இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள்

பாசிசம் என அவர்களைச் சொன்னால் இந்துத்துவவாதிகளுக்குக் கோபம் வரும். நாங்கள் பாசிஸ்டுகள் அல்ல தேசபக்தர்கள் என்பார்கள். தேசியத்திற்கும் பாசிஸத்திற்குமுள்ள நெருக்கமான தொடர்பை அறிந்தவர்களுக்கு இந்தப் பதில் வியப்பை அளித்துவிடாது. தேசியம் இறுக்கமாக வரையறுக்கப்பட்டு, தேசத்தின் ‘அந்நியர்கள்’ (other- மற்றவர்கள்) உறுதியாக விலக்கப்படும் போது தேசியம் பாசிசமாக மாறிவிடுகிறது. இட்லரின் நாசிசமும் ஆர்.எஸ்.எஸ்சின் இந்துத்துவமும் இரு எடுத்துக்காட்டுகள். மாறாக தேசியத்தின் வரையறையை நெகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள் (Fussy Definition) பாசிஸ்டுகளாக உருப்பெறுவதில்லை. ‘மற்றவர்களை’ விலக்குவதற்குப் (exclude) பதிலாக உள்ளடக்குவதாக (include) அவர்களது தேசியம் அமையும். மத, மொழிச் சிறுபான்மையினர்களை உள்ளடக்கிய காந்தி மற்றும் திராவிட இயக்கத்தவரின் தேசியங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்துத்துவவாதிகள் தம்மைத் தேசபக்தர்கள் எனச் சொல்லிக் கொள்வர்கள். தம்மை மட்டுமே தேசபக்தர்கள் எனச் சொல்வதற்கும் அவர்கள் தங்குவதில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் ‘தேசபக்தர்கள்’ என்பதற்கான பொதுவாக’ ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகளைக்கூளவர்கள் ஏற்றுக் கடைபிடிப்பதில்லை. இந்திய தேசியக்கொடி, அரசியல் சட்டம், தேசத் தந்தை என்கிற கருத்தாக்கம் முதலியவற்றை இவர்கள் ஏற்பதில்லை. மரியாதை அளிப்பதில்லை. “நமது நாட்டிற்கு தேசக்கொடி ஒன்றை உருவாக்கி யிருக்கிறார்களாம். நாம் எதற்கு மற்றவர்களைப் பார்த்துக் காப்பியடிக்க வேண்டும்? புராதனமான மாபெரும் தேசம் நம்முடையது; பெருமைக்குரிய பழமையைப் பெற்றிருப்பவர்கள் நாம். அப்படியிருக்கும் போது நமக்கெனச் சொந்தமாக ஒரு கொடி கிடையாதா? ஆயிரமாயிரமாண்டு வரலாறுடைய நமக்கென ஒரு தேசீயச்சின்னம் கிடையாதா? நிச்சமயாக உண்டு. எனில் நமது சிந்தனையில் ஏன் இந்த வெறுமை?” என்றெழுதினார் கோல்வால்கர் (சிந்தனைத் தொகுப்பு). இப்போதுள்ள இந்திய தேசியக்கொடி யாரையும் பார்த்துக் காப்பியடித்ததல்ல. தேசீய சின்னங்களாக வரிக்கப்பட்டுள்ளன. அசோகச் சக்ரகம், அசோகத் தூண் முதலியன நமது பழமையிலிருந்து எடுக்கப்பட்டவைதான். அப்படியிருந்தும் குருஜி இப்படிச் சொல்கிறார்.

இந்துத்துவத்தைப் பொருத்தமட்டில் வேதங்களையும் பார்ப்பனீயத்தையும் மறுத்தெழுந்த பவுத்த மதம் உலகெங்கும் பரவுவதற்குக்காரணமான அசோகரின் சின்னங்கள் நமது பழமையாக இருக்கலாம், ஆனால் பெருமையாகக் கருதப்பட முடியாது. பவுத்த, சமண மதங்கள் எழுச்சியுற்ற காலமும், முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட காலமும் அவர்களைப்பொருத்தமட்டில் பெருமைக்குரியன அல்ல. வரலாற்றிலிருந்து துடைதெறியப்பட வேண்டிய இருண்டகாலங்கள். பார்ப்பனீயமும் வருணாசிரமம் கொடி கட்டிப்பறந்த காலங்களே அவர்களுக்குப் பொற்காலங்கள்; பெருமைக்குரிய பழமைகள். வெள்ளையர்கள் வெளியேறிய பின்பு மராட்டிய பேஷ்வாக்களின் ஆட்சியை நிர்மாணிப்பதே அவர்களது கனவாக இருந்தது. சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்சின் கொடியாக பேஷ்வா அரசர்களின் ‘பகவத் துவஜம்’ தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் அவர்கள் வணக்கம் செலுத்துவது இந்தக் காவிக்கொடிக்குத் தான்.

“எனது புனித இந்துமதம், இந்துச் சமூகம், இந்துக்கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதன் மூலம பாரதவர்ஷத்தின் பெருமையை எல்லாத் துறைகளிலும் நிலைநாட்டுவதற்காகவே நான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் உறுப்பினராகிறேன்.” என்கிற உறுதிமொழியைத்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் சொல்கிறார்களே தவிர இரவீந்திரரின் ‘ஜனகணமன’வை அவர்கள் தேசீய கீதமாக ஏற்பதில்லை. சென்ற ஆகஸ்டு நான்காம் தேதியன்று (2000) முரளி மனோகர் ஜோஷியின் இல்லத்தில் பிரதமர் வாஜ்பேயி, உள்துறை அமைச்சர் அத்வானி முதலியோர் குரு தட்சிணை சமர்பபித்தனர். பிரதமராகவும், அமைசசராகவும் பணியாற்றிப் பெறுகிற ஒரு மாத ஊதியத்தை ஆர்.எஸ்.எஸ் என்கிற தமது குருவிற்குக் காணிக்கையாகச் செலுத்திய அவர்கள் அன்று வணங்கியது இந்தக்க பகவத் துவஜத்தைத்தான். அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியும் இதுதான் (அவுட்லுக், செப் 25, 2000).

இந்திய அரசியல் சட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. தனது ‘சிந்தனைத் தொகுப்பில்’, “மேலை நாடுகளின் பல்வேறு அரசியல் சட்டங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்துத் தொடுத்த ஒட்டுத் துணிதான் நமது அரசியல் சட்டம். நமக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்வதற்கு அதில் ஒன்றுகூடக் கிடையாது. நமது தேசீய நோக்கம் என்ன என்பதற்கோ, நமது வாழ்வின் ஆதாரப் புள்ளி எது என்பதற்கோ அதன் வழிகாட்டும் தத்துவங்களில் ஏதேனும் ஒரு சொல்லாவது காணப்படுகிறதா? இல்லை!” என்று சொல்வார் குருஜி. ஆர்.எஸ்.எஸ்சின் இன்றைய சர் சங் சலாக் (தலைவர்) குப்பஹலி சீதாராமய்யா சுதர்சன், தான் பதவி ஏற்ற நாளன்று (மார்ச் 10,2000) உதிர்த்த கருத்துக்களில் ஒன்று இந்திய அரசியல் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது. “1935ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு உருவாக்கியதன் மறுபதிப்புதான் அது. இந்தியருக்குரிய தனித்துவமான பண்புகளையும் விருப்புகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அது தயாரிக்கப்படவில்லை. இவற்றைப் பிரதிபலிக்கும் புதிய அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்” என்றார் சுதர்ஸன் (ஆர்கனைசர், மார்ச் 19, 2000).

1993 ஜனவரி முதல் தேதியன்று ‘வர்த்தமான் இந்தியன் சம்விதான்’ என்றொரு வெள்ளை அறிக்கையை சங்கப்பரிவாரம் வெளியிட்டது. இந்திய அரசியல் சட்டத்தை இந்துமதத்திற்கு எதிரானது எனக்குற்றம் சாட்டியது அவ்வறிக்கை. இந்த அறிக்கையை எழுதிய சுவாமி முத்தானந்தர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இருபதாம் நாள் (டிசம்பர் 25, 1992) பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து கொண்டு ஒரு பேட்டியளித்தார். கூட இருந்தவர் சுவாமி வாம் தியோ மகராஜ். “இந்து மதத்திற்கு அவர்களிருவம் அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டுச்சட்டங்களின்மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. சாதுக்கள் இந்த நாட்டின் சட்டங்களுக்கு மேலானவர்கள்” என்றும் அவர்கள் அறிவித்தனர் (ஏ.ஜி. நூரானி, ‘ஆர்.எஸ்.எஸ்சும் பாரதீய ஜனதாவும்’, பக்.97).

ஒழுங்கு பற்றி மிகத் தீவிரமாக வற்புறுத்துகிறவர்களும், ஒழுங்கவிழ்ப்பைக் (அராஜகம்) கடுமையாகக் கண்டிப்பவர்களுமான பாசிஸ்டுகள், நிலவுகிற அமைப்பின் சட்ட ஒழுங்கை எள்ளளவும் மதிப்பதில்லை. “டிசம்பர் ஆறாம் தேதியன்று நிச்சயமாகக் கரசேவை நடத்தப்படும். கரசேவை என்பது பஜனையும் கீர்த்தனையும் பாடுகிற விசயமல்ல. கடப்பாரைகளையும் செங்கற்களையும் வைத்துச் செய்கிற காரியம் அது என்று அத்வானி சொன்னார்.” என்பன அத்வானி மீதான குற்றப்பத்திரிக்கையின் வாசகங்கள். பாபர் மசூதியை இடிப்பது குறித்து முன்னதாக அவர் சொல்லிய வாசகங்கள் இவை. கொலை, வன்முறை எதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. காந்தி முதல் மருத்துவர் ஸ்டெய்ன்ஸ் வரை இந்துத்துவம் கொன்று குவித்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இவர்கள் தூண்டி விடுகிற மதக் கலவரங்களில் கொல்லப்பட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை இதில் அடங்காது. காந்தியைக் கொன்றுவிட்டு ‘நாங்கள் இல்லை’ என்று கைவிரித்தவர்கள், இன்று நாங்கள்தான் செய்தோம் எனப்பெருமையோடு அறிவிக்கின்றனர், புத்தகங்கள் எழுதுகின்றனர். பேட்டிகள் அளிக்கின்றனர். நாடகங்கள் நடத்துகின்றனர். காந்தி கொலையாளிகளில் ஒருவரும் தூக்கிலிடப்பட்ட நாதூரம் கோட்சேயின் சகோதரனுமான கோபால் கோட்சேயின் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்கிற நூல் 1993ல் வெளிவந்தது.

புதுடெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின் போது சகோதரர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர உறுப்பினர்கள் என்கிற உண்மையைக் கோபால் வெளியிட்டார் (ஸ்டேட்ஸ்மன், டிசம்பர் 24, 1993). ஒரு மாதத்திற்குப் பின் ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளிததபேட்டியில் (ஜனவரி 28, 1994), “நாங்கள் நான்கு சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ்சில் இருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்ததைக்காட்டிலும் ஆர்.எஸ்.எஸ்சில் வளர்ந்ததே அதிகம். அதுவே எங்களின் குடும்பமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவுத்துறை ஊழியனாக (பாவ்திக்காரியவா) நாதுராம் செயல்பட்டான்.ஆர்.எஸ் எஸ்சிலிருந்து வெளியேறி விட்டதாக அவன் வாக்குமூலம் அளித்தது உண்மைதான். காந்தி கொலைக்குப்பிறகு கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்சும் பெரும் தொல்லைக்கு ஆளாகியிருந்த சூழலில் அப்படிச்சொல்ல வேண்டியதாயிற்று. உண்மையில் நாதுராம் ஆர்.எஸ்.எஸ்சை விட்டு வெளியேறவில்லை.” என்று அவன் வெளிப்படையாகச் சொன்னார்.

நாதுராமுக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அத்வானி சொல்கிறாரே எனக் கேட்டபோது, “நான் அத்வானியை மறுத்துள்ளேன். அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்றும் கூறியுள்ளேன். ‘போய்க் காந்தியைக் கொல்லுங்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் இயற்றவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் இப்படி அவரைக் கைவிடக்கூடாது. ‘இந்துமகாசபை’ அப்படிக் கைவிடவில்லை. 1944 ல் ஆர்.எஸ்.எஸ்சில் பாவ்திக் காரியவாவாக இருந்துகொண்டே இந்துமகா சபைப்பணியையும் செய்யத் தொடங்கினான் நாதுராம்.” என்றும் கோபால் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தொடர்புக்காகப் பெருமை அடைவதாயய் சொன்ன அத்வானியோ, ‘நான் ஒரு சுயம் சேவக் என்பதே என் நிரந்தரப் பெருமை’ என்று முழங்கிய வாஜ்பேயியோ, இல்லை இன்றைய ஆர்எ.ஸ்.எஸ் ததலைவர்கள் யாருமோ கோபாலின் கூற்றுக்களை மறுக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

காந்தியைக் கொன்றது நியாயம்தான் என்பதை இந்துத்துவாதிகள் தொடர்ந்து சொல்லிவந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்சின் அரிகாரப்பூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ இதழில் கே.ஆர்.மல்கானி ஆசிரியராக இருந்தபோது ஒரு தலையங்கம் (ஜனவரி 11, 1970) வெளிவந்தது. அதில், “பாகிஸ்தானுக்குச் சார்பான நேருவீன் நிலைப்பாட்டை ஆதரித்துக் காந்தி உண்ணாவிரதம் தொடங்கியதுதான் மக்களின் கோபம் அவர்மீது திரும்புவதற்குக் காரணமாக இருந்தது” என்று அதில் காந்தியின் கொலை நியயப்படுத்தப்பட்டது. ஆக, மக்களின் பிரதிநதியாக இருந்து நாதுராம் கோட்சே ‘காந்தி வதம்’ செய்தான் என்பது இந்துத்துவ வாதம். பாதிரியார்கள் கொல்லப்படும் போதும், மாதா கோவில்கள் எரியூட்டப்படும்போதும், கன்னிமார்கள் துன்புறுத்தப்படும்போதும் ‘மதமாற்றத்திற்கெதிரான மக்களின் கோபத்தின் விளைவு’ என இவ் வன்முறைகளை நியாயப்படுத்துவதும் மறைமுகமாக அவற்றை ஊக்குவிப்பதும் ஆட்சியிலுள்ள இந்துத்துவத்தின் செயல்பாடுகளாக இன்றளவும் விளங்குவதை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே இவர்கள் காந்தியை ‘தேசத் தந்தை’யாகவும் ‘மகாத்மா’ வாகவும் ஏற்பதில்லை. இவர்களின் உண்மையான ‘அறிவுத் தந்தை’யாகிய தீன்தயாள் உபாத்தியாயா சொன்னார் (1961): “காந்திக்குரிய எல்லா மரியாதைகளுடனும் அவரை ‘தேசத்தந்தை’ என அழைப்பதை நிறுத்திக்கொள்வோம். பழம் பெருமைகளை அடித்தளமாகக் கொண்ட நமது தேசியத்தை ஆராய்ந்து பார்த்தோமானால் அது இந்துத்துவம்தான் என்பது விளங்கிவிடும்” (ஏ.ஜி. நூரானி, மு.கு.நூ. பக்.51)

காந்தி இந்த நாட்டின் ‘தேசத்தந்தை’ என்பதை மறுக்கிற அளவிற்கு அத்வானி பேசுகிறார் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒருமுறை தலையங்கம் தீட்டியதும் (அக்.17, 1989) இங்கே குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளின் தேசபக்தி இந்த தேசத்திற்கு விசுவாசமாக இருப்பதல்ல. இந்தத் தேசத்தின் கலாச்சாரம் என இவர்களால் முன்வைக்கப்படுகிற இந்துத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதே இவர்களது தேசபக்திக்கு அடையாளம். மற்ற எல்லோரும் தேசத் துரோகிகள். லிபரான் ஆணையம் முன்பாகச் சாட்சியம் அளிக்கும்போது, “இந்துத்துவமும் தேசீயமும் ஒரே பொருளுடைய இரு சொற்கள். இந்தியத்தன்மை, பாரதீயம், இந்துத்துவம் என எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள். இந்தச் சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் குறிப்பனவாகவே நான் பார்க்கிறேன்”. என அத்வானி குறிப்பிட்டது (ஏப்ரல் 12, 2000) இதை வெட்ட வெளிச்சம் ஆக்குகிறது.

இவ்வாறு தேசீயத்தை இந்துத்துவமாக இறுக்க வரையறுப்பதும், முஸ்லிம்கள் உள்ளிட்டச் சிறுபான்மையினரை உள்நாட்டு எதிரிகளாக நிறுத்துவதும், சிறுபான்மையினர் என்கிற அவர்களது குழும உரிமையை (group rights) மறுப்பதையும்தான் நாம் பாசிசம் என்கிறோம். சட்ட ஒழுங்கு, சனநாயகம் ஆகியவற்றை மறுப்பதையும் ‘உள்நாட்டு எதிரிகளுக்கு’ எதிராக வன்முறைகளைக் கடைபிடிப்பதை ஆதரித்து வருவதையும் நமது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வெளிப்படையாக அறிவித்து வந்துள்ளனர். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குரு கோல்வால்கர்,

“இந்த நாட்டுடனும் அதன் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணுவதெப்படி என்கிற பாடத்தை இசுலாமியருக்கு நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும்…. நாம் இதுவரை அடிகொடுத்துப் பாடம் சொல்லித் தந்ததில்லை. ஆனால் அடித்துதான் பாடம் சொல்ல வேண்டும் என்கிற நிலை வந்தால் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் அது எதிரியை அடிப்பது போலல்ல. ஒரு தாய் குழந்தையை அடிப்பதுபோல, அக்குழந்தையின் நலனுக்காகச் செய்யக் கூடியதாகவே இருக்கும்…. சமூக வாழ்வில் வன்முறைக்கு ஏதும் இடம் உண்டா என்றால் உண்டு. ஆனால் அறுவை சிகிச்சையில் கத்தியைப் பயன்படுத்துவதைப் போல வன்முறையைப் பயன்படுத்தவேண்டும்…. தற்காப்பிற்காக நாம் தீய சக்திகளை அழிப்பது தவிர்க்க இயலாது. அசுரர்களை வன்முறையால் தான் வீழ்த்த வேண்டும். வன்முறையைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.” என வன்முறையை நியாயப்படுத்திப் பேசியது இங்கே குறிப்பிடத் தக்கது. (1970 ஜூன் 11ம் தேதி அளித்த பேட்டி பின்னர் ‘ஆர்கனைசரில்’ வெளிவந்தது)

எள்ளளவும் வெட்கமின்றிப் பொய்களைக் கட்டவிழ்த்துவிடுவது என்பது பாசிசத்தின் அன்றாடத் தந்திரங்களில் ஒன்று. “இடிப்பதற்காக அல்ல, மசூதியை இடிப்பதைத் தடுப்பதற்காகத்தான் நானும், அத்வானியும், முரளிமனோகர் ஜோஷியும் அன்றைக்கு (டிசம்பர், 6, 1992) அயோத்திக்குச் சென்றோம்” என உமா பாரதியும், கடப்பாரையை வைத்துதான் கரசேவை செய்வோம் எனச் சொன்ன அதேவாயால் “மசூதி இடிபடுவதைப் பார்த்து மனம் நொந்துபோனேன்” என அத்வானியும் லிபரான் குழு முன் கூறியதை நாம்அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா?

2

இந்துத்துவப் பாசசித்தை அடையாளம் கண்ட
காந்தியும் நேருவும்

இந்துத்துவப் பாசிசத்தின் ஆபததுக்களை அதன் தோற்ற காலத்திலேயேப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய அரசின் அயல்துறை அலுவலர்கள் முன்பாகப் பேசும்போது, “குறித்துக்கொள்ளுங்கள். இந்தியாவிற்கு ஆபத்து கம்யூனிஸ்டுகளால் வரப்போவதில்லை. வலதுசாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அந்த ஆபத்து நேரப்போகிறது” எனக்குறிப்பிட்ட பண்டிதநேரு தொடர்ந்து இந்த எச்சரித்துஆபத்து குறித்து வந்தார். காங்கிரஸ்காரர்களிடம் வெளிப்பட்ட இந்து வகுப்புணர்வையும், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வகுப்புவாதத் தன்மையையும்கூட அவர் கண்டிக்கத் தயங்கவில்லை.

“(எனினும்) பெரும்பான்மை மதவாதம் என்பது சிறுபான்மை மதவாதத்தைக்காட்டிலும் மிகவும் ஆபத்தானது.” என்று அவர் அதில் இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கூட்டத்தில் (மே 11. 2958) எச்சரித்தார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் (ஜனவரி 5, 1961).

“சிறுபான்மையினர் வகுப்புவாதிகளாக ஆவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பான்மைச் சமூகத்தின் வகுப்புவாதத்தைத் தேசியமாக எடுத்துக்கொள்கிற (ஆபத்து) இருக்கிறது.” என்றும் அவர்குறிப்பிட்டார் (நூரானி, மு.கு.நூ. பக் 8).

இந்துத்துவத்தின் குண்டுகளுக்குப் பலியான காந்தி இந்த ஆபத்தைப் பாசிசத்துடன் நேரடியாகவே ஒப்பிட்டு எச்சரித்தார். வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிமொன்றில் (அக் 27, 1948) நேரு, பாபுஜி முதன் முதலாகக் கோல்வால்கரைச் சந்தித்தபோது சொன்னது நினைவுக்கு வருகிறது. கோல்வால்கரால் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார். எனினும் பாபு அவரை நம்பத் தயாராக இல்லை. இரண்டாவது, மூன்றாவது சந்திப்புகளுக்குப் பிறகு கோல்வால்கருக்கும, ஆர்.எஸ்.எஸ்சுக்கும் எதிராகக் கடுமையான கருத்துக்களை அவர் வெளியிட்டார். அவர்களின் வார்த்தைகளை நம்ப இயலாது என்றும் பாபு சொன்னார்… எனது கருத்தும் அதுவேதான்.” என்றெழுதியது இங்கு குறிப்பிடத்தக்கது.

காந்தியின் செயலரும் விசுவாசமிக்க சீடருமான பியாரோலால் எழுதும்போது, “டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. அது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது காந்தியின் குழுவில் இருந்த ஒருவர் இடைமறித்துச் சொன்னார்: ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார். (‘மகாத்மா காந்தியின் இறுதிக்கட்டம்’, தொகுதி 2, பக்: 439-40)

சுட்டுகொல்லப்படுவதற்குச் சரியாகப் பத்து நாட்களுக்கு முன்பாக, உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அமர்ந்திருந்த காந்தியின்மீது மதன்லால் பாவா என்பவன் ஒரு வெடிகுண்டை வீசினான். குறி தவறிய அக்குண்டு சுமார் 20 மீட்டர்கள் தள்ளிவெடித்தது. பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் என்று யாரோ சொன்னார்கள். பியாரேலால் எழுதுகிறார்: “காந்தி சிரித்துவிட்டுச் சொன்னார்- ‘முட்டாள், இதற்குப் பின்னால் விரிந்து பரந்த ஒரு பயங்கரமான சதி இருப்பது உனக்குத் தெயவில்லையா?”- (மு.கு.நூ: பக்: 750)

சரியாக அடுத்தப் பத்தாம் நாள் அந்தச் சதிகாரர்கள் செய்த இரண்டாம் முயற்சி வெற்றியடைந்தது. காந்தி கொலையால் வெறுப்புற்ற ஆர்.எஸ்.எஸ் சிலிருந்து வெளியேறிய இளைஞன் ஒருவன் சர்தார் பட்டேலுக்கு எழுதிய கடிதமொன்றில் எவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அந்த வெள்ளியன்று (ஜனவரி 30, 1948) ‘நல்ல சேதி’க்காக வானொலிப் பெட்டி முன் காத்துக்கிடந்தார்கள் என்பதையும், செய்தி கிடைத்தவுடன் அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ந்ததையும் விளக்கி எழுதியுள்ளதைப் பியாரேலால் விரிவாக எழுதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

காந்தி கொல்லப்பட்டவுடன் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. அப்போது தனது உட்கட்சிப் புரிதலுக்காக காங்கிரஸ் கட்சி ஓர் அறிக்கையைச் சுற்றுக்கு விட்டது. தேசீய ஆவணக்காப்பத்தில் சர்தார் பட்டேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாவது சுருளில் அவ்வறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகபுரியில் இந்துச் சிறுவர்களுக்கான சாரணர் இயக்கம் போலத் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வாறு படிப்படியாக வன்முறைப் பண்புகளுடன் கூடிய இராணுவ அமைப்பாக மாறியது என்பதைச் சொல்லும் இவ்வறிக்கை, அது எவ்வாறு ஒரு மராட்டிய பார்ப்பனர்களின் இயக்கமாக இருக்கிறது என்பதையும் பார்ப்பனரல்லாதோர் அதன்மீது எத்தகைய அனுதாபமும் கொண்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பேஷ்வா ராஜ்யத்தை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இவ்வமைப்பு பேஷ்வாக்களின் காவிக்கொடியையே தமது கொடியாகக் கொண்டிருப்பதையும்கூடச் சரியாகவே சுட்டிக்காட்டியது. மேலும்,

“பாசிசத்திற்குக் காரணமாகக் கூடிய இரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ் கைக்கொண்டுள்ளது. நேர்மையான வழிமுறைகட்கும், சட்டபூர்வமான செயற்பாடுகளுக்கும் அங்கே மரியாதை இல்லை. முறையான விதிகளையோ, அமைப்புச் செயல்பாடுகளுக்கான பதிவுகளையோ அவர்கள் வைத்திருப்பதில்லை. தமது குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அவர்கள் என்றும் தெளிவாகச் சொன்னதேயில்லை. உடற்பயிற்சி மட்டுமே தமது நோக்கம் என அவர்கள் மக்களிடம் சொல்லுகின்றனர். ஆனால் தமது உண்மையான நோக்கத்தை, அவர்கள் தம் அணிகளிடம் கூடச் சொல்வதில்லை. ‘உள் வட்டத்தில்’ உள்ளவர்கள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். வரவு செலவுக் கணக்குகளையும் வைத்திருப்பதில்லை. மிகவும் இரகசியமான ஓர் அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.” என அவ்வமைப்பின் பாசிசக் குணாம்சத்தை அடையாளம் காட்டியிருந்தது அவ்வறிக்கை.

பிரிட்டிஷ் அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிசத் தன்மையைச் சரியாகவே இனம் கண்டிருந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசு பீகார் மாகாண அரசுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் (கோப்பு எண் 201/44, தேதி மார்ச் 16, 1944) “இந்த அமைப்பு வலிமையாகச் செயல்படக்கூடிய பகுதிகளாகிய மத்திய மாகாணம், பெரார் மற்றும் மும்பையின் அரசுகள் இணைந்து மேற்கொண்ட நீண்ட கருத்தாய்விற்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாசிச வழிகளில் தீவிர அமைப்பொன்றைக் கட்டுகிற முனைப்பைக் கொண்டுள்ள அரசியல்- வணிக இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதே அம் முடிவு” எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. பாசிசம் என்கிற சொல் மிகச் சரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வியக்கும் அறிஞர் நூரானி (மு.கு.நூ.பக்: 26) ‘மதச்சார்பற்ற நாடாக இந்தியா’ என்கிற நூலில் (1963) டொனால்ட் ஈ ஸ்மித் பாசிசம் குறித்துச் செய்துள்ள வரையறையை மேற்கோள் காட்டுவார். அது: “தலைவர் பற்றியகோட்பாடு, இராணுவத் தன்மைக்குக் கொடுக்கக்கூடிய அழுத்தம், இன/கலாச்சார மேன்மைக் கோட்பாடு, மதக்கருத்தியல் கலந்த அதீத தேசியவாதம், பழஞ்சின்னங்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்துவது, தேசீய ஒற்றுமைக்கு அழுத்தம் அளித்தல், மத- இனச் சிறுபான்மையினரைத் தேசம் என்கிற கருத்தாக்கத்திலிருந்து விலக்குதல்- முதலான ஆர்எஸ்எஸ் சின் பண்புகள் அனைத்தும் அய்ரோப்பாவில் உருவான பாசிச இயக்கங்களையே நினைவு கூர்கின்றன.”

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவின் மதக்கலவரங்கள் பலவற்றை ஆய்வு செய்த வேணுகோபால் குழு, மதன்குழு, சிரீ கிருஷ்ணா குழு முதலான விசாரணைக் குழுக்கள் இந்துத்துவ அமைப்புகளின் செயற்பாடுகளில் வெளிப்பட்ட பாசிசக் கூறுகளை விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும் சுருக்கம் கருதி அவற்றை இங்கு தவிர்ப்போம்.

இந்துத்துவவாதிகளை ஈர்த்த பாசிசச் கூறுகள்

இந்துத்துவ சக்திகளிடம் வெளிப்படுகிற இத்தகைய பாசிசக்கூறுகள் தன்னிச்சையானவை அல்ல என்பது சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொடக்க கால இந்துத்துவ முன்னோடிகள் 1930களில் வெளிப்பட்ட அய்ரோப்பிய பாசிசத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். ஆர்எஸ்எஸ்.சைத் தோற்றுவித்தவரும் ஹெட்கேவரின் ஆசானுமாகிய டாக்டர் பி.எஸ். மூஞ்சே, இத்தாலி சென்று நேரடியாகச் சர்வாதிகாரி சிக்னோர் முசோலினியைச் சந்தித்துள்ளார். பாசிச அறிக்கைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டன. பாசிச அமைப்புகளின் மாதிரியிலேயே இங்கு ஆர்எஸ்எஸ் கட்டமைக்கப்பட்டது. இந்த உண்மைகள் அனைத்தையும் இத்தாலிய ஆய்வாளர் மார்சியா காசலோரி என்பவர் இத்தாலி மற்றும் மும்பையிலுள்ள தேசீய ஆவணக் காப்பகங்களிலுள்ள ஆதாரங்களை அகழ்ந்துத் தொகுத்து நிறுவியுள்ளார் (மார்சியா காசலோரி, ‘1930களில் இந்துத்துவாதிகளின் அயல்நாட்டுக் தொடர்புகள்: ஆவணக்காப்பக ஆதாரங்கள்,’ EPW, ஜனவரி 22, 2000). இப்பகுதியில் சொல்லப்பட இருக்கிற தரவுகளும் மேற்கோள்களும் காசலோரியின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவையே.

1920களில் இந்துத் தேசியவாதிகளுக்கு, குறிப்பாக மராட்டிய இந்துத் தேசியவாதிகளுக்கு இத்தாலி மற்றும் அதன் சர்வாதிகாரி முசோலினியின் மீது கவனம் திரும்பியது. 1924 தொடங்கி 1935 வரை மராத்திய தேசிய இதழான கேசரி, பாசிசம் பற்றியும் முசோலினி மற்றும் இத்தாலியில் ஏற்பட்டுவரும் ‘வளர்ச்சி’கள் குறித்தும் தொடர்ச்சியாகத் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. பாசிசத்தின் தடலடிப் பிரச்சாரங்களில் மயங்கிய மராட்டியத் தேசியவாதிகள், பின்தங்கிய நிலையிலிருந்த இத்தாலியைப் பெரு வல்லரசாக ‘மாற்றி’ பாசிசத்தை வியந்துநோக்கினார். பாசிசத்தின் எத்தகைய கூறுகளால் அவர்கள் ஈர்க்கப்பபட்டனர் என்பது நமது கவனத்திற்குரியது. அவற்றில் சில:

1. அரசியல் இழுபறிகளால் குழம்பிக் கிடந்த நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டியது பாசிசம் என அவர்கள் நம்பினர்.

2. தாராள சனநாயக அமைப்பிலிருந்து சர்வாதிகாரத்தற்கு மாறியதென்பதை ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கிற்கு நிகழ்ந்த மாற்றமாக அடையாளம் காட்டி ‘கேசரி’ தொடர்ந்து தலையங்கம் தீட்டி வந்தது. சமூகப்போராட்டங்கள் இனித் தேவையில்லை என்றான ஒரு காலகட்டமாக இப்புதிய ஒழுங்கைக் ‘கேசரி’ சுட்டிக்காட்டியது.

3. முசோலினி கொண்டுவந்த சில அரசியல் ‘சீர்திருத்தங்களை’க் கேசரி வெகுவாகப் பாராட்டியது. அவற்றில் சில: பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதற்குப் பதிலாக நியமித்தல்; பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அதன் பணிகளைப் பாசிசப் பெருங்குழுவிடம் ஒப்படைத்தல்.

அரசு பற்றிய பாசிச நோக்கு சனநாயகத்திற்கு நேர் எதிரானது. சனநாயக நிறுவனங்கள் ஏற்படுத்துகிற குழப்பங்களைக் காட்டிலும் ஒரு மனிதனின் சர்வாதிகாரம் என்பது நாட்டு நலனுக்கு உகந்தது என்கிற முசோலினியின் பாசிசக் கருத்தைக் கேசரியில் வந்த ஒரு கட்டுரை (ஜூலை 17, 1928) விதந்து பாராட்டியது. ‘ஏக் சலக் அனுவர்த்தித்வம்’ (ஒற்றைத் தலைவனைப் பணிதல்) என்கிற ஆர்எஸ்எஸ்சின் கோட்பாட்டுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று இது.

‘இத்தாலியும் இளைய தலைமுறையும்’ என்ற ஒரு நீண்ட கட்டுரையில் (கேசரி ஆக 13, 1929) பழைய தலைமுறையிடமிருந்து இளைய தலைமுறையிடம் அரசியலதிகாரம் மாறியதன் விளைவாக இத்தாலி பல துறைகளிலும் முன்னேறிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆழமான மதப்பற்று, குடும்பத்துடன் பிணைப்பு, மரபு வழிப்பட்ட மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியனவே இத்தாலிய இளம் தலைமுறையிடம் உருவாகியுள்ள ஒழுங்கிற்குக் காரணம் என மொழிந்த அக்கட்டுரை விவாகரத்தின்மை, பெண்கள் தனியாக வாழாமை, பெண்களுக்கு ஓட்டுரிமை இன்மை ஆகியவற்றை மரபு வழி மதிப்பீடுகள் எனப் போற்றியது. பெண்களின் பணி அடுப்படியோடு முடிந்துவிடுகிறது என்று கூறிய அக்கட்டுரை பாசிச இளைஞர் அமைப்புகளான ‘பலில்லா’, ‘அவன் கார்டிஸ்டி’ ஆகியவற்றின் மீது கவனம் குவித்தது.

இத்தாலிய ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டு (1928), இங்கு ஆங்கிலத்தில் வினியோகிக்கப்பட்ட ‘தேசப் பாதுகாப்பிற்கான சமீபத்திய சட்டங்கள்’ என்ற பிரசுரம் இத்தகைய கட்டுரைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார் காசோலரி. ‘தேசியப் படை’ ஒன்றின் முக்கியத்துவம் குறித்து அக்கட்டுரை தீவிரமாகப் பேசியது. புதிய ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ள சில தடுப்புச் சட்டங்களையும் அக்கட்டுரைப் பாராட்டியது. அவற்றில் சில: அமைப்பைக் ‘கவிழ்க்கக்கூடிய’ கட்சிகளைத் தடைசெய்வது, பத்திரிகைத் தணிக்கை, எதிர்ப்பாளர்கள் மற்றும் வெறுக்கத்தக்கவர்களைப் பொதுப்பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி இறுதியில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது.

“பாசிசத்தை நோக்கிய திருப்பம் என்பது தாராளவாதக் கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுத்துவிட்டது. இறையாண்மை மிக்க ஓர் அரசு அங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்கிற தாராள சனநாயக் கோட்பாடுதான் இத்தாலி என்கிற கப்பலைச் சமூகச் சிதைவு எனும் சூழலில் சிக்கி மூழ்கடிக்க இருந்தது.”

என்று அக்கட்டுரை முத்தாய்ப்பு வைத்தது.

இப்பிரசுரம் தவிர லண்டனில் இருந்த வெளிவந்த மராட்டிய இதழொன்றின் செய்தியாளர் டி.வி.தமன்கர் எழுதிய ‘முசோலினியும் பாசிசமும்’ என்கிற நூலும் பாசிசக் கருத்தியல், பாசிசச் சமூகம், பாசிச நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாராட்டியது. மொத்தத்தில் 1920களின் இறுதியில் பாசிச ஆட்சியும் முசோலினியும் மராட்டியத் தேசியவாதிகள் மத்தியில் பரவலாக அறிந்திருக்ககூடிய ஒரு சூழல் நிலவியது. சனநாயகம் என்பதை ஒரு பிரிட்டிஷ் மதிப்பீடாகக் கருதிய இந்துத் தேசியவாதிகள் குழப்பத்திலிருந்து ஒழுங்குக்கு மாறுதல், சமூகத்தை இராணுவமயமாக்குதல் என்கிற பாசிசக் கருத்தாக்கங்களால் வசீகரிக்கப்பட்டார்கள்.

4

முசோலினியைச் சந்தித்த மூஞ்சே

வட்டமேசை மாநாட்டிற்குச் சென்று வந்த பி.எஸ். மூஞ்சே 1931 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அய்ரோப்பிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தின் பெரும்பகுதி இத்தாலியில் கழிந்தது. பாசிச நிறுவனங்கள் பலவற்றை அவர் நேரடியாகச் சென்று பார்த்தார். பயணத்தின் உச்ச கட்டமாக முசோலினியைச் சந்தித்து உரையாடினார். மூஞ்சே தனது குறிப்பேட்டில் இது குறித்து பதின்மூன்றுப் பக்கங்கள் எழுதியுள்ளார்.

மார்ச் 19ம் தேதியன்று ரோமிலிருந்த ‘உடற் கல்விக்கான மத்திய இராணுவப்பள்ளி’, ‘உடற்பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம்’ மற்றும் பலில்லா, அவான்கார்டிஸ்டி அமைப்புகளையும் நிறுவனங்களையும் நேரில் ஆராய்ந்த மூஞ்சே, அவை குறித்து இரு பக்கங்கள் குறிப்பு எழுதியுள்ளார். இளைஞர்களிடம் கல்வியைக்காட்டிலும் பாசிசக் கருத்தியலை ஊட்டுவதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருந்தது. ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான சிறுவர்களைத்தேர்வு செய்து பயிற்சியளித்த இன்றைய ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எல்லா வகைகளிலும் முன்மாதிரியாக அவை விளங்கின என்பது மூஞ்சேயின் குறிப்புகளில் வெளிப்படுகிறது. இந்த இளைஞர்கள் வாராந்திரக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும். அப்போது உடற்பயிற்சியும் இராணுவப் பயிற்சியும் அளிக்கப்படும். ‘டிரில்’களும் அணிவகுப்புகளும் நடத்தப்படும்.

பலில்லா குறித்துத் தனது குறிப்பேட்டில் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார் மூஞ்சே. இத்தாலியை இராணுவ ரீதியில் புத்துயிர்ப்புச் செய்வதற்காக முசோலினியின் மூளையில் உதித்தகருத்து இது எனப் பாராட்டும் மூஞ்சே, “பாசிசக்கருத்தாக்கம் மக்களிடையே ஒற்றுமை என்கிற சிந்தனையை ஏற்படுத்துகிறது. இந்துக்களை இராணுவ ரீதியில் புத்தயிர்ப்புச் செய்வதற்கு இதேபோன்ற ஒரு அமைப்பு இந்தியாவில், குறிப்பாக இந்து இந்தியாவில் தேவை… இராணுவச் சீருடையில் இச்சிறுவர்களும் சிறுமியர்களும் எளிய உடற்பயிற்சிகளையும் ‘டிரில்’களையும் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.” என்று குறிப்பிடுகிறார்.

அன்று மாலை மூன்று மணியளவில் வெனீஷிய அரண்மனையில் இத்தாலிய சர்வாதிகாரியை டாக்டர் மூஞ்சே சந்தித்தார். எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார் முசோலினி. அன்றைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கருத்துப்பரிமாறிக் கொண்டபின்னர், மூஞ்சே: இன்று காலையும் மதியமும் பலில்லா மற்றும் சில பாசிச அமைப்புகளைப் பார்வையிட்டேன். அவை என்னை மிகவும் கவர்ந்தன. இத்தாலியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும இவை மிக அவசியம். இந்த அமைப்புகள் குறித்தும் மேன்மை தங்கிய உங்களைப்பற்றியும் பத்திரிகைகளில் பெரும்பாலும் நல்ல செய்திகள் வருவதில்லை என்ற போதிலும் என்னைப் பொருத்தமட்டில் இவற்றில் எந்த மறுப்புக்குரிய அம்சங்களையும் நான் காணவில்லை.

சிக்னோர் முசோலினி: இவை குறித்த உங்களின் கருத்தென்ன?

மூஞ்சே: மேன்மை தங்கிய அய்யா, நான் இவற்றால் பெரிதும் கவரப்பட்டுள்ளேன். இலட்சியங்கள் மிக்க வளரும் நாடுகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய அமைப்புகள் அவசியம் தேவை. இராணுவத் தன்மையிலான இந்தியப் புத்துயிர்ப்புக்கு இத்தகைய அமைப்புகளின் தேவை அதிகமாக உள்ளது. இதேபோன்ற குறிக்கோள்களுடன், நானாகவே சிந்தித்து ஏற்கனவே ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளேன். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பொது மேடைகளில் வாய்ப்புக்கிடைக்கும் போது பலில்லா குறித்தும் இதரப் பாசிச அமைப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசுவதற்குத் தயங்கமாட்டேன். அவை வெற்றிபெற வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.

முசோலினி: (மிகவும் மகிழ்ச்சியுடன்) நன்றி. ஆனால் உங்கள் பணி மிகவும் கடினமானது. எனினும் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நானும் வாழ்த்துகின்றேன். (ஆணவக் காப்பகத்திலுள்ள மூஞ்சேயின் குறிப்பேட்டில் மார்ச் 20 ம் தேதி எழுதப்பட்ட குறிப்புகளில் சில.)

இந்தியாவிற்குத் திரும்பியவுடன், ஹெட்கேவர் முதலானோருடன் இணைந்து இந்தத் திசையில் பணியைத் தொடங்கினார். மூஞ்சே, ‘மராத்தா’ இதழுக்கு அளித்தப்பேட்டி ஒன்றில் இந்துச் சமூகத்தை இராணுவ ரீதியில் ஒருங்கிணைப்பதன் தேவையை வயுறுத்தினார். “உண்மையில் நமது தலைவர்கள் ஜெர்மானிய இளைஞர் அமைப்பான பலில்லா மற்றும் இத்தாலிய பாசிச அமைப்புகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு அவை மிகவும் பொருத்தமானவை என்று நான் கருதுகின்றேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார். பாசிசம் குறித்துப் பொது விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. இவற்றில் ஹெட்கேவர் ஆர்வத்துடன் பங்கேற்றார். மூஞ்சே, ஹெட்கேவர், லாலு கோகலே ஆகிய மூவரும் இத்தாலி மற்றும் ஜெர்மன் மாதிரிகளில் இந்துக்களுக்கான இராணுவ அமைப்பொன்றைக் கட்டுவது குறித்து ஆலோசித்தனர். 1934 ஜனவரி 31ம் தேதியன்று ஹெட்கேவர் தலைமையில் ‘பாசிசமும் முசோலினியும்’ என்கிற தலைப்பில் மாநாடொன்றை ஏற்பாடு செய்தார் கவ்டே சாஸ்திரி.

மூஞ்சே இதில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். “இந்துதர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சீராக்க வேண்டும். அதனடிப்படையில் இந்து ஒற்றுமையைக் கட்ட வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, இட்லர் போன்ற ஓர் இந்துச் சர்வாதிகாரியின் கீழ் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்காத வரையில் நாம் இதைச்சாதிக்க இயலாது…. இதற்கான விஞ்ஞான பூர்வமான திட்டமொன்றை உருவாக்கிப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும்.” என்று அம்மாநாட்டில் தன் கருத்தை முன்வைத்தார் மூஞ்சே.

தொடர்ந்து ‘மத்திய இராணுவக் கல்விக் கழக’த்திற்கான பணியைத் தொடங்கினார் மூஞ்சே. இந்து இளைஞர்களை இராணுவமயமாக்குவதும், ‘சனாதன தர்மத்தை’ அவர்களுக்குக் கற்பிப்பதும், தனி நபர்களையும் தேசத்தையும் காப்பதற்கான விஞ்ஞானங்களையும், கலைகளையும் சொல்லித் தருவதும் கழகத்தின் குறிக்கோள்களாகச் சொல்லப்பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியிலுள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளிகளின் மாதிரியில் இதைத் தாம் செய்வதாக மூஞ்சே வெளிப்படையாகக் குறிப்பிட்டு வந்தார்.

மூஞ்சே உருவாக்கிய ‘மத்திய இராணுவக்கழகம் மற்றும் இராணுபப்பள்ளிக்கான திட்ட வரைவின்’ முன்னுரையில் (1935), “வெற்றியை நோக்கிய பெரும் இலட்சியத்துடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதியுடையவர்களாக நமது சிறுவர்களைத் தயாரிப்பதே பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும் நமது தரப்பில் ஆகக்குறைந்த மரணங்களும் இழப்புகளும் ஏற்படுவதாகவும் இந்த வெற்றி அமைய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் எதிரி யார் என்பது பற்றி அதில் தெளிவான விளக்கமில்லை. வெள்ளையர்கள் எனப்படும் புற எதிரிகளா இல்லை முஸ்லிம்கள் எனப்படும் வரலாற்று ரீதியான அக ‘எதிரிகளா’ என்பது பற்றித் தெளிவில்லை. எனினும் அவ் வெளியீட்டில் அகிம்சைக்கும் வன்முறைக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி நீண்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்திய வரலாற்றிலிருந்தும் இந்துப் புராணங்களிலிருந்தும் ஏராளமான மேற்கோள்கள் காட்டப்பட்டு அமைப்புரீதியான வன்முறை நியாயப்படுத்தப்பட்டது; அகிம்சை கோழைத்தனம் எனக் கேலி செய்யப்பட்டது. முசோலினியின் பாசிச அறிக்கையிலிருந்து நீண்ட மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டன. “அமைதி என்பது கோடிக்கணக்கான எஃகு வாட்களின் மேல்தான் கட்டப்படவேண்டும்” என்பதுபோன்ற முசோலினியின் கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

முசோலினியின் பாசிச அறிக்கைதவிர ஜெர்மானியப் பேராசிரியர் ஈவால்டு பான்சே எழுதிய ‘இராணுவ விஞ்ஞானம்’ என்கிற வெளியீட்டிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டன. “குழந்தைப் பருவம் முதல் ஒருநாட்டின் சிந்தனையில் போர் என்கிற எண்ணம் பதிக்கப்பட்டிருக்கவேண்டும்.. களத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஒரு போராளி தனது இரத்தம் தேசக் கடவுளின் பீடத்தில் பாய்கிறது என்று அறிவானேயானால் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவுவான்” என்பன போன்ற பான்சேயின் கருத்துக்கள் விதந்தோதப்பட்டன. மீண்டும் மீண்டும் இத்தாலியின் பலில்லா முதலான பாசிச அமைப்புகளைச் சுட்டிக்காட்டி எட்டு முதல் பதினெட்டு வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வற்புறுத்தப்பட்டது. “எனவே இனி குடிமகனுக்குப் படைவீரனுக்கும் இடையிலான வேறுபாடுகள், சிவிலியனுக்கும் சீருடைக்காரனுக்கும் இடையிலான வேறுபாடுகள் இல்லாதொழியும்.” என முத்தாய்ப்பு வைத்தது அறிக்கை.

1930களின் இறுதியில் இந்தியாவிலிருந்த இத்தாலிய அரசின் பிரதிநிதிகள் இந்துத் தேசியவாதிகளுடன் நெருக்கமான உறவைப் பேணினர். மும்பையிலிருந்த இத்தாலியத் தூதரகம், கல்கத்தாவிலிருந்த தூதரகத்துடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டது. ரோமிலிருந்து அனுப்பப்பட்ட மரியோ கேரல்லி என்னும் அதிகாரி இந்தப் பணிகளை ஒருங்கிணைத்தார். இத்தாலிய மொழியைக் கற்பிப்பது என்கிற பெயரில் இந்திய மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்தனர். இவ்வாறு தயாரானவர்களில் மாதவ் காசிநாத தாம்லே முக்கியமானவர். கேரல்லியின் ஆலோசனைப்படி முசோலினியின் பாசிசய அறிக்கையைத் தாம்லே மொழிபெயர்த்தார் (1939). அதே ஆண்டு தொடங்கப்பட்ட ‘லோகாண்டி மோர்ச்சா’ (இரும்பு முன்னணி) என்கிற பத்திரிகையில் அது தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அந்தோனியோ பேக்லியாரோவின் ‘கம்யூனிசத்திற்கு எதிராகப் பாசிசம்’ என்ற கட்டுரையும் கேரல்லியின் பாசிச நிறுவனங்கள் பற்றிய ஒரு கட்டுரையும்கூட இவ்வாறு மொழியாக்கப்பட்டுத் தொடராக வெளியிடப்பட்டன.

“திலகரைப் பின்பற்றுபவர் என நம்புகிற தாம்லே, தீவிரமான அரசியல் பார்வைகள் உடையவர். இத்தாலி மற்றும் நாஸி ஜெர்மனியின் வரலாறுகளிலிருந்து தாம் ஊக்கம் பெற்றதாக அவர் வெளிப்படையாகச் சொல்கிறார்” என்பது தாம்லே பற்றி உள்துறை அமைச்சகத்திற்கு காவல்துறை அளித்த குறிப்பு (கோப்பு எண் 830 (I) 1939, மும்பை ஆவணக்காப்பகம்). “பாசிசக் கருத்துக்களுடைய (தாம்லே), நமது பாசிசப் பாணியில் இந்தியச் சூழலுக்கேற்ற ‘இரும்புக் காவலர்கள்’ என்கிறஅமைப்பை உருவாக்கியுள்ளார்” என விதந்து எழுதினார் இத்தாலியத் தூதர்.

பாசிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இங்கே தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பு எம்.ஆர்.ஜெயகரின் ‘ஸ்வஸ்திகா கழகம்’ (1921). சிறுவர்க்கு ராணுவப்பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை ஜெயகரும் வற்புறுத்தினார். ‘சன்டே கிரானிக்கில்’ இதழில் வெளிவந்த முசோலினியின் “குழந்தை வீரர்கள்” சீருடையில் காவல் புரிவது போன்ற புகைப்படம் ஒன்றைச் சிலாகித்தார். ‘ஸ்வதிகா ஹெரால்டு’ என்றொரு இதழும் இவர்களால் நடத்தப்பட்டது. ஆரிய மேன்மையைச் சுட்டிக் காட்டுகிற இட்லரின் ‘ஸ்வஸ்திகா’ குறியீடு மீது இந்துத்துவவாதிகளுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. பெண்கள் வேதம் பயிலக் கூடாது எனச் சொல்லி சர்ச்சைக்குள்ளான பூரி சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி ஒரிசாவிலுள்ள கிறிஸ்தவப் பழங்குடியினரை இந்து மதத்திற்க்கு மாற்றி வருகிறார். இவ்வாறு பிற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களுக்கு எனத் தனியாக ‘ஸ்வஸ்திகா கோயில்கள்’ கட்டப்படும் எனவும், “எல்லோருக்குமான பொதுக் கோயில்களுக்கு அவர்கள் செல்லக் கூடாது” எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. (நி.இ.எக்ஸ்பிரஸ், ஜூன் 8, 2000).

5

இந்துத்துவம் வரையறுத்த தேசியம்

பாசிசப் பாணியில் இந்துதேசீயத்தை வரையறுத்ததிலும் சிறுபான்மையினரைப் பிரதான எதிரிகளாகக் கட்டமைத்ததிலும் இந்துத்துவத்தின் மூல ஆசான் என்று சொல்லத் தக்க சாவர்கரின் பங்கும் இன்றியமையாதது. இந்த அம்சத்தில் சாவர்கரின் ‘இந்து மகா சபை’யும் மூஞ்சே, ஹெட்கேவரின் ஆர்எஸ்எஸ்சும் இரட்டைக்குழல் துப்பாக்ககளாகச் செயல்பட்டன. சிறையிலிருந்து வெளிவந்தது (1937) தொடங்கி 1942 வரை இந்து மகாசபையின் தலைவராகச் செயல்பட்டார் சாவர்கர். 1926 முதல் 1931 வரை ஹெக்டேவர், மகாசபையின் செயலராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து விதுலையான சாவர்கரைப் பாராட்டி ஆர்எஸ்எஸ் பல கூட்டங்களை நடத்தியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சுநாடுகளின் கூட்டையும் அரசியலையும் ஆதரிப்பது இந்துத்துவத்தின் கொள்கையாக இருந்தது. 1938 ஆகஸ்டு 1ந்தேதியன்று புனேயில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் மக்கள் முன்னால் உரையாற்றுகையில்,

“இந்தியாவின் அயலுறவுக்கொள்கை ‘இசம்’களைப் பொருத்து அமையக்கூடாது. ஜெர்மனி நாசிசத்தையும், இத்தாலி பாசிசத்தையும் தேர்வு செய்து அவர்களின் உரிமை, இந்த ‘இசம்’களும் அரசு வடிவங்களும் அவர்களுக்கும் அங்குள்ள சூழலுக்கும் பொருத்தமானவைதான் என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது. ருஷ்யாவுக்குப் போல்ஷெவிசம் பொருத்தமானதாக இருக்கலாம். பிரிட்டிஷ் மக்களுக்குப் பொருத்தமாகச் சனநாயகம் அமையலாம்”

என்றார் சாவர்கர். சனநாயகம் என்பதை ஒரு பொதுவான அரசு வடிவமாக ஏற்க இந்துத்துவம் தயாராக இல்லாததையே இது காட்டுகிறது. அவர்களைப் பொருத்தமட்டில் பிரிட்டிஷ் சூழலுக்கான ஒரு வடிவம் அது. மக்கள் திரளுக்கும் இனங்களுக்கும் தகுந்தாற்போல அரசியல் வடிவங்கள் மாறுபடுகின்றன என்று அவர்கள் கூறுவது இந்தியச் சூழலில் சனநாயகம் பொருத்தமில்லை. இங்கு பொருத்தமானது பாசிசமே என்கிற முடிவை அடையத்தான் என்பது தொடர்ந்து அவர்களது சொல்லாடல்களைக் கவனிக்கும்போது விளங்கிவிடுகிறது.

எனவே, அன்று சோசலிசத்தையும் சனநாயகத்தையும வற்புறுத்தி, பாசிசத்தை எதிர்த்து வந்த பண்டிதநேரு முதலானோர் இந்துத்துவத்தின் எதிரிகளாயினர். முன்குறிப்பிட்ட அதே கூட்டத்தில் சாவர்க்கர் தொடர்ந்து பேசுகையில், “ஒருநாடு குறிப்பான ஒரு கொள்கையையும் அரசியல் வடிவத்தையும் பின்பற்ற வேண்டும் எனக் கட்டளையிட நீங்கள் யார்? ஜெர்மனிக்கு எதுபொருத்தம் என்பது பண்டித நேருவைக் காட்டிலும் இட்லருக்கு நன்றாகத் தெரியும். நாசி மற்றும் பாசிச மந்திரக்கோலின் தொடுகையில் இத்தாலியும் ஜெர்மனியும் வளர்ந்து செழித்து வலுவாகியிருப்பதொன்றே அவை அந்நாடுகளின் நலனுக்குரிய நல்ல மருந்துகள் என்பதற்குச் சான்றாக உள்ளன.. எல்லா இந்தியர்களின் பிரதிநிதியாக நின்று ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் எதிராகக் கருத்துச் சொல்ல நேரு யார்? காங்கிரசின் கருத்தி வேண்டுமானால் அவர் சொல்லிக் கொள்ளட்டும்.. ஆனால் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் நாட்டு மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இந்து சங்காதனிகளுக்கு ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் (கொள்கைகள்) மீது எந்த விதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது…. செக்கோஸ்லாவியப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் ஆஸ்திரியா மற்றும் சுடேட்டனைச் சேர்ந்த ஜெர்மானிய மக்களைச் ஜெர்மானியக் கொடியின் கீழ் கொண்டுவந்ததை இந்து சங்காதனிகள் ஆதரிக்கிறோம்” என்றார். சாவர்கரின் இந்தப்பேச்சு முழுவதையும் ஜெர்மானிய நாளிதழான ‘வோல்கிஷெர் பியோபாச்டர்’ முழுமையாக (நவம்பர் 30, 1938) வெளியிட்டது.

இந்தியச் சூழலை மனதில் கொண்டுதான் செக்கோஸ்லாவியாவில் உள்ள செர்மன் சிறுபான்மையினர் பிரச்சினையைச் சாவர்கர் பேசினார் என்கிறார் காசோலரி. அக்டோபர் 11ம் தேதி புனேயில் நடைபெற்ற இன்னொரு கூட்டத்தில் பேசுகையில் இந்தியாவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களுடனும் இந்துக்கள் பிற இந்துக்களுடனுந்தான் இணைய விருப்பம் தெரிவிப்பார்கள் என்றார் சாவர்கர். அக்டோபர் 14ம் தேதி நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் இட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிப் பேசும்போது, “ஒரு தேசம் என்பது அங்குள்ள பெரும்பான்மை மக்களாலேயே உருவாக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன ஆயினர்? சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் ஜெர்மனியை விட்டே விரட்டப்பட்டனர்” என்றார். 1938 இறுதியில் தாணேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அணிகளை நோக்கிப் பேசுகையில், “ஜெர்மனியைப் பொருத்த மட்டில் ஜெர்மானிய மக்களின் இயக்கம் ஒருதேசிய இயக்கமாக உள்ளது. ஆனால் யூதச் சிறுபான்மையினரின் இயக்கமோ ஒரு வகுப்புவாத இயக்கந்தான்” என்று கூறிய சாவர்கர் ஜெர்மனிக்கு எதிரான காங்கிரசின் தீர்மானங்களைக் கண்டித்தார்.

1939 ஜூலை 29ம் தேதியன்று புனேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தேசியம் குறித்த இந்துத்துவ வரையறை தெளிவாக முன்வைக்கப்பட்டது. “தேசிய இனம் என்பது புவியியல் அடிப்படையிலானதல்ல. சிந்தனை, மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒற்றுமையில் உருவாவதே தேசிய இனம். எனவே ஜெர்மானியர்களையும் யூதர்களையும் ஒரே தேசிய இனமாகக் கருத இயலாது” என்பது சாவர்கரின் இறுதிக்கருத்தாக இருந்தது. எனவே இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் இந்துக்களுடன் இணைந்து ஒரு தேசமாக இருக்க இயலாது என்பது இதன் உட்கருத்தாக இருந்தது.

1939ன் இறுதியில நடைபெற்ற இந்து மகாசபையின் இருபத்தோராவது கூட்டத்தில், “இந்திய முஸ்லிம்கள் ஜெர்மனியிலுள்ள யூதர்களைப் போலத்தான் உள்ளனர். பக்கத்து வீட்டில் வாழ்கிற இந்துக்களைக் காட்டிலும் இந்தியாவிற்கு வெளியே வாழ்கிற முஸ்லிம்களுடன் தான் அவர்கள் தம்மை அடையாளம் காண்கின்றனர்” என வெளிப்படையாக ஜெர்மானிய யூதர்களுடன் இந்திய முஸ்லிம்களை ஒப்பிட்டார் சாவர்கர்.

அத்தோடு நிற்கவில்லை. இனத்தூய்மை என்கிற பெயரில் யூதர்களைக் கொன்றதையும் இந்துத்துவவாதிகள் நியாயப்படுத்தினர். 1939ம் ஆண்டு வெளிவந்த ‘நாம் அல்லது நமது தேசத்தன்மையை வரையறுத்தல்’ என்கிற தனது நூலில் குரு கோல்வால்கர், “ஜெர்மன் தேசியப் பெருமை என்பது இன்றைய விவாதப் பொருளாக உள்ளது. தனது தேசம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைக்கும் பொருட்டு தனது நாட்டிலிருந்த செமிடிக் இனத்தவரான யூதர்களைக் களைந்தொழித்ததன் மூலம் இவ் உலகை அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள். ஜெர்மானியப் பெருமை அதன் உயர்ந்த நிலையில் இதன் மூலம் வெளிப்பட்டது.” என்றெழுதியதோடு இந்திய முஸ்லிம்களைப் பற்றிச் சொல்ல வருகையில், “ஒரே வார்த்தையில் சொல்வாதானால் முஸ்லிம்கள் அயல் நாட்டுக்கு விசுவாசமானவர்களாக இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது இந்து தேசத்திற்குத் தம்மை முழுமையாகக் கீழ்ப்படுத்திக்கொண்டு இங்கே வாழ வேண்டும். அவர்கள் எந்த முன்னுரிமைகளையும் கோரக்கூடாது என்பது மட்டுமல்ல, சாதாரணக் குடிமகனுக்குரிய உரிமைகளையும் கூடக் கோரக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ்சின் தலைவரான குருஜியின் கருத்துக்களை இன்றளவும் அவரது வாரிசுகள் பேசி வருவதை நாம் அறிவோம். இன்றைய தலைவர் சுதர்சன் பதவி ஏற்ற மறுகணம் (மார்ச் 10, 2000) இந்துக்களுக்கும் இந்து அல்லாதவர்களுக்குமான பாரத யுத்தம் ஒன்று பற்றிப் பேசியதையும், தொடர்ந்து சிறுபான்மையினரை நோக்கி ‘உங்கள் மதங்களை சுதேசிமயப்படுத்துங்கள், இந்திய மயமாக்குங்கள்’ (இந்து, அக் 15, 2000) என்று பேசி வருவதையும் நாம் இத்துடன் இணைத்து நோக்குதல் அவசியம்.

தொடர்ந்து ‘மராத்தா’ இதழிலும் ‘கேசரி’யிலும் பாசிசத்திற்கு ஆதரவான கட்டுரைகள் வெளிவந்தன. 1939 மார்ச் 25 அன்று இந்து மகாசபை வெளியிட்ட அறிக்கையொன்றில், “ஆரியக் கலாச்சாரத்தைப் புத்துயிர்ப்பது, ஸ்வஸ்திகாவை மேன்மைப்படுத்துவது, வேதக் கல்விக்கு ஆதரவளிப்பது, இந்தோ-ஜெர்மனிய நாகரிக மரபை உயர்த்திப்பிடிப்பது முதலான ஜெர்மானியின் புனிதக் கருத்துக்களை இந்தியாவிலுள்ள மத உணர்வுமிக்க புத்திசாலித்தனமான இந்துக்கள் குதூகலத்தோடும் நம்பிக்கையோடும் வரவேற்கின்றனர். பண்டித ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான ஒரு சில சோசலிஸ்டுகள் மட்டுமே இன்றைய ஜெர்மானிய அரசு குறித்து மாற்றுக்கருத்துக்களை மெலிதாகச் சொல்லிக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் இந்தியாவில் எந்தப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இல்லை” என்று அறிவித்தனர். நேருவைத் தாக்கியதோடு அவர்கள் நிறுத்தவில்லை. ஜெர்மனியை விமர்சித்திருந்த காந்தியையும் அவ்வறிக்கையில் கடுஞ்சொற்களால் தாக்கியிருந்தனர். இறுதியாக ஆரியக் கலாச்சாரத்தின் எதிரிகளுக்கு எதிரான ஜெர்மனியின் புனிதப்போர் என்பது உலகிலுள்ள எல்லா ஆரிய தேசங்களையும் விழிப்புறச் செய்யும் எனவும் முக்கியமாக இந்தியாவிலுள்ள இந்துக்களை எழுச்சியூட்டும் எனவும் முடிந்திருந்தது அவ்வறிக்கை.

இத்தாலி, ஜெர்மனி தொடர்புகள் மட்டுமின்றி ஜப்பானிய வலதுசாரி இயக்கங்களுடனும் இந்துத்துவவாதிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயன்றனர். ஜப்பானுக்குச் சென்று குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்ட இந்தியரான ராஷ் பிஹாரி போஸ், அங்குள்ள ‘கறுப்பு டிராகன் கழகம்’ முதலான தீவிர வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவராக இருந்தார். 1938 தொடங்கி சாவர்கர், ராஷ் பிஹாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டார். ராஷ் பிஹாரி எழுதிய கடிதங்கள் சில ‘மராத்தா’ வில் வெளியாயின. இந்து மகாசபையின் ஜப்பானியக் கிளை ஒன்றைத் தொடங்க இருப்பதாகவும் ராஷ் பிஹாரி அறிவித்தார்.

அச்சு நாட்டுப் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ள இந்து மகா சபையின் சார்பாக ஜூகாலி கிஷோர் பிர்லா நியமக்கப்பட்டார். இந்து மகாசபையுடன் இணைந்து செயல்படுவதற்கு ஜெர்மனி சார்பாக ஜி.எல்.லெஸ்ஸேஸின்ங்கி, பி.பாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கட்டுரைப் பரிமாற்றங்கள், மொழி பெயர்ப்புகள், வெளியீடுகள் என்கிற அளவில் இத்தொடர்புகள் இருந்தன.

6

பாசிசத்தைப் பாசிசத்திற்காகவே ஆதரித்த இந்துத்துவம்

போர்தொடங்கியவுடன் அச்சு நாடுகளை ஆதரிப்பது என்பதுதான் இந்துத்துவவாதிகளின் நிலைப்பாடாக இருந்தது. எக்காரணம் கொண்டும் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்றுகூடத் தொடக்கத்தில் பேசினர். ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரித்தனர். எனினும்போர் முடிவில் அச்சுநாடுகள் தோல்வியுற்ற பாசிசக் கொடூரங்கள் உலகளவில் அம்பலப்பட்டுப்போன நிலையில் தொடர்ந்து பாசிசப் பெருமைகளை இந்துத்துவவாதிகள் வெளிப்படையாக பேச இயலாத நிலை ஏற்பட்டது.

பாசிஸ்டுகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்குமான தொடர்பின் சில அம்சங்களை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். பிரிட்டிஷ் எதிர்ப்பு, வெள்ளையர்களை வெளியேற்றி இந்தியாவிற்குச் சுதந்திரம் பெறுதல் என்கிற அடிப்படையில் இந்தத் தொடர்பு அமையவில்லை. ஆனால் சுபாஷ் சந்திர போசுக்கும் பாசிஸ்டுகளுக்குமான தொடர்பு அந்த அடிப்படையிலேய அமைந்தது. இந்துத்துவவாதிகள் எந்தக் கட்டத்திலும் பிரிட்டிஷ் எதிர்ப்பில் முனைப்புக்காட்டியதில்லை என்பது முக்கியம். 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் அவர்கள் முழுமையாக விலகி இருந்தனர். குருஜியின் ‘சிந்தனைத் தொகு’ப்பிலும் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிலும் அன்றாடப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே டாக்டர்ஜியின் (ஹெட்கேவர்) கரிசனமாக இருந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. 1930, 1942 ஆகிய காலகட்டங்களில் விடுதலைப்போராட்டச் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது ஆர்எஸ்எஸ் அணிகளுக்குப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்கிற சஞ்சலங்கள் ஏற்படுவதுண்டு எனக்கூறும் கோல்வால்கர் அச்சமயங்களில் ஹெட்கேவர் எப்படி அவர்களைச் சமாளிப்பார் என்பதை விவரமாகச் சொல்லுவார்.

“ஒருநாள் ஒரு கண்ணியவான் வந்தார். சிறைக்குப் போக வேண்டும் என்றார். குடும்பத்தை யார் பார்த்துச்கொள்வார்கள் என டாக்டர்ஜி கேட்டார். தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன் என்றார் அவர். அப்படியானால் இரண்டாண்டுகள் சங்கப் பணிகளைச் செய்யுங்களேன் என்றார் டாக்டர்ஜி. கடும் போராட்டக் காலங்களில்கூட சங்கத்தின் அன்றாடப்பணிகள் தடைப்பட்டதில்லை” என்கிற கூற்றிலிருந்து பிரிட்டிஷ் எதிர்பபு என்பது இநதுத்துவத்தின் பணியாக இருந்ததில்லை என்பது விளங்கும்.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைக் காங்கிரஸ் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, பின்னாளில் ஜனசங் கட்சியைத் தோற்றுவித்த இந்துத்துவாதி சியாமா பிரசாத் முகர்ஜி வங்க மாகாண அரசில் நிதியமைச்சராக இருந்தார். ஆகஸ்டு 8, 1942 அன்று ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தைக் காங்கிரஸ் இயற்றியது. அன்றைய வங்கக் கவர்னரும் கடும் அடக்குமுறையாளனுமான சர் ஜான் ஹெர்பர்ட்டுக்கு ஜூலை 26 அன்று முகர்ஜி ஒரு கடிதம் எழுதினார். காங்கிரஸ் அறிவித்துள்ள போராட்டத்தின் விளைவாக ஏற்படப் போகும் மக்கள் எழுச்சி, அதனால் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஏற்பட உள்ள ஆபத்து ஆகியவற்றை அப்போதுள்ள அரசு தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை முகர்ஜி ஹெர்பர்ட்டுக்குச் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஹெர்பர்ட், முகர்ஜியைவிட நிறையத் தெரிந்தவன். ஆகஸ்டு 9ம்தேதியன்று அமைச்சரவையைக்கூட்டி, ‘அரசுமேற்கொள்ள உள்ள கடும் அடக்குமுறைக்கு அமைச்சரவை துணை செய்யவேண்டும், அல்லது பதவி விலகவேண்டும்’ என்று கூறினான். முகர்ஜி உட்பட யாரும் பதவி விலகவில்லை. போராளிகளின் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டபோதும் நவம்பர் 10வரை முகர்ஜி பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார் (ஏ.ஜி.நூரானி, மு.கு.நூ. பக். 43)

அதேபோல 1937 மேயில் சிறையிலிருந்து சாவர்கர் விடுதலை செய்யப்பட்டபோதும் வெள்ளை அரசு அவருக்குப் பல நிபந்தனைகளை விதித்தது. நியாயப்படி விசாரணை நடத்தப்பட்டதெனவும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதுதான் எனவும் வாக்கு மூலம் அளிக்கச் சொன்னது. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுத் தந்துவிட்டு விடுதலையானார் சாவர்கர். சிந்து மாகாணத்தின் கூட்டணி அரசில் முஸ்லிம் லீக்குடன் இந்து மகாசபை பங்கு பெற்றிருந்தபோது, லீக் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றியது. இந்து மகா சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு வருத்தம் தெரிவித்தனரேயொழிய பதவி விலகவில்லை.

ஆக, காங்கிரசை எதிர்ப்பது என்பதும் பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பது என்பதுந்தான் இந்துத்துவ சக்திகளின் நடைமுறைகளாக இருந்தன. எனவே போசைப்போல பிரிட்டிஷ் எதிர்ப்பிற்காகப் பாசிஸ்டுகளுடன் அவர்கள் நட்பு பாவிக்கவில்லை. வேறு காரணங்களுக்காகவே இந்துத்துவவாதிகள் பாசிசத்துடன் தம்மை இனங்கண்டு கொண்டனர். பாசிசத்தின் கொள்கை, நடைமுறை ஆகிய இரு அம்சங்களும் அவர்களுக்கு உவப்பானவையாகவும் பின்பற்றத் தக்கனவாகவும் இருந்தன.

சமூகத்தை இராணுவமயமாக்குதல், குறிப்பாக 6 வயது தொடங்கி 18 வயதுவரையிலான சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல், இளமையிலேயே அவர்கள் மனத்தில் பாசிச/இந்துக் கருத்தியலைப் புகுத்துதல் என்கிற அம்சம் இந்துத்துவவாதிகளை மிகவும் ஈர்த்தது. சனநாயக அமைப்பையும் பன்மைத் தன்மையையும் பாசிஸ்டுகளைப் போலவே இந்துத்துவவாதிகளும் குழப்பம் எனக் கருதினர். சர்வாதிகாரத்திற்கு மாறுதல் என்பது குழப்பத்திலிருந்து ஒழுங்கை நோக்கிச் செல்வதென அவர்கள் நம்பினர்.

நேருவின் சோஷலிசம், காந்தியின் அகிம்சை ஆகியவற்றையும் அவர்கள் அறவே வெறுத்தனர். வெளிப்படையாக வன்முறையைப் போற்றிய பாசிசம் இந்த வகையிலும் அவர்களை ஈர்த்தது. ‘ராட்டையா, ரைஃபிலா’ போன்ற முழக்கங்களை அவர்கள் முன்வைத்தனர். காந்தியின் புவியியல் அடிப்படையிலான தேசியம் (territorial nationalism) என்பது ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பிற்குட்பட்ட அனைத்து மக்களையும் உள்ளடக்குவதாக இருந்தது. இசுலாமியரை விலக்கி எதிரிகளாக முன்னிறுத்த முனைந்த இந்துத்துவத்திற்கு பாசிசம் முன்வைத்த கலாச்சார/மரபினத் தேசியம் (cultural / racial nationalism) என்பதும் உள்நாட்டு எதிரி(internal enemy) என்கிற பாசிசச் சிந்தனையும் பொருத்தமானதாக இருந்தது. இனத்தூய்மை என்கிற பாசிசக் கருத்தாக்கமும் அவர்களை ஈர்த்தது.

ஒழுங்கு, ஆணாதிக்கம், குடும்ப நிறுவனத்தை இறுக்கப் பேணுதல் முதலான அம்சங்களிலும் பாசிஸ்டுகளும் இந்துத்துவவாதிகளும் இணைந்து நின்றனர். இன்றளவும் அவர்கள் இந்தச் சிந்தனைகளைத் தொடர்ந்து பேணுதலை நாம் பார்க்க இயலும். காதலர் தினம் கொண்டாடக்கூடாது. பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது. தேன்நிலவு கூடாது, ‘வாட்டர்’ போன்ற திரைப்படங்களை அனுமதிக்கக்கூடாது எனப்பல கூடாதுகளை அவர்கள் நடைமுறைப்படுத்துவதை நாம் காண வேண்டும். அன்று பாராளுமன்றத்தைப் பாசிஸ்டுகள் தீயிட்டுக் கொளுத்தினர். இன்று பாபர் மசூதியை இந்துத்துவவாதிகள் இடித்துத் தகர்த்தனர். எனவே, பாசிசத்திற்கும் இந்துத்துவத்திற்குமான தொடர்பு கோட்பாட்டு அடிப்படையிலானது. தன்னிச்சையான தொடர்பாக இது அமையாமல் மிகவும் திட்டமிட்டு, அமைப்பு ரீதியான செயற்பாடுகளினூடாக இது தொடக்க காலத்தில் பேணப்பட்டது.

வெளிப்படையாகத் தம்மை பாசிஸ்டுகள் என அறிவித்துக்கொள்ள இயலாத நிலை வரும்வரை அவர்கள் தங்கள் பாசிசத் தொடர்புகளை வெளிப்படுத்த வெட்கப்பட்டதில்லை. மிகப்பெரிய மாற்றங்களுடன் ஓர் அய்ம்பதாண்டு காலம் இன்று ஓடோடிவிட்டது. முசோலினியின் பாசிசக்கட்சியும் இட்லரின் நாசிக்கட்சியும் இன்றைய சூழலில் தலைகாட்ட நேர்ந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக இன்று இந்துத்துவாதிகள் விளங்குகின்றனர். அவர்களது சொற்களையும் செயற்பாடுகளையும் கூர்ந்து கவனிப்போருக்கு இதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *