பா.ஜ.க.வின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள்

[தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை]

பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின் கார்பொரேட்களும் ஊடகங்களும் இருந்தன என்பது ஊரறிந்த உண்மை. நேரடியான நிதி உதவிகள் தவிர அவையே களத்தில் இறங்கிக் கட்சிகளிடம் பேரம் பேசிக் கூட்டணி அமைத்தது, மாநில மொழிப் பத்திரிகைகளை விலைக்கு வாங்கியதுவரை அவை செய்யாதது ஏதுமில்லை. பா.ஜ.கவின் தேர்தல் செலவு மொத்தம் 5000 கோடி என்கின்றனர். மோடி தலைமையில் பா.ஜ.கதான் வெல்லப்போகிறது, அதைத் தவிர வேறு தேர்வே மக்களுக்கு இல்லை என ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் வந்து தட்டி எழுப்பி ஊடகங்கள் நிமிடந்தோறும் காதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளாதார வீழ்ச்சி தொடங்கி தாணே புயல்வரை காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படி எல்லாம் நடந்தது உண்மைதான் என்றாலும் பா.ஜ.கவின் வெற்றிக்கு இவை மட்டுமே காரணம் என எதிர்க் கட்சிகள் நம்பினால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

முதலில் எதிர்க்கட்சிகள் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மிகவும் ஆர்வமாக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். 66.4 சத வாக்குப் பதிவு வரலாறு காணாதது. பா.ஜ.க என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி , பார்ப்பன, சத்திரிய மேட்டுக்குடி மக்களே அதன் பின்புலம் என்பன போன்ற விமர்சனங்களுக்கும் இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் அவர்கள் இன்று வேர் பாய்ச்சி விட்டனர். இமாசலப் பிரதேசம் முதல் கர்நாடகம் வரை அவர்களின் அலை வீசியுள்ளது. மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவலை மூடி மறைக்காமல் அதையே முன்னிறுத்தி இந்த வெற்றியை அவர்கள் ஈட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோரை இணைத்து பகுஜன் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்த கான்ஷிராமுடைய அணுகல்முறை இன்று தகர்க்கப்பட்டு விட்டது. இதைத் தலை கீழாக மாற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யை மாயாவதியின் பார்ப்பனர் + சத்திரியர் + பிற்படுத்தப்பட்டோர் + பட்டியல் சாதியினர் என்கிற “வெற்றிக் கூட்டணியை” இன்று உண்மையிலேயே காரிய சாத்தியமாக்கியவர்களாக பா.ஜ.கவினரே உள்ளனர். ஆக புவியியல் ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி பரந்துபட்ட ஒரு கட்சியாக அது விசாலித்து நிற்கும் உண்மையை நாம் முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

இந்த வெற்றிக்குப் பின்னணியாக யார் இருந்துள்ளனர்? 1. முதலில் வாக்களித்த மக்கள். 55 கோடி வாக்காளர்களில் சுமார் 10 கோடிப் பேர் புதியவர்கள். உலகமயம், திறந்த பொருளாதாரம், கார்பொரேட் கலாச்சாரம் ஆகியன வேர்விட்ட பின் பிறந்த குழந்தைகள். வாக்காளர்களின் இன்னொரு பெருந் தொகுதி வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம். இவர்களுக்கு வளர்ச்சி, வளர்ச்சியின் பலன்கள் ஆகிய ஒன்று மட்டுமே இலக்கு. வரலாறு, இலக்கியம், சமூகவியல் என்பதெல்லாம் இன்று கல்வி நிலையங்களிலும் கூடப் புறக்கணிக்கக் கூடிய பாடங்கள் ஆகிவிட்டன. சமத்துவம், ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகிய அரசியல் அறங்களின் இடத்தில் இன்று ‘வல்லவன் வெல்வான்” என்கிற கார்பொரேட் அறம் கொடி கட்டிப் பறக்கிறது இந்தக் கார்பொரேட் அறத்தையே வாழ்க்கை அறமாக உள்வாங்கியுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்

இவர்களிடம் போய், “குஜராத்தில் 2002ல் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 2 லட்சம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாயினர். இதற்கெல்லாம் காரணம்…” எனத் தொடங்கினீர்களானால், “அட, இந்தக் கதையெல்லாம் யாருக்கு சார் வேணும். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது…” என்று பதிலளிப்பார்கள்.

மதிப்பீடுகள் இன்று பெரிய அளவில் மாறிவிட்டன. முந்தைய தலைமுறையினரின் அரசியல் மொழி இன்றைய தலைமுறையினரிடம் எடுபடவில்லை. பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மார்க்சீயம், சாதி ஒழிப்பு முதலிய அரசியல் மதிப்பீடுகளினிடத்தில் இப்போது மதம் சார்ந்த அறங்கள், நம்பிக்கைகள், சுய முன்னேற்றத்தை நோக்கிய விழைவு முதலியன இடம்பிடித்துக் கொண்டுள்ளன. இதை நாம் முதலில் மனங்கொள்வோம்.

இவர்களுக்கு அதிக அளவில் ஊழலற்ற, சாதித்துக் காட்டுகிற ஆட்சி வேண்டும், செயல்படும் அரசு எந்திரம் வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதியமில்லாத அளவிற்கு இந்நாடு அண்டை நாடுகள் மத்தியில் தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும். “போலீஸ் ஸ்டேஷகளில் உங்களுக்கெல்லாம் என்னுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனை மரியாதை இருந்தது, மீண்டும் லாலு ஆட்சியை நிறுவுங்கள்” என லாலு பிரசாத் யாதவ் முழங்கிய முழக்கத்தை பீஹாரிகள் நிராகரித்து விட்டனர். அவரது மனைவி, மகள் இருவருமே படு தோல்வி அடைந்துள்ளனர். குடும்பப் பெருமை வாரிசு அரசியல், ஊழல் பின்புலம் இவற்றின் மூலம் இனி மோடி, பா.ஜ.க வகை அரசியல்வாதிகளை எதிர் கொள்ள இயலாது.

திரிபுராவில் தம் பிடியைத் தக்கவைத்துக் கொண்ட மார்க்சிஸ்டுகளால் மே.வங்கத்தைத் தக்க வைக்க இயலவில்லை. அவர்களது முப்பதாண்டு கால ஆட்சி அங்குள்ள 25 சத முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற இயலவில்லை என்பதை அந்தக் “குள்ள நீதிபதி” (சச்சார்) அம்பலப் படுத்தினார். அரசாங்கத்தைக் காட்டிலும் அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஆட்சி செலுத்தி வந்த நிலையை இன்றைய தலைமுறை ஏற்கவில்லை. மக்களையும் விடக் கட்சியே சரியானது, உயர்ந்தது என்கிற அவர்களின் நூறாண்டு வரலாற்றுச் சுமையை உதறாதவரை அவர்களுக்கு விடிவில்லை.

2. பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாதகமாக்கிய இரண்டாவது தரப்பு அவர்களுக்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். மாறியுள்ள இந்த உலகச் சூழலையும் கருத்தியல் நிலையையும் அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுடன் நீதி மன்றத்தால் ஒப்பிடப்பட்ட மோடியையே அவர்கள் சர்வ வல்லமையாளனாக முன்னிறுத்தி வெற்றியையும் ஈட்டினர். தொடர்ச்சியாகவும் இறுக்கமாகவும் அமைதியாகவும் அவர்களின் பணி இந்தியத் தீபகற்பம் முழுவதும் மட்டுமல்ல அந்தமான் தீவுகள் வரைக்கும் பரவி இருந்தது. கடல் கடந்த நாடுகளிலும் அவர்கள் அமைப்புகளை உருவாக்கிப் பல்வேறு மட்டங்களிலும் செயல்பட்டனர். கல்விப் பணி தொடங்கி வெடி குண்டுத் தொழிற்சாலைகளை ஆங்காங்கு அமைப்ப்து வரைக்கும் அவர்கள் தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்பட்டனர். இராணுவம் தொடங்கி சகல துறைகளிலும் அவர்கள் ஊடுருவினர். பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோரை சிறுபான்மை மக்களிடமிருந்து பிரித்து எதிர் எதிராக நிறுத்துவதை இலக்காக்கிச் செயல்பட்டனர். இவற்றை எதிர்கொள்வதை முன்னுரிமையாக்கிச்ச் செயல்பட மதச் சார்பர்ற கட்சிகள் எதுவும் தயாராக இல்லை. மாறாக அவர்களைக் கண்டு அஞ்சவே செய்தனர்.

3. பா.ஜ.க வெற்றியின் பின்னணியாக இருந்த மூன்றாவது தரப்பினர் கார்பொரேட்கள். எப்படி மோடி என்கிற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியரை முன்னிறுத்தினாலும் பா.ஜ.க தம் நலனை விட்டுக் கொடுக்காது என உயர் சாதியினர் முழுமையாக அதற்குப் பின் நின்றனரோ, அதேபோல மன்மோகன் சிங் சோனியா ஆட்சியைக் காட்டிலும் மோடி பா.ஜ.க ஆட்சி இன்னும் வலுவாகத் தாராள மயக் கொள்கையை நிறைவேற்றும் என கார்பொரேட்கள் உறுதியாக நம்பினர். எச்ச சொச்சமாகவேனும் நேரு காலத்திய சோசலிசத் தொங்கல்கள் ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரசால் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற அம்சங்களிலும், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், விவசாய நிலங்களை அபகரித்தல் முதலான அம்சங்களிலும் உறுதியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனக் கருதினர்.

ஜனநாயக சக்திகளைக் காட்டிலும் கார்பொரேட்கள் வலதுசாரி பாசிச சக்திகளிடமே நெருக்கமாக இருப்பர். சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்திய செவ்வியல் பாசிசத்தின் போது ஹிட்லர் மற்றும் முசோலினியின் கட்சிகளும் பெரு முதலாளிகளும் ஒன்றாக இருந்தனர். இந்தியாவில் பெரு முதலாளிகள் இது நாள் வரை காங்கிரசுடன்தான் இருந்தனர். இன்று கார்பொரேட்களும் இந்துத்துவ சக்திகளும் இணைந்துல்ளனர். ஆக பாசிசம் இன்று முழுமை அடைந்துள்ளது.

இந்த எதார்த்தங்களைக் கணக்கில் எடுக்காதவரை பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிக்க இயலாது.

இன்றும் கூட 31 சத வாக்குகளைத்தான் பா.ஜ.க பெற முடிந்துள்ளது. நமது தேர்தல்முறை அவர்களுக்கு இந்த அமோக வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது. 15 சதச் சிறுபான்மையினர் அவர்களிடமிருந்து முற்றாக விலகி நிற்பது மட்டுமின்றி இந்த வெற்றியைக் கண்டு சற்றே பதற்றத்திலும் உள்ளனர். பா.ஜ.கவினருக்கு வாக்களித்தவர்கள் எல்லோருமே இந்துத்துவவாதிகள் அல்ல என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

குஜராத் 2002 ஐ அவர்கள் திருப்பிச் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் எந்தப் புதிய சக்திகள் இன்று ஆதரித்து நிற்கின்றனரோ அவர்களே வளர்ச்சி எனும் நோக்கத்திற்கு இது பொருத்தமில்லாதது என அவர்களிடமிருந்து விலக நேர்வர். மாறாக இந்துத்துவ சக்திகள் தொலை நோக்குடன் செயல்பட்டு இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறை, இராணுவம், அரசு எந்திரம் ஆகியவற்றைக் காவி மயமாக்குவதை நுணுக்கமாகவும் வேகமாகவும் செய்வர். இவர்களை ஆதரிக்கும் புதிய சக்திகள் இவற்றைக் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்டு மதச் சார்பற்ற சக்திகள் அடுத்து வரும் நாட்களில் செயல்படவேண்டும் இந்த நாட்டின் முதன்மை எதிரி மதவாத சக்திகள்தான் எனப் புரிந்து கொண்டு மதச் சார்பர்ற சக்திகள் ஓரணியில் திரள்வதும், மதச்சார்பு நடவடிக்கைகளையும் ஊடுருவல்களையும் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதும் இன்றைய உடனடித் தேவை. இன்னொரு பக்கம் பழைய மொழி, பழைய அணுகல் முறை, பழைய வடிவம் ஆகியவற்றையும் இவர்கள் உதறத் தயாராக வேண்டும்.

இல்லையேல் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல அவர்களுக்கும் எதிர்காலமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *