ட அஷ்ரஃபின் கட்டுரை First Post இணையத் தளத்தில் உள்ளது.

எரவாடா சிறையிலிருந்து தியோரஸ் எழுதிய ஏராளமான மன்னிப்புக் கடிதங்களில் அவர், இனி ஜெயப்பிரகாசர் இயக்கத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் கழற்றிக் கொள்ளும் எனவும்,  இந்திராகாந்தியின் நெருக்கடி நிலைத் திட்டங்களில் ஒன்றான 20 அம்சத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பாடுபடும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இந்திரா அதைக் கண்டுகொள்ளவில்லை. பதிலளிக்கவும் இல்லை.

தான் எந்த எதிர்ப்பிலும் கலந்துகொள்ள மாட்டேன் என வாஜ்பேயீ பணிந்தனுப்பிய கடிதத்திற்கு மட்டும் இந்திரா பதிலளித்தார். நெருக்கடி காலம் முழுவதும் வாஜ்பேயீ ‘பரோலில்’ கழிக்க முடிந்தது என்று கூறும் சு.சாமி, அகாலி தளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது நூலில் இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுக் கும்பிட்டுக் கிடந்த ஜனசங்காரர்கள் குறித்து எழுதியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார். அது மட்டுமல்ல தலைமறைவாக இருந்து நெருக்கடி நிலைக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த தன்னையும் சரணடையுமாறு வாஜ்பேயி அறிவுறித்தினார் என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

சுவாமியின் மைத்துனியும் முக்கிய பத்திரிகையாளருமான கூமி கபூர் நெருக்கடி காலம் குறித்து எழுதியுள்ள நூலில்,ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நானாஜி தேஷ்முக், தாதோபந்த் தென்காடி முதலானோர் கைது செய்யப்பட்டதைக் கண்டு நடுங்கிப்போன பல இந்துத்துவ அமைப்பினர் இப்படி இந்திராவிடம் சரணடைந்து “இருபது அம்சர்களாக” ஆகிப்போனார்கள் எனக் கிண்டலடிக்கிறார். வாஜ்பேயி மீது சற்றே கருணை காட்டும் கூமிகபூர் வாஜ்பேயீ அக்காலத்தில் ஒரு அறுவை சிகிச்சையை ஒட்டி நீண்ட நாள் நோயில் விழ நேர்ந்ததால் பரோல் அளிக்கப்பட்டது என்கிறார். ஆனால் வாஜ்பேயீ மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அவர் மறுக்கத் துணியவில்லை.

பா.ஜ.க ஆட்சியில் பாரத ரத்னா வழங்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயீ இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பது மட்டுமல்லாமல் பிறரைக் காட்டிக் கொடுப்பதும் புதிதல்ல. சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர்தான் இந்த பாரத் ரத்னா.

செப்டம்பர் 1, 1942 அன்று கையொப்பமிட்டு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் அவர் கூறியுள்ளது:

“என் பெயர் அடல் பிஹாரி வாஜ்பேயீ; அப்பா பெயர்: கவுரி ஷங்கர்; என் சாதி: பிராமணன்; வயது 20; வேலை: குவாலியர் கல்லூரி மாணவன்; முகவரி: படேஷ்வர், பி.எஸ்.பா, ஆக்ரா மாவட்டம்.

“கலவரத்தில் பங்கு பெற்று அழிவுகளை ஏற்படுத்தினாயா, இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறாய்?” என நீதிமன்றம் கேட்டபோது ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பேயீ சொன்னது:

“1942 ஆகஸ்ட் 27 அன்று படேஷ்வர் கடைத்தெருவில் அலா (Ala) ஓதப்பட்டது. 2 மணி சுமாருக்கு காகுவா எனப்படும் லீலாதரும் மாஹுவானும் அலாவுக்கு வந்து உரையாற்றினார்கள். வனச் சட்டங்களை  மீறுமாரு மக்களைத் தூண்டினர். 200 பேர் வன அலுவலகத்தை அடந்ந்தனர். நானும் எனது சகோதரனும் அவர்களைப் பின் தொடர்ந்து வன அலுவலகத்தை எட்டினோம்.

அங்கிருந்தவர்களில் காகுவா, மாகுவான் ஆகிய இருவரையும் தவிர மர்றவர்களின் பெயர் தெரியாது. நானும் என் சகோதரனும் கீழேயே நின்று கொண்டோம். மற்றவர்கள் மேலே சென்றனர். செங்கற்கள் சரிவதுபோல எனக்குத் தோன்றியது. யார் இடித்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் கற்கள் வீழ்ந்தது உறுதி. நான் என் சகோதரனுடன் மைபுரா வை நோக்கிச் செல்லத் தொடங்கினேன். மேலே குறிப்பிட்ட நபர்கள் பவுண்டில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெளியே விரட்டினர். கும்பல் இப்போது பிச்கோலியை நோக்கி நகரத் தொடங்கியது. வன அலுவலகத்தில் 10 அல்லது 12 பேர்கள் இருந்தனர்.  நான் 100 கெஜ தூரத்தில் இருந்தேன். அரசுக் கட்டிடத்தைத் தகர்த்ததில் நான் எந்த உதவியையும் ஆற்றவில்லை. அதன்பின் நாங்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றோம்.”

உருது மொழியில் எழுத்தப்பட்டுள்ள இந்த வாக்குமூலத்தின் கீழ்,  இரண்டாம் நிலை நீதித்துறை நடுவர் எஸ்.ஹாஸனும்  வாஜ்பேயியும் கையொப்பமிட்டுள்ளனர். தேதி: 1.9.42.

இந்தக் கடிதத்தை ஃப்ரன்ட்லைன் இதழ் (பிப்ரவரி 7, 1998) வெளியிட்டபோதும் வாஜ்பேயீ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. ஒருபக்கம், “இது முற்றிலும் பொய், அவதூறு வழக்குப் போடுவேன்” என மிரட்டி வக்கீல் நோட்டீஸ் விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் ஃப்ரன்ட்லைன் இதழுக்குத் தொலைபேசியில், “அந்த வாக்குமூலமும் அதன் கீழ் உள்ள கையொப்பமும் என்னுடையதுதான். ஆனால் எனக்கு உருது மொழி படிக்கத் தெரியாது” என்று கூறினார்.

பிரதமர் நாற்காலியில் உட்காரத் துடித்துக் கொண்டிருந்த வாஜ்பேயீ தான் சிறுவன் என்பதால் விடுதலை செய்யப்பட்டதாகவும் மற்றபடி தான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தியாகம் செய்தது உண்மைதான் எனவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறினார்.

காந்தியைக் கொன்ற சதிக் கும்பலின் தலைவரான சாவர்கரும் இப்படி மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளியே வந்தவர்தான். அந்தமான் சிறையில் இருந்தபோது தன்னை விடுவித்தால் வெள்ளை அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்களித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்துத்தான் அவர் விடுதலை ஆனார். அளித்த வாக்குறுத்திக்கு அவர் விசுவாசமாகவும் இருந்தார். ‘இனி இந்தியாவின் எதிரியை வெளியே (அதாவது பிரிட்டன்) தேடிக்கொண்டிருக்க முடியாது; உள்ளேதான் எதிரி (அதாவது முஸ்லிம்கள்)  உள்ளனர்’ எனப் புதிய கோட்பாட்டை உருவாக்கி அவர் செயல்பட்ட கதை அறிவோம்..

காந்தியைக் கொன்ற வழக்கில் ஏழாவது குற்றவாளியாக இருந்த அவர், தனக்கும் கொலைக்கும் தொடர்பே இல்லை என வாதிட்டதோடு நீதிமன்றத்தில் கோட்சே, ஆப்தே ஆகியோருடன் பேசக் கூட இல்லை. தூக்கு ஏற இருந்த கோட்சே தன் குருநாதர் இப்படிக் கடைசி வரையில் பேசாமல் போனது குறித்து வருத்தப்பட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *