மணிமேகலை : காட்சிகள் விரைந்து மாறும் காவியம்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 8 

mani 4

வஞ்சி மாநகரில் தன் சுய உரு மறைத்து ஆண் வேடம் கொண்டு, அளவை வாதி முதல் பூதவாதி ஈறாகவுள்ள  ஐவகைச் சமய நெறியாளர்களையும் கண்டு அவரவர் கொள்கைத் திறங்களையும் அவரவர் சொல்லக் கேட்டு, அவை அனைத்தும் அறமற்றவை என உணர்ந்து தனக்குள் நகைத்தவளாய் அந்நகர் விட்டகல்வாள் மணிமேகலை. வழியில் புத்த தேவனின் நல்லறம் போதிக்கும் அறவோர் வாழும் பவுத்த பள்ளி ஒன்றை அடைகிறபோது, அங்கு தன் பாட்டனும், கோவலனின் தந்தையும், மகன் மறைவிற்குப் பின் பவுத்த நெறி ஏற்றுத் துறவறம் பூண்டு வாழ்பவனுமாகிய மாசாத்துவனைச் சந்திப்பாள். பாட்டன் தான் துறவறப் பாதைக்கு வந்த கதையையும் வருபிறப்பு அறிந்ததையும் கூறியதோடு அவளைக் கச்சி மாநகர் (காஞ்சி) செல்லுமாறு வேண்டுவான். அவளது துறவுநிலைக்கான ‘ஏது’க்கள் முதிர்ந்து வாய்க்கும் இடம் அதுவே என்பது மட்டுமின்றி, மழைபொய்த்தக் காஞ்சி மாநகர் தன் சிறப்பையெல்லாம் இழந்து, பசியால் உயிர்கள் மடியும் நிலையில் உள்ளதால் அவள் அங்கு செல்வது பயன் தரும் என்பான். அமுதசுரபியின் துணையுடன் அம்மக்களின் உயிர் காக்க வேண்டிக் கொள்வான்.

அமுதசுரபியுடன் வான்வழியாகச் சென்று அழகும் வளமும் இழந்து நின்ற காஞ்சி நகர் நடுவில் வந்திறங்குவாள் மணிமேகலை. இளங்கிள்ளி என்பான் அமைத்திருந்த புத்த சேதியத்தில் தொழுத பின் பூம்பொழில் ஒன்றை அடைவாள். சீருடை அணிந்த அரசுப் பணியாளன் ஒருவன் காஞ்சி மன்னனிடம் சென்று, மாமழைபோல மணிமேகலை கச்சிமாநகர் வந்திறங்கியுள்ள செய்தியைச் சொல்வான். கந்திற் பாவையின் மூலம் முன்பே அவள் வரும் செய்தியை அறிந்திருந்த மன்னன் அமைச்சர் முதலான தன் உரிமைச் சுற்றத்துடன் மணிமேகலையைச் சந்தித்து அவள் வருகைக்காகத் தானும் வளமழிந்து நிற்கும் காஞ்சியும் காத்துக் கிடப்பதை எல்லாம் எடுத்துரைப்பான். கோமுகிச் சோலைக்கு அவளை அழைத்துச் செல்வான். தான் முற்பிறப்புணர்ந்த மணிபல்லவத் தீவே போலக் காட்சியளித்த அந்தச் சோலையில் அவள் புத்த பகவனின் பாத பீடிகை ஒன்றை அமைக்க அரசனிடம் வேண்டுவாள். அவ்வாறே அமைக்கப்பட்ட பகவனின் பாதபங்கயப் பீடிகை முன் தொழுதெழுவாள். பசிப்பிணி அழிய வந்த அமுதசுரபியை அந்தப் பீடிகை மீது வைத்து “எல்லா உயிர்களும் பசி நீங்க வருக” எனக் கூவி அழைப்பாள் மணிமேகலை.

எல்லோரும் தொழத்தக்கவராகிய அன்னை மணிமேகலையின் அழைப்பைக் கேட்டு பதினெட்டு மொழிகளையும் பேசும் மக்கள், குருடர், செவிடர், முடவர், யாருமற்ற அனாதையர், ஊமையர், நோயாளிகள், தவநோன்புடையோர், பசிநோயுற்றோர், மடிநல்கூர்ந்த மாக்கள் மட்டுமின்றி பன்னூறாயிரம் விலங்குகளின் தொகுதியுடன் மன்னுயிர் அனைத்தும் திரண்டு கூடிப் பசியாறிய விந்தையைப் பதிவு செய்கிறார் சாத்தனார். இது உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத ஒரு காட்சி. எளிய மக்களின் பசியை மட்டுமல்ல, சக உயிர்கள் அனைத்தின் பசியையும் நீக்கும் கடமை நமக்குண்டு என நமக்கு அறிவுறுத்துகிறது இந்த பவுத்த காப்பியம். உலகக் காவியங்கள், இந்தியப் புராணங்கள் முதலானவற்றில் எத்தனையோ அமானுடமான கற்பனைகளை எல்லாம் கண்டுள்ளோம். இப்படிஅள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை அண்டி துயருற்ற உயிர்கள் அனைத்தும் பசியாறும்  கற்பிதத்தை ஒரு பவுத்த காவியமன்றி  வேறெதில் நாம்தரிசிக்க இயலும்.

பசியாறிய மக்களுள் சாத்தனாரால் இறுதியில் சொல்லப்படும் அந்த “மடிநல் கூர்ந்த மாக்கள்” என்போர் யாவர்? கையில் அகப்படும் உரையாசிரியர்கள் பலரும், “சோம்பி இருத்தலால் வறுமையுற்றோர்” என ஒரு பொருளைச் சொல்லி அகல்கின்றனர். உ.வே.சா அவர்கள், “உடுத்தற்கு ஆடையுமின்றி வறுமையுற்ற மாக்கள்” எனச் சொல்வதோடு, “சோம்புதலால் வறுமையுற்ற மாக்களெனும் அமையும்” என்பார். ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமிப் பிள்ளை ஆகியோர் (கழக வெளியீடு) “உடையின்றித் துன்பமெய்தியோர்” எனும் பொருளை மட்டும் பதிகின்றனர். “சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள்” எனும் பொருள் பொருந்தவில்லை எனக் கூறி அதை மறுக்கின்றனர். சோம்புதலால் வறுமையுற்றோருக்கு அருளுதல் ‘மடிமை” ஆகிய அதாவது ‘சோம்புதல்’ ஆகிய தீவினையை வளர்க்கும் செய்கையாகையால் அது அறமாகாது ஒழியும் என்பது அவர்கள் இதற்கு அளிக்கும் விளக்கம்.  எனில் நமக்கொரு கேள்வி எழுகிறது. உடையின்றித் துன்பமெய்தியோரின் துன்பத்தை அகற்ற அவர்களுக்கு முதலில் உடையைத்தான் அளிக்க வேண்டும். அவர்களுக்குச் சோறிடுவது முதற் கடமையாகுமா? சரி. இருக்கட்டும் உடையே இல்லாதபோது உணவும் அவர்களுக்கில்லை எனக் கொள்வோம். எனினும் ‘மடிநல்கூர்வோர்’ என்பதற்கு வேறேதும் பொருள் சாத்தியமா?

‘மடி’ என்பது பல பொருள் ஒரு சொல். “சோம்புதல், ஊக்கம் குறைதல், சுருங்குதல், தவிர்தல் என்ற பொருள் தருமாறு ஒரு சொல்லாகவும், கெடுதல், அழிதல் போன்ற பொருளில் இன்னொரு சொல்லாகவும் பழம்பாடல்களில் பயின்று வந்தது” எனக் கூறுவர். ‘மடி’ என்பதற்கு ‘ஆடை’ என்கிற பொருளும் உண்டு. ‘மடித்தல்’ என்பதோடு அது தொடர்புடையதாக இருக்கலாம். பால்சுரக்கும் உடற் பகுதி, தொப்பூழ்க்குக் கீழே அமைந்த பகுதி என்றெல்லாமும் பொருள்கள் உண்டு.

இவை தவிர ‘மடி’ என்பதற்கு ‘தீட்டு அற்ற தூய்மை’ என்றொரு பொருளும் வழக்கில் உண்டு. உயர்சாதியினர் மத்தியில் “நான் ‘மடி’ யாய் இருக்கிறேன். தொட்டு விடாதே..” எனச் சொல்லும் வழக்கு உண்டு. மேற் குறிப்பிட்ட ‘சுருங்குதல்’, ‘தவிர்தல்’ என்கிற சொற்களோடு தொடர்புடையதாக இது அமையலாம். இங்கே ‘தூய்மை’ என்பது வெறும் அழுக்கின்றி இருப்பதல்ல. மாறாக இது சடங்கு (ritual) சார்ந்த பொருளுடைய ஒன்று. ‘தீட்டின்மை’ எனும் பொருளிலேயே ‘மடி’ எனும் சொல் இங்கு பயன்படுத்தப் படுகிறது.

இந்தப் பொருளில் .’மடிநல்கூர்தல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நல்கூர்தல் என்பது வறுமையை, இன்மையைக் குறிப்பது. எனவே ‘சடங்கு சார்ந்த தூய்மை இன்மை’ (absence of ritual purity) எனலாமா?

எனில் “மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்” என்பதை தீட்டுப்பட்டோர் எனத் தவிர்க்கப் பட்டோர் எனலாமா? ஏதோ ஒரு வகையில் பொதுச் சமூகத்திலிருந்து தீண்டாதாராக ஒதுக்கப்பட்ட மக்களும் இதர பசித்துயருற்றோருடன் பசியாறினர் எனக் கொள்ளலாமா? உடற்குறையால் மட்டுமின்றி சமூகக் குறையால் ஒதுக்கப்பட்டவர்களையும் ஏற்று அணைத்தவரன்றோ புத்த பெருமான் (பார்க்க: வசல சுத்தம்).

#   #   #

மணிமேகலையை நாம் ஒரு தமிழ்க் காப்பியமாக மட்டுமின்றி பவுத்த காவியமாகவும் வாசித்துக் கொண்டுள்ளோம். தமிழன்னைக்குச் சூட்டப்பட்ட மணியாரங்களில் ஒன்றான மணிமேகலை காப்பிய அலங்காரங்களுக்குக் குறைவின்றி படைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பவுத்த நெறிகளுக்குள் இறுக்கமாக நின்றும் ஆக்கப்பட்டுள்ள பாங்கு அறிய அறியச் சுவை பயக்கக் கூடிய ஒன்று. கூடுதலாக இது ஒரு இளம் பெண் துறவு நிலையை எட்டுவதைக் காப்பியப் பொருளாகக் கொண்ட இலக்கியமும் கூட என்பதையும் பார்த்து வருகிறோம். காப்பிய அழகுகளை அதன் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் ஒவ்வொரு நிலையிலும் அதிவேகமாகக் காட்சிகள் மாறி காப்பியத்தின் தனித்துவமான இந்த அடிப்படை நோக்கங்களுடன் பொருந்தி அமைகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா அறிவிப்புடன் கம்பீரமாகத் தொடங்கும் காவியம், காப்பிய நாயகியை ஒரு நாயகிக்குரிய அத்தனை அழகுகளுடனும், அலங்காரங்களுடனும், இளமைக் கனவுகளுடனும் முன்நிறுத்துகிறது. மதங்கொண்ட யானையை அடக்கி வரும் அழகிய இளவரசன் காப்பிய நாயகியைக் கண்டு காமுறுகிறான். அவளும் அவனால் ஈர்க்கப்பட்ட போதும் அவளை அடைதல் அத்தனை எளிதல்ல என்பதை தொடக்கத்தில் உணரும் இளவரசன், அவள் பிறப்பறிந்தபின்,

“கற்புத் தானிலள்; நற்றவ உணர்விலள்;

வருணக் காப்பிலள்; பொருள்விலையாட்டி” .

என இகழ்ந்து, அவள் மறுத்தால் என்ன, “சித்திராபதியால் சேர்தலும் உண்டு” என மனம் தேறுகிறான். பசிப்பிணி நீக்கி பவுத்த அறம் உரைக்கப் பிறப்பெடுத்த அவளைக் குலத் தொழிலில் பயிற்றுவிக்க உறுதி பூண்டுள்ள அவளது பாட்டியை வைத்துக் காரியம் முடிப்பேன் என இப்படிச் சூளுறைத்து அகல்கிறான்.

மணிமேகலை விரும்பாவிடினும் ஒரு அரச குமாரன் அவளை அடைவதை எளிதாக்குவதாக அவன் சுட்டும் பாதுகாப்பின்மைகள் இங்கே கவனத்துக்குரியன.

கற்பொழுக்கமற்ற குலத்தில் உதித்தவள்; நல்ல தவ உணர்வு அற்றவள்; வருணப் பாதுகாப்பு அற்றவள்; பொருளுக்காகச் சோரம்போகும் குலத்தவள். அவளுக்கென்ன அத்தனை திமிர்? இதை அந்த அரசிளங்குமரன் மனதிற்குள் நினைத்தவன் மட்டுமல்ல. அவளின் முகத்திற்கெதிரே சொல்லியும் அகல்கிறான். உயர் வருணத்தார்க்கு உள்ள பாதுகாப்பும் அற்ற ஒருத்திக்கு இத்தனை ஆணவமா?

அவன் சொன்ன அனைத்தும் உண்மையே. நல்ல தவ உணர்வு அற்றவள் என்பது உட்பட. உலகோர் வியக்க அனைத்து சமகாலச் சமயக் கணக்கர்களை எல்லாம் வாதில் வென்று தவநெறி ஏற்கப் போகிற அந்த இளநங்கை அப்போது அதை உணர்ந்தாளில்லை. முகத்திற்கு நேரே “பொருள் விலையாட்டி” என அவமதித்த பின்னும் ‘புதுவோன் பின்னைப் போனது நெஞ்சம்” எனப் புலம்பும் பருவ வயதினள் அவள்.

இப்படி வேகமாக நகர்ந்துகொண்டுள்ள காவியம் திடீரெனத் தடம் மாறுகிறது. காப்பியக் காட்சிகளும் முற்றிலும் வேறாய் உருக்கொள்கின்றன. சுதமதி, மணிமேகலா தெய்வம், புத்த பீடிகை, சக்கரவாளக் கோட்டம், மணிபல்லவத் தீவு…என அதிவேகமாக இந்தக் காட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன. உதயகுமாரனுக்கு அஞ்சி பளிக்கறையில் புகுந்து தன்னைக் காத்துக்கொள்ள முயல்கிறாள் மணிமேகலை. அவளை அடந்தே தீருவேன் என வஞ்சினம் கூறிச் சென்ற அரசிளங்குமரனை எண்ணிக் கலங்கி நின்ற சுதமதியிடம் மணிமேகலா தெய்வம் தோன்றி அவர்களைச் சக்கரவாளக் கோட்டம் செல்லச் சொல்கிறது. நேர்வழியில் சென்றால் மதங்கொண்டு திரியும் உதயகுமாரனின் கைப்பட வாய்ப்புண்டு என எச்சரிக்கிறது.

சக்கரவாளக் கோட்டம் என்பது வேறொன்றுமில்லை. காவிரிப்பூம்பட்டினத்தின் சுடுகாடு, 214 வரிகளில்  சுடுகாட்டின் வரலாறும் வருணனையும் காப்பியத்தின் ஓரங்கமாகிறது. அச்சம், அருவெறுப்பு முதலான ரசங்கள் இந்தக் காதையை நிறைக்கின்றன. இதோ அந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தின் சில காட்சிகள்.

எலும்பு, தசை, உதிரம் ஆகியனவே யாக்கை என்பதை இவற்றின் மீது ஆசை கொண்டு அறம் மறந்து கிடக்கும் மாக்களுக்கு அறிவுறுத்துவதே போன்று கிடக்கிறது புழுக்கள் அரித்துக் கொண்டுள்ள ஊன்பிணடம் ஒன்று. அந்த உடலின், செம்பஞ்சுக் குழம்பால் அலங்கரிக்கப்பட்ட பாதம் ஒன்றை நரி ஒன்று கவ்விக்கொண்டு ஊளையிட்டபடி போய்க்கொண்டிருக்கிறது. படம் எடுத்த பாம்பு போன்ற அல்குல் என வியக்கப்பட்ட உடலழகை ஒரு கழுகு குடைந்துண்டு கூவுகிறது. நெருக்கமான வளைகள் சூட்டப்பட்டு நின்ற அழகிய கரம் ஒன்றை ஒரு சுடுகாட்டு நாய் நொறுக்கித் தின்னுகிறது. சந்தனப் பூச்சுடன் செருக்குடன் நிமிர்ந்திருந்த இளம் கொங்கைகளை பருந்தொன்று கவர்ந்துண்டு ஓசை எழுப்புகிறது. அதோ அடர்த்தியான கருங்கூந்தல் கொண்ட அப்பிணத்தின் தலையைக் கொய்து பெருமகிழ்ச்சி பொங்க எழுகிறாள் ஒரு பேய் மகள். இது மேகமோ இல்லை கூந்தலோ; இது மீனோ இல்லை கண்ணோ, இதழோ இல்லை முருக்க மலரோ, பற்களோ இல்லை முத்துக்களோ என்றெல்லாம் ஒரு காதலனைப்போல அந்தப் பேய்மகள் வர்ணித்து மகிழவில்லை. மாறாக அந்தத் தலையில் பொதிந்த கண்களைத் தோண்டிச் சுவைத்து மகிழ்ந்து கவைத்த வண்னம் அடிகளைப் பெயர்த்துக் களியாட்டம் போடுகிறது…

Mani 100

தவநெறி சிறந்தோர், மிகப் பெரும் செல்வர், ஈன்ற இளம் பெண்டிர், எதையும் செய்து முடிகாத பாலகர், முதியோர், இளையோர் என்றெல்லாம் எதுவுமே கருதாது கொடுந்தொழில் ஆற்றுபவன் இக் கூற்றுவன். இவ்வாறு பலறும் கொன்று குவிக்கப்படுதலையும், அவர்தம் உடல்களை தம் அழல் வாயால் சிதைகள் சுவைத்துண்பதையும் கண்டும் செல்வச் செருக்குடன், கள்ளுண்டு களித்து, மேன்மை மிகு நல்லறங்களை விரும்பாது வாழ்வோரும் உளரே. அவரினும் சிறந்த மடையர்கள் உண்டோ..

அதோ இந்தக் கொடுங் காட்சிகள் நிறைந்த சுடலைக்குள் வழிதப்பி வந்த ஒரு இளம் பார்ப்பனச் சிறுவன் அச்சத்தில் உறைந்து சாகிறான். மகனைத் தேடிவந்த பார்ர்ப்பனி அவனுடலைச் சுமந்து சென்று சம்பாபதியிடம் என்னுயிரைக் கொண்டு இவன் உயிரைத் தந்தருள் என வேண்டுகிறாள். அப்படியாயின் இவன் என் கண்ணற்ற கணவனைக் காப்பாற்றுவான் எனக் கதறுகிறாள். அது சாத்தியமில்லை. போன உயிரை என்னால் மீட்டுத் தர இயலாது. அதன் நல்வினை, தீவினைக்கேற்ப அது மீளவும் பிறப்பெடுக்கும். அவ்வளவே. அறியாயோ நீ. உலகாளும் மன்னராயினும் மீண்டும் உயிர் பெறுவரோ? இதோ இந்த ஈமப் புறங்காட்டில் அரசர்க்குத்தான் எத்தனை சமாதிகள். மீண்டும் உயிர் கொடு என்கிற  நரகத்துக்குரிய பேச்சைத் தவிர் என்றனள் சம்பாபதி.

சக்கரவாளக் கோட்டம் எனப்படும் சுடுக்காட்டுக் கோட்டம் பற்றிய இந்த வருணனைகள் சுதமதிக்கு மணிமேகலா தெய்வம் அதன் வரலாற்றைச் சொல்லும் முகமாக காவியத்தில் இடம்பெறுகிறது.

நடுச்சாமம் நெருங்குகிறது. சுதமதி கண்ணயர்கிறாள். மணிமேகலா தெய்வம் நம் காப்பிய நாயகியான மணிமேகலையை அள்ளி எடுத்துக் கொண்டு தென் திசையில் முப்பது யோசனைத் தூரத்தில் அமைந்துள்ள மணிபல்லவத் தீவில் வைத்துவிட்டு அகல்கிறது.

இனி அவள் விழித்த பின் தன் முற்பிறப்பு அறிவாள். அவள் தன் வரலாற்றுக் கடமையை ஆற்றும் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழும். கூடவே மணிமேகலை துறவு எனும் பெயரை உறுதி செய்யும் ‘ஏது’ க்களும் அமையும்.

( இனி ‘ஏதுக்கள்’ எனும் பவுத்தக் கோட்பாடு மணிமேகலையில் விளக்கமுறும் பாங்கு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *