நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23
கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத் தொடர்புகளின் ஊடாக பர்மா (Myanmar), தாய்லந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம் ஆகியவற்றில் பவுத்தம் பரவியது. பொதுவில் தென்கிழக்காசிய பவுத்தத்தைத் தேரவாதம் எனச் சொல்வது வழக்கம். எனினும் பாலி மொழியில் புனித நூற்கள் எழுதப்பட்ட தென்கிழக்காசிய தேரவாதத்திற்கும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் பயிலப்படும் சமஸ்கிருதமயப்பட்ட வடக்கத்திய மகாயனம் மற்றும் தந்திராயனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. தாய்லாந்து மற்றும்பர்மிய பவுத்தர்கள் பொதுவில் தம்முடைய பவுத்தத்தை கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகரது காலத்திய துறவிகளான சோனா மற்றும் உத்தரா ஆகியோரால் தம்முடைய தங்கத் தீபகற்பத்திற்கு (ஸ்வர்ணபூமி) கொண்டுவரப்பட்ட ஒன்றாகக் கருதுவதே வழக்கம். அந்த வகையில் தம்முடையதைத் தேரவாத மரபு சார்ந்தது எனச் சொல்வர்.
“தொலைதூர இந்தியா” (Farther India) என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர்த்த தென் கிழக்காசியத் தீவான இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், இந்தோசீன தீபகற்பம் உள்ளிட்ட கங்கைக்கு அப்பாலான இந்தியப் பகுதிகள் ஆகியன அடங்கும். முற்றிலும் வங்க அடையாளங்களுடன் கூடிய அஸ்சாமும் இந்தியத் தாக்கத்திற்கு ஆட்படாத வடக்கு வியட்நாமும் இந்தத் ‘தொலைதூர இந்தியா’வுக்குள் வராது (G.Coeds, Indianized States of South Asia (Ed by Wlter F Vella, Australian National University Press, Canberra, 1975). இந்திய மதங்களான இந்துமதம், பௌத்தம் ஆகிய இரண்டின் தாக்கங்களும் இந்தத் தொலைதுர இந்திய உருவாக்கத்தில் உண்டெனினும் பவுத்தத் தாக்கம் கூடுதல்.
தொடக்கத்தில் அது தங்கபூமி. பின் அது மசாலாப் பொருட்கள் (spices), கற்பூரம், சந்தனம் முதலான வாசனை மரங்களுக்குப் பெயர் பெற்ற நிலப்பகுதி, பின் ரப்பர், டின், எண்ணை என வணிகத் தொடர்புகள் இன்னும் தொடர்கின்றன. வணிகத்திற்கு அப்பால் பண்பாட்டு ரீதியான தாக்கம் ஏராளம். அதன் மொழி வழக்கில் கலந்துபோன சமஸ்கிருதக் கூறுகள், எழுத்துருக்கள், இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகக் கூறுகளின் தாக்கம் என நிறையக் கண முடியும். இஸ்லாமாக மாறிய பகுதிகளிலும்கூட இந்தத் தொடர்ச்சியை நாம் இன்னும் காண முடிகிறது. சிற்பம், கட்டிடக் கலை ஆகியவற்றில் பவுத்தத்தாக்கம் ஏராளம். 2016 ல் தாய் இளவரசர் Maha Vajiralongkorn மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது தமிழில் பாசுரங்கள் ஓதப்பட்ட செய்தி அப்போதைய நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது (Times Of India, Nov 08, 2016). ‘மணிமேகலை’ எனும் கடற் தெய்வம் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தத் தொலைதூர இந்தியாவுக்கும் பொதுவாக உள்ளது குறித்து நாம் இந்தத் தொடரில் வேறு சில சந்தர்ப்பங்களிலும் பேசியுள்ளோம். பல தமிழ்ச் சொற்களும் கிட்டத்தட்ட அதே ஒலிப்புடன் அங்கு பயிலப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில: தங்கம் (தொங்கம்) குரு (க்ரு). அப்பா (பா), புத்ரன் (புத்ரு). மாலை (மாலெ).
இதில் மிகவும் வேடிக்கை என்னவெனில் இந்தியர்களும், தமிழர்களும் கிழக்கு நாடுகளுக்குத் தாம் அளித்த இந்தக் கொடையைச் சமீப காலம் வரை மறந்திருந்ததுதான். ஃப்ரெஞ்ச் மற்றும் டட்ச் மொழிகளை அறிந்து பாரிஸ் மற்றும் லெய்டன் பல்கலைக் கழகங்களில் பணி செய்த சில பேராசிரியர்கள்தான் முதன் முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது (Sylvain Levi, Pour L’Histoir du Ramayana, JA, January, February, 1918, Page 80 ff).
துறைமுக நகரமான நாகப்பட்டிணத்தில் இருந்த பௌத்த நிறுவனங்களுக்கும் ஜாவா மற்றும் சுமத்ராவிலிருந்த சைலேந்திர மன்னர்களுக்கும் முதலாம் ராஜராஜன் காலந் தொடங்கி நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதை அவனது அகன்ற லெய்டன் செப்பேடு பதிவு செய்கிறது. ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த மாறவிஜயோத்துங்க வர்மனால் நாகப்பட்டிணத்தில் கட்டப்பட்ட அழகிய சூடாமணி விகாரை குறித்த பதிவு அதில் உள்ளது (K.V.Subramaniya Aiyer, The Larger Leiden Plates, Epigraphia Indica 22/6, (1934), 241, 42). புத்தர் மற்றும் எதிர்கால மைத்ரேய புத்தர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் நாகையில் கிடைத்துள்ளன. சைலேந்திரா என்பது மலையின் இந்திரன் எனப் பொருள்படும் சொல். நாகையில் சீனர்கள் கட்டிய ‘பகோடா’ ஒன்றும் இருநூற்றாண்டுகளுக்கு முன்புவரை இருந்துள்ளதும் நினைவுகூரத் தக்கது. ஜாவாவின் மையமாக உள்ள பாராபுதூரில் உள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்தச் சின்னத்தில் உள்ள இந்தியத் தாக்கங்கள் குறித்து விரிவான பதிவுகள் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்தியாவையும் (அதாவது தமிழகத்தையும்) தென் கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு இலக்கிய ஊடகமாக மணிமேகலை இருந்தது என்பார் ஆனே மோனியஸ் (Anne E Monius, Imagining a Place for Buddhism, Navayana, 2009, Page 110). ஒரு இலக்கிய மொழியாக அமைந்து தென் இந்தியா எனும் மைய நிலத்தை (Main Land) சாவகம் எனுன் விளிம்புடன் (periphery) ஒரு ஒற்றை மத நம்பிக்கையுடன் கூடிய குமுக அலகாகவும் பவுத்த உலகாகவும் இணைக்கும் பணியை தமிழ் நிறைவேற்றுகிறது என்பார் மோனியஸ்.
மணிமேகலைக் காப்பியம் இவ்வாறு ஒரு ஒற்றை இலக்கிய பிரபஞ்சத்துக்குள் சாவகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பணியை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிலேயே ஒரு தொலைப் பார்வையுடன் செய்தபோதும், அது எதார்த்தமாக நிகழ்வதற்கு இன்னும் ஏழெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஜாவாவை (சாவகத்தை) தனது முக்கிய களங்களில் ஒன்றாகச் சாத்தனார் தேர்வு செய்ய நேர்ந்தது எங்ஙனம்? தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே சாத்தனாரின் காலத்தில் அதிக இலக்கிய வளம் மிக்க பகுதியாக ஜாவாதான் விளங்கியது என்பதை மோனியஸ் சுட்டிக் காட்டுவார். தவிரவும் ஸ்ரீவிஜயத்தின் ஜாவா- சுமத்ரா அரசுப்பகுதிதான் சமஸ்கிருதக் கல்வியிலும் அப்போது சிறந்து விளங்கியிருந்தது. “நாகராக்ருதாகம” எனும் ஒரு காவியத்தை ‘காஞ்சிபுரி’ யைச் சேர்ந்த ஸ்ரீபுத்தாதித்யா என்றொரு கவி பதினான்காம் நூற்றாண்டில் இயற்றியுள்ளது குறித்து இந்தத் தொடரில் நான் முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.
மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களில் கடற் கடவுளாக இருந்து எதிர்கால புத்தர் ஒருவரைக் காப்பாற்றிய தெய்வமாகவும், கடல் விபத்துகளில் காப்பாற்றும் தன் கடமையைச் சிலகாலம் தவறி இருந்த தெய்வமாகவும், பத்தினி (கண்ணகி) மற்றும் கோவலனுடன் நெருக்கமாக உறவு கொண்டவராகவும் ஜாதகங்களிலும் நாடுப்பாடல்களிலும் மணிமேகலை ஏராளமாக இடம் பெறுவதும் குறிப்பிடத் தக்கது.
இனி நாம் நாகபுரத்தை அடைந்த மணிமேகலையைத் தொடர்வோம்.
நாகபுரத்தின் அப்போதைய மன்னனான புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாக அவதரித்திருந்தவன். தருமசாவகன் தனது மன்னனைப் புகழ்ந்து உரைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் தன் உரிமைச் சுற்றத்துடன் அங்கு வந்தான். தருமசாவகனைக் கண்டு வணங்கினான். அறம், மறம், நிலையாமை, நித்தியம், துக்கம், உடலை விட்டுப் பிரிந்த உயிரின் நிலை, பேதமை முதலான பத்துவகைச் சார்பின் தோற்றம், சார்பை அறுத்து உய்தி பெறும் வழி முதலானவற்ரை அவன் அரசனுக்கு எடுத்துரைத்தான். அரசனும் அவற்றை அமைதியாய் ஏற்றுக் கொண்டான்.
பின் அருகிருந்த மணிமேகலையை நோக்கினான் மன்னன். இணையற்ற அழகுடையவளாக இருந்தும் அவளது கண்ணசைவுகள் காமனுக்குத் துணை சேர்க்காததைச் சுட்டிக்காட்டித் தன் அழகிய கைகளில் பாத்திரத்துடன் நிற்கும் இவாள் யார் என வினவினான். அப்போது அரசனுடன் வந்திருந்த கஞ்சுகன், தான் கிள்ளிவளவனைச் சந்திக்க புகார் சென்றபோது அறவண அடிகளீடம் இவள் பிறப்பை அறிந்து வந்து அரசனுக்குரைத்ததை நினைவூட்டினான்.
மணிமேகலை பேசலுற்றாள். “என் கையில் இப்போதுள்ள இப்பாத்திரம் முன்னொரு பிறவியில் உன்கையில் இருந்த ஒன்றுதான். நீ இப்போது உன்னிடம் செர்ந்துள்ள பெருஞ்செல்வத்தில் மயங்கி நிற்கிறாய். எனவே நீ அதையெல்லாம் இப்போது அறியாய். அந்தப் பிறவியை அறியாத போதும், பசு ஒன்றின் வயிற்றில் பிறநதுள்ள இப்பிறப்பினையும் நீ அறியாமற் போனதென்ன? மணிபல்லவம் சென்று அங்கு பீடிகையை வலம்வந்து வணங்கினாலன்றி பற்றுக்களுடன் உன்னைப் பிணிக்கும் பிறவியின் தன்மையை நீ அறியாய். ஆதலின் நீ அங்கு வருவாய் அரசே!” – என மணம் மிக்க மாலையை அணிந்து நின்றிருந்த அரசனிடம் கூறி அவ்விடம் விட்டகல ஆயத்தமானாள்.
வானத்தில் எழுந்த மணிமேகலை கதிரவன் மேற்திசையில் வீழும் முன் வானிலிருந்து இறங்கிப் பூக்களின் நறு மணத்துடனும், சுருண்டெழும் அலைகளுடனும் விளங்கும் மணிபல்லவத் தீவை அடைந்து வலம் வந்தாள். பிறவிப் பிணியை அறுக்கும் மாதவனது பாதபீடிகையின் தரிசனம் கண்டவுடன் அதைத் தொழுது வலம் வந்தாள். தன் பழம் பிறப்பையும் உணர்ந்தாள்.
மணிமேகலை அவ்வாறு தொழுதிருந்த அதே நேரத்தில் அம் மலர்வனத்தை விட்டகன்ற மன்னன் புண்ணியராசன் தன் நகரடைந்தான். அங்கே அவனது வளர்ப்புத்தாயான அமரசுந்தரி அவனது இப்பிறவி வரலாற்றை உணர்த்தினாள். தந்தை முனிவனாகவும் தாய் பசுவாகவும் கொண்டு பிறந்த அவனது பிறப்பும், மாமுனிவன் அருளினால், எல்லா மானுடப் பிறவியும் போலன்றி குடல் மாலையால் சூழப்படாமல் தான் ஆங்கொரு பொன் முட்டையுள் அடங்கிப் பசு வயிற்றினுள் இருந்து, மக்கட்பேறு இல்லாத மன்னன் பூமிசந்திரனால் கொண்டுவரப் பெற்றதையும் அவ்வளர்ப்புத் தாயின் வாயால் கேட்ட ஆபுத்திரன் மிகுதியான துயரடைந்தான்.
சென்ற பிறவியில் தன் தாய் செய்த செயலையும், இப்பிறவியில் தானடைந்துள்ள நிலையையும் ஒரு கணம் நினைவுகூர்ந்தான் மன்னன். ஒரு பக்கம் மன்னர்கள் அவன் செவ்விக்காகக் காத்துக் கிடக்கின்றனர். அரசானாக இருந்து மேலோர்களைப் பேணியும், நாடகம் கண்டும், பாடல்களையும் இன்னிசையையும் கேட்டுக் கொண்டும், தேவியர்தம் ஊடல்களை அனுபவித்துக் கொண்டும், தான் பணிந்து அவற்றை முடிவுக்குக் கொணர்ந்தும், அவர்தம் அழகிய மார்பகங்களில் குங்குமச் சாந்தால் எழுதியும், மலர்களை அவர்களின் சுருண்ட குழலில் சூட்டியும், நறுமுகைகளின் உள்ளே பொதிந்து கிடக்கும் அமுது போன்றதாகிய அவர்களின் சிவந்த வாயூறலை உண்டும், அவர்தம் மதிமுகத்தில் அலையும் கருங்கண்களின் செம் முனைகள் கலங்குமாறு மன்மதன் மலரம்புகளைத் தூவ, காமக் கள்ளையுண்டு மகிழ்ந்திருக்கும் தன் போக வாழ்வை இகழ்ந்து, “பற்றறுத்துத் துறத்தலே நன்று” என வாய்விட்டு அரற்றினான்.
“தெளிந்த உணர்வுடைய நாதமுனி என் செவியிலிட்ட அறநெறி வித்து இன்று மணிமேகலையைக் காரணமாகக் கொண்டு பழுதற விளைந்தது” என்று பலவாறும் புலம்பினான் புண்ணியராசன்.
“ஆகா, மனம் வேறாயினான் மன்னன்” என உணர்ந்த அமைச்சன் சனமித்திரன் அவனைத் தொழுது வணங்கி, “என் சொற் கேட்பீர் ! நின் தந்தை உம்மை அடைவதற்கு முன்பாக உம் நாடு மழைவளமற்று, பெற்றதாய் தன் குழந்தைக்கு இரங்காமல், கிடைக்கும் உணவைத் தானே உண்ணும் நிலைக்குச் சரிந்திருந்தது. வெங் கோடை நாளொன்றில் சூல் கொண்ட கருந்திரள் மேகம் ஒன்று எழுந்ததுபோல நீ தோன்றினாய். அன்று முதல் இன்றுவரை வானம் பொய்க்கவில்லை; நிலவளம் குன்றவில்லை; ஊனுயிர்கள் உறுபசி அறியா நிலை எய்தின. இந்நிலையில் நீ எல்லாவற்றையும் விட்டகன்றால் இந்நாடு முழுதுமே தாயற்ற குழந்தை எனும் நிலையை எய்தும்.
“துயர்நிலை பெற்ற இவ்வுலகை அத்துயர் நீக்கிக் காத்தலன்றி, நீ மட்டும் உயர்நிலை உலகம் ஒன்றை விரும்பிச் செல்வாயாயின் உயிர்கள் அனைத்தும் இறுதி எய்தும்; தன்னுயிரை முதன்மையாகக் கருதாத புத்ததேவன் உரைத்த நெறியும் இதுவல்லவே”- என்று அறம் உரைத்தான் அமைச்சன்.
அமைச்சன் உரைத்த அறவுரை கேட்ட மன்னன், “மணிபல்லவத்தை வலம் கொள்ள எழுந்த என் வேட்கை அத்தனை எளிதாகத் தணியாது. அதனால் அரசையும், மக்களையும் ஒருமாத காலம்வரை காத்துவருதல் நின் கடன்” – எனக் கூறியவாறு எழுந்து மரக்கலம் செய்யும் கம்மியரை “வருக” என அழைத்துத் தன் மரக்கலத்தே ஏறினான். அம்மரக்கலமும் இடை நிற்காது சென்று மணிபல்லவத்தை அடைந்தது. அங்கே மணிமேகலை காத்திருந்தாள். இருவரும் தீவை வலம் வந்தனர். முற்பிறவியை உணர்விக்கும் பீடிகையை மணிமேகலை அவனுக்குக் காட்டினள். ஒரு தூய கண்னாடிபோல அவன் முற்பிறவியை பீடிகை அவனுக்கு உணர்த்தியது.
“என் பிறப்பறிந்தேன். என் இடர் தீர்ந்தேன். தென்தமிழ் மதுரையின் அழகிய கலைப் பாவையே! இரந்துண்ணும் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட என்னிடத்தே, வந்தோர்க்கு அருந்துவதற்குரிய உணவேதும் காணாது வருந்துவோனாகிய என் கையிலே, ‘நாடே வறுமையுற்ற போதிலும் இந்த ஓடு மட்டும் வருமையுறாது. எழுந்து இதனை ஏற்றுக் கொள்!’ – எனக் கூறி அமுதசுரபியைத் தந்து என் பிறவி அறுத்த பாவையே! உணர்வில் தோன்றி, மெய்ப்பொருள் உணர்த்தி அருளும் அணிதிகழ் அவிரொளி மடந்தையே! தேவராயினும், பிரமராயினும், அவர்களின் நாவால் எழும் குற்றத்தைக் கழுவித் தூய்மையாக்கும் நின் திருவடிகளைப் பிறவிகள் தோறும் போற்றுதலன்றி மறந்தும் வாழேன் இனி நான்!” – எனச் சிந்தாதேவியைப் போற்றி நின்றான் முற்பிறவியில் ஆபுத்திரனாக வழ்ந்து இப்பிறவியில் புண்ணியராசனாய்ப் பிறப்பெடுத்தவன்.
(அடுத்து மணிமேகலை வஞ்சி சென்று கண்ணகியின் அறிவுரை பெறுதல்)