என்ன நடக்குது அமெரிக்காவில்

என்ன நடக்குது அமெரிக்காவில் 

சட்டத்தின் ஆட்சி, புலம் பெயர்ந்தோரின் சொர்க்கம், அளவற்ற சுதந்திரம்” – ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்கா இன்று இந்த மூன்று அம்சங்களையும் இழந்து உலகின் முன் கவலைக்கும் கேலிக்கும் உரிய காட்சிப் பொருளாய் மாறி நிற்கிறது. புதிதாய்ப் பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அபத்த நடவடிக்கைகள் இப்படியெல்லாமா ஒரு குடியரசுத் தலைவர் பேச முடியும், நடந்து கொள்ள முடியும் இலட்சக் கணக்கானோரைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்த முடியும் என்கிற கேள்விகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இப்படித்தான் நடக்கும் என முன்  கூட்டியே சொன்னவர்களும் உண்டு.

தனது வாழ்நாளில் 16 குடியரசுத் தலைவர்களைக் கண்டவரும், இந்தத் தலைவர்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்து வந்தவருமான நோம் சாம்ஸ்கி டொனால்ட் ட்ரம்ப் பற்றி இப்படிக் கூறினார்:

“எந்த அரசியல் அனுபவமும் இல்லாத நபர்; பதவிகளுக்கு ஆசை மட்டுமே பட்டவர்; பதவியில் இருந்த அனுபவமற்றவர். அதிகார வெறியர். முட்டாள். ஹில்லரி கிளின்டனை விட மோசமான ஆள்..”

கோடீசுவரர் என மட்டும் சொல்லி அவரின் பின்புலத்தை விளக்கிவிட முடியாது. ரியல் எஸ்டேட், சொகுசு ஓட்டல்கள்.. எனப் பலதுறைகளில் கொடி கட்டிப் பறக்கும் இம்மியும் அரசியல் அனுபவமும், நயத்தக்க நாகரிகமும் இன்னியும் இன்றி சிறுபான்மை மக்களை, மாற்றுத் திறனாளிகளை, பெண்களைஈழித்தும், பண்பாடற்றும் பேசித் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நபருக்கு எப்படி 63 மில்லியன் அமெரிக்கர்கள் வாக்களித்தனர்?

ஒரு பக்கம் இது ஒரு புதிர். இன்னொரு பக்கம் ஓரளவு எதிர்பார்த்ததுதான். உலகளவில் இதுதான் இன்றைய ‘ட்ரென்ட்’ போலும். இந்திய மக்கள் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுக்கவில்லையா?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை யாரும் இப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் ஹில்லரி கிளின்டன் வெற்றி பெறுவார் என்றே கூறின. ட்ரம்பின் அருவெறுக்கத்தக்க பேச்சுக்கள், வெளிப்படையான பொய்கள், கடும் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் ஆகியனவே அவரைக் கவிழ்க்கப் போதுமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை இறுதியில் பொய்த்தது. அப்படியானால் பெரும்பாலான அமெரிக்கர்கள் இதைத்தான் விரும்புகின்றனரா?

அப்படித்தான் தோன்றுகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் மீதும், ஒட்டுமொத்தமாகப் புலம் பெயர்ந்தவர்கள் மீதும் கட்டமைக்கப்பட்டுள்ள வெறுப்பிற்கு நாம் ட்ரம்பை மட்டுமே குற்றம் சொல்லிவிட இயலாது. 2001 தொடங்கி இத்தகைய வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்பட்டது. 2008ல் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதாரத் தேக்கம், கடன் நெருக்கடி ஆகியன இந்த வெறுப்பை அதிகப்படுத்தின. இடையில் வந்த ஒபாமா நிர்வாகம் இந்தத் தேக்கங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட இயலவில்லை. அமெரிக்க மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை ட்ரம்பின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களை வாட்டுகிறது. புலம் பெயர்ந்து வருவோரை அவர்கள் அச்சத்துடன் நோக்குகின்றனர். இந்தத் தேர்தலில் ட்ரம்புக்கு பெரும்பான்மை கிடைக்காத மாநிலங்களில்தான் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என ஒரு கணிப்பி சுட்டிக் காட்டுகிறது. ‘இன்டெர்நெட்’ முதலான புதிய தொழில் நுட்பங்கள் பாரம்பரியமான அதிகார மையங்களைப் பலவீனப் படுத்துவதையும் பழைய தலைமுறை அச்சத்துடன் நோக்குகிறது.

உலக அளவிலும் அப்படித்தான் நிலைமை. உலகப் போருக்குப் பின் இங்கு தலை எடுத்த தாராளவாதம் எழுபதுகளுக்குப் பின் மாறியது. டொனால்ட் ரீகன், மார்கரெட் தாட்சர், ஹெல்மெட் கோல் என வெளிப்படையான வலதுசாரிகள் மேலுக்கு வரத் தொடங்கினர். சோவியத் முதலான மாற்றுப் பொருளாதாரங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி வலதுசாரி அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்கிற எண்ணத்திற்கு வித்திட்டது.  தாராளவாதம் இருந்த இடத்தில் ஒரு பக்கம் ‘பாப்புலிசமும்’ இன்னொரு பக்கம் பெரும்பான்மைத் தேசியமும் (mejoritarian nationalism) பிடித்துக் கொண்டன. இதை வலதுசாரிக் கட்சிகளும் வெளிப்படையான தேசியவாதிகளும் பயன்படுத்திக் கொண்டனர். வெளிப்படையாக முஸ்லிம்கள், புலம் பெயர்ந்தோர் ஆகியோர் மீது வெறுப்புகள் கட்டமைக்கப்பட்டன. ட்ரம்ப்பின் வெற்றியை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.

#        #       #

ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ்ப் பணியாற்றத் தேர்வு செய்துள்ள நபர்களைப் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் வால்ஸ்ட்ரீட் பெரு வங்கிகளை எதிர்த்து பாப்புலிச வசனங்களை உதிர்த்ததோடு ஹில்லரி கிளின்டனையும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரையும் “வங்கிகளின் கையாள்” என்றும் பேசித் திரிந்த ட்ரம்ப் இன்று அமெரிக்காவின் பொருளாதாரச் செயலர் பதவிக்குத் தேர்வு செய்திருப்பது பன்னாட்டு நிதி நிறுவனமான ‘கோல்டுமன் சாக்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஸ்டீவன் ம்யுனுச்சின்; கல்விச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் இன்னொரு பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான பெட்சி டெவோஸ். அட்டர்னி ஜெனரலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெஃப் செஷன்ஸ் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கொடும் அம்சங்களை மென்மையாக்க வேண்டும் என்கிற வெகுமக்கள் கருத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்; ‘அமெரிக்க மக்கள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்கிற கருத்துடையவர். இதற்குமுன் இடைக்கால அட்டர்னி ஜெனெரலாக இருந்த சாலி பேட்ஸ், ட்ரம்பின் ஏழு நாடுகள் மீதான முஸ்லிம் தடையைச் செல்லாது என அறிவித்த சில மணி நேரங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஜெஃப்.  சி.ஐ.ஏ இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மைக் பாம்பி என்பவரோ இராணுவம் நினைத்தால் எந்தக் குடிமக்களையும் வாரன்ட் இல்லாமல் கைது செய்து எத்தனை காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்கிற (NDAA) சட்டப் பிரிவை ஆதரிப்பவர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிஷேல் ஃபின் என்பவர் ஒரு கடும் முஸ்லிம் வெறுப்பாளர்; உலகளவில் பயங்கரவாதத்திற்கான யுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படையாகப் பேசி வருபவர் இவர். ட்ரம்பின் மருமகனும் யூதக் கோடீசுவரனும், தண்டிக்கப்பட்ட ஒரு கிரிமினலுமான ஜாரெட் குஷ்னர் என்கிற யூத மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபர்தான் இப்போது அவரது அதிகாரபூர்வ ஆலோசகர். இவரது தந்தையும் வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக்கத் தண்டிக்கப்பட்டவர்தான். கடும் இஸ்ரேல் ஆதரவாளரான நிக்கி ஹேலி தான் இப்போது ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர்.

இந்தப் பட்டியல் போதும் என நினைக்கிறேன். ட்ரம்பின் அமெரிக்கா எங்கே போய்க் கொண்டுள்ளது என்பதை விளக்க.

#      #       #

ட்ரம்ப் பெரும் தொழில் வணிக நிறுவங்களின் மீதான தனது பிடியை குடியரசுத் தலைவர் ஆன பின்னும் விடத் தயாராக இல்லை. அவற்றின் நிர்வாகப்  பொறுப்புகள் அவரது இரு மகன்களிடமும் அளிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியா போன்ற ‘அமெரிக்க நண்பர்கள்’ ட்ரம்பின் சொகுசு ஓட்டல்களில் அறைகளை நிரந்தரமாக ‘ரிசர்வ்’ செய்து வைத்திருப்பது உட்பட அவரது தொழில் நலன்களுக்கு உதவி செய்வதன் ஊடாக நெருக்கம் பேணுகின்றன.

ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்க -இஸ்ரேல் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். மேற்குக் கரையிலும் (West Bank), கிழக்கு ஜெருசலேமிலும் இஸ்ரேல்  சட்டவிரோதமாக ஏற்கனவே உருவாக்கியுள்ள குடியிருப்புகள் தவிர இப்போது கூடுதலாக 5500 வீடுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டித்து ஐ’நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சென்ற டிச 23 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. கடந்த 36 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் இஸ்ரேல் மீது இப்படியான ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்துள்ளது. இதற்கு முன் இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களைத் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்து கொண்டே இருந்த வரலாற்றை முதல் முறையாக மாற்றி அமைத்த சாதனைக்குரியவரானார் ஒபாமா. அதற்காக இஸ்ரேல் அவர் மீது சீறிப் பாய்ந்தது. பதவிப் பொறுப்பை ஏற்பதற்காகக் காத்திருந்த ட்ரம்ப், “ஐ.நா விஷயத்தில் ஜன 20 க்குப் பின் நிலைமை வேறு விதமாக இருக்கும்” என ட்விட்டரில் பதிவு செய்தார்.

பதவி ஏற்றபின் இப்போது அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். அமெரிக்கா இது தொடர்பாக இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்பகுதிகளில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவது அமைதி திரும்புவதற்கு வழி வகுக்காது” என்று கூறியுள்ளதோடு நிறுத்திக் கொண்டுள்ளது.. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு ஏற்பு வழங்கப்படுவதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். தவிரவும் அமெரிக்கா தன் அறிக்கைகளில் எப்போதும் குறிப்பிடுகிற ,”இஸ்ரேலுக்கு அருகாக சுதந்திரமான பலஸ்தீன அரசு அமைக்கப்படும்” என்கிற வாசகத்தை இந்த முறை அது கைவிட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இன்னொரு பக்கம் டெல் அவிவில் இருக்கக் கூடிய தனது தூதரகத்தை கிழக்கு ஜெருசலேமுக்கு இடம் பெயர்ப்பது என்கிற சர்ச்சைக்குரிய அமெரிக்கக் கொள்கையை நிறைவேற்றும் பேச்சு வார்த்தைகளும் தொடங்கி விட்டன. 1967 ல் நடந்த “ஆறு நாள் போரின்” போது கிழக்கு ஜெருசலேமைத் தன்னுடன் இஸ்ரேல் இணைத்துக் கொண்டது. எனினும் இதை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் “ஜெருசலேமை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கக் கூடாது” எனச் சொல்லி அதன் மூலம் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்கிற கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது.. 1995 ல் தனது தூதரகத்தை கிழக்கு ஜெருசலேமுக்கு மாற்றுவது குறித்த சட்டத்தையும் அமெரிக்க காங்கிரஸ் இயற்றியது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் அதை நிறைவேற்றுவதற்கான கால கெடுவை அடுத்த ஓராண்டு காலத்திற்குத் தள்ளி வைத்துக் கொண்டே வந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்ட கால கெடு இன்னும் சில மாதங்களில் முடிய இருக்கும் நிலையில் இந்தப் பேச்சு வார்த்தை துவங்கப்பட்டுள்ளது. அப்படி அமெரிக்கத் தூதரகம் மாற்றப்பட்டால் ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலை நகரம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாக ஆகும். அமெரிக்கா அப்படிச் செய்தால் அது ஒரு போர்க் குற்றமாகக் கருதப்படும் என பலஸ்தீனம் கூறுகிறது.

#     #     #

இந்தப் பின்னணியில்தான் ஜனவரி இறுதியில் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட “முஸ்லிம் தடை” ஆணையை நாம் பார்க்க வேண்டும். இந்த நிர்வாக ஆணை வெளியிடப்படுவதற்கு முன்பே, பிரச்சினை தொடங்கி விட்டது. ட்ரம்ப் பதவிப் பொறுப்பை ஏற்ற கணம் தொடங்கி எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த நாடுகளிலிருந்து சட்டபூர்வமான ஆவணங்களுடன் வருகிற முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் விசாரணை செய்து அவர்கள் ஏறிய விமான நிலையத்திற்கே பலர் திருப்பி அனுப்பப் பட்டனர். சொந்த நாட்டிற்குத் திரும்பினால் ஆபத்து என்கிற நிலையில் வரும் அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்கிற விதிமுறைகளை மீறி அவர்கள் திருப்பி அனுப்பவும் பட்டனர். சிலர் விசாரணைக்குப் பின் சிறையிலடைக்கவும் பட்டனர். படித்துக் கொண்டிருந்த மாண்வர்கள், ‘கிரீன் கார்டு’ வைத்திருந்தோர், சொந்த நாட்டிற்குச் சென்று வந்த இரட்டைக் குடியுரிமை உடையோர், அமெரிக்கக் குடியுரிமை உடையவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகிய குழப்பம் நிறைந்த சூழலில்தான் ஜனவரி இறுதியில் அந்த முஸ்லிம் தடை ஆணை வெளியிடப்பட்டது.

இதன்படி ஈரான், ஈராக், சிரியா, ஏமன், லிபியா, சூடன், ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்கள், அவர்கள் உரிய விசா முதலிய ஆவணங்களை வைத்திருந்தாலும் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரக் கூடாது; அவர்கள் விசா முதலியன இல்லாத அகதிகளாயின் 120 நாட்களுக்குத் தடை. சிரிய நாட்டு அகதிகளாயின் அவர்களுக்கு ஆயுளுக்கும் தடை – இதுதான் அந்த ஆணை.

இதில் மிகவும் வியப்பான ஓரம்சம் என்னவெனில் இந்த மேற்காசிய மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேந்த ஏழு நாடுகளில் ஆறு இதே போன்ற  இன்னொரு பட்டியலிலும் உள்ளதுதான். இந்தப் பட்டியல் அமெரிக்க ஜெனரல்களில் ஒருவரான வெஸ்லி கிளார்க்கிடம் ஒரு பென்டகன் அதிகாரி 2001 ல் தந்ததாகச் சொல்லபடுகிறது.. 9/11 தாக்குதலுக்கு ஏழு வாரங்களுக்குப் பின் இது நடந்தது என்கிறார் சந்திரா முசாஃபர். (Chandra Muzaffar, Global Research, January 31, 2017).
இப்போது ட்ரம்ப் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள ஏழு நாடுகளில் யேமன் மட்டும் அந்தப் பழைய  பட்டியலில் இல்லை. பதிலாக லெபனான் அதில் இடம்பெற்றிருந்தது. 9/11 க்குப் பதிலடியாக  அமெரிக்கா தாக்கப் போகிற நாடுகளின் பட்டியல் இது என அப்போது சொல்லப்பட்டது. முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் முன்னாள் அதிகாரிகள் டொனால்ட் ரும்ஸ்ஃபீல்ட், பால் வொல்வோவிட்ஸ் முதலானோர் தீட்டிய திட்டம் இது என கிளார்க்கும் பிறரும் வெளிப்படயாகக் குற்றம் சாட்டினர். இதற்குச் சொல்லப்பட்ட காரணம் “பாதுகாப்பு”. இதன் மூலம் அமெரிக்க இராணுவ ஆதிக்கம் அப்பகுதியில் உறுதிப்படுதல் என்பது ஒரு பக்கம். அதைக் காட்டிலும் இப்பகுதியில் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்துவதே அவர்களின் உண்மையான நோக்கம் என்கிறார் சந்திரா.

 

ராபெர்ட் காகன் போன்றோர் உருவாக்கிய ‘புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்’ (Project for a New American Century (PNAC)) ஓரங்கம் இது. அமெரிக்காவின் திட்டங்களுக்கு இந்த நாடுகள் உடன்படுவதில்லை என்பதோடு ஈரான் போன்றவை கடுமையாக அமெரிக்காவை எதிர்ப்பவை என்பது குறிப்பிடத் தக்கது. இடைப்பட்ட காலத்தில் இந்த நாடுகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்ட வரலாறை நாம் அறிவோம்.
இப்போது இந்த ஏழு நாடுகளின் மீது தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா சொல்கிற காரணம் அபத்தமானது.  பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்வதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால்  இந்த நாடுகளால் அத்தகைய ஆபத்து உள்ளது என்பதற்கு அவர் எந்தச் சான்றையும் முன்வைக்கவில்லை. இதுவரை அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களில் இந்த நாடுகளைச் சேர்ந்தோர் யாரும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. 3000 பேர்கள் கொல்லப்பட்ட 9/11 தாக்குதலில் விமானங்களைக் கடத்தியதாகச் சொல்லப்படும் 19 பேர்களில் யாரும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கலில் 15 பேர்கள் சவூதி நாட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்தச் சவூதி மன்னரோடுதான் இப்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து போனில் கலந்தாலோசித்துக் கொண்டுள்ளார் ட்ரம்ப். 9/11 தாக்குதலில் யுனைடெட் அராப் எமிரேட்ஸ் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அந்த நாடுகளும் இன்றைய பட்டியலில் விடுபட்டுள்ளன.ட்ரம்ப்பின் தனிப்பட்ட ‘பிசினஸ்’ நலன்கள் தவிர இந்த விடுபடல்களுக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

 

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவிலும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் உருவாயின. தன்னிச்சையாகத் திரண்ட ஏராளமான மக்கள் விமான நிலையங்களிலும் பொது வெளிகளிலும் ஆர்பாட்டங்களை நிகழ்த்தினர். இதற்கிடையில் அப்போது அட்டர்னி ஜெனெரலாக இருந்த சாலி யேட்ஸ் இந்த ஆணை செல்லாது எனவும் அதை செயல்படுத்த வேண்டிய கடமை தொடர்புடைய துறைகளுக்கு இல்லை எனவும்  அறிவித்தார். அவரைப் பணி நீக்கம் செய்து ட்ரம்ப் வேறொருவரை நியமித்தார். இதற்கிடையில் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ட்ரம்பின் ஆணைக்குத் தற்காலிகத் தடை விதித்தது.

 

உலக அளவிலும் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டன. பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்கிற பெயரில் இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களைச் சந்தேகத்திற்குரியவர்களாகக் கட்டமைக்க வேண்டியதில்லை என ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மார்கெல் அறிவித்தார். பிரிட்டனுக்கு ட்ரம்ப் செல்ல இருந்த திட்டம் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது 1.25 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ட்ரம்ப் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என்கிற மனுவில் கையொப்பமிட்டுள்ளதன் பின்னணியில் இது நடந்துள்ளது.

 

இதையெல்லாம் கண்டு கொள்ளாத நாடுகளில் முக்கியமான ஒன்று இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *