பிரபஞ்சனும் அவரது   எழுத்துக்களும் – சில நினைவுகள்

(ஜனவரி 2019 ‘உங்கள்நூலகம்’  இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை)

பிரபஞ்சனின் எழுத்துக்களைவிட பிரபஞ்சன் என்னும் மனிதர் இன்னும் சுவாரசியமானவர். எழுத்தை மட்டுமே நம்பிய ஒரு வாழ்வைத் தேர்வு செய்தவர்கள் பட்டபாட்டை எல்லாம் அறிந்த பின்னும் பிடிவாதமாக இறுதிவரை எழுதியே வாழ்ந்து இறந்தவர் அவர். அவருடைய முதல் கதை 1961ல் ஏதோ ஒரு சிறிய இதழில் வெளிவந்தது. அப்போது அவருக்குப் பதினாறு வயது. இறந்த போது அவர் வயது 73. ஆக அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட எழுத்துலக அனுபவம் உடையவர் அவர். கடைசிவரை மருத்துவச் செலவு உட்படப் பெரிய அளவில் அவர் எல்லாவற்றிற்கும் பிற உதவிகளைச் சார்ந்துதான் வாழ வேண்டி இருந்தது. அந்த வாழ்வை விரும்பியும், பிடிவாதமாகவும் தேர்வு செய்தவர் அவர்.

எந்த நாளும், எந்த இக்கட்டுகள் மத்தியிலும் சினிமா அல்லது வேறு துறைகளை நாடி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள அவர் முனைந்ததில்லை. அப்படியே நேர்ந்தாலும் அதில் அவர் நிலைத்ததில்லை. எழுத்தாளர் பவா செல்லதுரை சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இடையில் ஒரு முறை மிகச் சில காலம் ஒரு கல்லூரியில் அவருக்குப் பேராசிரியப்பணி கிடைத்தது. அதை ஏன் விட்டீர்கள் எனக் கேட்டபோது, “இட்லிதான் காரணம்” எனச் சொன்னாராம். “மதிய இடைவேளை வந்தால் எல்லா ஆசிரியர்களும் டிஃபன் பொட்டலத்தைப் பிரிக்கிறார்கள். எல்லார் வீட்டிலிருந்தும் இட்லிகள். என் மனைவியும் இட்லி கொடுத்தனுப்பத் தொடங்கினாள். எனக்குச் சின்ன வயதிலிருந்து இட்லி பிடிக்காது. வேலையை விட்டுவிட்டேன்” என்றாராம். இது உண்மையோ இல்லை வெறும் நகைச்சுவையோ அவரால் அப்படியெல்லாம் ஒரு வேலையில் தரிக்க முடியவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

ஒரு சம்பவத்தை இங்கே குறிக்கத் தோன்றுகிறது. மோடி அரசின் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் முதலியவற்றை எதிர்த்து நாடெங்கும் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி உள்ளிட்ட அரசு விருதுகளைத் துறந்தபோது தமிழகத்திலிருந்து யாரும் அப்படிச் செய்யாததை அறிவோம். அப்போது யாரோ பிரபஞ்சன் எல்லாம் ஏன் அதைச் செய்யக் கூடாது எனக் கேட்டார்கள். அப்போது அவர், “நான் விருதைத் திருப்பிக் கொடுப்பது பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் அந்த விருதோடு கொடுக்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாயை நான் எப்படித் திருப்பிக் கொடுப்பேன்” எனக் கேட்டதாக ஒரு செய்தி பரவியது. அப்போது நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு, “நான் அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்” என்றார். நான் மறுத்துவிட்டேன். அவரை நாம் அறிவோம். அவரிடம் இப்படிச் சொல்வதே அவரை அவமதிப்பதுதான். பேசாமல் இருங்கள் என்றேன்.

அவர் அப்போது விருதைத் திருப்பிக் கொடுக்காததன் பின்னணி இதுதான். மற்றபடி பிரபஞ்சன் கூர்மையான அரசியல் பார்வை உடையவர். தன்னை திராவிட இயக்கப் பின்னணியில் உருவானவன் என ஒரு கட்டத்தில் அறிவித்துக் கொண்டவர். எனக்கு அவரோடு இது தொடர்பான சில அனுபவங்கள் உண்டு. தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் கண்டன அறிக்கைகள் வெளியிட நேர்ந்த போதெல்லாம் முதல் கையொப்பத்திற்காக அவரிடம்தான் போவேன். ஊரில் இல்லாவிட்டால் போனில் தொடர்பு கெள்வேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் அத்தனையிலும் அவர் கையொப்பம் இட்டுள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மதவாதம் பேசுகிற கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரு அறிக்கை வெளியிடலாம் எனச் சொன்னபோதும் அவர் முதல் ஒப்புதல் அளித்தார்; பா.ஜ.கவின் எச்.ராஜா பெரியாரை அவமரியாதையாகப் பேசியபோது அவரைக் கைது செய்ய வேண்டும் என காவல்துறைத் தலைவரிடம் (DGP) நேரடியாகப் புகார் செய்தபோதும் அதிலும் பிரபஞ்சன்  கையொப்பம் இட்டிருந்தார். இப்படி நிறைய..

புதுச்சேரி மாநிலத்தில் மண்டல் குழு பரிந்துரைகளின் நிறைவேற்றத்திற்காகப் போராட்டம் நடந்தபோது எவ்வாறு பிரபஞ்சன் தினந்தோறும் அந்த நடவடிக்கையில் பங்குபெற்றார் என்பதைப் புதுச்சேரி சுகுமாரன் பதிவு செய்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்த இரண்டாண்டில் (1994) புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சம்பா கோவில் என மக்களால் அழைக்கப்படும் மாதா கோவிலை இடிக்க வேண்டும் என அங்குள்ள இந்துத்துவ அமைப்புகள் சில கிளம்பின. ஒரு சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது அந்த மாதாகோவில் என்கிற பிரச்சாரத்தை அவர்கள்  தீவிரமாக முன்னெடுத்தனர். அப்போது அதற்கெதிராக உண்மை வரலாற்றை வெளிக்கொணரும் வகையில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவரலாம் என ரவிகுமார், சுகுமாரன், நான் எல்லோரும் முடிவு செய்தோம். அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை எல்லாம் சேகரித்தபோது மேலதிகமாகப் பிரபஞ்சன் பல விவரங்களைச் சொன்னார். அவரையே அதை எல்லாம் எழுதித் தருமாறு கேட்டோம். இறுதியில், “மசூதிக்குப் பின் மாதா கோவிலா?” எனும் தலைப்பில்  அந்தக் குறுநூல் வெளிவந்தபோது அதில் என்னுடைய கட்டுரையுடன் அவரது கட்டுரை ஒன்றும் அரிய வரலாற்றுத் தகவல்களுடன் அதில் இடம்பெற்றது.

அவர் என்னாளும் தன் அரசியலை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. தனது புனைவுகளிலும் அவர் அவற்றைப் பதிவு செய்துள்ளார். அவரது சிறுகதை ஒன்றில் (நீரதன் புதல்வர்) ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிந்திய இந்தியா’ நூலிலிருந்து இந்திரா காந்தியின் அவசரகாலக் கொடுமைகள், பத்திரிகைத் தணிக்கைகள் முதலியன பற்றிய ஒரு பத்தி அப்படியே இடம்பெறும். அந்தக் கதையே எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஒரு அதிகாரி வீட்டில் கஞ்சாவைக் கொண்டு வைத்துப் பொய் வழக்குப் போட்டதாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டதுதான். பாதிக்கப்பட்டவரின் மனைவி தினந்தோறும் எம்.ஜி.ஆர் வீட்டு வாசலில் அவர் வரும்போது கண்ணில் படுமாறு குழந்தையுடன் நின்றதாகவும் கடைசியாக ஒரு நாள் அவர் நின்று விசாரித்துவிட்டு அடுத்த நாள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்ததாகவும் சொல்லப்படும் சம்பவம் அப்படியே முழுமையாக அக்கதையில் இடம் பெற்றிருக்கும்.

அவர் தன்னைத் திராவிட இயக்கத்தின் வெளிப்பாடு எனச் சொல்லிக் கொண்டாலும் திராவிட இயக்கத்தை அவர் கடுமையாக விமர்சிக்காமல் இருந்ததில்லை. ‘இரண்டு நண்பர்களின் கதை’ எனும் சிறுகதையும் ஒருவகையில் திராவிட இயக்கத்தை விமர்சித்து எழுதப்பட்டதுதான். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து பொருளை மட்டுமின்றி பிற சுகங்களையும் அடையும் ஒருவன் மற்றும் அவனைப்போல அத்தகைய குயுக்தி இல்லாத அவனது வகுப்புத் தோழன் ஒருவன் என இரு நண்பர்கள் பற்றிய சிறுகதை அது. அந்தத் திறமைசாலி நண்பனின் பெயர் செல்வம். கட்சியில் சேர்ந்தபின் அவன் பெயர் ‘தமிழ்ச்செல்வன்’. அந்தக் கட்சியை “நாக்கை மட்டுமே நம்பிய இயக்கம்” என்பார் பிரபஞ்சன். இந்த நுட்பம் எல்லாம் தெரியாமல் இந்த நண்பனிடமே உதவியாளனாய் இருந்து அவனால் வஞ்சிக்கப்படுவதாகச் சித்திரிக்கப்படும் அந்த இரண்டாவது நண்பனின் பெயர் ‘மாடன்’.

‘உயிர்மை’ இதழில் சங்க இலக்கியம் பற்றி பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளிலும் அவர் திராவிடர் இயக்கப் பாணியில் சங்க காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிக்காமல் அக் காலகட்டத்தைக் கூடியவரை எதார்த்தமாகச் சித்திரிக்கவே முயற்சித்திருப்பார். அந்த வகையில் வரலாற்று ஆய்வுகளில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கிற மார்க்சிஸ்டுகளின் தாக்கம் அதில் கூடுதலாக இருந்தது எனலாம். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பயிற்சி பெற்றவராக இருந்தபோதும் நல்ல வேளையாக அத்தகைய பண்டிதத் தாக்கமும் அவரின் படைப்புகளில் வெளிப்படவில்லை.

எனினும் ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயகாந்தன் ஊடாக தமிழ்ச் சிறுகதை நுட்பம் பெரிய அளவில் வளர்ந்திருந்த காலத்தில் ஒரு கவனத்துக்குரிய எழுத்தாளராக வெளிப்போந்த பிரபஞ்சனின் சிறுகதைகளால் அவர்களது படைப்புகளின் உயரங்களைத் தொட இயலவில்லை. முழுக்க முழுக்க ஜனரஞ்சகப் பத்திரிகைகளைச் சார்ந்தே அவர் இருக்க நேர்ந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் நாவலாக்கங்களில் அவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக அவரது இரட்டை நாவல்களாகிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ ஆகியவற்றைச் சொல்லலாம். ‘மானுடம் வெல்லும்’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. கல்கி, சாண்டில்யன், அரு. இராமநாதன் பாணி வரலாற்று நாவல்களிலிருந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ வேறுபட்ட ஒன்று. தன் காலகட்ட அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளை எல்லாம் நாட்குறிப்புகளாகப் பதிவு செய்து வைத்திருந்த அனந்தரங்கம் பிள்ளைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்நிய ஆட்சி இங்கு தன் அதிகாரத்தை விரிவாக்கியதன் ஊடாக மக்கள் சந்தித்த பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட அளவு இடம் பெற்றதாலும் ராஜராஜ சோழன் அல்லது ஜெகநாத கச்சிராயன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் யாரையும் பிரபஞ்சன் தேடி அலையாததாலும் இந்த இரு படைப்புகளும் தமிழ் நாவல் வரிசையில் ஒரு முக்கிய இடம் பிடிக்கின்றன.

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாதமி, சாரல், பாரதிய பாஷா பரிஷத், இலக்கிய சிந்தனை முதலான படைப்பிலக்கியங்களுக்கான  முக்கியமான விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அந்தச் செலவுகளை புதுச்சேரி அரசு ஏற்றுக் கொண்டது. இப்போது அவரது இறுதிச்சடங்குகளும் அரசு மரியாதைகளுடன் நடந்தேறின. தமிழ் பேசும் மாநிலமானாலும் புதுச்சேரிக்கென சில தனி அடையாளங்களும் பண்பாடுகளும் உண்டு. அவற்றை எழுத்தில் கொண்டுவந்தவர் என்கிற வகையில் புதுச்சேரி அரசும் மக்களும் பிரபஞ்சனுக்கு உரிய மரியாதைகளை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தனிப்பட்ட முறையில் என்னிடம் மிக்க அன்புடன் பழகியவர் பிரபஞ்சன். என் நூல் வெளியீடுகள் பலவற்றிலும் கலந்து கொண்டு அவற்றை முழுமையாகப் படித்து வந்து விமர்சித்துள்ளார். தீராநதியில் நான் ஐந்தாண்டுகள் தொடர்ந்து ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ என்கிற தலைப்பில் எழுதிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெறவேண்டும் என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் தான் பணிபுரிந்து வந்த ஒரு வெளியீட்டு நிறுவனத்திற்கு ஒருநாள் என்னை அழைத்துச் சென்று அதை வெளியிட வற்புறுத்தினார். அவர்கள் அதைப் பகுதி பகுதியாக வெளியிட விரும்பியதை நான் ஏற்காததால் அது சாத்தியமாகவில்லை.

பிரபஞ்சனுடனான ஒவ்வொரு உரையாடலுமே ஒரு கதையை வாசிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்கும். எல்லவற்றையும் கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு. பள்ளியில் படிக்கும்போது அப்போதைய ஃப்ரெஞ்ச் சட்டத்தின்படி அவர் மீண்டும் கீழ் வகுப்பொன்றிலிருந்து படித்துவரவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதாம். வகுப்பிலேயே உயரமான பெரிய பையனாக வயதில் குறைந்த மாணவர்களுடன் தான் பயில நேர்ந்ததை சிரிக்கச் சிரிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு நாள். இப்படி நிறையச் சொல்லலாம். இரண்டாண்டுகளுக்கு முன் அவர் மனைவி இறந்தபோது அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டவுடன் எழுந்து வந்து  அருகில் அமர்ந்து வழக்கம்போலச் சிரித்துப் பேசத் தொடங்கிவிட்டார். எல்லோரும் பார்க்கத் தொடங்கியவுடன் ஒரு கணம் பேச்சை நிறுத்திவிட்டுப் பின், “இன்னிக்கு நான் சிரிக்கக் கூடாது இல்ல..” எனச் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார். பின் எழுந்து, “வாங்க ஒரு டீ குடிச்சிட்டுவரலாம்” எனச் சொல்லி அருகிலிருந்த ஒரு தேநீர்க் கடையில் எங்களுடன் டீ குடித்துவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் நான் புறப்பட்டுவிட்டேன். அடுத்தநாள் மனைவியின் சடலம் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லும்போது குலுங்கி அழுது அவர் கதறிய கதையை நண்பர் சுகுமாரன்  சொன்னபோது அது எனக்கு வியப்பாக இல்லை.

அதுதான் பிரபஞ்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *