வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் பிரச்சினை : தொடரும் விவாதம்…

வெளிநாட்டில்  படித்துவிட்டு வரும் மருத்துவ மாணவர்களுக்கு இங்கு தொழில் செய்ய அனுமதி அளிப்பதற்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் அம்மாணவர்களில் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் தோல்வி அடைவது குறித்த என் பதிவின் மீது பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சதி எனும் தொனியில் கோபமான எதிர்வினைகள் இவற்றில் அதிகம் காணப்பட்டன. மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தங்களிடமே வரவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது என்பது அவர்களின் கருத்து.

இதைக் கொஞ்சம் அகன்ற நோக்கிலிருந்து விருப்பு வெறுப்பற்ற தன்மையுடன் நாம் பரிசீலித்தல் அவசியம். கல்வியைப் பொருத்தமட்டில் அதை ஒரு மக்கள் நலச் சேவையாகக் கருதி தரமான கல்வியை அரசே கொடுக்க வேண்டும் என்கிற கொள்கை நோக்கிலிருந்து மட்டும் இன்றைய பிரச்சினையைப் பார்த்துவிட இயலாது, நடைமுறை எதார்த்தங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அப்படி இல்லாமல் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு உயர்கல்வியை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றித் திறந்துவிட்டால் இப்படித்தான் ஆகும் என்கிற நோக்கிலிருந்து இதைப் பார்த்துவிட இயலாது என்பது உண்மைதான்

ஆனால் அது இங்கே ஒரு விவாதத்திற்குரிய பொருளே இல்லை என்கிற நோக்கிலிருந்து வைக்கப்படும் கருத்துக்கள் இன்னும் ஆபத்தானவை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

அந்த வகையில் இந்த விவாதத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாக இவற்றை முன்வைக்கிறேன்:

1.மருத்துவம் என்பது ஒரு உயிர்காக்கும் சேவை. மருத்துவர்கள் தகுதிபெற்றவர்களாக இருப்பது அவசியம்.

2.நோய்கள் மற்றும் சிகிச்சை என்பனவற்றில் பொதுமையான அம்சங்கள் உண்டு என்பது போலவே அந்தந்த நாடுகளின் புவியியல் சூழல், சமூக நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள், பொருளாதார நிலை முதலான அம்சங்களின் அடிப்படையில் தனித்துவங்களும் உண்டு.

இந்த அடிப்படைகளில் எந்த ஒரு நாடும் தான் ஒரு தகுதி மதிப்பீட்டை வைத்தே வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொழில் அனுமதி அளிக்க முடியும் எனச் சொல்வதை யாரும் மறுக்க இயலாது. இதை யாராவது மறுத்தால் அது GATS regime ஆகத்தான் இருக்கும். அது விரைவில் நடக்கத்தான் போகிறது.

3.ஆனால் இந்த அடிப்படையில் இப்போது நடத்தப்படும் FMGE தேர்வு மிகக் கடினமான ஒரு போட்டித் தேர்வுபோல நடத்தப்படுவது, பன்னாட்டளவில் செயல்படும் தனியார் நிறுவனங்களிடம் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்திருப்பது முதலியன சில நியாயமான ஐயங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன. இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் தம் தொழில் பாதிக்கப்படும் எனும் நோக்கில் இந்தத் தேர்வுகளை மிகக் கடினமாக நடத்தி வெளிநாட்டில் படித்த மாணவர்களைத் தகுதியற்றவர்களாகக் காட்டுகின்றன எனும் ஐயம் பரவலாக உள்ளது. தவிரவும் இந்தத் தேர்வுகளில் பல ஊழல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏற்கனவே ஏராளமாகச் செலவு செய்து வெளிநாடுகளில் பயின்று வந்துள்ள மாணவர்கள் இங்கு வந்தபின் மீண்டும் நிறையச் செலவு செய்து இங்கு நடத்தப்படும் coaching வகுப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டி உள்ளது. அப்படியெல்லாம் செய்தும் 80 சத மாணவர்கள் தோல்வி அடைவது கொடுமையாக உள்ளது. இதற்கிடையில் ஏராளமான பணச் செலவு மட்டுமின்றி வயதும் ஆகிவிடுகிறது. தவிரவும் இந்திய மருத்துவக் கழகம் அங்கீகரித்துள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள்தான் இம்மாணவர்கள்.

இந்நிலையில் என்னதான் தீர்வு?

கவனத்தில் கொள்ள வேண்டிய மேலும் சில அம்சங்கள்:

4 இங்கிருந்து வெளிநாட்டுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் இங்கு ‘மெரிட்’ அடிப்படையில் இடம் கிடைக்காதவர்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. அதேபோல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவும் அப்படி ஒன்றும் தரமானவையும் அல்ல. அவை விளம்பரங்களில் காட்டும் வசதிகள், அறிவிக்கும் செலவுத் தொகை முதலியன நடைமுறையில் இருப்பதில்லை. இந்தப் பல்கலைக் கழகங்கள்  பலவும் இங்கு நடைபெறும் FMGE தேர்வுக்கான பயிற்சிகளை பாடங்களோடு சேர்த்து அளித்தும்தான் இம்மாணவர்களால் அத் தேர்வுகளில் வெற்றி பெற இயலவில்லை.

5.இங்குள்ள deemed universities களிலும்தான் தரமான பயிற்றுவிப்பு இல்லை.. அங்கும் பிற கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் அதிகப் பணம் கொடுத்துச் சேருகின்றனர் (அந்த வகையில் ‘நீட்’ தேர்வுகள் ஓரளவு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைகின்றன எனலாம்). தரமான ஆசிரியர்களும் போதிய அளவில் இல்லை. புகழ்பெற்ற சீனியர் டாக்டர்கள் பலர் ஒரே நேரத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் பட்டியலில் இருப்பதெல்லாம் இப்படித்தான். ஆய்வுக்குழு வரும்போது ஒரு நாள் மட்டும் அங்கு ஆசிரியராக ‘நடித்து’ பெருந்தொகையை அவர்கள் கூலியாகப் பெறுகின்றனர். அப்படித் தன்னிடம் ஒருவர் ‘ஒருநாள் பேராசிரியராக’ இருக்கப் பேரம் பேசியதையும் தான் அவரைத் திட்டி அனுப்பியதையும் குறிப்பிட்டார் பேரா. சிவகுமார்.

நிலைமை இப்படி உள்ள போது வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?

ஆக பிரச்சினை வழக்கம் போல மேலும் சிக்கலாகிறது.

இதுகுறித்து அதிகம் சிந்திக்கிற சில நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் சொன்ன சில தீர்வுகள்:

  1. வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களின் திறன் மதிப்பீடு தவிர்க்க இயலாத ஒன்று. இதற்கான தேர்வுகள் மேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும். தேர்வு நடத்தும் பொறுப்பைத் தனியார்களிடம் ஒப்புவிக்கக் கூடாது. FMGE தேர்வில் வெற்றி பெற்ற பின்னும் அவர்கள் ஓராண்டு intern பயிற்சி பெற வேண்டியுள்ளது. பதிலாக MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்குக் கட்டாயமாக intern பயிற்சி அளித்து இறுதியில் ஒரு தேர்வு வைத்து அவர்களுக்குத் தகுதிச் சான்றிதழ் அளிக்கலாம்.
  2. வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள் தவிர capitation fee கொடுத்துப் படித்துவரும் deemed university மாணவர்களுக்கும் இந்தத் தேர்வைக் கட்டாயமாக்கலாம்.
  3. எல்லாவற்றைக் காட்டிலும் இதற்குச் சரியான தீர்வு ஒவ்வொரு ‘தாலுகா’ அளவிலும் தரமான மருத்துவ மனைகளையும் கல்லூரிகளையும் அமைத்து அரசே அதிக அளவில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிப்பதுதான். ஆனால் இன்றைய ‘வணிகச் சேவை’ உலகில் இது சாத்தியமா?

விருப்பு வெறுப்பின்Ri, சொந்த அனுபவ நோக்கிலிருந்து பிரச்சினையைப் பார்க்காமல் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலையும் கணக்கில் கொண்டு நண்பர்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

நாம் இவற்றைத் தொகுத்து முன்வைப்போம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *