ரஜிந்தர் சச்சார் (1923 – 2018)   

மறைந்த நீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான ஆணையத்திற்குத் தலைமை ஏற்று அளித்த அறிக்கையாலேயே இன்று அவர் பெரிதும் நினைவுகூறப்பட்டாலும், அவர் பன்முக ஆளுமை உடையவர். சோஷலிஸ்ட் கட்சிப் பாரம்பரியத்தில் வந்த அவர் இறுதிவரை மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வந்தவர். 

ஒன்று

“அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் அடுத்தபடியாகத் தாம் நேசிப்பது ரஜிந்தர் சச்சாரைத்தான் எனப் பல முஸ்லிம்கள் என்னிடம் கூறியுள்ளனர்” -என்றார் சச்சார் அறிக்கையை உருவாக்கிய குழுவின் உறுப்பினரும் செயலாளருமான அபு சலே ஷரீஃப். அறிக்கையின் நகலைத் தயாரித்தது ஷரீஃப்தான் என்பார்கள். அது குறித்துக் கேட்டபோது ஷரீஃப் சொன்னார்:

“இந்த அறிக்கையின் சிறப்புகளுக்கும் நம்பகத் தன்மைக்கும் சச்சாரே காரணம். பொது வெளிகளில் முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிப்புகளுக்குள்ளாகக் கூடிய நிலையில் (vulnerable) உள்ளனர் என்பது குறித்த ப்ரக்ஞை உடையவராக அவர் இருந்தார். இந்த அறிக்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் எவ்வாறு முஸ்லிம்கள் அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் வாழ்வை எதிர்கொண்டுள்ளனர் என்பதைச் சொல்லிக் கொண்டே போகிறது. இந்த அறிக்கையின் தனித்துவம் அதில்தான் அடங்கியுள்ளது”.

சச்சார் என்றவுடன் நமக்கு இன்று ‘சச்சார் அறிக்கை’தான் நினைவுக்கு வருகிறது என்றாலும், அவர் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்டவர். வழக்குரைஞராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும், நீதிபதியாகவும், மனித உரிமைப் போராளியாகவும், ஒரு பொதுநிலைக் கருத்தாளராகவும் (Public Intellectual) நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்.

ஒரு நீண்ட வாழ்வை இந்த மண்ணில் வாழ்ந்த அவர் ஒன்றாக இருந்த இந்தியாவில் பஞ்சாபில் பிறந்தவர். லாகூரில் வழக்குரைஞர் படிப்பை முடித்தவர். பிரிவினைக் கலவரத்தின் போது குடும்பத்தைப் பிரிய நேர்ந்து தப்பித்து வந்தவர். அவரது தந்தை பீம்சேன் சச்சார் ஒரு காங்கிரஸ்காரர். பிரிவினைக்குப் பின் ஐந்தாண்டு காலம் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்தவர். ஆனால் ரஜீந்தர் சச்சார் தந்தையின் கட்சியில் இருக்கவில்லை. அன்று காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில்தான் இருந்தார். ஒரு முறை பிரதமர் நேரு அவரது இல்லத்திற்கு உணவருந்த வந்தபோது அவரோடு அமர்ந்து உண்ண மறுத்வர்தான் சச்சார்.

இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது சச்சார் அதை ஏற்கவில்லை. இந்திராவின் மரணத்தை ஒட்டி சீக்கியர்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டபோது (1984)  டெல்லியில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அப்போது சீக்கியர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. அவர் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தால் உண்மைகள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சம் அன்று காங்கிரஸ் அரசுக்கு இருந்தது.

சச்சாரின் உருவாக்கத்தில் இளமையில் அவர் கண்முன் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், பிரிவினைக் கலவரக் கொடுமைகள், நெருக்கடிநிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷலிசச் சிந்தனை, அரசியல் சட்ட ஆளுகை , மதச்சார்பின்மை, மனித உரிமைகள் என்கிற இந்த நான்கையும் அவர் தன் அரசியல் நெறிகளாக ஏற்று வாழ்ந்ததை நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பு என்பது பிரிவினைக் கலவர அனுபவங்களின் ஊடாகத்தான் அவருக்கு உருவாகியிருக்க வேண்டும்.

“முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் தாங்கள் ‘தேசவிரோதிகள்’ இல்லை, ‘பயங்கரவாதிகள்’ இல்லை என நிரூபித்திக் காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அவர்களுக்குச் சலுகைகள் (appeasement) காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால் அப்படியான ‘சலுகைகள்’ எந்தச் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுத்திவிடவில்லை. ஏதோ  சில மக்கள் மட்டும் முஸ்லிம்களைச் சந்தேகத்திற்குரியவர்களாகப் பார்க்கிறார்கள் என்பதில்லை. பொது நிறுவனங்களும், அரசமைப்புகளும் கூடத் தம்மை அவ்வாறு பார்ப்பதாக அவர்கள் எங்களிடம் முறையிட்டனர். இப்படியான நிலை அவர்கள் மத்தியில் மிகப் பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது” – என்கிறது சச்சார் அறிக்கை.

“புர்கா, பர்தா, தாடி, தொப்பி முதலியன ஒரு பக்கம் இந்திய முஸ்லிம்களின் தனித்துவத்திற்கான அடையாளங்களாக இருந்தபோதிலும், அவையே பொதுப்புலத்தில் அவர்களின் அச்சத்திற்கான மூல காரணிகளாகவும் அமைந்து விடுகின்றன. கேலிக்குரிய அம்சங்களாக மட்டுமல்ல, சந்தேகப் படுவதற்கான ஆதாரங்களாகவும் அவை ஆகிவிடுகின்றன” என்பதையும் சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிவிடுகிறது.

வேறெந்த உடனடிப் பலனும் சச்சார் அறிக்கையின் மூலம் விளைந்ததோ இல்லையோ முஸ்லிம்களுக்குச் சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக இங்கு இந்துத்துவசக்திகளால் முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை உரிய தரவுகளின் அடிப்படையில் தர்த்தெறிந்தது சச்சார் அறிக்கை.

சச்சார் என்றைக்கும் காங்கிரசை ஆதரித்ததில்லை என்றாலும் மன்மோகன் சிங் அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக முஸ்லிம்களின் சமூக நிலை குறித்து ஆய்வுசெய்ய இந்த ஆணையத்தை அமைத்தபோது அதற்குத் தலைவராக சச்சார் அவர்களையே அழைத்தது. அவரும் அதை ஏற்றுக் கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் இப்படியான ஆணையங்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் சுமார் 15 கோடி அளவு மக்கள் தொகை உள்ள முஸ்லிம் சமூகத்தை மட்டும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு இது ஒன்றுதான்.

இரண்டு 

இந்திய முஸ்லிம்களின் “பாதுகாப்பு, அடையாளம், சமத்துவம்” ஆகியவற்றைத் தனது அணுகல் முறை நோக்கங்களாக  அறிவித்துக் கொண்ட இக்குழு, 2006 நவம்பர் 17 அன்று,  12 அத்தியாயங்கள், 427 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது.  பல்வேறு துறைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மிக விரிவான தகவல்களை, உரிய முறையில் பகுத்தாய்வு செய்து,  நிரல் படத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஓர் ஆவணமாக இன்று நம்முன் உள்ளது.

தன் அணுகல்முறையின் அடிப்படை கோட்பாடாகச் சச்சார் சொல்வது:

“எந்த ஒரு நாடாயினும் அங்கு அமைந்துள்ள அரசு. ஒரு நீதியான அரசாக உள்ளதா இல்லையா எனக் கண்டறிவதற்கான ஒரே சோதனை அங்குள்ள சிறுபான்மை மக்கள் தம் அரசு நடுநிலையாகச் செயல்படுகிறதா இல்லையா என்பது குறித்து என்ன கருத்து வைத்துள்ளார்கள் என்பதுதான்.”

இந்த அறிக்கை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:

1.பலரும் நம்புவதுபோல் இது வெறும் ஒரு இடஒதுக்கீட்டிற்கான அறிக்கை அல்ல.  உறுதியான இடஒதுக்கீட்டுப் பரிந்துரை எதையும் இது செய்யவில்லை எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களைப் பிற சமூகங்களுக்கு இணையாகக் கொண்டு வருதலில் இடஒதுக்கீடு ஓரங்கம் மட்டுமே என்கிற அடிப்படையில் தன் ஆய்வுகளை சச்சார் அறிக்கை முன்வைக்கிறது. (அ)சகல நிறுவனங்களும் சமூகத்தின் பன்மைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைவதற்கும் (ஆ), இன்று ஏற்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை ஏற்படுத்தித் தருவதற்கும் உரிய பரிந்துரைகளைச் செய்வதும்தான் சச்சார் அறிக்கையின் நோக்கம்.

2.இந்த நோக்கில் சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவ குறியெண்’ (Diversity Index) ஒன்றை உருவாக்குவது, பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் ஒதுக்கப்படுதல் குறித்தும் அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உணர்வூட்டுவது, உயர் கல்வியில் பன்மைத்துவத்தை நிலைநாட்டும் வண்ணம் சேர்க்கை அளவுகோல்களை உருவாக்குவது, சிறுபான்மையோர் குறித்த தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவது, தனியார் துறைகள் உள்ளிட்டு முஸ்லிம்களுக்கான உறுதியாக்க நடவடிக்கைகளை (Affirmative Actions)) மேற் கொள்வது, பிரிட்டனில் இருப்பதுபோல் “சமவாய்ப்பு ஆணையம்’ (Equal Opportunity Commission ) ஒன்றை உருவாக்குவது, மதரஸா கல்வி முறையை நவீன மயமாக்குவதோடு, அதைப் பொதுக் கல்வியுடன் இணைப்பது, பாட நூல்களின் உள்ளுறையை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது, முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார ரீதியில் சுருங்குவதைத் (ghettoization) தடுக்கும் வகையில் சிவில் சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது என்கிற வகையில் தன் பரிந்துரைகளைச் சச்சார் குழு மேற் கொண்டுள்ளது.

தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரைப் பற்றியும் அது பேசுகிறது.

முஸ்லிம்கள் குறித்த பொய்களைப் பரப்பியே அரசியல் நடத்தும் பாசிஸ சக்திகளின் பல கட்டுக்கதைகளைத் தகர்க்கும் வண்ணம் ஏராளமான தரவுகளைச் சச்சார் குழு தொகுத்துள்ளது. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டுகிறது.

மக்கள் எல்லோருக்குமான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அரசியல் சட்டத்தின் ஆளுகை என்பனவற்றில் சச்சார் மிக உறுதியாக் இருந்தார் என்றேன். பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவராக இருந்து பல்வேறு உண்மை அறியும் செயல்பாடுகள், மக்கள் மன்றங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றில் பங்குபெற்றுத் தன் அனுபவங்களையும் புரிதல்களையும் மக்கள் சேவைக்கு அர்ப்பணித்தவர் அவர்.

நெருக்கடி நிலையின்போது அறிவிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கையை, “இந்தியாவின் ஆன்மாவில் ஏற்பட்ட நிரந்தரக் காயம்” எனவும், நெருக்கடி நிலை தொடர்வதற்கு ஆதரவாக அன்று இந்திய நீதித்துறை இருந்ததை, “அதன் வரலாற்றில் ஒரு கறை” எனவும் கண்டித்தவர் அவர்.

“எழுதப்பட்ட ஒரு அரசியல்சட்டம் உள்ளவரை அதுவே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. தன்னுடைய அதிகாரம் அரசியல் சட்டத்தில் எல்லைக்குட்பட்டதே என்பதை நாடாளுமன்றம் ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்றம் தன் இறையாண்மைக்குக் குறை வந்துவிடுவதாகக் கருதக்கூடாது. அரசு, நீதித்துறை ஆகியவற்றின் இறையாண்மை அரசியல் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று நாடாளுமன்ற அதிகாரமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான். அரசன் எத்தனை அதிகாரம் மிக்கவனாக இருந்தாலும் அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என நாம் இந்தியப் பாரம்பரியத்தில் சொல்கிறோமே அப்படித்தான் இதுவும்” – என அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை எல்லாமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவையே என்பதை வலியுறுத்தியவர் அவர்.

மூன்று

இறுதிவரை தனது மனதிற்குப் பட்டதைச் சொல்லிக் கொண்டும் அரசுகள் அத்துமீறும்போது அவற்றின் தலைகளில் குட்டிக் கொண்டும் இருந்தவர் சச்சார். நினைவுக்கு வந்த சில மட்டும் இங்கே:

(1) 2016 ஜனவரியில் பாஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தை பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்கியது நினைவிருக்கலாம். அதை ஒட்டி அப்போது இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை மோடி அரசு நிறுத்துவதாக அறிவித்தபோது அதை சச்சார் கண்டித்தார். “பேச்சு வார்த்தைகளை நிறுத்துவது அல்லது ஒத்திப் போடுவது என்பதெல்லாம் நல்லதல்ல. அவை பயங்கரவாதிகளுக்கே உதவும்” என்றார். தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதே இரு நாடுகளுக்கும் நல்லது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

(2) நரேந்திரமோடி அரசு டெல்லியில் பதவி ஏற்ற கையோடு நாட்டைப் பாதிக்கக் கூடிய பல முக்கியமான பிரச்சினைகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அவசரச் சட்டங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கும், நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்ட தனியார்களுக்கும் அனுமதி அளிப்பதை அவசரச் சட்டங்களின் ஊடாக மோடி அரசு நிறைவேற்ற முயற்சித்தபோது ஆகியவற்றை “முற்றிலும் சட்டவிரோதமானது” (absolutely illegal) என்றும், அரசியல் சட்டத்தின் மீது மேற்கொள்ளப்படும் “ஏமாற்று” (fraud) என்றும் சொன்ன சச்சார், இதில் குடியரசுத் தலைவர் கையொப்பமிடக் கூடாது எனவும் சச்சார் கேட்டுக்கொண்டார். “தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால்தான் இப்படி அவசரச் சட்டம் மூலமாக இவற்றை நிறைவேற்ற வேண்டி உள்ளது என வெட்கமில்லாமல் இந்த மோடி அரசு சொல்கிறது. இது ஒன்றே போதும் குடியரசுத் தலைவர் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பதற்கு” என்றார்.

“குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டங்களை இயற்றுவது என்பதற்குப் பதிலாக, அவசரச் சட்டங்களின் மூலம் இப்படி நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் சட்டங்களை இயற்றுவது என்பது அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு அவசரநிலை அதிகாரம் (emergency power) என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (1987). நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாத ஒரு அசாதாரணச் சூழலில் பயன்படுத்துவதற்காக அரசுக்கு அளிக்ப்பட்டுள்ள அதிகாரம் இது. இதை அரசியல் லாபங்களுக்காககப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத் தொடரை நீடிக்காமல் இப்படி அவசரச் சட்டங்களின் மூலம் பிரச்சினைக்குரிய சட்டங்களை இயற்றுவதன் பின்னணி என்ன? அந்நிய முதலீட்டாளர்களுடன் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களே இவற்றுக்குப் பின்னணி. ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசுக்கு அதிக அளவில் வருமானம் (dividend) ஈட்டித்தந்த ஒரு நிறுவனம். ‘நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசிய மயமாக்குவதற்கான சட்டத்தின்படி’ நிலக்கரி தோண்ட தனியார்களுக்கு உரிமம் அளிக்க இயலாது. இந்தச் சட்டத்தை இப்படி அவசரச் சட்டம் என்கிற ஒரு  முரட்டு நடவடிக்கையின் மூலம் ஒன்றுமில்லாமல் ஆக்குவதை எப்படி அனுமதிப்பது?” என்றார் சச்சார் (டிச 25, 2014)..

இதன் பின்னரே குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி நரேந்திர மோடி அரசின் இத்தகைய அவசரச் சட்ட ஆளுகையைக் கண்டிக்க நேர்ந்தது.

2013ல் உலக அளவில் செயல்படும் மிகப் பெரிய மருந்து நிறுவனமான ரன்பாக்சி (Ranboxy) கலப்பட மருந்துகளை விற்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அமெரிக்க அரசுக்கு 500 மில்லியன் டாலரை அபராதமாகச் செலுத்த ஒப்புக் கொண்ட செய்தி வெளிவந்தபோது அந்த மருந்துகளை இங்கும் தடை செய்ய வேண்டும் என்றார் ரஜிந்தர் சச்சார். “அமெரிக்க அரசு அதைக் கண்டு பிடித்துத் தடை செய்யும் அதே நேரத்தில் அவை இங்கே அனுமதிக்கப்படுகின்றன என்றால் அதற்குப் பெயர் என்ன? திறமையின்மையா இல்லை கூட்டுக் களவாணித்தனமா (collusion), இல்லை இன்னும் மோசமான ஏதாவது ஒன்றா? எனக்குப் புரியவில்லை” எனக் கூறிய சச்சார் இந்தியக் கடைகளில் அது விற்கப்படுவதையும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அதை அனுமதித்து வருவதையும் சுட்டிக்காட்டிக் கண்டித்தார் (மே 15, 2013). “இந்த மருந்துகளை இங்கு அனுமதித்து வருவது குறித்து நலவாழ்வு அமைச்சகமும், மருந்துக் கட்டுப்பாடு அதிகாரியும் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார்.

சென்ற முறை (1999 -2004) பா.ஜ.க தலைமையிலான ஆட்சி இங்கு நடைபெற்றபோது அவர்கள் பல்கலைக் கழகங்களில் ஜோதிடக் கல்வி, புரோகிதம் ஆகியவற்றில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளைத் தொடங்குவதாக அறிவித்தனர். அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் சச்சார் முதன்மையானவர். “பல்கலைக்கழகங்கள் அரசியல்சட்டத்தின் 52 A பிரிவின் கீழ் அமைக்கப்படுபவை.. பகுத்தறிவு மற்றும் மூட நம்பிக்கைகளை ஏற்க்கக் கூடாது என்பது அப்பிரிவு வற்புறுத்துவதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சோதிடம் என்பது அறிவியல் பூர்வமானது எனில் இங்கு தேதல்களை நடத்தி இங்கு ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியதில்லையே. சோதிடத்தின் மூலம் தகுதியான ஆட்சியாளர்களைக் கண்டுபிடித்து விடலாமே” என்றார்.

நான்கு

ரஜீந்தர் சச்சார் அவர்களுடன் எனக்கு ஒரு சிறிய அனுபவம் உண்டு. தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டுள்ள தோழர்கள் பாஸ்கர், சதீஷ் முதலானோர் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் இருந்தனர். அவர்களது வழக்கையும் நடத்தாமல், பிணையில் விடுதலையும் செய்யாமல் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டித்துத் தோழர்கள் சிறையில் பட்டினிப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அரசு மசியவில்லை. அப்போது குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழு சிறைக்குள் அவர்களைச் சந்தித்துப் போராட்டத்தை நிறுத்த வேண்டிக் கொள்வது என்றும், அதனூடாக இந்தப் பிரச்சினையை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியை ஏற்று டெல்லியிலிருந்து ரஜிந்தர் சச்சார் வந்திருந்தார். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். உள்ளே சென்று பட்டினிப் போராட்டத்தில் இருந்தவர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகளும் அனுமதித்தனர், சச்சார் உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்கு இளநீர் கொடுத்துப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

அவரோடு எனக்கிருந்த இன்னொரு தொடர்பு, அவரது சச்சார் அறிக்கை வெளிவந்த சில மாதங்களில், பத்தே நாட்களில் அதைச் சுருக்கித் தமிழில் ஆக்கியதுதான். முக்கிய அட்டவணைகள் எல்லாம் இணைக்கப்பட்டு அழகான வடிவத்தில் வெளிவந்தது அந்த நூல். அநேகமாக என் நூல்களிலேயே மிக அதிகமாக விற்பனையானதும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.   sachar-kuzhu-1-550x600

ஒரு பொது நிலை அறிவுஜீவி (public Intellectual) என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் ரஜீந்தர் சச்சார். ஒரு தேர்ந்த சட்ட வல்லுநர், வல்லுநர்களாக இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழும் அநீதிகளை விளக்கிக் கண்டித்து மக்கள் மத்தியில் கருத்துருவாக்கும் மனத் திராணியும் சமூக அக்கறையும் கொண்டவர். அந்த வகையில் ஒரு சிறிய கல்வி வட்டத்திற்குள் (academic community) மட்டும்சுருங்காமல் பொது வெளியிலும் தாக்கம் விளைவித்தவர் அவர். அவருக்கு நம் அஞ்சலிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *