காந்தியடிகளும் மதசார்பின்மையும்

(மதவெறிக்குப் பலியான மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் பிலிப், டிமோதி என்கிற அவரது இரு குழந்தைகளின் நினைவாக நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் ஆற்றிய உரை)

இங்கே ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும், அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் நன்றி.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கு இந்த நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படும் யாரும் அவரவர் விருப்பப்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எந்த ஒரு மதத்தையும் கடைபிடிப்பதற்கும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்கிற நிலை இருந்தபோதும், மதத்தைப் பரப்புகிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி, ஒடிஷா மாநிலத்தில் அடித்தள மக்கள் மத்தியில் தொழுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த தியாக மனப்பான்மை உடைய ஒரு மருத்துவரும், அவரது சிறு குழந்தைகள் இருவரும் எரித்துக் கொல்லப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு களங்கம். தாங்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை, மருத்துவ சேவைதான் ஆற்றி வந்தோம் என, கொல்லபட்ட மருத்துவர் ஸ்டெய்ன்சின் மனைவி கிளாடிஸ் அவர்கள் கூறியபோதும், இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இந்தக் கொலைகளுக்கு மதமாற்றமும் ஒரு காரணமாக இருந்தது என்கிற மதவெறிப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டது வேதனைக்குரியது.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்துள்ள நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மதச் சார்பர்ற ஜனநாயகக் குடியரசாக நமது நாடு ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு நமது அரசியல் சட்டம் அடிப்படையாக உள்ளது. நமது அரசியல் சட்டத்தின் 25,26,27 வது பிரிவுகள் இந்த நாட்டின் குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக்கியுள்ளது.

பல்வேறுபட்ட மதத்தினரும் வாழ்கிற ஒரு நாடு என்கிற வகையில் இத்தகைய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியதில் மகாத்மா காந்திக்கு முக்கிய பங்குண்டு. அவரது கருத்துக்களும், அரசியலும் மட்டுமின்றி அவரது வாழ்வும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மறுப்பது அல்ல. அதற்கு பெயர் நாத்திகம் அல்லது இறை மறுப்புக் கோட்பாடு, மாறாக மதச்சார்பின்மை என்பதில் எதேனும் ஒரு மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிப்பதற்குத் தடை இல்லை. அதேபோலப் பிற மதங்களைத் தீவிரமாகக் கடைபிடிக்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்பதையும், இந்த மத விஷயங்களில் அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது என்பதையும் நாம் ஏற்பதுதான் மதச்சார்பின்மை.

காந்தியடிகளுக்கு முன் SECULARISM (மதச்சார்பின்மை) என்பது தத்துவ வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கம். தத்துவ வரலாற்றில் இடைக்காலம் அல்லது மத்திய காலத்தை “தத்துவம் மதத்திற்கு அடிமையான காலம்” என்பார்கள். அரசு, கல்வி, மருத்துவம், இலக்கியம், தத்துவம் எல்லாமே மதத்திற்குக் கட்டுபட்டிருந்த காலகட்டம் அது. 15ம் நூற்றாண்டு வாக்கில் நியூட்டன், கலீலியோ, தெகார்த்தே போன்ற அறிவியலாளர்கள் பகுத்தறிவின் அடிப்படையில் உலகை விளக்கத் தலைப்பட்டனர். மறுமலர்ச்சிக் காலம் எனச் சொல்லப்படும் இக்காலகட்டத்தில் அரசு, மருத்துவம், இலக்கியம், தத்துவம் என்பதெல்லாம் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இவ்வாறு மதத்தையும் தத்துவத்தையும் தனித்தனியே பிரிப்பதைத்தான் Secular என்கிற சொல்லின் மூலம் குறிப்பிட்டு வந்தனர்.

இவ்வாறு தத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கத்தை அரசியலுக்குப் பிரயோகித்தவர் காந்தி. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறக்கூடிய நிலை ஏற்பட்டபோது எதிர்கால இந்தியா எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு அரசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை காந்தி எடுத்தார். உருவாகும் புதிய குடியரசை மதத்திலிருந்து பிரித்துவிடவேண்டும் என்றார். ஆனால் இன்னொரு சாரர் இந்தியா, இங்குள்ள பெரும்பான்மை மதமாகிய இந்துமதத்தைச் சார்ந்த அரசாக அமைய வேண்டும் என்றனர். புதிய இந்தியா, ‘இந்து ராஷ்டிரமாக’ அமைய வேண்டும் என்றனர்.

ஆனாலும் மக்கள் மத்தியில் பெருஞ் செல்வாக்குடன் “தேசத் தந்தையாக” ஏற்றம் பெற்றிருந்த காந்தியின் கருத்தே வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அவர் மிகப் பெரிய விலை கொடுக்க நேரந்தது. இந்து ராஷ்டிரம் வேண்டியவர்கள் அவரைக் கொன்றார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததால்தான் காந்தியைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் அளித்தபோதும் உண்மை அதுவல்ல. பாகிஸ்தான் என்கிற பேச்சு இல்லாதபோதே 1930 தொடங்கி குறைந்த பட்சம் ஐந்து முறை அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தி வரையறுத்த தேசியத்திற்கும், அவரைக் கொலை செய்தவர்கள் வரையறுத்த தேசியத்திற்கும் இருந்த வேறுபாடே இந்தக் கொலை முயற்சிகளின் பின்புலமாக இருந்தது.

காந்தி வரையறுத்த தேசியத்தில் இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், இன்னும் பல மொழியினர், சாதியினர் எல்லோரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம உரிமைகளுடன் வாழ உரிமை பெற்றிருந்தனர். இப்படி எல்லோரையும் உள்ளடக்கி நின்றதால் அவரது தேசியம் “உள்ளடக்கும் தேசியம்” (inclusive nationalism) என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்கிற எல்லோரும் சம உரிமை பெற்ற இதியர்கள். இதை “புவிசார் தேசியம்” (territorial nationalism) என்பார்கள்.ஆனால் காந்திக்கு எதிர்நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை “விலக்கிய” ஒரு தேசியத்தை (exclusive nationalism) முன்வைத்தனர். இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்ந்த போதிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம் நிலையினராக. சம உரிமைகள் இல்லாதவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதனை அவர்கள் “கலாச்சார தேசியம்” (cultural nationalism) என அழைத்துக் கொண்டனர்.

காந்தி தனது மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரவலாக்கி மக்களின் ஒப்புதலை அதற்குப் பெற்றார். தங்கள் விருப்பம் சாத்தியமில்லமற் போனதைக் கண்டவர்கள் அவரைக் கொன்றார்கள். அவர்கள் பிற மதத்தாரைப் பொறாதவர்கள். சிறுபான்மை மக்களின் உறிமைகளை மதிக்காதவர்கள்.காந்தி பிற மதங்களை மதித்த போதிலும் தன்னை ஒரு இந்து என அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார். சுட்டு வீழ்த்தப்படும்போதும் “ஹேராம்” என்று கூறித்தான் மண்ணில் வீழ்ந்தார், அந்த வகையில் மதச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தன அவரது வாழ்வும் அரசியலும்.

நமது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி இங்குள்ள பிற மதத்தினரை உள்வாங்கி உட்செரிக்க வேண்டும் (aasimilate) என்பார். அதாவது மற்றவர்கள் தங்கள் வித்தியாசங்களை, அடையாளங்களைத் துறந்து பெரும்பான்மையினருடன் அய்க்கியமானால்தான் அவர்களைக் குடிமக்களாக ஏற்க முடியும் என்கிறார். ஆனால் காந்தியோ.

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. “சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுல்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.” என்பார். மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று அவர்களோடு சமமாக வாழ்வதும் இப்படிக் குடிமக்களின் சம உரிமையை ஏற்உ, மத விஷயங்களிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதுந்தான் காந்தி அடிகள் முன்வைத்த மதச்சார்பின்மை.

மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துக்கள்– தமிழில்: அ.மார்க்ஸ்

1933 தொடங்கி காந்தியடிகள் தன் எழுத்துக்கள், உரைகள் மற்றும் உரையாடல்களில் மதச்சார்பின்மை குறித்தும் மதசார்பற்ற அரசு குறித்தும் அதிகம் பேசத் தொடங்கினார். காந்தியியல் ஆய்வாளரான அனில் நவ்ர்யா இவற்றைத் தொகுத்துள்ளார்.

1. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக 1933ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் மத்திய சட்டமன்றம் ஒரு சட்ட வரைவை முன்வைத்தது. “மனித குலத்தின் அற உணர்வுக்கு ஒவ்வாத ஒரு வழமைக்கான (அதாவது தீண்டாமைக்கான)” ஒப்புதலை, “மதச்சார்பற்ற சட்ட” அணுகல்முறை ரத்து செய்வதைத் தான் வரவேற்பதாகக் காந்தி கூறினார். 1933 மே 6 அன்று, “ஒரு மதச்சார்பற்ற அரசின் சட்டம் (தீண்டாமைக்கு) ஒப்புதல் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அளிக்கக் கூடவும் கூடாது” என்றார். தேவை இல்லாமல் அரசு இது போல மத விஷயங்களில் தலையிடக் கூடாது என இதற்கு தீண்டாமையை ஆதரிப்போரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, “(இது போன்ற) பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு மதத்திலும் கூடத் தலையீடு செய்ய வேண்டி உள்ளது. தேவை இல்லாத தலையீட்டை மட்டுமே அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.

2. 1935, ஜன, 27 அன்று மத்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்தியில் பேசும்போது, “ஒட்டுமொத்தமான இந்துச் சமுதாயமே தீண்டாமை ஒழிப்பிற்கு எதிராக இருந்தபோதும், ஒரு மதச் சார்பற்ற சட்டமன்றம் இத்தகைய கண்ணோட்டத்தைச் சகித்துக் கொள்ளக்கூடாது என்றே நான் அறிவுரைப்பேன்” என்றார்.

3. 1942, ஜன, 20 அன்று, பாகிஸ்தான் பிரிவினைத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது காந்தி கூறியது: “நிதி வருமானம், சுகாதாரம், காவல்துறை, நீதித்துறை, பொது நிலையங்களைப் பயன்படுத்துதல் முதலானவற்றில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன கருத்து முரண்பாடு இருக்க முடியும்? மதப் பயன்பாடுகள், நம்பிக்கைகள், அவற்றைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மட்டுமே வேறுபாடுகள் இருக்க முடியும். ஒரு மதச் சார்பர்ற அரசுக்கு அது குறித்துக் கவலை இல்லை”.

4. 1946 செப்டம்பரில் ஒரு கிறிஸ்தவ மதபோதகரிடம் காந்தி இவ்வாறு கூறினார்: “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தை அரசிடமிருந்து பிரித்து விடுவேன். நான் மதத்தின் பெயரால் ஆணையிடுவேன். மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விஷயம். அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசு மக்களின் பொது நலம், ஆரோக்கியம், அயல் உறவுகள், நாணயம் அச்சிடல் முதலானவற்றை மட்டுமே பார்த்துக்கொள்ளுமே ஒழிய, எக்காரணம் கொண்டும் அவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. அது (மத நம்பிக்கை) தனிப்பட்டவர்களின் பிரச்சினையாகவே இருக்கும்”

5. சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள், கொல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியைச் சேர்ந்த ரெவரென்ட் கெல்லாஸிடம் உரையாடும்போது, “அரசு மதச்சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. பொது நிதியிலிருந்து மதக் கல்வி பயிற்றுவிப்பதை அது எந்நாளும் அனுமதிக்காது. எந்த ஒரு குடிமகன் அல்லது குடிமகளும் நாட்டின் பொதுச் சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் வரை, எந்த ஒரு மத நம்பிக்கையையும் கடைபிடிக்க அவருக்கு உரிமை உண்டு. மதப் பிரச்சாரப் பணியில் எந்த (அரசு) தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால் அந்நிய ஆட்சியில் இருந்ததுபோல எந்த மத அமைப்பும் அரசுச் சலுகைகளைப் பெற இயலாது” என்றார்.

6. ஆக 17, 1947 அன்று காந்தி, நார்கேல்டங்காவில் பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய உரை: “(எதிர்கால இந்தியாவில்) மத வேறுபாடுகளின்றி எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும். அரசு முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கும். மத நிறுவனம் எதற்கும் அரசு ஆதரவு இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாகக் கருதப்படுவர்.”

7. ஆக், 22, 1947, கொல்கத்தா தேசபந்து பூங்காவில் ஆற்றிய உரை: “மதம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அப்படி அது முறையாக நடைமுறைப்படுத்தபட்டால் அரசியலில் எந்தச் சிக்கலும் ஏற்படாது… அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மதச் சார்பற்ற அரசை உருவாக்க மனப்பூர்வமாகச் செயல்பட்டால், நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இயலும். அது உலகுக்கே வழிகாட்டியாக அமையும்.”

8. 1947 நவ 15 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “எல்லாக் குடிமக்களும் சம உரிமை பெறும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசை”த் தன் குறிக்கோளாக அறிவித்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த தீர்மானங்களை இயற்றியது. அன்றைய மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி அதை வரவேற்று ஒவ்வொரு தீர்மானத்தையும் விளக்கி உரையாற்றினார்.

9. 1947 நவ 28: சோமநாதபுரம் கோவிலை அரசுச் செலவில் சீர்திருத்திக் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த காந்தி, குருநானக் பிறந்த நாள் உரையாற்றும்போது, “எல்லோருக்குமான அரசாக நாம் இதை உருவாக்கியுள்ளோம். இது ஒரு மதச்சார்பற்ற அரசு. அதாவது எந்த மதத்தையும் சாராத அரசு. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மத அரசும் அல்ல இது. எனவே மத அடிப்படையில் அது தன் நிதியைச் செலவிடாது” என்றார்.

10. கொல்லப்படுவதற்கு ஆறு நாட்கள் முன் (ஜன 24, 1948), “ஒரு மதச் சார்பற்ற அரசிற்கு ஆலோசனைகள் சொல்லி, வழிநடத்த சேவையும் அர்ப்பணிப்பும் மிக்க, ஆக்க பூர்வமான, நன்கு திரட்டப்பட்ட அமைப்பு ஒன்று தேவை. அமைச்சர்கள் அவர்களிடமிருந்து உற்சாகம் பெற்று வழிநடத்தப்பட வேண்டும்.” என்கிற பொருளில் எழுதினார்.

மேற்குறித்த காந்தியின் கருத்துக்கள் அனைத்தும், அவரது இறுதிக்காலத்தில், மதச்சார்பர்ற இந்தியா குறித்து அவர் முன்வைத்தவை. Secularism என்கிற ஒரு தத்துவ வகையினத்தை (philosophical category), ஒரு அரசியல் சொல்லாடலாக (political discourse) மாற்றியமைத்த காந்தியின் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

1. மதத்திலிருந்து அரசைப் பிரித்துவிட வேண்டும்.

2. மத நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் அரசுத் தலையீடு இருக்காது.

3. மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒன்றால் வழிநடத்தப்படும் மக்கள் பொதுச் சட்டத்தை மீறாத வகையில் தமது நம்பிக்கைகளைக் கடை பிடிக்கலாம். பிரச்சாரம் செய்யலாம்.

4. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அரசின் ஆதரவோ, அரசு நிதியிலிருந்து உதவிகளோ இருக்காது.

5. மத விஷயங்களில் அரசு தலையிடாது என்ற போதிலும், தீண்டாமை முதலான அடிப்படை மானிட நெறிகளுக்குப் புறம்பான வழமைகளை ஒரு மதம் கடைபிடிக்கும்போது அதில் தலையிட்டு அதை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு.

6. ஒருவர் மதச் சார்பற்றதாக இருப்பது, அல்லது ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கடைபிடிப்பது என்பது அவர் தனது மத நம்பிக்கையைத் தீவிரமாகக் கடைபிடிபதற்கு எதிரானதல்ல.

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒன்று

இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான ‘விவேகாநந்த கேந்திரா’ இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி கோல்வால்கரால் விவேகாநந்த கேந்திராவை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ரானடே விவேகாநந்தரின் உரைகளை “இந்து தேசத்திற்கான ஒரு எழுச்சி அறைகூவல்” என்கிற பெயரில் தொகுத்தவர். அது மட்டுமல்ல ஆர் எஸ்.எஸ் அமைப்பு காந்தி கொலையை ஒட்டிச் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தபோது அந்த அமைப்பைத் தலைமறைவாகவே இருந்து வழி நடத்தியவருங் கூட. இந்த அமைப்பு பல மட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கிறது. அந்தமான் முதலான பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பழங்குடியினர் மத்தியில் “சேவைகள்” செய்து அதன் ஊடாகக் “கர் வாபசி” நிகழ்வுகளை நடத்திப் பெரிய அளவில் மத மாற்றம் செய்வது உட்பட, கன்னியாகுமரியில் விவேகாநந்தர் நினைவிடத்தை அமைத்த அந்த அமைப்பு செய்யும் வேலைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இங்கே நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் விவேகாநந்தரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படி முன்னிறுத்துவதன் பின்னணி என்ன என்பதுதான். பரவலாக இங்கு விவேகாநந்தர் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் என்பது அவர், 1. ‘சநாதன தர்மத்தின்’ (இந்து மதம்) பெருமையை உலகறியச் செய்தவர் 2. இந்து மதத்தின் சாதிமுறை, பார்ப்பன மேலாண்மை ஆகியவற்றைக் கண்டித்து இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் 3. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான பிற மதங்களைச் சமமாக ஏற்று உள்ளடக்கும் தாராளப் பார்வை கொண்டவர் என்பவைதான்.

இத்தகைய சமத்துவப் பண்புகள் கொண்டிருந்த விவேகாநந்தரை, சநாதன இந்து மதத்தில் எந்த மாற்றங்களும் இன்றிப் பாதுகாத்தல், எந்த வகையிலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை உள்ளடக்காமல் அந்நிய மதங்களாகவே அணுகும் இறுக்கமான பார்வை, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ ஆக்குவதற்கு வன்முறை உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துதல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எவ்வாறு முன்நிறுத்துகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டுமல்ல நரேந்திர மோடியும் கூடச் சமீபத்தில் விவேகாநந்தரின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதும் கவனத்துக்குரியது.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த முரண்பாடு குறித்துச் சிந்திப்பதில்லை. “நம்மில்” என ஏன் சொல்கிறேன் என்றால் அச்சுதானந்தன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், திராவிட இயக்கத்தில் சிலர், இந்துத்துவத்திற்கு எதிராக நிறைய எழுதியுள்ள கே.என்.பணிக்கர் போன்ற புகழ்மிக்க வரலாற்றாசிரியர்கள், ஏன் பல கிறிஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உட்பட விவேகாநந்தரை இப்படி ஒரு தாராளவாதியாகவே கருதுகின்றனர்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்தே உரிய பதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை கே.என். பணிக்கர் விவேகாநந்தரைத் தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலின் சுருக்கம் இதோ: “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் புகழ் பெற்ற “சர் சங் சலக்” (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்..எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து அவர்கள் காட்டிய சில மேற்கோள்கள் வருமாறு:

1.(சிகாகோவில் பேசியது) மதங்கள் எல்லாவற்றிற்கும் தாயான இந்து மதத்தின் சார்பாக நின்று நான் பேசுகிறேன்….. எனது நோக்கம் எங்கள் நாட்டை புத்தெழுச்சி கொள்ளச் செய்வது மட்டுமல்ல, இந்து இனம் இந்த உலகையே வெல்ல வேண்டும் என்பதுதான்.

2.முஸ்லிம்கள் தமது இறைத் தூதராக நம்பும் முகம்மது ஒரு வகையான மனப் பிரம்மைக்கு (hallucination) ஆட்பட் டிருந்தார். வானவர் கப்ரியேல் மூலமாகத் தனக்கு இறைவாக்குகள் வந்தடைந்ததாக காட்டிக் கொண்டார். ஒரு இந்து யோகியைப்போல யோக நிலையினூடாகப் பெற்ற பேறல்ல இது. மாறாக இது தட்டுத் தடுமாறி வீழ்ந்த ஒரு விபத்து. சுய அறிவோடு சில தந்திரமான மூட நம்பிக்கைகளும் (quaint superstition) இணைந்த நிலை. இந்து யோகிகள் அல்லாதோர் தங்களை இத்தகைய சில மனப் பிரம்மைகளுக்கு (hallucinations) ஆட்படுத்தியும் கொள்வர். வானவர் கப்ரியேல் (ஜிப்ரீல்) ஒரு குகையில் வந்து தன்னைச் சந்தித்து. ‘ஹரக்’ எனும் குதிரையில் சுவர்கத்திற்கு (சுவனம்) அழைத்துச் சென்றதாக முகம்மது கூறிக் கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் அப்பால் அவர் சில அற்புதமான உண்மைகளையும் சொன்னார். நீங்கள் குரானை வாசித்தீர்களானால் இந்த அற்புதமான உண்மைகள் மூட நம்பிக்கைக்ளோடு கலந்து கிடப்பதைக் காணலாம். இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?

3. அவர் ஒரு பயிற்சி பெற்ற யோகி அல்ல. அவர் என்ன செய்கிறார் என்பதன் பின்புலத்தை (reason) அவர் அறிந்திருக்கவில்லை. நல்ல முகம்மது என்ன செய்தார் என்பதையும், (கெட்ட முகம்மதின்) வெறித்தனத்தால் (fanaticism) எத்தகைய தீமை இந்த உலகிற்கு விளைந்தது என்பதையும் யோசித்துப் பாருங்கள். முகம்மதின் போதனைகளின் விளைவாகக் கொல்லப்பட்ட கோடிக் கணக்கான மக்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாகிய குழந்தைகள், அழிக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட கோடானுகோடி மக்கள்….(எவ்வளவு பேர்?)…. (இந்து யோகிகள் அல்லாத) மற்றவர்களின் பெருமை மிகு போதனைகள் எந்த அளவிற்கு இந்த உலகிற்கு உதவினவோ அதே அளவு பாதிப்புகளையும் இந்த வெறித்தனங்களும் மூடநம்பிக்கைகளும் உலகத்திற்கு ஏற்படுத்தின.

4. (இஸ்லாம் போன்ற அருள் வெளிப்பாடுகள்) முழு இறை உண்மையைச் சொன்னவையல்ல. அவை முழுமையானவையும் அல்ல. அவை குறுகிய மனநிலை. ஒன்றின் பகுதி மட்டுமே. ஒரு பகுதி தன்னை முழுமை என உரிமை கோருவது, எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லையற்றதாக உரிமை கோருவது எல்லாம் தவறிழைக்கக் கூடிய மனித மூளைகளிலிருந்து பிறந்த குறு மதப் பிரிவுகள் (sects) மட்டுமே. இவை இறைவனின் எல்லையற்ற உண்மையை முழுமையாக அறிந்தவை எனக் திமிராக (arrogant) உரிமை கோருவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இதன் விளளைவான கொடூரங்களை (arrogance) யோசித்துப் பாருங்கள்…. ஆனால் இவை அனைத்தும் எப்போதும் தோற்றே போயின என்பதை காணத் தவறாதீர்கள்”.

4.இப்படி உரிமை கோருவதில் முகமதியர்கள் ஆகச் சிறந்தவர்கள்; அவர்களின ஒவ்வொரு படி முன்னேற்றமும் வாளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஒரு கையில் குரான்; ஒரு கையில் வாள்: குரானை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால் செத்துப்போ; வேறு மூன்றாவது வழி உனக்குக் கிடையாது எனச் சொல்லி அவர்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றார்கள்? ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றே போனார்கள்.

5. (இந்து மதத்திலிருந்து பிறமதத்திற்கு மாறியவர்களை (“வக்கிரமானவர்கள்”) மீண்டும் ‘கர் வாபசி’ செய்து இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் பற்றிக் கேட்டபோது விவேகானந்தர் சொன்னது) நிச்சயமாக அவர்களைக் கொண்டு வர முடியும். கொண்டு வர வேண்டும்….. அப்படிச் செய்யாவிட்டால் நமது எண்ணிக்கை குறையும். …இப்படி இந்து அடையாளத்திலிருந்து (pale) வெளியே செல்லும் ஒவ்வொரு மனிதனும் நம் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைப்பவன் மட்டுமல்ல. நம் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுபவனும் கூட. அதோடு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு வக்கிரமானவர்களில் பெரும்பாலோர் வாளால் இப்படி மாற்றப்பட்டோர், அல்லது அவர்களின் வழி வந்தோர். இவ்வாறு அவர்கள் வக்கிரமானதற்கு (இந்து மதத்தின்) ஏதோ சில குறைபாடுகள்தான் காரணம் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அநீதி (அழுத்தம் நம்முடையது).

இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து மேற்கோள்காட்டப்பட்ட விவேகானந்த உரைகள். இவற்றிலிருந்து விவேகாநந்தரின் கருத்துக்களை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

அ. இந்து மதம் மட்டுமே முழு இறை உண்மையையும் அறிந்த முழுமையான மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற முழுமையானவை அல்ல அவை வெறும் குறு மதப் பிரிவுகளே. அவை தம்மை முழுமையான மதங்களாகக் கருதிக் கொண்டதன் விளைவு மிகப் பெரிய அழிவுகள். ஆ. நபிகள் நாயகத்திற்கு இறைவாக்குகள் வானவர்கள் மூலம் வந்திறங்கின என்பது பொய். அது ஒரு வெறும் பிரம்மை. இ. இஸ்லாம் வாளோடு வந்து மதம் மாற்றிய மதம். இந்து மதத்திலுள்ள (சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற) குறைபாடுகளால்தான் இவர்கள் மதம் மாறினார்கள் என்பது பொய். .ஈ. இந்து மத்திலிருந்து ஒருவர் மதம்மாறும்போது ஒரு இந்து எண்ணிக்கையில் குறைகிறார் என்பதல்ல. இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. உ. எனவே இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்றோரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தவரை எப்படி எல்லா மதங்களையும் சமமாக நேசித்த தாராளவாதி எனச் சொல்லுவது?

இவை எல்லாம் விவேகாநந்தரின் எண்ணற்ற உரைகளிலிருந்து இந்துத்துவவாதிகள் தமக்குச் சாதகமானவற்றைப் பொறுக்கி எடுத்தவை. ஆனால் விவேகாநந்தர் உண்மையில் அப்படி அல்ல என ஒருவர் கருதலாம். ஆனால் விவேகாநந்தரிடம் அடிப்படையாக இழையோடும் கருத்து இத்தகையதே என்பதை வேறு ஏராளமான மேற்கோள்களோடு இது குறித்து விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் சுமித் சர்கார், ஜோதிர்மய் சர்மா ஆகியோர் நிறுவியுள்ளனர். ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் அவ்வளவையும் சொல்லி விட இயலாது.

இரண்டு

விவேகாநந்தரை வாசிப்போர் எத்தகைய மனநிலையை அடைவர், வாசிப்போர் மீது அவரது கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு அசீமானந்தரின் கூற்றுக்கள் சான்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சமய சமத்துவக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த அசீமானந்தர் இப்போது மலேகான் குண்டு வெடிப்பு உட்படப் பல இந்துத்துவப் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெற்று சிறையில் இருப்பவர். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஏற்றுக் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்குமுன் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர் “யதோ மத் ததோ பத்” (இறைவனை அடைய நம்பிக்கைகள் பல, வழிகளும் பல) என்கிற பன்மைத்துவத்தைப் போதித்தவர். விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் தலையாய் சீடர். இராமகிருஷ்ணரின் வாரிசாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். சாகுமுன் தனது அனைத்து ஆற்றல்களையும் தமக்கு ஒரு அற்புத அனுபவத்தின் ஊடாகத் தந்து சென்றவர் எனச் சொல்லிக் கொண்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தர் எப்படிப் பிற மதங்களைச் சமமாக ஏற்காதவராக இருக்க முடியும் என்பது விவேகானந்தரை தாராளவாதி என நம்புவோர் முன் வைக்கும் ஒரு கேள்வி.

இராமகிருஷ்ணர் அப்படியான சர்வ சமய சமத்துவக் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்தியவரும் அல்லர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது புகழ் பெற்ற சீடர் விவேகாநந்தரைப் போல இந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிணைத்து ஒரு இந்து ராஷ்டிரக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவரும் அல்லர். அதனால்தான் சீடரைத் தன் நெறியாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குருவைக் கண்டு கொள்வதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களை அவரது சீடர் எப்படியேல்லாம் வளைத்துத் தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார் என்பதைப் பார்க்கு முன் மீண்டும் அசீமானந்தரின் அனுபவத்திற்குத் திரும்புவோம். தான் எப்படி இந்த வன்முறைப்பாதைக்குத் திரும்பினார் என்பதை இதழாளர் லீனா கீதா ரகுநாத்திடம் அவர் (Caravan, The Beleiver) கூறியுள்ளதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே காண்போம். அசீமானந்தரின் பூர்வ பெயர் நவ குமார் சர்கார். பட்டப்படிபு முடித்திருந்த நவ குமார் இராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இராமகிருஷ்ணா மடத்தில் சேர்கிறார். அங்கே அவரைச் சந்தித்த விஜய் ஆத்யா என்கிற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் நமது பாதை என ஆர்.எஸ்.எஸ்சை அடையாளம் காட்டுகிறார். அதுதான் விவேகாநந்தர் காட்டிய பாதை என்கிறார். அது எப்படி என நவகுமார் வினவியபோது அவரிடம் ஏக்நாத் ரானடே தொகுத்த விவேகாநந்தரின், “இந்து தேசத்திற்கான எழுச்சி அறைகூவல்” என்கிற நூலை வாசிக்கத் தருகிறார். இனி அசீமானந்தரின் கூற்று.

“ராமகிருஷ்ணா மிஷனின் கொள்கை எல்லா மதமும் சமம்கிறதுதான். அங்கே கிறிஸ்மஸ், ஈத் பெருநாள் எல்லாம் கொண்டாடுவாங்க. நானுந்தான். ஆனா இது விவேகாநந்தர் காட்டிய வழி இல்லைன்னு ஆத்யா சொன்னபோது என்னால நம்ப முடியல. அவர் தந்த ரானடே தொகுத்த விவேகாநந்தர் உரைகளைத் தீவிரமாகப் படிச்சேன்”

அப்போது நவகுமார் சர்காரை அசீமானந்தராக மாற்றிய அந்த வரிகள் கண்ணில் படுகின்றன.

“இந்து மதத்திலிருந்து ஒருவன் மதம் மாறினால், இந்து மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது எனப் பொருளல்ல: மாறாக இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று பொருள் என்று விவேகாநந்தர் சொன்னதைப் படிச்ச போது அது எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. தொடர்ந்த நாட்களில் நிறையச் சிந்திச்சேன், விவேகாநந்தரைப் புரிந்து கொள்ள என்னோட சிற்றறிவுக்குச் சக்தி இல்லங்கிறதைப் தெரிஞ்சுகிட்டேன். அவர் சொல்லிருக்கிறார், நாம அதை வாழ்க்கையில பின்பற்றுவோம்னு முடிவு செஞ்சேன்.”

மூன்று

இந்து மதத்திலுள்ள குறைபாடுகள் எதையும் விவேகாநந்தர் விமர்சித்தாரா என்பது குறித்து இனி பார்க்கலாம்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவைத்தை மட்டுமல்ல விவேகாநந்தர் இந்தியாவில் பிறந்த இதர சமையங்களையோ இல்லை இந்து மதம் சார்ந்த உட்பிரிவுகளையோ அவர் எந்நாளும் ஆதரித்ததில்லை. சநாதன இத்து மதம் ஒன்றே இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான தாய் மதம் என்பதே அவரது கருத்தாக இருந்தது. சாதிமுறை உட்பட சநாதன இந்து மதத்தின் எந்த நம்பிக்கைகளையும் நிறுவனங்களையும் அவர் இந்து மதத்தின் குறைபாடுகளாகவோ நீக்கப்பட வேண்டியவையாகவோ விமர்சித்ததில்லை. பலரும் நம்புவதைப்போல சாதி அமைப்பை அவர் இந்து மதத்தின் கேடு எனக் கருதியவர் இல்லை. பல்வேறு பிளவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஒட்டி இணைத்து இந்து மதத்தை முழுமையாக்கப் பயன்பட்ட ஒரு பசையாகவே அவர் சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டார்.

விவேகாநந்தரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை பல நேரங்களில் தெளிவற்றவையாகவும் சிக்கலானவையாகவும் இருக்கும் அந்தச் சிக்கல் அவர் பேச எடுத்துக்கொண்டபொருளின் சிக்கற் தன்மையினால் (complexity) உருவானதல்ல. மாறாக அவர் வெளிப்படையாகப் பேச விரும்பாத சிலவற்றை, சற்றே நசுக்கி, நசுக்கிப் பேச நேர்ந்ததின் விளைவு அது.
19ம் நூற்றாண்டில் இந்துவாக இருப்பதன் பொருள், அதாவது “இந்துத்தன்மை” (Hinduism) என்பதற்கு அளிக்கப்பட்ட பல்வேறு வரையறைகளில் மிகவும் தீவிரமான சமூக மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ஒன்று விவேகாநந்தரின் வரையறை. மிகவும் நவீனமானதாக இன்று நம்பப்படும் அவரது வரையறை இந்து மதத்தின் கட்டுப்பெட்டித்தனமான, களையப்பட வேண்டிய பல அம்சங்களைப் புதிய மொழியில் நியாயப்படுத்தின. எவை எல்லாம் இந்து மதத்தின் கொடு அம்சங்களாகச் சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்கியோரால் அடையாளம் காட்டப்பட்டனவோ அவை எதுவும் இந்து மதம் பிற உலக மதங்கள் எல்லாவற்றிற்கும் “தாய் மதமாக” இருப்பதற்குத் தடையாக இல்லை என அவரை வாசிப்பவர்களை நம்ப வைப்பதாகவும் இருந்தன.

இராமகிருஷ்ணரைத் தனது குருவாக மட்டுன்றி கிருஷ்ணனின் அவதாரமாகவும், தனது தெய்வீக ஆற்றல்கள் அனைத்தையும் இறப்பதற்கு முன் ஒரு அற்புத நிகழ்வொன்றின் மூலம் தனக்கு ஈந்து சென்றவராகவும் முன்னிறுத்தியவர் விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் இது போன்ற சித்துக்களை நம்பாதவர் மட்டுமல்ல, ஏற்காதவருங்கூட என்பது ஒருபுறம் இருக்க இந்து அடையாளம் குறித்த தன்னுடைய கட்டமைப்பிற்கு ஏற்ப தனது குருவை விவேகாநந்தர் கட்டமைத்த விதம் சுவாரசியமானது. இராமகிருஷ்ணரின் போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது மகேந்திரநாத் குப்தா என்பவர் இராமகிருஷ்ணரின் இறுதி நான்காண்டுகளில் அவரைச் சந்தித்துத் தொகுத்த அவரது உரையாடல்கள்தான். அவற்றையும் அவரது வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும்போது இராமகிருஷ்ணர் எல்லோரையும் எல்லா நம்பிக்கைகளையும் சமமாக நேசிக்கும் விரிந்த இதய விசாலம் உடையவர் என்பது தவிர, பக்திப் பாரம்பரியத்தில் வந்த அவர் ஒருவிதப் பித்து நிலையில் (religious ecstacy) வாழ்ந்தவர் என்பது விளங்கும். ஆனால் விவேகநந்தரோ தன் குருவைப் பல மதங்களையும் ஆய்ந்து அவற்றின் சிறந்த அமசங்களைத் தொகுத்துக் கொண்ட ஒரு தத்துவ ஞாநியைப்போல முன்வைப்பார்.

இராமகிருஷ்ணர் எந்நாளும் இந்து மதத்தைப் பிற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனச் சொன்னதில்லை. குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை அவர் எதிர் நிலையில் நிறுத்தியதில்லை. இந்து மதத்தை அவர் பெருமிதத்தோடு நினைவு கூர்வது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுந்தான். அதுவும் கூட மார்வாரி இனத்தவரின் ஒரு பக்திக் கொண்டாட்டத்தைக் கண்டு அவர் பரவசமடந்த தருணத்தில்தான், ஆகா இதுவன்றோ இந்து மதம் என்கிற ரீதியில் அவர் அதைச் சொன்னார்.

“ஒரு நபர் ஏற்றுக்கொண்ட மதத்தில் தவறுகள் உள்ளதென்றால் அவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கடவுளே அதைத் திருத்துவார். மற்ற மதங்களில் தவறுகள் இருக்கிறதென்றால் அவற்றைத் திருத்துவது நம் வேலை அல்ல. கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்” என்று சொன்னவர் இராமகிருஷ்ணர். அது மட்டுமல்ல, தன் மதமே சிறந்தது எனச் சொல்வதையும் அதன் மூலம் அடையும் வெற்றிப் பெருமிதத்தையும் அவர் கடுமையாகக் கண்டிப்பார். வெற்றி பெறுவது பெரிய விசயமல்ல. வென்றவர்கள் தோற்பதும் தோற்றவர்கள் வெல்வதும் சகஜம் என்பார். மதங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் சீடர் விவேகாநந்தரோ இந்து மதம் ஒன்றே முழுமையான மதம் எனவும் பிற அனைத்தும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் (phases) உள்ளவை என்றும் சொன்னவர். அது மட்டுமல்ல இராமகிருஷ்ணரின் கருத்தும் அதுதான் எனச் சொல்லத் துணிந்தவரும் கூட.

1896ல் விவேகாநந்தர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இராமகிருஷ்ணர் குறித்து இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகிறார். இராமகிருஷ்ணரை வாசித்துவிட்டு இராமகிருஷ்ணர் குறித்த விவேகாநந்தரின் உரையை வாசித்தால்தாறியப்பட்ட இராமகிருஷ்ணருக்கும் விவேகாநந்தரின் இராமகிருஷ்ணருக்கும் உள்ள வேறுபாடுகள் விளங்கும். மேற்கத்திய பொருள் முதல் அணுகல்களையும் இஸ்லாத்தின் வாள்வீச்சையும் வென்ற மதம் சநாதன இந்து மதம் என்கிற இராமகிருஷ்ணருக்குச் சற்றும் பொருந்தாத ஒரு திரையில் அவரை வரைந்து காட்டுவார் அவரது சீடர். இராமகிருஷ்ணர் இஸ்லாம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதமாக கற்றுத் தேர்ந்து ஆய்வு செய்து அவற்றில் புதிதாக ஒன்றுமில்லை என அறிந்தாராம்.

இராமகிருஷ்ணர் யாருடைய நம்பிக்கையையும் தாக்க வேண்டாம், “மிகவும் உள்ளடக்கும் தன்மையே இல்லாத” இஸ்லாமிய நம்பிக்கையையும் கூடத் தாக்க வேண்டாம் என்றாராம். மற்ற நம்பிக்கைகளைத் தாக்காமலேயே அவற்றை மேலுயர்த்த வேண்டும் என்றாராம். ஆக, மற்ற நம்பிக்கைகளை மேலுயர்த்தப்பட வேண்டியவை என இராமகிருஷ்ணர் கருதினார் என்றாகிறது. விவேகநந்தரைப் போற்றுபவர்கள் இப்படி இராமகிருஷ்ணர் எங்கே சொன்னார் எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமடைவர்.. சனாதனமதத்தை என்றென்றைக்கும் அழியாத மதம் என இராமகிருஷ்ணரை முன்னிறுத்திப் பேசும் அவரது சீடர், “இந்த மதத்தைப் போதிக்க உகந்த மண் இந்திய மண், உகந்த மக்கள் இந்துக்கள்” என்று கூறியதன் ஊடாக, “இந்தியா”, “இந்திய மண்” “இந்து” ஆகியவற்றை ஒன்றாக நிறுத்தி இந்துத்துவ அரசியலுக்குக் கால்கோள் இட்டார் என்பது நினைவிற்குரியது. “தேசம்” என்கிற கருத்தாக்கத்தை முன்னிறுத்தாத, சொல்லப்போனால் வெறுத்த இராமகிருஷ்ணரின் பெயரால் இதைச் செய்வதற்கு விவேகாநந்தர் இம்மியும் தயங்கவில்லை.

நான்கு பார்ப்பனர்களை விமர்சித்தார், “அழுகிப் போன சாதிமுறையை ஒழிக்கவேண்டும்” எனச் சொன்னார் என்றெல்லாம் விவேகாநந்தர் குறித்துக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் இப்படித்தான். பார்ப்பனர்கள் அதிகார ஆசை கொண்டவர்கள் எனச் சொல்லும் விவேகாநந்தர்தான் இதை அவர்களின் ஒரே ஒரு பலவீனம் எனவும் மற்றபடி அவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் எனவும் சொல்கிறார். “புத்தர் முதல் ராம் மோகன் ராய் வரை” இந்தச் சமூகத்தைச் சீர்திருத்த வந்த எல்லோரும் “மதம், சாதி ஆகிய இரு நிறுவனங்களையும் முற்றாக வீழ்த்த நினைத்தார்கள், தோற்றார்கள்” என்கிறார். ஆக சாதியை முழுமையாக வீழ்த்த வேண்டியதில்லை, வீழ்த்தவும் முடியாது என்றாகிறது.

“மத ஆசாரியார்கள் (priests) என்ன சொன்ன போதிலும் சாதி என்பது ஒரு கெட்டி தட்டிப்போன நிறுவனம். அது தன் சேவையை முடித்து விட்டது. இப்போது அது தன் அழுகல் நாற்றத்தால் இந்தியாவை நிறப்பியுள்ளது. மக்களுக்கு அவர்கள் இழந்துபோன சமூகத் தனித்துவத்தை (social individuality) மீட்டளிப்பதன் முலமே அதை நீக்க முடியும்” – என்கிற விவேகாநந்தரின் வாசகங்களை வைத்துத்தான் அவர் பெரிய சாதி எதிர்ப்பாளர் என்கிற பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகங்கள் தெளிவாக சாதி ஒழிப்பை வற்புறுத்தி ஏதும் சொல்லவில்லை என்பது தவிர இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து வாசித்தால் அதிர்ச்சி அளிக்கும்.

விவேகாநந்தர் பேசுகிறார்: “சமஸ்கிருதத்தில் ‘ஜாதி’ என அழைக்கப்படும் உயிர்கள்தான் (species) படைப்பின் அடிப்படைத் தத்துவம். எல்லா வேதங்களும் சொல்வது., ‘நான் ஏகன்; நான் அநேகன் ஆனேன்’ என்பதைத்தான்.. படைப்புக்கு முன் உள்ளது ஒருமை; படைப்பு என்பது பன்மை. இந்தப் பன்மைத்துவம் முடிவுக்கு வரும்போது படைப்பு அழியும். எந்த உயிர்களும் ஊக்கத்துடனும் செயல்திறனுடனும் இருந்தால் அது பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும். இது முடிவுக்கு வரும்போது அது சாகிறது. ஆக, ஒரு தனிநபர் தனது இயல்பை, அவனது பிரகிருதியை, அவனது ஜாதியை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான் ஜாதி என்பதன் மூலக் கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வந்தது. சமீபத்திய நூல்களிலும் கூட சம பந்தி போஜனம் மறுக்கப்படவில்லை. நம் தொல் பழ நூல்களிலும் கூடசாதிகளுக்கிடையே திருமணம் மறுக்கப்படவில்லை. பின் ஏன் இந்தியா வீழ்ந்தது? ஜாதி குறித்த இந்தக் கருத்தை விட்டொழித்ததால்தான்..” என்ன சொல்கிறார் விவேகாநந்தர்? சாதியை அதாவது ஒருவரது இயல்பை வெளிப்படுத்துவதுதான் சுதந்திரமாம். ஒருவருக்கு மலம் அள்ளுவது இயல்பாக இருக்கலாம். இன்னொருவருக்கு மந்திரம் சொல்வது இயல்பாக இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தும் சுதந்திரம் அழியும்போது சமூகத் தனித்துவம் பாழாகிறது. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. இந்தியாவின் அழிவிற்கு அதுவே காரணம்.

இனி மீண்டும் விவேகாநந்தர்: “இப்போதுள்ள ஜாதி என்பது உண்மையான ‘ஜாதி’ அல்ல. மாறாக அதன் முன்னேற்றத்திற்கான தடை. இன்றுள்ள அமைப்பு ஜாதியுடைய சுதந்திரச் செயல்பாட்டைத் தடுத்துவிட்டது. எந்த ஒரு கெட்டிதட்டிப்போன வழமை அல்லது உரிமை அல்லது பரம்பரைத் தன்மையான வகுப்பு (class) என்பதும் உண்மையில் ஜாதியின் வீச்சைத் தடுக்கிறது. எந்த ஒரு தேசமும் எப்போதெல்லாம் இந்தப் பன்மை நிலையை (variety) இழக்கிறதோ அப்போது அது சாக நேர்கிறது. என் நாட்டு மக்களே நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். நீங்கள் ஜாதியை அழித்ததால்தான் இந்தியா வீழ்ந்தது, எந்த ஒரு உறைந்த பிரபுத்துவம்(frozen aristocracy) அல்லது முன்னுரிமை பெற்ற வர்க்கம் (privileged class) என்பதெல்லாமும் ஜாதியின் மீதான தாக்குதல்தானே ஒழிய அதுவே ஜாதி அல்ல. . ஜாதி அதன் வீச்சைப் பெறட்டும். ஜாதிக்குத் தடையாக உள்ள அனைத்தும் உடைந்து சிதறட்டும். நாம் மேலெழுவோம்…”

இதுதான் விவேகாநந்தர் சாதி மீது வைக்கும் “விமர்சனம்”. அவரது “விமர்சனத்திற்காக” அவர் தேர்ந்து கொண்ட மொழி எத்தனை சிடுக்குகள் நிறைந்ததாக உள்ளது என்பதையும் கவனியுங்கள். ஜாதி என்பது ஒருவரது இயல்பின் அடியாக உருவாவது. அந்த இயல்பை அவர் நிறைவேற்றி வரும்வரை அது அற்புதமான ஒன்றுதான். வருணம், பரம்பரை என்கிற வடிவில் கெட்டிதட்டிப் போக விடாமல் ஜாதி என்பது சமூகத்தில் சுதந்திரமாக நிலவ விட வேண்டும். புத்தர் முதலானோர் சாதியை முற்றாக ஒழித்துவிடுவது என்று கூறியது அபத்தம் என விவேகாநந்தர் கூறியதன் பொருள் விளங்குகிறது.

இந்தியா பல ஜாதிகளை மட்டுமல்ல, மொழிகளை, இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனாலும் இந்தியா என்பது இந்த வேற்றுமைகளை எல்லாம் கடந்து ஒரு ஒருமையாக நின்று உலகிற்கு வழிகாட்டும் என்பதாக விவேகாநந்தர் முன்வைக்கும் சிந்தனைகள் பலவும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க ஆகியவற்றின் திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தை “ஒரு மகத்தான புனித மொழி” எனச் சொல்லும் விவேகாநந்தர், பிற மொழிகள் அனைத்தையும் “(அதனுடைய) வெளிப்பாடுகள் (manifestations)” என்கிறார். பிற மதங்களை தாய் மதமான இந்து மதத்தை நோக்கிய வளர்ச்சியின் இடை நிலைகள் (phases) என அவர் முன்வைத்ததின் இன்னொரு பக்கம்தான் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளை சமஸ்கிருதத்தின் வெளிப்பாடுகள் என அவர் கூறுவதும் என்பதை நான் கவனிக்கத் தவறலாகாது. “ஆரியர்” என்கிற இன அடையாளம், “சமஸ்கிருதம்” என்கிற மொழி அடையாளம், “இந்து மதம்” என்கிற மத அடையாளம் ஆகியவற்றின் ஊடாக அவர் இந்தியாவை வரையறுக்கிறார்.
“சமஸ்கிருதம் என்பது (இந்தியாவின்) மொழியியல் தீர்வாக அமைவதைப் போல, ‘ஆரிய’ என்பது இனவியல் தீர்வாக அமைகிறது. சமூக அரசியல் பிரச்சினைகளுக்கும், கலாச்சாரம், வளர்ச்சி ஆகியவை பல்வேறு மட்டங்களில் ஏற்றத் தாழ்வுடன் இருப்பதற்கும் பிராமணத்துவமே தீர்வாக உள்ளது” என்பது விவேவேகாநந்தர் நம் நாட்டுப் பிரச்சினைகளுக்கு முன்வைக்கும் இறுதித் தீர்வு.

இந்தியாவிற்கு இத்தகைய மகத்தான கலாச்சாரத்தைத் தந்ததற்காக ஆரியர்களை மனதாரப் பாராட்டும் விவேகாநந்தர், இந்தக் கலாசாரம் சாதி அமைப்பின் ஊடாகக் கையளிக்கப்பட்டது என நன்றி ததும்புகிறார்.
“அது (அதாவது ஆரியக் கலாசாரத்தின் கொடையான சாதி அமைப்பு) முழு இந்தியாவையும் பொருள் அல்லது வாளால் (wealth or sword) வழி நடத்தப்படாமல் ஆன்மீகத்தால் தூய்மை செய்து கட்டுப்படுத்தப்பட்ட அறிவுத் திறனின் வழிகாட்டலில் வைத்தது. இந்தியாவின் தலைமை ஜாதியாக உள்ளவர்கள் உயர்ந்த ஆரியர்கள்- அதாவது பிராமணர்கள்” என்கிற விவேகாநந்தரின் கூற்றை நாம் மிகக் கவனமாக ஆராய வேண்டும். ‘பொருளால்” வழிநடத்தப்படுவது என்பது கிறிஸ்தவதையும். வாளால் வழி நடத்தப்படுவது என்பது இஸ்லாமையும். ஆன்மீகம் தழுவிய அறிவுத் திறன் மிக்க பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுவது என்பது இந்து மதத்தையும் இங்கே குறியீடு செய்கின்றன.. இப்படிப் பார்ப்பனர்களால் வழிநடத்தப்படும் இந்து மதம் ஆரியர்களின் கொடை என்பது விவேகாநந்தர் வைக்கும் முத்தாய்ப்பு.

பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைப் பிறவி அல்லது கர்ம பலன் என்கிற வடிவில் வரையறுத்துப் பெயர் சூட்டப்பட்ட (designated) சாதிகளாகத் தான் கருதவில்லை என விவேகாநந்தர் சில இடங்களில் கூறுகிறார். அதாவது அப்படிப் பிறவி அடிப்படையில் வரையறுக்கப்படாத யாரும் இந்த நிலைகளை அடையலாம் என்கிற பொருளில் அவர் இதைச் சொல்கிறார். வாளின் மூலம் அதிகாரம் பெற்ற யாரும் சத்திரியராகலாம்; கல்வியின் ஊடாக யாரும் பிராமணர் ஆகலாம்; சொத்தின் மூலம் யார் ஒருவரும் வைசியர் ஆகலாம் என்பது விவேகாநந்தரின் துணிபு. அப்படி மேல் நிலையை அடைந்தோர் அந்த உயர் நிலையின் பெருமைகளைக் தக்க வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இங்கே நமக்கொரு அய்யம் எழுகிறது. அப்படியானால் ஒரு சூத்திரர் கல்வியின் மூலம் பிராமணர் ஆக இயலுமா? அது முடியாது என்பதுதான் விவேகாநந்தரின் கருத்தாக உள்ளது. சூத்திரர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் இப்படி மேல் நிலை அடைய வேண்டுமானால், “நீங்கள் உங்களின் சாதி முழுமையையும் முதலில் மேல் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு உங்களின் மேல் நோக்கிய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. எனவே அடித்தளச் சாதியினரைப் பொருத்த மட்டில் அவர்கள் உயர் சாதி நிலையை அடைய வேண்டுமானால் யாரொருவரும் அதைத் தம் சொந்த முயற்சியில் சாதித்துவிட இயலாது. அவர்கள் ஒட்டு மொத்தமாய் அதற்கு ஆசைப்பட வேண்டும். அந்தச் சமூகம் முழுமையுமே அதற்குத் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான விதி முறைகளை “இந்திய மூதாதைகளான ஆரிய பிராமணர்கள்” உருவாக்கியுள்ளனர் என்கிறார். இதை எல்லாம் செய்யாமல் வெறுமனே சாதி அமைப்பையும் பார்ப்பனீயத்தையும் திட்டிக் கொண்டு இருந்தால் போதாது என்கிறார்.
“”உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நான் சாதிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் எங்கும் அவற்றின் திட்டங்களும் நோக்கங்களும் இந்தியாவில் உள்ள அளவிற்கு உன்னதமானவைகளாக இல்லை. ஜாதி என்பது இப்படித் தவிர்க்க இயாலாதது என ஆகிற போது தூய்மை, பண்பாடு, தியாகம் ஆகியவற்றால் அடையாளப் படுத்தப் படும் ஜாதியையே நான் ஏற்றுக் கொள்வேன். டாலர்களால் அடையாளப்படுத்தப்படும் ஜாதியை அல்ல, எனவே (இந்தச் சாதி அமைப்பின் மீது) கண்டன வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வாய்களை மூடிக் கொள்ளுங்கள். இதயங்களைத் திறவுங்கள்.”
இதுதான் விவேகாநந்தர் நமக்குச் சொல்லும் சேதி விவேகாநந்தரைத் தூக்கிப் பிடிப்போர் அவரின் ஊடாக நமக்குச் சொல்லும் சேதியும் கூட.

ஒரு பின்னிணைப்பு:
மகாத்மா காந்தியும் விவேகாநந்தரும்

மகாத்மா காந்தி

முக நூலில் விவேகாநந்தர் குறித்து நான் சில குறிப்புகளைப் பகிர்ந்தபோது எதிர் கொண்ட எதிர்வினைகளில் ஒன்று, “காந்தியும் இதைத் தானே சொன்னார். அவரது செயல்பாடுகளை வியக்கும் நீங்கள் ஏன் விவேகாநந்தரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?” என்பது. காந்தி எந்நாளும் இந்து மதமே முழுமையான மதம் மற்றவை அந்த நிலையை எட்ட முயற்சிப்பவை எனச் சொன்னதில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள்தான் சர்வ சமய ஒற்றுமையின் அடையாளங்களாக இருந்தன. அங்கே இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் தினந்தோறும், ஆம் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டங்களிலும் ஒன்றாகக் கடவுள்களைப் பாடினர். தீண்டாமைக்கு எதிராகக் காந்தியும் பேசினார், விவேகாநந்தரும் பேசினார்.

உண்மைதான். ஆனால் காந்திதான் தீண்டத் தகாதவர்களை இந்துக் கோவில்களுக்குள் அழைத்துச் சென்றவர். ஆலய நுழைவுப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர்.இதனால் அவரை “வருண சங்காரம் செய்ய வந்தவர்” என அன்றைய சங்கராச்சாரியாரின் பண உதவியுடன் நடத்தப்பட்ட ‘ஆர்ய தர்மம்’ எனும் இதழ் தூற்றியது. காந்தியின் வருகையை ஒட்டி தமிழகக் கோவில்கள் சாத்தப்பட்டன. விவேகாநந்தர் சாதி, தீண்டாமை முதலானவற்றிற்கு எதிராக எந்த முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. இந்து மத நிறுவனங்களின் எதிர்ப்புகள் எதையும் அவர் சந்திக்க நேர்ந்ததும் இல்லை.

மகாத்மா காந்தியயைப் பற்றிய எதிர்மறையான பிம்பமும், விவேகாநந்தர் பற்றிய உயர் மதிப்பீடும் ஒரே அடிப்படையிலிருந்துதான் எழுகின்றுன. ஆழ்ந்த ஆய்வுகள் இன்றி, வெறும் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் பொதுப் புத்தியில் பதிக்கப்பட்டவைதான் இந்த இரு பிம்பங்களுமே. இதைப் புரிந்து கொள்ள வெறும் மேற்கோள்கள் பயன்படாது. ஒட்டுமொத்தமான கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படியிலான செயல்பாடுகள் ஆகியவை குறித்த மதிப்பீடு முக்கியம்.

“ஒரு மதத்தை விரோதித்துக் கொண்டுதான் அந்த மதத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? மதத்துடன் இணைந்து அதைச் செய்ய இயலாதா என்பது இன்னொரு கேள்வி. இதற்குப் பெயர்தான் கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது என்பது. ஒரு மதத்தின் அடிப்படைகளை அசைத்துச் சீர்திருத்தம் செய்யும் முயற்சியை நிச்சயம் அந்த மதம் எதிர்க்கத்தான் செய்யும். மகாத்மா காந்தியை விடவா இந்து மதத்தை அணைத்துச் சென்றவர் உலகில் இருக்க முடியும். ஆனால் அவரை அந்த இந்து மத அடிப்படைவாதிகள்தான் சுட்டுக் கொன்றனர். ஏன்? அவர் என்ன கோவிலை உடைத்தாரா? மதமாற்றம் செய்தாரா? சாகும்போதும் ‘ஹே ராம்’ எனச் சொல்லித்தானே வீழ்ந்தார். அவர் ‘இந்துராஷ்டிரம்’ அமைவதற்கு எதிராக இருந்தார். தீண்டத் தகாதவர் என இந்து மதம் யாரை ஒதுக்கி வைத்ததோ அவர்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்தினார். அதுதான் இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எரிச்சல்.சங்கரசாரிக்கும் காந்திக்கும் நடந்த உரையாடலைக் கொஞ்சம் தயவு செய்து படித்துப் பாருங்கள். விவேகாநந்தருக்கும் இந்து மதத்திற்கும் அப்படி ஏதும் உரசல் நிகழ்ந்ததா? விவேகாநந்தர் அப்படி மதத்தை அரவணைத்துச் சென்று எங்காவது அவர் வெறுப்பதாகச் சொன்ன சாதீயத்திற்கும், தீண்டாமைக்கும் எதிராகப் பெரிய அளவில் சமபந்தி போஜனங்களையோ, ஆலயப் பிரவேசங்களையோ நடத்தினாரா? அவர் இந்து மத விழிப்பைப் பற்றிப் பேசியதை எல்லாம், அதேபோல இந்தியாவின் எழுச்சியைப் பற்றிப் பேசியதை எல்லாம் தொகுத்துப் பாருங்கள். அப்போது விளங்கும் அவர் இராண்டையும் பிரித்துப் பார்க்கவில்லை என.

“விவேகாநந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் செய்வதற்கெல்லாம் அவர் பொறுப்பாகமுடியுமா?” என்பது இன்னொரு கேள்வி. நான் சொல்வது அவரது கருத்துக்கள் வெறும் ஆன்மீகம் சார்ந்ததோ, இந்துமதப் பெருமையைப் பேசுவதாகவோ மட்டும் இல்லை, அது எப்படி political hinduism த்திற்கு கால்கோள் இடுவதாக இருந்தது என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். இந்திய எழுச்சியை அவர் இந்து மதத்தின் எழுச்சியுடன் இணைக்கிறார். இரண்டையும் பிரிக்க இயலாததாக்குகிறார். மோடியும் ஆர்.எஸ்.எஸ்சும் விவேகாநந்தரை உயர்த்திப் பிடிப்பதும், இராமகிருஷ்ணரை ஓரங் கட்டுவதும், காந்தியைப் பகையாக நினைப்பதும் தற்செயலானதல்ல; மிகவும் தர்க்கபூர்வமான விளைவு (logical end) .

“காந்தி ஒரு அரசியல்வாதி. அவர் தீண்டாமையை எதிர்த்து நடத்திய இயக்கங்கள் போல விவேகாநந்தரும் செய்வார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்பது அடுத்த கேள்வி. அவர் ஒன்றும் சாதி, மத சீர்திருத்தங்களை இலக்காக்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அல்ல. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர். இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என அவர் ஒதுங்கவில்லை. இது அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலுக்கு மக்களைத் திரட்டும் பணியைக் கூடப் பாதிக்கலாம் என்ற போதிலும் அவர் தயங்கவில்லை. “விவேகாநந்தர் கோவில் வழிபாட்டில் எல்லாம் ஆர்வங்காட்டாதவர், அதனால் இதையெல்லாம் செய்யவில்லை” என்பதெல்லாம் அபத்தம். காந்தி மட்டும் என்ன கோவில் வழிபாட்டில் ஆர்வங் காட்டினவரா? அவர் கோவில்களுக்குச் செல்வதை எல்லாம் வழக்கமாகக் கொண்டவர் அல்ல. அம்பேத்கர், பெரியார் எல்லாம் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்களே அவர்களெல்லாம் என்ன கோவில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர்களா? விவேகாநந்தர் ஒன்றும் வெறும் ஆன்மீகப் பிராச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார் இல்லை. இராமகிருஷ்ணரின் பெயரால், முற்றிலும் அவருக்குப் பொருந்தாத ஒரு வலுவான அமைப்பை நிறுவியவர் அவர். இராமகிருஷ்ணர் தன்னிடம் சொல்லிச் சென்றதாக அவர் பின்னாளில் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இராமகிருஷ்ணர் குறித்து ஊன்றிப் படித்தவர்களுக்குத் தெரியும் விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் கருத்தாகக் கூறிய பலவும் இராமகிருஷ்ணருக்குப் பொருந்தாதவை என்பது.

காந்தியின் பார்வையில் காலனிய நீக்கம்

இன்று ஒரு தொலைக்காட்சியில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் (Quit India Movement) குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார்கள். என்ன இந்தத் தலைப்பில் இப்போது திடீரென எனக் கேட்டேன். வெள்ளையனே வெளியேறு என்றெல்லாம் இயக்கம் நடத்திவிட்டு இப்போது உணவு, உடை என எல்லாவற்றிலும் மேற்கத்தியக் கலாச்சாரம் புகுந்துள்ளது, அதை எப்படி மீண்டும் Indianise பண்ணுவது என்றெல்லாம் விவாதிக்கலாம் என்றுதான் எனப் பதில் வந்தது.

நல்ல விடயம்தான், எல்லாவற்றையும் Indianise பண்ணுவது என்று கிளம்பியுள்ள ஒரு தருணத்தில் இப்படியாகச் சிரத்தையுடன் ஒரு விவாதம் பண்ணினால் நன்றாகத்தான் இருக்கும் என் நினைத்துக் கொண்டேன்.

Quit India Movement ல் தொடங்குகிறார்களே என நினைத்துக் கொண்டு அது தொடர்பான தீர்மானத்தை முன் மொழிந்து காந்தி பேசிய பேச்சைத் தேடினேன். ரொம்பவும் நெருக்கடியான சூழல் அது. கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் எல்லோரும் கை விட்டிருந்த நேரம், காங்கிரசுக்குள்ளும் கூட ‘பூரண சுயாட்சி’ எனும் முழக்கத்துடன் இந்த நேரத்தில் இப்படி ஒரு இயக்கம் தேவையா என்கிற தயக்கம் இருந்தது. ராஜாஜி கட்சியை விட்டே விலகினார்.

வரலாறு காணாத அடக்குமுறையைக் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் இரண்டு இழப்புகள். மனைவி கஸ்தூரி பாயும், நம்பிக்கைக்குரிய அவரது தனிச் செயலர் மகாதேவ தேசாயும் மறைந்தது அக் காலகட்டத்தில்தான். காந்தியையும் முக்கிய தலைவர்களையும் நாடு கடத்திச் சென்று தென் ஆப்ரிக்கா அல்லது யேமனில் வைப்பது எனக் கப்பல் ஒன்று கூடத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம்.

கடுமையான அடக்குமுறைகளின் ஊடாக ஒடுக்கப்பட்ட அந்த இயக்கத்தில் தன்னெழுச்சியாகப் பங்குபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் பங்கு குறித்தெல்லாம் சொல்ல நிறைய உண்டு. இன்றளவும் அந்த இயக்கம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து இரு கருத்துக்கள் உண்டு. கடுமையாக ஒடுக்கப்பட்ட போதிலும் இனி இந்தியாவைத் தம் விருப்பம்போல ஆள இயலாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய வகையில் அது ஒரு வெற்றிகரமான இயக்கம்தான்.

அது போகட்டும். காந்தியின் உரைக்கு வருவோம். காந்தி அதில் மூன்று அம்சங்களை முன்வைக்கிறார்.

1. வழக்கம்போல இப்போராட்டம் முழுக்க முழுக்க அஹிம்சை வழியில் இருக்கும் என்கிறார். (ஆனால் வழக்கம்போல இதிலும் ஆங்காங்கு வன்முறைகள் தலைகாட்டத்தான் செய்தன. ஒரு துணைக் கண்ட அளவில் நடைபெறும் போராட்டத்தில் அப்படியெல்லாம் ஆவது தவிர்க்க இயலாதுதானே. ஆனாலும் காந்தி இம்முறை முன் ஒரு முறை சவ்ரி சவ்ரா வை ஒட்டிச் செய்ததுபோல இம்முறை போராட்டத்தை நிறுத்தவில்லை.)

2. இது அதிகாரத்தைச் சுவைப்பதற்கான போராட்டமல்ல. ஆட்சி அதிகாரம் கையில் வரும்போது அது யாரிடம் வேண்டுமானாலும் போகலாம். என்றார் பார்சிகள் போல் ஒரு மிகச் சிறுபான்மையிடம் கூடப் போகலாம். அவர்கள் சரியாகப் போராட்டங்களில் பங்கு பெறவில்லை, அல்லது அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர், எனவே அவர்களிடம் அதிகாரம் போகக் கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை.

3.போராட்டம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிரானதுதானே தவிர வெள்ளையர்களுக்கு எதிரானது அல்ல என்பதை மீண்டும் அழுத்திச் சொன்னார். மக்கள் மத்தியில் வெள்ளையர் மீது வெறுப்புள்ளது. இது தவறு. ஏகாதிபத்தியத்தையும் வெள்ளையர்களையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். என்னைப் பொருத்த மட்டில் நான் எந்த நாளும் அவர்களை வெறுத்தது கிடையாது. அசர்களின் மீதான் அநுதாபம் இப்போது அதிகமாகி உள்ளது. அவர்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றனர்.

வெறுப்பிலாமல் எதிரியை எதிர்கொள்வது என்பது காந்தியின் அணுகல் முறைகளில் ஒன்று என்பதை முன்பே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு விரட்டுவது என்கிற அடிப்படையில் இங்கே பகவத் கீதை மொழியாக்கங்களையும் விளக்கங்களையும் அன்றைய திலகர், அரவிந்தர் முதலான தேசியவாதிகள் அளித்துக் கொண்டிருந்ததும், குதிராம் போஸ் முதலான இளைஞர்கள் அவ்வாறே செய்து தூக்கு மேடை ஏறிக் கொண்டிருந்ததுமான ஒரு கால கட்டத்தில் இந்திய அரசியலில் நுழைந்து அதன் போக்கைத் திசை திருப்பியவர் அவர்.

இங்கு நான் சொல்ல வந்தது அதை எல்லாம் அல்ல. “இன்று பிரிட்டிஷ்காரர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர்” என்கிறாரே அதுதான் கவனத்தை ஈர்க்கிறது. அது பிரிட்டிஷாரை மட்டும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. ஒட்டு மொத்தமாக மேலை ஏகாதிபத்தியங்களை அவர் சொல்கிறார். ஏகாதிபத்தியங்கள் அவற்றின் இயல்பினால் அழியும் என்று அவர் நம்பினார். மார்க்சும் அதைத்தான் சொன்னர். இரண்டும் வெவ்வேறு அடிப்படைகளில் சொல்லப்பட்டவை என்ற போதிலும், இன்னொரு வகையில் பெரிய வேறுபாடுகள் இல்லை எனவும் சொல்லலாம். ஆனால் இரண்டுமே நடக்கவில்லையே எனத் தோன்றலாம். உண்மைதான். எனினும் ஏகாதிபத்தியங்கள் அப்படி ஒன்றும் இன்று நெருக்கடிகள் இன்றி வெற்றி நடை போட்டுக் கொண்டும் இருக்கவில்லைதானே.

காந்தியம் என எதையாவது சொல்வதானால் அதன் அடிப்படை அவரது மிக ஆரம்ப கால எழுத்துக்களில் (1909) ஒன்றான ‘ஹின்ட் ஸ்வராஜ்’ நூலில் அடக்கம் என காந்தியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். ‘இந்தியச் சுயாட்சி’ என அதை மொழியாக்கலாம். அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் Indian Self Government எனலாம். சாவர்கருடன் லண்டனில் ஏற்பட்ட ஒரு கருத்தியல் மோதலுக்குப் பின் கப்பலில் தென் ஆப்ரிக்கா திரும்பிக் கொண்டிருந்த பொழுது கெள்வி பதில் வடிவில் சுமார் நூறு பக்க அளவில் எழுதப்பட்ட ஒரு குறு நூல் அது.

சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். பெரிய கட்டுரைகளை நம் முகநூல் நண்பர்கள் படிப்பதில்லையே.
காந்தி அதில் மூன்று விடயங்களைச் சொல்கிறார்.

1.பிரிட்டிஷார்கள் இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை. அல்லது தம் பலத்தால் அவர்கள் இங்கே குந்தியிருக்கவில்லை. நாம் அவர்களுக்கு அதைத் தந்துள்ளோம். காந்தி இதைப் பெருந்தன்மை என்கிற அடிப்படையிலிருந்து சொல்லவில்லை.

பிரிட்டிஷ்காரர்கள் நம்மை நாகரீகப் படுத்துவதற்காக வந்ததாகத் தமது ஆளுகையை நியாயப் படுத்துகின்றனர் (legitimize). பிரச்சினை என்னவெனில் நாமும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டதுதான். நாமும் நம்மை (மேற்கத்திய பாணியில்) நாகரீகப் படுத்தப்பட வேண்டியவர்களாக ஏற்றுக் கொண்டதுதான், அல்துஸர் சொல்வாரே அது போல இது ஒரு வகை ‘விளிப்பின் அரசியல்’. “ஏய் திருடா” என ஒரு போலீஸ்காரன் நம்மைப் பார்த்துக் கூவுகிறபோது நாம் நம்மைத் திருடனாக உணர்வது போல.

காந்தியைப் பொருத்தமட்டில் ‘நாகரீகம்’ (Civilization) என்பது ஒரு அற அடிப்படையிலான விகசிப்பு (Moral and Ethical Enterprise). மேலை நாகரீகத்தின் “வலிமையே வெல்லும்”, “தகுதி உள்ளது மட்டுமே பிழைத்துக் கொள்ளும்” என்கிற அடிப்படைகளுக்கும் இது வெகு தூரம்.

ஆக, காந்தியைப் பொருத்த மட்டில் ஏகாதிபத்தியம் என்பது நமக்கு வெளியே இருக்கிற ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற்கு முதலில் நாம் அதை நமக்குள்ளிருந்து வெளியேற்றியாக வேண்டும்.

2. எந்திரங்களைக் கருவியாக்கிச் செயல்படும் முதலாளியத்தை காந்தி இரண்டாவது எதிரியாகச் சுட்டுகிறார். நவீன நாகரிகத்தின் குறியீடாக அவர் எந்திரங்களைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் அதை ஒரு “பெரும் பாவம்” எனவும் குறிப்பிடுகிறார். எந்திரங்கள் என்பதைச் சற்று விசாலமாக்கி நாம் “தொழில் நுட்பங்கள்” எனவும் எடுத்துக் கொள்ளலாம். எந்திரங்கள் மனிதனை மனிதாய நீக்கம் (dehumanizes) செய்கிறது; அந்நியமாக்குகிறது என்றார். கிட்டத்தட்ட எந்திரங்கள் குறித்த ஹெய்டெகரின் விமர்சனத்திற்கு (Question Concerning Technology) நெருக்கமாக வருகிறார். நாம் நமது இருப்பையே (being) ஒரு வகைத் தொழில்நுட்பச் சட்டகத்திற்குள் (technological paradigm) வைத்துப் புரிந்து கொள்ள நேர்கிறது என்பார் ஹெய்டெகர்.

நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான முதலாளியத்தை வெறும் பொருளாதாரச் சுரண்டல் என்பதற்கும் அப்பாலான இன்னும் கோடூரமான ஒன்றாக ஹெய்டெகர், காந்தி, மார்க்ஸ் முதலானோர் காண்கின்றனர். மார்க்ஸ் “கூலி, விலை. லாபம்”, Theories of Surplus Value ஆகியவற்றோடு முடித்துக் கொள்ள வில்லை, அதையும் தாண்டி “அந்நியமாதல்” என்கிற அளவிற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வது குறிப்பிடத் தக்கது.

இதற்கு எதிரான ஒரு குறியீடாகத்தான் காந்தி ராட்டையையும் தக்களியையும் ஏந்தினார். மற்றபடி மானுட உழைப்பையும், நேரத்தையும் மிச்சப் படுத்துவது என்கிற வகையில் அவர் எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் வெறுத்தார் இல்லை. தனது காலத்தில் மிக அதிகமாக ஒலி பெருக்கியையும் (mike), ரயிலையும் அதிகம் பயன்படுத்தியவர் அவர் என்பார்கள். எனக்குப் பிடித்த ஒரு கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெஷின்தான் என அவர் ஒரு முறை கூறியதாகவும் சொல்வர்.

3. “எல்லையற்ற பகுத்தறிவு” என்பது மேலைப் பண்பாட்டை வரித்துக் கொண்டதன் இன்னொரு பிரச்சினை என்பது காந்தியின் மூன்றாவது விமர்சனம். பகுத்தறிவே வேண்டாம் என நான் சொல்லவில்லை. அதற்குரிய எல்லையை உணர்ந்து செயல்படுவோம் என்றார்.

மேலை நாகரிகம் நம் மீது சுமத்திய இழிவுகளாக மட்டும் நாம் இதைக் கருத வேண்டியதில்லை. அது தனக்குத் தானே சுமத்திக் கொண்ட இழிவும் அழிவும் கூட.அந்த வகையில் மேலை நாகரீகம் அநுதாபத்துக்குரிய ஒன்றுங் கூட என்பது காந்தியின் கருத்து.

ஆக, காந்தி சொன்ன காலனியத்திலிருந்து விடுதலை என்பது வெறுமனே வெள்ளை ஆட்சியாளர்களை விரட்டி விட்டு அந்த இடத்தில் கருப்பு ஆட்சியாளர்களை உட்கார வைக்கிற விவகாரமல்ல (இது அவரே சொன்னது).

காந்தியின் பார்வையில் காலனீய நீக்கம் என்பது நம் உள்ளிருந்து தொடங்கி பல்வேறு மட்டங்களில் செய்யப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் நாம் என்ன செய்தோம்? ஆட்சியாளர்களை மட்டும்தான் மாற்றினோம். காலனியம் நம்மீது திணிக்கப்படவில்லை, நாமே வரித்துக் கொண்டது என்றார் காந்தி. நவ காலனியம் மட்டுமென்ன அதுவும் நாமே வரித்துக் கொண்டதுதான். இன்னும் நாம் நம்மை நாகரீகப்படுத்த வேண்டியவர்களாகத்தான் நினைத்துக் கொண்டுள்ளோம். அப்படி நினைத்துக் கொண்டுள்ளவரை நாம் அனைத்திற்கும் மேலை நாடுகளையே நம்பி வாழ வேண்டியுள்ளது. காந்தியின் காலத்தில் ஏகாதிபத்தியம் / காலனி நாடுகள் என உலகம் பிரிந்து கிடந்தது. இன்று வளர்ச்சியடைந்த நாடுகள் / குறை வளர்ச்சி நாடுகள் என உலகம் பிரிந்து கிடக்கிறது. இரண்டு நிலைகளும் ஒன்றுதான்.
அவ்வளவே.

{இதற்கு மாற்றாக காந்தி வேத காலத்திற்குத் திரும்புதல் என்பதை முன்வைக்கவில்லை. வேத காலத்திற்குத் திரும்புவது என்பதை முன்வைப்பவர்கள் காலனீய நீக்கத்தை முன்வைக்கவுமில்லை. பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கங்கையைத் தூய்மை செய்வது என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பொது இடங்கள் அனைத்திலும் ‘வை ஃபி’ வசதி செய்து கொடுப்போம் எனவும் சொல்கிறது, பா.ஜ.க சொல்லும் ‘இந்தியமயப் படுத்துதல்’ என்பதற்கும் காந்தி சொல்வதற்குமான வேறுபாடுகள் அடுத்த கட்டுரையில்…}