அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

@ @ @

பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக்கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து அரசு பல்கலைக் கழகங்களையும் பத்து தனியார் பல்கலைக் கழகங்களையும் இப்படி “உயர் சிறப்புப் பல்கலைக் கழகம்” எனப் பிற பல்கலைக் கழகங்களிலிருந்து தனியே பிரித்து உயர்நிலை நிறுவனங்களாக மாற்றப்படுவது குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கல்வி உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பாஜக அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் அப்போதே இப்படிப் பல்கலைக் கழகங்களில் உயர்வு – தாழ்வுத் தரவேறுபாடுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால் “உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டம்” எனக் கூறிக்கொண்டு பாஜக அரசு கல்வியாளர்களின் இந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக இருந்து இறுதியில் அதை இன்று இப்படி நடைமுறைப் படுத்தவும் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக ஒதுக்கி மேம்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மட்டும் ஒவ்வொன்றுக்கும் 1000 கோடி அளிக்கப்படும் என இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. . இது தவிர மேலும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனக்களும் இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிறுவனங்களில் 100 மாணவர்களைச் சேர்த்தால் அதில் 30 பேர்கள் வரை வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் எனவும், தகுதி – தர அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் என்பதன் பொருள் நமது மாணவர்கள் 30 பேர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுதான். அது மட்டுமல்ல ஆசிரியப் பணியில் 25 சதம்வரை வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 20 சதம் வரை “ஆன் லைன்’ முறையில் கல்வி பயிற்றுவிக்கவும் இவற்றுக்கு அனுமதி உண்டு.

பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் இந்த நிறுவனங்கள் எவற்றை வேண்டுமானாலும் உள்ளடக்கிக் கொள்ளலாம். (complete flexibility in curriculum and syllabus). இது பொறியியற் கல்விக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையையும் பாடமாகச் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு வழி செய்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பாடங்களில் இது என்ன மாதிரித் தகிடுதத்தங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை என்னவெனில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இந்நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களாயினும் சரி, உள் நாட்டு மாணவர்களாயினும் சரி UGC, ACTE முதலானவற்றின் ஒப்புதல் எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாமே நம்மவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியதுதான். தகுதி, திறமை எனும் பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவுகள் உயர் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பல்கலைக் கழக மான்யக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் கடிதம் ஒன்றை [D.O.No. 1 – 18 / (CPP.II)] அனுப்பியுள்ளது. அதில், ”தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ’தேசிய கல்விக் கொள்கை (2020) இன் அடிப்படையில் உரிய சீர்திருத்தங்களைச் (governance reforms) செய்தாக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்தமாதத் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா ஒரு அதிரடி நடவடிக்கையைச் செய்தார். அப்பல்கலைக் கழகம் IoE நிலை பெறுவதற்குத் தேவையான முதலீடான 1500 கோடி ரூபாய்களையும் தானே திரட்ட முடியும் எனவும், தொடர்ந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய்களையும் தன்னால் திரட்டமுடியும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது அம்பலமானவுடன் இப்போது இந்த IoE பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது,.

இந்தப் பெருந் தொகையை ஒரு பல்கலைக் கழகம் எப்படித் திரட்ட முடியும்? மாணவர் கட்டணம், தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் ஆகிவற்றை எல்லாம் உயர்த்தாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

இல்லை IoE க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தொலைக் கல்வித் திட்டங்களை அறிவித்துக் காசு திரட்டப் போகிறார்களா? பின் எப்படி இந்த நிதியைத் திரட்டப் போகிறார்கள்? சூரப்பர் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?

கல்வி இன்னும் மத்திய மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதையும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என்பதையும் சூரப்பர் மறந்தாரா? இல்லை அதுவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளில் ஒன்று என நினைக்கிறாரா?

இப்படி அவர் மாநில அரசின் ஒப்புதல் எல்லாம் இல்லாமல் முடிவெடுப்பது இது முதல் முறையல்ல. தோல்வியுற்ற பாடங்களில் (arrears) மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து இதற்கு முன் அவர் AICTEக்கு கடிதம் எழுதினார். அதுவும்கூட மாநில உயர்கல்வி அமைச்சரை மீறிய செயல்தான்.

தனது திட்டங்களின் ஊடாக 69 சத இட ஒதுக்கீடு என்பது பாதிப்புக்கு உள்ளாகாது என சூரப்பர் இன்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கான சாத்தியமும் இவர்கள் திட்டத்தில் இல்லை. UGC உருவாக்கியுள்ள IoE வழிகாட்டும் நெறிமுறை பிரிவு 4.2.5 –இல், ” There should be a transparent merit based selection in admissions, so that the focus remains on getting meritorious students ” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தகுதி மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இந்த மாணவர் தேர்வு அமைய வேண்டுமாம். இதற்கெல்லாம் உரிய சட்டத் திருத்தம் இல்லாமல் IoE நிலை திணிக்கப்படுமானால் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியப்படும்?

சரி 69 சத ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதும் என IoE நிலையை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவோம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துக் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் எளிய மாணவர்கள் இந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா?

இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்றெல்லாம் அறிவித்து கல்விச் சந்தை ஒன்றை அரசே உருவாக்குவதை ஏற்க முடியாது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை IoE நிலைக்கு மாற்றுவது எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கெல்லாம் சூரப்பரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் முருகன் துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதையும் காண்கிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கல்வி என்பது இன்னும் மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் அதெப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி ஒரு துணைவேந்தர் எதையும் செய்யலாம்? செய்வோம் என ஒரு ஆளும்கட்சியின் தலைவர் திமிர் பேசுவதன் பொருள் என்ன? இந்த நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

சில கேள்விகளைத் தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. IoE வேண்டாம் எனக் கூறும் மாநில அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை Anna Technical and Research University என்றும் Anna Affiliating University எனவும் இரண்டாகப் பிரித்ததன் பின்னணியும் நோக்கமும் என்ன? இது IoE எனவும் Affiliating University எனவும் இரண்டு தரங்களாகத் தொழிற் கல்வியைப் பிரிப்பதுதானே?

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளது போல் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றால் எஞ்சியுள்ள 20 பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? அவற்றின் நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசிடம் ஏதும் திட்டமுள்ளதா? இல்லை அவை இரண்டாம்தர மூன்றாம்தரக் கல்வி நிறுவனங்களாகத் தொடர வேண்டியதுதான் அவற்றின் தலைவிதியா?

3.தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்துக்குப்பின் UGC கலைக்கபடும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. இனி நிதி மான்யம் வழங்குவதை கல்வி அதிகாரங்களை மிகத் தந்திரமாக சகுனித் தனத்துடன் மையப்படுத்தி வரும் பாஜக அரசு கையில் வைத்துக் கொள்ளப் போகிறது. அதை எதிர்க்காமல் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெற வாய்ப்புண்டா?

4. நிகர்நிலை பல்கலைக்கழகமான வேலூர் VITக்கு IoE நிலை அளிக்கப் பட்டுள்ளதைத் தமிழக அரசு ஏற்கிறதா?

5. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் IoE நிலை வழங்குவது, பல்துறை வளாகங்களாக (Multidisciplinary University) பல்கலைக் கழகங்களை மாற்றுவது, மூன்று தரங்களில் தன்னாட்சி நிலையை (Graded Autonomy) கல்லூரிகளுக்கு வழங்குவது , UGC கலைக்கப்படுவது போன்ற திட்டங்களைத் தேசியக் கல்விக்கொள்கை 2020 முன் வைக்கிறதே அது பற்றி தமிழக அரசின் கருத்தென்ன? . தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தீர்களே அதன் அறிக்கை என்னாயிற்று?

6. துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு, நிதிக்குழு முதலானவற்றின் ஒப்புதல் இல்லாமல் தானே நிதி திரட்டமுடியுமென அறிக்கை விடுகிறாரே அது குறித்துத் தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

7.அண்ணா பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் பகவத் கீதை Credit course ல் வைக்கப்பட்டவுடன் எதிர்ப்பு வரவே அது நிறுத்தப்பட்டது போலப் பாவலா செய்து இப்போது அது Audit courseல் திணிக்கப் பட்டுள்ளது. இது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்துத் தமிழக அரசின் நிலைபாடு என்ன?

மக்களின் இந்த ஐயங்களுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இப்படிக் கல்வி முறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அரசே உருவாக்கிப் பணமும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்விக் கொள்கை. மோடி தலைமையில் பா.ஜ.க அரசு உருவாக்கப்பட்ட கணத்திலிருந்து அந்தத் திசையிலேயே கல்விக் கொள்கை உருவாக்கங்கள் நகர்கின்றன. பெயருக்குத்தான் இன்று கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ளது. மற்றபடி இப்போது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை (2020)-இன்படி கல்வி அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டன, அதன் விளைவே இன்று இப்படி அண்ணா பல்கலைக் கழகம் சீரழிக்கப்படுவது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டது. மற்ற மாநில அரசுகள் அதையும் செய்யவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் தேசிய கல்விக் கொள்கை (2020) ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துக் கொண்டது.

அதன் விளைவே இவை எல்லாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.

எனவே,

அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!

#அண்ணா_பல்கலைக்கழகத்தைக்_காப்போம்!

இப்படிக்கு,

அக்கறையுள்ள கல்வியாளர்களும் தமிழ் மக்களும்

இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள கல்வியாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள்..

1. முனைவர் மு. அனந்தகிருஷ்ணன், மேனாள் துணைவேந்தர்,

அண்ணா பல்கலைக்கழகம்,

(Dr. M. Ananda Krishnan,Former Vice – Chancellor, Anna University),

2. முனை)வர் வே. வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

(Dr. V. Vasanthi Devi, Former Vice Chancellor, Manonmaniam Sundaranar University),

3. முனைவர் ச. சீ. ராஜகோபாலன், மேனாள் ஆட்சிமன்ற உறுப்பினர்,

சென்னை பல்கலைக்கழகம்,

(Dr. S. S. Rajagopalan, Former Senate Member, University of Madras.)

4. பேராசிரியர் அனில் சட்கோபால், மேனாள் தலைவர், கல்வியியல் துறை, தில்லி பல்கலைக்கழகம்,

(Prof. Anil Sadgopal, Former Dean, Department of Education, Delhi University),

5. நீதிஅரசர் அரிபரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை (Justice Hari Paranthaaman, High Court Judge (Rtd), Chennai),

6. முன்னைவர். எஃப்.டி.ஞானம், முன்னாள் பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்,

7. பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,

8. மருத்துவர் சீ. ச.‌ ரெக்ஸ் சற்குணம், மேனாள் இயக்குநர் மற்றும்

கண்காணிப்பாளர், குழந்தை மருத்துவ நிறுவனம் மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை,  எழும்பூர், சென்னை.

(Dr. C. S. Rex Sargunam, Former Director & Superintendent, ICH & GCH, Egmore, Chennai),

9. பேராசிரியர் சோ. மோகனா, மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,

(Professor S. Mohana, Former President, Tamil Nadu Science Forum),

10. பேராசிரியர் ச. மாடசாமி, கல்வியாளர் – எழுத்தாளர்

(Prof. S. Madasamy, Educationist – Writer),

11. முனைவர் பி. இரத்தினசபாபதி, ஆற்றுநர், தமிழக கல்வி ஆராய்ச்சி

மற்றும் வளர்ச்சி நிறுவனம்,

(Dr. P. Ratnasabapathy, Counsellor, Thamizhaga Institute of Research & Advancement),

12. திரு. ஐ. பி. கனகசுந்தரம், மேனாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திரூர்,

(Thiru. I.P.Kanakasundaram, Former Principal, DIET, Tirur).

13. முனைவர் ப. முருகையன், மேனாள் முதல்வர், சிவந்தி கல்வியியல் கல்லூரி, குன்றத்தூர்,

(Dr. P. Murugaian, Former Principal, Sivanthi College of Education, Kundraththoor),

14. முனைவர் வாசு அறிவழகன், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த இந்திய மக்கள் மன்றம்,

‌(Dr. Vasu Arivazhagan, Coordinator,United India Peoples Forum),

15. பேராசிரியர் K. இராஜூ, ஆசிரியர், “புதிய ஆசிரியன்” மாத இதழ்

(Prof. K.Raju, Editor, Puthiya Asiriyan Monthly Journal for Teachers),

16.பேரா.வீ.அரசு, மேநாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்,

17. பேரா. பா.கல்விமணி, கல்வி மேம்பாட்டுக் கழகம், திண்டிவனம்,

18. பேரா சு. இராமசுப்பிரமணியன், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்,

19. பேரா. எஸ்.சங்கரலிங்கம், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், சென்னை,

20. கண்ணன், மாணவர் தலைவர், SFI

21. சேகர் கோவிந்தசாமி, முதுநிலை பொறியியல் ஆலோசகர், சென்னை,

22. மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்

23.கோ.சுகுமாரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர், புதுச்சேரி.

24. முருகப்பன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்,

25, இரா காமராசு, தமிழ்தேசியசிந்தனையாளர், பாப்பாநாடு, தஞ்சாவூர்,

26. முகம்மது சிராஜுதீன்,  நூல் வெளியீட்டாளர், சென்னை,

27.முனைவர் இரா. முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், மதுரை,

28.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்,

29.பேரா. சே.கோச்சடை. மேநாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், காரைக்குடி,

30. பேரா. சங்கர சுப்பிரமணியம், தலைவர், முன்னாள் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், சேலம்,

31. பேரா. மு.திருமாவளவன், மேநாள் முதல்வர், அரசு கல்லூரி, வியாசர்பாடி,

32. தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளர், அனைத்திந்திய மாணவர் மன்றம், AISF,

33. த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இயக்கம்,

34. அப்துல் ரஹ்மான், மாணவர் தலைவர், கேம்பஸ் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு,

35. சு.பொ.அகத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, பெங்களூரு,

36. ஞா.தியாகராஜன் MA, மதுரை,

37. அ.லியாகத் அலி கலீமுல்லாஹ், எழுத்தாளர், கோட்டகுப்பம், புதுச்சேரி,

38. மரு.ச. இராசேந்திரன், சென்னை,

39. பொதியவெற்பன். கவிஞர், எழுத்தாளர், கோவை,

40. எஸ்.கே. நவ்ஃபல், மனித உரிமைச் செயல்பாட்டாளர், கோவை,

41. முனைவர் ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், பேராசிரியர் மானுடவியல் துறை, அசோகா பல்கலைக்கழகம்,

42. சுபகுணராஜன், எழுத்தாளர், பதிப்பாளர், சென்னை,

43. மீனா, ஆசிரியை, திருவண்ணாமலை,

44. அ.மகபூப் பாட்சா, மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை,

45. மணலி அப்துல் காதர், சமூக செயற்பாட்டாளர்,திருத்துறைப்பூண்டி,

46. ப.விஜயலட்சுமி, முன்னாள் இயற்பியல் பேராசிரியை. கும்பகோணம்,

47. எஸ்.ராமன், பொதுச்செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்,

48. அ.கமருதீன், வழக்கறிஞர், திருச்சி,

49. ௭ஸ்.௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

50. ந.செயச்சந்திரன், கல்லூரி நூலகர்(ஓய்வு) திருச்சிராப்பள்ளி,

51. சுரேஷ் குமார் சுந்தர், தமிழ்த்தேச முன்னணி, திருச்சி.

52. ஞா.தியாகராஜன் MA. மதுரை,

53. எஸ்.சுகுபாலா, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், AIDSO,

54. த.பால அமுதன் மாநில அமைப்பாளர், அகில இந்திய மாணவர் கழகம், AISA,

55.பேரா. P. விஜயகுமார், Indian School of Social Sciences, Madurai Chapter,

56. பேரா. பொன்னுராஜ் வழித்துணைராமன், மதுரை,

57. சுவாமிநாதன் ராமன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், பொதுச் செயலாளர், வேலூர்,

58. ஸ்வகீன் எரோனிமஸ், கல்வியாளர், திருச்சி,

59. பீட்டர் துரை ராஜ், சிந்தனையாளர் பேரவை, பல்லாவரம்,

60. ராஜேந்திரன் ஷண்முகம், ௭ஸ். ௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

61. செந்தில்குமார், முன்னாள் மாணவர் கிண்டி பொறியியல் கல்லூரி, ,

கோயம்புத்தூர்,

62. இரா. செங்குட்டுவன், முதல்வர் (பொ), மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை. தஞ்சாவூர் மாவட்டம்,

63. ச. பாண்டியன், பன்மை சமூக ,கலை, இலக்கிய ஆய்வு வட்டம் , திருத்துறைப்பூண்டி

64. க.முரளி, தகவல் தொழில்நுட்பத் துறை, சென்னை.

65. பரிமளா, President, Forum for IT-ITES Employees, Tamilnadu

66. ஸ்ரீராம் கிருஷ்ணன் , சமூக ஆர்வலர் , சென்னை,

67. அ.பசுபதி, பெரம்பூர், புதுக்கோட்டை மாவட்டம்,

68. ஜெ. உமா மகேஸ்வரன், கணினி மென்பொருள் பொறியாளர், பரமக்குடி,

69. அருள்மொழி. வழக்கறிஞர், சென்னை,

70. டாக்டர் அரச முருகுபாண்டியன், பேராசிரியர் (ஓய்வு), தரங்கம்பாடி TBML கல்லூரி., பள்ளத்தூர்,

71. டாக்டர் சந்திர மோகன் ,முன்னாள் முதல்வர், சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை,

72. முனைவர். விஜய் ஈனோக், காருண்யா பல்கலைக் கழகம், கோவை,

73. மணிமாறன், ஆசிரியர், திருவாரூர்,

74. சகா. சசிக்குமார், ஆசிரியர், desamtoday.com,

75. அ.ஆலம். தமுமுக வழக்கறிஞர் அணி, திருச்சி,

76. சுரேஷ், தமிழ் தேச மக்கள்  முன்னணி, திருச்சி,

77. பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், புதுச்சேரி,

78.. இரா.தமிழ்க்கனல், இதழியலாளர், சென்னை,

                   ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு முகவரி

1. முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

(Dr.P. Sivakumar, Principal (Rtd), Govt, Arts College, Gudiattam, Cell: +91 9842802010).

2. பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் பேராசிரியர், மனித உரிமை செயல்பாட்டாளர்.(Prof  A. Marx, 1/33,Chella Perumal St., Lakshmipuram Thiruvanmiyur, Chennai – 600 041, Cell: +91 9444120582).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *