ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு

 திராவிட இயக்க ஆட்சியின் மூன்று அடையாளங்கள்..

அண்ணா தலைமையில் திராவிடக் கட்சிகள் பதவி ஏற்று இன்றோடு (பிப் 7) 50 ஆண்டுகள் ஆகின்றன.

  1. மொழி, இன அடிப்படையிலான மாநில வாதம், ஆனால் அது இன/மொழி வெறிகளாகவும் வெறுப்புகளாகவும் மாறாமை (regionalism without chauvinism). அல்லது இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால் எல்லோரையும் உள்ளடக்கிய தேசியம் (inclusive nationalism);
  2. அரசியல் திரட்சியில் மத அடையாளங்களைத் தவிர்த்தல். சிறுபான்மை மத அடையாளத்தினர் அந்நியமாக உணராத அணி திரளல் (secular and minority friendly)
  3. கீழ் நோக்கிய அதிகாரப் பரவல்

இவை திராவிட இயக்கங்களின் தனிச் சிறப்புகள் எனலாம். மேலே குறிப்பிட்டவற்றில் இந்த மூன்றாவது அம்சத்தைச் சற்று விளக்க வேண்டும். அதிகாரப் பரவல் இரண்டு வடிவங்களில் இருந்தன. இட ஒதுக்கீட்டை அதிகரித்தது (தமிழகத்தில் மட்டுமே 69 சதம்) மட்டுமின்றி மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள், அருந்ததியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப் பிரித்தளித்தது).

அதிகாரப் பரவலின் இன்னொரு அம்சம்: அதிகாரவர்க்கத்திடம் (bureaucracy) குவிந்துகிடந்த அதிகாரத்தை சற்றே தளர்த்தி மக்கள் பிரதிநிதிகளுக்குக் கைமாற்றியது.. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’. குடிசை வாழ் மக்களுக்கு அவர்கள் வாழ்கிற இடங்களிலேயே நிரந்தர வீடுகளை அமைத்துக் கிட்டத்தட்ட இலவசம் என்கிற அளவிற்கு அதை வினியோகித்தல். இதற்கென அமைக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’ அதிகாரவர்க்கத்திடம் கையளிக்கப்படாமல் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டு அணுகுதற்கு எளிமையாக்கப்பட்டது. முதல் தலைவராக அப்படி அமர்த்தப்பட்டவர் இராம. அரங்கண்ணல்.

இன்னொரு எடுத்துக்காட்டு: மாவட்டங்கள் தோறும் அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்க அவ்வப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சிக்காரர்களுக்குச் சலுகை முதலான புகார்கள் வந்த போதும் சாதாரண மக்கள் அணுகுதற்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும், குறைகளைக் களைந்து கொள்வதற்கும் இந்த மாற்றங்கள் வழிவகுத்தன.

 

  1. சீரழிவுக்குத் திராவிட இயக்கங்களை மட்டுமே பொறுப்பாக்க முடியுமா?

ஒரு நண்பர் Natarajan Seetharaman முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஜனநாயகப்பாடு, உருவான குடிசை மாற்று வாரியம் முதலான அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி நான் எழுதியிருந்தது குறித்து, ‘அதெல்லாம் சரி, இந்த நிறுவனங்கள் எல்லாம் எத்தனை காலம் நீடித்தன?’ என்று.

நியாயமான கேள்வி. அவை எல்லாம் நீடிக்கவில்லைதான். இன்று மிகப் பெரிய அளவில் எதிர்மறையான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனதான். அவற்றை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்தான். ஆய்வு செய்ய வேண்டும்தான்.

அப்படியான ஆய்வில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கெல்லாம் திராவிட இயக்கங்களின் சீரழிவுதான் காரணம் என்று மட்டும் நாம் அணுகிவிட இயலாது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் உருவான கட்சி தி.மு.க. இன்று சுமார் எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் உலகில் எத்தனை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக ஏற்பட்டாலும் சில பொதுப் போக்குகளும் இருக்கத்தானே செய்கின்றான. போருக்குப் பிந்திய சூழலில் liberal பார்வையுடன் கூடிய, ஓரளவு முற்போக்கு எனச் சொல்லக் கூடிய அரசுகள் உலகெங்கிலும் உருவாயின. இன்னொரு பக்கம் பெரிய அளவில் சோஷலிசப் பொருளாதார நாடுகள் உருவாயின. ஆனால் ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பின் நிலைமை மாறியது. ரீகன், தாட்சர், ஹெல்மட் கோஹ்ல் இப்படியான இறுக்கமான வலதுசாரி Neo Imperialism எனச் சொல்லத்தக்க அரசுகள் உருவாயின. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின், தொண்ணூறுகளில் உலகம் ஒரு துருவ உலகமாகியது. சோஷலிச நாடுகள் சிதைந்து அழிந்தன. அங்கெல்லாம் வலதுசாரி அரசுகள் உருவாயின. வார்சா ஒப்பந்த நாடுகள் எல்லாம் நேட்டோவில் அங்கமாயின.

ஒரு துருவ உலக அமைப்பில் முன்னெடுக்கப்பட்ட உலகமய நடவடிக்கைகளும், முற்றிலும் புதியதோர் உலகைப் படைத்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியும் ஆளுகை (governance) , மக்கள் வாழ்க்கை என எல்லாவற்றிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தின.. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வலுவாயின. பயங்கரவாதம், உலகமயம், இன்டெர்னெட் புரட்சி ஆகியவை ஒரு பக்கம்: புதிய மாற்றங்களின் விளைவாக அதிகரித்த புலப் பெயர்வு (immigration) என்பன இன்னொரு பக்கம். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், ஓய்வூதியம், நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு எல்லாம் இல்லாமலாயின. அரசுகள் சமூகப் பாதுகாப்பு என்பதைக் காட்டிலும் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கின. உலகெங்கிலும் தாராளவாதம், இடதுசாரிச் சிந்தனைகள் முதலியன பலவீனமாகி அந்த இடத்தில் ‘பாப்புலிசம்’ பெருந் தேசிய இனவாதம் முதலியன வலுவாயின. ட்ரம்ப்கள், மோடிகளின் வருகையை ஒட்டி அடுத்தடுத்து நடக்கப் போகும் மேலை நாட்டுத் தேர்தல்களில் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

திராவிட இயக்கம் எனத் தொடங்கி ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் உலகெங்கிலும் எல்லாவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. immigrants க்கு எதிரான முழக்கங்கள், இன வெறுப்பு அரசியல் ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனத் தமிழ்நாட்டிலும் கூட சீமான், மணியரசன் போன்றோர் இன்று அரசியல் செய்வதைக் காண வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளிகளை விரட்ட வேண்டும், அவர்களுக்கு ரேஷன் முதலிய வசதிகளை அளிக்கக் கூடாது என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டின் லீபென் கள் ஆக இவர்கள் துடிப்பதைப் பார்க்கலாம். .

ஆங்காங்கு பலவீனமாகிப் போயுள்ள இடதுசாரிகள்தான் இப்படியான குறுகிய இனவாதம். புலப் பெயர்வுக்கு எதிரான முழக்கங்கள் அகியவற்றை ஓரளவு எதிர்த்து நின்றனர். சமீபத்தில் பிரிட்டனின் முக்கிய இடதுசாரித் தலைவர் ஒருவர் “புலப் பெயர்வு தொடர்பான கொள்கைகளில் நாங்கள் அப்படி ஒன்றும் இறுக்கமாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியதைப் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.
ஆக எல்லா அரசியல் கட்சிகளிலும், உலகெங்கிலும் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. புதிய மாற்ரங்களின் அழுத்தங்களைத் தாங்க இயலாமல் இடதுசாரிகளும் கூட தம் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். இவற்றைச் சொல்லி திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போன வரலாற்றை எல்லாம் நியாயப்படுத்துவதல்ல என் நோக்கம். எல்லா வீழ்ச்சிகளுக்கும் அந்த இயக்கங்களை மட்டுமே குற்றம் சொல்லிவிட இயலாது என்பதுதான்.

நண்பர் நடராஜன் சீதாராமனின் கேள்விக்கு வருவோம். தி.மு.க ஆட்சியின் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக குடிசை மாற்று வாரியம் இருந்தது என நான் எந்தக் காரணங்களுக்காகக் குறிப்பிட்டேனோ அந்தக் காரணங்களை இன்று அது இழந்து நிற்பது உண்மையே. அவரவர் வாழ்ந்த இடங்களிலேயே (in situ) பாதுகாப்பான நிரந்தர வீடுகளைக் கட்டித் தருவது )என்கிற கொள்கையை இன்று குடிசை மாற்று வாரியம் கைவிட்டுவிட்டது. 30 / 40 கி.மீ தொலைவில் கண்ணகி நகர் முதலான பகுதிகளில் புதிய வீட்டுத் தொகுதிகள் கட்டப்பட்டு அவர்கள் நகர மையங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிகின்றன. கிட்டத் தட்ட இலவசம் என்கிற நிலை போய் கட்டுமானச் செலவுகள் அம் மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன. வாரியத் தலைமையில் அரசியல்வாதிகள் நீக்கப்பட்டு அந்த இடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப் படுகின்றனர்.

தந்தை ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ எனக் கூறி குடிசை மாற்று வாரியத்தை அமைத்தார். மகன் ‘சிங்காரச் சென்னை’ பற்றிப் பேசி நகர் மையங்களிலிருந்து குடிசைகள் அகற்றப்படுவதற்கு சாட்சி ஆகிறார் என்றால் அதற்கெல்லாம் “திராவிட இயக்கத்தின் சீரழிவு” என்பதை மட்டுமே காரணமாகச் சொல்லிக் கடந்து விட முடியாது. இடையில் நடந்தவற்றைப் பார்க்க வேண்டும்.

இடையில் இந்தியா நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைக்கு அடி பணிந்தது. குடிசை மாற்று வாரியம் முதலியன IMF, உலக வங்கி முதலான பன்னாட்டு நிதியங்களின் தயவில் செயல்பட வேண்டி வந்தது. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் நிதியை மட்டும் வாரி வழங்கவில்லை. அதோடு கடும் நிபந்தனைகளையும் சேர்த்துத்தான் தந்தன. குடிசை மாற்று வாரியத்தைப் பொருத்த மட்டில் அவை சொன்ன முதல் நிபந்தனை குடிசை மாற்று வாரியம் கட்டுகிற புதிய கட்டுமானங்கள் அவர்கள் வாழ்ந்த நகர் மையங்களில் இருக்கக் கூடாது. எவ்வளவு தொலைவானாலும் நகர மையங்களுக்கு வெளியேதான் அமைக்கப்பட வேண்டும். அடுத்த நிபந்தனை அவற்றுக்கான கட்டுமானத் தொகைகளை அவர்களிடமிருந்தே வசூலித்தாக வேண்டும் என்பது. வாரியத் தலைவர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது. அந்த இடங்களில் IAS அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.

இப்போது சொல்லுங்கள் இந்த அம்சத்தில் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு திராவிட இயக்கங்கள் மட்டுமா காரணம்?

 

3.தமிழகம் எதிர்கொண்ட அரசியல் மாற்றங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் இங்கு ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் / சமூக மாற்றங்களாக எவற்றைச் சொல்லலாம்?. உடனடியாக மனதில் தோன்றுகிற சிலவற்றைப் பட்டியலிடுவோம்.

1.1967 ல் காங்கிரஸ் ஆட்சி திமுகவால் வீழ்த்தப்பட்டதோடு தமிழகத்தில் காங்கிரசின் வரலாறு தேய்பிறையாகித் தொடர்ந்து தேய்ந்து எதிர்காலமற்றுச் சுருங்கியது.. ஆளும் கட்சியாவதற்கு முன்னதாக இங்கு பிரதான எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் திமுக வீழ்த்தியிருந்தது. கம்யூ கட்சி எதிர்க் கட்சி நிலையையும் இழந்து அதன் வளர்ச்சியும் தேய்பிறையாகியது. அதிமுக வின் தோற்றத்தோடு காங்கிரஸ் எதிர்க் கட்சி என்கிற நிலையையும் இழந்தது. அதற்குப் பின் இன்றுவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற இரண்டு நிலைகளுமே திராவிட இயக்கங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

2.எண்பதுகளின் இறுதியில் இங்கு புதிய சில மாற்றங்கள் ஏற்பட்டன..

(அ) உலகளாவிய சில மாற்றங்களும் இந்திய அளவிலான சில மாற்றங்களும் இங்கு தாக்கங்கைளை ஏற்படுத்தின. உலகெங்கிலும் கம்யூ கட்சிகள்,இடதுசாரிச் சித்தாந்தங்கள், சோஷலிச அரசுகள் சடசடவெனச் சரிந்து வலதுசாரி சித்தந்தங்கள் வீறுடன் மேலுக்கு வந்தன. தகவல் தொழில் நுட்பப் புரட்சி, உலகமயம், ஒரு துருவ உலகம் ஆகிய மாற்றங்களின் பின்னணியில் மக்கள் நல அரசு (welfare state) என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது., “கம்யூனிச அபாயம்” என்கிற இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக “இஸ்லாமிய பயங்கரவாதம்” முன்வைக்கப்பட்டது. ‘தேசியப் பாதுகாப்பு’ என்பது எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமாக முன்வைக்கப்பட்டது..உலகமயச் செயற்பாடுகளுக்கு இந்தியா மிக வேகமாகத் திறந்துவிடப் பட்டது.

(ஆ) காந்தி கொலைக்குப் பின் சற்றே அடங்கி, ஆனால் அமைப்பு ரீதியாகப் பலமாகிக் கொண்டிருந்த இந்துத்துவ சக்திகள், 1983 ல், மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டி தீவிரமாக வெளிப் போந்தன. அவை தோன்றிய காலத்திலிருந்து (1925) வெகுமக்கள் அணிதிரட்டலில் ஈடுபட்டதில்லை. ஆனால் இப்போது பாபர் மசூதி எனும் பெயரில் பெரிய அளவில் வடமாநிலங்களில் அணிதிரட்டல்களைச் செய்தது. தென் மாநிலங்களிலும் அதன் தாக்கம் இருந்தது. மே.வங்கம், கேரளம், தமிழகம் ஆகியவற்றில் மட்டுமே ஒப்பீடளவில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது . தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இந்துத்துவம் கால் பதிப்பது சாத்தியமே இல்லாத நிலை இருந்தபோதிலும் உலக அளவில் மேலுக்கு வந்துகொண்டிருந்த வலதுசாரி தேசியவாதமும், இந்திய அளவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்துத்துவக் கருத்தியலும் தமிழக மக்கள் மத்தியில் வேர் பாய்ச்சத் தொடங்கின. ஆனால் அவ்வாறு வேர் கொண்ட உணர்வுகளைத் தம் நேரடி அரசியலுக்கும், அமைப்பாக்கத்திற்கும் பயன்படுத்துவதில் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தைப் பொருத்த மட்டில் இன்றளவும் தோற்றுப் போயுள்ளன.

(இ) 90 களில் உலகளவில்உருவாகியிருந்த அடையாள அரசியல் என்பது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலித் அமைப்புகள் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள், பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புகள் குறிப்பாக பா.ம.க முதலியன குறிப்பிடத் தக்க சக்திகளாக உருவாயின. முஸ்லிம் கட்சிகளும் அழுத்தமாகத் தம் கோரிக்கைகளையும், அடையாளங்களையும் வற்புறுத்தவும் இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளைச் சாதித்துக் கொள்ளவும் முடிந்தது,

(ஈ) ஈழப் போராட்டத்திற்கு உருவான வெகுமக்கள் ஆதரவையும் தமிழ் உணர்வையும் மூலதனமாக்கி இங்கே சில தமிழ்த் தேசிய அமைப்புகள் இன உணர்வை இன வெறி என்கிற அளவிற்கு வளர்த்தெடுத்துப் பயன்படுத்தும் முயற்சிகள் தீவிரமாயின.

இந்த நிலையை திராவிட இயக்கங்கள் எப்படி எதிர்கொண்டன? இவற்றின் மத்தியில் திராவிட இயக்கங்களுக்கு எதிர்காலம் உண்டா?

4.திராவிட இயக்கம் அதன் மூன்று அடிப்படைகளை மறக்கக் கூடாது.

இந்தத் தொடரில் என் நோக்கம் திராவிட இயக்க வரலாறை எழுதுவதோ, திமுக / அதிமுக பிளவை ஆய்வு செய்வதோ அல்ல. இன்றைய சூழலில் திராவிட இயக்கங்களின் நிலை, உடனடி எதிர்காலம், ஆகியவற்றைப் பற்றி பேசுவது மட்டுமே. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கும் இதில் இடமில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன அவற்றுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து எழவில்லை. எழுவதற்கான வாய்ப்பும் உடனடியாக ஏதுமில்லை. தொடர்ந்து இந்திய அளவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும், உலக அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் அவர்கள் மீண்டும் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. கம்யூனிஸ்டுகளின் முதுகெலும்பாக உள்ள தொழிலாளர், விவசாய இயக்கங்களும் இன்று வலுவிழந்தும், கைநழுவியும் போய்விட்டன. உலகமயம், அடையாள அரசியல் முதலியன இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்துத்துவப் பாசிசம் இங்கு காலூன்ற முடியவில்லை. திராவிடக் கருத்தியல் அதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தவிரவும் தமிழகத்தில் இந்துத்துவத்தின் முதுகெலும்பாக உள்ள முற்படுத்தப்பட்ட சாதிகள் பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கு வலுவாக இல்லை. இங்கே பார்ப்பனர்கள் வெறும் 2 சதமே. சத்திரியர், வைசியர் வருணங்கள் இங்கு கிடையாது. இங்கு வலுவாக உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள இந்த ‘திராவிட’ என்கிற அடையாளம் அவர்களுக்கு விதித்துள்ள எல்லைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா ஆகியோராலும் கூட மீற முடியவில்லை. எம்.ஜி.ஆருக்காவது திராவிட இயக்கப் பாரம்பரியம் கொஞ்சம் இருந்தது. எதுவும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்குள்ள நெருக்கத்தின் காரணமாகவே தலைமையைக் கைப்பற்றிய ஜெயாவும் கூட அந்த எல்லையை மீற இயலவில்லை. தன்னை ஒரு “பாப்பாத்தி” என்று அடையாளப்படுத்திக் கொண்ட துடுக்குத் தனத்தை எல்லாம் கூட அவர் பின்னாளில் கைவிட வேண்டியதாயிற்று. சொந்த வாழ்விலும் அவர் பார்ப்பனர்களைக் காட்டிலும் பிற சாதியினரையே அருகாக வைத்திருந்தார். சங்கராச்சாரியிடமும், பார்ப்பனராக இருந்தபோதும் அவர் நெருக்கம் காட்டியதில்லை. முதற் கட்டத்தில் அவர் கொண்டுவர முயற்சித்த மத மாற்றத் தடைச் சட்டத்தையும், ஆடு, கோழி பலிகள் தடைச் சட்டத்தையும் கூட அவர் பின்னால் கைவிட்டார். ஈழப் பிரச்சினையிலும் அவர் பின்னாளில் மிகப் பெரிய மாற்றங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து சட்டமன்றத் தீர்மானங்களை இயற்றி மத்திய அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்தார்.

இவற்றையெல்லாம் நான் ஜெயாவிடம் ஒளிந்திருந்த முற்போக்கான அம்சங்கள் என்றோ அல்லது திருந்தி நல்லவராகி விட்டார் என்பதற்கான அடையாளங்களாகவோ சொல்லவில்லை. மாறாக திராவிட இயக்கம் என்பதற்கான இந்த எல்லைகளை இந்த அடையாளத்திற்குள்ளும், பாரம்பரியத்திற்குள்ளும் நின்று கொண்டு கடந்துவிட இயலாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் என்பதே. எம்.ஜி.ஆரையும் கூட நாம் இந்தக் கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். அவரது ஆட்சியில்தான் இந்திய அளவில் முதல் முறையாக 69 சத இட ஒதுக்கீடுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இவர்களிருவருக்கும் அவர்களின் பிறப்பு அடையாளங்கள் தவிர அவர்கள் சுமந்திருந்த பிற அடையாளங்கள் அனைத்தும் அவர்களின் காலத்தில் அத்தனை பெருமைக்குரியவை அல்லாதவை. நடிகர்களுக்கு இன்றளவு மதிப்புகள் இல்லாத காலத்தில் திரை உலகில் புகுந்தவர்கள் அவர்கள்.

திராவிடக் கருத்தியலின் இறுக்கம் திராவிட இயக்கங்களில் பலவீனப்பட்டுக் கொண்டே வந்தன என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடில்லை. அதையும் கூட அந்தக் கட்சிகளின் சீரழிவுகளாக மட்டுமே சுருக்கிப் பார்த்துவிட இயலாது. உலக அளவில் முற்போக்குக் கருத்தியல்கள் நீர்த்துக் கொண்டும், வலதுசாரிக் கருத்தியல்கள் பலம் பெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இங்கே இந்துத்துவம் அமைப்பு ரீதியாகக் காலூன்ற முடியா விட்டாலும் இந்துத்துவக் கருத்தியல் பரவிக் கொண்டுதான் உள்ளன. நான் மாணவனாக இருந்த காலத்தில் விபூதி போன்ற மத அடையாளங்களைத் தரித்துக் கொண்டு வரும் மாணவர்கள் கேலிக்குரியவர்களாகப் பார்க்கப்படுவர். இன்று அப்படியில்லாத நெற்றிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. எல்லா மத அடையாளங்களும் இன்று தம்மைத் துருத்திக் கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் காலம் இது.

சரி இனி என்ன ஆகும்? திராவிடக் கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

திராவிடக் கட்சிகளை வெளியேற்றி அவற்றின் இடத்தை ஆக்ரமிக்கக் கூடிய அளவிற்கு இன்று எந்த்ச் சக்திகளும் இல்லை. கிட்டத் தட்ட திராவிடக் கட்சிகள் தவிர பிற அத்தனை கட்சிகள், இயக்கங்கள் எல்லாமும் “திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்” என ஓலமிடுவதொன்றே இன்னும் திராவிடக் கட்சிகள் பலமாக உள்ளன என்பதற்குச் சான்றுகளாகவும் அமைகின்றன.

ஜெயா இறந்து அதிமுக பலவீனப் பட்டதை ஒட்டி எப்படியாவது குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த பா.ஜ.க இன்று மேலும்மேலும் பலவீனப்பட்டுக் கொண்டுள்ளது. மெரினாவிலும், நெடுவாசல்களிலும் மக்கள் கூடும்போதெல்லாம் ராதாகிருஷ்ணன்களும், தமிழிசைகளும் அலறித் துடிப்பதும், எச் ராஜாக்கள் மக்களால் துரத்தி அடிக்கப்படுவதும் அவர்களுக்கு இனி இங்கு எதிர்காலம் இல்லை என்பதற்குச் சாட்சிகளாக அமைகின்றன. தமிழ் என்கிற அடையாளத்தின் கீழ் திராவிட இயக்கம் கட்டமைத்த மாநில உணர்வு இன்னும் இங்கு மங்கவில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

திராவிட இயக்கம் கட்டி எழுப்பிய தமிழ் உணர்வைத் தமிழ் வெறியாக மாற்ற முனைவதில் இங்கு தமிழ்த் தேசிய இயக்கங்கள் தோற்றுக் கொண்டுள்ளதையும் பார்க்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயா மட்டுமின்று தந்தை பெரியார், கருணாநிதி உட்பட எல்லோரையும் கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் என்றெல்லாம் அரற்றித் திரிந்தவர்களை தமிழ் மக்கள் நிராகரித்து வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.

தலித் கட்சிகளைப் பொருத்த மட்டில் இன்று இங்குள்ள மூன்று முக்கிய உட்சாதிகளும் பிரிந்து கிடப்பது மட்டுமல்ல, உள் இட ஒதுக்கீடு முதலான பிரச்சினைகளில் எதிர் எதிராகவும் உள்ளன. உட்சாதி ஒற்றுமையை வளர்ப்பதிலும், பிற்படுத்தப்பட்டோரில் முத்தரையர் போன்ற ஆகக் கீழே உள்ளவர்களையும் சிறுபான்மை மக்களையும் இணைத்துக் கொள்வதில் இம்மியும் அக்கறை காட்டுவதில்லை. கன்ஷிராம் போன்றவர்கள் இந்த ஒற்றுமையைக் கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தியதன் விளைவாகத்தான் இன்றளவும் உ.பி யில் பகுஜன் சமாஜ் ஒரு வலுவான சக்தியாக உள்ளது. அந்த வாய்ப்பும் இங்கு இல்லை.

சிறுபான்மை மக்களைப் பொறுத்த வகையில் அவர்களுள் சற்றே கூடுதல் எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் இங்கே அரசியல் ரீதியாக அணி திரட்டப்படவில்லை. கிறிஸ்தவர் என்கிற அடிப்படையில் அவர்கள் ஒன்றுபடுவதைக் காட்டிலும் சக இந்துக்களைப் போல சாதிகளாக அவர்கள் பிரிந்து நிற்கும் நிலையே அதிகம். முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அவர்கள் அரசியல் ரீதியாகப் பிரக்ஞையோடு அணி திரண்டுள்ள போதிலும் அவர்களின் மக்கள்தொகை வீதம் இங்கு வெறும் ஆறு சதம் மட்டுமே. திராவிடக் கட்சிகளோடு இணைந்தே அவர்கள் இதுவரை தேர்தல் களம் கண்டுள்ளனர். இனியும் அப்படித் தொடர்வதற்கே சாத்தியங்கள் உண்டு.

ஒருவேளை ஜெயாவின் இறப்பை ஒட்டி அடுத்த தேர்தலின்போது அதிமுக பிளவுறுமானால் அந்த இடத்தில் திமுக கூட்டணிதான் வருமே ஒழிய உறுதியாக பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளோ, தமிழக லீபென்களாக முயலும் இனவெறி சக்திகளோ அந்த இடத்தைப் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை

கடைசியாக நம் முன் உள்ள லேள்வி, மெரினா, நெடுவாசல் முதலான புதிய புரட்சிகள் புதிய மாற்றை உருவாக்குமா? இந்த இயக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்தால் அவை ஒன்றும் திராவிட இயக்கங்களைக் குறி வைத்த போராட்டங்கள் அல்ல என்பது விளங்கும். இது குறித்து விரிவாகப் பேச வேண்டும். பின்னொருமுறை பேசுவோம். இப்போதைக்கு ஒன்று மட்டும். இத்தகைய போராட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமான தனித்துவம் அல்ல. 2011 முதல் அரபு நாடுகளிலும், வால்ஸ்ட்ரீட் முதலான மேலை நாடுகளிலும் நடந்த போராட்டங்களின் அதே தன்மையில் தான் இவை அமைந்தன. இந்தப் போராட்டங்க வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை என்பதில் ஐயமில்லை. திருப்பி இயக்கவல்லாத பல மாற்றங்களை அந்தந்த நாடுகளில் அவை ஏற்படுத்தியுள்ளன என்பதிலும் ஐயமில்லை. ஆனால் எந்த நாட்டிலும் இந்த இயக்கங்களே கட்சிகளாக மாறி ஏற்கனவே இருந்த கட்சிகளை இடம் பெயர்க்கவில்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

இந்த அனுபவத்தைக் கணக்கில் கொண்டு திராவிடக் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கற்றுக் கொள்வார்களா?

கற்றுக்கொள்ளாவிட்டால்..?

அப்போதுதான் திராவிடக் கட்சிகளின் ஆளுகை முடிவுறும்.

திராவிடக் கட்சிகள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் மக்கள் காணும் வெறுக்கத் தக்க அம்சங்களை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அதன் அடிப்படையான மூன்று பண்புகளையும் அது எக்காரணம் கொண்டும் நீர்த்துப் போக அவை அனுமதிக்கக் கூடாது. இடதுசாரிகள், தலித்கள், சிறுபான்மையினர்.. இவர்கள்தான் தங்களின் இயற்கைக் கூட்டணி என்பதை மறக்கக் கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *