நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே உடன் ஒரு விவாதம்

நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே நேர்மைக்குப் பெயர் பெற்றவர். பெருகிவரும் லஞ்ச ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே உடன் நின்று போராடியவர். கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தாவக்கச் செயல்பட்டவர்.

அன்னாரை NCHRO வின் இருபதாம் ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம். சரியான நேரத்திற்கு வந்து எளிமையாக எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த அவரை தொடங்கி வைக்கும் முகமாக முதலில் பேச அழைத்தபோது அவர் மறுத்து முதலில் வேறு யாராவது பேசட்டும் என்றார். நிகழ்ச்சியில் பொதுத்தலைப்பு “பயங்கரவாதச் சட்டங்கள்” (Prevention of Terrorists Act) பற்றியது.

h9

முதலில் உரையாற்றிய கர்நாடக மூத்த வழக்குரைஞர் பாலன் அவர்களின் உரை மிகச் சிறப்பாக அமைந்தது. இங்கு இயற்றப்பட்டுள்ள பல சட்டங்கள்தான் உண்மையிலேயே சட்ட விரோதமானவை. நிலப் பறிப்புச் சட்டம், வனச் சட்டம் முதலியன பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தங்களின் கொள்ளையை நியாயப்படுத்த அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் அவை. சுதந்திர இந்திய அரசு அந்தச் சட்டங்களையும், அதில் அது தொடர்ந்து செய்த திருத்தங்களையும் பயன்படுத்திக் கார்பொரேட் கொள்ளைகளை நியாயப்படுத்தி வருகிறது. இதனால் வாழ்வை இழந்த அம் மக்கள் போராடினால் அவர்களை எந்த விசாரணையும் இன்றுத் தடுப்புக்காவலில் வைக்கவும் கடுமையாகத் தண்டிக்கவும் உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் இந்தத் தடுபுக்காவல் சட்டங்கள். தமது நியாயமான உரிமைகளை வேண்டிப் போராடுவோர்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் மிக விரிவாகப் பேசினார். அவருக்குப் பின் மூத்த வழக்குரைஞர் நூருதீன் பேசினார்.

மூன்றாவதாகப் பேசிய சந்தோஷ் ஹெக்டே மிக அழகான ஆங்கிலத்தில் பட படவெனப் பொரிந்து தள்ளினார். சாராம்சமாக அவர் சொன்னது இதுதான். பயங்கரவாதம் ஆபத்தானது. அந்த வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்களை நிராகரித்துவிட முடியாது . அரசு மற்றும் காவல்துறை அத்துமீறல்களைத் தான் விசாரித்த வழக்குகளில் எப்படி நீதியுடன் தண்டித்தார் என்பதையும் கூடவே ஆதாரங்களுடன் சொல்லி வைத்தார்.

அடுத்துப் பேசிய மூத்த வழக்குரைஞர் ப.ப.மோகன் நீதிபதிகள் நீதியாக இருந்தால் மட்டும் போதாது என்பதையும் இச்சட்டங்கள் இயல்பில் எத்தனை மோசமானவை என்பதையும் விளக்கிப் பேசினார். இறுதியில் நான் பேசினேன்.

சந்தோஷ் ஹெக்டே முன்வைத்த கருத்து மிகவும் சிக்கலான ஒன்று. பொதுப் புத்தியில் ஆமாம் அது நியாயந்தானே என்கிற கருத்தைப் பதிப்பது. இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைகளையும் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளையும் பற்றிச் சொன்னால் மட்டும் அதற்குப் பதிலாகி விடாது. சிக்கல்தான்.

நான் பேசியபோது சொன்னவற்றில் சில:

h6

“ஜனநாயக அரசுகள் எதுவும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் ‘நெருக்கடிநிலை அறிவிப்பு’ செய்யும் உரிமையைப் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. “அரசின் காரணங்களுக்காக” (raison de etat) எனச் சொல்லி – ‘On the supreme reasons of the state’ இப்போது நிலவும் சூழலில் வழக்கமான சட்டங்களையும், வழக்கமான நடைமுறைகளையும் (procedures) வைத்துக் கொண்டு ஆளமுடியாது – எனச் சொல்லி வழக்கமாக நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை ஜனநாயக அரசுகள் தொடர்ந்து ரத்து செய்து வந்துள்ளன. ரோம் நகர ஜனநாயகம் என வரலாற்று முன்னோடியாகச் சொல்கிறோமே அந்த ஆட்சியிலேயே  ‘இயூஷியம்’ எனும் பெயரில் இவ்வாறு நெருக்கடி நிலை அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் வழமை அரசுக்கு இருந்தது என்கிறார் ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் ஜார்ஜியோ அகம்பன். நம் நாட்டில் 1950 ஜன 26 அன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. இரண்டாம் உலக் யுத் அத்துமீறல்களுக்கும், தொடர்ந்து உருவான உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையிலும்  மிக விளக்கமாக இதில் நமது அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது அமுலுக்கு வந்த அடுத்த ஒரு மாதத்தில் – 1950 பிப்ரவரி 25 அன்று -முதல் தடுப்புக் காவல் சட்டத்தை அன்றைய உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான  வல்லபாய் படேல் அறிவித்தார். விரைவில் அகற்றப்படும் என அவர் சொன்னபோதும் அது நிலைத்தது. அதன் பின் DIR (1950), AFPSA (1958), MISA (1971), PSA (1978), ESMA (1981), TADA (1985), POTA (2001) என பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. பொடா நீக்கப்பட்ட அன்றே அதன் கொடூரமான கூறுகள் உள்ளடக்கப்பட்டு UAPA சட்டம் திருத்தப்பட்டது. இதன் மூலம் அவசரச் சட்டங்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒப்புதல் பெறும் நிலையும் ஒழிக்கப்பட்டது. இன்று இந்த அவசரச் சட்டக் கூறுகள் UAPA சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஆங்காங்கு மாநிலங்கள் இயற்றியுள்ள ‘அமைப்பாக்கப்பட்ட குற்றங்கல் தடுப்புச் சட்டங்கள்’ (COCA) பல. தமிழ்நாட்டில் ‘குண்டர் சட்டம்’.

ஆக இப்போது நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த அளவிற்கு எனில் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையின்போது அன்றைய அட்டர்னி ஜெனெரல் நிரேன் டே குடிமக்களுக்கு Habeas Corpus உரிமை இல்லை என வாதிட்டார். இதில் வேதனை என்னவெனில் உச்ச நீதிமன்ற அமர்வு 4/5 என்கிற வீதத்தில் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது. ஆம், குடிமக்களின் உயிர் வாழும் உரிமையை அரசு மறுத்தபோது அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஐந்தி நீதிபதிகளில் நால்வர் அதை ஏற்றுக் கொண்டனர். சொன்ன காரணம் தேசத்திற்கு ஆபத்து என்கிறபோது அடிப்படை உரிமைகளிலேயே மிகவும் அடிப்படையான உயிர்வாழும் உரிமையே குடிமக்களுக்கு இல்லை என்பது.

இங்குதான் நான் நாம் நீதியரசர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் ஒன்றை நினைவூட்ட வேண்டியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அரசு (Executive) மீறும்போது நீதிமன்றத்தின் கடமை என்ன? நீதிமன்றம் தலையிட்டு குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் காப்புரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான. அந்த அடிப்படையில்தானே மாண்புமிகு நீதியரசர் சந்தோஷ் ஹெடே போன்றோர் நீதிமன்றம் இருக்க பயங்கரவாதச் சட்டம் பற்றி ஏன் கவலை என்கின்றனர்.

ஆனால் இந்திய வரலாற்றில் இதுவரை என்ன நடந்துள்ளது? இப்படியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்களின் எதிர்வினை  (judicial response) எப்படி இருந்து வந்துள்ளது?

நீதிமன்றம் இத்தகைய வழக்குகளில் இரண்டு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 1. உண்மையிலேயே குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் கொடூரச் சட்டங்களை இயற்றும் அளவிற்கு நிலைமைகள் மோசமாக உள்ளனவா என்பது ஒன்று. மற்றது, 2) இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியான சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் (legislative competence) உண்டா என்பது.

இதுவரை நமது மாண்புமிகு நீதிமன்றங்களும் நீதி அரசர்களும் இந்த முதல் கேள்வியை கவனத்தில் எடுத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் நேரடியாக இரண்டாவது கேள்விக்குச் சென்று நீண்ட விளக்கங்களையும் வசனங்களையும் உதிர்த்து இறுதியாக அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்ற அதிகாரம் உண்டு என முடித்து அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பர். இதுதான் இந்திய நீதிமன்றங்களின் வருந்தத்தக்க வரலாறாக இருந்து வந்துள்ளது. POTA வை எதிர்த்து PUCL தொடர்ந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்த வகையில் நம் மாண்புமிகு நீதிபதிகள் இதுவரை அரசின் அதிகாரம் குடிமக்களுக்கு எதிராக எல்லையற்று விரிவதற்குக் காரணமாகியுள்ளனர். குடிமக்களுக்கு எதிரான எல்லாவகையான தவறுகளையும் நியாயமாக்கியுள்ளனர். அவற்றிற்கு சட்ட ஏற்புகள் வழங்கியுள்ளனர். TADA, POTA, Parliamentary attack case எல்லாவற்றிலும் இதுதானே நடந்தது. இந்த வகையில் அரசின் எல்லா வகையான நடவடிக்கைகளையும் – சட்டவிரோத நடவடிக்கைகள் உட்பட – எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏற்று ஆசி வழங்கியுள்ளன. அவற்றுக்குச் சட்ட ஏற்பு அளித்துள்ளன.

h4

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான சட்டங்களை இயற்றும் அரசை மட்டுமல்ல, அவற்றுக்கு ஏற்பு வழங்கும் நீதிமன்றங்களையும் கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளுக்காக நிற்கும் நாம் இவற்றுக்கு எதிராகவும் நின்றாக வேண்டும். நீதியரசர்களின் தாராளத் தன்மையற்ற கண்ணோட்டங்களையும் (illiberal attitudes of the judges) நாம் அம்பலப்படுத்தியாக  வேண்டும்.

சற்று முன் மாண்புமிகு நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே அவர்கள் சொன்னதுபோல குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அரசின் மிக அடிப்படையான கடமைகளில் ஒன்று என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. நீதியரசர் இன்னொரு கேள்வியையும் நம் முன் வைத்தார். அவசரச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றிப் பேசினால் போதுமா? பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது என்பதும் அரசின் கடமையில்லையா என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மைதான் இந்த முரண் தர்க்கத்திற்குச் சமூகம் விடை கண்டுதான் ஆக வேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாம் நீதி வழங்கித்தான் ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.. அந்தப் பொறுப்பு அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் உண்டு.

அடில் சர்கோவி vs கனடா அரசு எனும் வழக்கில் நீதி வழங்க அமர்ந்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குத் தலைமைதாங்கிய தலைமை நீதிபதி மெக் லாச்லின் (Mc Lachlin) மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார்.

‘ஒரு அரசியல் சட்டஅடிப்படையிலான ஜனநாயகத்தில் (constitutional democracy) அரசு என்பது அரசியல் சட்டத்திற்கும் அது குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும், உத்தரவாதமளித்துள்ள சுதந்திரங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ – என்பதுதான் அது.

பாதுகாப்பைக் காரணம் காட்டி அடிப்படை நீதிக்குப் (fundamental justice) புறம்பான நடைமுறைகளுக்கு மன்னிப்பு அளித்துவிட இயலாது. ஒருவேளை வழக்கமான நடைமுறைகள் குறிப்பான ஒரு சூழலுக்குப் பொருந்தாது என்றால் பொருத்தமான மாற்றுகள் கண்டாக வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறு கீழிறங்கும் எல்லை (bottom line) என்னவெனில் நமது அரசியல் சட்டத்தின் 21ம் பிரிவுதான். அதாவது அடிப்படை உரிமைகளை மறுதலித்து விட இயலாது என்பதுதான். எந்த மாற்றுகளும் ஒரே அடியாக அடிப்படை உரிமைகளை மறுதலித்துவிட இயலாது.”

-என்னுடைய பேச்சின் சுருக்கம் இதுதான்.

சந்தோஷ் ஹெக்டே மிக்க பெருந்தன்மையோடு இந்த விமர்சனத்தை எதிர் கொண்டார். பேசி முடித்து அருகில் வந்து அமர்ந்த என்னிடம் மிக்க நட்புணர்வுடன் நெருக்கடிநிலை காலத்திய நிரேன் டேயின் அந்த வாசகங்கள் எத்தனை மோசமானவை என்பதைப் பகிர்ந்து கொண்டார். கனடா நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின் விவரத்தையும் கேட்டுக் கொண்டார்.

கருத்தரங்கம் முடிந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேளையில் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். இந்த நாட்டின் சீரழிவிற்கே லஞ்ச ஊழல்தான் காரணம் என்பதுதான் அந்த நீண்ட உரையின் சாராம்சம். முந்திரா ஊழல் தொடங்கி 2G ஊழல்வரை ஊழலின் அளவு எவ்வாறு பெருகி வருகிறது என்று வியந்தார். விருந்தினர், பெரும் பொறுப்புகளில் இருந்தவர் என்கிற அடிப்படையில் அனைவரும் எந்த மறுப்புகளும் இன்றிப் புன்ன்கைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். சற்றே பொறுமை இழந்து நான் கேட்டேன்,

“Sir, லஞ்ச ஊழல் மட்டுந்தான் இந்த நாட்டின் ஒரே பிரச்சினையா? வேறு இந்த நாட்டில் பிரச்சினைகளே இல்லையா?”

“Yes, It is the main problem. All others are consequential..”

“மன்னிக்க வேண்டும் சார் நான் அதை ஏற்கவில்லை. லஞ்ச ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினை என்பதை ஏற்கிறேன். ஆனால் அதுதான் ஒரே பிரச்சினை, மற்றவையெல்லாம் அதிலிருந்து கிளைப்பவை என்பதை நான் ஏற்கவில்லை” – இது நான்.

“உங்கள் கருத்து அப்படியாக இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. உங்கள் கருத்தை வைத்துக்கொள்ளவும் முன்வைக்கவும் உங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. பை.. போய் வருகிறேன்” – கைப் பையை எடுத்துக் கொண்டு நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே புறப்பட்டார்.

அவருடைய கருத்துக்கள் நமக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் பண்பாளர். பெரிய மனிதர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *