குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்

அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து “தீண்டாமையைப் புரிந்துகொள்ளல்” என்றொரு ஆய்வை குஜராத்தில் மேற்கொண்டது. சுமார் 1600 கிராமங்களை முறைப்படி ஆய்வு செய்து அது அளித்த அறிக்கை ஏராளமான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் 2009ல் வெளி வந்தது.

இந்த அறிக்கை அளிக்கும் முடிவைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் : இன்னும் குஜராத் கிராமங்களில் 98 சதம் தலித்கள் தீண்டாமைக் கொடுமையை அநுபவிக்கின்றனர் என்பதுதான். ஆலய நுழைவு மறுக்கப்படுதல், பள்ளிகளில் தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுதல், தேநீர்க் கடைகளில் இரட்டை கிளாஸ் முறை முதலியன நடைமுறையில் உள்ளதை விரிவான ஆதாரங்களுடன் நவ்சர்ஜன் வெளியிட்டிருந்தது.

இது குறித்து உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழ்கள் விரிவாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த செய்தித் தலைப்புகள் வருமாறு:

1. “குஜராத்தில் தலித்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” – டிசம்பர் 7, 2009
2. “அதிரும் குஜராத்?” (Vibrant Gujarat) : 98 சத தலித்கள் மத்தியில் இரட்டை கிளாஸ் முறை” – டிசம்பர் 8, 2009. 3. “தலித் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் படுகிறஅவமானங்கள்” -டிச 9, 2009. டைம்ஸ் ஆப் இந்தியா அப்படி ஒன்றும் பா.ஜ.க எதிர்ப்பு நாளிதழல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தி மொழியிலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘அதிரும் குஜராத்’ தின் லட்சணம் இதுதானா என்கிற கேள்வியும் பரவலாக எழும்பியது.

ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த அறிக்கையை அப்படியே ஏற்காவிட்டாலும் ஒரு குழுவை அமைத்து மேலும் ஆய்வு செய்து இந்தக் குறைபாடுகளை ஏற்றுத் தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அப்படியான நிலை இல்லை என ஒரு முடிவைச் சொல்லுமாறு அவர் ஒரு குழுவை அமைத்தார். ‘சுற்றுச் சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மையம்’ (CEPT) எனும் நிறுவனத்தின் பேரா. ஆர்.பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழுவை நியமித்து, “சம வாய்ப்புகளில் சாதி வேறுபாட்டின் தாக்கம் : குஜராத் குறித்த ஓர் ஆய்வு” என்கிற பெயரில் ஒரு அறிக்கையை அளிக்கச் செய்தது.

இந்த ஆய்வு எத்தனை அபத்தமானது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜீவ் ஷா தனது ‘True lies’ எனும் ப்ளாக்கில் அம்பலப் படுத்தியுள்ளார்.

“குஜராத்தில் சாதி வேறுபாடு எதார்த்ததில் இல்லை. அது பார்க்கிறவர்களின் பார்வையில்தான் உள்ளது” -(caste discrimination is a matter of perceptions) என்பதுதான் இந்த அறிக்கை சுருக்கமாகச் சொல்லும் செய்தி.

1589 கிராமங்களை ஆய்வு செய்து நவ்சர்ஜன் அளித்த 300 பக்க அறிக்கையை “முறையாக அரிசீலனை செய்வதற்குப் பதிலாக. குஜராத்தில் நிலவும் கொடிய தீண்டாமையை நியாயப்படுத்தும் செயலையே” மோடியின் பார்த்தசாரதி அறிக்கை செய்துள்ளது என்கிறார் ராஜிவ் ஷா. வெறும் ஐந்து கிராமங்களுக்கு மட்டுமே சென்று, அங்கு மேற்கொள்ளும் அரசு நலத் திட்டங்களைக் கூறி தீண்டாமைக் கொடுமை எல்லாம் இங்கில்லை என அறிவித்தது இந்த அறிக்கை.

“தலித்கள் மட்டும் (கிராமத் திருவிழாக்களின்போது அவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து சோற்றை வாங்கிச் செல்லச் சொல்வதும், அவர்களைக் கடைசியாகச் சாப்பிடச் சொல்வதையும் ஏன் தீண்டாமை எனப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களுடன் சண்டை வேண்டாம் என்பதற்காக தலித் பெரியவர்களே இளைஞர்களிடம் நவராத்திரி முதலான கிராமத் திருவிழாக்களுக்குப் போக வேண்டாம் எனச் சொல்கிறபோது அவர்கள் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்வதில் அர்த்தமென்ன? அதை இளைஞர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்படியும் போகிற தலித் இளைஞர்கள் அந்தத் திருவிழாவில் பங்கேற்காதபோதும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களே” – என்கிற ரீதியில் தீண்டாமை ஒதுக்கல்களை நியாயப்படுத்தி குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவித்து, “பார்க்கிற பார்வையில்தான் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்று இதையெல்லாம் சொன்னால் அப்புறம் எல்லாம் தீண்டாமைதான்” என்கிற ரீதியில் முடித்துக் கொண்டது பார்த்தசாரதி அறிக்கை.

பார்த்தசாரதி அறிக்கை தவிர அப்போதைய சமூகநீதித் துறை அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா தலைமையில் ஒரு அரசியல் சட்டக் ககுழுவையும் அமைத்து மோடி அரசு தனக்குத் தானே க்ளீன் சிட்’டும் கொடுத்துக் கொண்டது. தங்கள் கிராமத்தில் தீண்டாமை இல்லை என தலித்களிடம் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எழுதி வாங்குமாறு அரசு அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அந்தக் காகிதங்களை விரித்துக் காட்டி, “பாருங்கள் குஜராத் அதிருது… தீண்டாமையை நாங்க ஒழிச்சிட்டோம்” எனப் புன்னகைக்கிறார் நர மோடி.

குஜராத் அரசின் இந்த அணுகல்முறையை புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர் கன்ஷியாம் ஷா கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட புராணம் இதுதான்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்ற போதிலும் குஜராத் குறித்த இந்தச் செய்திகளில் நாம் சிலவற்றைக் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அவை:

1. 98 சத தலித்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது மிக அதிகம். இங்குள்ள சில அமைப்புகள் ஏதோ திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் இந்த நிலை என்பதாகப் பேசி வருவது எத்தனை அபத்தம் என்பதற்கு இது ஒரு சான்று

2. தலித்களின் நிலை இவ்வாறு இருப்பதற்கு ஏதோ குஜராத் அரசின் செயல்பாட்டுக்.குறைவு அல்லது திறமையின்மை மட்டும் காரணமல்ல. குஜராத் அரசின், குறிப்பாக நரேந்திர மோடியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த வருணாசிரம அணுகல் முறையும் இதன் அடிப்படையாக உள்ளது என்பதற்கு ஒரு சான்று வருமாறு:

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளைத் தொகுத்து 2007ல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது குஜராத் அரசு.. நூற் தலைப்பு : ‘கர்ம் யோக்’, அதாவது கர்ம யோகம். ‘குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பொரேஷன்’ எனும் பொதுத்துறை நிறுவனம் இந்நூலின் 5000 பிரதிகளை அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டது.

அந்த நூலில் கண்டுள்ள அவரது பேச்சுக்களில் ‘சாம்பிளுக்கு’ ஒன்று :

தலையில் மலம் சுமந்து அகற்றும் சஃபாய் கர்ம்தார் (துப்புரவுத் தொழிலாளர்) குறித்து மோடி இப்படிச் சொல்கிறார்:

“அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த மாதிரித் தொழிலைச் செய்து வருவார்களா? ஏதோ ஒரு காலகட்டத்தில், அவர்களின் இந்தப் பணி (1) ஒட்டு மொத்தச் சமூகம் மற்றும் இறைவனின் மகிழ்ச்சிக்காகாகச் செய்யப்படுகிறது என்பதையும் (2) கடவுளால் அவர்களுக்கு அருளப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் (3) இந்தத் துப்புரவுப் பணி ஒரு ஆன்மீக அனுபவமாகக் காலம் காலமாகத் தொடரப்பட வேண்டும் என்பதையும் ஒரு புத்தொளி அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் முன்னோர்கள் வேறு வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் இந்தப் பணியைத் தேர்வு செய்தார்கள் என நம்ப இயலவில்லை” (கர்ம்யோக், பக். 48,49).

தமிழகம் உட்பட நாடெங்கிலும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் சுதாரித்துக் கொண்ட நரேந்திர மோட, அந்த 5000 நூற்பிரதிகளையும் வெளியில் விடாமல் அமுக்கிக் கொண்டார்.

ஆனால் மோடி தன் இந்தக் கொடூரமான ஆபாசக் கருத்துக்களை எந்நாளும் அமுக்கிக் கொண்டதில்லை என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் 9000 சஃபாய் கரம்சாரிகள் கூடியிருந்த ஒரு மாநாட்டில் பேசும்போது வெளிப்பட்டது. “மலம் அள்ளும் இந்தத் தொழில் பூசை செய்யும் தொழிலுக்குச் சமம்” என அம்மாநாட்டில் நர மோடி பேசினார்.

“பூஜை புனஸ்காரங்களுக்கு முன் கோவில் குருக்கள்கள் ஆலயத்தைத் தூய்மை செய்கின்றனர். நீங்களும் ஆலயப் பூசாரிப் பார்ப்பனர்களும் ஒரே தொழிலைத்தான் செய்கின்றீர்கள்..”

எப்படி இருக்கிறது கதை?

குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் “நீங்கள் இந்து ராஷ்டிரத்தின் (இந்தப்) பகுதிக்குள் நுழைகிறீர்கள்” என ஆயிரக் கணக்கில் சட்ட விரோதமான பலகைகளை நட்டுள்ளனர். இந்த இந்து ராஷ்டிரத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அன்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அண்னல் சொன்னார்:

“இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (greatest menace) அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் (Hinduism is a danger to independence, equality and brotherhood) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்” (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை, பக்.358).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *