தொடரும் கொலைகளும் ஒரு காவல்துறை அதிகாரியின் கருத்தும்

இன்றைய முக்கிய பேச்சுப் பொருள் இந்தத் தொடரும் கொலைகள்தான். மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல இதற்கும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நான்காண்டுகளில் 9,000 கொலைகள். 85,000 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் சுமார் 5000 கள்ளத் துப்பாக்கிகள் புழங்குவதாகவும் விவரங்கள் தருகிறார். ஸ்டாலின் சுவாதி வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு அவரும் சமீபத்திய சென்னைக் கொலைகளைப் பற்றி விரிவாக விவரங்கள் சொல்லியுள்ளார். இரண்டாம் முறையாக ஜெயா தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபின் நடந்த கொலைகளைப் பட்டியலிட்டுள்ளார். ஜெயா வழக்கம்போல “அமைதிப் பூங்கா” கதை அளந்துள்ளார்.
முகநூலில் நண்பர்கள் பலப்பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் காவல் நிலையங்களில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்வேறு மட்டங்களில் சுமார் 20,000 காலியிடங்கள், ஆறில் ஒன்று பணியிடங்கள், நிரப்பப்படவில்லை எனக் காரணம் சொல்கின்றனர்.
எனக்கு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது நினைவுக்கு வருகிறது ஏப்ரல் 15, 2008 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அது வந்துள்ளது. அவர் சி.கே. காந்திராஜன். சென்னை நகர கமிஷனராக இருந்தவர். ‘Organised Crime — A study of Criminal Gangs in Chennai’ என்பது அவரது Ph.D ஆய்வுத் தலைப்பு. டெல்லி ‘ஏ.பி.எச் பப்லிகேஷன்ஸ்’ இதை இப்போது நூலாக வெளியிட்டுள்ளது. Google Books ல் Organised Crime C.K.Gandhirajan எனத் தேடினீர்களானால் எளிதில் முழுமையாகப் படிக்கலாம். சென்னை நகரில் செயல்படும் சுமார் ஆறேழு கிரிமினல் குமபல்களை அவர் ஆய்வு செய்து அவை செயல்படும் முறை முதலியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறிய ஒரு செய்தியைக் கவனப்படுத்துவதுதான் இங்கு என் நோக்கம்.
இன்று நடந்துள்ள பல கொலைகள் கூலிப் படைகளினால் நடத்தப் படுவதையும், பணப் பறிப்புக்காகவும், கொள்ளை முதலிய காரணங்களுக்காகவும் நடத்தப்படுவதை அறிவோம். இந்தக் ‘கிரிமினல் கேங்’ குகளைப் பொருத்தமட்டில் அவை காவல்துறையுடன் நெருக்கமாக உறவுகொண்டுள்ளன என்பதுதான் அவர் சொல்வது. பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பல காவல்துறை அதிகாரிகள் இந்தக் கும்பல்களுக்கு ‘ராயல்டி’ பெற்றுக் கொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர் என்கிறார் அவர். சிலர் இப்படி மாதம் 50,000 முதல் பல இலட்சங்கள் வரை சம்பாதிப்பதாகவும் அவர் கூறுகிறார். “எந்த ஒரு அமைப்பு ரீதியான குற்றச் செயல்களும் அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், போலீஸ்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறுவதில்லை” என்கிறார் காந்திராஜன். அப்பட்டமாக இந்தத் தொடர்புகள் வெளிப்பட்டவுடன் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சிலர் சஸ்பென்ட் செய்து கொஞ்ச நாள் கழித்துப் பணியமர்த்தப் படுகின்றனர். அவ்வளவுதான்.
மேலே குறிப்பிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த இரண்டு விவரங்களைச் சொல்கிறேன். பாம்ப் பாலாஜி என்கிற இப்படியான ஒரு கும்பல் தலைவனுடன் தொடர்பு வைத்திருந்தார் என தஞ்சை மேற்கு காவல் நிலையத்திலிருந்த குமாரவேலு எனும் ஆய்வாளரை வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு மாற்றினார்கள். மோசடி மன்னன் ஆதிகேசவனுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என மகாகவி பாரதி நகர் காவல் நிலைய உதவி ஆணையர் முகமது காசிஃப் மற்றும் ஆய்வாளர் பீர் முகமது இருவரையும் சஸ்பென்ட் செய்து, பிறகு வேறொரு காவல் நிலையத்தில் பணி அமர்த்தினார்கள்.
சமீபத்தில் நடந்துள்ள சென்னைக் கொலைகளிலும் கூட வழக்குரைஞர் ஒருவரைக் கொல்ல வேலூர் சிறைக்குள் உள்ள ஒரு நபர் காரணமாக இருந்துள்ளது இரண்டு நாள் முன்னர் பத்திரிகைகளில் வெளி வந்தது. இன்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் தற்போது வளைகுடா நாடொன்றில் இருந்து கொண்டு செயல்படும் ஒரு தாதாவான ஸ்ரீதர் தனபாலன் என்பவருடன் தொலைபேசி ஒன்றில் பேசி அவர் சொன்ன பதிலும் இரண்டு நாள் முன் அந்த நாளிதழில் வந்தது. இவர்களை எல்லாம் போலீஸ் கைது செய்து சரியாக விசாரித்து முழுமையாக அந்தக் கும்பல்களையே ஒழித்திருக்க இயலாதா எனும் கேள்வி நமக்கு எழுகிறது. காவல்துறை அதெல்லாம் செய்வதில்லை.
காந்திராஜன் சொன்னது போல இது அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், காவல்துறை, கிரிமினல் கும்பல்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துச் செய்யும் குற்றம். இப்படி கொலை கொள்ளைகள் அதிகமாகி ஊடக கவனம் பெற்று பிரச்சினை பெரிதாக ஆகும்போது காவல்துறை இந்த மூல வேர்களை ஆராய்ந்து அவற்றை வேறறுக்கும் வேலையைச் செய்யாது. மாறாக யாராவது ஒரு பழைய குற்றவாளியைப் பிடித்துக் கொண்டு சென்று என்கவுன்டர் செய்து படம் வெளியிட்டு பதவி உயர்வும் பணப் பரிசும் பெறுவார்கள். மறுபடியும் குற்றச் செயல்கள் தொடரும்.
சென்ற ஆண்டில் திருநெல்வேலி நகரில் கொலை கொள்ளை பெருகிவிட்டன எனப் பத்திரிகைகள் எழுதப் போக கிட்டப்பா எனும் ஒரு பழைய குற்றவாளி, இப்போது திருந்தி மாமியார் வீட்டில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபரை அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து உண்மைகளைக் கொணர்ந்தோம். நாங்கள் விசாரித்தபோது அது உண்மையான என்கவுன்டர்தான் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள் உயர் அதிகாரிகள். இப்போது நீதிமன்றம் அது கொலைதான் எனச் சொல்லி சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுவாதி கொலை போன்றவை வேறு. இப்படித் தனி நபர்கள் வக்கிரமாகச் செய்யும் கொலைகளின் சமூகக் காரணங்கள் வேறு. ஆனால் நடக்கும் ஆணவக் கொலைகளிலும் கூடச் சில இப்படியான கும்பல்களை வாடகைக்கு அமர்த்தி செய்யப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *