இந்துத்துவமும்  உலகமயமும்

 பொருளியல் (economics)  குறித்த விவாதங்கள் இன்று சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொது அரங்குகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் கூட இன்று மிக வேகமாக இந்தியப் பொருளாதாரம் அந்நியமூலதனத்துடன் பிணைக்கப்படும் சூழலில் அதிர்ந்துபோய் வாயடைத்துப் போயிருக்கும் சூழல்தான் நிலவுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அசுடோஷ் வார்னே சொல்வது போல இந்தியாவில் என்றைக்குமே பொருளியல் குறித்த விவாதங்கள் அதற்குரிய முக்கியத்துவம் பெற்றதில்லை எனச் சொல்லலாம். சாதி, மதம், இனம் சார்ந்த அடையாளங்களின் அடிப்படையில்தான் அரசியலும் விவாதங்களும் இங்கு அதிக அளவில் மையங் கொண்டிருந்தன.

அடையாளங்கள் குறித்த இப்படியான விவாதங்கள் முக்கியமற்றவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த விவாதங்களும் பிரச்சினைகளும் பொருளியலிலிருந்து தனித்தவை அல்ல. பொருளியலைப் புறக்கணித்து விட்டு இவற்றை மட்டும் பேசுவது பெரும் ஆபத்து.

ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு உள்ளது? சென்ற வாரத்தில்தான் “ஆசியாவிலேயே அந்நிய மூலதனத்திற்கு அதிகமாகத் திறந்து விடப்பட்ட நாடாக இந்தியா ஆகியுள்ளது” எனச் சொல்லும்படியான சில பொருளாதார நடவடிக்கைகள் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது குறித்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு ஜீவன் கூட வாய் திறக்கவில்லை. ஆனால் சுவாதி கொலை பற்றிப் பேசாதவர்கள் இல்லை. மோடி தினந்தோறும் வெளிநாட்டு அரசுகளுடனும் கார்பொரேட்களுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். கல்வி தொடர்பான ‘காட்’ ஒப்பந்தத்தில் இன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. கல்வி இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் ‘வணிகப் பொருள்’ ஆக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவுடன் செய்த அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து அந்நிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் முன்னதாகக் கூட அதானி நிறுவனத்திற்கு சுற்றுச் சூழல் விதிகளை மீறியதற்காக முந்தைய அரசால் விதிக்கப்பட்ட 200 கோடி ரூ அபராதம் நீக்கப்பட்டுள்ளது. மோடி அதிகாரத்திற்கு வந்தபின் அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் இது குறித்தெல்லாம் பெரிய அளவில் எந்த விவாதமும் இங்கு பொதுப்புலத்தில் நடைபெறவில்லை.

இது ஒரு சாதாரண விஷயம் இல்லை. இப்படி அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடிய நிலை மிகவும் ஆபத்தான ஒன்று.

பாசிசம் மக்கள் மீது வன்முறையாகத் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது ஒரு வகையில் பெரும்பாலானவர்களின் ஒப்புதலுடன் தான் அது அரங்கேறுகிறது. 1930 களில் ஐரோப்பாவில் தலை எடுத்த classical fascism ஆனாலுஞ் சரி, இன்றும், 1998 லும் இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்துத்துவமும் சரி இரண்டுமே இப்படி மக்கள் ஆதரவுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இப்படிப் பாசிசம் ஆட்சிக்கு வந்த இந்தத் தருணங்களி்ன் சில பொதுவான கூறுகளை நாம் அடையாளம் காண இயலும். அவை:

1.இடதுசாரிகள் பலமிழந்திருப்பர்.

  1. ஓரளவு தாராள மனப்பாங்குடைய, பாசிசத்திற்கு இடங்கொடாத முக்கிய அரசியல் கட்சி (எ.கா: காங்கிரஸ்) உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் திராணியற்றதாகவும், ஊழல் மலிந்ததாகவும் பெயரெடுத்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும்.

3.பாசிச சக்திகளை ஒரு ‘மாற்று’ என ஏற்கும் மனநிலை ஒன்று பரவலாக உருப்பெற்றிருக்கும்.

ஜெர்மனியில் ஹிட்லர் மேலெழுந்த சூழலில் இந்த மூன்று அம்சங்களும் பொருந்திப் போவதை இது குறித்துப் படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள இயலும். 1998 ல் தேவகவுடா தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் 2014ல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் இப்படி அன்றைய வெய்மார் குடியரசுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்..

இன்று மிகப் பெரிய அளவில் மத்தியதர வர்க்கம் வீங்கிப் பெருத்துள்ளது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதம் அளவு மத்தியதர வர்க்கம் உள்ளது. IT துறை முதலியவற்றின் ஊடாக உருப்பெற்றுள்ள இந்த மத்தியதர வர்க்கம் ஏழ்மை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம், இட ஒதுக்கீடு, தொழிற்சங்க உரிமைகள் முதலான அரசியலில் ஆர்வம் கொள்வதில்லை. சில நேரங்களில் நம் நாடு முன்னேறாமைக்கு இவையே காரணம் என வெறுக்கவும் செய்கின்றது. இத்தகையோர் நரேந்திர மோடியை ஒரு உருப்படியான மாற்று என எளிதில் ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்த மட்டில் வெட்டிப் பேச்சுக்கள்.

இந்தப் பின்னணியில்தான் இந்துத்துவம் இங்கே ஆட்சி அதிகாரத்தை இதுவரை (1996, 1998, 1999, 2014) கைப்பற்றியுள்ளது.

 

இரண்டு

 

1991 ல் இந்தியப் பொருளாதாரம் தீவிரமாக அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்படும் நிலை தொடங்கியது.

அப்போதைய இந்தியப் பொருளாதார நிலை எப்படி இருந்தது?

எண்ணை விலை ஏற்றத்தின் விளைவாகவும், மூலதன வாய்ப்புகள் சுருங்கியதாலும் இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்தது. fiscal மற்றும் current account களில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. வெளி நாட்டுக் கடன்களைக் கட்ட முடியாமல் திணறும் நிலையை குறைந்த பட்சம் இரண்டு தடவைகள் இந்தியா சந்திக்க நேர்ந்தது. செலவினங்களில் பெருங் குறைப்பு. ரூபாய் மதிப்பு 20 சதம் குறைப்பு முதலிய நடவடிக்கைகளை இந்திய மக்கள் சந்திக்க நேர்ந்தது. IMF க்குக் கட்ட வேண்டிய நிலுவைத் தொகை 1.6 பில்லியன் டாலர் அளவு உயர்ந்தது.

கட்டுமானத் தகவமைப்பு நடவடிக்கைகள் (structural adjustment programmes), புதிய பொருளாதாரக் கொள்கை, சுங்க வரி வீதக் குறைப்பு என்பதாக நரசிம்மா ராவ் அரசால் இந்தியப் பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடப்பட்டது இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்தது.

இந்த நிலையில்தான் மேற்சொன்னவாறு பா.ஜக முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது அதன் முன் இருந்த மூன்று தேர்வுகளை இப்படிச் சொல்லலாம்.

  1. முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த பொருளாதாரத் திறப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
  2. அது சாத்தியமில்லை எனக் கருதி இருந்தால் முந்தைய அரசுகள் மேற்கொண்டிருந்த இந்தப் பொருளாதார நடவடிக்கைகளை மாற்றமின்றித் தொடர்வதோடு நின்றிருக் கலாம்.

3.இன்னும் தீவிரமாக இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திற்குத் தி்றந்து விட்டிருக்கலாம்.

தாங்கள் இதுகாறும் முழங்கி வந்த சுதேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பவர்களாக இருந்திருந்தால்  அவர்கள் முதல் தேர்வைத்தான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அல்லது நரசிம்மாராவ் காலந் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வந்த பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன எனவும், மிகப் பெரிய அளவில் மேலை நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் எனவும் பா.ஜ.க அரசு தயங்கி இருந்தால் அதையும் கூட நாம் புரிந்து கொள்ள இயலும்.

அதுதான் பிரச்சினை எனில் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்திருப்பதோடு நின்றிருக்க வேண்டும். அதாவது முன் குறிப்பிட்ட மூன்று தேர்வுகளில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வாஜ்பேயி தலைமையில் இருந்த பா.ஜ.க அரசு என்ன செய்தது?

மூன்றாவது தேர்வை, அதாவது நரசிம்மாராவ் தொடங்கி வைத்த பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்துவது எனும் நிலையை எடுத்தது.

தனது அந்நிய எதிர்ப்பு, சுதேசி வாய் வீச்சுக்கள் ஆகிய அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக அந்ந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்து விடும் நிலையை அவ்வளவு சாதாரணமாக எப்படி இந்துத்துவத்தால் எடுக்க முடிந்தது?

ஏன் அதற்குப் பெரிய எதிர்ப்புகள் உள்ளிருந்து வரவில்லை?

தீவிர சுதேசியம் பேசியவர்கள் என் வாயடைத்துப் போனார்கள்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் விளங்க நாம் இந்துத்துவத்தின் ‘தேசியம்’ குறித்த அணுகல் முறையைச் சற்று ஆழமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

Top of Form


மூன்று

தேசியம் என்பதன் செவ்வியல் வரையறைப்படி அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. காந்தி இந்திய அரசியலில் நுழைந்தபோதும், அதற்கு முன்னும் கூட இங்கு உருவான தேசிய உணர்வு ஆங்கில ஏகாபத்திய எதிர்ப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்; இந்திய மண்ணை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதே அப்போதைய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக இருந்தது.

காந்திக்கும், காந்திக்கு முந்திய திலகர் – அரவிந்தர் கால ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் உள்ள வேறுபாடு ‘இந்தியர்கள்’ யார் என வரையறுப்பதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பின் வடிவத்திலும்தான் இருந்தது. ‘இந்தியர்கள்’ என்பதை மத அடிப்படையில் ‘இந்துக்கள்’, அதிலும் குறிப்பாக உயர்சாதி இந்துக்கள் என காந்திக்கு முந்தி சுதேசியம் பேசியோர் வரையறுத்தனர். தவிரவும் பெரும் மக்கள் திரள் போராட்டம் என்பதைக் காட்டிலும் தனிநபர் பயங்கரவாதத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர். காந்தி இந்த இரண்டு அமசங்களையும் மிகப் பெரிய அளவில் மாற்றி அமைத்தார். ‘இந்தியர்’ என்பதில் அவர் முஸ்லிம்கள், தலித்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் உள்ளடக்கினார். அவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, இரண்டாண்டுகள் நாடெங்கும் சுற்றி ஆய்வு செய்தபின் தொடங்கிய முதல் அரசியல் செயற்பாடு ‘கிலாஃபத்’ இயக்கம் என்பது குறிப்பிடத் தக்கது. முந்தைய தலைமுறையிடமிருந்து காந்தி வேறுபட்ட அடுத்த புள்ளி தனிநபர் பயங்கரவாதம் என்பதை மறுத்து அமைதி வழியிலான பெரும் மக்கள் திரள் போராட்டம் என்பதாக இருந்தது.

எனினும் காந்தி மற்றும் அவர்க்கு முந்திய தலைமுறை சுதேசியர் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தனர்.

எனினும் காந்தி ‘சுதேசியம்’ , ‘சுய ஆட்சி’ என்பதில் உள்ள “சுயம்” என்கிற கருத்தாக்கத்திற்கு அளித்த பொருள் மிகவும் ஆழமானது. அது வெறும் உள்ளூர் மக்களின் ஆட்சி மற்றும் அந்நியப் பொருட்களின் புறக்கணிப்பு என்கிற அளவில் சுருங்கிவிடவில்லை. மாறாக ஒவ்வொருவரும் (தம்) சுயத்தை ஆளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் கருதினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சுய விருப்புகளைச் சுருக்கிக் கொள்ளுதல், ஆடம்பரமான வாழ்கையையும், அதிக அளவில் சொகுசளிக்கும் எந்திரங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றை அவர் தன் ‘ஸ்வராஜ்’ எனும் கருத்தாக்கத்திற்குள் அடக்கினார். அதை அவரைத் தவிர வேறு யாருமே முழுமையாகப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இல்லை என்பது வேறு விஷயம்.

அது இருக்கட்டும். ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது காந்தி மற்றும் அவருக்கு முந்திய சுதேசியர்களின் பொதுப் பண்பாக இருந்தது. ஆனால் 1920 களுக்குப் பின் இங்கு வெளிப்படையான ‘இந்து ராஷ்டிரம்’ என்கிற கோரிக்கையுடன் மேலுக்கு வந்த இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகள் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதைப் பின்னுக்குத் தள்ளின. இந்துக்களின் ஆட்சி என்பதில் முந்தைய திலகர் – அரவிந்தர் கால சுதேசியத்துடன் இவர்கள் இணைந்திருந்தாலும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பின்னுக்குத் தள்ளியதில் இவர்கள் திலகர் முதலானோருடனும் கூட வேறுபட்டிருந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பை மட்டுமல்லாமல் அனைத்துச் சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய காந்தியையும் அவர் வழிகாட்டலில் அன்று செயல்பட்ட காங்கிரசையும் அவர்கள் முற்றிலும் எதிர்நிலையில் வைத்தனர். அந்நிய ஆட்சியை மட்டுமின்றி அந்நிய மூலதனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரிகளையும் அவர்கள் கடும் எதிரிகளாகக் கருதினர் என்பதை விளக்க வேண்டியதில்லை.

1920 களில் உருவெடுத்த இந்துத்துவம் இப்படி எதிரியை அந்நிய ஏகாதிபத்தியத்திடம் அடையாளம் காணாமல் உள்நாட்டுக்குள்ளேயே தங்கள் அரசியல் எதிரியைக் கட்டமைத்தது. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் அவர்களின் தாக்குதல் இலக்காயினர்.

ஆக, இந்துத்துவம் வரையறுத்த “சுதேசியம்” என்பது “இந்துக்களின் ஆட்சி” (இந்து ராஷ்டிரம்) என்கிற அளவில் சுருங்கியது. அவர்கள் எந்நாளும் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தவில்லை. ஆங்கில அரசுக்கு அவர்கள் பூரண ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களின் வரையறையில் “அந்நியர்” என்போர் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதே.

தொடக்கம் முதலே அவர்களின் பன்னாட்டு அரசியல் தொடர்புகள் பாசிச சக்திகளுடன் மட்டுமே இருந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மன் பாசிஸ்டுகளுடன் இந்திய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இருந்த அமைப்பு ரீதியான உறவுகளை மார்சியோ காசலோரி எனும் இத்தாலிய ஆய்வாளர் விரிவாக ஆராய்ந்துள்ளார் (பார்க்க: எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ பக்:171 – 194) ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே முசோலினியை நேரில் சந்தித்து வந்தவர். முசோலினியின் பாசிச அறிக்கை இவர்களால் இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி நிறையச் சொல்லலாம்.

சுருங்கச் சொல்வதானால் இவர்களின் சுதேசியத்தில் அந்நிய எதிர்ப்பு பிரதானமாக அமைந்ததில்லை. இந்துமத ஆளுகை என்கிற அளவில் இவார்களின் அந்நிய எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் கலாச்சார மட்டத்தோடு சுருங்கியது. தவிரவும் “பலமான இந்து ராஷ்டிரம்” என்கிற வகையில் அந்நிய மூலதனம், அந்நியத் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அவர்கள் என்றும் அவர்கள் எதிர்ப்புக் காட்டியதில்லை. தொண்ணூறுகளில் அவர்களின் தேர்தல் முழக்கம்,

“கம்ப்யூடர் ‘சிப்ஸ்’ வேண்டும், உருளைக்கிழங்கு சிப்ஸ் வேண்டாம்” (Computer chips yes, Potato chips no) என முன்வைக்கப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

காங்கிரஸ் ஆட்சியும் காந்திய சுதேசியத்தை எந்நாளும் கடைபிடித்ததில்லை, நேருவிற்குப் பின் அந்நிய மூலதனத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெரிய அளவில் தளர்த்தினர் என்ற போதும் பழைய எச்ச சொச்சமாக, ‘திட்டமிட்ட பொருளாதாரம்’, ‘அரசுக் கட்டுப்பாடு’, ‘கலப்புப் பொருளாதாரம்’ முதலியவற்றை அவர்கள் கடைசி வரையில் ஏதோ உச்சரித்துக் கொண்டாவது இருந்தனர்.

ஆனால் பா.ஜ.க எந்நாளும் இவற்றை மதித்ததே இல்லை. இன்று மோடி ஆட்சியில் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு விட்டதும், முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாடுகள் அனைத்துத் துறைகளிலும் தளர்த்தப்பட்டுள்ளதும் அவர்களைப் பொருத்த மட்டில் பெரிய திசை மாற்றங்கள் இல்லை. அவர்களின் அடிப்படைக் கொள்கைக்கு இவை முரணானவை அல்ல.

இந்தப் பின்னணியில்தான் அவர்கள் 1996ல் ஆட்சியைப் பிடித்தனர். ஆனால் அந்த ஆட்சி 13 நாட்களே நீடித்தது, மீண்டும் 1998 ல் அவர்கள் ஆட்சியைப் பிடித்த போது சற்றுமுன் நாம் பார்த்த அந்த மூன்றாம் பாதையைத் தேர்வு செய்தனர். அதாவது இந்தியப் பொருளாதாரத்தைக் காங்கிரஸ் செய்ததைக் காட்டிலும் பெரிய அளவில் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டனர்.

எனினும் ஆட்சிக்கு வருவதற்கு முன்வரை அவர்கள் தம் இரட்டை நாவைச் சுழற்றி பல சுதேசிய வசனங்களையும் பேசிக்கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் உடனடியாக விட்டுவிட்டதாகக் காட்டிக் கொள்ள முடியுமா என்ன? மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு என்ரான் நிறுவனத்துடன் 2.9  மில்லியன் டாலரில் மின் உற்பத்தி ஒப்பந்தம் ஒன்றைச் செய்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த பா.ஜ.க, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் “என்ரானைத் தூக்கி அரபிக் கடலில் வீசுவோம்” என முழங்கினர்.

“நாங்கள் வெளியில் முன்வைக்கும் திட்டம் ‘சுதந்திர வணிகம்’, வெளியில் சொல்லாத உண்மையான திட்டம் ‘பொருளாதாரத் தேசியவாதம்’ “

“எங்கள் அணுகல்முறை ‘கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிசம்’ (calibrated socialism)”

“உள்நாட்டில் தாராளமயம் (liberalization) தொடர்ந்த போதிலும் அந்நிய மூலதனத்திலிருந்து இந்தியத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க அரசு தலையிடும்”

“கம்யூனிசம், முதலாளியம் இரண்டுமே வெளிநாட்டுச் சரக்குகள்”

“எங்கள் கட்சி வித்தியாசமானது (party with a difference)”

முதலிய முழக்கங்கள் எல்லாம் இவர்கள் அதிகாரத்திற்கு வருமுன் உதிர்த்தவை. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் என்ன நடந்தது? நினைவுக்கு வரும் சில:

1.மகாராஷ்டிராவில் பதவிஏற்ற பா.ஜ.க – சிவசேனா அரசு என்ரான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தது.

  1. இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்தவர்கள் 1998 ல் மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த IRDA Bill (1998) சட்ட வரைவு இன்சூரன்ஸ் துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய ஈக்விடிக்கும் வழிவகுத்தது.
  2. தயாரிப்பு முறைக்கு (patent) வேண்டுமானால் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு (process) பேடன்ட் உரிமம் வழங்கக் கூடாது எனச் சொல்லி வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் பேடன்ட் உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கினர் (1998).
  3. உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கான (WTO) டங்கல் வரைவை (GATT) எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் WTO வில் தொடர்ந்தனர். சுங்க வரி ஒழிப்பில் தீவிரம் காட்டினர். இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெகுவாகத் தளர்த்தினர்.
  4. முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு (FDI) கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், அகக் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தனர். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி அமைத்தனர்.

நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற யஷ்வந்த் சின்ஹா ‘சுதேசி’ என்பதற்கு அளித்த வரையறை அவர்கள் யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியது. சொன்னார்:

“சுதேசி என்பதன் பொருள் இந்தியாவை மகத்தான நாடாக ஆக்குவது என்பதுதான். நாம் பொருளாதாரத்தில் ‘சூப்பர் பவர்’ ஆகும்போதுதான் இது சாத்தியமாகும். நமது இராணுவத்தை இணையற்ற வலுவுடையதாக ஆக்க நாம் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். உலக வல்லரசுகளுடன் போட்டியிடும்போதுதான் நாம் மகத்தான நாடானுயர முடியும். சுதேசியம், உலகமயம், தாராளமயம் என்பனவெல்லாம் ஒன்றோடொன்று முரண்படுபவை அல்ல. என் சொந்தக் கருத்து என்னவெனில் சுதேசியாக இருப்பதற்கான சிறந்த வழிமுறை உலகமயமாவதுதான்….”

இது எப்படி இருக்கு?

“உலகமயந்தான் சுதேசியமாம்”.

துணிச்சல்காரர்கள்தான். இப்படி சுதேசியத்தை வரையறுக்க யாருக்கு முடியும்?

 

நான்கு

முதலில் ‘பாரதீய ஜன சங்’ எனவும் பிறகு ‘பாரதீய ஜனதா கட்சி’ (பா.ஜ.க) எனவும் முன்னிறுத்தப்பட்ட இந்துத்துவ அரசியல் பிரிவின் வரலாற்றை ஆய்வு செய்வோர் தொடக்கம் முதலே அதற்குள் இரண்டு போக்கினர் இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுவார்கள். அவர்கள்:

1.முதலாளியப் பொருளாதாரத்திற்குச் சார்பான நடைமுறை எதார்த்த அரசியலுக்கு ஆதரவானவர்கள் (pragmatic pro capitalistic wing) .

2.பொருளாதாரத்தில் அந்நியத் தலையீட்டை எதிர்க்கும் கருத்தியல் ஆதரவாளர்கள் (ideological wing opposed to foreign involvement in economy).

பா.ஜ.க ஒரு எதிர்க்கட்சியாக இருந்த வரைக்கும் அதன் தீவிர ஆதரவாளர்களை இயக்கும் ஊக்க சக்தியாக பொருளாதார சுதேசியம் விளங்கியது. ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் ஆட்சியில் அமர வாய்பிருந்ததோ அப்போதெல்லாம் அதிக அளவில் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் யாரென்றால், கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட முதலாளிய ஆதரவு சக்திகள்தான். கட்சிக்குள்ளும் அவர்களே அதிக செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். உலகமயச் செயல்பாடுகளுடன் மேலுக்கு வந்த நடுத்தரவர்க்கத்தின் ஆதரவும் இவர்களுக்குத்தான் இருந்தது. பாரம்பரியமாக பொருளாதாரச் சுதேசியம் பேசிவந்த கருத்தியலாளர்கள் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் பதவிகளில் அமர்த்தப்பட்டனர் என்பது உண்மையே.. எனினும் அவர்களுடைய அந்நிய மூலதன எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு, இறுதியில் அவர்களது எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, தற்போது அவர்களின் பங்கே கிட்டத் தட்ட இல்லை என்கிற அளவிற்கு ஆகிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு (1992) உலக அளவில் பா.ஜ.கவிற்கு ஒரு மதவாத பிற்போக்கு சக்தி என்கிற பெயர் ஏற்பட்டிருந்த சூழலில்தான் இவர்கள் முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்தனர் (1996). உலக அளவில் ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது. கடல்கடந்து பணிபுரிந்த இந்துத்துவ ஆதரவு மத்தியதர வர்க்கம் வெளிநாடுகளில் அந்தப் பணியைச் செவ்வனே செய்தது (பார்க்க எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ பக்: 93-97). அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரியும் இந்திய மத்தியதர வர்க்க உயர் வருண இந்துக்கள், காவி அமைப்பின் தூதுவர்களாக அவர்கள் வசிக்கும் நாடுகளில் பல்வேறு மட்டங்களில், பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். ‘பா.ஜ.க வின் கடல் கடந்த நண்பர்கள்” (Overseas Friends of BJP), ‘இந்து சுயம் சேவக் சங்’ (Hindu Swayam Sevak Sangh), ‘இந்து மாணவர்கள் சங்கம்’ என்பன சில எடுத்துக்காட்டுகள். வெளிநாடுகளில் ‘சாகா’க்கள் நடத்துவதிலிருந்து, தேர்தல் நிதி திரட்டி இந்தியாவுக்கு அனுப்புவது, ஆராய்ச்சி என்கிற பெயரில் கழுதைப் படத்தைக் குதிரைப் படமாக மாற்றி சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகம்தான் என ‘ஆய்வுக்’ கட்டுரைகள் வெளியிடுவது, இந்துத்துவத் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு விருதும் விருந்தும் அளிப்பது என இவர்கள் செய்யும் இந்துத்துவ ஆதரவு வேலைகள் ஏராளம். குஜராத் பூகம்ப நிவாரண நிதி என அமெரிக்காவில் திரட்டப்பட்ட தொகை அங்கு வகுப்புக் கலவரங்களைத் தூண்டப் பயன்படுத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு.

இப்போது இவர்கள் அமெரிக்காவில் செயல்படும் சியோனிச யூதக் குழுக்களுடன் இணைந்து இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் தீவிரச் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். இது குறித்து சில ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் இணையத்தில் படிக்கலாம்.

இவர்கள் அமெரிக்காவில் வேலை, வீடு என ‘செட்டில்’ ஆகி விட்டவர்கள். அமெரிக்கா அல்லது பிரிட்டனை விட்டு அவர்களால் இனி வர முடியாது. அதே நேரத்தில் அவர்கள் அமெரிக்கர்களால் சமமாக மதிக்கப்படுவதும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இப்படியான இந்துத்துவ நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு திருப்தியுறுகின்றனர். இவர்களை ‘என்.ஆர்.ஐ இந்துக்கள்’ , ‘இன்டெர்நெட் தேசியவாதிகள்’, ‘கடல்கடந்த தேசபக்தர்கள்’ என்றெல்லாம் சொல்வதுண்டு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட கையோடு இவர்கள் ஒரு வேலை செய்தனர். பா.ஜ.கவில் முதலாளியப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களில் ஒருவரும், முஸ்லிமுமான சிக்கந்தர் பக்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். பா.ஜ.க எப்போதும் தன்னுடைய பிடியில் இப்படியான சில முஸ்லிம்களை வைத்துக் கொள்வதுண்டு. அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘கார்னெஜி இன்ஸ்டிடியூட்’ முதலானவற்றில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தனர். மொய்னிஹான், சொலார்ஸ் போன்ற முன்னாள் அமெரிக்கத் தூதுவர்கள் கையொப்பமிட்ட ஆதரவு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இவர்களின் தூண்டுதலால் ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ இதழில் (11.01.1993) கார்னெஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் க்ளாட், “இந்தியாவில் இனி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள பா.ஜ.கவுடன் உறவு வைத்துக் கொள்வது அமெரிக்காவுக்குச் சரியாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்’ என எழுதினார்.

“பாரதீய ஜனதாவுக்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தை அளிப்பது எங்கள் நோக்கம். அதற்கெதிரான இடதுசாரிப் பிரச்சாரங்களை முறியடிக்கிறோம். அமெரிக்கக் கொள்கைகளை வடிப்போர், அதிகாரிகள், சிந்தனையாளர்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டுகிறோம்” என்றார் கடல்கடந்த இந்துத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் சேகர் திவாரி.

#    #    #

1996 ல் அவர்கள் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோது, “வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் பிளவுவாதிகள்” என்கிற கெட்ட பெயரிலிருந்து வெளிவருவது அவர்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது. எல்லோராலும் ஏற்றுகொள்ளக் கூடியவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள அவர்கள் பா.ஜ.கவுக்குள் இருந்த இரண்டு சக்திகளில் சுதேசியக் கருத்தியல்வாதிகளைச் சற்றே பின்னுக்குத் தள்ளி முதளாளிய மற்றும் உலகமய ஆதரவு சக்திகளை முன்னிறுத்த வேண்டியதாயிற்று.

அவர்களின் முதல் மத்திய அமைச்சரவையில் பொருளாதாரத் தாரளவாதத்துக்கு ஆதரவாளர்களான சிக்கந்தர் பக்த், பி.ஆர்.குமாரமங்கள்ம், ராம்ஜேத் மலானி, ராமகிருஷ்ண ஹெக்டே, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் முறையே தொழில்துறை, ஆற்றல் (Power), வீட்டு வசதி, வணிகம், நிதி ஆகிய துறைகளில் அமைச்சர்களாக்கப்பட்டனர். ஜஸ்வந்த் சிங்கிற்கு நிதிப் பொறுப்பு அளிக்கப்பட்டதை கருத்தியல்வாதிகள் எதிர்த்தபோது அவருக்கு அயலுறவு மற்றும் திட்ட ஆணைய உதவித் தலைவர் முதலிய பதவிகள் அளிக்கப்பட்டன. பிறகு நிதித்துறை யஷ்வந்த் சின்ஹாவிற்கு அளிக்கப்பட்டது. இவர் சந்திரசேகர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து முதன் முதலில் பொதுத்துறைப் பங்குகளில் 20 சதத்தைத் தனியார்களுக்கு விற்பது என்கிற முடிவை எடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு உள் துறை, கல்வி முதலான முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு கருத்தியல்வாதிகள் ஆறுதல் படுத்தப்பட்டனர்.  அந்நிய மூலதனத் திறப்பிற்கு ஆதரவான பிரிஜேஷ் மிஸ்ரா, என்.கே சிங் போன்றோரும் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் ஆக்கப்பட்டனர். பொருளாதாரம், வணிகம், தொழில்துறை ஆகியவற்றுக்கான ஆலோசனைக் குழுவில் உலகமயத்திற்கு ஆதரவான முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ஐ.ஜி.படேல், அர்ஜுன் சென்குப்தா, மான்டே சிங் அலுவாலியா, தொழிலதிபர்கள் ரதன் டாடா, முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, என்.ஆர்.நாராயண மூர்த்தி ஆகியோர் அமர்த்தப்பட்டனர். ‘கட்டுப்படுத்தப்பட்ட உலகமயம்’போதும் எனச் சொல்லாடிய ஜேய் துபாஷி, ஜகதீஷ் செட்டிகார், ராகுல் பஜாஜ் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

உலகமயத்திற்கு ஆதரவானவார்களால் நிரப்பப்பட்ட “பிரதமர் அலுவலகம்” (PMO) ஒரு உயர் அதிகார மையமாக உருவாக்கப்பட்டு அமைச்சரவைகள் அதை அனுசரித்துச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்சூரன்ஸ் துறையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுதல், ‘பேடன்ட்’ சட்டத்தைத் திருத்துதல் ஆகியவற்றில் சுதேசியக் கருத்தியல்வாதிகளின் குரல்கள் அமுக்கப்பட்டு உலகமய ஆதரவாளர்களின் கை ஓங்கியது.  ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’சின் தாதோபந்த் தெங்காடி முதலானோரின் முணுமுணுப்புகள் முறியடிக்கப்பட்டன.

டாக்டர் ராதாகிருஷ்ணன், பேரா. கோத்தாரி முதலான கல்வியாளர்கள் கல்விக் கொள்கைகளை வகுத்த நிலைக்கு முற்றிலும் எதிராக முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்த பிர்லா தலைமையில் உயர் கல்வியைத் தனியார் மயமாக்குவது பற்றிப் பரிந்துரை அளிக்க கல்விக்குழு உருவாக்கப்பட்டதும் இவர்களின் ஆட்சியில்தான்.

பா.ஜ.க வின் தேசியச் செயற்குழு கூட்டப்பட்டபோது, அது தன் பொருளாதாரத் தீர்மானத்தில் அரசின் இத்தகைய செயற்பாடுகளைப் பாராட்டியது. யஷ்வந்த் சின்ஹாவிடம் நிதித்துறை அளிக்கப்பட்டதை ஆர்.எஸ். எஸ்சும் அங்கீகரித்தது.

ஐந்து

தாதோபந்த் தெங்காடி (1920 -2014) ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர். இந்துத்துவத்தின் தொழிற்சங்க அமைப்பான ‘பாரதீய மஸ்தூர் சங்’, சுதேசியத்தை முழங்குவதற்கான ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவர். பா.ஜ.க அரசின் பொருளாதார தாராளவாதக் கொள்கைகளையும், தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும் அடிக்கடி சாடிப் பேசுவது இவர் வழக்கம். பா.ஜ.க ஆட்சியாளர்களின் சுதேசிய விரோதச் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது ‘திருட்டுப் பயல்கள்’ என்கிற சொற்களையெல்லாம் கூட அவர் பயன்படுத்துவார்.

ஆனால் விரைவில் அவரும் வழிக்குக் கொண்டுவரப்பட்டார். வழிக்குக் கொண்டு வர வழிகளா இல்லை.

தனியார் தொண்டு அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிப்பதற்காக உள்ள நிறுவனங்களில் ஒன்று ‘கிராமப்புறத் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் நடவடிக்கைக்கான குழு’ (CAPART). ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை இது தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிரித்தளிக்கிறது. வாஜ்பேயி அரசு இந்நிறுவனத்தை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் ஆட்களைக் கொண்டு நிறப்பியது. டாக்டர் என்.விஜயா, பிரசன்னா சப்ரே, அனில் காச்கே, யோகேஷ் சுக்லா, அஜய் ஜம்ப்வால், உமேந்திர தத்தா, பாரத் பதக், பி.என்.குப்தா, ராஜேந்திர பிரசாத், ரஜ்னீஷ் அரோரா, விவேக் குல்கர்னி, நரேந்திர மெஹ்ரோத்ரா, வாசுதேவ், ஜே.என்.சுக்லா, மேஜர் என்.மாதூர், கிரிஜா பிரசாத் சிங், வசந்த் முதலானோர் இவர்களில் சிலர். இப்படி இந்த நிறுவனம் முழுக்க முழுக்க இந்துத்துவத்தின் கைவசம் ஆனது. இவர்கள் தம் வசம் கையளிக்கப்பட்ட நிதி ஆதாரங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிறுவனங்களுக்கு வாரி வழங்கினர்.

அப்படிப் பயனடைந்தவற்றில் ஒன்று தெங்காடியின் ‘சுதேசி ஜாக்ரான் ஃபவுன்டேஷன்’ (SJF). இது 1996ல் அதாவது பா.ஜ.க ஆட்சியில் அமரும்போது அவர்களால் தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒன்று

தொடக்கத்தில் அதன் மொத்த நிதி 8.5 லட்சம். இரண்டே ஆண்டுகளில் அதன் ஆண்டு வரவு செலவுக் கணக்கு எட்டு கோடி (100 மடங்கு) ஆனது. ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’, ‘பாரதீய சந்தை வளர்ச்சி மையம்’ முதலியன SJF ன் துணைஅமைப்புகள்.

இரண்டு வகைகளில் இவற்றுக்கு நிதி சேந்தன. CAPART மூலம் பெறும் நிதி ஒரு புறம். இன்னொரு பக்கம் ‘சுதேசி மேளா’  எனும் பெயரில் அரசு மைதானங்களை வாடகைக்கு எடுத்து, அரங்கங்களை அமைத்து சுதேசிக் கண்காட்சிகளில் ‘ஸ்டால்கள்’ அமைக்கப் பெருந் தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுப்பது.. வாஜ்பேயி போன்ற பெருந்தலைகள் திறப்பு விழாக்களுக்கு வரும் அந்த மேளாக்களின் மூலம் கணக்கில் வந்தும், வராமலும் தெங்காடியின் அமைப்பிற்குக் குவிந்த பணம் ஏராளம் (பார்க்க ; எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள், பக். 269- 274).

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனிடம் ‘அவுட்லுக்’ இதழ் விசாரித்தபோது, “சுதேசி நிறுவனம் வேறு எப்படித் தன் செலவுகளைச் சமாளிப்பது” எனப் புன்னகைத்தார்.

தெங்காடி போன்றவர்கள் தங்கள் விமர்சனங்களைள அளவோடு நிறுத்திக் கொள்வதற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணமாக இருந்தது. அப்படியும் சுதேசியத்தின் பெயரால் முணுமுணுப்பத்  தொடர்ந்தவர்கள் 1998 ல் பொகாரனில் அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட அணு வெடிப்புச் ‘சாதனை’ யோடு வாயை மூடிக் கொண்டனர். பொகாரனில் நடத்தப்பட்ட இந்த இரண்டாம் அணு வெடிப்புச் சோதனை உண்மையிலேயே ஒரு ‘சாதனை’தானா? என்கிற கேள்வியை இந்தத் துறை வல்லுனர்கள் பலர் எழுப்பியுள்ளனர் (பார்க்க: எனது ‘இந்துந்துவம் : பன்முக ஆய்வுகள்’, பக். 84-92). எப்படி இருந்த போதிலும் இதை ஒரு சாதனையாக முன்னிறுத்தி, ‘தாங்கள் ஒன்றும் இந்தியாவை விற்றுவிடுபவர்கள் அல்ல’ என உலகமய ஆதரவாளர்கள் காட்டிக் கொண்டனர்.  இதுவரை பகை நாடுகளுடனான (குறிப்பாக பாக்) தங்கள் அணுகல்முறை தாக்கினால் ‘திருப்பித் தாக்குதல்’ (reactive) என்கிற அளவிலேயே இருந்ததாகவும், இனி தீவிரவாதிகளுக்கு ஊக்கமளித்தால் ‘முதல் தாக்குதலே’ (pro active) எங்களுடையதாகத்தான் இருக்கும் எனவும் சவால் விட்டார் அத்வானி.

சூடான அணுகல்முறை’ (hot pursuit) என இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார். “அரசியலில் இனி அறத்திற்கு இடமில்லை” எனவும், “எதார்த்த அரசியலுக்கே (real politiq) இனி காலம்” எனவும்  முழங்கினார். தான் யாரை நோக்கிச் சவால் விடுகிறோமோ அவர்களும் அணுவல்லமை உடையவர்கள்தான் என்பது குறித்து அவர் கவலைப்படவில்லை.

எனினும் கட்சிக்குள் தங்களின் உலகமய ஆதரவுச் செயல்பாடுகளை எதிர்ப்பவர்களின் வாய்களை அடைக்க இந்தச் சவடால்கள் முதலாளியத் தாராளவாத ஆதரவாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. அந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதால் நமது இறையாண்மை குலைகிறது என்கிற கருத்தை அவர்கள் அணு குண்டு வெடிப்புச் சோதனை மூலம் முறியடித்தனர். அணு வல்லமையுடைய நமது இறையாண்மைக்கு யார் ஆபத்து விளைவித்துவிட இயலும் எனக் கேட்டனர்.

இந்துத்துவக் கருத்தியல்களுடன் இதழ்களில் பத்திகள் எழுதுபவரும், சமீபத்தில் மோடி அரசால் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப் பட்டவருமான ஸ்வபன்தாஸ் குப்தா இதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். “98ம் ஆண்டு அணு குண்டு வெடிப்பு உலகமய ஆதரவாளர்களின் கையில் ஒரு ஆயுதமாகச் சேர்ந்து வலு சேர்த்தது. இந்தக் குண்டு வெடிப்புடன் உலகமயச் செயல்பாடுகள் வேகமெடுத்தன” என்கிறார்.

சுதேசிக் கருத்தியலாளர்களைத் திருப்திப் படுத்த அவர்களது பொறுப்பற்ற இந்துத்துவ ஆதரவுப் பேச்சுக்கள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்கிற நிலைபாட்டை உலகமய ஆதரவாளர்கள் மேற்கொண்டனர். சுதேசியக் கருத்தியல் ஆதரவாளர்களைப் பொருத்த மட்டில், இந்துத்துவப் பிடிவாதம் மற்றும் ஆக்ரோஷத்தின் அடையாளங்களாக அமைச்சரவையில் வெளிப்பட்ட உமாபாரதி அல்லது சாத்வி பிரச்சி போன்றோரின் இருப்பே அவர்களுக்கு ஓரளவில் திருப்தியை அளித்தது. அவர்களின் வன்முறையை விதைக்கும் பேச்சுக்கள், டொகாடியா போன்றோரின் சிறுபான்மையினரைச் சீண்டும் செயற்பாடுகள் முதலியவற்றை உலகமய ஆதரவாளர்கள் முழுமையாக அனுமதித்தனர். பொது சிவில் சட்டம், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு, மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடுப்பு முதலானவற்றில் இரு தரப்பும் கருத்தொருமிப்பு காட்டித் தம் ஒற்றுமையை உறுதி செய்து கொண்டனர்.

பிடிவாதமாக தாராளமயத்தை எதிர்த்த சுதேசியர்கள் இனி ஒன்றும் செய்ய இயலாது என உணர்ந்து விரைவில் அடிபணிந்தனர். வாஜ்பேயி அமைச்சரவையில் இருந்த சோம்பால் சாஸ்திரி மோடி பிரதமரானபின் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (2015 -16) விவசாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளுக்கு விரோதமான பட்ஜெட் என்றார். ஆர். எஸ்.எஸ் அமைப்பும் அப்படியே கூறியது அடுத்த சில மாதங்களில் குடும்ப சகிதம் சோம்பால் சாஸ்திரி, இடைக்காலத்தில் தான் சரண்புகுந்திருந்த சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி, பா.ஜ.கவில் சேர்ந்தார்.  கடுமையாகக் கண்டித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மோடி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இப்படி நிறையச் சொல்லலாம்.

ஆக இரு தரப்பினரும் தத்தம் எல்லைகளை உணர்ந்து அவற்றை மீறாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். எதார்த்தத்தை உணர்ந்து இரு தரப்பும் மிகவும் நுட்பத்துடன் கூடிய வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டன. இரு தரப்புக்கும் இடையில் அவர்கள் வரைந்து கொண்ட ‘லக்ஷ்மண் ரேகா’ எல்லைக் கோடு தாண்டப்படாமல் புனிதத்துடன் காக்கப்பட்டது.

ஆக இந்துத்துவம் என்பது நடைமுறையில் 1.இந்துக்களின் ஆட்சி (இந்து ராஷ்டிரா) 2. கலாச்சார தேசியம் 3. வலிமையான இந்தியா என்பதாகச் சுருங்கியது. பொருளாதாரத் தேசியம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது.

வலிமையான இந்தியா என்பது 1. இராணுவ ரீதியான வலிமை (இதில் அணு வல்லமை முதலிடம் வகிக்கும்) 2.பொருளாதார வலிமை என்கிற இரண்டையும் உள்ளடக்கும் என்பதும், இந்த இரண்டையும் சாத்தியமாக்க உலகமயமும் பொருளாதாரத் திறப்பும் தவிர்க்க இயலாதது என்பதும் பொதுப் புரிதலாக அமைந்தது.

மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் பிரதீப் சிப்பர் கூறுவது போல, பா.ஜ.க வின் தேர்தல் வெற்றிகள் என்பன அதன் இந்துத்துவ அரசியல் மற்றும் மத அடிப்படையிலான பிளவுறுத்தல்களால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக இவ்வாறு மத உணர்வு பெற்ற இந்துக்களையும், இட ஒதுக்கீடு, திட்டமிட்ட பொருளாதாரம் முதலான “அதிகபட்ச அரசுத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டவர்களாகத்” தம்மை உணரும் மத்தியதர வர்க்கத்தையும் வெற்றிகரமாக இணைத்து நிறுத்தியதன் விளைவாகவே பா.ஜ.கவின் வெற்றியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரத் தாராளவாதமும் இந்துத்துவப் பிளவுறுத்தல்களும் நுட்பமாக இணைக்கப்பட்டன. நுகர்வு அடிப்படையினான வளர்ச்சி என்பது விதியாகியது. இந்த ‘வளர்ச்சி’யால் பாதிக்கப்பட்ட அடித்தள மக்களின் கண்ணை மறைக்க இந்து உணர்வைக் கிளறிவிடுதல் என்கிற யுத்தி அவர்களுக்குப் பயனளித்தது. இடதுசாரிகளின் பலவீனம், பாசிச சக்திகள் என வரையறுக்க இயலாத காங்கிரஸ் போன்ற தாராளவாத சக்திகளின் ஊழல் மற்றும் பல்வீனங்கள் முதலியன இந்துத்துவ அரசியலின் வெற்றியை எளிதாக்கின.

ஆறு

 

மத்தியதர வர்க்கம் பா.ஜ.கவை ஆதரிப்பது பற்றிப் பார்த்தோம். பா.ஜ.கவிலும் கூட அவர்கள் ஐயத்துகிடமின்றி உலகமயத்தை ஆதரிப்பவர்களைத்தான் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த இன்டெர்நெட் இந்துத்துவவாதிகள் அத்வானி, ஜோஷி போன்ற பழைய பா.ஜ.கவினரைக் காட்டிலும் மோடியைப் போன்ற ‘உறுதியாக முடிவெடுத்துச் செயல்படுத்தக் கூடியவர்களையே” விரும்புகின்றனர்.  மோடியிடம் அதிகாரம் கைமாறுவதற்கு கட்சிக்குள் யாரேனும் தடையாக இருந்தால் அவர்களை மூர்க்கமாக எதிர்த்து வீழ்த்த அவர்கள் தயாராக உள்ளனர்.

இவர்கள் தம்மை வெளிப்படையாக வலதுசாரிகள் என அறிவித்துச் செயல்படுகின்றனர். ‘right’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘சரி’ / ‘வலது’ எனும் இரு பொருள்கள் உள்ளதை மிகவும் லாவகமாகப் பயன்படுத்துகின்றனர். தம்மை ‘bold and right’ என அழைத்துக் கொள்கிறது ராஜேஷ் ஜெயின் என்பவர் உருவாக்கியுள்ள Niti Central எனும் இணையத் தளம். கோவையைச் சேர்ந்த அமர்நாத் கோவிந்தராஜன், பிரசன்னா விஷ்வநாத் என்பவர்கள் தொடங்கியுள்ள (2010) இணையத் தளத்தின் பெயர் Central Right India, Swaraj Mag.

2014 தேர்தலில் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன் வைப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருந்தது கட்சியின் மூத்த தலைவர் அத்வானி யின் எதிர்ப்புதான் என்பதை அறிவோம்.. இந்த எதிர்ப்பின் விளைவாக தொடக்கத்தில் மோடி தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மட்டுமே அறிவிக்கப்பட்டார் (ஜூன் 2013). எனினும் அடுத்த 15 மாதங்களில் நிலைமை மாறியது. செப்டம்பர் 2014ல் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இடையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் முக்கிய பங்கு வகித்தன. ‘நிதி சென்ட்ரல்’ தளத்தில் தொடர்ந்து அத்வானியைத் தாக்கிக் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. எடுத்துக்காட்டாக ஒரே ஒரு தலைப்பு மட்டும் இங்கே: “அத்வானி போன்ற நண்பர்கள் இருக்கையில் பா.ஜ.கவுக்கு வேறு எதிரிகள் தேவை இல்லை”.

அத்வானி மட்டுமல்ல, கட்சிக்குள் மோடிக்கு எதிராக இருந்த கேசுபாய் படேல், கோர்தான் சபாடியா, காஷிராம் ராணா, சஞ்சை ஜோஷி ஆகியோரும் தாக்கப்பட்டனர். கட்சிக்கு வெளியிலும் டாக்டர் அமார்த்ய சென் போன்ற வறுமை ஒழிப்பு ஆய்வாளர்கள் தாக்கப்பட்டனர். நாளந்தா பல்கலைக் கழகத்திலிருந்து சென் வெளியேற நேர்ந்ததில் இந்த இணையங்களின் பங்கு முக்கியமானது. காந்தி, நேரு மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தெல்லாம் அதிகமாக எழுதி வரும் ராமச்சந்திர குஹாவும் அவர்களின் தாக்குதலைச் சந்தித்தவர்களில் ஓருவர்.

இது தவிர ‘லவ் ஜிஹாத்’ பற்றியும் கிறிஸ்துவை அவதூறு செய்தும் கூட இந்த இணையங்களில் கட்டுரைகள் தொடர்ந்தன.

இவர்களுக்கு மிகவும் வெளிப்படையாகவே மோடியின் ஆதரவு இருந்தது. ஆக 12, 2014 அன்று மோடியின் கட்டுரை ஒன்று நிதி சென்ட்ரலில் வெளிவந்தது. இந்தத் தளங்களைச் சேர்ந்த ராஜேஷ் ஜெய்ன், ரோஷ்னி பவாரி ஆகியோருக்கு குஜராத் அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

#    #    #

பாசிசத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாக பேரா. லாரன்ஸ் ப்ரிட் முன்வைக்கும் 14 கூறுகளில் ஒன்று கார்பொரேட் அதிகாரத்திற்கு பாசிச அரசு முழு ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கும் என்பது. அதே போல பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதில் கார்பொரேட் முதலாளியமும் மிக முக்கிய பங்கு வகிக்கும். பாசிச ஆட்சியில் கார்பொரேட்களும் பாசிச ஆட்சியாளர்களும் பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணைந்து நிற்பர் என்கிறார் பிரிட்.

இன்றைய சூழலில் இது எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளது என்பதை இங்கே விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. மோடி வெளி நாடுகளுக்குச் செல்லும்போது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அழைத்துச் செல்கிறாரோ இல்லையோ அதானி தவறாமல் அந்தப் பயணத்தில் இருப்பார் என ஊடகங்கள் கேலி செய்யும் அளவிற்கு நிலைமை உள்ளது. 2014 தேர்தலில் மோடி தலைமையில் ஆட்சி அமைய செலவழிக்கப்பட்ட தொகை 500 கோடி. கிட்டதட்ட ஒபாமாவுக்கு ஆன செலவு. அதானி நிறுவனம் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு விமானத்தையே தந்தது.

மோடி ஆட்சியில் குஜராத்தில் நடந்த வன்முறை மற்றும் இன அழிப்பின்போது (2002), அன்றைய நிலையில் கார்பொரேட்கள் அவரைக் கண்டித்தன. HDFC யின் தீபக் பரேக், “உலகளவில் நம் பெயர் கெட்டுள்ளது. இது ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் அடையாளத்தை இப்போது இழந்துள்ளது. முதலமைச்சர் (நரேந்திர மோடி) இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்றார். பிற கார்பொரேட்களும் கூட இப்படி மத அடிப்படையில் நாடு பிளவுற்று அமைதி இழப்பது வணிகம் தழைப்பதற்குக் கேடு எனக் கண்டித்தனர்.

மோடி உடனடியாக ஒரு வேலை செய்தார். டெல்லியில் கார்பொரேட்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அங்கேயும் அவர்கள் கடுமையாக மோடியை விமர்சித்தனர். பதிலுக்கு அவர்களை குஜராத்தை அவமானப் படுத்துகிறார்கள் எனவும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் எனவும் மோடி  சாடினார். தொடர்ந்து மோடிக்கு ஆதரவான கார்பொரேட்கள் களத்தில் இறக்கப்பட்டனர். இந்திய வணிக சங்கத்திற்கு (CII) எதிராக  Resurgent Group of Gujarat (RGG) என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. டெல்லியில் இருந்த வாஜ்பேயி அரசும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. இதைக் கண்டு CII தலைவர் தாருண் தாசுக்கு அச்சம் ஏற்பட்டது. கார்பொரேட்கள் பணிந்து மோடியுடன் ஒத்துழைக்கத் தயாராயினர். மோடியும் தனது மாநிலத்தில் தொழில் தொடங்கும் கார்பொரேட்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்தார்.

அப்படித் தொடங்கிய மோடியின் கார்பொரேட் உறவு இன்று உச்சத்தை அடைந்துள்ளது. 2014ல் மோடி பிரதமரானபின் உருவாக்கப்பட்ட பட்ஜெட் அனைத்திலும் கார்பொரேட்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டன. உற்பத்தித் துறை, e வணிகம், பாதுகாப்பு, இன்சூரன்ஸ் எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறையைத் தனியார் மயமாக்குவதற்கான முதலாமாண்டு இலக்கு மட்டும் 58,425 கோடி. ரூ. கார்பொரேட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை 5 ஆண்டுகளில் 25,000 கோடி.. துறைமுகம், விமான நிலையம், அதிவேகச் சாலைகள், பொருளாதார மண்டலங்கள், 16 மெட்ரோக்கள், 100 ஸ்மார்ட் நகரங்கள் அனைத்தின் உருவாக்கத்திலும் தனியார்துறைக்கு அனுமதி. இரண்டாவது பசுமைப்புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தை கார்பொரேட் மயமாக்குவது…. இப்படி நிறையச் சொல்லலாம் (பார்க்க: எனது மோடியின் காலம் தொகுதி 1,2).

அதே நேரத்தில் இன்னொரு பக்கம் விவசாயம், பாசனம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, மக்கள் நலம் முதலான அனைத்து மக்கள் நலத் துறைக்கும் முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கிய நிதி பல இலட்சம் கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டது.. எந்தத் துறைக்கேனும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் அது பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கு மட்டுமே (பார்க்க: என் மேற் குறிப்பிட்ட நூற்கள்).

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீடுகளுக்கான பொறுப்பை அந்நிய கார்பொரேட்களிடமிருந்து விலக்கி அதை நமது மக்கள் தலையில் சுமத்தியது குறித்து தொடக்கத்தில் குறிப்பிட்டேன். கார்பொரேட்களுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொடுப்பதில் காங்கிரஸ் அரசு உருவாக்கியிருந்த சில முக்கிய நிபந்தனைகளை நீக்க முயற்சித்துத் தோற்றது மோடி அரசு, கார்பொரேட்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை நிறைவேற்றி வருவது, ஓய்வூதியப் பாதுகாப்பை ஒழிப்பது, தொழிலாளிகளின் ப்ராவிடன்ட் ஃபன்ட்  சேமிப்பிலும் கைவைப்பது என மோடி அரசின் கார்பொரேட் மற்றும் அந்நிய மூலதன ஆதரவுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தியாவிற்குள் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்கும் ஏழைகளின் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது அது 370 மடங்கு. அதேநேரத்தில் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்கும்  மேலை நாட்டுப் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.

“இந்தியாவின் நரேந்திர மோடியை புதிய ரீகனாகக் குடியரசுக் கட்சியினர் கருதுகின்றனர்” என அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் எழுதியது குறிப்பிடத் தக்கது.

முடிவாக

தென் ஆசியா முழுவதும் இப்படியான சூழல் உருவாகியுள்ளது கவலை அளிக்கிறது. மியான்மர், வங்கதேசம், இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான் என எல்லா நாடுகளிலும் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்கள் பிளவுறுத்தப்படுகின்றனர். சிறுபான்மை மக்கள் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை வன்முறைக்கு இலக்கான்றனர். அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். வெளிப்படையான தணிக்கை, அவசர நிலை ஆகியவை இல்லாத போதும் ஜனநாயகம் சிதைந்து பலமிழந்து கொண்டே போகிறது.

இதில் இன்னொரு கவனிக்கத்தக்க நிலை என்னவெனில் ஒரு நாட்டில் சிறுபான்மையைத் துன்புறுத்தும் பெரும்பான்மை, இன்னொரு நாட்டில் பெரும்பான்மையால் துன்புறுத்தப்படும் சிறுபான்மையாக இருப்பதுதான். வங்க தேசத்தில் வன்முறை விளைவிப்பது பெரும்பான்மை முஸ்லிம் மதவெறி  என்றால் இந்தியாவிலும் மியான்மரிலும், இலங்கையிலும் பெரும்பான்மை வன்முறைக்குப் பலியாகிறவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். திபெத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பவுத்தர்கள் மியான்மரிலும் இலங்கையிலும் வன்முறைக்குக் காரணமாகிறார்கள். இலங்கையிலும் வங்கத்திலும் வன்முறைக்குப் பலியாகும் இந்துக்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகத் திரட்டப்படுகின்றனர்.

இவர்கள் தத்தம் வன்முறையை இன்னொரு நாட்டில் நடைபெறும் வன்முறையுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம் வன்முறையாளர்கள் ஒன்றாகச் சேருகின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் மீதும் முஸ்லிம்களின் மீதும் வன்முறையை ஏவும் ‘பொது பல சேனா’வை இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் பாராட்டுகிறார். “பொது பல சேனா முன்வைக்கும் பிரச்சினைகள் செயலூக்கமுள்ள ஆதரவிற்கும் அனுதாபத்திற்கும் உரியவை” எனக் கூறுகிறார். பொதுபல சேனா தலைவர் பிக்கு கலகோடத்தே ஞானசாரா தங்களின் இயக்க மாநாட்டிற்கு மியான்மரின் பின் லேடன் என அழைக்கப்படும் பிக்கு அஸ்வின் விராத்துவை அழைக்கிறார். இருவரும் வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் இந்திய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் மூன்று அமைப்புகளும் இணைந்து இப்பகுதியில் “அமைதி மண்டலம்” (!!!) ஒன்றை உருவாக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.  ராம் மாதவ் இதை மறுத்து அப்படியான கலந்துரையாடல் நடக்கவில்லை எனச் சொன்னபோதும் அவர்களை ஆதரித்துள்ளார்.

தென் ஆசியாவில் இப்படியான வன்முறைகளுக்குக் காரணமாகும் நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக உள்ள அம்சம் இவை அனைத்தும் தீவிரமாக உலகமயத்தையும், பொருளாதாரத் தாராளவாதத்தையும் செயல்படுத்துபவை என்பதுதான். பொருளாதாரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மூன்றிலும் ஏற்பட்டுள்ள இத்தகைய வலது திருப்பமும் பின்னடைவும் மிகவும் கவலைக்குரிய நிலையை இப்பகுதியில் உருவாக்கியுள்ளன.

பழைய கதைகளையே பேசிக் கொண்டிருக்காமல் புதிய சூழல்களுக்குரிய இடதுசாரி அரசியலைச் சிந்திக்கும் பொதுவுடமையாளர்கள், சிறுபான்மை மக்கள், சமூக ரீதியில் அடித்தள நிலையில் இருப்போர், ஜனநாயக சக்திகள் இவர்கள் ஒன்றிணைந்து இந்த நிலையை எதிர் கொள்ளத் துணிவது மட்டுமே நமக்கு முன்னுள்ள ஒரே வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *