“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

தமிழ்த் தேசியத்தின் இன்றைய வெளிப்பாடு

[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது.]

Siva Kumar ஐயா, தமிழ், தமிழ் தேசியம், 100 ஆண்டுகளாக வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் சமீபஆண்டுகளில் தான் இவ்வெறுப்பு அரசியல் துளிர்விடுகிறது, அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?

Marx Anthonisamy 1. ஒரு நூற்றாண்டாக வேரோடியுள்ள தமிழ்த் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உடையது இது. வட மொழி ஆதிக்கம், பார்ப்பன மயமாக்கல் ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தது அது. அது கூறிய வடவர் ஆதிக்கம் என்பது இன வெறுப்பின் அடிப்படையிலானதல்ல. மாறாக வட நாட்டு பண முதலைகள் மற்றும் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தது அது. அது என்னாளும் வடநாட்டிலிருந்து இங்கு வந்து எளிய தொழில்களைச் செய்து பிழைப்பு நடத்திவந்த தொழிலாளிகளையோ இல்லை 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து தம் மூதாதையர் மண்ணில் வேரிழந்த மக்களையோ எதிரியாகக் கட்டமைத்ததில்லை. அது என்றைக்கும் இங்குள்ள அருந்ததிய மக்களை, அவர்கள் தெலுங்கு பேசுகின்றனர் என்பதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கலாகாது எனச் சொன்னதில்லை. பெரியாரை தமிழின விரோதி எனச் சொல்லத் துணிந்ததில்லை. இன வெறுப்பு அரசியலைச் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தில் கொண்டதில்லை. மதிப்பிற்குரிய பெருஞ்சித்திரனார் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (பார்க்க: நான் எழுதிய ‘பெரியாரைத் துணைக் கொண்டவர்’ எனும் கட்டுரை).

2. தமிழ்த் தேசியத்தில் இரு போக்குகள் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த இரண்டாவது போக்கை உருவாக்கி முன்னெடுத்ததில் ம.பொ.சி, பெங்களூரு குணா போன்றோருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பைத் தணித்தனர். மாறாக தமிழகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களை எதிரியாக்கினர். இவர்களுக்கு இன்றளவும் பார்ப்பன ஆதரவு உண்டு, எல்லா மட்டங்களிலும் உண்டு. ஆனாலும் இவர்களுங்கூட எந்நாளும் பாசிச அரசியல் யுத்திகளைக் கையில் எடுத்ததில்லை.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பாக 1940 – 80 காலகட்டம் உலகெங்கிலும் பாசிசம் பின்னடைந்த காலம். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் பாசிசம் புத்துயிர்ப்புக் கொண்ட சூழலில் தற்போது உருவாகியுள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் (இதனைத் தமிழ்த் தேசியத்தின் மூன்றாவது கட்டம் எனலாம்), உலகளாவிய இந்தப் பாசிசச் சூழலின் ‘மாடலி’ல் இங்கு இன்று தம்மைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் நேரடியாக சிவசேனா முதலான பாசிச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மார்க்சீய வெறுப்பு மட்டுமல்ல அது முன்னெடுத்த வரலாற்று ஆய்வுகளில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்கின்றனர். சிவசேனா கட்சிக்கும் மோடிக்கும் பிராச்சாரத்திற்கு அம்மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

பெருஞ்சித்திரனார் அவர்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் மோடியை ஆதரிப்பார் எனக் கற்பனை கூடச் செய்ய இயலாது. ராஜராஜ சோழன் போன்றோரின் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ப் பொற்காலம் என நாக்கூசாமல் இன்று இவர்கள் சொல்வது போல அவர் சொல்லியிருக்க மாட்டார். பார்ப்பனமயமாக்கல் மட்டுமல்ல சமஸ்கிருத மயமாக்கலிலும் பிற்காலச் சோழ மன்னர்களுக்கு முக்கிய பங்குண்டு. கட்டாயமாகப் பெண்கள் கொண்டுவரப்பட்டு இங்கே கோவில்களில் தேவரடியார்கள் ஆக்கப்பட்டதை எல்லாம் தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனச் சொல்கிற அளவிற்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்கிறதே, தஞ்சைப் பிருகதீஸ்வரப் பெருவுடையார் கோவிலின் ‘கும்பாபிஷேக’ ஆயிரமாண்டுக் கொண்டாட்டத்திற்குச் சிறப்பு மலர் வெளியிடுகிறதே இந்தக் கொடுமைகளை எல்லாம் பெருஞ்சித்திரனார் போன்றோர் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு என்றெல்லாம் தமிழின் பெயரால் சாதிகளை அங்கீகரிக்கும் இழி நிலைக்கும் சென்றிருக்க மாட்டார்கள். தோழர் தமிழரசன் போன்றோரையும் நாம் இவ்வரிசையில்தான் வைத்துக் காண இயலும்.

ஒருவேளை இன்று ம.பொ.சி இருந்திருந்தால் அதைச் செய்திருக்கக்கூடும். சங்கராச்சாரிகளைப் போற்றத் தயங்காதவர் அவர். இந்து மாநாடொன்றில் கலந்து கொண்டு தமிழ் அடையாளத்தைக் காட்டிலும் இந்து அடையாளம் இன்னும் விசாலமானது எனப் பேசியவர் அவர். பெங்களூரு குணாவும் அதைச் செய்திருக்கக் கூடும். தமிழர்களின் காணியாட்சி என சோழர் கால நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைக் கொண்டாடியவர்களில் ஒருவர் அவர். மராட்டியராம் அம்பேத்கரை இங்குள்ள தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுகின்றனரே என நொந்தவர் அவர். அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றவர் அவர்.

குறைந்த ஊதியத்தில் உழைத்துப் பிழைக்க வந்து, எந்த விதப் பணியிடப் பாதுகாப்பும் இல்லாமல் இங்குள்ள ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் இந்தப் பிழைக்க வந்த அப்பாவிகளை அடித்துத் துரத்த வேண்டும் எனச் சொல்கிற பாசிச அரசியலுக்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்வதை நீங்கள் இந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ்த் தேசியத்தை ஒற்றைப் போக்குடையதாகக் கருத வேண்டியதில்லை.அதில் பலபோக்குகள் உண்டு. சாதி, இந்துத்துவம், சமஸ்கிருத மயம் ஆகியவற்றை எதிர்த்த போக்கை முன்னெடுத்துத் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் ஒரு பக்கம். இவற்றை முன்னிலையாக்காமல் இந்துத்துவத்துடன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சமரசம் கொண்டு தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இன்னொரு போக்கினர். இந்த இரண்டாவது போக்கினரும் கூட இங்கு செழித்திருந்த உள்ளடக்கும் பண்பாடு (inclusive political culture), உலகளாவிய பாசிச எதிர்ப்பு ஆகிய பின்னணியில் தங்கள் செயல்பாடுகளில் சிவசேனாவையும் இந்துத்துவ அமைப்புகளையும், மோடி போன்றோரையும் வெளிப்படையாக ஆதரிக்க இயலாது இருந்தமைக்கு அன்றைய இந்தப் புறச் சூழல்களே காரணமாயிருந்தன. இன்று காலம் மாறியுள்ளது. இந்த மாறியுள்ள சூழலைத்தான் “மோடி அலை வீசுகிறது” என்கிறார்கள். இந்த அலை வீச்சில் இவர்களின் சுய உருவம் வெளுத்து அம்பலமாகிறது.

தமிழ்த் தேசியர்களும் முஸ்லிம்களும்

(எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து..)

தமிழ் தேசியம் பேசுகிற சிலர் அல்ல, அத்தனை பேரிடமே எச்சரிக்கியாக இருக்க வேண்டும் என்றேன். குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சினைகளிலும், பா.ஜக எதிர்ப்பிலும் அவர்களை நம்ப முடியாது என்றேன். சுமார் 80.000 யாழ்ப்பாண முஸ்லிம்களை இரவோடிரவாக நாடுகடத்தி, இன்று வரை அவர்கள் புத்தளத்தில் அகதிகளாக சீரழிகிறார்களே, காத்தான் குடி பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை 100 க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றார்களே விடுதலைப் புலிகள் அதற்காக அவர்கள் தலைவர் பிரபாகரன் இறுதி வரை உளமார்ந்த வருத்தம் தெரிவிக்காததோடு மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் அவர்களிடத்திற்குத் திரும்பி வரலாம் என வாயாறச் சொன்னதும் இல்லை. அவரது தமிழக ஆதரவாளர்களும் இதுவரை அதற்கெல்லாம் வருத்தம் தெரிவிப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்தினேன்.

பா.ஜ.க, வலது, இடது கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் எல்லாமும் ஒன்றுதான் என ஒருமுறை அல்ல பலமுறை அ்ன்று அந்த மேடையில் பேசப்பட்டதை ஆணித்தரமாக மறுத்தேன். இன்றைய இந்துத்துவ பாசிச கருத்தியலை எல்லாம் ஆணித்தரமாக மறுப்பதற்கான ஆயுதங்களை நமக்கு வழங்கி இருப்பவர்கள் அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் இன்டெலெக்சுவல்கள். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் இந்துத்துவ சக்திகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துச் செயல்படுபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுந்தான். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவை ஈழத்தின் பெயரால் மேடை ஏற்றி தமிழக அரசியலில் இடம் அமைத்துக் கொடுத்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியவாதிகள்தான் என்றேன். இன்றளவும் அவர்களுக்கு அது குறித்து வருத்தமில்லை எனவும் சொன்னேன்.

காங்கிரஸின் மீது எனக்கும் வெறுப்பு உண்டு ஆனால் காங்கிரசும் பாஜகவும் ஒன்றா? காங்கிரசுக்கு இந்த அரசியல் சட்டத்தை கவிழ்க்க வேண்டும் என்கிற மறைமுக அஜென்டா கிடையாது, ஆனால் பாஜகவிற்கு உண்டு; காங்கிரசுக்குப் பின்னால் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்கிற ஒரு அப்பட்டமான பாசிச அமைப்பு கிடையாது, ஆனால் பா.ஜ.கவுக்கு உண்டு; காங்கிரசின் வன்முறை அரச வன்முறை மட்டுந்தான். ஆனால் பாஜகவின் வன்முறை அரச வன்முறை மட்டுமல்ல, எண்ணற்ற பல வன்முறை அமைப்புகளின் மூலம் அவர்களைப்போல காங்கிரஸ் வன்முறையை ‘அவுட் சோர்ஸ்’ பண்ணுவதில்லை; பன்சாரேயையும், கல்புர்கியையும், தபோல்கரையும் கொன்றது யார்? காங்கிரசின் போலீசா இல்லை பாஜக கும்பலின் அடியாட்களா? என்று கேட்டேன்.

இன்று ஆட்சியில் அமர்ந்து மிகக் கடுமையான முறையில் மாணவர்கள் உள்ளிட்டு கருத்துமாறுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு கொண்டு, உலகமே கண்டிக்கும் வகையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவைப்பற்றி, ஒரு முஸ்லிம் மேடையில் நின்று கொண்டு பாஜகவும், காங்கிரசும் ,கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுதான் எனச் சொல்வது அந்த மூன்று கட்சிகளையும் இழிவு செய்வது மட்டுமல்ல, அது பா.ஜகவிற்கு சூத்து கழுவும் வேலை எனவும் சொன்னேன்.

அதுமட்டுமல்ல ஏழு தமிழர்கள் விடுதலை பற்ரி நாமும் பேசினோம்; பேசுகிறோம்; மாநாடுகளும் போட்டோம். ஆனால் நாம் அத்தோடு நிறுத்தவில்லை. கூடுதலாக இதோ இன்றும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் வாடும் 49 முஸ்லிம் தமி்ழர்களின் விடுதலைக்காகவும் போராடுகிறோம். நீங்கள் மேடை போட்டால் வந்து முழங்கும் இவர்கள் என்றைக்காவது 49 + 7= 56 தமிழர்கள் என முஸ்லிம்களையும் சேர்த்து வாயாற தமிழர்கள என அழைத்து அவர்களின் விடுதலையை இவர்கள் பேசியுள்ளார்களா? யோசித்துப் பாருங்கள் என்றேன். அது மட்டுமல்ல இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். கன்னையா குமார் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தபோது “இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்” எனச் சொல்லிவிட்டானாம் அந்த 20களைத் தாண்டாத சிறுவன். நம் அனைவராலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்ய முடியாததைச் செய்தவன் அவன். இன்று உலகமே பாஜக அரசைக் கண்டிக்க வைத்தவன் அவன்.

அகில் பில்கிராமி போன்ற தத்துவவியலாளர்கள் எல்லாம், சிறுபான்மையர், தலித்க்ள், விவசாயிகள், எளிய தொழிலாளிகள்” இவர்களின் அரசியலைப் பேசியவன் எனவும், எந்த தேர்தல் நோக்கமும் இல்லாமல் அவர்களை இணைத்தவன் எனவும், அவனிடம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்வும் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் மேடையிலிருந்து கன்னையா குமாரைக் கேலி செய்து ஒலிக்கிறது ஒரு குரல். அத்தனை கொடிய நிபந்தனைகளுடன் இன்று அவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். ஆயுள் வரை சிறையில் அடைக்கத்தக்க பிரிவுகளில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவன் அவன். நகத்தில் அழுக்குப் படாமல் அரசியல் செய்பவர்கள் இன்று அவனை உங்கள் மேடையில் நின்று கேலி செய்கிறார்கள். இதையும் சொன்னேன் அங்கு.

இலங்கைக்குச் சென்று வந்து ஒன்றரை மணி நேரம் அங்கு தமிழர்களின் வேதனைகளையும் இராணுவக் கொடுமைகளையும் பேசிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் தலிதகள், முஸ்லிம்கள் எனப் பேசத் தொடங்கியவுடன், “இனி ஒரு வார்த்தை பேசினால் உன் கையை வெட்டுவோம்” என என் கூட்டத்தில் வன்முறை செய்தார்களே அவர்கள் எந்தெந்த அமைப்பினர் என அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ஹாஜாகனி. அதில் ஒரு சாரார் சீமான் ஆட்கள். இன்னொரு சாரர் யார் எனக் கேட்டுப் பாருங்கள். எனக்கும் அவர்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கலா? முஸ்லிம் கள் பற்றிப் பேசக் கூடாது, தலித்கள் பற்றிப் பேசக் கூடாது என்றுதானே அந்த வன்முறை. அதை நீங்கள் எல்லாம் அன்று கேட்டிருக்க வேண்டும் ஹாஜாகனி. உங்கள் இதழ்களில் கண்டித்து எழுதியிருக்க வேண்டும். ஆளூர் ஷா நவாஸ் சீமானிடம், “என்ன இப்படி மார்க்ஸ் கூட்டத்தில் உங்கள் ஆட்கள் இப்படிச் செய்துள்ளார்களே” எனக் கேட்டதற்கு அந்த ஆள் என்ன சொன்னார் என்பதை நவாசிடம் கேட்டுப்பாருங்கள்.

சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைகட்கே இவர்களும் முக்கியத்துவம் கொடுத்து இயங்கினாலும், தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உண்டு என்பதை ஏற்று சாதிப் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, கூடங்குளப் போராட்ட ஆதரவு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏதோ இதையும் செய்தோம் என்றில்லாமல் உண்மையான அக்கறையுடன் இவற்றையும் முன்னெடுப்பர்.

பல்லாயிரம் ஊதியம் பெறும் கார்பொரேட் ஊழியர்கள் குறித்தும் கார்பொரேட் பணிக் கலாச்சாரம் குறித்தும் சில கருத்துக்களைச் சில நாட்கள்முன் இப்பக்கத்தில் நான் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பார்த்திருக்கலாம். முதலாளியத்தின் அனைத்து ஊழல்களுக்கும் வாரிசாக உள்ள இன்றைய கார்பொரேட்களிடம் கை பொத்தி, மெய்யடக்கிச் சேவகம் புரியும் இவர்கள் என்னாளும் தம் நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், மூன்றாம் உலக மக்களின்மீது இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றி ஆகியன குறித்து ஒரு கேள்வியையும் கூட எழுப்பத் தயாராக இல்லாதவர்கள். எழுப்பினால் அடுத்த கணம் என்ன நடக்கும் என உணர்ந்த இவர்கள் தம் மனிதாபிமானத்தைக் காட்ட ‘நல்ல காரியங்களுக்கு’ நன்கொடை அளிப்பார்கள் நன்கொடை அளிப்பார்கள். சமூக நலப் பணி செய்வார்கள், உள்ளூர் அரசுடன் பெரிய அளவில் முரண்படாத வகையில் போராட்டங்களும் நடத்துவார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தம் நிறுவனத்தில் நடக்கும் அநீதிகள் குறித்துக் குரல் எழுப்ப மாட்டார்கள். ஒரு சங்கம் அமைக்க முயற்சிக்க மாட்டார்கள். கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அந்த வகையில் அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் அவற்றின் எத்தனையோ குறைகளுக்கும் அப்பால், ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதையும், தம் துறை சார்ந்த அரசு கொள்கைகளை விமர்சிக்கத் தயங்காததையும், சக ஊழியர்களுக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்பதையும், பல நேரங்களில் வெற்றி ஈட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சேவ் தமிழ் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அவர்களிடமும் இந்தக் குறைபாடுகள் உள்ளபோதும், இவற்றையெல்லாம் தாண்டி, உண்மையான சமூக அக்கறையும், ஏதாவது சமூகத்திற்குச் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பும் உள்ளவர்கள். பணியிடத்திலும் அநீதிகளை எதிர்க்கிற, தொழிற் சங்கம் அமைத்துப் போராடுகிற வாய்ப்பும் இவர்களுக்கு இருந்திருக்குக்குமேயானால் இவர்களின் பார்வையும் பணிகளும் இன்னும் கூர்மையடையுமே, ஒரு அறம் சார்ந்த அரசியல் விகசிப்பு ஏற்படுமே என நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்றைய கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

சரி, அது இருக்கட்டும். இன்று காலை இவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தோழி என்னுடன் தொடர்பு கொண்டு உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள தோழர் தியாகு அவர்கள் குறித்து உரிய ஊடகக் கவனம் இல்லாத நிலை குறித்துப் பேசினார். பேச்சு சமீபத்தில் இவர்களின் ‘சேவ் தமிழ் இயக்கம்’ முன்நின்று நடத்திய ‘பன்னாட்டு மாணவர் மாநாடு’ பற்றித் திரும்பியது. இலங்கையில் நடைபெற உள்ள ‘காமன்வெல்த்’ மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் “பன்னாட்டு” மாநாட்டில் முக்கியக் கதா நாயகனாக நிறுத்தபட்ட நபர் வை.கோ. அவரை மாநாட்டிற்கு அழைக்கப்போன நாளிலிருந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் முகநூல் பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குஜராத் 2002க்குப் பின்னும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் இந்த வைகோ. ‘திராவிட’ என்கிற சொல்லைத் தன் கட்சிப் பெயரில் சுமந்திருந்தாலும் எந்நாளும் இந்துத்துவ விசுவாசத்தைக் கைவிடாதவர். ‘சேவ் தமிழ் இயக்கம்’ சென்ற மாதம் நடத்திய அந்த ஈழ ஆதரவு மாநாட்டிலும்கூட வைகோ, “மதவாதம் குறித்த பிரசினைகளை எல்லாம் கூட இன்று சற்று மறப்போம். ஈழப் பிரச்சினையை முன்னெடுப்போம்” என்கிற பொருள்படப் பேசியுள்ளார்.

இன்று என்னுடன் தொடர்பு கொண்ட தோழியிடம் நான் இதுபற்றிச் சொன்னபோது, “அப்படியெல்லாம் அவர் அங்கே பேசினார்னு யாரும் சொல்லலியே” என்றார். மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பார் போலும். அதோடு தமது மாநாட்டில் முக்கிய பேச்சாளர் இவ்வாறு கூற நேந்தது குறித்த விவாதம் அவர்களுக்குள் நடைபெறவில்லை போலும். விவாதிக்கிற அளவுக்கு இதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

இறுதியில் அந்தத் தோழி, மோடியின் நண்பரும், இன்று இந்துத்துவ சக்திகளுடன் தேர்தல் கூட்டணியை வெட்கமின்றி அறிவித்துள்ளவருமான வைகோவைத் தங்கள் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைத்தது குறித்து இப்படிச் சொன்னார் : “இல்லை, நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர் என்கிற ஒரே அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே வைகோவை அழைத்தோம்”.

நான் என்ன சொல்வது? சரிதான். இங்குள்ள மக்களின் பிரசினைகள் ஒரு பொருட்டில்லை என்றால் அவர்களின் அளவுகோல் சரிதான். ஆனால் ஈழப் பிரச்சினையில் வைகோ அளவிற்குக் கடந்த காலத்தில் தீவிர ஆதரவு காட்டிய, இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பன்னாட்டு மாநொடொன்றில் பங்குபெற்று தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசிய பா.ம.க தலைவர்களுக்கு ஏன் வைகோவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அம் மாநாட்டில் அளிக்கப் படவில்லை?

நம்மைப் பொருத்த மட்டில் பா.ம.கவை அழைக்காததின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே தர்க்கம் ஏன் வைகோவுக்குப் பொருந்தவில்லை? பா.ம.கவை அழைக்கக் கூடாது, ஆனால் வைகோவை அழைக்கலாமா?

இங்கே மத அடிப்படையிலான ஃபாசிசம் உங்களுக்குப் பிரச்சினை இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு அளவில் இந்துத்துவக் கருத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளனவா? அதை உசுப்பி விடுவதுதான் இந்துத்துவ சக்திகளின் பணியாக உள்ளதா?

சரி, இப்படி ஈழப் பிரச்சினையே அடிப்படை அளவுகோல் என்பவர்கள் சாதி பிரச்சினைகளிலாவது முழு நியாயத்துடன் நடந்து கொள்வார்களா?

‘சேவ் தமிழ் இயக்கம்’ தற்போது ‘தமிழ்நாடு மக்கள் கட்சி’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக அறிகிறோம். நல்லதுதான் அமைப்புகள் பிளவுபட்டுக் கொண்டே போகிற நிலையில் இவ்வாறான இணைவுகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. இதுவரை அகில இந்திய மற்றும் பொதுவுடைமை அடையாளங்களின் கீழ் இயங்கிய ஒரு மா.லெ பிரிவு இப்போது இப்படியாக தம்மைத் தமிழ் அடையாளத்திற்குள் சுருக்கிக் கொண்டு தமிழ் நாடு மக்கள் கட்சி என்பதாக இயங்குகிறது.

சமீபத்தில் அவ்வமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள தோழர் தங்கத் தமிழ் வேலன் ஆசிரியர் வேலைகளுக்கான ‘டெட்’ தேர்வில் தமிழக அரசு இட ஒதுக்கீடு கடைபிடிக்காமை குறித்து ஒரு பிரச்சார இயக்கம் நடத்துவது குறித்து எங்களுடன் பேசினார். தங்கத் தமிழ் வேலன் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர். இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.

லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நான், பேரா. ப.சிவகுமார், பேரா. மு.திருமாவளவன் ஆகியோர் முன்நின்று இது குறித்து ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளித்தோம். ப்ரெஸ் மீட் ஒன்றும் நடத்தினோம். ஓரளவு இப் பிரச்சினையைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து அடுத்த ‘டெட்’ தேர்வும் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் டெட் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றை நடத்துவோம் என நாங்கள் சொன்னதைத் தங்கத் தமிழ் வேலனும் ஏற்றுக் கொண்டார். நாளும் குறிக்கப்பட்டது.

எங்கள் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு சென்ற மாதம் இந்தப் போராட்ட நாளில் எல்லோரும் காத்திருந்தோம். முதல் நாள் இரவு 11 மணிக்கு பேரா.மு.திருமாவளவனிடமிருந்து எனக்கொரு தகவல் வந்தது. அவரும் அக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றில் உள்ளார். ‘டெட்’ போராட்டம் காரணம் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் அவர் சொன்ன செய்தி.

தினம் என்னுடன் பேசி வந்த தமிழ் வேலன், அதற்குப் பின் இன்று வரை தொடர்பிலில்லை.

டெட் தேர்வில் இட ஒதுக்கீட்டிற்கான இப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான ஒரே காரணம், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு அவர்களிடம் முன்னுரிமை இல்லை என்பதுதான்.

பின் வேறெதற்கு முன்னுரிமை?

வைகோவைக் கதாநாயகனாக்கி ஈழ ஆதரவு மாநாடு நடத்துவதற்குத்தான். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டு முழக்கங்களுக்கிடையில் கரைந்து போனது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கியுள்ளதுபோல இங்கும் ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை.