{மலேசியாவில் சென்ற மாத இறுதியில் நடைபெற்ற “தமிழ் உணர்வாளர்கள் மாநாடு” முடிந்த கையுடன் சிலாங்கூர் மாகாணத்தில் நடந்த மூன்று கூட்டங்களையும், ஜோகூரில் நடைபெற இருந்த ஒரு கூட்டத்தையும் ஒரு சிறு பிரிவினர் குழப்பினர். பெரியாரை யாரும் இங்கு பேசக்கூடாது என்றனர்.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் சாதி அடிப்படையில் சிலர் பிளவுகளை உருவாக்குகின்றனர். தமிழர்களில் சில சாதியினரை மட்டும் தமிழர்கள் எனக் கூறி மற்ர சாதியினரை இவர்கள் தமிழ் இன எதிரிகள் என்கின்றனர்.
தமிழர்கள் இன்று அங்கு இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையை எதிர்த்துத் தமிழர்கள் ஒன்று கூடி நிற்க வேண்டிய சூழலில் இவர்கள் தமிழர்களைப் பிளவுபடுத்தி மலேய அரசுக்குச் சேவை செய்கின்றனர்.
இது எப்படி நிகழ்ந்தது, இன்று அங்கு என்ன நடக்கிறது என ஆய்வு செய்கிறது இக்கட்டுரை}
1.எங்கள் கூட்டத்தக் குழப்பியவர்கள் யார்?
மலேசியாவில் அங்குள்ள பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிட அமைப்புகள் ‘பெடாலிங் ஜெயா’ மற்றும் ‘கிள்ளான்’ ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கப்பட்ட செய்தியை அறிந்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்த “தமிழ்ச் சாதிவெறி பாசிச சக்திகளின்” கருத்துக்களால் தூண்டப்பட்ட சுமார் பத்து மலேசியத் தமிழர்கள் கலாட்டா செய்து கூட்டத்தைக் குலைக்க முயன்றனர். இரண்டு கூட்டங்களிலும் பேச அழைக்கப்பட்டது நானும் விடுதலை இராசேந்திரனும்தான்.
இந்த இரண்டில் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டது. இராசேந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது பாதியில் குழப்பினர். கூட்ட ஏற்பாட்டாளர்கள் அவரது பேச்சை நிறுத்தி என்னைப் பேச அழைத்தனர். ஒருவரது கருத்தைப் பேச விடாமல் செய்தபின் அதே மேடையில் நான் எப்படிப் பேச முடியும். மேடையில் ஏறிய நான் இந்தக் காரணத்தைச் சொல்லி பேச முடியாது எனக் கூறியதோடு இந்தப் பாசிச சக்திகளின் கூட்டம் குழப்பும் வேலையைக் கடுமையாகக் கண்டித்தேன். ஓடி வந்து மேடையில் ஏறிய அக்கும்பல் என்னை மன்னிப்புக் கோரச் சொல்லிக் கூச்சலிட்டது. நான் மறுத்தேன். பின்னர் அந்தக் கும்பலில் ஒருவரான எழிலன் எனப்படும் சுந்தரம் என்பவர் அக்கும்பல் சார்பாக என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அது முடிவதாக இல்லை. நான் மன்னிப்புக் கேட்பதாகவும் இல்லை. இறுதியில் அவர்கள் கலைந்து சென்றனர். கூட்டம் பாதியில் நின்றது. இது நடந்தது கிள்ளானில்.
அடுத்த நாள் பெடாலிங் ஜெயாவில் இதே கும்பல் கூட்டத்தைக் குழப்பியது. இம்முறை அவர்கள் விரட்டப்பட்டு கூட்டம் அதே வளாகத்தில் உள்ள இன்னொரு அரங்கில் முழுமையாக நடைபெற்றது. (அப்போது பெரியார் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து நான் பேசிய உரையை விரிவாக இங்குப் பின்னர் வெளியிடுகிறேன்).
கோலாலம்பூரை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் இம்மாதிரி பாசிச சக்திகளால் ஊக்கம் பெற்றோர் சற்று அதிகம். பிற மாவட்டங்களில் கூட்டங்கள் அமைதியாக நடந்தன என்பது குறிப்பிடத் தக்கது..
சிலாங்கூர் மாகாணத்தில் நடைபெற இருந்த இன்னொரு கூட்டத்திற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து அக் கூட்டத்தை அதே கும்பல் நிறுத்தியது. இந்தக் கூட்டம் அங்குள்ள ஆளும் கூட்டணிக் கட்சியான ‘மலேசிய இந்திய காங்கிரசால்’ ஏற்படு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு தமிழ் அமைப்புடன் பெரியார் தொண்டர்கள் பேசி இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
“அ.மார்க்ஸ் , விடுதலை இராசேந்திரன் எனும் இருவரும் தமிழகத்திலிருந்து ‘டூரிஸ்ட் விசா’ வில் வந்து மலேசிய அரசியல் சட்டத்தில் முக்கியக் கொள்கையாக ஏற்கப்பட்டுள்ள ‘மதங்களை இழிவு செய்யக் கூடாது’ என்கிற கருத்திற்கு எதிராகப்பேசி வருகின்றனர்” என அந்தப் புகாரில் இவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
ஆக, நாங்கள் இரு குற்றங்களைச் செய்வதாக புகார் செய்யப்பட்டது. 1.மலேசிய அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம். 2. டூரிஸ்ட் விசாவில் வந்து கூட்டங்கள் பேசுகிறோம்.
இரண்டுமே சீரியசான குற்றங்கள். டூரிஸ்ட் விசாவில் சென்று கூட்டங்கள் பேசுகிறேன் என்றுதான் 2012ல் ராஜபக்ஷே அரசு இலங்கையில் என் கூட்டங்களுக்குத் தடை விதித்தது என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. பொதுவாக எல்லோரும் டூரிஸ்ட் விசாவில் சென்றுதான் பேசினாலும் பிரச்சினையாகும்போது அது குற்றம் ஆகிறது.
மலேசிய அரசைப் பொருத்த மட்டில் அது இந்தக் குற்றச்சாட்டுகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதைப் பொருத்த மட்டில் இது தமிழர்களுக்குள் நடக்கும் போராட்டம். தமிழர்கள் இரண்டுபட்டால் அதற்குக் கொண்டாட்டம். எனவே அது அந்தக் கூட்டத்தை நிறுத்தியதோடு, சிலாங்கூர் மாகாண தி.க இயக்கத் தலைவர் திரு பரமசிவத்தையும், செயலர் திரு தருமலிங்கத்தையும் அழைத்து ஒரு ஸ்டேட்மென்டை வாங்கிக் கொண்டு அனுப்பியது.
எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு எதிராக இப்படிப் பிளவுகளை உருவாக்கி அரசு தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக நான் மட்டும் பேச இருந்த ஜோகூர் பாரு கூட்டம் ஒன்றும் இப்படி ரத்து செய்யப்பட்டது. இந்தக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. ஜோகூர் பாரு என்பது சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதி. இங்குள்ள சசுவாமிநாதன் என்பவர் மலேசியத் தொழிற்சங்க வரலாற்றில் தமிழர்களின் பங்கு, குறிப்பாக தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட தோழர் கணபதி முதலானோர் குறித்துச் சொந்த முறையில் ஆய்வு செய்து வருபவர். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தன்னந்தனியாக நின்று, எந்தப் பிற உதவிகளும் இன்றி செயல்பட்டு வருபவர். அவர் சேகரிக்கும் முக்கிய தரவுகளை அவரது இணையப் பக்கத்திலும் காணலாம். தோழர் கணபதி அவர்கள் அகில மலேயத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அதே அமைப்பின் (அ.ம.தொ.ச) சிலாங்கூர் மாகாண நிறுவனத் தலைவராகவும். அப்போது வெளிவந்து கொண்டிருந்த அவர்களின் முக்கிய தமிழ் அரசியல் இதழான ‘ஜனநாயகம்’ எனும் இதழில் மலேயக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நிர்வாகத்தில் இருந்தவர் என் தந்தை ராமதாஸ் என அறியப்பட்ட அந்தோணிசாமி.
அவரும் தேடப்பட்டபோது, அவர் தமிழகத்திற்குத் தப்பி வந்தார். அத்ற்குப் பின் அன்றைய மலேயாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்தியதாக அறிவித்தது.
அந்த வகையில் என் அப்பாவைப் பற்றிப் பேச என்னை மிகவும் பிரியத்தோடு அழைத்திருந்தார் சுவாமிநாதன். அதைப் பல சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார். சயாம் மரண ரயில் பாதை , தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் தியாகத்தைத் தம் அரசியலுக்குச் சாதகமாக முன்னிறுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ள ‘ஹின்ட்ராஃப்’ இயக்கமும் அக்கூடத்தில் பங்குபெறுவதாக அறிவித்திருந்தது. இதை கொலாலம்பூரில் என்னைச் சந்தித்து உரையாடிய ஹின்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் உதயமூர்த்தி, வேதமூர்த்தி ஆகியோரின் சகோதரருமான சந்திரசேகரே என்னிடம் தெரிவித்தார். நானும் இந்தியாவில் உள்ள இந்துத்துவ இயக்கங்களைப் போல ஹின்ட்ராஃபைப் பார்ப்பதில்லை (இது குறித்து இந்தத் தொடரில் பின்னர் விரிவாக எழுதுகிறேன்). எனவே நான் அதை மறுக்கவில்லை.
சிலாங்கூர் மாகாணத்தில் கூட்டங்களைக் குழப்பிய கும்பல் இங்கும் தலையிட்டது. அவர்களுடன், அதாவது இந்த தமிழ்ச் சாதீயப் பாசிச சக்திகளுடன் தொடர்புடைய ஹின்ட்ராஃப் இவர்களின் வற்புறுத்தலை ஏற்று அந்தக் கூட்டத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்து செய்திகளை ஊடகங்களில் பரப்பியது. தொடர்ந்து இதர சிறு அமைப்புகளும் விலகிக் கொண்டன.
கூட்டத்தை ரத்து செய்த சுவாமிநாதன் அவர்கள் ஜூலை 3 அன்று ஸ்கூடாய்க்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தார். அதில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார் தலைமையில் இயங்கும் சோஷலிஸ்ட் கட்சின் அப்பகுதித் தலைவர் உட்படச் சில நண்பர்கள் பங்கேற்றனர்.
என் தந்தை பற்றி மட்டுமின்றி அக்காலகட்டதில் சீனாவிலும் புரட்சி நடந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்த சூழலில் உலக முதலாளியம் எவ்வாறு இத்தகைய இடதுசாரி எழுச்சிகளைக் கொடுமையாக அடக்கியது என்பது குறித்தும், அந்த நிலையில் கணபதி போன்றோரின் வரலாறுகள் எப்படி ஆவணப்படுத்த இயலாது போயிற்று என்றும் சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். மேலும் சுமார் ஒரு மணி நேரம் இடதுசாரி அரசியல் குறித்த கலந்துரையாடலும் நிகழ்ந்தது.
அடுத்து நான் சிங்கப்பூர் முதலான இடங்களிலும் நண்பர்களைச் சந்திக்க இருந்த நிலையில் அங்கிருந்தவரை மேலும் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என நான் எதையும் பதிவிடவில்லை. நண்பர்களையும் ஊருக்குப் புறப்படும் வரை என் பேச்சுக்களைப் பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.
எங்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்துக் கூட்டம் குழப்பிகள் கொடுத்த செய்தியை அப்படியே வெளியிட்டது “மலேசிய நண்பன்” எனும் நாளிதழ். அதற்கு நானும் இராசேந்திரனும் அளித்த மறுப்பை அடுத்த நாள், “தன்னிலை விளக்கம் தரும் தமிழகப் பேராசிரியர்” எனும் தலைப்பில் அப்படியே வெளியிட்டது அந்த இதழ்.
- இவர்கள் ‘பாசிஸ்டுகள்‘ இல்லாமல் வேறு யார்?
முந்தைய பதிவில் பின்னூட்டம் இட்டவர்கள் தமிழகத்தில் முன்வைக்கப்படும் பாசிசக் கருத்துக்களால் உத்வேகம் பெறுபவர்கள்தான் சிலாங்கூர் மாகானக் கூட்டங்களைக் குழப்பியவர்கள் என நான் எழுதியதைக் கண்டித்துள்ளனர். பாசிசம் எனும் சொல்லை அவர்களை நோக்கிச் சொல்லக் கூடாதாம். அப்படிச் சொல்லியுள்ளதை மீண்டும் நான் உறுதி செய்கிறேன்.
காரணங்கள்:
- இவர்கள் நானும் விடுதலை இராசேந்திரனும் பேசிய கூட்டங்களில் நடந்து கொண்டது 1930 களில் ஜெர்மனி மற்றும் இத்தாலியில் ஹிட்லர் மற்றும் முசோலினியின் அடியாட்கள் கம்யூனிஸ்டுகள் மற்றும் சோஷலிஸ்டுகளின் கூட்டங்களில் குழப்பம் விளைவித்த அதே வடிவையே பின்பற்றினர். கூட்ட ஏற்பாட்டாளர்களும் நாங்களும் பலமுறை, “இக்கூட்டத்தில் பேசுபவர்கள் பேசி முடித்தவுடன் நீங்கள் கேள்விகளைக் கேட்பதற்கும், உங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்படும். முதலில் அவர் பேசி முடிக்கட்டும்..” எனப் பலமுறை கூறியதையும் கேட்காமல் மேடையில் ஏறிப் பேச்சைத் தடுத்ததை வீடியோ பதிவுகள் காணலாம். மற்றவர்கள கருத்துக்களை முன்வைக்கக் கூடாது எனச் சொன்னதும் தடுத்ததும் நாங்கள் அல்ல. கூட்டம் குழப்பிகள்தான் அதைச் செய்தனர்.
2.மாற்றுக் கருத்தை முன் வைக்கக் கூடாது எனப் போலீசில் புகார் கொடுத்தவர்களும் இவர்களே. மதத்தை எதிர்க்கிறார்கள் என்பது இவர்கள் வைத்த குற்றச்சாட்டு. மலேசிய அரசியல் சட்டத்தில் அப்படி மட்ய்ஹ நம்பிக்கைகளை இழிவு செய்யக் கூடாது என உள்ளது தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க முனையும் ஒரு அரசின் காவல் படையை இப்படிப் பயன்படுத்தவும் இவர்கள் தயங்கவில்லை.
- பாசிசம் என்பது ஒரு சமூகத்தை உள்ளடக்கி இன்னொரு சமூகத்தை விலக்கும். இந்த விலக்கல் என்பது தேசிய உணர்வு எனும் எல்லையைத் தாண்டி உச்சபட்சமாகவும் வன்முறையாகவும் அமையும். எங்கள் கூட்டத்தைக் குழப்பி வன்முறை விளைவித்தவர்கள் யாரை விலக்குகிறார்கள் என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. அவர்களின் வாட்ஸ் அப் பதிவுகளைக் கவனியுங்கள். தங்களின் பெயருக்கு அடுத்து “குலம்” என அவர்கள் தம் சாதியைக் குறிப்பிடுகின்றனர். அதாவது தம்மை ஒரு சாதியாக அடையாளப்படுத்துவதன் ஊடாகவே இனம் காட்டிக் கொள்கின்றனர். குலம் என அவர்கள் ‘அகம்படியர்’, ‘மள்ளர், ‘முக்குலத்தோர்…. என்பதாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். கூட்டம் குழப்பிகள் அனைவரும் தந்தை பெரியாரை, “இராமசாமி நாயக்கன்” என்றே குறிப்பிட்டனர். அவர்கள் தம்மை அடையாளப்படுத்த முன்வைக்கும் சூத்திரம் இதுதான்: “நீ அவன் சாதி என்ன எனக் கேள். ‘நாயக்கர், நாயுடு, அருந்ததியர், உருது முஸ்லிம்….. இப்படி எல்லாம் சொன்னால் அவர்கள் நம் இனம் இல்லை. அவர்கள் நம் எதிரிகள். எனவே ஒவ்வொருவரையும் ‘குலத்தால்’ அடையாளம் காணுங்கள். பெரியார், வைகோ, கருணாநிதி.. இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. இவர்கள் நம் எதிரிகள்..”. இப்படியான அடையாளப்படுத்தலின் பிதாமகர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதையும், அவர்கள் யார் என்பதையும் நான் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இவர்கள் தமிழ் இனம் என்பதற்கு அப்பால் “தமிழ்ச் சாதி” என்பதை முன்வைத்து இயங்குவோர். ஆக இவர்கள் இன வெறியர்கள் கூட இல்லை. சாதி வெறியர்கள்.
இவர்கள் முன்வைத்த தர்க்கங்கள் இதுதான். “பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழ் இலக்கியங்களைக் குப்பை என்றார். தமிழ்க் கடவுளரை இழிவுபடுத்தினார். தமிழ் மன்னர்களின் பெருமைகளைப் பேசாதிருந்தார்..”
இவற்றிற்கு இங்கிருந்து சென்ற ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் பதிலளித்தோம். நான் பேசியதின் வீடியோ பதிவையும், எழுத்து வடிவையும் இங்கு விரைவில் பதிவிடுவேன்.
ஒன்றை நீங்கள் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். இன்று அங்கே பெரும்பான்மை இனத்தால் தமிழர்களும், இந்தியர்களும் ஒடுக்கப்படுகின்றனர். இந்தியர்கள் என்றால் அதில் 88 சதம் தமிழர்கள்தான். அந்த வகையில் அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தால் ஒடுக்கப்படுகின்றனர். பெரும்பான்மைச் சமூகத்தின் கல்விக்கே அங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான மலாய் மாணவர் ஒருவருக்கு ஒதுக்கப்படும் தொகை 32 வெள்ளி என்றால் தமிழ் மாணவர் ஒருவரின் கல்விக்கு ஒதுக்கப்படுவது வெறும் 10 வெள்ளி மட்டுமே. சீனருக்கு 4 வெள்ளி மட்டும்.. தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு இப்போது இயங்குவது வெறும் 517 பள்ளிகள்தான். குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் அவர்கள் முக்கிய பாடங்கள் இரண்டை அவர்கள் தமிழில் படிக்க இயலாது. மருத்துவம் முதலான படிப்புகளில் சேர்வதற்கு தமிழ் மாணவர்கள் மலாய் மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் பதிப்பெண் எடுக்க வேண்டும். தோட்டங்களும் ஒழிக்கப்பட்டு இன்று தமிழ் இளைஞர்கள் பெரும் அளவில் வேலை இல்லாமல் உள்ளனர். மலேசிய ஊடகங்கள் தமிழர்களை ரவுடிகள், வழிப்பறிக் கொள்ளையர்கள், gangsters என்பதாகவே சித்திரிக்கின்றன.
பலவகைகளில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் கூட மலேசியர்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற நடவடிக்கைகளுக்காக ஆக்ரமிக்கப்படுகின்றன. ஷா ஆலம் மாவட்டத்தில் உள்ள சுங்கை ரங்கம் தமிழ்ப் பள்ளிக்கென இருந்த இடத்தின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டு இப்போது அந்த இடத்தில் செவி கேளாதோர் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பத்தாஸ் பெர்சுந்தை எனும் இடத்தில் நாங்கள் பேசிய அரங்கிற்கென ஒதுக்கப்ப இடமும் கூட இன்று பெரும்பகுதி கை நழுவிப் போயுள்ளது என அடுத்த நாள் அங்கொரு தமிழ் நாளிதவில் பார்த்தேன்.
பொதுவாகப் பல இனங்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தில் ஒரு
குறிப்பிட்ட இனத்தின் மதிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கணக்கிட மூன்று அளவுகோல்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர் 1. அச்சமூகத்தின் கல்வி நிலை. 2. அச்சமூகம் ஊடகங்களால் எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது 3.வணிக வளாகங்களில் பெயர்ப்பலகைகள் எந்த மொழியில் எழுதப் படுகின்றன.
இப்போது இந்த மூன்றாம் அம்சத்தைப் பார்ப்போம். இது குறித்த ஆய்வொன்றை ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் நிகழ்த்தியுள்ளார். கோலாலம்பூரில் பிரிக்ஃபீல்ட் எனும் பகுதி முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த பகுதி. தமிழகத் துணிமணி வகைகள், நகைகள், உணவுகள் என்பதாக அமைந்த அப்பகுதி ‘லிட்டில் இந்தியா’ என அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள கடைகளின் சுமார் 300க்கும் மேற்பட்ட பெயர்ப்பலகைகள் அவர் ஆய்வு செய்துள்ள்ளார் (எனது புத்தக சேகரங்களை பார்சலில் அனுப்பியுள்ளேன். வந்தவுடன் ஆய்விதழ் ஒன்றில் வெளிவந்துள்ள அக்கட்டுரையை இங்கு பதிவிடுவேன்).
78 சதம் பெயர்ப்பலகைளில் ஆங்கிலப் பெயர்களே முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன. சுமார் 14 சதம் மலேயா மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. சுமார் 4 சதம் பலகைகள்தான் தமிழுக்கு முதன்மை அளித்துள்ளன. தையற்கடை வைத்துள்ள ஒரு பெண்மணியிடம் அந்த ஆய்வாளர் கேட்கிறார். ஏன் தமிழை முதனமைப்படுத்தவில்லை என. ‘நான் மூன்று முறை அப்படித் தமிழை முதன்மைப்படுத்தி வடிவமைத்ததை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். வேறு வழியில்லை. தொழில் நடக்க வேண்டும். இப்படி அமைத்துள்ளேன்..” என அவர் பதில் அளிக்கிறார்.
கூலித் தொழிலாளிகளாக மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இங்கு வந்த தமிழர்களின் நிலை இன்று இதுதான்.
வேறெப்போதையும் விட இன்று மலேசியத் தமிழர்களிடையே ஒற்றுமை தேவைப்படும் காலகட்டத்தில் இப்படி சாதி அடிப்படையில் தமிழர்கள்ளைப் பிரித்தொதுக்குவதன் மூலம் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதோடு இன ஒதுக்கல் செய்யும் அரசுக்கு ஏவல் செய்பவர்களாகவும் இந்த சாதி அடிப்படை அரசியலார் உள்ளனர். கூட்டம் குழப்பிகள் இங்கு முன்வைக்கும் அரசியல் இதுதான்.
- இந்துப் புத்துயிர்ப்பும் பெரியார் எதிர்ப்பும் : பின்னணிகள்
தமிழர்கள் சஞ்சிக் கூலிகளாக மலேயாவிற்கு கொண்டு வரப்பட்டபோது அவர்கள் கைகளில் ஒன்றும் இல்லாமல் வந்தார்கள் என்றாலும் அவர்கள் தம் தலைகளிலும் மனங்களிலும் சாதியைச் சுமந்து வரத் தயங்கவில்லை. தமிழர்களின் வரலாற்றை எழுதும் எல்லோரும் இதைக் குறிப்பிடுகின்றனர். பினாங்கில் அப்படி அப்போது நிறுவப்பட்ட சங்கங்கள் சில குறித்து ஒரு கட்டுரையில் பார்த்தேன். செட்டியார் சங்கம், வெள்ளாளர் சங்கம், முக்குலத்தோர்…இப்படி. 1929 ல் செயல்பட்ட ஒரு முடிதிருத்துவோர் சங்கம் பற்றிய குறிப்பும் உண்டு. பெரியாரின் வருகைக்குப் பின் (1929) பரவிய சுயமரியாதைக் கருத்துக்களின் ஊடாக இங்கே இப்படி உருவான அடித்தளச் சாதியினரின் அமைப்புகள் சாதி இழிவுகளுக்கு எதிராகப் போராடவும் செய்தன.
வெள்ளையர் ஆட்சியில் நிலவிய கடும் வறுமையால் எல்லாத் துயரங்கள், கடும் உழைப்புகள், மிகக் குறைந்த கூலிகள் என அனைத்தையும் சகித்துக் கொண்டு அவர்கள் இங்கே மலேயாவின் ஆக்கப் பணிகளிலும், சுரங்கங்கள், தோட்டங்கள் முதலானவற்றில் கடின உழைப்புகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கணபதியின் தம்பி சற்குணம் அவர்களை நான் சந்தித்தபோது தாங்கள் கப்பலேறிய கதையைச் சொன்னார். நாகப்பட்டிணம் துறைமுகத்தில் கப்பல் வந்துள்ளது என அறிந்து அங்கு சென்று காத்திருப்பார்களாம். பயணச் சீட்டு வாங்கியவர்கள் ஏறியபின் மணி ஒலித்து ‘தரும டிக்கட்’ அறிவிக்கப்படுமாம். அப்போதெல்லாம் பாஸ்போர்ட், விசா எதுவும் கிடையாது. தரும டிக்கட்டில் ஏறுபவர்கள் பயணத் தொகையும் கொடுக்க வேண்டியதில்லை. கப்பலின் அடித்தளத்தில் ஏழு நாள் கடும் சிரமங்களுடன் பயணித்து வந்தவர்கள் அவர்கள்.
வந்தவர்கள் ஏதோ ஒரு தோட்டம் அல்லது சுரங்கம் முதலான பணியிடங்களுக்கு மத்தியில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அந்த இடத்தைத் திருத்தி அங்கே தங்குவார்கள். அவர்கள் கூடிப் பேச ஒரு பொது இடமும் அமைக்கப்படும். அங்கு ஒரு எளிய கொட்டகை அமைத்து அதில் மாரியம்மன், முருகன் என ஏதாவது ஒரு சாமி சிலையும் நிறுவப்படும். தம் துயரங்களைச் சொல்லி அழவும், வேண்டித் தொழவும் அவர்களுக்கு ஒரு தமிழ்ச் சாமியும் தேவைப்பட்டது. ஒன்றை மறந்துவிடக் கூடாது. அது அவர்களுக்கு ஒரு கோவில் மட்டுமல்ல.. அதுவே அவர்களின் சமுதாயக் கூடமாகவும், குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் இடமாகவும் இருந்தது. “நாற்பதாயிரம் கோவில்கள்” இவர்கள் அமைத்து “மூடநம்பிக்கையைப் பரப்பினார்கள்” எனப் போகிற போக்கில் சொல்லும்போது நாம் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கோவில்கள் இடிக்கப்படுவது என்பது அவர்களின் அடிப்படையான அடையாளங்களை மட்டுமல்ல, தம் குறைந்த பட்ச இருப்பின் நியாயங்களையே தாக்குவதாகவும் அவர்களுக்கு ஒரு வகையில் அமைந்தது.
தமிழக நிலைமைகளை வைத்து மட்டுமே மலேசியச் சூழலையும் அரசியலையும் நாம் மதிப்பிடக் கூடாது என்பதை நான் பேசிய எல்லாக் கூட்டங்களிலும் சொல்லி வந்தேன். இங்கே பெரும்பான்மை மத அடையாளத்துடன் இருந்து செயல்படும் இந்து மதம் அங்கே உரிமைகள் மறுக்கப்படும் சிறுபான்மை மதமாக அமைகிறது. இங்கே இந்தியச் சூழலில் சிறுபான்மையாகத் தம் அடையாளங்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ள முஸ்லிம் மதம் மலேசியாவில் பெரும்பான்மை மத அடையாளத்துடன் ஆட்சி செலுத்துவதாக உள்ளது. மலேசியாவில் முன்வைக்கப்படும் இந்து அடையாளத்தை நாம் ஏதோ இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பார்ப்பது போலப் பார்த்து விட இயலாது என்பதையும் குறிப்பிட்டேன். பெரியார் கூட மலேசியா வந்தபோது “இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் திராவிட நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் எனக் கோரிய அவர்தான் மலேசியாவில் இந்தியர்களாக ஒன்றுபடுங்கள் என்றார். ஏனெனில் அதுதான் அவர்களுக்குப் பலம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியர்களுக்குள் தமிழர்களே 88 சதம் என்கிறபோது அந்த ஒற்றுமையால் தமிழர்கள் ஒன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லை எனும் தெளிவு அவருக்கு இருந்தது. ஹின்ட்ராஃப் தலைவர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் இதைக் குறிப்பிட்டேன். என்னிடம் பேசிய சந்திரசேகர் தாங்கள் மதத்தை முதன்மைப் படுத்தவில்லை எனவும் தாங்கள்தான் மலேசியாவில் செயல்படும் ஒரே genuine மனித உரிமை இயக்கம் எனவும் குறிப்பிட்டார். எனினும் இன்று இந்தியாவில் பெரிய அளவில் இந்துத்துவம் எனும் கருத்தாக்கம் அச்சுறுத்திக் கொண்டுள்ள சூழலில் நீங்கள் இப்படியான ஹின்ட்ராஃப் எனும் இந்து அடையாளத்தைத் தவிர்த்துக் குறைந்த பட்சம் இந்தியர் என்றாவது அடையாளப்படுத்திக் கொள்ளலாமே என்ற போது அவர் ஏற்கவில்லை. இன்னொரு நண்பர் சேகர் நான் புறப்படுவதற்குச் சில மணி நேரத்திற்கு முன் இன்னொரு ஹின்ட்ராஃப் ஊழியரை அழைத்து வந்தபோது அவரிடமும் இதைச் சொன்னேன். அவர் என் கருத்தை மூர்க்கமாக மறுத்தார். தாங்கள் இந்தப் பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டதால் இனி யார் சொன்னாலும் இதை மாற்றிக் கொள்ள இயலாது எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
தமிழர்களின் இந்து அடையாளம் 1980 களில் சற்று ஆபத்தான இன்னொரு பரிமாணத்தை எட்டியது. இக்கால கட்டத்தில்தான் மலேசிய அரசு தீவிரமாகத் தன் மலேசிய இன / மத அடையாளங்களை வலியுறுத்தத் தொடங்கியது. நான் முன் குறிப்பிட்டவாறு எல்லாவற்றிலும் மலேசியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழர்கள் தாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்படுவதைத் தீவிரமாக உணரத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் இந்தியாவிலும் காந்தி கொலைக்குப் பின் அடங்கிக் கிடந்த இந்துத்துவ சக்திகள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கின.
இது மலேசியத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்வினை அவர்கள் தம் இந்து அடையாளத்தை உறுதி செய்வதாக அமைந்தது. இந்து ஆலயங்களை விரிவாக்குவது, அவற்றை ஆகம வழிப்பட்ட வழிபாட்டுக்குரியவைகளாக ஆக்குவது, இந்து மதம் சார்ந்த பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதாக இந்த எதிர்வினைகள் அமைந்தன. இந்தியாவிலுள்ள இந்துத்துத்துவ அமைப்புகள் விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் முதலான பெயர்களில் இங்கு வந்து தீவிரமாகச் செயல்படத் தொடங்கினர். எங்கு பார்த்தாலும் ஆகம வழிபாடு என்கிற குரல்கள் மேலெழுந்தன.
இந்து உணர்வு மீட்டப்படுவது என்பது இன்னொரு வகையில் சாதி உணர்வு மீட்டப்படுவதுதானே. எந்நாளும் சாதி உணர்வை மலேசியத் தமிழர்கள் விட்டதில்லை என்றேன். ஆனால் அது இந்தியாவில் உள்ள அளவு தீவிரமாக வெளிப்பட்டதில்லை. ஆனால் 1980 களுக்குப் பின் நிலைமை மாறியது. கிட்டத்தட்ட இங்குள்ள எல்லா சாதிச் சங்கங்களும் இப்போது அங்கு உள்ளன. தேர்தல் அரசியலிலும் அது முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்திலிருந்து எல்லா சாதிக்கட்சித் தலைவர்களும் இங்கே வரவேற்கப் படுகின்றனர். சாதி மாநாடுகளும் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. சாதிகளுக்குள் திருமணம் என்பதும் இன்று தீவிரமாகியுள்ளது.
இன்னொன்றும் இங்கே குறிப்பிடத் தக்கது. கோவிலகளை அங்கு பதிவு செய்ய வேண்டும். இங்குள்ள society act போல அங்கும் ஒரு சட்டம். அதன்படி கோவில் நிர்வாகத்துக்கு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தல்கள் சாதிகள் மோதும் களமாகி விட்டன. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள முக்கிய இந்துக் கோவில்கள் அனைத்தும் இன்று குறிப்பிட்ட சாதிகளின் கோவிலாகவும் மாறிவிட்டன. எடுத்துக்காட்டாக மலேசியாவின் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் இன்று முக்குலத்தோரின் கோவிலாகியுள்ளது.
எண்பதுகளுக்குப் பின் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் ஈழப் போராட்டத்தின் மூலம் அமைந்தது. ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மாண்புகளை மீட்க வந்த ஒரு வீரத் தலைவராக பிரபாகரன் இங்கே போற்றப்பட்டார். பெருமளவு நிதி முதலான ஆதரவுகள் இங்கிருந்து சென்றன. பிரபாகரனின் மறைவுக்குப் பின் அவரது முக்கிய நிதி சேகரிப்பளர்களில் ஒருவர் இங்கிருந்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. இப்படியான புலிகள் வழிபாடு என்பது இன்னொரு பக்கம் திராவிட இயக்க வெறுப்பாகவும் இங்கே விதைக்கப்பட்டது. சீமான், மணியரசன் போன்றோரின் பேச்சுக்களின் ஊடாக புலிகள் அழிக்கப்பட்டதற்கே தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளே காரணம் என முன்வைக்கப்பட்டது. அந்தக் கருத்தை முன்வைத்த தமிழகத் தலைவர்களின் பெரியார் வெறுப்பும், திராவிட எதிர்ப்பும், மறைமுகமான இந்து அடையாளங்களின் ஆதரவும் இங்கே அப்படியே உள்வாங்கப்பட்டன.
இன்று அங்கு ஏற்பட்டுள்ள பெரியார் எதிர்ப்பின் பின்னணி இதுவே.
- விதியே .. விதியே.. என் செய நினைத்தாய் என் தமிழ் மக்களை..
ஜூலை 1 அன்று காலை வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான நண்பர் ஆறுமுகம் தொலைபேசியில் ஒன்றைச் சொன்னார். முதல் நாள் அவரைச் சந்தித்த சிலர் நாங்கள் அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதால் எங்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஒரு வழக்குத் தொடர்வதற்காக அவரை அணுகினார்களாம். தான் பேச்சுரிமைக்காகத்தான் வழக்காடுவேனே ஒழிய அதற்கு எதிராக வழக்கமுடியாது என அந்தக் கோரிக்கையை அவர் மறுத்துள்ளார்.. “பெரியாரை இப்படி ஏசுகிறீர்கள். அவர் இங்கு வந்து போனபின்தான் முதல் தொழிற் சங்கமே உருவானது. இப்படி அவரை வசை பாடுவது என்ன நியாயம்” எனவும் கேட்டுள்ளார்.
மலேசியத் தமிழர்களைன் வரலாற்றை எழுதும் யாரும் ஒரு சில முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்வர். 1929 ல் முதல் முறை பெரியார் அங்கு வந்தது அங்கிருந்த தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்த முதல் திருப்பம். இரண்டாவது முக்கிய நிகழ்வு சுபாஷ் சந்திர போஸ் அங்கு தங்கி ‘இந்திய தேசிய இராணுவத்தை’ திரட்டியது. மூன்றாவது நிகழ்வு குஅழகிரிசாமி அங்கு பத்திரிகை ஆசிரியராக வந்து தமிழர்கள் மத்தியில் நவீன இலக்கிய விழிப்புணர்வை ஊட்டித் தமிழ் ஓர்மையை வளர்த்தது. இந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர் எல்லோராலும் நன்றி கூறப்படும் கோ.சாரங்கபாணி அவர்கள்.
இப்படியான ஒரு வரலாற்றுச் சங்கிலி ஒன்றை அங்கு அமைக்க முடியும் எனும் நிலையில் பெரியாரின் பங்களிப்பைச் சிலர் திட்டமிட்டு மறைப்பதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அப்படி இழைக்கப்பட்ட அநீதிகளில் ஒன்று மலேசிய அடித்தளமக்களின் வாழ்வைச் சொல்லுவதாக முன்வைக்கப்பட்ட ‘கபாலி’ திரைப்படத்தில் பெரியார் மிக வஞ்சகமாக மறைக்கப்பட்ட செயல்.
மலேசியத் தமிழர்களின் வரலாற்றைச் சரியாக ஆய்வோமானால் சுயமரியாதை இயக்கத்தின் வரவுக்குப் பின்தான் அங்கு சாதி இழிவுகளை எதிர்த்து அடித்தள மக்கள் எழுந்தனர் என்பது விளங்கும். அந்த வரலாற்றை எல்லாம் மறைத்த செயல்கள் இன்று அங்கு இந்துத்துவக் கருத்துக்கள் பரவுவதற்குத்தான் வழி வகுத்துள்ளது. இன்னொரு பக்கம் இப்படி வளர்க்கப்பட்ட இந்துத்துவ உணர்வு மலேசிய மக்கள் மத்தியில் சாதியம் கூர்மைப்படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.
ஹின்ட்ராஃப் இயக்கமும் கூட அதனால்தான் தன் இந்து அடையாளத்தை உதறத் தயங்குகிறது. சில மாதங்களுக்கு முன் இந்திய இஸ்லாமியவாதியான ஜாகிர்நாயக்கிற்கு மலேசியா அடைக்கலம் அளிக்கக் கூடாது என ஹின்ட்ராஃப் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது அதற்கு ஹின்ட்ராஃப் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எங்கள் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சாதீய அடிப்படைவாதிகளுடன் ஹின்ட்ராஃப் மிக நெருக்கம் பேணுவதையும் நான் அன்கிருந்தபோது கவனிக்க முடிந்தது. இதே நிலையை அது தொடருமானால் ஒரு வேளை அது விரும்புவது போல இந்திய மதவாத அரசின் மறைமுக ஆதரவைப் பெறலாம். ஆனால் இந்தியாவில் உள்ள ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் ஆதரவை அது இழக்க நேரும். அது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என்பதாகவே நான் உணர்கிறேன்.
இப்படியான கூட்டம் குழப்பி அடிப்படைவாதிகளிடமிருந்து விலகி நிற்பதாகத் தோற்றம் காட்டும் நவீன இலக்கியவாதிகளைப் பொருத்த மட்டில், அவர்கள் அரசியல் ரீதியில் இத்தகைய ஆபத்தான சூழல் பற்றிக் கவலை இல்லாதவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் வளரும் இந்துத்துவம் பற்றி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அது தோன்றிய காலந்தொட்டு ஒரு வகையில் “சர்வதேசத் தன்மை”யோடுதான் விளங்கியது. வெளிநாடு வாழ் இந்தியர்களை அது குறி வைத்து இயங்கியது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் ‘திண்ணை’ போன்ற இலக்கிய அமைப்புகள் இந்திய இந்துத்துவ பாசிசத்திற்குச் சேவை செய்வதை அறிவோம். இம்மாதிரியான உணர்வை ஒரு வகையான long distance nationalism என்பார் வரலாற்றறிஞர் சஞ்சய் சுப்பிரமணியம். இவர்கள் அந்த நாடுகளில் ஓரளவு சொகுசாக வாழ்வார்கள். அவர்கள் அந்தச் சொகுசுகளை இழக்கத் தயாராக இருப்பதில்லை. இங்கிருந்து சமீப காலங்களில் போனவர்களாயின் அங்கிருந்து வர அவர்களுக்கு விருப்பம் இருக்காது. ஆனால் அந்த நாடுகளில் அவர்கள் இரண்டாம்தரக் குடி மக்களாகவே கருதப்படுவார்கள். நடத்தப்படுவார்கள். இந்நிலையில் அவர்களில் விகசிக்கும் இந்தத் ‘தொலை தூரத் தேசியம்’ இந்திய மரபை உயர்த்திப் பிடிப்பது என்கிற நிலை எடுக்கும். அரசியல் மட்டத்தில் அது ஒரு வகையில் பாசிச சக்திகளுக்கு நேரடியாகத் துணை போவதாக அமையும்.
இவர்கள் முழுக்க முழுக்க நவீன கல்வி, தொழில்நுட்பங்கள், கார்போரேட் முதலாளியம் ஆகியவற்றால் பயன்பெறுபவர்கள். ஆனால் இன்னொரு பக்கம் இவர்கள் மிகத் தீவிரமாக கருத்தியல் மட்டத்தில் நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். இந்திய இல்லக்கியம் என்பதை இந்திய அழகியல் அடிப்படையிலிருந்தே அணுக வேண்டும் இந்த நவீன ‘இசங்கள்’ எல்லாம் இதற்கு உதவாது. இவற்றை முன்வைப்பவர்கள் இலக்கியம் அறியாதவர்கள் என்றெல்லாம் பேசும் இவர்கள் இறுதியில் சொல்ல முயற்சிப்பது “எல்லாம் நம்முடைய இராமாயணம் மற்றும் மகாபாரத்த்துக்குள் உள்ளது. அவற்றைத் தாண்டி ஒன்றுமில்லை” என்பதுதான்.
இத்தகைய கருத்துக்களை முன்னெடுக்கும் இந்திய இலக்கியவாதிகள் தம் “இலக்கிய சொற்பொழிவுகளின்” ஊடாகவும் “இலக்கிய முயற்சிகளின்” ஊடாகவும் விளைவிக்கும் வெறுப்பு அரசியல் பற்றி இவர்களுக்கு, அதாவது நான் சற்று முன் குறிப்பிட்ட மலேசிய –சிங்கப்பூர் பகுதிகளில் வாழும் நவீன இலக்கியவாதிகளுக்குக் கவலை இல்லை. அவர்கள் இன்று இங்குள்ள தமிழ்ச் சமூகத்திற்குள் மேலெழுந்து வரும் இத்தகைய சாதீயப் பாசிச சக்திகளின் செயல்பாடுகளை ஒரு வகையில் ரசித்து வேடிக்கை பார்த்து நிற்பது இந்த அடிப்படையில்தான்.
இவர்கள் எல்லோருக்கும், அதாவது இந்த்க் கூட்டம் குழப்பும் தமிழ்ச் சாதீய பாசிசம் பேசுவோர், நவீன இலக்கியவாதிகள், இங்கு வந்து பணி நிமித்தம் தங்கி உள்ள தமிழர்கள், அரசியல் கட்சிகள் அமைத்து அரசில் பங்குபெறுபவர்கள் முதலான எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் யாரும் இவர்களது நாடுகளில் வாழும் தமிழர்கள் மீதான பெரும்பான்மை இன அடிப்படையிலான அரச ஒடுக்குமுறைகளை எதிர்க்கத் தயாராக இல்லை என்பதுதான் அது. ஏதோ ஒரு வகையில் இவர்கள் எல்லோருமே அரச உதவிகளையும், கொடைகளையும் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். எல்லோரையும் குறை சொல்லும் ஹின்ட்ராஃபும் கடைசியில் அரசில் பங்குபெற்று வீழ்ந்ததையும் பார்த்தோம்.
எல்லாவற்றையும் ஒப்பு நோக்கும்போது கவலைதான் நமக்கு விஞ்சுகிறது. பெரும்பான்மை இன ஒடுக்குமுறைகு எதிராக சிறுபான்மைகளின் இணைவு, குறைந்த பட்சம் இந்தியர்களின் இணைவு, சரி அதுவும் சரிப்படாத பட்சத்தில் குறைந்த பட்சம் தமிழர்களின் ஒற்றுமை என்பதைப் பற்றிக் கவலையற்றவர்களாக்வே உள்ளனர். இவர்கள் தமிழர்களுக்குள்ஒற்றுமை ஏற்படுத்தத் தயாராக இல்லை என்பதை விட அவற்றைக் கெடுக்கவே முயல்கின்றனர். தமிழர்களின் ஒற்றுமையை இப்படிச் சாதி சொல்லித் தகர்ப்பதன் மூலம் அரசுக்குச் சேவை செய்பவர்களாகவும் உள்ளனர்.
மலேசியத் தமிழர்களை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.