காந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்

(பா.ஜ.க ஆட்சி வந்த கையோடு காந்தியைக் கொன்ற கோட்சேக்கு ஊர்தோறும் சிலை வைப்பதாய் தமிழக இந்துத்துவ இயக்கம் ஒன்று அறிவித்தது. அப்[போது மூத்த வழக்குரைஞர் இரத்தினம் அவர்கள் காந்தி கொலை தொடர்பாக நாம் சில கேள்விகளைத் தயாரித்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் கொடுப்போம். அதை அவர்கள் பூர்த்தி செய்து தந்த பின் சரியான விடைகளை அவர்களுக்குத் தருவோம். இந்த வடிவில் காந்தி கொலையாளிகள் பற்றிய உண்மையை மக்கள் மத்தியில் தோலுரிப்போம் என்றார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தயாரிக்கப்பட்ட வினா- விடைப் படிவம் இது.)

1. கேள்வி: சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயங்கரவாதச் செயல்

அ. காந்தி கொலை ஆ. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் இ. மும்பை தாக்குதல்

1.சரியான பதில் ‘அ’. காந்தி படு கொலை யாரோ சிலர் தன்னிச்சையாக மேற்கொண்ட அரசியல் கொலை அல்ல. இந்த நாட்டை ஒரு “இந்து அரசாக” (இந்து ராஷ்ட்ரா) அமைப்பதற்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த காந்தி தடையாக இருந்தார் என்பதற்காக அவரை ஒழித்துக் கட்டும் முயற்சி 1934 தொடங்கி மேற்கொள்ளப்பட்டது. அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. அமைபுகளிலிருந்து இந்தக் கொலைக் கும்பல் விலகிவிட்டதாகக் காட்டிக் கொண்டதும்கூட அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுதான். இந்தத் தாக்குதலின் போது காந்தியுடன் சேர்ந்து அருகில் நிற்போறும் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை என்பதால்தான் முன்னதாக மேற்கொண்ட கொலை முயற்சிகளில் வெடி குண்டுகளையும் பயன்படுத்தினர்.

2. 1948 ஜனவரி 30 அன்று மாலை 5 மணி அளவில் மகாத்மா காந்தி டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவரது நெஞ்சில் மூன்று குண்டுகளைச் சுட்டு அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே

அ. ஒரு முஸ்லிம் ஆ. ஒரு சித்பவன் பார்ப்பனன் இ. ஒரு கிறிஸ்தவன்

சரியான பதில். ‘ஆ’. காந்திக்கு முன்னதாக இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்துச் சமூகத்தின் மேட்டிமைச் சக்திகளாலேயே நிரப்பப் பட்டிருந்தது. வெள்ளை அதிகாரிகளைக் கொன்று விரட்டும் தீரச் செயல்களாகவே அவை இருந்தன. காந்தி அதை வெகு மக்கள் போராட்டமாக, இதுக்கள் முஸ்லிம்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பும் இணைந்து நடத்தும் போராட்டமாக மாற்றினார். இதைப் பொறுக்காமல் அவரைக் கொல்வது என்கிற முயற்சி அவர் இந்தியா வந்த காலம் முதலே தொடங்கியது. கடைசி 5 முயற்சிகள் குறித்த விரிவான புலனாய்வுகள் உள்ளன. அனைத்தும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. காந்தி கொல்லப்பட்ட உடன் அதைச் செய்தது முஸ்லிம்கள் என்பதாகச் செய்தி பரப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக, “காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல” எனத் தொடர்ந்து அன்று வானொலியில் ஒலி பரப்பப் பட்டது.

3. காந்தியைச் சுட்டுக் கொன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சே மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவனது சகோதரன் கோபால் கோட்சே ஆகிய இருவரும் இளம் வயது முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தோம். இல்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொல்வது பொய். அது கோழைத்தனம் என சிறையிலிருந்து விடுதலை ஆனபின் கோபால் கோட்சே பேட்டி அளித்தது

அ. உண்மை ஆ. பொய் இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’ . “நாங்கள் இளம் வயதில் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலேயே வளர்ந்தோம்” – இது கோபால் கோட்சே, சிறையிலிருந்து வெளிவந்தபின் அளித்த நேர்காணல். தங்களுக்கு கோட்சேக்களுடன் தொடர்பு இல்லை என மறுத்த இயக்கங்களை அவர் கோழைகள் எனவும் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து தாங்கள் விலகவே இல்லை எனவும், நாதுராம் கோட்சே ஆர்,எஸ்.எஸ் அமைப்பில் ஒரு சிந்தனை உழைப்பாளியாக (பாவ்திக் கார்யவாக்) இயங்கினான் எனவும், கோல்வால்கரும் சங்கமும் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், நிலைமையை மேலும் சிக்கல் ஆக்காமல் இருப்பதற்காக, அதிலிருந்து விலகி விட்டதாகத் தன் சகோதரன் சொல்ல வேண்டி இருந்தது எனவும் அவர் நேர்காணலில் கூறியுள்ளார் நாதுராம் ஒரே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்சிலும் இந்து மகாசபையிலும் வேலை செய்ததையும் அவர் பதிவு செய்துள்ளார் (Frontline 1994 Jan 28).

4. காந்தி கொலைக்காக 1949 நவம்பர் 15 அன்று தூக்கிலேற்றப்பட்ட நாராயண் ஆப்தே என்பவனும் இந்து மகா சபையில் இருந்தவன்தான் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’.

5. காந்தி கொலையில் ஏழாவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கர் முன்னதாக இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர்.

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ஆ’. 1937ல் சாவர்கர் இந்து மகாசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 வரை அப்பதவியில் இருந்தார்.

6. காந்தி கொலை நடந்தபோது இந்து மகாசபையின் தலைவராக இருந்தது

அ. அப்போது நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் பாரதீய ஜனசங் கட்சியை (இப்போதைய பா.ஜ.க) தொடங்கியவருமான சியாமா பிரசாத் முகர்ஜி
ஆ. தற்போது பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாயி
இ. தற்போது பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள மதன் மோகன் மாளவியா

சரியான பதில்: ‘அ’ .

7. காந்தி கொலையில் ஏழாவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கரை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலிடம் ஜனசங் கட்சியைத் துவங்கிய சியாமா பிரசாத் முகர்ஜி வற்புறுத்தினார் என்பது

அ. பொய் ஆ. உண்மை இ.தெரியாது

சரியான பதில்: ‘ஆ’ சாவர்க்கரைத் தொடர்ந்து 1944 முதல் சியாமா பிரசாத் முகர்ஜி இந்து மகாசபையின் தலைவராக இருந்தார். தலைவராக இருந்து கொண்டே சுதந்திரத்திற்குப் பிந்திய நேரு அமைச்சரவையில் ‘தொழில் மற்றும் விநியோக’ அமைச்சராகவும் இருந்தார். காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கக்கூடாது என்று அமைச்சரவையில் .அழுத்தம் கொடுத்தார். காந்தி கொலையில் இந்து மகாசபை தொடர்பு கொண்டிருந்ததை ஒட்டி காந்தி கொல்லப்பட்ட பின் முகர்ஜிக்குச் சில பிரச்சினைகள் எழுந்தன. அப்போது கூட யாரும் அவரைப் பதவி விலக வேண்டும் எனக் கூறவில்லை. ஒன்று அவர் இந்து மகாசபையிலிருந்து விலக வேண்டும் அல்லது இந்து மகாசபை அரசியலை விட்டுவிட வேண்டும் என்று மட்டுமே அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். எனினும் அந்த நிலையிலும் அவர் சாவர்க்கரை கொலை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என படேலை வற்புறுத்தினார். 1950ல் அவர் ஆர்.எஸ்.எஸ்சின் ஆணையை ஏற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி 1951ல் ‘பாரதீய ஜனசங்’ கட்சியைத் தொடங்கினார். நேருவின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சியிலும் அன்று வலதுசாரி இந்துத்துவ சக்திகளின் கை ஓங்கியிருந்தது, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், துணைப் பிரதமர் வல்லபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நந்தா, உ.பி முதல்வர் கோவிந்த வல்லப பந்த் எனப் பல இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவாளர்கள் அப்போது காங்கிரசுக்குள் இருந்தனர். பெரும் மக்கள் செல்வாக்கு இருந்தும் கட்சிக்குள் நேருவின் நிலை பலவீனமாகவே இருந்தது.

8. காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அமைப்பு

அ. ஆர்,எஸ்.எஸ் ஆ. இந்துமகா சபை இ.. இந்த இரண்டு அமைப்புகளும்

சரியான பதில்: மூன்று பதில்களுமே சரிதான். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் இரண்டிலுமே ஒரே நேரத்தில் கோட்சே வேலை செய்தான். இரண்டு அமைப்புகளுமே காந்தி கொலையைக் கொண்டாடின. சரியாக இந்த நேரத்தில் “நல்ல சேதி” வரும் என அவர்கள் வானொலி முன் காத்திருந்து கொல்லப்பட்ட செய்தி வந்தவுடன் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

9. காந்தி கொலையை ஒட்டி பயங்கரவாதத்திற்குக் காரணமான அமைப்பு என்கிற வகையில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது

அ. சரி ஆ. தவறு இ. கருத்துஇல்லை

சரியான பதில்: ‘அ’ . காந்தி கொலையை ஒட்டி 1948 பிப் 4 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அது உறுப்பினர் பட்டியல் முதலான ஆவணங்கள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. காந்தி கொலையாளிகள் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தடையை நீக்க அது அரசுக்குத் தூது விட்டது. அரசில் இருந்த அதன் ஆதரவாளர்களும் அதற்குச் சாதகமாக இருந்தனர். சட்ட வரைவு ஒன்றை (constitution) அது தயாரித்து இயங்க வேண்டும் என்கிற அரசின் மெல்லிய நிபந்தனையை ஏற்றுப் பின் அது ஒரு வரைவை அரசுக்குத் தந்தது. ஜூலை 1949ல் அரசு தடையை நீக்கியது.

10. காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அப்ரூவர் உட்பட்ட 12 பேர்களுக்கும் உள்ள பொதுமையான அம்சம் அவர்கள் அத்தனை பேரும் இந்துத்துவ அமைப்புகளில் இருந்தனர் என்பது

அ. சரி ஆ. தவறு இ .தெரியாது

சரியான பதில்:. ‘அ’. சங்கப் பரிவாரங்கள் பல்வேறு உள் அமைப்புகளாக இயங்குகின்றன. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கிறது. கடும் இரகசிய அமைப்புகளாக இயங்கும் இவை எதுவும் உறுப்பினர் பட்டியல் முதலியவற்றை வைத்துக் கொள்வதில்லை.

11. பின்னாளில் காந்தி கொலையில் முக்கியமாகப் பங்கேற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்து மகாசபையை 1914ல் அரித்துவாரைத் தலைமையிடமாகக் கொண்டு தோற்றுவித்து வழி நடத்தியவர்களில் முக்கியமானவர்

அ. பா.ஜ.க அரசால் பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள மதன்மோகன் மாளவியா ஆ. மோதிலால் நேரு இ. கோல்வால்கர்

சரியான பதில்:. ‘அ’. இந்து மகா சபை காந்திய வழி முறைகளை கடுமையாக எதிர்த்தது. ‘ஒத்துழையாமை’ ‘அகிம்சை’ முதலான அணுகல்முறைகளை அது ஏற்கவில்லை. இந்துக்களை ஒருங்கிணைப்பது, இந்து ராஷ்டிரம் ஒன்றை அமைப்பது என்பதைத் தாண்டி அது எந்த ஏகாதிபத்திய எதிர்ப்பையும் காட்டவில்லை. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும் அது எதிராகவே இருந்தது. காந்தி கொலையில் முக்கிய கொலையாளிகளாகத் தண்டிக்கப்பட்ட கோட்சே சகோதரர்கள், நாராயண் ஆப்தே, திகம்பர் பாட்கே, விஷ்ணு கர்காரே, மதன்லால் பாவா, சாவர்கர் எல்லோரும் இந்து மகா சபையின் முக்கிய உறுப்பினர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

12. மோடி அரசால் பாரத ரத்னா வழங்கப்பட்ட மாளவியா பார்ப்பனனாகிய தான் சாப்பிடுவதைச் சூத்திரர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மறைவாக உட்கார்ந்து சாப்பிடுவதைத் தந்தை பெரியார் கண்டித்தார் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’. செப் 6, 1931 குடியரசில் எழுதியுள்ள துணைத் தலையங்கத்தில் பெரியார் சொல்வதில் சில வரிகள் : “மாளவியாஜி அவர்களோ கீழ் ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்றும்,அவர்களுக்கு வேறு இடம் வேறு கோயில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்.பார்ப்பனரல்லாதவரிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியை விட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி ஹிந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு
வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார்.

இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்திய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? .

இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர். சுயராஜ்யம் வாங்கப்போகும் போது கூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்ததாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜ்யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா?”

13. காந்தி ஒரு இந்துமத அடிப்படைவாதி என்பது சரியா?

அ. சரிதான் ஆ. இல்லை அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்றவர்

சரியான பதில்: ‘ஆ’. காந்தி இந்து மதத்தை நம்பியவர் ஆயினும் இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரியது எனக் கூறவில்லை. இந்துக் கோவில்களுக்குச் செல்லுதல், வழிபடுதல், துலாபாரம் கொடுத்தல் முதலியவற்றை அவர் செய்ததுமில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வசமய வழிபாட்டுச் சங்கமிப்புகளாகவே இருந்தன. இராமனை அவர் ஒரு லட்சிய மனிதனாகக் கருதினாலும் அவனை அயோத்தியில் அவதரித்த ஒரு வரலாற்று மனிதனாகவோ அந்த அடிப்படையிலான அரசியலையோ அவர் ஏற்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திர இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக இல்லாமல் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

14. காந்தியை இவர்கள் கொன்றதற்கான காரணம்

அ. சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவை ஒரு இந்துராஷ்டிரமாக அமைப்பதற்கு அவர் தடையாக இருந்தார்
ஆ. அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்
இ. அவர் அஹிம்சை வழியில் போராடினார்

சரியான பதில்: இந்த மூன்று காரணங்களுக்காகவுமே அவரைக் கொன்றனர். ஆனாலும் நீதிமன்றத்தில் கோட்சே அளித்த வாக்குமூலத்தில் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வெண்டிய 55 கோடி ரூபாய்களை இந்தியா கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதற்காகவே காந்தியைத் தான் கொன்றதாகக் கூறினான். இது முழுப் பொய். இவர்களின் கொலை முயற்சி 1934 முதல் தொடங்குகிறது அப்போது பாகிஸ்தான் பிரிவினை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இவர்கள் முஸ்லிம்களை எதிரியாக்கி நிறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் காந்தியின் அரசியல் பிரவேசம் முஸ்லிம்களை இணைத்துக் கொண்ட கிலாஃபத் இயக்க வடிவில் அமைந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதும், இநது ராஷ்டிரமாக இந்தியா அமையாமல் அதை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக முன்வைத்ததுமே இவர்களின் ஆத்திரத்திற்குக் காரணம்.

15. கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முன் காந்தி மீது எத்தனை முறை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

அ. ஏழு முறை ஆ. நான்கு முறை இ. இரண்டு முறை

சரியான பதில்: ‘ஆ’. மொத்தம் ஏழு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அதில் ஐந்து குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் இந்துத்துவவாதிகளாலேயே, அதுவும் பார்ப்பனர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

16. மே 1944 ல் பூனாவுக்கு அருகில் உள்ள பஞ்ச்கனியிலும், செப்டம்பர் 1944ல் ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் மும்பையிலிருந்து சேவாக்ரகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதும், 1948 ஜனவரி 20 அன்று பிர்லா இல்லத்தில் இருந்தபோதும், இறுதியில் 1948 ஜனவரி 30ல் வெற்றிகரமாகக் கொன்றபோதும் காந்தியைக் கொல்ல மேற்கொண்ட தாக்குதல்களில் மூன்றில் நாதுராம் கோட்சேதான் முக்கிய பங்கேற்றான் என்பது

அ. உண்மை ஆ. பொய். இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’. சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்சால் பயிற்றுவிக்கப்பட்டவனும் அந்த அமைப்பில் அறிவுத்துறை
ஊழியனாக (பாவ்திக் கார்யவாக்) செயல்பட்டவனுமான நாதுராம் கோட்சே கடைசி முயற்சிகளில் முக்கிய பங்காற்றியுள்ளான்.

17. தன்னைக் கொல்ல இந்துத்துவ அமைப்புகள் சதி செய்து வந்ததை காந்தி

அ. அறிந்திருக்கவில்லை ஆ. அறிந்திருந்தார் இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’. ஜனவரி 20, 1948ல் அவரது பிரார்த்தனைக் கூட்டத்தில் நடந்த் குண்டு வீச்சைப் பற்றி அடுத்த நாள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர், “நேற்று ஒரு பைத்தியக்காரன் இப்படிச் செய்தானே” எனச் சொன்னபோது காந்தி இடை மறித்து, “முட்டாள், யார் பைத்தியக்காரன்? இதற்குப் பின்னால் ஒரு சதி இருப்பது உனக்குத் தெஇயவில்லையா?” என்றார். கொல்லப்படும் நாளில் அவருக்காக மருந்து அரைத்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து, இப்போது என்ன அவசரம், நாளை உயிருடன் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்” எனச் சொன்னார். இப்படியான ஒரு ஆபத்து அவருக்கு உள்ளதை அரசு தெரிந்திருந்தும் கூட உரிய பாதுகாப்பை அளிக்க உள்துறை அமைச்சகம் தவறியது. ஒரு காந்தியியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளது போல காந்தியின் கடைசி ஆண்டுகளில் அவரும் கோட்சேயும் ஒரே திசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். கோட்சே கொல்வதை நோக்கியும், காந்தி கொல்லப்படுவதை நோக்கியும்.

18. காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கர்

அ. தண்டிக்கப்பட்டார் ஆ.அவருக்கு காந்தி கொலையில் தொடர்பே இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டார். இ. சாட்சியம் இருந்தும் அது உறுதி (corroborate) செய்யப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டார்

சரியான பதில்: ‘இ’

19. சாவர்கருக்கு காந்தி கொலையில் முக்கிய பங்கிருந்ததா என்பது குறித்து 1964ல் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஜீவன்லால் கபூர் ஆணையம் போதிய சாட்சியம் இருந்தும் அவர்கள் விசாரிக்கபடவில்லை எனக் கூறியது.

அ. ஆம் ஆ. இல்லை இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’ கோ ட்சேயையும் மற்றவர்களையும் பலி கொடுத்து சாவர்கரைக் காப்பாற்ற அரசில் வலிமையாக இருந்த இந்துத்துவ சக்திகள் இணைந்து முயன்றனர். நீதிமன்றத்திலும் சாவர்கர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். கோட்சே முதலியவர்களிடம் அவர் பேசுவதையே தவிர்த்தார். இது குறித்து கோட்சேயே வருத்தப்பட்டான். சரியாகப் 14 ஆண்டுகளில் காந்தி கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எந்தச் சிக்கலுமின்றி விடுதலை செய்யப்பட்டனர். 1964 டிசம்பர் 12 அன்று அப்போது விடுதலையாகி வெளிவந்திருந்த கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்காரே ஆகியோருக்கு ஒரு வரவேற்பு விழா புனேயில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் திலகரின் பேரனான ஜி,வி.கேட்கர். அவர் பேசும்போது காந்தியைக் கொல்வதற்கு ஆறு மாதங்கள் முன்பாகவே கோட்சே தன்னிடம் இது குறித்துக் கூறியதாகவும், தான் அதை எதிர்த்ததோடு அன்றைய மும்பை மாநில முதல்வர் பி.ஜி கெர்ரிடம் இதைத் தெரிவித்தகவும் கூறினார். நவம்பர் 14 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இந்தச் செய்தி சர்ச்சையாகப்பட்டபின் காந்தியைத் தகவல் தெரிந்தும் அரசு காப்பாற்றத் தவறியது குறித்து நாடெங்கும் பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. .கேட்கர் கைது செய்யப்பட்டார். 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து விசாரணை கோரி அழுத்தம் கொடுத்த பின் அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டியதாயிற்று. விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் வெளிப்பட்டுத்திய உண்மைகளில் ஒன்று சாவர்கர் இக்கொலையில் உடந்தையாக இருந்தது குறித்த அப்ரூவரின் சாட்சியத்தை உறுதி செய்யும் கூடுதல் சாட்சியங்கள் (corroborative evidences) இரண்டு இருந்தும் அவை விசாரிக்கப்படவில்லை என்பது. அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தால் காந்தி கொலையில் சாவர்கரின் பங்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

20. காந்தியைக் கொல்வதற்கு முன் கோட்சேயும் ஆப்தேயும் 1948 ஜனவரி 14, 17 தேதிகளில் சாவர்கரைச் சந்தித்து ஆலோசனைகளையும் ஆசிகளையும் பெற்றதை நேரில் பார்த்த சாவர்கரின் மெய்க்காவலர் ராமச்சந்திர கசாரையும் அவரது செயலர் கஜானன் விஷ்ணு தாம்லேயையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்காமல் சாவர்கரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு அன்றைய நேரு அமைச்சரவையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துமகாசபை ஆதரவாளர்களே காரணம் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’

21. காந்தி கொலைக்காக தூக்கிலேற்றப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் கொலை செய்வதற்கு முன் சாவர்கரை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்ற போது சாவர்கர் என்ன சொல்லி ஆசி வழங்கினார்?

அ. “வெற்றியோடு திரும்பி வாருங்கள்” ஆ. “இந்த முயற்சி ஆபத்தானது எச்சரிக்கை”. இ. “காந்தி நல்லவர், அவரைக் கொல்ல வேண்டாம்”.

சரியான பதில்: ‘அ’. “யஷாஸ்வி ஹௌன் யா” என கொலையை வெற்றிகரமாக முடித்து வர வாழ்த்தி அனுப்பினார்.

22. காந்தி கொலைக்குத் தத்துவ ஆசானாக இருந்த சாவர்கரின் படம் இந்திய நாடாளுமன்றத்தில் காந்தியின் படத்திற்கு முன் திறந்து வைத்துக் கொண்டாடியது எந்த ஆட்சியில்?

அ. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆ. தேவகவுடா பிரதமராக இருந்த ஜனதா ஆட்சியில் இ. வாஜ்பேயி பிரதமராக இருந்த பா.ஜ.க ஆட்சியில்.

சரியான பதில்: ‘இ’. குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் அவர்கள் பதவியில் இருந்தவரை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்திற்கு எதிராக சாவர்கரின் படத்தைத் திறக்க ஒப்பவில்லை. நாராயணனுக்குப் பின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற அப்துல் கலாம் அந்தக் காரியத்தை எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றிச் செய்து முடித்தார்.

23. காந்தியைக் கொன்ற இந்துத்துவ சக்திகள் தமது எதிரிகள் என அடையாளம் காட்டியது

அ. அன்றைய அந்நிய ஆட்சியாளர்களை ஆ. இந்திய முஸ்லிம்களை

சரியான பதில்: ‘ஆ’. பாசிஸ்டுகள் எப்போதுமே உள் நாட்டுக்குள்ளேயே எதிரிகளைத் தேடுவர். ஹிட்லர் ஜெர்மானிய யூதர்களை எதிரியாக்கியது போல. சாவர்கர் கூட அவரது முதல் நூலில் இந்துக்களும் முஸ்லிம்களிம் ஒன்றாக இணைந்து பிடிஷ்டிக்காரர்களை எதிர்க்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர் பிரிட்டிஷ் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு முஸ்லிம் எதிர்ப்பைப் பேசினார்.

24. காந்தி கொலைகாரன் கோட்சேக்கு சிலை வைப்போம் என இன்று வெளிப்படையாக இந்துத்துவ சக்திகள் இறங்கியுள்ளதை

அ. கண்டிப்போம் ஆ. ஆதரிப்போம் இ. கருத்துக் கூற விரும்பவில்லை

சரியான பதில்: (உங்கள் கருத்தைப் பதியவும்)

25. காந்தி கொலைக்குத் தத்துவ ஆசானாக இருந்த சாவர்கர், கொலைக்குப் பின்னணியில் இருந்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மாளவியா போன்றோருக்கு பா.ஜ.க அரசு உயர் விருதுகளையும் மரியாதைகளையும் அளிப்பது

அ. சரி ஆ. தவறு இ. கருத்துக் கூற விரும்பவில்லை

சரியான பதில்: (உங்கள் கருத்தைப் பதியவும்)

(உங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன)

மலம் அள்ளும் துப்புறவுப் பணி குறித்து காந்தியடிகள்

“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்:

டிசம்பர் 3 1932 அன்று புனே  பகுதி காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்தான் அவை.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரத்னகிரி சிறையில் இருந்த அப்பாசாகேப் பட்டவர்தன் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியுள்ளார். பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்திக் காந்தி இந்தக் கடிதங்களை எழுதுகிறார்.

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஒரு ‘மேல்’ சாதிக்காரர். அந்தக் காலத்தில் எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி

சக கைதிகளின் மலத்தை அள்ளும் தூய்மைப் பணி, துப்புரவுப் பணி.

#    #    #

உங்களுக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; அபத்தம் எனலாம். ஆத்திரம் கூட வரலாம்.

‘பங்கி’கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நீங்கள் கொதிப்பதை என்னால் காண இயலுகிறது.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப் பிரசினைகளில் நவீனமாதல், எந்திரமயமாதல் ஆகியவற்றை எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின் எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தியவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் மலம் அள்ளுவதை ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என நான் சொல்ல வரவில்லை. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

காந்தியை அறியாமலேயே அவர் மீது ஒரு வெறுப்பைச் சுமந்து திரியும் நாம் மட்டும் என்ன ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை ஒழித்துவிட்டோமா என்ன?

 

இப்படியானது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலை பெறும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம் இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இங்கொன்றை மிகவும் அழுத்தமாகப் பதிய விரும்புகிறேன். இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என நினைத்துவிடக் கூடாது, அப்படியாக இந் நிகழ்வை வாசிக்க நம் மீது திணிக்கப்பட்டுள்ள காந்தி வெறுப்பு நம்மை ஆட்படுத்திவிடக் கூடாது.

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, கஸ்தூரி பா காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்ட வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

குறிப்புகள் 1:  முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’காசியும் குமரியும்’ எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் அவர் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை பாவே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவதைத் தயவு செய்து ஒருமுறை படித்துப் பாருங்கள்.  நமக்குத் தோன்றலாம். இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலுமா? நான்தான் சொன்னேனே இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

  1. காந்தி டோயலுக்கு எழுதியுள்ள கடிதங்களை அவரது தொகுப்புகளில் காண்லாம்… நறுக்குத் தெரித்தாற் போன்ற காந்தியின் ஆங்கிலம், அதிகாரிகளுக்கு எழுதும் போதும் சற்றும் வளைந்து கொடுக்காதது. அதே நேரத்தில் அதில் மிளிரும் பண்பு யாரையும் தலை வணங்கச் செய்வது.  இந்தக் கடிதம் எழுதப்படும்போது காந்தியும் ஒரு சிறைவாசி என்பது கவனத்துக்குரியது பட்டவர்தன் அவர்கள் உண்ணா விரதம் இருப்பது காந்தி கேள்விப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வேளை அது தவறாக இருக்கக்கூட வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டு காந்தி எழுதும் வாசகங்கள் இவை..

“If I am misinformed about the present position you will let me know what it really is. If I am correctly informed I would ask you in view of the circumstances brought to your notice please to telegraph instructions that my friend and his associates may be allowed to resume Bhangi work under whatever written guarantee as to its voluntary nature you may deem fit to take from them. Though I am a prisoner, you will not expect me to see a comrade dying by inches, not for any crime, not for any indulgence he desires, but for deprivation of humanitarian service for the prosecution of which Government have recognized the necessity of giving me special facilities…  I am sure that you will treat this as a matter of urgency involving as it does the possibility of great damage being done to a fellow-being under your custody.”

  1. சுதந்திரத்திற்குச் சற்று முன்னதாக காந்தி அளித்த மிக முக்கியமான நேர்காணல்களில் ஒன்றில் “முதல் குடியரசுத் தலைவராக ஒரு பங்கி இனத்துப் பெண் அமைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளதை எனது பழைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்
  2. காந்தி டோயலுக்கு எழுதிய கடிதங்களை Years of Fasts of Mahatma Gandhi என்னும் தலைப்பில் இந்த இணையப் பக்கத்தில் காணலாம்: http://www.mkgandhi.org/fastofmahatma.htm

காந்தியின் மெய்யியல் நோக்கு

முதல் பதிப்பு வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இந்நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது. தனது நூலின் அடுத்தடுத்த பதிப்புகளுக்கு முன்னுரை எழுதுவதைக் காட்டிலும் ஒரு ஆசிரியனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அனுபவம் ஏதும் இருக்க இயலாது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நூல் மீது நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இந்த விவாதங்களின் ஊடாக காந்தி குறித்துத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய மதிப்பீடுகளில் சில மாற்றங்கள் நேர்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. குறிப்பாக சாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்த காந்தி அடிகளின் கருத்துகளாக தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சில தவறான மதிப்பீடுகளில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காந்தியை வாசிக்காமலேயே அவரை விமர்சிப்பவர்களைப் போல காந்தி எந்த நிலையிலும் தேங்கிப் போனவர் அல்ல. அவர் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும், அது குறித்து வெட்கப் படாமல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தார். ஒரே கருத்தில் உறுதியாக இருப்பது என்பதை அவர் என்றும் பெருமைக்குரிய ஒரு பண்பாகக் கருதவில்லை. 1933 ஏப்ரல் மாத ‘ஹரிஜன்’ இதழில் அவர் தன்னைப் பற்றிக் கூறியுள்ள இந்தக் கூற்று கவனத்துக்குரிய ஒன்று அது:

“என் எழுத்துக்களைக் கவனமாக வாசிப்பவர்களுக்கும், எனது எழுத்துகளில் ஆர்வம் கொண்ட பிறருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொண்ட கொள்கைகளில் மாறாதிருப்பவன் எனக் காட்டிக் கொள்ள வேண்டும் என நான் கவலைப்பட்டதே இல்லை. உண்மை குறித்த என் தேடலின் ஊடாக ஏற்கனவே கொண்டிருந்த பல கருத்துக்களை நான் கைவிட்டுள்ளேன்; பல புதியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்….. கணந்தோறும் வெளிப்படும் சத்தியத்தின், என் கடவுளின் அழைப்பிற்குச் செவிகொடுக்கத் தயாராக இருப்பது என்பது குறித்து மட்டுமே நான் கவலை கொண்டவன். எனவே எனது எந்த இரு கருத்துக்களுக்கும் இடையே ஒருவர் மாறுபாட்டைக் காண நேர்ந்தால், அவர் என் அறிவு நலத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டிருந்தால், ஒரே பொருள் குறித்து நான் வெளிப்படுத்தியுள்ள இரண்டாவது கருத்தை எடுத்துக் கொள்வதே சரியானது.”
(I would like to say to the diligent reader of my writings and to others who are interested in them that I am not at all concerned with appearing to be consistent. In my search after Truth I have discarded many ideas and learnt many news things…. What I am concerned with is my readiness to obey the call of Truth, my God, from moment to moment, and therefore, when anybody finds any inconsistency between any two writings of mine, if he still has any faith in my sanity, he would do well to choose the later of the two on the same subject.)

காந்தி இப்படிச் சொன்னது மட்டுமல்ல இந்தப் பிரக்ஞையோடு அவர் வாழ்ந்தார் என்பது இன்னும் முக்கியமானது. இதன் பொருள் என்ன? அவர் என்றுமே தான் கொண்டுள்ள அறக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் மட்டுமே சரியானவை என இறுக்கமாக இருந்ததில்லை. அது தவறாகவும் இருக்கக் கூடும் என்கிற புரிதலுடனேயே அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அரசியல் களத்தில் செயல்படுபவர் எப்படித் தன் கருத்துக்கள் மீது இறுதி நம்பிக்கை வைக்காது செயல்பட முடியும்? மற்றவர்களது கருத்துக்களும் சரியாக இருக்கக் கூடும் என்றால் எப்படி முன் நகர்வது? தன் கருத்துகள் மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என அவர் நம்பாவிட்டாலும், எந்த ஒரு கணத்திலும் தனது கருத்துக்கள் ஒப்பீட்டளவில் சரியானது என்கிற நம்பிக்கையோடு அவர் செயல்பட்டார். அந்த வகையில் தத்துவார்த்த தளத்தில் நாம் அவரை ஒரு relativist ஆகக் கருத இடமுண்டு.

இதன் பொருள் அவர் Absolute Truth (முற்றுண்மை – சத்யம்) என்பதை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதல்ல. அவர் ‘இறுதி உண்மை’ என ஒன்று உண்டு என்பதை ஏற்றுக் கொண்டவர்தான். அதைத்தான் அவர் ‘சத்யம்’ என்றார். அப்படியான ஒரு முற்றுண்மையை ஏற்றுக் கொண்ட வகையில் அவரை அத்தனை எளிதாக ஒரு relativist எனவும் வகைப்படுத்திவிட இயலாது என்பதும் உண்மைதான்.
சத்யம் குறித்த தேடல் என்பது அவரது இன்னொரு அடிப்படை அணுகல் முறையான ‘அஹிம்சை’ என்பதுடன் பிரிக்க இயலாததாக இருந்தது. நான் சத்தியத்தை, அதாவது இறுதி உண்மையை உணர்ந்து விட்டேன் என்றுணர்வதே மற்றவர் மீதான வன்முறைகளில் ஒன்று என அவர் கருதினார். மற்றவர்கள் உண்மை அறியாதவர்கள், அறமற்றவர்கள், நான் ஒருவனே அறத்தின்பால் நின்று செயல்படுபவன் என்கிற சிந்தனையே மற்றவர் மீதான வன்முறைகளில் ஒன்று என அவர் கருதினார். எனவே அவரது செயல்பாடுகளில் மற்றவர்களை “அறமற்றவர்கள்” எனக் குற்றம் சாட்டும் moral condemnation க்கு இடமிருக்கவில்லை.
வன்முறை என்பது உடல் சார்ந்த வன்முறையை மட்டும் குறிப்பதல்ல. பொருளாதாரம், பண்பாடு எனப் பலதுறைகளில் அதன் வெளிப்பாடுகள் உண்டு.
ஒரு முற்றுண்மை உண்டு என ஏற்றுக் கொண்ட வகையில் அவர் அடிப்படையில் ஒரு மதச் சிந்தனையாளர் என்பதில் தவறில்லை. ஆனால் அது எந்த ஒரு குறிப்பிட்ட மதமும் சார்ந்ததல்ல. குறிப்பாக அது இந்து மதம் சார்ந்ததல்ல. அவர் உச்சரித்த ‘ஹே ராம்’ என்பது நிச்சயமாக அத்வானியின் ராமனல்ல. காந்தி எல்லா மதங்களின் ஊடாகவும் ஊடுபாவி விரவியுள்ள ஒரு பொதுமைக் கூறைத் தேடினார்; கண்டடைந்தார். மீண்டும் தேடி அடையத் தயாராகவே எப்போதும் திறப்புடன் இருந்தார்.

அவரது அஹிம்சை என்பதும் மிகவும் சிக்கலான ஒரு. கோட்பாடு. அவர் ரத்தம் சிந்தப்படுவதற்கு எதிரானவர் இல்லை. ஒரு போராட்டக் களத்தில் நம்முடைய ரத்தத்தைச் சிந்துவதற்கு நாம் தயங்கக் கூடாது. ஆனால் நம் எதிரே நிற்பவர்களின் ரத்தம் சிந்தப்படுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது அஹிம்சை குறித்த அணுகல்முறையாக இருந்தது. இதன் பொருள் அஹிம்சை என்பது அவரைச் செயலூக்கமற்றவராக ஆக்கிவிடவில்லை என்பதுதான். மிகவும் செயலூக்கமுள்ள போராட்டங்களே அவரது வாழ்க்கையாக இருந்தது.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காந்தி ஒரு தொழில் ரீதியான அறிவுஜீவி (professional intellectual) அல்ல. அதே போல அவர் ஒரு தொழில்ரீதியான தத்துவவியலாளரும் (professional philosopher) அல்ல. அவர் தனக்கென ஒரு இறுதித் தத்துவம் அல்லது இறுதிக் கருத்தியல் என ஒன்றை வரையறுத்துக் கொண்டதில்லை. நடைமுறையிலிருந்து கணமேனும் விலகி நிற்காத அவர் கற்றுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தார். தான் கற்றுக் கொண்டதையும், சிந்தித்தவற்றையும் அவ்வப்போது ஆவணப்படுத்தவும் அவர் தவறவில்லை. அவரளவுக்கு எழுதிக் குவித்தவர்கள் சிலரே. ஒரு சிறந்த வழக்குரைஞரான அவர் எழுதியவை எந்தத் தொழில்ரீதியான அறிஞர்களின் கறார்த் தன்மைக்கும் இறுக்கத்திற்கும் குறையாதவை. எனினும் அவை எந்த ஒரு புள்ளியிலும் தேங்கி விடாதவை. அனுபவங்களின் ஊடாகக் காலந்தோறும் வளர்ந்து வந்தவை. நடைமுறை சார்ந்தவை (practical ideology / philosophy). அவருக்குப் பின்னும் வளர்வதற்குச் சாத்தியமான திறப்புகள் உடையவை. எந்நாளும் ஒரு கோட்பாட்டு முறையாக (system) நிலைநிறுத்திக் கொள்ளாதவை.

‘சுயராஜ்யம்’ எனும் அவரது கருத்தாக்கமும் இப்படி மிகவும் சிக்கலான ஒன்றுதான். அவரது ‘இந்திய சுயராஜ்யம்’ (Hind Swaraj) எனும் கருத்தாக்கத்தில் உள்ள ‘சுயம்’ (Self) என்பது வெறும் சுதந்திர அரசு என்கிற பொருளில் ஆனதல்ல. உலக வரலாறு என்பது குறித்து இன்றளவும் நிலவி வரும் ஒரு மேலைக் கருத்தாக்கத்திற்கு எதிராக அவர் தனது ‘ஹிந்த் சுயராஜ்’ என்பதை முன்வைத்தார். இந்த மேலைக் கருத்தாக்கத்தின்படி உலக வளர்ச்சி என்பதற்கு முன்மாதிரியாக மேற்குலகம் (குறிப்பாக ஐரோப்பா) உள்ளது. நேற்று ஐரோப்பாவில் நிகழ்ந்தது நாளை உலகின் பிற நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் நடக்கும் என்கிற ஐரோப்பியச் சிந்தனையை அடியோடு தகர்ப்பதுதான் காந்தியின் ஹிந்த் சுயராஜ் எனும் கருத்தாக்கம்.. அடிமைச் சமூகத்திற்குப் பிறகு நிலவுடைமைச் சமூகம், அதன்பின் தொழிற் புரட்சி, ஏகாதிபத்தியம், உலகமயம் என முன்னதாக ஐரோப்பாவில் நிகழ்வது அடுத்தடுத்துத் தவிர்க்க இயலாமல் இந்தியாவிலும் நிகழும் என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரானது. அப்படி நிகழக் கூடாது. அப்படி நிகழ்வது வளர்ச்சிக்கல்ல, அழிவுக்கே இட்டுச் செல்லும். அந்த அழிவு என்பது வெறும் பொருளியல் அழிவு மட்டுமல்ல; அது ஒருவகையில் ஆன்மாவின் அழிவாகவும் அமையும் என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது.

மார்க்சீயமும் உலக வளர்ச்சி என்பது மேலை நாடுகளைப் பின்பற்றி அடிமை முறை, நிலப்பிரபுத்துவ முறை, முதலாளியம் என்கிற வரிசையில் அமையும் என்றுதானே சொன்னது என ஒருவர் கேட்கலாம். ஆனால் இதை இப்படித் தவிர்க்க இயலாத உலகப் பொதுமையாகக் கார்ல் மார்க்ஸ் முன்வைக்கவில்லை. அவரது ஆசிய உற்பத்தி முறை என்கிற கோட்பாடும், ரஷ்யா பற்றிய இறுதிக்கால ஆய்வுகளும் இந்த வகையில் முக்கியமானவை. வேறு வகையான வளர்ச்சிச் சாத்தியங்களை அவை முன்வைத்தன.
காந்தியும் இப்படித்தான் இந்த மேற்குலக வளர்ச்சி முறைக்கு எதிரான சுய உருவாக்கத்தைக் கனவு கண்டார். இன்று காந்தியின் ஜென்மப் பகைவர்களான இந்துத்துவவாதிகள் சொல்லும் “சுயராஜ்யம்” இந்தக் காந்திய சுயராஜ்யத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்துத்துவவாதிகளின் வளர்ச்சி அணுகல் முறை என்பது மேற்குலக வளர்ச்சிப் பாதையை அதி தீவிரமாக செயல்படுத்துவதுதான் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் அவசியம்.

மீண்டும் ஒருமுறை இந்தப் பத்தாண்டுகளில் காந்தி குறித்த ஒற்றைப் பார்வையில் ஏற்பட்டுள்ள நெகிழ்வை நான் மகிழ்வோடும் சற்றுப் பெருமிதத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மூன்றாம் பதிப்பிற்கு மிக அற்புதமான ஒரு முன்னுரையை எழுதியுள்ள அன்பு நண்பர் ராட்டை, ஒரு சிறந்த எழுத்தாளராக உருப்பெற்றுள்ள பூ.கோ.சரவணன், அரசியல் களத்தில் செயல்படும் முருகானந்தம், இந்த நூலைக் காந்தியின் மேலுள்ள ஆர்வத்தால் வெளியிட ஆவலுடன் முன்வந்துள்ள விலாசினி. தஞ்சை ரமேஷ், ஆசைத்தம்பி முதலான பத்திரிகையாளர்கள் என ஒரு இளைய தலைமுறை காந்தியைச் சரியாகப் புரிந்து கொள்வதிலும் அறிமுகப் படுத்துவதிலும் ஆர்வம் கொண்டுள்ளமை மிக்க நம்பிக்கையை அளிக்கிறது. நண்பர் ராட்டையைக் காந்தியியல் குறித்த ஒரு களஞ்சியம் எனலாம். ஏதேனும் காந்தியியல் குறித்து எனக்கு ஐயம் ஏற்பட்டாலோ, தகவல் தேவை என்றாலோ நான் அவரைத்தான் தொடர்பு கொள்கிறேன். உடனடியாகத் தொடர்புடைய ஏராளமான தகவல்களை அனுப்புவார். அவரது முகநூல் பக்கம், இணையத் தளம் முதலியன காந்தியை அறிந்து கொள்ள முயல்வோருக்குப் பெரிதும் உதவும்.

இந்த நூலின் முதல் இரு பதிப்புகளிலும் 1932 ல் வெளியிடப்பட்ட மா.நீலகண்ட சித்தாந்தியார் எழுதிய “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை)” எனும் முழு நூலும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது. காந்தி அடிகளின் தலைமையில் அன்றைய காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அரிஜன ஆலயப் பிரவேசத்தை ஒட்டி இந்துச் சனாதனிகள் காந்தி மீது எத்தனை வெறித்தனம் மிக்க ஆத்திரத்தைக் கொண்டிருந்தனர் என்பதை விளக்கும் முகமாக அபூர்வமாகக் கிடைத்த அந்நூலை இணைத்திருந்தோம். சுமார் 67 பக்கமுள்ள இந்நூலின் இணைப்பால் ஏற்படும் சுமையைக் குறைக்க வேண்டி இந்தப் பதிப்பில் அது இடம்பெறவில்லை.
இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ள காந்தி கொலை பற்றிய கேள்வி பதில் வடிவிலான பகுதி அச்சிடப்பட்டு சென்ற ஆண்டு நாமக்கல் பகுதியில் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது. கோட்சேக்குச் சிலை வைப்பதாக இப்பகுதியில் இந்துத்துவ அமைப்பு ஒன்று சொன்னதை ஒட்டி மூத்த வழக்குரைஞர் ரத்தினம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இது தயாரிக்கப்பட்டது. அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று ஒரு வாழ்நாளை தலித் மக்களுக்காக அர்ப்பணித்துச் செயல்பட்டுவரும் ரத்தினம் அவர்கள் இதனை ஆர்வத்துடன் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.

ஆனால் புதிய கட்டுரைகள் பல இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ‘தி இந்து’ நாளிதழில் சென்ற ஆண்டு இளம் நண்பர் ஆசைத்தம்பி (ஆசை) நேர்கண்டு வெளியிட்ட என் நேர்காணலும் இத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் வாசகர்கள் படித்துப் பாராட்டிய நேர்காணல் அது. நண்பர் ‘ஆசை’ யும் காந்தியில் ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞர். அவருக்கும் என் நன்றிகள்.
இந்நூலைச் சிறப்புற வெளியிடும் ப்ரக்ஞை பதிப்பகத்திற்கும் இனிய நண்பர்கள் பாண்டியன் மற்றும் விலாசினி ஆகியோருக்கும் என் நன்றிகள்.

காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து மாறுபடுவர்கள் மட்டுமின்றி, பொதுவில் என்னுடன் உடன்படுபவர்களும் கூட, “அதெப்படிங்க, காந்தி வருணாசிரமத்தையும் சாதிமுறையையும் ஏற்றுக்கொண்டவர் தானே. அவரைச் சனாதன எதிர்ப்பாளர் என்பதுபோல நீங்கள் முன்வைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று குடைந்தெடுத்தனர்.

இதற்குப் பதில் சொல்லி தமிழ்ச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது அத்தனை எளிதன்று. எதார்த்தங்களை அவற்றின் சிக்கலோடு புரிந்து கொள்ள முயலாமல் எதையும் மிகை எளிமைப்படுத்தி, “இப்படி அல்லது அப்படி” எனத் தட்டையாகப் புரிந்து கொள்ளும் பண்பு வலுப் பெற்றுள்ள இன்றைய சூழலில் காந்தியைப் பற்றி அப்படித்தான் ஒரு எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்த பகவன் சொன்ன ‘யானையைப் பார்த்த குருடர்களின் கதை’ அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருத்தமானதுதான்.

அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்குப் பதிலாக வேறு சில கேள்விகளை எழுப்புவது வழக்கம். அப்படியானால் ஏன் கோட்சே குழுவினர், சாவர்க்கர் உட்பட காந்தியைக் கொல்வதில் முனைப்புக்காட்டிக் கடைசியில் தம் முயற்சியில் வெல்லவும் செய்தனர்? வாக்களித்தபடி பாகிஸ்தானுக்கு 50 கோடிகளைக் கொடுப்பதற்கு காந்தி அழுத்தம் கொடுத்ததற்காகத்தான் தான் அவரைக் கொன்றதாக கோட்சே நீதிமன்றத்தில் சொன்னது உண்மையானால், நாட்டுப் பிரிவினை என்கிற பேச்சு எழும்பும் முன்னரே இதே குழுவினரும் இவர்களை ஒத்தவர்களும் அவரைக் குறைந்த பட்சம் ஐந்து முறை கொல்ல முயற்சித்தது ஏன்? காந்திக்கு எதிராக அவரை “வர்ண சம்ஹாரம்” செய்ய வந்தவர் என வரையறுத்து சென்னையிலிருந்து “ஆர்ய தர்மம்” என்றொரு இதழ் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டதன் பொருள் என்ன?

காந்தியைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்விகள் முக்கியமானவை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் இரு பதில்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று சுதந்திர இந்தியா இந்து ராஷ்டிரமாக உருப் பெறுவதற்கு ஒரு வலுவான தடையாக அவர் இருந்தார் என்பது. காந்தி பல்வேறு சாதி, மதம், மொழி பேசும் மக்களின் தேசமாக இந்தியாவைக் கற்பிதம் செய்தார், சாவர்க்கரும் மற்றவர்களும் இந்தியாவை இந்துக்களின் தேசமாகக் கற்பிதம் செய்ய முயன்று காந்தியின் மக்கள் செல்வாக்கின் முன் படு தோல்வி அடந்தனர், காந்தியின் தேசியம் பன்மைத்துவம் சார்ந்தது. அது ஒரு உள்ளடக்கும் தேசியம் (inclusive nationalism). அவரை எதிர்த்தவர்களின் தேசியம் இந்துக்கள் தவிர மற்றவர்களை விலக்கும் தேசியம் (exclusive nationalism).

மற்றது அவர் இந்து மதம் குறித்து முன்வைத்த வாசிப்புகள் முற்றிலும் சனாதனத்திற்கு எதிராக இருந்தன. குறிப்பாக இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது என அவர் முன்வைத்த வலுவான கருத்துக்களைச் சனாதனிகளால் ஏற்கவே இயலவில்லை. காந்தி ஆலயப்பிரவேச இயக்கத்தை முன்னெடுத்தபோது, அவரது தமிழக வருகையை எதிர்த்து “காந்தீ, திரும்பிப் போ” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிதம்பரம் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டன. காந்தியை இழிவுபடுத்தி, “ தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” என்றொரு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. என்னுடைய முன்னுரையுடன் அந்நூல் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி தீண்டத்தகாதவர்கள் பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்களில் நமக்கும் சில மாறுபாடுகள் உண்டு. ஆனாலும் பெரியார் உள்ளிட்ட சாதி ஒழிப்புப் போராளிகள் இந்தத் திசையில் பேசியவற்றையும், செய்தவற்றையும்கூடச் சகித்துக் கொண்டவர்கள் காந்தி அதைச் செய்த்தபோது கொதித்தெழுந்தனர். ஏன்? சாதி ஒழிப்புப் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். காந்தியோ பாதிக்கப்பட்டவர்களோடு நில்லாமல் யார் பாதிப்பிற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களிடமும் பேசினார். அவர்களையும் களத்தில் இறக்கினார். சென்ற நூற்றாண்டில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களிலொன்றாக காந்தியின் தலைமையிலான ஆலயப் பிரவேச இயக்கம் அமைந்தது என இன்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

காந்தி தீண்டாமைக்குக் காரணமானவர்களை நோக்கிப் பேசியதாலேயே அவரின் மொழி இதர சாதி ஒழிப்புப் போராளிகளின் மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மொழி தோற்றத்தில் மென்மையாக இருந்த போதிலும் இந்து மதத்தின் அடிப்படைகளை அசைப்பதாகவும் இருந்ததைப் புரிந்து கொண்டதால்தான் அவரைச் சனாதனிகள் ‘வர்ண சம்ஹாரம்’ செய்ய வந்தவராகப் பகைத்தனர்.

காந்தியின் இந்து மத வாசிப்பு மரபு வழி வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று மட்டும் அவர் சொல்லவில்லை, ஆலய வழிபாடுகள், மதச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றையும் விலக்கி வாழ்ந்தவர் அவர். ஆலயங்களை விபச்சார விடுதிகள் என்கிற அளவிற்கு அவர் ஒப்பிட்டுப் பேசியபோதும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகள் தீண்டாமையை இந்துச் சமூகம் கடை பிடிப்பதன் விளைவுதான் என்று சொன்னபோதும் இங்கு ஏற்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் நினைவுகூரத் தக்கன. வருணாசிரமம் குறித்த அவரது தொடக்க காலக் கருத்துக்களும் கூட இறுதியில் பெரிய அளவில் மாறின.

இராமனை அவர் ஒரு இலட்சிய மானுடனாகவும், இராம ராஜ்யம் என்பதை ஒரு இலட்சிய அரசாகவும் மட்டுமே அவர் முன்வைத்தார். இராமாயணத்தை ஒரு வரலாற்றுக் காவியமாகவோ, இராமனை ஒரு வரலாற்று நாயகனாகவோ முன்வைப்பதை அவர் மற்றுத்தார். வேறு சொற்களில் சொல்வதானால் காந்தியின் தர்க்கத்தில் இராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதற்கும் சேதுப் பாலத்தை அவன் அமைத்தான் என்பதற்கும் இடமில்லை.

காந்தி தன் அரசியலுக்கு வரலாற்றை என்றும் துணை கொண்டதில்லை. அதேபோல டால்ஸ்டாய், தோரோ ஆகியவர்களின் சிந்தனை வழி வந்த அவரிடம் “தேசபக்தி” என்கிற சொல்லாடலும் இருந்ததில்லை. காந்தி உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக சர் சங்கரன் நாயர் எழுதிய நூலின் தலைப்பு “காந்தியும் அராஜகமும்” (Gandhi and Anarchy).

திலகர், அரவிந்தர் முதலான காந்திக்கு முந்திய தேசியப் போராட்ட வீரர்கள் எல்லோரும் பகவத் கீதையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான தனி நபர்க் கொலை உள்ளிட்ட போர்த் தொழிலை முன்வைக்கும் புனித நூலாக வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்தி அதை ஒரு சமாதானத்தின் சாத்தியங்களையும், அஹிம்சைப் பாதையையும் வற்புறுத்தும் நூலாக வாசித்து உரை எழுதினார். இது குறித்து ஒரு நவீன காந்தியியல் ஆய்வாளர், “வாசிப்புச் சுதந்திரம் என்கிற நவீன கோட்பாட்டை அதன் உச்சபட்ச வடிவத்தில் கையாண்டவர் காந்திதான்” எனக் கூறுகிறார்.

காந்தியின் இந்து மதம் குறித்த வாசிப்பில் நாம் காணும் சிக்கல்கள் கூட அவை எந்தப் புனித நம்பிக்கைகளின் (believes) அடிப்படையிலிருந்தும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாறாக அவை உடல் மற்றும் உளத் தூய்மை குறித்த அவரது கட்டுப்பெட்டித் தனமான கருத்துக்களிலிருந்தே முகிழ்த்துள்ளன. எடுத்துக்காட்டாக சேரன்மாதேவிக் குருகுலப் பிரச்சினையில் கூட பார்ப்பனர்களையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் தனித்தனியே அமரவைத்துப் பந்தி பரிமாறியதைத் தவறு எனக் கூறியவராயினும் காந்தி ‘சம பந்தி போஜனம்’ என்பதை ஒரு உயரிய கொள்கையாக ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பாட்டு எல்லாவற்றிலும் சமத்துவம் கடைபிடிக்கப்பட்ட அவரது தென் ஆப்ரிக்க டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் பண்ணைகளின் விதிமுறைகளில் சமபந்தி போஜனம் ஒரு உயரிய கொள்கையாக ஏற்கப்படவில்லை,

ஆனால் இந்த அணுகல்முறை சாதி, வருண அல்லது தீண்டாமை அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. ஒன்றாக அமர்ந்து உண்ணுவது என்பதே அசிங்கம் என அவர் காருதினார். தனது மனைவி பிள்ளைகளுடன் கூட ஒன்றாக உண்ணுவதை அவர் வெறுத்தார். “சாப்பிடுவது என்பது கழிப்பதைப் போலவே ஒரு மோசமான விஷயம். கழிப்பதிலாவது ஒரு வெளியேற்றும் சுகம் நமக்கு உள்ளது” என்பது அவரது கூற்று. அதே நேரத்தில் அவரது தென் ஆப்ரிக்க வீட்டில் ஒரு தலித் கிறிஸ்தவ ஊழியரின் அறையிலிருந்த கழிவு நீர்ப் பானையை கஸ்தூரிபாய் ஏணி வழியாகச் சுமந்து வந்து சுத்தம் செய்யத் தானும் தயங்கி, காந்தியையும் செய்யக் கூடாதென எதிர்த்தபோது அவர் மனைவியை எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தார் என்பதைச் ‘சத்திய சோதனை’யில் காணலாம். அவரது சமபந்தி போஜன வெறுப்பு சாதி அடிப்படையில் உருவானது அல்ல.

இந்து மதம் பிறவி அடிப்படையிலானது, ஒருவர் இந்துவாகப் பிறக்க மட்டுமே முடியும் என்பதை அதன் குறைபாடுகளில் ஒன்றாக முற்போக்காளர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால் காந்தியோ அதுவே இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். அதாவது மதம் மாற்றுவது என்பது பிற மதங்களின் இருப்பைச் சகிக்காததின் விளைவு என்பது அவர் கருத்து. கடைசிவரை மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ஆனால் சட்டம் இயற்றி மதமாற்றத்தைத் தடுப்பது என்கிற நிலை வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அதென்ன?

அதுதான் காந்தி.

காந்தியும் காஞ்சியும் – [இந்து நாளிதழுக்கு மறுப்பு]

இந்து நாளிதழுடன் “ஆனந்த சுதந்திரம்” என்றொரு ‘விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு’ வழங்கப்பட்டுள்ளது. “காஞ்சி மகானும் காந்தி மகானும்’ என்பது கட்டுரைத் தலைப்பு. கா.சு வேலாயுதன் என்றொரு நபர் எழுதியுள்ளார்.

“இந்தியாவின் ஆன்ம சக்திகளான இரு பெரும் மகான்களிடையே நடந்த சந்திப்பு அது. ஒருவர் சுதேசி உணர்வும் சுதந்திரமும் தழைக்கத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்னொருவர் சனாதன தர்மத்தையும் சுதர்மத்தையும் காப்பாற்ற வாழ்வையே தவமாக்கியவர்” – என்று தொடங்குகிறது கட்டுரை.

தென்னாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்த காந்தி பாலக்காட்டுக்கு அருகிலுள்ள நெல்லிச்சேரி என்னுமிடத்தில் சங்கராச்சாரி தங்கி இருந்ததை அறிந்து அவரைச் சந்ந்திக்க விருப்பம் தெரிவித்தாராம். ‘பெரியவரும்’ அவரை வரச் சொன்னாராம். ஒரு மணி நேரம் பேசினார்களாம். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாதாம். ஆனால் அந்த சந்திப்பை இருவருமே மிக முக்கியமானதாகக் கருதினார்களாம். சுமார் 20 ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரி அனுப்பிய ஒரு செய்தியில் காந்தி அவரிடம் சுவாமி சிரத்தானந்தர் கொலை செய்யப்பட்டது குறித்து மனம் நொய்ந்து பேசினதாகவும், இன்னும் இதுபோன்ற படு கொலைகள் நடக்கும் என்பது குறித்து அச்சம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளாராம்..

இருபதாண்டுகள் குறித்து இப்படி உரிய ஆதாரங்கள் ஏதுமின்றி சங்கராச்சாரி கூறியுள்ளது இந்தச் சந்திப்பு குறித்த உண்மைகளை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்கிறது. அடுத்த இரு பத்தாண்டுகளில் கொல்லப்பட்டது காந்திதானே ஒழிய, இந்து சாமியார்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நிற்க.

இப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திர சங்கராச்சாரியை விட ரொம்பவும் யோக்கியமான சங்கராச்சாரி எனவும், நிறையக் கற்றுத் தேர்ந்தவர் என்றும் “மகா பெரியவாள்” சந்திரசேகரேந்திரன் குறித்து நமது ஊடகங்கள் ‘இமேஜ் பில்ட் அப்’ பண்ணுவது வழக்கம். ‘தெய்வத்தின் குரல்’ எனும் அவரது உரைத் தொகுப்பு தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

காந்தியைப் பொருத்த மட்டில் அவர் எந்தச் சாமியார் பின்னாலும் போனவர் இல்லை. எந்த மடங்களையும் அவர் புனிதமாகக் கருதித் தரிசனைக்குச் சென்று வந்தவரில்லை. ஏன் எந்தக் கோவில்கள். புனித ஷேத்திரங்கள் ஆகியவற்றுக்கும் போய் வருவதையோ. யாகங்கள் வேள்விகள் புரிவதையோ, எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதையோ போன்ற அசட்டுத்தனகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் இல்லை.

அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ சமய ஒன்றுகூடல்களாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எனப் பல சமயத்தாரும் ஒன்று கூடி, எல்லோரது கடவுளரையும், எல்லோரும் போற்றிப் புகழ்ந்தவையாகத்தான் அந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அமைந்தன.

ஏற்றுக் கொண்டதில்லை. ராமன் அயோத்தியில் பிறந்தான் என்கிற நம்பிக்கை எதையும் அவர் முன்வைத்ததில்லை. ராமாயணத்தை வரலாறாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை. அவரைப் பொருத்த மட்டில் ராமன் என்பவன் ஒரு ‘லட்சிய மானுடன்’, ‘ராம ராஜ்யம்’ என்பது ஒரு லட்சிய அரசு அவ்வளவே.

சரி, இப்போது காந்தி, சங்கராச்சாரியைச் சந்தித்த கதைக்கு வருவோம். சந்திப்பு நடந்தது உண்மை. எத்தகைய பின்னணியில் அந்தச் சந்திப்பு நடந்தது எனக் காண்போம்.

இந்தியாவெங்கும் தீண்டமை ஒழிப்பு குறித்து காந்தி பேசத் தொடங்கியிருந்த காலம் அது. பின்னாளில் அது அரிஜன ஆலயப் பிரவேசமாக உருமாறியது. பெருந்திரளில் ஆதிக்க சாதியினரும் தலித்களும் இணைந்து ஆலையப் பிரவேசங்கள் நடந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் வைத்தியனாத அய்யரின் தலைமையில் இதுகாறும் ஆலய நுழைவு மறுக்கப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்த வரலாற்றையும் அதற்குச் சனாதன சமுக்கங்களிலிருந்து பெரிய அளவு எதிர்ப்பு வந்த வரலாற்றையும் நாம் அறிவோம்.

இன்னொரு பக்கம், பால்ய மணத்திற்கு எதிராக ஹர விலாஸ சாரதரும், தேவதாசி முறைக்கு எதிராக முத்து லட்சுமி ரெட்டியும் மசோதாக்கள் கொண்டு வந்ததும் சனாதனிகளின் மூக்குகளிலும் கண்களிலும் கரும் புகையை வரவழைத்திருந்தன. போதாக் குறைக்கு காந்தி இவற்றை ஆதரித்தார். சத்தியமூர்த்தி போன்ற தனது கட்சிக்காரர்களுக்கும், சட்ட மன்றத்தில் அவர்கள் வைத்த நிலைபாட்டிற்கும் எதிராக காந்தி தமிழ்நாட்டில் முத்து லட்சுமி நடத்திய கூட்டமொன்றில் (1927, செப்டம்பர் 9) கலந்து கொண்டதுடன், அந்தப் பயணம் முழுவதும் தேவதாசி ஒழிப்பை அவர் ஆதரித்துப் பேசினார்.

அடுத்த முறை காந்தி தமிழகம் வந்தபோது தமிழகம் முழுவதும் சனாதனிகள் அவருக்கு எதிர்ப்புக் காட்டினர், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆலயக் கதவுகள் மூடப்பட்டன. “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரகம்” என்கிற நூல் காந்தியைத் தரக்குறைவாக ஏசி வெளியிடப்பட்டது. இந்நூலின் முழு வடிவம், துண்டறிக்கை வாசகங்கள் முதலியவற்றிற்கு எனது “காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலைக் (எதிர் வெளியீடு, பொள்லாச்சி, 2007) காண்க.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சங்கராச்சாரி சந்திப்பு நடந்தது. இந்து நாளிதழ் சொல்வது போல காந்தி ஒன்றும் சங்கராச்சாரியை விரும்பிச் சந்திக்கவில்லை. சங்கராச்சாரியைச் சந்திப்பதற்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது குறித்து நான் முன் குறிப்பிட்டநூலில் எழுதியிருக்கும் வாசகங்கள்:

“மகாமேதை, ஒழுக்கசீலர், நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் (லேட்) ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்கிற சங்கராச்சாரியை காந்தி 1927 அக்டோபர் 15 அன்று பாலக்காட்டுக்கு அருகில் உள்ள நல்லிச்சேரி சரஸ்வதி கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அப்படியான ஒரு சந்திப்பைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். சங்கராச்சாரி (இந்தி தெரிந்திருந்தும்) சமஸ்கிருதத்தில் பேச, காந்தி (சமஸ்கிருதம் தெரிந்திருந்தும்) இந்தியில் பேசினார். கடவுள் நம்பிக்கையை வற்புறுத்தி இயங்கும் காந்தியைப் பாராட்டிய சங்கராச்சாரி, ‘எனினும் ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாத்திரங்களளையும், பழைய பழக்க வழங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்ற்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் கூறினார். இதைச் சொல்வதற்காகவே அச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

“தனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல என்றைக்கும் தயங்காதா காந்தி, சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். சங்கராச்சாரியாரின் கருத்துக்களை மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பதாகச் சொல்லி விடைபெற்றார். தொடர்ந்து காந்தியின் செயற்பாடுகளைக் கவனிக்கும் யாருக்கும் சந்திரசேகரரின் மேற்படி கருத்துக்களை காந்தி மயிரளவும் மதிக்கவில்லை என்பது விளங்கும்.”

காந்தியைத் தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் சந்தித்ததாகவும், காந்தி அமர சங்கராச்சாரி தன் பீடத்தையே தரத் தயாராக இருந்ததாகவும் இந்துக் கட்டுரை கதை அளக்கிறது. சங்கராச்சாரி தங்கியிருந்தது நல்லிச்சேரி சரஸ்வதி கோவில். காந்தி பிரப்பால் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவர் (வைசியர்) என்பதால் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் அவரை அமர வைத்துப் பேசியதே உண்மை.

மகா ஒழுக்கசீலரான” சந்திரசேகரேந்திரரின் காஞ்சிபீடம் அத்தோடு நிற்கவில்லை. வேறுபல முயற்சிகளையும் செய்தது. அவற்றில் ஒன்று, அன்றைய புதிய தொழில்நுட்பமான அச்சுத் தொழில்நுட்பத்தை வர்ணாசிரமத்தைக் காப்பாற்றும் ஆயுதமாகப் பயன்படுத்துவது. இந்த நோக்கத்துடன் காஞ்சி பீடத்தின், அதாவது மகா ஒழுக்க சீலரான சந்திரசேகரரின் ஆசியுடனும், நிதி உதவியுடனும் ‘ஆரியதர்மம்’ என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. 1927 டிசம்பரில் நடைபெறவுள்ள காஙகிரஸ் மாநாட்டுக்கு இணையாக வர்ணாசிரம மாநாட்டைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

1927 ஐப்பசி மாதம் 25ந்தேதிய ‘ஆர்யதர்மம்’ இதழில், “ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றியவரை யான் நன்கறிவேன், இச் சென்னையில் ஒரு கிளை மடம் ஸ்தாபித்து,,,,புனிதமான ‘ஆர்யதர்மம்’ என்கிற இப்பத்திரிக்கையையும் நடத்துகிறது” என ஆசிரிய உரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாசகங்களின்படி வருணாசிரமத்தைக் காப்பாற்ற உருவெடுத்த ‘ஆர்யதர்மம்’ என்கிற அந்த இதழ் சந்திரசேகர சங்கராச்சாரியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது என்பது விளங்குகிறது.

வருணாசிரம ஆதரவு மஹாநாடெல்லாம் இன்று தேவையா, அப்படி மாநாடு நடத்துவதெல்லாம் நமது மரபா எனச் சிலர் கேட்டபோது,

“பண்டைக் காலத்தில் யக்ஞம், உத்ஸவம், விவாஹம் முதலியவைகள் அப்போது மஹாநாட்டின் வேலையை முடித்துவைத்தது. காலத்திற்கேற்றவாறு, அதுவும் காந்தி தென்னாடு வந்த பிறகு அத்யாவசியமாக இதைக் கூட்டியே ஆகவேண்டுமென்று பலரும் நினைக்கின்றனர்.”

என்ப் புலம்புவதிலிருந்து சந்திரசேகர சங்கராச்சாரி, காந்திக்கு எதிராகவே நிதி உதவி செய்து இந்த ‘ஆரதர்மம்’ என்கிற வருணாசிரம ஆதரவு இதழை நடத்தினார் என்பது விளங்குகிறது. காந்தியின் தென்னாட்டு வருகை வருணாசிரமத்திற்கு எதிராக இருந்ததாகக் கருதி அவர்கள் அசுர்றதும் புரிகிறது.

காந்தியை வருணசங்காரம் செய்ய வந்தவராக இந்த இதழ் முன்னிறுத்தியது. இது குறித்த விவரங்களை அறிய எனது நூலையும், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ‘ஆர்யதர்மம்’ இதழ்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்த இதழின் புத்தகம்11, ஸஞ்சிகை 30ல் வெளிவந்துள்ள, ஒரு கூற்று:

“தீண்டாதவர்கள் நிரபராதிகள். நம்மைப்போலவே மனிதர்களே. அப்படியிருக்க ஏன் தள்ள வேண்டும் என்கிறார் (காந்தி). ஆகா தீண்டத்தகாதவர்களும் நம்மைப் போலவே மனிதர்கள்தானாம். இதைச் சங்கராச்சாரியார் தெரிந்துகொள்லவில்லை. இந்த அதி சூஷ்மத்தைக் கந்திதான் தெரிந்துகொண்டார். அதனால்தான் அவர்களை எட்டிப் போவென்று சொல்லலாகாதாம். சங்கராசாரியாரவர்கள் இவ்வொன்றையும் தெரிந்து கொள்ளாததால்தான் விலகிப் போவென்றார் போலும்”

காந்தியை அவர்கள் எந்த அம்சத்தில் சங்கராச்சாரியிடமிருந்து வேறுபடுத்தினர் என்பது இக்கூற்றிலிருந்து நமக்கு விளங்குகிறது.

இத்தனைக்குப் பிறகும் காந்தி ஆலயப் பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தினார். சனாதனிகள் வெறிகொண்டனர். அடுத்தமுறை காந்தி தமிழகம் வந்தபோது கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அப்போது காந்திக்கு எதிராக வெளியிடப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் பலவற்றையும் எனது நூலில் காணலம். ஒன்று மட்டும் இங்கே:

“வராதே காந்தீ! ஓடிப்போ காந்தீ!! பேசாதே காந்தீ!!!

வேதத்தை அறியாமலே கொண்ட வெறியை வேதத்தை / விளக்கியே தீர்க்க வரும் வேதப் பிரானொத்த ஜகத்குரு / சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ! / இங்கிலீஷ் படித்த கர்வமும் பட்டினி கிடக்கும் கெட்ட பிடிவாதமும் தவிர வேறொரு சரக்குமில்லாத காந்தி ஓடிப்போ! / ராஜ துரோஹியாகவே வாழ் நாளை வீண்படுத்திய பழக்கத்தினால் தர்மத்தை மதியாமல் தெய்வத் துரோஹியாய்த் தலைப்பட்ட காந்தி ஓடிப்போ!”

மேற்படி துண்டறிக்கையை வெளியிட்டவர் திருவரங்கம் பெரியகோவில் பத்திராதிபரான பார்த்தசாரதி அய்யங்கார், தேதி 09.02.1954.

இது 1934ல் வெளியிடப்பட்டது, 1930களில் காந்தியின் முன்னெடுப்பில் ஆலயப் பிரவேசங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 1920களின் பிற்பகுதியிலிருந்தே காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தொடங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சந்திரசேகர சங்கராச்சாரி ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது.

திருவரங்கக் கோவில் பத்திராதிபர் பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்த, “சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ!” என்கிற வாசகத்திலிருந்தது, காந்தி சங்கராச்சாரியைச் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் உறுதியாகிறது.

உண்மைகள் இப்படியிருக்க சங்கராச்சாரியைச் சந்திக்க காந்தி ஆர்வம் கொண்டார் என்பதும், அதை அறிந்த சங்கராச்சாரி பெரியமனது பண்ணி அதற்கு இசைந்தார் என்றும் இந்து நாளிதழ் கட்டுரை வெளியிடுவதன் பொருளென்ன?

காந்திக்கு எதிராகப் பண உதவி செய்து, இப்படியான ஒரு பத்திரிக்கையை நடத்திய நபர் சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி. அவரைக் காந்தி சந்திக்க விருப்பு தெரிவித்துச் சென்று சந்தித்தார் என்பது எத்தனை அபத்தம்.

காந்தியை இறுதியில் கொன்று தீர்த்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கோட்சே துப்பாக்கிக் குண்டால் சுட்டுத் தீர்த்த செயலைத்தான் சந்திரசேகர சங்கராச்சரியின் ஆர்யதர்மமும் தன் எழுத்துக்களால் செய்தது.

இல்லையா?

காந்தி விரிவாகத் தன் இயக்கங்களைப் பதிவு செய்தவர். அவரது பதிவுகள் 90க்கும் மேற்பட்டப் பெருந் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கராச்சாரியுடனான இச் சந்திப்பிற்குக் காந்தி தனது பதிவுகளில் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த இணைப்பு, இந்து நிர்வாகம் வெளிட உள்ள தமிழ் நாளிதழின் முன்னோடி என்றே கருத வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழில் தமிழ் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராக வெளிவந்த ஆர்.வெங்கடாசலபதி எடுத்துள்ள பேட்டியும், இந்தக் கட்டுரையும், வர உள்ள தமிழ் ‘இந்து’ நாளிதழ் எத்தகைய போக்குடன் அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன எனக் கொள்ளலாமா?

ஆங்கில இந்து நாளிதழின் சிரப்புக்களில் ஒன்று அது கடைபிடித்து வரும் மதச் சார்பின்மை. தமிழ் இந்து நாளிதழ் அந்தப் பண்பைக் கைவிடப் போகிறதா?