இந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 17   (தீராநதி, ஜூன் 2018)                    

எந்தச் சம்பாபதிக் கோவிலுள் நுழைந்து மணிமேகலைத் தன் உருவை மாற்றிக் கொண்டாளோ அந்தக் கோவிலில் உறையும் தெய்வத்திடமே அவள் எப்படித் தன் சிவந்த இதழ்கள், முத்துப் பற்கள், வில்லொத்த புருவங்கள், பல்வகைக் கோணங்களுடன் செழித்த மேனி, கூர்நுனி முலை முதலான உறுப்பழகுகளால் தன்னை வசப்படுத்தி வீழ்த்தினாள் எனப் புலம்பிய இளவரசன், “மதியொத்த முகத்தாள் மணிமேகலையின்றி இவ்விடம் அகலேன்” எனச் சூளுரைத்து அதன் காலடியில் வீழ்ந்தான். அதைக் கேட்ட சித்திரப் பாவை ஒன்று இப்படி இம்மூத்தோள் முன் அவன் ஆராயாது “நாவறுமையுற்று” வஞ்சினம் கூறியதைக் கடிந்தது.

அள்ள அள்ளக் குறையாது அமுது சுரக்கும் பாத்திரம், செங்கோல் காட்டி அறமுரைத்த தெய்வம், பேசும் சித்திரம் எனத் தன்முன் விரிந்த வியப்புகளால் சற்றே நிலைகுலைந்த இளவரசன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவ்விடம் விட்டகன்றான்.

மணிமேகலையோ இரந்துண்டு வாழ நேர்ந்த ஆற்றா மக்களுக்காகப் பிறரிடம் ஏற்றலும் பின் அதை அந்த மக்களுக்கு அளித்தலும் நமைப்போன்ற பிக்குணியர் கடமை என அப்படியான ஆற்றா மக்களை நாடி அலைந்தவள். குற்றமிழைத்தோரை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைக்குச் சென்று ஆங்கே பசியுற்றுக் கிடந்த மக்களின் பசியாற்றி நின்ற காட்சி சிறைக்காவலர்களுக்கு வியப்பளித்ததையும், அவர்கள் ஓடி அச் செய்தியை அரசர்க்குரைத்ததையும், அரசன் வியந்து அவளை அழைத்து உரையாடியதையும், பின் அவள் விருப்பைக் கேட்டு அதன்படி சிறைச்சாலையில் இருந்தோரை விடுதலை செய்து அச்சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதையும் அறிவோம்.

அந்தக் காதையில் பெரும்பகுதி மன்னனின் அந்த உல்லாசப் பூம்பொழிலின் அழகைச் சித்திரிப்பவையாக அமையும். ஒரு பக்கம் இப்படியான உல்லாசங்கள், செழிப்புகள் இன்னொருபக்கம் ஏழ்மை, வறுமை, பசித்துயர், சிறைச்சாலைகள், குற்ரவாளிகள் என்பதாக உலகம் பிளவுபட்டுக் கிடப்பதை மணிமேகலை சொல்லிக் கொண்டே போகும்.

மன்னன் தன்னை யார் எனக் கேட்டபொது, “விஞ்சை மகள்யான்” என அறிமுகம் செய்துகொள்வாள் மணிமேகலை. இந்த விஞ்சையன், விஞ்சைமகள் முதலான சொற்கள் கல்வியிற் சிறந்த, வித்தைகள் அறிந்த ‘வித்தியாதரர்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையாக மணிமேகலையில் பாவிக்கப்படுகிறது. கல்வியிற் சிறந்த எனும் பொருளோடு சற்றே அற்புத வித்தைகள் கைவரப் பெற்றோர் என்கிற பொருளும் இதற்குண்டு. காயசண்டிகையும், அவள் கணவனான காஞ்சனனும் அவ்வாறே விஞ்சையர்கள். கற்றறிந்தவர்கள் மட்டுமின்றி  பறந்துசெல்லும் வித்தையையும் அதற்கான மந்திரத்தியும் கைவரப் பெற்றவர்கள்.

அரசன் அழைத்து மணிமேகலை வந்துசென்றது, அவள் வேண்டுகோளின்படி சிறையில் வாழ்ந்த மனிதர்கள் விடுதலை செய்யப்பட்டு அது அறவோர் தங்கும் பள்ளியாக மாற்றப்பட்டது எல்லாவற்றையும் உதயகுமாரனும் அறிந்தான். எனினும் அறிந்தோர் நகைத்தாலும், மன்னவன் காய்ந்தாலும் அவளைப் பற்றியே தீருவேன் எனத் தேரேறி அவள் இருக்கும் உலகவறவியை அவன் அடைந்த அதே நேரத்தில் அங்கு தன் மனைவி காயசண்டிகையைத் தேடிக் காஞ்சனனும் வந்திறங்கினான். அந்தப் பொதியமலை முனி தன் மனைவிக்கு இட்ட சாபம் முடியும் காலமாகிய பன்னிரண்டாண்டுகளும் ஆகிவிட்டன, ஏன் இன்னும் அவள் வரவில்லை எனத் தேடி அவன் பொது இடங்கள் பலவற்றிலும் திரிந்தான்.

சாத்தனார் படைத்துள்ள ஒரு அருமையான பாத்திரம் இந்தக் காஞ்சனன். விழுமிய அறிவுடையோன் மட்டுமின்றி மனைவி மீது நிறைந்த அன்புடையவன். அவள் தன் தீவினையின் விளைவாய், விருச்சிக முனிவனின் சாபத்தால் யானைப்பசி நோய்க்கு ஆளான கதையை அறிவோம். கனிகள், காய்கள் என காஞ்சனன் எதை எதையோ கொண்டுவந்து ஊட்டினும் அவள் பசி தீராமையைக் கண்டு  துடித்துப் போகிறான். அவள் பறக்கும் மந்திரத்தையும் மறந்து போனாள் என்பதை அறிந்து அவன் கலக்கம் மிகுதியாகிறது. வேறு வழியின்றி அவளைப் புகார் நகர் வரை நடந்து சென்று அங்கு செல்வந்தர்கள்பால் உணவு பெற்று வாழுமாறு அறிவுறுத்திச் செல்வான். ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக இந்திரவிழா அன்று பறந்து வந்து மனைவியைக் கண்டு வேதனையுடன் பிரிந்து செல்வான். பன்னிரண்டாண்டுகள் எப்போது முடியும் எனக் காத்திருந்த அவனுக்கு, அது முடிந்தும் அவள் வராதத்தைக் கண்டு கலங்கி அவளைத் தேடி வந்து பொதுமக்கள் கூடும் இடமெல்லாம் அலைகிறான்.

அங்கே காயசண்டிகையைக் கண்டதும் அல்லாமல் அவள் தன் பசி நீங்கியதோடு உலகோர் பசி தீர்த்துக் கொண்டிருந்ததையும் கண்டு வியப்புற்றான். காயசண்டிகை வடிவில் இருப்பது மணிமேகலை என அறியாமல், “ஆனைத்தீ நோய் அரும்பசி அகற்ற வானோர் யாரும் அருளினரோ இதை?” என அவளிடம் பழைய அன்புடன் கேட்டான்.

தன்னை அவன் தன் மனைவி என நினைத்துக்கொண்டு பேசுவதைக்கண்டு சங்கடத்துக்குள்ளானாள் மணிமேகலை. ஆனால் என் செய்வது. அவளால் அக்கணம் உண்மையை உரைக்க இயலாது. அருகே ஏற்கனவே மணிமேகலையைத் தேடி உதயகுமாரன் வந்து நின்றிருந்தான். ஒரு மிக நுணுக்கமான நாடகக் காட்சியாய் இதை வடித்திருப்பார் பெருங்கவி சாத்தனார்.

தவறாகப் புரிந்து கொண்டு அணுகும் காஞ்சனனையும் சமாளிக்க வேண்டும். உதயகுமாரனையும் எச்சரித்தாக வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் காஞ்சனனிடமிருந்து அகன்று உதயகுமாரன் பக்கம் சென்று அங்கே நின்றிருந்த ஒரு வயதான மூதாட்டியைக் காட்டி,

“வெண்மணல் போல் நரைத்த கூந்தல், தோல் திரைந்த நெற்றி, இறால் கருவாடுபோலச் சுருங்கிய புருவங்கள், வழுநீர் சுமந்த கண்கள், சீ வடிகிற மூக்கு, தெற்றி அழகிழந்த சுரை விதை போன்ற பற்கள், வற்றலைப்போல் தொங்கும் காதுகள் முதலான அவளது உறுப்புகளைப் பார்.

இறும்பூதுடன் மதர்த்து நின்ற முலைகள் இன்று வெற்றுப்பை போல் தொங்குகின்றன; வாழைத் தண்டு போல விளங்கிய தொடைகள் தாழைத் தண்டுபோல வற்றிக் கிடக்கின்றன; பூக்களாலும், வாசனைச் சாந்துகளாலும் புலால் நாற்றத்தை மறைத்துக் கட்டுப்படுத்தி, ஆடை அணிகலன்களால் அழகுபடுத்தி முன்னோர் வகுத்துவைத்த வஞ்சகம்தான் இந்த யாக்கையின் அழகு என அறிவாய் இளவரசே” – என அறிவுறுத்தி நின்றாள் காயசண்டிகை எனும் காந்தர்வ உருவத்தில் நின்ற மணிமேகலை.

பின்னாளில் பெண்ணுடல் மீது வெறுப்பைக் கக்கி எழுதப்பட்ட சித்தர்பாடல்களுக்கு ஒரு முன்னோடியாய் அமைகின்றன இவ்வரிகள். எனினும் இது ஒரு நாடகக்க காட்சியாய்த்தான் விவரணம் கொள்கிறதே ஒழிய சித்தர் பாடல்களைப்போலப் பெண்வெறுப்பை முன்னிறுத்தி உரைக்கப்படவில்லை.

மணிமேகலை உதயனுக்கு அறிவுரைக்கும் இந்தக் காட்சி அங்கிருந்த இரு ஆடவர்கள் மத்தியிலும் இரு வேறு எண்ணங்களுக்குக் காரணமாயிற்று.

“தன்னைப் பாராட்டும் என் சொற்களை ஏற்காதவளாகவும் உள்ளாள்; அதே நேரத்தில் பிறன் பின்னும் செல்கிறாள்; என்னைப் பிறன்போலும் பார்க்கிறாள்; மன்னன் மகனுக்கு முது மொழிகளையும் எடுத்துரைக்கிறாள்; அதே நேரத்தில் அவளது சிவந்த கண்களும் முத்துப் பற்களும் அவன்பாற் காதற் குறிப்பைக் காட்டுகின்றன…” எனக் குழம்பிய காஞ்சனன் பகை கொண்ட நெஞ்சினனாய் ஒரு பக்கமாய் மறைந்து ஒளிந்து நின்றான்.

இன்னொரு பக்கம் உதயகுமாரனோ அவளைக் காயசண்டிகை உருவில் மறைந்துள்ள மணிமேகலை எனக் கண்டு கொண்டான். எனினும் பழங்கதை பேசிய இந்தப் புதியவன் யார் எனக் குழம்பினான். இந்த இரவில் அவள் அந்தப் புதியவனுடன் ஓடிவிடுவாள் எனவும் அவனுக்குத் தோன்றவில்லை. இருக்கட்டும் நள்ளிரவில் வந்து இவள் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம் என எண்ணி அகன்றான்.

ஊரே உறங்கிக் கிடந்த யாமத்தில் யானை வேட்டைக்குக் கிளம்பிய புலிபோல மணிமேகலை இருந்த அம்பலத்திற்கு வந்த உதயன் சீறிவரும் விஷ நாகம் ஒன்று புற்றுக்குள் நுழைவதுபோல உள்ளே நுழைந்தான். கர்மவினை அவனை அப்படி அங்கு இட்டுச் சென்றது..

அவனுக்கு முன்பே அங்கே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த காஞ்சனன், “இவன் அவளைத் தேடி வந்தான்” எனப் பெருஞ்சினம் கொண்டெழுந்தான். விஷப் பல் வெளித் தெரியப் படமெடுத்து வரும் ஒரு பாம்பு போல் உதயனின் பின்புறமாகச் சென்று, அவன் தோளைத் தன் வாளால் துண்டித்து வீழ்த்தினான்.

காயசண்டிகையைக் கைக்கொண்டுப் பறந்து செல்வேன் என அவளுருவில் இருந்த மணிமேகலைத் தேடி ஓடிய விஞ்சையனை அந்த அம்பலத்தின் நிலையில் தேவதச்சனான மயன் வரைந்திருந்த கந்திற்பாவை எச்சரித்தது. “அவளை அணுகாதே காஞ்சன! அவள் மணிமேகலை. உருமாறி மறைந்துள்ளாள்” என அவனுக்கு ஒரு பேரதிர்ச்சியையும் அளித்தது. அத்தோடு முடியவில்லை. அவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சியும் காத்திருந்தது. கர்மவினையின் பயனாய் காயசண்டிகைக்கு நேர்ந்த துயர முடிவுதான் அச்செய்தி. அமுதசுரபியில் விளைந்த அன்னத்தை உண்டு தன் கடும்பசியிலிருந்து விடுபட்ட காயசண்டிகை, பிரிந்திருந்த தன் கணவனைப் பார்க்கும் துடிப்பில், தனக்கு மீளக் கிடைத்த பறக்கும் திறனால் வானில் எழுந்து விரைந்தாள். அவள் சென்ற வழியில்தான் விந்திய மலை உள்ளது, அம்மலையைக் காக்கும் அந்தரியான விந்தா கடிகை அதன் உச்சியில் உறைகிறாள். பறக்கும் வரமுள்ளவர்கள் அம்மலையின் உச்சியின் மீது பறந்து கடப்பது வழமையல்ல. அப்படி யாரேனும் கடக்க நேர்ந்தால் பொங்கிச் சினம் கொள்ளும் விந்தாகடிகை அவர்களை ஈர்த்துத் தன் வயிற்றினுள் அடக்குவாள். பிரிந்த கணவனைச் சந்திக்கும் ஆவலில் உச்சிமீது பறந்த காயசண்டிகையும் அப்படி அவள் வயிற்றினுள் அடங்கிவிட்ட சோக வரலாறுதான் காஞ்சனனுக்குக் கிடைத்த அந்த இன்னொரு பேரதிர்ச்சி.

“காஞ்சன ! கைம்மை (சிறுமை) கொள்ளாதே. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.. அது இங்கு உதயகுமாரனின் உயிரை உண்டது. ஆனால் விஞ்சயனான காஞ்சன நீயும் ஆராயாமல் ஒரு கொடிய தீவினையைச் செய்தாய். அவ்வினை உன்னை வந்து அகலாமல் பற்றும்” -என அத் தெய்வம் கூறியது. அது கேட்ட விஞ்சையன் துயருற்றதோடு, கடுவினை பற்றிய நெஞ்சத்தோடு. பறந்து அகன்றான்.

மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்ட கிளைக் கதைகளில் நம் நெஞ்சைப் பிழியும் இன்னொரு சோகக் கதை இது. அவன் விஞ்சையன். அவளும் விஞ்சையள். அறிவிற் சிறந்தவர்கள். வித்தைகள் அருளப்பெற்ற காந்தர்வர்கள். காஞ்சனனைச் சொல்லும் போதெல்லாம் வித்தியாதரன் எனப் பொருள்படும் விஞ்சையன் எனச் சாத்தனார் சொல்லத் தவறுவதில்லை. அறிஞனான அவனும் ஆராயாமல் ஆத்திரம் கொள்கிறான். கொலைப் பழிக்கு ஆளாகிறான். ஊழ்வினை உதயகுமாரனைக் கொன்றது. கொன்றவனையும் அச்செயலூடாக இன்று ஊழ்வினை பற்றுகிறது. கர்ம வினையை எவரும் அனுபவித்தே ஆக வேண்டும். கர்ம வினை என்பதை இந்திய மதங்கள் பொதுவில் ஏற்றுக் கொள்கின்றன. ஆன்மா என்பதை ஏற்பதிலும் மறுப்பதிலிலும்தான் வைதிகமும் பௌத்தமும் வேறுபடுகின்றன.

மணிமேகலைக் காப்பியம் முழுவதும் இப்படியான கர்மவினை குறித்த கரிசனம் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதன் பொருளென்ன? எல்லாம் நம் திட்டப்படி நடப்பதில்லை. நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயல்படும் உலகில் வாழும் நாம் அது குறித்த பிரக்ஞையோடிருத்தல் அவசியம். அந்தப் பிரக்ஞை நாம்மை எப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் அப்படியான எச்சரிக்கையோடு செய்யப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை இல்லாமல் நடந்துகொண்டதன் விளைவாகவே காயசண்டிகை அந்தக் கொடுஞ் சாபத்திற்கு ஆளாக வேண்டிற்று. உதயகுமாரனின் மரணம் எப்படி நிகழ்கிறது? அவன் கர்மவினை அதற்குக் காரணமான போதிலும் இன்னொரு பக்கம் காஞ்சனன் ஆராயாமல் செய்த வெவ்வினை கர்ம விளைவுகளைச் சுமந்த ஒரு தீவினையாய் அக்கொலை மூலம் அவனைச் சூழ்கிறது.

நமக்கு அப்பாற்பட்டு இயங்கும் இச்சக்திகள் குறித்த பிரக்ஞை ஒருவரை அறவாழ்வுக்கு இட்டுச் செல்ல வேண்டும்; நம்முடைய எந்தச் செயலும் யாருடைய துயரத்திற்கும் காரணமாகிவிடக் கூடாது என்கிற பிரக்ஞை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணமும் தேவை என்பதைக் காப்பியம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. மானுடத் துயர்கள் குறித்த பிரக்ஞையுடன் நம்மை வாழ அது அறிவுருத்துகிறது.

காஞ்சனன் வித்யாதரன் மட்டுமல்ல. அவன் தன் மனைவியின்மீது தீராக் காதலுடையவன் என்பதையும் அறிவோம். சாப காலம் முடிந்தவுடன் மனைவியைச் சந்தித்து அள்ளிச் செல்ல வந்தவனுக்கு அவளை இனி சந்திக்க இயலாமலேயே போய்விடுகிறது. அதுமட்டுமல்ல அவன் மீண்டும் ஒரு கொலைப் பழிக்குக் காரணமாகிக் கரும வினைக்கு ஆளாகிறான்.

காயசண்டிகையும் நாம் இந்தக் காப்பியத்தில் சந்திக்கும் இன்னொரு சோக நாயகி. அவளும் வித்தைகள் அறிந்த வித்யாதரிதான். எனினும் அவள் செய்யும் ஒரு குறும்பு அவளை முனிவனின் கொடும் சாபத்திற்கு ஆளாக்குகிறது. சாப காலம் முடிந்து கணவனைக் காண ஆவலோடு பறந்தவளும் வினைக்கு ஆளாகிறாள்.

ஒரு நாயகியை மையமாகக் கொண்ட காப்பியம் மணிமேகலை. உதயகுமாரனைக் காப்பிய நாயகன் எனச் சொல்வதற்கில்லை. அவன் ஒரு எதிர்மறை நாயகனாகவே படைக்கப்படுகிறான். அவனது துயர மரணம் இங்கே காப்பியச் சோகமாக விரியவில்லை. ஆனால் அவனைக் கொலை செய்தவனின் முடிவு இங்கு பெருஞ் சோகமாய் விரிகிறது.

(அடுத்த இதழில்: காப்பியத்தின் இரண்டாம் பாகம்)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *