திருநங்கையரின் பாடுகள்

திருநங்கையருக்கு இன்று அரசு ஏற்பும், சமூகத்தில் ஒரு மரியாதையும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூவாகம் ‘அரவான் களபலி’ விழாவிற்கு நேரடியாகச் சென்று ஒரு அற்புதமான கட்டுரையை இனிய நண்பர் அருணன் ‘நிறப்பிரிகை’க்கு எழுதித் தந்தார். அநேகமாக சிற்றிதழ் ஒன்று திருநங்கையர் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிடுவது அதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ‘நிறப்பிரிகை’ சாதித்த பல முதற் காரியங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் திருநங்கையருக்கு ஏற்பட்டுள்ள சமூக ஏற்பு இன்னும் மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அவர்களுக்குள்ள பிரச்சினைகள் ஏராளம். இன்னும் அவை சரியாக எதிர்கொள்ளப்படவும் விவாதிக்கப் படவும் இல்லை எனத்தான் நினைக்கிறேன்.

#####
வழக்குரைஞர் மதுரை ரஜினி அவர்கள் ஒரு வாழ்நாளை பல்வேறு விளிம்பு நிலையினர், சிறுபான்மையினர், தலித்கள் குறிப்பாக ஆக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் ஆகியோர் மத்தியில்அர்ப்பணித்துச் செயல்ட்டு வருகிறார். தன்னலம் கருதாது உடல் உழைப்பை மட்டுமின்றி நிதி ஆதாரங்களையும் செலவிட்டு அவர் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியன. இதை மனதாரச் சொல்கிறேன்.

அவர் நெருக்கமாக உறவாடும் விளிம்பு நிலைப் பிரிவினரில் திருநங்கையர் முக்கியமானவர்கள். இரண்டாண்டுகள் முன் திருநங்கையர் குறித்து மதுரையில் அவர் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிற்கு அவ்வளவு திருநங்கையர் திரண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் ரஜினி அன்பிற்குரிய “அக்கா”.

ரஜினி திருநங்கையருடனான தனது அனுபவங்கள் குறித்துச் சொல்பவற்றில் பல நமக்குக் கண்ணீர் வரவழைக்கக் கூடியவை. இப்படியுமா என நம்மை வியக்க வைப்பவை.

ஒரு திருநங்கை மதுரையில் ஓரளவு வசதிமிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் திருநங்கையாகத் தன்னை அறிவித்துக் கொண்டபின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். அவளது பெற்றோருக்கும் அண்ணன்மார்களுக்கும், குறிப்பாக அவளது அண்ணியருக்கும் அவள் ஒரு அவமானம்.

ஒருநாள் அந்தத் திருநங்கை அவசரமாக ரஜினியைத் தேடி வந்துள்ளாள். கண்கள் கலங்க அவள், “அக்கா, அம்மா சாகக் கிடக்கிறாங்களாம். சேதி வந்திருக்கு. சாகுற முன்னாடி நான் ஒரே ஒரு தடவை பார்க்கணும். அவங்க என்னை விட மாட்டாங்க..நீங்கதான் அக்கா ஏதாவது செய்யணும்….”

ரஜினி அந்த வீட்டுப் பஞ்சாயத்தில் பலமுறை ஈடுபட்டவர். தயக்கத்தோடு, “அவங்க எங்கடி உன்னை விடப் போறாங்க..” எனச் சொன்ன போதும் அந்தத் திருநங்கையின் நிலையைக் கண்டு உடனடியாகத் தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டுஅவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தூரத்தில் இவர்களைப் பார்த்த உடனேயே அந்தத் திருநங்கையின் தந்தை வெளியே ஓடி வந்து, “வக்கீலம்மா, ஒங்களுக்குப் பலதடவை சொல்லிட்டேன். அவனை அழைச்சிட்டு வந்து எங்க மானத்தை வாங்காதீங்கன்னு. அவனை முதல்ல இங்கேருந்து அழைச்சிட்டுப் போங்க. அவன் அண்ணங்காரங்க யாராவது கண்ணுல பட்ட கொன்னுடுவானுங்க..” என சத்தம் போட்டுள்ளார். ரஜினி பொறுமையாக அவரிடம், இப்படி சாகக் கிடக்கிற நேரத்துல எல்லாம் பேசாதீங்க, ஒரே ஒரு தடவை பாத்துட்டுப் போகட்டும் என விளக்கியுள்ளார். அவர் பிடிவாதமாக மறுக்க, பின் சற்றுக் கறாராக ரஜினி அவரிடம் இது அந்தத் திருநங்கையின் உரிமை நீங்க தடுக்கமுடியாது எனச் சொல்லியுள்ளார்.

“ஏம்மா இப்பிடி என் உயிரை வாங்குறீங்க. சரி, அவனை இங்கேயே விட்டுட்டு போயி அவன் அம்மாகிட்ட கேளுங்க. அவ சரின்னா அழைச்சிட்டுப் போங்க..” என அந்தப் பெரியவர் கூறியுள்ளார்.

உள்ளே அந்த அம்மை மரணப் படுக்கையில் இருந்துள்ளார். ரஜினி அருகே சென்றவுடன் உற்று நோக்கிவிட்டுக் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுள்ளார். மரணப் படுக்கையிலும் ரஜினி விளக்கு முன்னே அவர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட்டார். “வேணாம், வேணாம்..” எனச் சைகை காட்டியுள்ளார். திருநங்கையின் அண்ணிமார்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவரது கட்டிலில் அமர்ந்து மெதுவாக அவரிடமும் அண்ணியரிடமும் பேசி அனுமதி பெற்றுப் பின் வெளியே சென்று அந்தத் திருநங்கையை அழைத்து வந்துள்ளார்.

தாயும் மகளும் சந்தித்த அந்தக் கணம்.. பெரும் ஓலமிட்டுத் தாயின் மேல் விழுந்து அந்தத் திரு நங்கை அழுது புலம்பிய அந்தக் காட்சி… தாயும் மகளும் தழுவிக் கிடந்த அந்தக் கோலம்…

நேற்று முன்தினம் அதை விவரித்தபோதும் ரஜினியின் கண்கள் கலங்கின.
#####

அதே திருநங்கையுடன் ரஜினிக்கு இன்னொரு அனுபவம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அவளுக்குப் பால் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இப்போது ரஜினியிடம் அவள் ஒரு புகார் செய்துள்ளாள். தனக்கு சரியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை எனவும் இழப்பீடு கோரி வழக்குத் தொடர வேண்டும் எனவும் கேட்டுள்ளாள்.

இது குறித்த technical விவரங்கள் தனக்குத் தெரியவில்லை எனவும், முதலில் நிர்வாகத்திடம் பேசிப் பார்ப்போம் எனவும் ரஜினி கூறியபோது, தனக்கு இழப்பீடு தராவிட்டாலும் பரவாயில்லை, பதிலாக தனக்கு ஒரு செயற்கை சிலிகான் மார்பு பொருத்தித் தந்தால் போதும் எனவும் கூறியுள்ளாள். தன்னை ஒருவன் திருமணம் செய்து கொள்வதாகச் சம்மதித்துள்ளான் எனவும், அதற்கு முன் இந்த மார்பு பொருத்தும் சிகிச்சையைச் செய்ய வேண்டும் எனவும் அந்தத் திருநங்கை கூறியுள்ளாள்.

ரஜினியை மதுரையிலுள்ள அனைவருக்கும் தெரியும். தன்னலம் கருதாது நூறு சதம் நேர்மையாக செயல்படுபவர் எனவும் அவர்மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு.

முதலில் அந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைப் போய்ப் பார்த்துள்ளனர்.

அந்தத் திருநங்கையைப் பார்த்தவுடனேயே அந்த டாக்டர் டென்ஷன் ஆகியுள்ளார். “டேய்.. (திருநங்கையின் பூர்வப் பெயரைச் சொல்லி) மறுபடியும் வந்துட்டியாடா? ஒன்ன இங்க வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கன்ல.. மேடம், நீங்க எல்லாம் ஏன் மேடம் இவனைக் கூட்டிட்டு வர்றீங்க. இவன் பொய் சொல்றான் மேடம். எல்லாம் சரியாத்தான் செஞ்சிருக்கன் மேடம். டேய் ஏறி அந்தப் பெஞ்சில படு. நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்..” எனக் கத்தியுள்ளார்.

“அதெல்லாம் வேணாம் டாக்டர். இப்ப அது கூட பிரச்சினை இல்ல. அவளுக்கு இந்தச் செயற்கை மார்பு..” எனச் சொன்னவுடன் அவர், “அதுக்காகத்தான் இவன் பொய் சொல்றான். அதெல்லாம் வேற டிபார்மென்ட். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல… போய் நீங்க டைரக்டரைப் பாருங்க….” என முடித்துக் கொண்டுள்ளார்.

மீனாட்சி மிசன் மருத்துவமனையின் தலைவரும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான டாக்டர் சேதுராமனிடம் ரஜினி தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வழக்கம்போல அவர் ரஜினியை அன்போடு விசாரித்துள்ளார். ரஜினி இந்தப் பேச்சைத் தொடங்கியவுடன், “ஒ ! அவனா?, ரஜினிம்மா, அவன் பொய் சொல்றாம்மா. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆபரேஷன் செஞ்சது. இவ்வளவு நாள் கழிச்சு வந்து இப்பிடிச் சொன்னா அது சரியா இருக்குமா? நானும் பலதடவை சொல்லிட்டேன். ஆபரேஷன் பண்ண டாக்டரும் எல்லாம் சரியாத்தான் இருக்குங்கிறாரு.. இப்ப ஒண்ணும் பண்ண முடியாதும்மா.. ” எனக் கூறியுள்ளார்.

ரஜினி இந்த மார்பு பொருத்தும் கோரிக்கையை வைத்தபோது அவர், “என்னம்மா இது. ம்…. சரி. நீங்க ஒரு ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணுங்க..” என்றுள்ளார்.

அரைமணிக்குப் பின் தொடர்பு கொண்டபோது,

“ரஜினிம்மா, நான் இப்ப ஹாஸ்பிடல் நிர்வாகத்த மகன்ட்ட ஒப்படைச்சிட்டேன். எல்லாம் அவர்தான் பாக்குறார். நான் இப்பிடி ஏதாவது ஏழை பாழைங்களுக்கு உதவி செய்யனும்னு தலையிட்டா அவங்க எனக்கு அனுமதிச்சிருக்குற தொகை 25,000 ரூபாதான். இந்த ஆபரேஷனுக்கு செயற்கை மார்பு 25,000 த்திலேருந்து 1,25,000 ரூபா வரைக்கும் இருக்கு. என்னால ஒன்னுதான் செய்ய முடியும். அந்த 25,000 ரூபா மார்பைப் பொருத்தி ஃப்ரீயா ட்ரீட்மன்ட் குடுக்கச் சொல்றேன். ஆனா நீங்கதான் பொறுப்பெடுத்துக்கணும். அவன நம்ப முடியாது. சொன்ன பேச்சைக் கேக்கமாட்டான்.” எனக் கூறியுள்ளார்.

ரஜினி அந்தத் திருநங்கையிடம் விஷயத்தைச் சொன்னபோது அவள் பிடிவாதமாக மறுத்துள்ளாள். அந்த 25,000 ரூபாய் மார்பு நீண்ட காலத்திற்குப் பயன் தராது எனவும், ஏமாற்றமுற்றுத் தன் வருங்காலக் கணவன் தன்னைக் கைவிடுவதற்கு அது காரணமாகிவிடும் எனவும் 1,25,000 ரூபாய் செலவிலேயே தனக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் கறாராகச் சொல்லியுள்ளாள்.

ரஜினி பொறுமையாக அவளிடம், “அதுக்கு மேலே அவங்க செலவு பண்ணத் தயாரா இல்ல. நம்மளாலையும் இப்ப உடனே அவ்வளவு செலவு செய்ய முடியாது. உன்னக் கட்டிக்கப் போறவர அழைச்சிட்டு வா. அவருக்குக் கவுன்சிலிங் கொடுப்போம். இந்த விஷயத்தை எல்லாம் அவர் முழுசாப் புரிஞ்சுகிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நல்லது” என விளக்கியுள்ளார்.

அதை அவசரமாக மறுத்த அந்தத் திருநங்கை, “அய்யோ அதெல்லாம் வேணாங்க்கா. அப்புறம் அந்த ஆளு கல்யாணமே வேணான்னு சொல்லிடுவாரு..” என அவசரமாகக் கூறி அகன்றுள்ளாள்.

சில மாதங்கள் கழித்து வந்த அந்தத் திருநங்கை, “அக்கா, எனக்கு அந்த 25,000 ரூபா வுலேயே அதை வச்சிடச் சொல்லுங்கக்கா..” என்றுள்ளாள்.

டாக்டர் சேதுராமனிடம் தொடர்பு கொண்டு பேசி, தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்து அந்தத் திருநங்கையை ரஜினி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளார். ஆபரேஷன் தேதியும் குறித்தாயிற்று.

ஆபரேஷனுக்கு முதல்நாள் மருத்துவமனையிலிருந்து ரஜினிக்கு ஒரு அழைப்பு.

அந்தத் திருநங்கையைக் காணவில்லையாம்.

ரஜினி அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்துக் கேட்டபோது, ” எனக்கு அந்த 25,000 ரூபா இது வேணாம்க்கா. அந்த 1,25,000 ரூபாதுதான் வேணும்..” எனக் கூறி அகன்றுள்ளார்.
#####

திருநங்கையருக்கு இப்போது பல நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பால்மாற்று அறுவை சிகிச்சைகளும் இலவசமாகச் செய்யப்படுகின்றன. முழு விவரமும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். பால்மாற்று மருத்துவத்தின் ஓரங்கமாக மார்பு அமைக்கும் சிகிச்சையும் செய்யப்பட்டு நல்ல தரமான செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து பொதுநல வழக்கு ஒன்றையும் ரஜினி தொடுக்க உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய சிகிச்சைக்காக வருபவர்களின் உணர்வுகளையும், பாலியல் தேர்வையும் மத்தித்து அனைவரும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.

எனக்கும் அந்தத் திருநங்கையைத் தெரியும். இந்தக் குறிப்பு முழுவதிலும் உள்ள உரையாடல்களைக் கவனித்தால் ஒன்றை நீங்கள் உணர இயலும். அவளது பாலியல் தேர்வை ரஜினியும், சக திரு நங்கையரும் தவிர வேறு யாரும் மதிக்க வில்லை. அந்தத் திருநங்கையை “அவன்” எனவே அவர்கள் குறிப்பதையும் அவளது பூர்வாசிரமப் பெயராலேயே அவள் அழைக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். (அதனாலேயே நான் இந்தக் குறிப்பு முழுவதும் அந்தத் திருநங்கையை ஒருமையில் “அவள்” எனக் குறிப்பிட்டுள்ளேன்).

திருநங்கையர் குறித்த சமூக மதிப்பீடுகளில் இன்னும் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *