ராம்குமாரின் ‘தற்கொலையும்’ தலித் இயக்கங்களும்

ராம்குமாரின் கதை முடிந்துவிட்டது. இல்லை முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஆகப் போகிறது எனப் பலரும் ஐயங்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோதே இது நடந்துள்ளது. நாம் முன் வைக்கும் ஐயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் போகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்படும் அநீதிகளை மனம் கொண்டு இந்த ஐயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிப்பதும் விளக்கங்கள் சொல்வதும் அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கடமை ஆகிறது.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? எந்த ஐயங்களுக்கும் முறையான பதில் இல்லை, ஆனால் அதே நேரத்தில் ஐயங்களை முன்வத்தவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எனும்போதுதான் நமக்குக் கவலையாக உள்ளது.

சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். கொலையாளி எனச் சித்திரிக்கப்பட்ட ஒரு இளைஞர் முதுகுப் பையுடன் நடந்து செல்வதாக வெளியிடப்பட்ட படங்கள் இரண்டிலும் உள்ள வேறுபாடுகளைச் சிலர் சுட்டிக்காட்டினர்.

சுவாதியை யாரோ ஒருவர் அல்லது சிலர் முன்னதாகத் தொடர்ந்து வந்தனர் என்பதும் ஒருமுறை ரயில் நிலையத்தில் வைத்து அவரை யாரோ தாக்கினர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் வெட்டிக் கோலை செய்யப்பட்ட முறையிலும் ஐயங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரே நபர் அதைச்செய்திருக்க இயலாது என்கிற ஐயமும் இருந்தது. ராம்குமாரைக் கைது செய்யச் சென்றபோது அவர் தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு சாக முயற்சித்தார் என்கிற கூற்றையும் அவரது பெற்றோர்கள் மறுத்தனர்.

இந்த ஐயங்கள் எல்லாம் உண்மையானவை என நான் சொல்லவில்லை. அவை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் ஐயங்களைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியது புலனாய்வு முகமைகளின் கடமை. இப்படியான சந்தேகங்களை உங்களால் நிறுவமுடியுமா எனக் காவல்துறை நம்மிடம் கேட்பதில் பொருளில்லை. என்னுடைய வீட்டில் ஒரு கொலை நடந்தால் சில சந்தேகங்களைத்தான் என்னால் முன்வைக்க முடியும். அதை நிறுவும் வாய்ப்புகள், கருவிகள் எல்லாம் என்னிடம் இருக்கும் என்பதில்லை. காவல்துறைதான் என்னையும் விசாரித்து நான் குற்றம் சாட்டுபவர்களையும் விசாரித்து உண்மையை அறிய வேண்டும். அந்தப் பொறுப்பு investigating agency க்குத்தான் உண்டு.

ஆனால் என்ன நடந்தது? இப்படி முன்வைக்கப்பட்ட ஐயங்கள் பொருட்படுத்தப்படவே இல்லை. மாறாக ஐயங்களை முன்வைத்தவர்களே தண்டிக்கப்பட்டனர்.

பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும் முயற்சியில் இருந்தனர். ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் முதலானோரின் கருத்துகள் சர்ச்சையாகின. அந்தத் திசையில் காவல்துறை விசாரித்தது. சுவாதியின் காதலர் எனச் சொல்லப்படும் ஒரு முஸ்லிம் இளைஞர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவர் அப்படி விசாரிக்கப்பட்டது முற்றிலும் சரியான நடவடிக்கை. விசாரித்து அந்த இளைஞருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பில்லை என காவல்துறை உறுதி செய்தது.

ஆனால் இப்படி இதை ஒரு இந்து முஸ்லிம் பிரச்சினை ஆக்குவோர் மீது முன்வைக்கப்பட்ட ஐயங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை. மாறாக அப்படி ஒரு ஐயத்தை முன்வைத்த திலீபன் எனும் இளைஞர் காவல்துறையால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்து முஸ்லிம் பிரச்சினையாக இதை முன்வைத்து அரசியல் லாபம் பெறுவதற்காக ஒரு சிலர் திட்டமிட்டு தென்காசியைச் சேர்ந்த கூலிப்படை ஒன்றை வைத்து சுவாதியைக் கொலை செய்ததாகவும், இந்தக் கொலையாளிகளுக்கு ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் பாதுகாப்புக் கொடுப்பதால் தமிழக போலீஸ் அவர்களைக் கைது செய்யாமல் அந்தக் கொலையாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட அப்பாவியான ராம்குமாரைப் பலிகடா ஆக்குவதாகவும் திலீபன் என்பவராலும் ஃப்ரான்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவராலும் ஒரு ஐயம் சமூக ஊடகங்களில் வலுவாக முன்வைக்கப்பட்டது.

இதில் தொடர்புடையவர்கள் என ஒரு சிலரையும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் என பா.ஜக வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தத்தையும் பெயர் குறிப்பிட்டு இவர்கள் எழுதினர். தான் எந்த விசாரணைக்கும் தயார் என அந்தத் தமிழச்சி என்பவர் எழுதியது இன்னும் வலைத்தளங்களில் இருக்கிறது. பெயர் குறிப்பிடப்பட்ட குற்றசாட்டு இது. இது தவறாகவும் இருக்கலாம். சரியானதாகவும் இருக்கலாம். உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறைக்கு அக்கறை இருக்குமானால் அது என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் இந்த திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோரை விசாரித்து அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஒருவேளை குற்றம் சாட்டும் இவர்கள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்றால் இவர்கள் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? அந்தக் கருப்பு முருகானந்தம் என்பவர் இதுவரை பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர். முத்துப்பேட்டையில் நடந்த ஒரு மதக் கலவரம் தொடர்பான எங்களின் ஆய்வறிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் மீது 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தோம். அவர் இப்போது திருவாரூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த ஐயங்களை முன்வைத்த திலீபனைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். எப்படியாவது ராம்குமாரை வைத்தே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என நினைத்துக் காவல்துறை செயல்பட்டது.

இப்போது ராம்குமார் இப்படி மரணம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது, அவர் வெளியில் வந்து உண்மைகளைப் பேசினால் ஆபத்து எனக் கருதி அவர் கொல்லப்பட்டார் என ஐயம் உருவாவது தவிர்க்க இயலாதது.
ஒரு சாதாரண ‘சில்க் ஒயரை’ பல்லால் கடித்து உள்ளே உள்ள கம்பியை வெளியே எடுக்கவே நமக்குச் சில நிமிடங்கள் ஆகிறது. தற்கொலை மனநிலையுடன் இருந்த ஒரு இளம் கைதி ஓடிச் சென்று ஒரு வலிமையான ‘லைவ்’ ஒயரைப் பல்லால் கடித்துத் தற்கொலை செய்யும் வரை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பதெல்லாம் நம்பத் தகுந்ததாக இல்லை.

2001 முதல் 2011 வரை இங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) கவனத்துக்கு வந்த சம்பவங்களில் மட்டும் இந்தியச் சிறைகளில் கிட்டத்தட்ட 13,000 பேர் இறந்துள்ளனர். புழல் சிறையில் இப்படித் தொடர்ந்து மரணங்கள் நடக்கின்றன. இவை வெறும் காவல் மரணங்கள் இல்லை, இவை நீதித்துறைக் காவலில் நடக்கும் மரணங்கள்.

இவற்றிற்கு நீதித்துறை பொறுப்பேற்க வேண்டும். இந்த மரணம் இன்று சிறைக்குள் நடந்தது என்றாலும் இதில் சிறைத்துறை, இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, தன்னுடைய காவலில் இருக்கும் ஒருவருக்கு நேர்ந்த சந்தேகத்துக்குரிய மரணம் பற்றிப் பொறுப்பேற்காத நீதித்துறை எல்லோரும் பொறுப்பாகிறார்கள்.

இம்மாதிரிக் கொலைகள் மேலிருந்து திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ராஜாராம், கண்ணன் என்கிற இரண்டு பேர் தமிழ் தேசியத் தீவிரவாதிகள் என அப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருந்த சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டைருந்தனர். அவர்களைக் கொல்லப்போவதாக காவல்துறை வெளிப்படையாக மிரட்டியது. இது குறித்து அவர்கள் புகாரும் செய்திருந்தனர்.

ஒரு நாள் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வழக்கமாக வரும் அண்ணாசாலை வழியாக வராமல் கோட்டூர்புறம் வழியாகக் கொண்டுவந்து ட்ராஃபிக்கை நிறுத்திவிட்டு அவர்களைச் சாலையில் இறக்கிச் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களின் உடல்களை வாங்கிக் கொள்ள மறுத்துப் பல மாதங்கள் அவை பிணக் கிடங்கில் அழுகிக் கிடந்தன. நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆக இப்படியான கொலைகள் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை எல்லாம் சேர்ந்து அரசியல் ஆதரவுடன் நடத்தப்படுபவைதான். அப்படியான ஒன்றுதான் ராம்குமாரின் இந்த மரணமும். இது திட்டமிட்ட கொலை என ஐயம் கொள்வதற்கான எல்லா நியாயங்களும் உண்டு.

இதுவரை இப்படி மேலிட ஒப்புதலுடன் காவல்துறை செய்த தவறுகள் தண்டிக்கப்பட்டதில்லை. என்ன செய்தாலும் காவல்துறையினர் தண்டிக்கப்படக் கூடாது என்றே அரசு செயல்படுகிறது. அதுவும் இன்றைய ஆட்சி காவல்துறையைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது. சென்ற ஆண்டு கான்சாபுரம் கிட்டப்பா என்பவரைப் பிடித்துச் சென்று திருநெல்வேலி போலிஸ் கொன்றது. நாங்கள் அதை வெளிப்படுத்தி அறிக்கை அளித்தோம். பின்னர் NHRC அதில் தலையிட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக நாங்கள் உண்மை அறியச் சென்றபோது அந்த வழக்கை ஊற்றி மூடி மீண்டும் அவர்களைப் பணியமர்த்தும் வேலை நடந்து கொண்டிருப்பதை அறிந்தோம்.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில் ராம்குமார் தரப்பில் விட்ட ஒரு பிழை விமர்சனத்துக்குரிய ஒன்றுதான். இந்தப் புகார்களை முறையாகச் செய்யவில்லை என்பதுதான் அது. முகநூலில் எழுதினேன் என்பது திலீபனின் பதில். நாங்கள் கொடுத்ததை அவர்கள் ஏற்கவில்லை எனவும், திலீபன் போன்றவர்கள் அதைப் புகாராகச் செய்திருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் ராம்குமாரின் வழக்குரைஞர் ராமராஜ் சொல்கிறார்.

புகாரை ஏற்க மறுத்தால் பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கலாம்; மின்னஞ்சலில் அனுப்பி இருக்கலாம். உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்திருக்கலாம். நீதிமன்றத்தையும் அணுகி இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் உடனடிப் பலன் உள்ளதோ இல்லையோ இது போன்ற பதிவுகள் முக்கியம். அது நமக்குப் பின்னால் உதவும். புகார் கொடுத்திருந்தால் கொடுப்பவருக்கு ஆபத்து எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உள்ளோமோ அந்த அளவிற்கே நமக்குப் பாதுகாப்பு. முறையாகப் புகார் கொடுக்காதபோதும் இன்று திலீபன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படியோ ராம்குமாரின் கதை முடிக்கப்பட்டுவிட்டது. ராம்குமாரின் கதை மட்டுமல்ல சுவாதி கொலை தொடர்பான இதர உண்மைகளும் இத்தோடு சமாதியாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டார் எனச் சொல்லி சுவாதி கொலை வழக்கை முடிக்க விடக் கூடாது. சுவாதி கொலையில் வேறு சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற நியாயமான ஐயங்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்று அந்த விசாரணை சி.பிஐ இடம் ஒப்புவித்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும். சிறையில் ராம்குமார் “தற்கொலை” செய்துகொண்டார் என்பது ஐயத்துக்குரிய ஒன்றாக இருப்பதால் பணியில் உள்ள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு அவரது மரணம் விசாரிக்கப்பட வேண்டும்.

ஒரு கவலைக்குரிய பின்குறிப்பு

ராம்குமார் பிரச்சினையில் தலித் இயக்கங்கள் தம் உட்சாதி வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஒற்றுமையாக நீதி வேண்டிக் குரல் கொடுத்தது பாராட்டுக்குரியது. தருமபுரி இளவரசன் மரணத்தின்போதும் இந்த ஒற்றுமை வெளிப்பட்டது. இது தொடர வேண்டும்.

எனினும் தலித் எழுச்சியில் கூட நின்று தொடர்ந்து என்னால் இயன்றதைச் செய்துவருபவன் என்கிற வகையில் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற sensational பிரச்சினைகளில் காட்டப்படும் கவனமும் ஒற்றுமையும் தலித் விடுதலையை தொலை நோக்கில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடிய இதர முக்கிய பிரசினைகளில் வெளிப்படாதது மிகவும் கவலைக்குரிய ஒன்று. இரண்டை மட்டும் இங்கே மேலோட்டமாகத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். விரிவாகப் பின்னர் எழுதுவேன்.

1. மோடி அரசு பதவி ஏற்ற பின் இந்துத்துவச் சகிப்பின்மை எல்லை மீறியுள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும்தான். தலித்களின் மீதான வன்கொடுமைகள் இன்று அதிகரித்துள்ளன.

“அம்பேத்கரைப் புகழ்ந்தால் மட்டும் போதாது. அம்பேத்கரின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வேண்டும்” – இப்படிச் சொல்லியிருப்பது உ.பியில் உள்ள மிக முக்கியமான தலித் அமைப்பான ‘அம்பேத்கர் மகாசபா’ வின் தலைவர் டாக்டர் லால்ஜி நிர்மல்.
“தலித்கள் மீதான தாக்குதல்கள் அளவே இல்லாமல்போ ய்க்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினக்கான தீர்வு குறித்து உடனடித் தீர்வு இன்று தேவை. முதலமைச்சர்களின் மாநாடொன்றைக் கூட்டி இது குறித்து அழுத்தமான செய்தி ஒன்றை நரேந்திர மோடி சொல்வார் என நினைத்தோம். ஆனால் நாடாளுமன்றத்திலோ இல்லை அவரது மன்கி பாத் உரையிலோ அவர் இதைச் செய்யவில்லை.” – எனவும் அவர் சாடியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் தலித்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதைக் கண்டித்து அம்பேத்கர் மகாசபா சென்ற ஆகஸ்ட் 27 அன்று லக்னோவில் மாநாடொன்றை நடத்தியது.

இந்த மாநாட்டின் முக்கிய அழைப்பாளர் குஜராத்தில் “அமகதாபாத் – உன்னா மாபெரும் தலித் யாத்திரை” யை நடத்திய தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் உன்னா எனும் இடத்தில் மாட்டுத் தோலை உரித்தார்கள் என நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த அந்தப் பல்லாயிரம் பேர் பங்கேற்ற யாத்திரை உலகின் கவனத்தை ஈர்த்தது. குஜராத முதல்வர் பதவி விலகினார்.

இதை ஒட்டி தேசம் தழுவிய தலித் பேரியக்கம் ஒன்றை இன்று மேவானி, நிர்மல் போன்றோர் திட்டமிடுகின்றனர்.

லக்னோ மாநாட்டின்போது பேட்டியளித்த மேவானி, “மோடியின் ‘குஜராத் மாடல்’ வளர்ச்சியை நான் இங்கு தோலுரிப்பேன். தலித் சமூகத்தின் மத்தியில் பிரக்ஞை உருவாக்குவேன். தாத்ரியில் முகமது அக்லக் கொல்லப்பட்டதும் உனாவில் மாட்டுத்தோலை உரித்த தலித்கள் தாக்கப்பட்டதும் கருத்தியல் மட்டத்தில் ஒன்றுதான். ஒரு அகன்ற நோக்கில் ‘தலித் – முஸ்லிம்’ ஒற்றுமையை உருவாக்குவதற்கு வாய்ப்பாக இந்த இயக்கம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்..” என முழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அகமதாபாத் – ஊனா பேரணிக்கு ஆதரவாக நாடெங்கும் தலித் அமைப்புகள் பேரணிகளை நடத்தின. தமிழகத்தைத் தவிர.

தமிழகத்தில் தலித் அமைப்புகள் மத்தியில் ஏன் இது பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை?

இங்கே ரவிகுமார் போன்ற தலித் தலைவர்கள் அதே நேரத்தில் மோடியை ஆதரித்துப் பேசியதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மோடி தலித் வாக்குகளை மனதில் கொண்டு பேசியதை மேற்கோள்காட்டி ரவிகுமார் மோடி புகழ்பாடினார். அகமதாபாத் – ஊனா யாத்திரை இந்திய அளவில் எழுச்சியை ஏற்படுத்திக் மொண்டிருந்தபோது இங்கு இப்படி மோடி புகழ் பாடப்பட்டது.

ராம் விலாஸ் பாஸ்வான் அல்லது ராம்தாஸ் அதாவலே போல பாஜக புகழ்பாடி வேண்டுமானால் ஓரிரு தலித தலைவர்கள் அமைச்சராகலாம். ஆனால் அதன் மூலம் பலியாவது தலித் மக்களின் நலன்களாகத்தான் இருக்கும், என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. சில மாதங்களுக்கு முன் இந்தத் தொடரில் குஜராத்தில் படேல்களின் போராட்டம் குறித்து எழுதியிருந்தேன். புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக வேலை வாய்ப்புகள் அருகுவது, உயர்கல்வி அதிகச் செலவுடையதாக ஆவது ஆகியவற்றின் பின்னணியில் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மூலதனமாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் தமக்கும் தலித்கள் போல இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடத்தொடங்கியுள்ளனர். இது விரைவில் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கப்போகிறது என அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

அது இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினரான மராத்தாக்கள் இட ஒதுக்கீடு கோரிப் பேரணிகளை நடத்துகின்றனர். ராஜஸ்தானில் குஜ்ஜார்கள், உ.பியில் ஜாட்கள் என இப்படியான கோரிக்கைகளும் இயக்கங்களும் பெருகி வருகின்றன.

இவர்கள் ஆதிக்க சாதியினராக இருந்த போதும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கின்றனர். குஜராத் அரசு அவர்களுக்குப் பணிந்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடும் அறிவித்துள்ளது. சாதி மற்றும் தீண்டாமை அடிப்படைகளில் ஒதுக்கீடு அளிப்பது என்பதற்கு அவர்கள் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி உள்ளனர் என்பது மட்டுமே காரணமல்ல. அதற்கும் அப்பால் அவர்கள் சாதி, வருண அடிப்படைகளில் ஒதுக்கப்பட்டு பலவீனமானவர்களாக (vulnerable) உள்ளனர் என்பதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.

அரசின் இன்றைய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் கூட தங்களின் சாதி ஆதிக்க நோக்கில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பயன்படுத்திக் கொள்வது மட்டுமின்றி கூடவே அவர்கள் தலித்களைப் பாதுகாக்கும் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை’ யும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைப்பது கவனிக்கத்தக்கது. மராத்தாக்கள் நடத்தும் இன்றைய இந்த ‘மராத்தா கிரந்தி மோர்ச்சா’ க்களில் இதுவும் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் பா.ம.க ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலித் மக்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் இவை.

தமிழக தலித் இயக்கங்கள் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

“மதம் மக்களின் அபின்” – கார்ல் மார்க்ஸ் மேற்கோளின் முழு வடிவமும் ஒரு சிறு குறிப்பும்

முதலில் கார்ல் மார்க்சின் அந்த முழு மேற்கோள் வடிவம் : (பேரா.கா. சிவத்தம்பியின் மொழியாக்கம். நானும் பெ. மணியரசனும் எழுதிய ‘பாரதி ஒரு சமூகவியல் பார்வை’ எனும் நூலுக்குப் பேராசிரியர் எழுதிய முன்னுரையில் இது உள்ளது.)

“மதம் என்பது தன்னைத்தானே அறிந்துகொள்ளாத, அன்றேல் தன்னை மீண்டும் இழந்துவிட்ட மனிதனின் சுயப் பிரக்ஞையும் சுய உணர்வும் ஆகும். ஆனால் மனிதன் என்போன் இந்த உலகத்திற்கு அப்பாலே குந்தியிருக்கும் ஒரு கருத்துப் பொருளன்று. மனிதன் என்பது மனிதனின் உலகம், அரசு, சமூகம். சமூகம்தான் மனிதன். இந்த அரசு, இந்த சமூகம் மதத்தை உன்டாக்குகிறது. மதம் என்பது மறுதலையான (தலைகீழான) உலகப் பிரக்ஞை ஆகும். ஏனெனில் மதத்தில் தலைகீழான ஒரு உலகமே காணபடுகிறது. மதம் என்பது அந்த உலகின் பொதுக் கொள்கை (திருஷ்டாந்தம்) ஆகும்; அதன் பல்களஞ்சியச் சுருக்கம் ஆகும். அதன் தீர்க்கத்தின் சனரஞ்சக உரு ஆகும்; அதன் உற்சாக நிலை ஆகும். அதன் அற அங்கீகாரமாகும். அது பற்றிய தோற்றத்துக்கும் நியாயப்பாட்டுக்குமான ஊற்றுக் கண்ணாகும்.அது மாநிட சாரத்தின் அதி கற்பனாபூர்வ நிலைப்பட்ட தெரிநிலையாகும். ஏனெனில் உண்மையில் மானுடசாரம் என்பதற்கு எதிரான போராட்டம் என்பது உண்மையான இருப்பு நிலையில்லை. மதத்திற்கு எதீரான போராட்டம் என்பது, மறைமுகமாக மதம் எனும் (ஆத்ம) உயிர்ப்புச் சுகந்தத்தைக் கொண்ட உலகத்துக்கெதிரான போராட்டமேயாகும்.

மத அவலம் (அதாவது மதத்தினில் இடம் பெறும் ஆத்ம அவலம்) என்பது ஒரேவேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான அவலத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் அமைகின்றது. மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக இருப்பதுபோல், ஒடுக்கப்பட்ட மனிதனின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது. அது வெகுசனத்தின் அபின்.

மாயையான இன்பத்தினைத் தரும் மதத்தினை அழிப்பதென்பது மக்களுக்கு உண்மையான இன்பத்தைத் தரல் வேண்டுமெனக் கோருவதாகும். நடைமுறை நிலைமைகள் பற்றிய மாயையிலிருந்து விடுபட வேண்டுமென்ற கோரிக்கை, மாயைகள் தேவைப்படுகின்ற நடைமுறை நிலைமை ஒன்றினைக் கைவிடுவதற்கான கோரிக்கை ஆகும்”

கார்ல் மார்க்ஸ் ஜெர்மன் மொழியில் எழுதிய வாசகங்களின் ஆங்கில வடிவத்தையும் படித்துவிடுதல் நலம். அது கீழே:

“Religion is, indeed, the self-consciousness and self-esteem of man who has either not yet won through to himself, or has already lost himself again. But man is no abstract being squatting outside the world. Man is the world of man – state, society. This state and this society produce religion, which is an inverted consciousness of the world, because they are an inverted world. Religion is the general theory of this world, its encyclopaedic compendium, its logic in popular form, its spiritual point d’honneur, its enthusiasm, its moral sanction, its solemn complement, and its universal basis of consolation and justification. It is the fantastic realization of the human essence since the human essence has not acquired any true reality. The struggle against religion is, therefore, indirectly the struggle against that world whose spiritual aroma is religion.

Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.

The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions. The criticism of religion is, therefore, in embryo, the criticism of that vale of tears of which religion is the halo.”

இப்போது இது குறித்த பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தைக் காண்போம்:

“மதம் மக்களின் அபின் என்று சொல்லப்பட்ட கூற்றின் பின்னணி இதுதான். உண்மையான அவலத்திலிருந்து அவனை விடுவிக்கும் “உண்மையான கவலைபோக்கி”யின் உருவமாகவே அபின் குறிக்கப்பட்டுள்ளது. போதையைப் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகக் கருதும் எமது பண்பாட்டில், அது முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்தினை (‘வேறுபட்ட’ என்பதிலும் பார்க்க ‘திரிபுபட்ட’ என்று சொல்வதே பொருத்தம்) கொடுத்துள்ளது. மதம் பற்றிய மிக்க அனுதாபமுள்ள கண்ணோட்டமிது என்பதிற் கருத்து வேறுபாடு இருக்க இயலாது.”

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மதங்களை, குறிப்பாகப் பக்தி இயக்கத்தைச் சற்றே அனுதாபமாகக் காணக் கூடியவர். முழுமையாக அவர் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நாமும் பேராசான் கார்ல்மார்க்சின் வாசகங்களை ஊன்றி ஊன்றிப் படிப்போம். ஆங்கில வாசகங்களும் உள. அவற்றை வாசிப்பது இன்னும் நலம்.

மார்க்சின் வாசகங்கள் சிக்கலாக இருப்பதற்குக் காரணம், அவருக்கு எளிமையாய் சொல்லத் தெரியாது என்பதல்ல. பிரச்சினை மிக மிகச் சிக்கலானது என்பதுதான். சிக்கலான பிரச்சினைகளையும் மிகை எளிமைப் படுத்திப் படுத்திப் (over simplify) புரிந்து கொண்டே பழக்கப்பட்டுவிட்ட நமக்கு இது கஷ்டந்தான். ஆனால் சிக்கலானவற்றை மிகை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளும்போது அதற்குப் பெயர் புரிந்து கொள்வதல்ல. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது (அல்லது சொரிந்து கொள்வது என்றும் சொல்லலாம்).

மார்க்ஸ் இதை 1844ம் ஆண்டில் எழுதுகிறார். ( Marx, K. 1976. Introduction to A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right.Collected Works, v. 3. New York.). ஹெகலியத் தாக்கம் மிகுந்திருந்ததாகச் சொல்லப்படும் ‘இளம் மார்க்சின்’ வாசகங்கள் இவை. அந்நியமாதல் குறித்து அவர் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. தான் உற்பத்தி செய்த பொருள்களிலிருந்தே அந்நியப்படுகிற மனிதன் அதன் ஊடாக அனைத்திலிருந்தும் அந்நியப்பட்டுவிடுகிறான்.

“Religion is the opiate of the masses”. Opium –அபின் ஒரு வலி நீக்கியாக மருத்துவத்தில் பயன்படுவதுண்டு. ஆனால் அந்த வலி நீக்கம் தற்காலிகமானதுதான். நிரந்தரமாக வலியிலிருந்து விடுபடுவதற்கு நாம் வேறு சிகிச்சைதான செய்தாக வேண்டும். வலியை ஏற்படுத்துகிற நோய் நீங்கும்போது அவனுக்கு அந்த வலி நீக்கி தேவைப்படாது. ஆனால் நோயுள்ளபோது அவனுக்கு இந்த வலி நீக்கி தேவைப்படும் நிலையை நாம் வெகு அனுதாபத்துடன் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தான் இழந்துபோன, தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட இவ்வுலகையும், அதற்கான காரணங்களையும் தலைகீழாகப் புரிந்து கொள்ளவைத்து அதன் மூலம் அவனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மதம் அளிக்கிறது.

மதத்தின் இந்தப் பங்கைப் புரிந்து கொள்வதென்பதுதான் மதத்திற்கெதிரான போராட்டத்தின் முதற்படி. தந்தை பெரியார் போன்ற ஒருவர், ஒரு வாழ்நாளை மத நம்பிக்கைகளுக்கு எதிராக அர்ப்பணித்த இந்த மண்ணில் அவ்வளவு எளிதாக இந்த நம்பிக்கைகளை வீழ்த்திவிட முடிய வில்லையே என்கிற கேள்விக்கான பதிலை நாம் இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

மத நம்பிக்கைகளிலிருந்தும் அது மனிதர்க்கு அளிக்கும் ஆறுதல்களிலிருந்தும் விடுதலை பெறுவதென்பது, மத நம்பிக்கைகள் தேவைப்படுகிற சூழலிலிருந்து அவர் விடுதலை பெறுவதில் அடங்கியுள்ளது.

ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. அப்படியான ஒரு விடுதலையை நோக்கி நகர்வதற்கு இந்த நம்பிக்கைகள் தடையாக உள்ளனவே. இவற்றிலிருந்து விடுபட்டால்தானே ஒருவர் உண்மையான விடுதலையை நோக்கி நகர முடியும்?

பிரச்சினையை அதன் முழுமையோடு புரிந்து கொள்ளாவிட்டால் பின் இப்படி கோழி முந்தியா, முட்டை முந்தியா என்கிற விடை தெரியாத கேள்விக்குள் அமிழ்வது தவிர்க்க இயலாது.

கட்டுரை முடியாததுபோல உங்களுக்குத் தோன்றலாம். முதலில் இது கட்டுரையே அல்ல என்பதை நினைவுபடுத்தி விடுகிறேன். முடிவைச் சொன்னால்தான் அது கட்டுரை என்பதுமில்லை. என்னைப் பொருத்தமட்டில் வாசிப்பவர்களிடம் ஏதேனும் கேள்விகள் எழுந்தால் நான் வெற்றி பெற்றதாகக் கருதிக் கொள்வேன்.

“மதம் மக்களின் அபின்” என்கிற மார்க்சின் செறிவு மிக்க அற்புத வரியை நாம் எவ்வளவு சுருக்கிப் புரிந்து கொள்கிறோம் என்பது குறித்த ஒரு எளிய உசாவல்தான் இது.