தாஜ்மகால் எப்போது சார்?

 (‘நேற்று பாபர் மசூதி, இன்று தாஜ்மகாலா?’ எனும் தலைப்பில் நவம்பர் 2017 ‘மக்கள் களம்’ இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

TAJ+photo+(high+resolution)

“காந்தியைக் கொன்னது சரிம்பான் ஒருத்தன்; நாங்க கொல்லலைம்பான் இன்னொருத்தன்; கொன்னா என்னாம்பன் மூணாவது ஆள்”

-இந்துத்துவவாதிகள் பற்றி இப்படியொரு சொலவடை உண்டு. இது வெறும் நகைச்சுவை அல்ல, நடந்து கொண்டிருப்பதுதான். இப்போது இதற்கும் ஒருபடி மேலே போய் ஒரே ஆளே தாஜ்மகாலை முதல்ல உடைக்கணும்பான். அப்புறம் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு அய்யோ அதை உடைக்கக் கூடாதுன்னு சொல்லிக் கண் சிமிட்டுவான்.

தாஜ்மகால் விவகாரத்தில் இப்போது அதுதான் நடந்து கொண்டுள்ளது. தாஜ்மகால் குறித்து அவர்களின் நிலைபாடு என்ன என்பது யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு மர்மம். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஜூன் 16 அன்று, “வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது தாஜ்மகால் பொம்மைகளைப் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும். அதில் இந்தியத் தன்மை இல்லை” என்றார். அப்புறம் அவர்களது ஆட்சியின் ஆறாம் மாத நினைவு நாளுக்காக சுற்றுலாத்துறை வெளியிட்ட சிறு நூலில் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் நீக்கப்பட்டது. ஆனால் அதே குறுநூலில் யோகி தலைவராக உள்ள கோரக்பூர் கோவிலுக்கெல்லாம் பல பக்கங்களில் படங்களுடம் அறிமுகம் இருந்தது. உலகின் ஏழாம் அதிசயம் என உலகமே கொண்டாடும் அந்த வெண்பளிங்குக் காதற் சின்னத்திற்கு மட்டும் இடமில்லாமல் போய்விட்டது. இது ஒரு பிரச்சினையானவுடன் தாஜ் “இந்தியத் தன்மையில் இல்லை என்பதற்காகவெல்லாம் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியெல்லாம் உள் நோக்கத்துடன் செய்யவில்லை, அதுவும் இனி சேர்க்கப்படும்” என சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுணா மூலம் பதிலளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மிகப் பெரிய விளம்பரங்களுடன் யோகியே சென்ற மாத இறுதியில் தாஜ்மகாலுக்குப் போனார். சுற்றிப் பார்த்துவிட்டு, “ஆகா, இது இந்தியாவின் மாணிக்கம் (gem)” என்றார். “இதைக் காப்பாற்றுவோம் என்றார். “சுற்றுலா மூலம் தாஜ்மகால் அளிக்கும் வேலை வாய்ப்பு, வருமானம் ஆகியவற்றை எப்படி விட முடியும்” என்றார்.

இப்படி அவர் சொல்லிக் கொண்டுள்ளபோதே மாநில பா.ஜ.க வின் ச.ம.உ சங்கீத் சோம், “இது துரோகிகளால் கட்டப்பட்டது. இந்தியப் பண்பாட்டின் களங்கம்” என்று இன்னொரு பக்கம் முழங்கினார். G.V.L நரசிம்மா ராவ் என்கிற அவர்களின் இன்னொரு உள்ளூர்த் தலைவர், “அது காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடு” என்றார்.

“அது அவர்களின் சொந்தக் கருத்து” என வழக்கம்போல அரசு சொல்லி நழுவிக் கொண்டது. இதற்கிடையில் வன்முறைகளுக்குப் பேர் பெற்ற பஜ்ரங் தள் அமைப்பை உருவாக்கியவரும், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளியுமான வினய் கத்தியார், “தாஜ்மகால் என்பது ‘தேஜோ மகாலயா’ என்கிற ஒரு சிவன் கோவில். ஜெய்பூர் மகாராஜாவிடமிருந்து ஷாஜகான் அதை வாங்கி இடித்துக் கட்டியதுதான் இது” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இன்னொரு பக்கம் இரண்டாண்டுகளுக்கு முன் ஹரிஷங்கர் ஜெயின் என்கிற ஒரு ஆர்.எஸ்,எஸ் வக்கீலுடன் இணைந்து மொத்தம் ஆறு வக்கீல்கள், அக்ரேஷ்வர் மகாதேவ் ஞானதீஷ்வர் சார்பாக வழக்கொன்றைத் தொடுத்தனர். இந்துக்களின் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாஜ்மகாலை மீட்டுத் தருவது, உள்ளே சென்று வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளிப்பது முதலானவை வழக்கில் முன்வைக்கப்பட்ட வேண்டுதல்கள். சரி யார் அந்த அக்ரேஷ்வர் மகாதேவ் ஞானதீஷ்வர் என்கிறீர்களா? அவர்தான் அந்த இடித்துக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிவன் கோவிலின் மூலவர். பாலராமர் பெயரில் பாபர் மசூதிக்கு உரிமை கோரி வழக்குப் போட்டவர்கள் அல்லவா அவர்கள்.

இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? அதுவும் வழக்கம்போலத்தான். பி.என்.ஓக் என்கிற வரலாறு அறிந்த யாருமே கேள்விப்படாத ஒரு “வரலாற்றாசிரியர்”.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா.ஜ.க அரசின் தொல்லியல் துறை சார்பாக அளிக்கப்பட்ட எதிர் மனுவில், “தாஜ் ஒரு கல்லறை. இந்துக் கோவில் எதுவும் இதற்கென அழிக்கப்பட்டதில்லை” எனப் பதிலளிக்கப்பட்டது. நகைச்சுவையானவர்கள். வழக்குத் தொடுப்பவர்களும் அவர்களே. எதிர் வழக்காடுபவர்களும் அவர்களே. ஒரே தரப்பினர் அவர்களுக்குள் நடத்திக் கொள்ளும் இந்த விளையாட்டுச் சண்டையின் கொடு விளைவுகள் யார் தலையில் விடியும் எனச் சொல்லத் தேவையில்லை.

சரி. இதன் உண்மை என்ன? ராஜா ஜெய்சிங் என்பவரிடமிருந்து தரிசாக இருந்த நிலத்தை உரிய ஈடு கொடுத்து வாங்கிக் கட்டப்பட்டதுதான் தாஜ். தினசரி கொடுக்கப்பட்ட கூலிகள், சலவைக் கல் வாங்கச் செலவிடப்பட்ட தொகை எல்லாவற்றிற்கும் ஷாஜகான் உரிய கணக்கு வைத்துள்ளார். அவரது ‘பாஷாநமா’ இன்றும் உள்ளது. அக்காலத்தில் இங்கு வந்த ஐரோப்பியப் பயணிகளான டாவர்னியர், பீட்டர் முண்டி ஆகியோரும் ஷாஜகான் தனக்கு மிகவும் பிடித்தமான மனைவியான மும்தாஜ் மீது எத்தனை அன்பு கொண்டிருந்தார் எத்தனை ஈடுபாட்டுடன் இந்தக் காதற் சின்னத்தைக் கட்டி முடித்தார் என்பதை எல்லாம் பதிவு செய்துள்ளனர்.

தாஜ் உலக அதிசயங்களில் ஒன்று என உலக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்று. உலக அளவில் உள்ள தொல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. 2,80,000 லிகோ சலவைக் கற்களைக் கொண்டு சென்ற ஆண்டு துபாயில் இதன் replica ஒன்று கட்டப்பட்டது. 2007ல் வாயேஜர் விண்கலம் ஏவப்பட்டபோது அதனுள் வைத்து அனுப்பத் தேர்வு செய்யப்பட்ட 115 உலக அற்புதங்களில் தாஜ்மகாலின் அழகிய வடிவும் ஒன்று. தப்பித் தவறி இந்தப் பிரபஞ்சத்தில் எங்கேனும் வேற்றுயிர்கள் வசிக்கின்றன எனில் பாருங்கள் எங்களின் அழகுணர்வை எனப் பீற்றிக் கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட நம் பெருமிதங்களில் ஒன்று தாஜ்..

சீனப் பெருஞ்சுவரை இடித்துத் தள்ள  அங்குள்ள கம்யூனிஸ்டுகள் முயல்வார்களா? டாவின்சியின் மோனோலிசாவை நெருப்பில் பொசுக்க ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு மனம் வருமா? சுதந்திர தேவி சிலையை ஏதோ காரணம் சொல்லி அமெரிக்கர்கள் வீழ்த்துவார்களா?

தாஜ்மகாலையும் விடப் பெரிய அதிசயம் ஒன்று இருக்குமானால் அது அந்த வெண்ணிறக் கனவை யாரும் வெறுக்க முடியும் என்பதுதான்.

தாஜ்மகாலோ தஞ்சைப் பெரிய கோவிலோ அவை என்ன ஷாஜகான் அல்லது ராஜராஜன் என்கிற மன்னர்களின் சாதனையா? அவை ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடுகள். அவை அழகுணர்வின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் மனப்பாங்கு எல்லாவற்றிற்கும் சாட்சியாக நிற்பவை. அவற்றை மன்னர்களோ கட்டினார்கள்? அவ்வக் கால மக்களின் உழைப்பின், கலை உணர்வின் வெளிப்பாடுகள் அவை. பாமியானில் புத்த சிற்பங்களைத் தகர்த்த தாலிபான்களும், பாபர் மசூதியைத் தகர்த்துவிட்டு  தாஜ்மகாலைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கும் நீங்களும் மனித குலத்தின் விரோதிகள்.

இந்துத்துவத்தின் மிகப் பெரிய மனச்சிக்கல் (psychological complex) வரலாறு குறித்த அதன் நாணம்தான். மத்திய கால வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட கால வரலாற்றையும் அவர்களால் துடைத்தெறிய முடியவில்லை. அவர்களிடம் அதானிகள் இருக்கிறார்கள், அம்பானிகள் இருக்கிறார்கள். காசு இருக்கிறது. கல்புர்கிகளையும் கௌரிகளையும் கொன்று குவிக்க கொலைகாரப் படைகள் உள்ளன. அவர்களிடம் இல்லாதது அறிவு மூலதனம்தான் (intellectual capital). இப்படியான நடவடிக்கைகளைத் தொடரும் வரை அவர்களிடம் இது எந்நாளும் குவியப் போவதும் இல்லை. அவர்களுக்கு எஞ்சுவது பி.என்.ஓக் போன்றோர் உமிழ்ந்துள்ள வரலாற்றுக் குப்பைகள்தான்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வலிமையும் பெருமையும் அதன் பன்மைத்தன்மைதான் என்பதை உணராதவரை இதைத் தாண்டி நீங்கள் மேலெழப் போவதில்லை.

கடைசியாக இரண்டு கேள்விகள்:

  1. தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றால் டில்லி செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது. இனி ஆக 15 களில் அங்கு நின்று கொடியேற்றமாட்டீர்களா?
  2. வெளிநாட்டு விருந்தினர்களுக்குத் தாஜ்மகால் பொம்மைகளுக்குப் பதிலாக ‘பகவத் கீதை’ நூற்பிரதிகளைப் பரிசளிப்பதைச் சாதனையாகச் சொல்பவர்களே, புத்தனின் தம்மபதம், கபீர் வாணி, குரு கிரந்த் சாகிப், பசவண்ணர், நாராயண குரு, சித்தர் பாடல்கள், அகிலத் திரட்டு, சுஃபி ஞானியரின் பொதுமைச் சிந்தனைகள், அம்பேத்கரின் அரிய நூல்கள் இவற்றைப் பரிசளிப்பதுதானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *