டாக்டர் ராமதாசின் இன அரசியலும் சாதி அரசியலும்

மருத்துவர் இராமதாஸ் ‘பை பாஸ்’ அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேறி வந்துவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். மருத்துவர் மீது எனக்கு விமர்சனங்களைப் போலவே மிக்க மரியாதையும் உண்டு. அவரது ஆரம்ப கால முழக்கங்களான, “ஒரு தலித்தை முதலமைச்சராக்க வேண்டும்”, “எனது குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தால் என்னைச் சாட்டையால் அடியுங்கள்” என்பவற்றை நாங்கள் வரவேற்றோம் இதன் பொருள் அவரை முழுமையாக நம்பினோம் என்பதல்ல. ஆனாலும் அப்படி ஒருவர் சொல்லிக் களத்திற்கு வரும்போது அதை அவநம்பிக்கையோடு புறக்கணிப்பது நல்ல அரசியலாகாது. நாங்கள் மட்டுமல்ல தலித் அரசியல் இயக்கங்களும் அப்படித்தான் அவரை எதிர்கொண்டன.

நம்பிக்கையூட்டுமாறு சில வேலைகளை அவர் செய்யவும் செய்தார். மத்திய அமைச்சரவையில் அமைச்சராக வாய்ப்பு ஏற்பட்டபோது தனது கட்சியில் இருந்த இரு தலித் தலைவர்களை அமைச்சர்களாக்கினார். குடந்தைக்கு அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் பொது வீதி வழியே தலித்கள் பிணம் தூக்கிச் செல்ல இயலாத நிலையை நாங்கள் அவர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, எங்களிடம் வாக்களித்தபடி அவரே வந்து தலித் பிணம் ஒன்றைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அந்த ஊர் வன்னியர்கள் அவரது கட்சியிலிருந்து கூட்டமாக விலகினர்.

தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது (1993), அவர் விடுதலை செய்யப்படாவிட்டால் “வட தமிழ் நாட்டில் பேருந்துகள் ஓடாது” என அறிக்கை விட்டார். பா.ம.க நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுப் பேரணியைத் தொடங்கி வைத்தது பசுபதி பாண்டியன். அவர் கொல்லப்பட்டபோதும் அதைக் கண்டித்து பா.ம.க தரப்பில் அரிக்கை வெளியிடப்பட்டது.

என்ன இருந்தாலும் வன்ன்னிய அடையாளத்தை அவர் விடவுமில்லை. அதுவும் அவரை விடவில்லை, வன்னியர் சங்கப் போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்தவர் அவர். அடையாள அரசியல் என்பது எப்படி இரு பக்கமும் கூரான கத்தியாகச் செயலடும் என்பது குறித்து நான் தொடர்ந்து எழுதி வருகிறேன், அடையாள அரசியல் இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் சேர்க்கும் அதே நேரத்தில் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் வெளிப்படும். இது எல்லா அடையாள அரசியலுக்கும் நேர்வதுதான். அது இராமதாசுக்கும் நேர்ந்தது, தனது தொகுதி வன்னியர்கள் மட்டுந்தான் என்பதையும் அதற்கு மேல் இந்த அடையாளத்துடன் செயல்பட்டு வனியர் அல்லாத தமிழர்களின் வாக்குகளைச் சேகரித்துவிட இயலாது என்பதை விரைவில் அவர் புரிந்து கொண்டார்.

வன்னியர்களை முழுமையாகத் திரட்டினால் அதுவே போதும் என்கிற நிலை வந்தவுடன் அவர் அரசியல் முன்னுரிமை வன்னியர்களை அதிகாரப்படுத்துவது என்பதாக அமைந்தது. இந்த அதிகாரப்படுத்தல் என்பது வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிராக முடிந்த வரலாற்றை பெரிதாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆனால் அதே நேரத்தில் பா.ம.க வையும் வன்னியர் சங்கத்தையும் அவர் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியமிருந்தது. பா.ம.க அரசியல் கட்சி. நமது தேர்தல் முறையில் கூட்டணியில்லாமல் இது போன்ற கட்சிகள் வெல்வது சாத்தியமில்லை. அதோடு அரசியல் கட்சி என்கிறபோது அது கொஞ்சம் “விரிந்த” அரசியலைப் பேசியாக வேண்டும். இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தமிழ்த் தேசியம். இராமதாஸ் அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

மருத்துவருக்குத் தமிழுணர்வு இல்லை என நான் சொல்லவரவில்லை. அவரது தொடக்க கால அரசியலைப் பார்த்தீர்களானால் அவர் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகள் மட்டுமல்லாமல் கூடவே அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ் ஆகியோரையும் முன்னிலைப்படுத்தத் தவறியதில்லை. ஆனாலும் விரிந்த அரசியல் என வந்தபோது அவர் தமிழ்த் தேசிய அரசியலையே தனது சாதி வாத அரசியலின் முகமூடியாகத் தேர்வு செய்தார். தமிழ்த் தேசியர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஈழப் போராட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் வரும்போது இராமதாசுடன் கட்டித் தழுவிக் களத்தில் இறங்குவதும், சாதிப் பிரச்சினைகள் மேலுக்கு வரும்போது, தமிழகத்தில் ஒன்றுமே நடவாதது போல, சாய்வு நாற்காலிகளைத் தூசு தட்டிச் சாய்ந்து ஓய்வு கொள்வதும் நமது தமிழ்த் தேசியர்களின் வாடிக்கை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இந்தக் காலங்களில் இராமதாசின் அட்டகாசங்களை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள், மறுபடி ஈழப் பிரச்சினை ஏற்றம் கண்டால் இராமதாஸ் படு தீவிரமாக அது குறித்துப் பேசுவார். தனக்குப் பொதுவான தமிழர் நலனில் அக்கரை உள்ளது எனக் காட்டிக் கொள்வார். தமிழ்த் தேசியர்களும் இவரது சற்றைக்கு முந்திய சாதிவாதங்களைக் கண்டு கொள்ளாமல் அணைத்துக் கொள்வார்கள்.

மரக்காணம் மற்றும் இளவரசன் மரணத்தை ஒட்டிய போராட்டங்களின்போது நான் ஒன்றைச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். பாருங்கள், இபோது இத்தனை சாதி ஆதிக்க வெறியுடன் பேசிக் கொண்டு மட்டுமல்ல மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருப்பவர், சற்று ஓய்வுக்குப் பின் களத்திற்கு வருவார்; வரும்போது தமிழ்த் தேசிய முகமூடியைத் தீவிரமாகத் தரித்துக் கொள்வார் என்று எழுதியிருந்தேன்.

இப்போது அது உறுதியாகியுள்ளதைக் கவனியுங்கள். சில சமீபத்திய இராமதாஸின் பேச்சுக்கள் கீழே:

“ஈழப்போரை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் – ஆக,8

“ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் காளஹஸ்தி, சத்தியவேடு,சித்தூர் ஆகிய வட்டங்களை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்”, ஆக 10

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்” -அறிக்கை, ஆக 23
“மீனவர்கள் மீண்டும் கைது: இலங்கையை பிரதமர் எச்சரிக்க வேண்டும்” – அறிக்கை, ஆக,27

இது தவிர காவிரிக் கண்காணிப்புக் குழு அமைப்பது குறித்தும் அவர் பேசி இருந்தது நினைவில் உள்ளது. இது தவிர சமீபத்தில் அவர் பேசிய வேறு சில ஒட்டுமொத்தத் தமிழர் பிரச்சினைகள்:

“தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தினத்தந்தி, ஆக 31

“மத்திய மாநில அரசு மோதல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்” – தினத்தந்தி, ஆக 31

“உண்ணா விரதம் இருக்கக்கூட (நடிகர்) விஜய்க்கு உரிமை இல்லையா?”- அறிக்கை, ஆக 17
“மருத்துவ மாணவர்களை புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து சேர்க்க வேண்டும்” – அறிக்கை, ஆக 19

இப்படியான “பொதுப் பிரச்சினைகளை” முழக்கிக் கொண்டுள்ளபோதே அவர் தன்பிரச்சினையை எக்காரனம் கொண்டும் விட்டுவிடமாட்டார்.

“தமிழகத்தில் 144-வது சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” (தினமணி, ஆக 28) என்ற அவரது அறிக்கையைச் சமீபத்தில் பார்த்திருப்பீர்கள். ஆதாவது தருமபுரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக 144 தடை உத்தரவு இருப்பதைக் கண்டித்துதான் இந்தப் பேச்சு.

தலித் அல்லாத சாதி மாநாடுகளை நடத்தி தனது சாதிவாத அரசியலை அவர் உச்சபட்சமாக நடத்திக்கொண்டிருந்தபோது உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு கீழே முழுமையாக:

“நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும். வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை வன்னியர்களுக்காக குரல் கொடுப்பவர் ராமதாஸ் மட்டுமே. மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.

நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கூறுகிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்தி செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நல்ல அறிவுரை சொல்லுங்கள்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப்போடுங்கள். அதிமுக, திமுகவில் உள்ள வன்னியர்களுடன் பேசுங்கள். ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும்.விழுப்புரம் தொகுதியில் வரும் எம்.பி., தேர்தலில் நாம் ஒற்றுமையாக வாக்களித்தால் வெற்றி பெறலாம். 2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அப்படியே வெற்றி பெறுவோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள். சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்றார் ராமதாஸ்.” – டிச 7, 2012

இந்தப் பேச்சு அவரது அரசியலைத் தெளிவாக்கிவிடுகிறது. அவர் தனது அரசியல் முரணை வன்னியர் எதிர் தலித் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை” என அவர் சொல்லும்போது ஒட்டு மொத்தத் தமிழ் அடையாளத்திலிருந்தும் வன்னியர்களைப் பிரித்து நிறுத்துகிறார். இந்தப் பேச்சைக் கூர்ந்து கவனித்தால் அவரது அரசியல், “வன்னியர் ஒட்டு அன்னியர்க்கில்லை” என்கிற அளவில் சுருங்கி விடுவது விளங்கி விடுகிறது.

ஆக இராமதாசின் அரசியல் அப்பட்டமாக இனவாத முகமூடி தரித்த சாதிவாத அரசியல்தான் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று தேவை?

சமீபத்தில் தருமபுரி சென்றிருந்தேன். அங்கே இரு சமூகத்தினருக்கிடையேயும் கெட்டுக் கிடக்கும் சமூக உறவுகள் வேதனையை அளித்தது. தலித்களுக்கும் வன்னியர்களுக்கும் இடையே முற்றிலும் பேச்சு வார்த்தைகள் நின்றுபோன ஒரு பகைச் சூழல் அங்கு நிலவுகிறது. ஏற்கனவே நெருக்கமாகப்ப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் கூட இப்போது பேச்சுவார்த்தைகள். இல்லாமல் உள்ளனர் அப்படிப் பேச நேர்ந்தால் கூட அக்கம்பக்கம் பார்த்து இரகசியமாகத்தான் பேச வேண்டியுள்ளது. பேருந்தைப் பிடிக்கச் செல்லும் வழியிலும் கூட ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்வதில்லை. பெரிய அளவில் தலித்கள் வன்னியர்களை நம்பி வாழக்கூடிய நிலை பிரச்சினைக்கு முன் இல்லை என்றபோதிலும், ஒரு சில தலித்கள் விவசாய வேலைகள், ‘பெயின்டிங்’ போன்ற சிறுசிறு வேலைகளுக்கு வன்னியர்களை நம்பி இருந்துள்ளனர். அவர்களுக்கு இப்போது யாரும் வேலை கொடுப்பதில்லை.

சொந்த ஊரில் தலித்கள் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலவில்லை. பொது ரேஷன் வினியோகமும் நின்றுவிட்டது. தலித் மக்களுக்கு அவர்களின் கிராமத்தில் கொண்டு வந்து ரேஷன் வினியோகம் நடக்கிறது. அடையாள அரசியல் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. வன்னியர்கள் ஓட்டும் ஆட்டோகளில் வன்னியர் சங்க அக்கினிச் சட்டி அடையாளங்கள் பெரிதாய்க் காட்சியளிக்கின்றன,

இந்த நிலையில் இராமதாஸ் பேசுகிற ஒட்டு மொத்தத் தமிழர் அர்சியலுக்கு என்ன பொருள். அவர் யாரை ஏமாற்றப்பார்க்கிறார்? வன்னியர்களையா? மற்றவர்களையா? நிச்சயம் வன்னியர்களாக இருக்க இயலாது.

சாதிகளாகப் பிளவுண்ட இந்நாடு தன்னைத் தேசம் என அழைத்துக் கொள்ள அருகதை இல்லை என அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

மருத்துவர் தன்னை இப்போது “சமூகப் பொறியாளர்” எனச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் எப்போதுமே சாதிவாதத்தையும் இனவாதத்தையும் இணைக்கும் “வெல்டர்” ஆகத்தான் இருந்துள்ளார். ஆனால் இது ரொம்பப் பலவீனமான வெல்டிங். இந்த வெல்டிங் மூலம் கட்டப்பட்ட கப்பலில் ஏறுபவர்கள் நிச்சயம் கரை சேர மாட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *