மணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  31                       

பவுத்தத்தில் உருவான பல போக்குகளில் மணிமேகலையின் தர்க்கம் எவ்வகையானது?

இங்கு நாம் புத்தருக்குப் பிந்திய ஆயிரம் ஆண்டுகளில் பௌத்தத்திற்குள் உருவான பல போக்குகளின் பின்னணி  குறித்துச் சிறிது அறிந்து கொள்ளுதல் நலம். கி.மு ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் வைதிக இறையியலுக்கு மாற்றாக உருவான அவைதிக மரபுகளில் இன்றளவும் உலகின் மூன்றாவது பெரிய மதமாகவும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத செமிடிக் மதங்களிலிருந்து வேறுபட்ட தனித்துவமிக்க ஒரு கீழைத் தேய மதமாகவும் விளங்குவது பௌத்தம். மணிமேகலைப் பெருங்காப்பியம் புத்தருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவானது என்பதையும் அப்போது காஞ்சியை மையமாகக் கொண்டு பௌத்த தத்துவ விவாதங்களும் தத்துவ நூலுருவாக்கங்களும் நிகழத் தொடங்கி இருந்த பின்னணியில் உருவானது என்பதையும் நினைவிற் கொள்வோம்.

இன்றளவும் மணிமேகலையின் இறுதி அத்தியாயங்களில் முன்வைக்கப்படும் தர்க்கம் அப்போது இந்திய அளவில் பௌத்தத்திற்குள் உருவாகி இருந்த பல்வேறு போக்குகளில் எந்தப் போக்கைப் பின்பற்றி உள்ளது என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம்.  இப்படியான பல போக்குகள் பௌத்தத்திற்குள் உருவாக நேர்ந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியாக மார்க்சீய நோக்கில் இந்தியத் தத்துவங்களை ஆய்வு செய்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதில் சில அம்சங்களை முதலில் தொகுத்துக் கொள்வோம். கடவுள், சடங்குகள், ஆன்மா ஆகியவற்றை மறுத்தெழுந்த பௌத்தத்தில் புத்தரே கடவுளாக்கப்பட்ட வரலாற்றை மிக நுணுக்கமாக அவர் தொகுத்துரைப்பார் (Indian Philosophy – A Popular Introduction). வருண வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமின்றி வேள்விகள் எனும் பெயரில் மிகப் பெரிய பொருள் அழிப்புகள் நடந்து கொண்டிருந்த அன்றைய கங்கைச் சமவெளியில் பக்தி, நம்பிக்கை ஆகியவற்றின் இடத்தில் அறம் சார்ந்த வாழ்வை முன்வைத்து உருவான பௌத்தம் புத்தரது காலத்திலேயே அவர் சார்ந்த பழங்குடி மக்களிடம் மட்டுமின்றி புதிதாக மேலுக்கு வந்துகொண்டிருந்த அரசுருவாக்கங்கள் மற்றும் வணிக வர்க்கங்களின் ஆதரவையும் பெற்று வேகமாக வளர்ந்தது. குடும்பத்தை மட்டுமின்றி தான் சார்ந்த பழங்குடிச் சமூகத்தையும் துறந்து வந்த புத்தர் உரைத்த மாற்று நெறியால் ஈர்க்கப்பட்ட அரசர்களும் வணிகர்களும் பெரிய அளவில் அவருக்கும் சங்கத்திற்கும் பொருள் உதவிகளைச் செய்யத் தயாரக இருந்தனர். சிராவஸ்தி நகரில் வாழ்ந்த அப்படியான ஒரு பெருவணிகனான அனாதபிண்டிகனின் அழைப்பை ஏற்று ஒரு முறை புத்தபகவன் தனது சீடர்களுடன் அவனது ஊருக்கு வந்தார், அனாதைகளுக்கு உதவும் தாராள மனத்தினனாகப் பெயர் பெற்றிருந்த அவன் புத்தரும் இதர பிக்குகளும் தங்குவதற்கு இளவரசன் ஜேதகுமாரனுக்குச் சொந்தமான ஒரு பூங்காவைக் கேட்டபோது அந்தப் பூங்கா முழுவதையும் மூடும் அளவிற்கு அவன் பணம் கேட்டதாகவும், அதைத் தந்து புத்தரும் சீடர்களும் தங்குவதற்கான எல்லா வசதிகளும் பொருந்திய மாளிகை ஒன்று அங்கு கட்டப்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு (Sudatta Sutta / Cullavaggaa-VI).

இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனினும் இதை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது. பெருவணிகர்கள் மட்டுமின்றி பிம்பிசாரன், பசனேதி போன்ற மன்னர்களும் புத்தரிடம் பேரன்பு செலுத்தினர். மக்கள் மத்தியில் தம் கருத்துக்களைப் பரப்புவதற்கு முதன்மை அளித்த புத்தரும் அதை ஒட்டிச் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாயிற்று (அ.மார்க்ஸ், ‘புத்தம் சரணம்’, அடையாளம் பதிப்பகம், பக்.72 – 76).. புத்தருக்குப் பிந்திய அடுத்த சில நூறாண்டுகளில் மாமன்னர் அசோகரின் காலத்தில் பௌத்தம் ஒரு அரச மதமாகவும் மாறியது. இத்தகைய அளவு மாற்றங்கள் புத்த சங்கத்தில் சில பண்பு மாற்றங்களையும் ஏற்படுத்தின, சிந்தனை, தர்க்கம் ஆகியவற்றுக்குக் கொடுத்த கூடுதல் அழுத்தங்கள் பௌத்தத்திலும் கருத்து முதற் சிந்தனைகள் உருவாவதற்குக் காரணமாயின என்பார் சட்டோபாத்யாயா.

சீன யாத்ரீகர்களான இட்ஷிங்கும், யுவான் சுவாங்கும் கி.பி 7ம் நூற்றாண்டில் நாளந்தாவில் இருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவம் பயின்றார்கள். 10,000 மாணவர்களும் 1500 ஆசிரியர்களும் அங்கு தங்கியிருந்தனர் எனக் கூறும் அவர்கள் 500 வணிகர்கள் 10 கோடிப் பொற்காசுகள் கொடுத்து அந்த இடத்தை வாங்கித் தந்தனர் எனவும் ஐந்து அரசர்கள் அதில் ஏராளமான அறைகளைக் கொண்ட கட்டிடங்களைக் கட்டித் தந்தார்கள் எனவும் பதிவு செய்கின்றனர். கற்பது, விவாதிப்பது ஆகியவற்றிற்கே அவர்களுக்கு நேரம் போவ்தவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர். அரசர்கள் பலர் 200 கிராமங்களிலிருந்து வரும் வரிப்பணத்தை அந்தப் பல்கலைக் கழகத்திற்கு அளித்திருந்தனர் எனவும் அந்த பிக்குகளுக்கான செலவு அதிலிருந்தே ஈடுகட்டப்பட்டன எனவும் இட்ஷிங் குறிப்பிடுவதையும் சட்டோபாத்யாயா சுட்டிக் காட்டுகிறார்.

புத்தர் பரிநிப்பானம் அடைந்தவுடன் ராஜகிருகத்தில் பிக்குகளின் முதல் மகாசங்கம் கூட்டப்பட்டது. தம்மம், வினயம் ஆகிய பிக்குகளின் ஒழுக்கங்கள் குறித்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதாகவே அச்சங்கமம் அமைந்தது எனவும் அப்பாலைக் கோட்பாடுகளுடன் (metaphysics) கூடிய அபிதம்மம் அப்போது விவாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடும் சட்டோபாத்யாயா இந்த முதற்சங்கத்தைப் பொருத்தமட்டில், அதில் புத்தர் காட்டிய வழியிலேயே மேற்செல்வது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பார்.

எனினும் விரைவில் பிக்குகளுக்கு விதிக்கப்பட்ட இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புகள் தோன்றியதால் இரண்டாவது சங்கம் கூட்டப்பட்டது. அங்கு இந்தக் கருத்துடையவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டிய மகாசங்கத்தில் கலந்து கொண்டோர் “மகாசங்கிகர்கள்” எனவும் இறுக்கமான பழைய கொள்கைகளை வற்புறுத்தியவர்கள் “தேரவாதிகள்” அல்லது “ஸ்தவிரவாதிகள்” எனவும் அழைக்கப்பட்டனர். பௌத்தத்தில் முதல் பிளவு இப்படி ஏற்பட்டது.

வெளியேறியவர்கள் பிக்குகளின் ஒழுக்கநெறியை மட்டுமல்லாமல் பௌத்த பிடகங்களிலும் மாற்றங்கள் செய்தனர். எளியவர்களிலும் எளியவராக இருந்து அறம் உரைத்து வாழ்ந்த புத்தர் அவாறு செய்யப்பட்ட மாற்றங்களின் ஊடாக மானுட சக்தியைத் தாண்டிய இயற்கை அதீதக் கடவுளின் நிலைக்கு உயர்த்தப்பட்டார். விரிவான சடங்குகளுடன் கூடிய மகாயன பௌத்தம் இப்படித்தான் உருவாகியது. பௌத்ததில் கருத்துமுதல் சிந்தனைகள் ஊடுருவியது இப்படித்தான்.

அடுத்து கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகரால் கூட்டப்பட்ட மூன்றாவது சங்கத்திலும் பிளவு ஏற்பட்டது. சுமார் பதினோரு சிந்தனைக் குழுவினர் இப்போது தேரவாதிகளால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் நாளந்தாவில் இருந்த பௌத்த மையத்தில் அடைக்கலமாயினர். இவர்களே சர்வாஸ்திவாதிகள் எனப்பட்டனர். காஷ்மீர், காந்தாரம் ஆகிய பகுதிகளுக்கு அவர்கள் இடம் பெயர்ந்தனர். கி.பி 100 வாக்கில் கனிஷ்கரின் ஆதரவுடன் நான்காவது மகாசங்கம் கூட்டப்பட்டது அதை ஒட்டி 500 பிக்குகள்வரை தங்குவதற்கு வசதியான பௌத்தமடம் ஒன்றும் கனிஷ்கரால் கட்டப்பட்டது. பிடக நூல்களுக்கு விரிவான உரைகள் (விபாஷங்கள்) எழுதப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட விபாஷங்கள் பூர்வ பிடகங்களின் அடிப்படையில் ஆக்கப்பட்டவையாகக் கருத முடியாது எனவும் அவர்களிடம் உருவான புதிய சிந்தனைக்கேற்ப உருவாக்கப்பட்டது எனவும் சட்டோபாத்யாயா கருதுகிறார். இவ்வாறு உருவாக்கப்பட்டு சர்வாஸ்திவாதிகளால் பெரிதும் போற்றப்பட்ட ‘அபிதர்ம விபாஷகம்’ உண்மையில் ‘அபிதர்ம பிடகத்திற்கு’ எழுதப்பட்ட உரையல்ல, அது காத்யாயினி புத்ரி என்பவரால் எழுதப்பட்ட ‘ஞானபிரஸ்தானம்’ எனும் சர்வாஸ்திவாதிகளின் நூலொன்றுக்கு எழுதப்பட்ட வைபாஷம் என்றும் சட்டோபாத்யாயா கருதுகிறார். இவற்றைப் பின்பற்றுவோர் “வைபாஷிகர்கள்” என அழைக்கப்பட்டனர். 

மனம் சார்ந்தவை உட்பட எல்லாவற்றின் (சர்வ) இருப்பையும் (அஸ்தி) ஏற்றுக்கொண்டவர்கள் என்பதாலேயே இவர்கள் “சர்வாஸ்திவாதிகள்” என  அழைக்கப்பட்டனர்.

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் (சர்வ – கலே – அஸ்தி) என முக்காலத்திலும் இருப்பவையாக ‘வஸ்து’க்களை ஏற்றுக்கொள்வதுதான் சர்வாஸ்திவாதம் என்பதாக அபிதம்ம கோஷம் விளக்கம் அளித்தது.  இதன்மூலம் பௌத்தத்தின் மிக அடிப்படையான கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட “எல்லாமே நிலையற்றவை – ஆற்று நீரோட்டத்தில் இக்கணத்தில் பார்க்கும் துளி அடுத்த கணத்தில் இருப்பதில்லை” – என்கிற “நிலையாமை’ கொள்கைக்கே அவர்கள் எதிராக இருந்தனர். இப்படி அவர்களின் சர்வாஸ்திவாதம் பொருள்முதல் வாதத்திலிருந்து அகன்று கிட்டத்தட்ட ஒரு கருத்துமுதல்வாத நிலையை எட்டியது. இந்நிலையில் சர்வாஸ்திவாதத்திலிருந்து பிரிந்த “சௌந்த்ராந்திகம்” என்னும் பிரிவினர் புத்தரின் அடிப்படைக் கோட்பாடான “நிலையாமை” மற்றும் “அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது” எனும் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி சர்வாஸ்திவாதிகளை எதிர்த்துப் போராடினர்.

மகாயன பௌத்தத்திலிருந்து உருவான “மாத்யமிகம்” யோகாச்சாரம் ஆகிய இரு பிரிவுகளும் கருத்துமுதல்வாத நோக்கை வெளிப்படையாக ஆதரித்தன. ‘மகாயனம்’ என்பதன் நேரடிப் பொருள் “உயர்ந்த பாதை” என்பது. மற்ற பௌத்தர்களை அவர்கள் “ஹீனயானிகள்” என்றனர். அதாவது – “தாழ்ந்த பாதை” என்பது அதன் பொருள். ஹீனயானிகள் தனிமனித நிர்வாணத்தை  மட்டுமே பேசுவதாகவும், தாங்கள் மனிதகுலம் முழுமைக்கான விடுதலையைப் பேசுவதாகவும் மகாயனர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் மகாயனம் என்பது பௌத்தத்தின் அடிப்படைப் பாதையிலிருந்தே எவ்வாறு விலகியுள்ளது என்பதை ஷெர்பாட்ஸ்கி துல்லியமாக விளக்குவது குறிப்பிடத் தக்கது,

இப்படியான பல போக்குகள் பௌத்தத்திற்குள் உருவான பின்னணியில்தான் மணிமேகலை இயற்றப்படுகிறது. இந்தப் பொக்குகளில் மணிமேகலை முன்வைக்கும் பௌத்தம் எதைச் சார்ந்தது என்பதை ஆய்வாளர்கள் ஆராயும்போது காப்பியத்தின் கடைசிப் பகுதியில் முன்வைக்கப்படும் இந்தத் தத்துவ விசாரங்களின் அடிப்படையிலிருந்தே விவாதிக்கப்படுகின்றன. அப்படி இந்தத் தத்துவ விவாதங்களை மட்டும் பார்க்காமல் மணிமேகலைக் காப்பியத்தின் மொத்த அமைப்பின் பின்புலத்திலிருந்தும் நாம் அதன் கோட்பாடுகளைப் பார்ப்பது அவசியம். அப்படிப் பார்க்கும்போது மணிமேகலையின் தர்க்கம் என இப்போது அறிஞர்கள் வந்திருக்கும் முடிவுகளை மறு பரிசீலனை செய்யவும் நேரும்.  

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா மார்க்சிய நெறிகளில் நின்று புத்தருக்குப் பின் பௌத்தத்தில் தோன்றிய மாற்றங்களைக் கிட்டத்தட்ட நிராகரிக்கிறார். நாகார்ஜுனர் தொடங்கி மேலுக்கு வரும் பௌத்த தர்க்க (logic) முறைகளையும் கூடப் புறந்தள்ளும் நிலைக்கு அவரது அணுகல்முறை செல்கிறது. இப்படியான “சீரழிவுகள்” அனைத்திற்கும் புத்தருக்குப் பின் அரச மதமாக பௌத்தம் மாறியதும், பிக்குகளுக்கு உடல் உழைப்பில்லாத சொகுசான வாழ்க்கை முறை ஒன்று சாத்தியமானதும்தான் காரணம் என்கிறார் சட்டோபாத்யாயா. இதில் பேரளவு உண்மை உண்டென்ற போதிலும் இதுவே முழு உண்மை ஆகாது. பௌத்தத்தின் அடிநாதமாக உள்ள பண்புகள் நாம் விவாதிக்கக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் கூட பல்வேறு பவுத்தப் போக்குகளில் தாக்கம் செலுத்தத்தான்  செய்தன.

இன்று இலங்கை முதலான நாடுகளில் உள்ள மக்கள் கூடும் பௌத்த ஆலயங்களில் இப்படிப் பிள்ளையார், இலக்குமி உட்பட்ட இந்துக் கடவுளரும் இடம் பெறுவதைக் காண்கிறோம். இலங்கை ‘ஜனாதிபதிகள்’ இந்தியா வந்தால் அவர்கள் திருப்பதிக்குப் போகாமல் திரும்புவதில்லை என்பதையும் பார்க்கிறோம். இது இலங்கையில் மட்டுமல்ல. சீன பௌத்தம் ‘டிராகன்’ முதலான தொன்மங்களை ஏற்றுக் கொண்டுள்ளதை அறிவோம்.

இங்குதான் நாம் “மதம்” என்பதன் சில அடிப்படையான பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மதம் சமூக வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிக்கிறது. ஒரு திருமணத்தை ஆசீர்வதிப்பது (solemnize) அல்லது பிறந்த குழந்தை ஒன்றிற்குப் பெயர்வைப்பது முதலான சடங்குகளின் ஊடாக அக் குழந்தையைச் அச்சமூகத்தின் உறுப்பினராக ஏற்பது முதலான அம்சங்களில் மதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மரணத்திற்குப் பிந்திய நிலை (soteriology) என்பதோடு மனித வாழ்வில் மதத்தின் பங்கு முடிந்து விடுவது இல்லை. எனவே ஒரு மதம், “மதம்” – ஆகவும் இருக்க வேண்டியும் உள்ளது. முற்றிலும் சமூக வாழ்விலிருந்து ஒதுங்கிய ஒரு இயக்க அமைப்பு போல  ஒரு மதம் இருந்துவிட இயலாது.

ரொமிலா தாபர் சொல்வதுபோல அசோகரின் அகிம்சை அன்றைய சூழலில் அவரது தேச எல்லை விரிவாக்கத்திற்குத் துணைபுரிந்தது என்பது உண்மைதான். ஆனால் உலக வரலாற்றில் சிறைக் கைதிகளை முன்கூட்டி விடுவிக்கவும், மரண தண்டனைக் கைதிகளுக்கு அவர்களது வீட்டாரைச் சந்தித்து இரக்கத்தின் அடிப்படையில் விடுதலை கோரச் சொல்லி அதனூடாக அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கும் என்றே சிறப்பு அரசு அதிகாரிகளை நியமிப்பது என்பதெல்லாம் வேறெங்கும் நடந்ததில்லையே. பௌத்தம் அன்றைய நிலையில் அசோகரின் பேரரசு விரிவாக்கத்திற்கு உதவி இருந்தபோதிலும் அதே நேரத்தில் அரச வரலாறுகள் எதிலும் காணப்படாத இத்தகைய அவரது அறம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் இந்த பௌத்தமே அடிப்படையாக இருந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

நாளந்தா பல்கலைக் கழகத்தில் எவ்வாறு பிக்குகள் உடலுழைப்பை விட்டு தத்துவார்த்த விசாரங்களில் மட்டுமே ஈடுபட்டனர் என சட்டோபாத்யாயா விவரிக்கிறார். அது உண்மைதான். ஆனால் அன்றைய இந்தியாவின் பாரம்பரியக் குருகுலக் கல்வி முறையிலிருந்து பௌத்தக் கல்விமுறை எவ்வாறு வேறுபட்டத்து என்பதையும் காணவேண்டி உள்ளதே. ஒரே ஒரு துறையில் வல்லுனராக இருந்த ஒரு குருவிடம் அவரது வீட்டிற்குச் சென்று கல்வி கற்பது என்பதுதான் குருகுல வாசம். கடுமையான வருணாசிரம முறை அங்கு எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது என்பதற்கு சம்புகன், ஏகலைவன் ஆகியோரது வரலாறுகளே சாட்சி.. ஆனால் பௌத்த பல்கலைக்கழகங்கள் என்பன பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்வேறு துறை வல்லுனர்களும், யுவான் சுவாங், இட்ஷிங் உட்படப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்க்ளும் ஓரிடத்தில் கூடி கல்வி பயின்ற இடமல்லவா.. .

மூன்றாவதாக பௌத்தத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து சட்டோபாத்யாயா வைக்கும் விமர்சனம் பௌத்த தர்க்கமும் கூட எவ்வாறு போகப் போக பழுதுபட்டது என்பது குறித்து. இன்றளவுக்கும் உண்மை குறித்த ‘சரி’ / ‘தவறு’ எனும் இரண்டே சாத்தியங்களை முன்வைக்கும் மேலைத் தத்துவத்தைக் காட்டிலும் “நான்கு மூலைகள்” எனும் நான்கு சாத்தியங்கள் குறித்த பௌத்த தர்க்கம் மேலான சாத்தியங்களுக்குத் திறப்ப்பு அளிப்பதாகத்தானே உள்ளது. சற்று விளக்கமாகப் பார்ப்போம்..

(அடுத்த இதழில் மணிமேகலை விரிக்கும் பௌத்த தர்க்கம்).

மெக்காலே கல்விமுறை அவதூறுகளும் உண்மையும்

மோடி அரசின் இன்றைய கல்விக் கொள்கை எவ்வாறு எளிய மக்களுக்கு எதிரானதாகவும், கார்பொரேட்களுக்குச் சாதகமாகவும் , மக்களைத் தரம்பிரிப்பதாகவும் உள்ளது என்பதை எழுதினால் அதை இந்துத்துவம் எப்படி எதிர்கொள்கிறது…..

சிம்பிள். “எல்லாம் அந்த ஆங்கில மெக்காலே சாக்கடையைவிட நல்லாத்தான் இருக்கும். மூடு.” –

இப்படிச் சொல்லி தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நோக்கில் முப்வைக்கப்படும் நமது கருத்துக்கள் முரட்டுத்தனமாக ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுகின்றன.

இதற்கு மெக்காலே கல்விமுறை குறித்து இங்கே பல பத்து வருடங்களாகப் பார்ப்பன எழுத்தாளர்கள் எழுதி வைத்து, பின் ‘காலச்சுவடு’, ‘தி இந்து’ வகையறாக்களால் அவ்வப்போது ஊதி ஊதி தீ மூட்டப்பட்ட கருத்துக்கள் பின்னணியாக அமைகின்றன.

அதென்ன மெக்காலே கல்விமுறை என்று கேட்டால் அவர்கள் ஒன்றைத்தான் சொல்வார்கள். “அது ஆங்கிலேயருக்குத் தேவையான குமாஸ்தாக்ககளை உருவாக்குகிற கல்விமுறை”

ஆங்கிலேயர்கள் குமாஸ்தாக்களைத் தயாரிக்கத்தான் நவீன கல்விமுறையைக் கொண்டுவந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும். நேற்று வாஜ்பாயியும் இன்று நரேந்திர மோடியும் கொண்டு வரும் கல்விமுறை உலகாளும் எஜமானர்களை உருவாக்குவதற்கான கல்வி முறையா?

இன்று அவர்கள் கொண்டுவரும் கல்விமுறை உள்ளூர் முதலாளிகளுக்கு மட்டுமல்ல உலக முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்கானதுதானே?

நம் மாணவர்களைத் தரம்பிரித்து ஒரு சாரரை வெறும் திறன் பயிற்சியாளர்களாக ஆக்கும் கல்வி முறைதானே இவர்கள் உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை. மெக்காலேக்கு முன்னால் இங்கு என்ன கல்விமுறை இங்கிருந்தது. இவர்களின் குருகுலக் கல்விமுறையின் லட்சணத்தைப் புரிந்து கொள்வதற்கு ஏகலைவன், சம்புகன் முதலானோரின் வரலாறுகள் போதாதா?

பெண்களுக்கு அன்று கல்வி வாய்ப்பிருந்ததா? தேவதாசிகளுக்குத்தானே அன்று கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.  அதுவும் அவர்களிடம் வருபவர்களை எல்லா வகைகளிலும் மகிழ்வூட்டுவதற்கான கல்விதானே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பண்டைய இந்தியாவில் நாளந்தாவிலும், விக்கிரமசீலத்திலும் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழல்கங்கள் பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. குருகுல முறை போல வருணம் பார்த்து சாதி பார்த்து குருவின் வீட்டிற்குச் சென்று சேவை செய்து அவருக்குத் தெரிந்த பாடத்தை மட்டுமே கற்றுவரும் கல்விமுறை அல்ல பண்டைய பௌத்தக் கல்வி முறை. அவை நவீனபாணியிலான பல்கலைக் கழகங்களின் வடிவில் அமைந்தவை. பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்துறைப்பட்ட கல்வியாளர்கள் ஓரிடத்தில் கூடி அங்கு பல திசைகளிலிருந்தும் வந்த மாணவர்களுக்கு அறிவூட்டிய நவீன வகைக் கல்விச்சாலைகள் அவை. குருகுலக் கல்வியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது அது.

மெக்காலே சதித் திட்டத்துடன் இங்கே ஆங்கிலக் கல்விமுறையைப் புகுத்தினார் என “நிரூபிப்பதற்காக” இந்துத்துவவாதிகளால் செய்யப்பட்ட ஒரு Qப்ராட் தான் அடுத்து உள்ள இந்தப் படம்.செய்யப்பட்ட ஃப்ராட்

இந்தப் படத்தைப் பாருங்கள் இப்படி ஒரு ருபாக்கூர் தகவல் ஒன்று சிலகாலம் முன் இங்கே வைக்கப்பட்டது. 1835 ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே பேசிய உரை இது எனக் குறிப்பிடப்பட்டது.

இதில் மெக்காலே கூறியதாகச் சொல்லப்படும் கருத்தின் சுருக்கம் இதுதான்:

“நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் கூடக் கிடையாது. ஒரு திருடர் கிடையாது. மிக்க வளமான நாடு. உயர்ந்த ஆன்மீக மதிப்பீடுகள் கொண்ட நாடு. அதை வென்று அடிமைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு முதலில் அதன் இந்த வலிமையை உடைத்துத் தகர்த்தாக வேண்டும். அதனுடைய முதுகெலும்பாக உள்ள அதன் ஆன்மீக கலாச்சார மதிப்பீடுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு நான் முன்வைக்கும் திட்டம் என்னவென்றால் அதன் பண்டைய கல்விமுறையை முதலில் தகர்க்க வேண்டும்.. அதனிடத்தில் ஆங்கிலக் கல்விமுறையை வைத்தால் தங்களுடைய கலாச்சாரம் முதலியவைதான் உயர்ந்தது என்கிற சுய பெருமிதத்தை அவர்கள் இழப்பார்கள்”

-என்பதுதான் மெக்காலேயின் உரையாக இந்த ஃப்ராட் கள் முன்வைத்த செய்தி. அதாவது மெக்காலே இந்தியாவை அடிமைப்படுத்துவதற்காக ஆங்கிலேயக் கல்விமுறையை ஒரு சதி நோக்குடன் இங்கே புகுத்தினார் என்கிற கதையை உருவாக்குவதற்கு இது முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் வருகைக்கு முன்னதாக இங்கே திருட்டுப் பயங்கள் முதலியன இல்லாமல் வளம் கொழித்திருந்ததாகவும் ஒரு ஆகச் சிறந்த கல்விமுறை இந்திய மக்களுக்கு இருந்ததாகவும் அது மெக்காலேயால் இந்தச் சதி நோக்கத்துடன் தகர்க்கப்பட்டது என்னபது பொருள்.

முதலில் இங்கு சொல்லப்படும் இந்தக் கருத்துக்கள் எல்லாமே தவறு.

1. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கே விரிவான எல்லா மக்களுக்குமான ஒரு கல்வி முறை இருந்ததில்லை. இங்கிருந்த குருகுலக் கல்விமுறையில் ஆக உயர்ந்த மேற்சாதி மேற்தட்டினரே கல்வி கற்றனர். மோத்தத்தில் அப்படிக் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை ஒரு 5% கூடத் தேறாது..

2. இந்தக் காலகட்டத்தில் இதில் சொல்லப்படுகிறபடி இந்தியாவில் வளம் கொழிக்கும் நிலை இல்லை. ஏற்கனவே அவை பஞ்சம் முதலியவற்றாலும் பிரிட்டிஷ் வணிகக் கொள்ளை முதலியவற்றாலும் இந்திய வளங்கள் சூறையாடப்படிருந்தன. சற்றுப் பிந்திய காலகட்டத்தில் நியூயார்க் ட்றிப்யூன் இதழில் கார்ல் மார்க்ஸ் இங்கிருந்த சுரண்டல், வறுமை நிலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளதை நான் கார்ல் மார்க்ஸ் பற்றிய கட்டுரைத் தொடரில் மொழியாக்கித் தந்துள்ளேன்.

3. மெக்காலே அப்படியெல்லாம் ஜி.யூ.போப், வீரமா முனிவர் அல்லது கால்டுவெல் போல ‘திருக்குறள்’ முதலான இந்திய அறிவுச் செல்வங்களால்ல் ஈர்க்கப்பட்ட ஒரு அறிஞர் அல்ல. அவர் ஒரு கம்பெனி அதிகாரி. பிரிட்டிஷ் ஐரோப்பியப் பெருமிதங்களைச் சுமந்த ஒரு வெள்ளை பீரோக்ரட்தான் மெக்காலே.

சரி மெக்காலே இவ்வாறு பேசியது உண்மையா?

இந்த உரையை அவர் 1835 பிப் 02ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசினார் என்பது அபத்தம். மெக்காலே 1834 லேயே இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆளுநருக்கு ஆலோசகர் எனும் பதவியை ஏற்க இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டுவிட்டார். 1838 வரை அவர் இங்கிலாந்து செல்லவில்லை.

சரி ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்து கொண்டு அந்த உரையை ஆற்றியிருப்பார், ஊர் பெயர் மட்டும் தப்பாகிவிட்டது எனக் கொள்ளலாமா? அதுவும் இல்லை. அன்றைய தேதியில் அவர் ஆற்றிய ஒரு முக்கியமான உரையில் (the ‘Minute [on Indian education] by the Hon’ble T.B. Macaulay, dated February 2, 1835) இந்தச் சொற்கள் எதுவும் கிடையாது.

அதோடு மெக்காலே பேசியதாகக் கூறப்படும் இந்த உரையின் மொழி மிக்க நவீனமானது. அன்றைய மொழிநடை அல்ல அது. மெக்காலேயின் கடிதங்கள் பல தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன (Letters of Thomas Babington Macaulay). அவற்றிலும் இந்த வாசகங்கள் இல்லை.

மெக்காலே ஒரு சதி நோக்குடன் ஒரு கல்விமுறையைப் புகுத்தி நம்மை அழித்துவிட்டதாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கே அறிவு கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், ஒரு உயர்ந்த கல்விமுறை இருந்ததாகவும், அதை அழித்து பிரிட்டிஷ் கவி முறையை இங்கு புகுத்தியதாகவும் சொல்ல என்னென்ன டுபாகூர் களை எல்லாம் சங்கி மூளைகள் செய்கின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எதை வேண்டுமானாலும் உண்மையாகச் சித்திரித்து “போஸ்ட்கள்” போட்டுவிடலாம் என்கிற காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஃப்ராட் வேலைதான் இது.

 (Ref: Anirban Mitra, The Infamous Macaulay Speech That Never Was, The Wire, Feb 19,2017)

மெக்காலே கல்வி முறை உருவானதன் பின்னணி : சில குறிப்புகள்

ஏற்கனவே இங்கு புகுத்தப்பட்டுள்ள கருத்துக்களைக் கொஞ்சம் நம் மூளையிலிருந்து கழற்றி எறிந்துவிட்டுத் திறந்த மனத்துடன் நாம் மெக்காலேயின் (தாமஸ் பேபிங்டன் மெக்காலே 1800 – 1859) காலகட்டத்திற்குச் செல்வோம். அவர் இந்தியாவிற்கு வந்து முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்ட காலம் 1834- 1838. அப்போது கப்பல் பயணம்தான். வருவதற்கும் போவதற்கும் பயணக் காலம் குறைந்த பட்சம் 6 மாதங்கள் என வைத்துக் கொண்டாலும் அவர் இங்கிருந்த காலம் சுமார் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள்தான். இந்த மூன்றான்டுகளில் அவர் இங்கு மேற்கொண்ட முக்கிய பணிகள் மூன்று. அவை:

1.புதிய ஆங்கிலக் கல்விச் சட்டம் (1935) இயற்றியது,

2.குற்ற நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) உருவாக்கியது, 3.ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்தியர்களுக்கும் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்று (கறுப்புச் சட்டம்) இயற்றியது ஆகியனவே அவர் இங்கு செய்த பணிகள்.

அவர் வந்த காலகட்டதில் இங்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் சுதந்திரப்போர் எனக் கூறப்படும் 1857 பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு முந்திய காலகட்டம் அது. அப்போது இங்கு நேரடியான பிரிட்டிஷ் அரசியின் ஆட்சி நடைபெறவில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை. ஆங்காங்கு பல்வேறு மொழிகள், பண்பாடுகள், தேச வழமைகள் என்பதாக இந்தியா தொடர்ந்தது.

மெக்காலே இங்கு வருவதற்கு முன்பே ஆங்கிலக் கல்விச்சட்டம் உருவாக்குவதற்கு இங்கொரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு இரு சரிபாதிகளாகப் பிரிந்து இரு எதிர் எதிர்க் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு குழு அப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போதுமானது என்றது. அப்போதுள்ள நிலை என்றால் ஒரு பக்கம் சமஸ்கிருதக் கல்வி, இன்னொறு பக்கம் முகலாய ஆட்சிகள் இருந்த பகுதிகளில் பெர்சியன் மற்றும் அரபிக் கல்விகள். மற்றொரு குழு ஆங்கிலக் கல்வியை முன்மொழிந்தது. கல்வித் திட்டம் வகுக்கும் பொறுப்பை ஏற்குமுன் மெக்காலே முதலில் இதற்கொரு முடிவு காணுதல் அவசியம் என்றார்,

இப்போது அன்றைய உலகக் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சற்றுக் காண்போம். நவீனத்துவம், மறுமலர்ச்சி என்றெல்லாம் சொல்லும் புதிய விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு விழிப்புணர்வு உருவாகாத மூட நம்பிக்கைகளின் நாடாக இந்தியா இருந்தது என்பதைத் தனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பலமுறை, ஆம் பலமுறை தந்தை பெரியார் சுட்டிக் காட்டி இருப்பதை நாம் அறிவோம். தத்துவ வளர்ச்சியின் வரலாற்றில் மேலை நாடுகளில் உருவான “அறிவொளிக்காலம்” (Enlightenment) எனப்படும் தத்துவ மறுமலர்ச்சி இங்கு உருவாகவே இல்லை. சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோருடைய காலத்தோடு இங்கு தத்துவ வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பௌத்த தத்துவ வளர்ச்சிகளும் காஞ்சி மற்றும் அமராவதி காலத்துடன் தேக்கமுறுகிறது.

கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில் குருகுலக் கல்விக்கு மாற்றாக பௌத்தம் உருவாக்கிய நாளந்தா, விக்ரமஷீலம் முதலான பல்கலைக் கழகங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் மேலை நாடுகளில் உருவாகியிருந்த அறிவொளிக்கால விழிப்புணர்வு கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

முதல் முதலாக நவீன மாதிரியான பல்கலைக் கழகம் என்கிற கருத்தாக்கம் அங்குதான் உருவானது. ஜெர்மனி இதில் முக்கிய பங்கு வகித்தது. புகழ்பெற்ற தத்துவ ஞாநிகள் ஃபிச்டே , ஹம்போல்ட் முதலானோர்அதற்கான Blue Print ஐ உருவாக்கித் தந்த வரலாற்றை லியோடார்ட் விரிவாக விளக்கியுள்ளார் (பார்க்க :எனது பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகள்).

பல்வேறு புதிய கல்வித்துறைகள் உருவான இச்சூழலில் ஏற்கனவே கல்வி என்றால் லத்தீன் / கிரேக்க மொழிகளில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனும் நிலை அங்கு இவ்வாறு தகர்ந்தது. பதிலாக நவீன மொழிகள் கல்வி மொழிகளாயின.

இங்கும் அப்படியான ஒரு புதிய கல்விமுறை உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு அறிமுகப்படுத்திய நவீன மாற்றங்களின் ஊடாக அது நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் வணிகத் தொடர்பு மற்றும் அதை ஒட்டி மதம் பரப்ப இங்குவந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களின் வழியாக நவீன கல்வி வளர்ச்சி இங்கே அரும்பத் தொடங்கியது. அது சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகளைத் தவிர்த்து ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு நவீன கல்வியை இங்கே பெரிய அளவில் அறிமுகப் படுத்தியது.கல்வி முறையில் இங்கு பாரம்பரியமாக இங்கே நிலவிய சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை முதலான ஒடுக்குமுறைகள் ஆகியன நிபந்தனையாக்கபடாத ஒரு கல்வி முறையாகவும் அது இருந்தது.

மெக்காலே இந்த இரண்டாவது போக்கை ஆதரித்தார். உயர் கல்வி ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வி ஆங்காங்குள்ள தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கற்கும் கல்வியை அவ்வாறு கற்கும் இந்தியர்கள் தத்தம் தாய்மொழிக்குக் கொண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

“இந்திய மக்களை எப்போதுமே நமக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எப்போதுமே அறிவிலிகளாகவும் தற்குறிகளாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை நோக்கி ஆசைப்படாத ஒரு அறிவை மட்டும் அவர்களுக்குத் தந்தால் போதும் என்கிறோமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை விதைத்துவிட்டு அதற்கு வழி இல்லாமல் செய்யப்போகிறோமா? இந்தக் கேள்விகளில் யாதொன்றுக்காவது ‘ஆம்’ என யார் பதிலளிக்கப் போகிறார்கள்? எனினும் இந்த நாட்டு மக்களை உயர் பதவிகளிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க விரும்பும் யாரும் இதில் ஏதேனும் ஒன்றிற்காகவாவது ‘ஆம்’ எனப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு அச்சங்கள் இல்லை. கடமையின் பாதை இதோ தெளிவாக நம் முன்… அதுவே பேரறிவின் பாதை…தேசச் செழுமையின் பாதை.. தேசப் பெருமையின் பாதை..”- என்பதாக அவர் உரை அமைந்திருந்தது.

அன்று உருவாகியிருந்த ஒருவகை உலகளாவிய (utilitarian liberal universalism -Rudolphs) போக்குடன் இசைந்ததாக நமது கல்வியை நவீனப்படுத்துவது என்பதாக அவரது பார்வை அமைந்தது என்பது இங்கே கவனத்துக்குரியது. “சுவையிலும், ஒழுக்கத்திலும், கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் ஆங்கிலேயத் தன்மை மிக்க” இந்தியர்களையும் இந்தியாவையும் உருவாக்குதல் குறித்து மெக்காலே பேசியதை நாம் இப்படியும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி, தீண்டாமை, மதம், பல கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவை நவீன உலகிற்கு இட்டுச் செல்லுதல் என்பதான ஒரு நோக்கம் அதில் வெளிப்படுவதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ஆனால் 1850 க்குப் பின் இங்கு நிலைமை மாறியது. நவீன இந்தியாவின் முக்கியமான திருப்பப் புள்ளிகளில் ஒன்று 1857. சிப்பாய்க் கலகம், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி, முதல் சுதந்திரப் போர் என்றெல்லாம் பலவாறாகச் சித்திரிக்கப்படும் இந்த எழுச்சி கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடன்றி இந்திய ஆளுகை பற்றிய காலனிய அரசின் அணுகல் முறையில் சில முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது. வில்லியம் பென்டிக், மெக்காலே, டல்ஹவுசி முதலானோரால் 1830 -50 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாராளப் பொதுமை என்பதிலிருந்து சற்றே பின்வாங்கும் நிலையை விக்டோரியா மகாராணியின் பிரகடனம் (1858) வெளிப்படுத்தியது. 1857 எழுச்சியை அவர்கள் கொடுங் கரங் கொண்டு ஒடுக்கியபோதும் இந்திய மக்களின் எதிர்ப்பின் வன்மை அவர்களின் ஈரக்குலைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.

இனி இந்தியர்களின் தேச வழமைகளில் தலையிடுதல், வாரிசு இல்லை என்றெல்லாம் சொல்லி வன்முறையாக அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றல் (doctrine of lapse) என்பதையெல்லாம் கைவிட்டு, வேறுவகை அணுகல் முறைகளைக் கைக்கொண்டு தங்களின் காலனியச் சுரண்டலைத் தொடர்வது என்கிற நிலைக்கு இட்டுச் சென்றது.

விக்டோரியா மகாராணியின் அறிக்கை,

“இனி மதநம்பிக்கை, மற்றும் (அவை சார்ந்த) வழமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கும் சலுகைகள் காட்டுவதோ, இல்லை அவற்றின் அடிப்படையில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதோ இருக்காது. எல்லோரும் ஒன்றேபோல சமமான, பாரபட்சமற்ற சட்டப் பாதுகாப்புகளைப் பெறுவர். இனி எமது ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் உள்ள யாரும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு வழமைகளில் தலையிடக் கூடாது என உறுதியாக ஆணையிடப்படுவர்” – எனப் பிரகடனப் படுத்தியது குறிப்பிடத் தக்கது.

உலகளாவிய பொதுமை என்பதான பயன்பாட்டுவாதிகளின் (utilitarian) அணுகல் முறைகளிலிருந்து சற்றே விலகுதல் என 1957 க்குப் பின் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு மக்களின் தனித்துவமான மதம் சார்ந்த ஒழுகல் முறைகள், சாதி முதலான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன சட்டப் பாதுகாப்புகளுடன் இங்கு தொடர வாய்ப்பாக்கியது. இந்தியச் சனாதனத்துடன் பிரிட்டிஷ் ஆளுகை சமரசம் செய்து கொண்ட பின்னணி இதுதான்.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

மெக்காலே குறித்த சங்கிகளின் ஃப்ராட்பரப்புரைகள்

மெக்காலே இந்தியாவில் உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த அறிவு விகர்ச்சிக்கு உரிய வகையில் ஒரு பொதுக்கல்வி முறையை உருவாக்கினார்.

எனினும் சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட முதல் (1857) புரட்சிக்குப் பின் இந்தியர்களைக் கையாள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி சில எச்சரிக்கைகளைக் கடை பிடித்தது. அவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாமே பாராட்டுக்குரியவை அல்ல. குறிப்பாக இங்குள்ள சாதி, தீண்டாமை முதலான தேச வழமைகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடுவதில்லை என எடுத்த முடிவு அடித்தள மக்களைப் பொருத்த மட்டில் பெரிய இழப்பாகவே இருந்தது.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

இந்தப் புதிய கல்விமுறைக்கு இணையாக இங்கு இன்னொரு அறிவுப் புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வடமொழிகளும் தென்மொழிகளும் முற்றிலும் வெவ்வேறான தனித்தன்மைகள் கொண்டவை என்கிற ஆய்வுகள், சிந்து வெளி அகழ்வுகள் முதலியன இந்திய மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை உருவாக்கின.

அச்சுக்கலையின் ஊடாக இதுகாறும் அழிந்துகொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த தமிழ் சிரமண நூல்களில் எஞ்சியவை காப்பாற்றப்பட்டன.

புதிய கல்விமுறை இங்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குச் சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வை முந்திய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். அறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தனது ஆசான் மாயவரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலக் கல்வி பயின்றது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அறுபதாயிரம் பாடல்கள் இயற்றியவர் என அறியப்படும் மீனாட்சி சுந்தரனாரிடம் கல்வி கற்றுத்தேறிய உ.வெ,சா அடுத்து அன்று புதிய ஆங்கில முறை நவீனக் கல்லூரியாக உருவாகியிருந்த குடந்தை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர்தான் சீவகசிந்தாமணி முதலான சிரமண மரபில் வந்த பெருங்காப்பியங்கள் முதலானவற்றின் இருப்பையே அறிகிறார். பல ஆண்டுகள் பாரம்பரியக் கல்வியைக் கற்றிருந்தபோதிலும் அவற்றை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அவரது தன்வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.

நவீன பத்திப்புக் கலையின் ஊடாகவே சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சா முதலான நம் தமிழறிஞர்கள் பல சிதைந்து அழிந்து கொண்டிருந்த தமிழ் நூல்களைக் காப்பாற்றி நம் தலைமுறைகளுக்குக் கையளித்தனர்.

டாக்டர் அம்பேத்கர் போன்ற அடித்தளச் சமூகத்திலிருந்து உருவான அறிஞர் பெருமக்கள் புத்தருக்குப் பின் அதுகாறும் கண்டிராத புதிய விழிப்புணர்வு உருவாவதற்கும் காரணமாயினர்.

நவதாராளவாதத்தின் வீழ்ச்சியும் வரலாற்றின் மறுபிறப்பும்- ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ்

(2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின் தலைவராக உள்ளார். இந்தக் கட்டுரையில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை அவர் 2000க்கு முந்திய ஆண்டுகளில் இதே தீவிரத்துடன் அவர் வலியுறுத்தி இருந்தாரேயானால் அவருக்கு நோபல் வழங்கப்பட்டிருக்குமா என்பது கூட ஐயமே. 2008 ல் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி திறந்த சிந்தனையுடைய அறிஞர் பெருமக்களை முதலாளியப் பொருளாதாரம், நவ தாராளவாதம் ஆகியன குறித்த மறு சிந்தனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட சந்தை என்பது மார்க்சியத்தின் பங்களிப்புகளில் ஒன்று. நேருகால இந்தியப் பொருளாதாரமும் அதை ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொண்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயல்படுத்த ‘திட்ட ஆணையம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. மன்மோகன்சிங் காலத்திலேயே அது பலவீனப்படுத்தப்பட்டது. நரேந்திரமோடியின் காலத்தில் அது முற்றாக அழிக்கப்பட்டது.

2008 ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி “சுதந்திரச் சந்தை” என்கிற முதலாளிய அணுகல்முறையைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் உலக முதலாளியம் அதை ஏற்கவில்லை. ஸ்டிக்லிட்ஸ் போன்ற அறிஞர் பெருமக்கள் வெளிப்படையான மனநிலையுடன் இதை எதிர்கொண்ட பின்னணியில், இன்று அவர்கள் மீண்டும் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிய திருப்பத்தைப் பரிந்துரைத்து உலகை எச்சரிக்கை செய்கின்றனர்,. அவசியம் படித்துச் சிந்திக்க வேண்டிய கட்டுரை இது. இது மட்டுமல்ல. என் கண்ணில் பட்ட வரைக்கும் நான்கைந்து கட்டுரைகள் சமீப காலத்தில் இந்தத் தொனியில் எழுதப்பட்டுள்ளன. கொரோனோவின் பின்னணியில் உருவான ஒரு எளிய நன்மை என்றே இதை நாம் கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் முதலானவை இன்று கடந்த நாற்பதாண்டுகால நவ தாராள அணுகல் முறை, உலகமயம் ஆகியன குறித்த பல கேள்விளை உலகின் முன் வைத்துள்ளன. பொருளாதாரம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த கருத்துக்கள் பலவும் இன்று மீள்வாசிப்புக்கு உள்ளாகியுள்ளன.– அ.மார்க்ஸ்)

"This is my new protest shirt. I bought it as an online bargain!"
“This is my new protest shirt. I bought it as an online bargain!”

1.சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியோடு ‘பனிப்போர்க்காலம்’ (Cold War) முடிவுக்கு வந்தது என்பார்கள். அப்போதுதான் எல்லோராலும் கொண்டாடப் பட்ட ஃபகுயாமாவின் “வரலாறு முடிவுக்கு வந்ததா?” (Francis Fukuyama , The end of history?) எனும் நூல் வெளிவந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் ஊடாக ‘தாராள ஜனநாயகம்’ (Liberal Democracy) மற்றும் ‘சந்தைப் பொருளாதாரம்’ (Market Economy) ஆகியவற்றிற்கு இருந்த கடைசித் தடையும் அகன்றுவிட்டது என்பது இதன் பொருள். பொதுவான ஏற்பு அந்நூலுக்கு இருந்தது. முதலாளிய ஆதரவாளர்கள்  அதைக் கொண்டாடினர்.

2.விதிகளின் அடிப்படையில் இயங்கும் தாராளவாத உலக ஒழுங்கிலிருந்து நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டுள்ளோம். இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற நாடுகள் எதேச்சாதிகார வாய்வீச்சு வீரர்களால் ஆளப்படுகின்றன. ஃபகுயாமாவின் கருத்துக்கள் காலாவதி ஆனதாகவும், அபத்தமானதாகவும் இன்று ஆகிவிட்டன. ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு கோலோச்சும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் இன்று இன்னும் தீவிரமாகத் திணிக்கப்படுகின்றன.

3.கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கிற நவதாராளவாத நம்பிக்கை இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் நவதாராளவாதத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை சிதைவது என்பது ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. நவதாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஜனநாயக வேர்களை அறுத்துள்ளது,

4.நவதாராளவாதத்தால் (NeoLiberalism) முன்வைக்கப்படும் உலகமயம் என்பது தனிநபர்களையும், மொத்தச் சமூகத்தையும் தமது சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆக்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் டானி ரொட்ரிக் தனது நூலிலும், (Dani Rodrik, Straight talk on Trade) நான் எனது சமீபத்திய நூல்களான “உலகமயமும் அதன் அதிருப்திகளும்- ஒரு மறு பரிசீலனை) Globalization and Its Discontents Revisited) மற்றும் (மக்கள், அதிகாரம் மற்றும் லாபங்கள் (People, Power, and Profits) ஆகியவற்றிலும் இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

5.மூலதனச் சந்தையைத் திறந்து கட்டுப்பாடுகள் இன்றி தாராளமயமாக்குதல் (capital- market liberalisation) என்பது மிகக் கொடூரமானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒரு வேட்பாளர் ‘வால் ஸ்ட்ரீட்’டின் ஆதரவை இழந்தாரானால் அந்த நாட்டிலிருந்து தங்கள் பணத்தை வங்கிகள் எடுத்துவிடும். வளர்ந்துவரும் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன்மூலம் உருவாகும் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையா, இல்லை  உங்களின் ஆதரவுக்குரிய வேட்பாளரின் வெற்றியா எது வேண்டும் எனும் கேள்வி அம் மக்கள் முன் வைக்கப்படும். இதன் பொருள் குடிமக்களைக் காட்டிலும் வால் ஸ்ட்ரீட் அதிக சக்தி உடையது என்பதுதான்.

6.வளர்ந்துவரும் நாடு என்பதாக அன்றி ஒரு வளர்ச்சி அடைந்த பணக்கார நாடாக இருந்தாலும் கூட சாதாரண மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைதான் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசைக் கோர முடியாது. சமூகப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வரிச் சீரமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு என எதையும் நீங்கள் கோர இயலாது. “நாடு சந்தைப் போட்டியைச் சமாளிக்க இயலாமல் பலவீனமாகிவிடும். வேலை வாய்ப்புகள் சுருங்கும். நீங்கள்தான் இதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என நீங்கள் எச்சரிக்கப்படுவீர்கள்.

7.பணக்கார நாடாக இருந்தாலும் சரி, ஏழை நாடானாலும் சரி எதுவானாலும் அங்குள்ள மேட்டிமைச் சக்திகள் (elites), “நவதாராளவாதக் கொள்கைகளால் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் வரும் பயன்கள் எல்லோரையும் வந்தடையும். ஏழைகள் உட்பட எல்லோரும் பயனடைவர். இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் திருப்தி அடைய வேண்டும். அது மட்டுமல்ல எல்லோருமே முக்கிய அரசு நலத் திட்டங்கள் குறைக்கப்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும்”- என வாக்குறுதிகள் அளிப்பார்கள்.Neo 3

8.தங்களின் வாக்குறுதிகள் விஞ்ஞானபூர்வமாக வகுக்கப்பட்டன எனவும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் எல்லாம் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். (இத்தகைய நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி) அப்படி 40 ஆண்டுகள் இன்று ஓடி விட்டன. இதோ நம் முன் எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளன. வளர்ச்சி வேகம் குறைந்துதான் உள்ளதே ஒழிய அதிகரிக்கவில்லை. அடைந்துள்ள வளர்ச்சியின் பயன்களும் மேலே உள்ள ஒரு சிலரைத்தான் எட்டியுள்ளன. ஊதிய உயர்வுகள் இன்றி தேக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. வருமானமும் வளர்ச்சியும் மேல்நோக்கித்தான் நகர்கின்றனவே ஒழிய கீழே உள்ளவர்களுக்குக் கசியவில்லை.

9.போட்டியைச் சமாளிப்பது எனக் காரணம் சொல்லி ஊதிய உயர்வு இல்லை எனக் கட்டுப்படுத்துவதும், அரசுத் திட்டங்களைக் குறைத்துக் கொள்வதும் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழி வகுக்கும்? சாதாரண மக்கள் தாங்கள் விலைக்கு விற்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப் பட்டவர்களாகவுமே உணர்வர்.

10.இந்த மாபெரும் ஏமாற்றத்தின் அரசியல் பின்விளைவுகளை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். மேட்டிமைச் சக்திகளின் நம்பிக்கத் துரோகம், நவ தாராளவாதத்தின் அடிப்படையாக உள்ள இவர்களின் “பொருளாதார அறிவியல்’’, இவற்றைச் சாத்தியமாக்கிய ஊழல் மிக்க அரசியல் அமைப்பு ஆகியவற்றின் வஞ்சகத்தை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

11.எதார்த்தம் என்னவெனில் “நவதாராளவாதம்” (Neo Liberalism) என நாம் சொன்னாலும் தாராளவாதத்திற்கும் (liberal) அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒருவகையான அறிவுத்துறைச் சனாதனத்தையே திணித்தது. அதன் பாதுகாவலர்கள் எந்நாளும் மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொண்டதில்லை. பொருளாதாரம் தொடர்பான பழமைவாத-சனாதனச்  சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பொருளியல் அறிஞர்களின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. அப்படியான அறிஞர்கள் ஏதாவது முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். கார்ல் பாப்பர் போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைத்த ‘திறந்த சமூகம்’ (open society) என்கிற கருத்தாக்கத்திற்கும் இவர்களின் நவதாராளவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜார்ஜ் சோரோஸ் சுட்டிக் காட்டியதைப் போல கார்ல் பாப்பர் நமது சமூகம் சிக்கலானது என்பதையும், தொடர்ந்து பரிணாமம் அடைந்து கொண்டே வருவது என்பதையும் சொன்னபோது இவர்கள் அதை கணக்கில் கொண்டதே இல்லை. இப்படியான சமூகங்களில் நாம் எந்தளவிற்கு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அந்த அமைப்பின் இயக்கத்தில் மாற்றத்தை விளைவிக்க முடியும்.

'Oh no, they're rolling back the frontiers of the state!'
‘Oh no, they’re rolling back the frontiers of the state!’

12.நவதாராளவாதிகளின் இத்தகைய சகிப்பின்மை ‘பேரளவுப் பொருளியல்’ (macroeconomics) துறைகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. அதில் அப்போது நடைமுறையில் இருந்த மாதிரிகள் (models) 2008 இல் நாம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அது நேர்ந்தபோது அதை ஏதோ 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளம் என்பது போல அரிதான, முன் ஊகிக்க முடியாத ஒரு அசாதாரணமான விளைவு என்றே அவர்கள் எதிர்கொண்டனர்.

13.இப்போதும் கூட நவதாராளவாதக் கோட்பாடுகளை வலியுறுத்துபவர்கள் வெளி பாதிப்புகளால் பாதிக்கப்படாத, சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சந்தைகள் என்கிற தங்களின் நம்பிக்கையை விட்டுவிடத் தயாராக இல்லை. கட்டுப்பாடற்ற தாராளவாதம்தான் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பழைய கிரேக்ககாலத் தாலமி அரசப் பாரம்பரியத்தினர் போல எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயாமல் அவற்றைத் தமக்குத் தெரிந்த நம்பிக்கைகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முயல்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

14.ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் பயனளிக்காது என்பதை 2008 பொருளாதார நெருக்கடியாலும் கூட நாம் உணராமற் போயிருந்த போதும், இப்போது காலநிலை மாற்றத்தால் (climate change) உருவாகப் போகிற நெருக்கடி உறுதியாக நம்மை உணர வைக்கும். நவதாராளவாதம் நமது சகாப்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்பது உறுதி. நமது நவதாராளவாதிகள் அறிவியலின் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, எதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் இப்போது காட்டிக் கொண்டுள்ள“பொறுமையை” தொடர்வார்களே யானால், அதனால் உருவாகும் பிரச்சினைகள் மேலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது உறுதி.

15.இந்த நம் உலகையும், நம் காலப் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு நம் முன்னுள்ள ஒரே வழி வரலாற்றின் மீள்பிறப்பிற்கு வழி செய்வதுதான். அறிவொளிக்கால சிந்தனையை நாம் இன்னும் வீறுபடுத்துவதுதான்.. சுதந்திரம், அறிவின் ஆற்றல், ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான்.

-Joseph E Stigliz, The End of Neoliberals, and the Rebirth of History, 26,  Nov, @019

இணைப்பு

(“கொரொனா கற்றுத் தந்துள்ள நான்கு பாடங்கள்” என பினோய் ஜோஸ்.பி எழுதியுள்ள “Covid 19: Is this the end of neo-liberalism  எனும் கட்டுரையின் (The Hindu – Business Line ,March 29, 2020) இறுதியிlல் முன்வைக்கும் இக் கருத்துக்கள் இத்துடன் இணைத்துப் பார்க்கத் தக்கன)

1.பெரிய அளவில் பொதுமக்களுக்கு சரியான மருத்துவ நலம் அளிக்கும் திறன் தனியார் மருத்துவ சேவைகளுக்கும், தனியார் மூலதனத்திற்கும் கிடையாது என்பது இன்று இந்த உலகளாவிய கொரோனா தாக்குதல் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

2.ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் போதிய மருத்துவ அகக் கட்டுமானம் இல்லை என்றாலோ, ஏழ்மை மற்றும் தூய்மையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அது தனது பிரச்சினை இல்லை என தொழில் நிறுவனங்கள் கவலையின்றி இருந்துவிட இயலாது. சீனாவில் உள்ள ஒரு வைரஸ் அடுத்த நாட்டிலுள்ள தொழிற்சாலைகளையும் (plants), அடிப்படைத் தேவைகள் வந்துசேறும் சங்கிலித் தொடரின் (supply chain) அடுத்தடுத்த கண்ணிகளையும் உடனடியாகத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு இன்று உலகம் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. எந்த நாட்டில் நாம் வணிகம் அல்லது உற்பத்தி செய்தபோதும் அந்த நாடுகளும் தரமான அடிப்படை மருத்துவ வசதிகள், மருத்துவ சோதனை வசதிகள் எல்லாம் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆக உலகமயம் என்பது வெறும் லாபம் ஈட்டுவதற்கான வழிம்முறை மட்டுமல்ல; அனைத்துப் பொறுப்புகளும், உரிய சேவைகளும் கூடவே உலகமயமாவது கட்டாயமாகிறது.

3.இன்னும்கூட சோஷலிசக் கட்டுமானங்கள் உள்ள நாடுகள்தான் இப்படியான அவசர நிலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது. சாத்தியங்களையும் மருத்துவத் திறன்களையும் ஒருங்கிணைத்து (channelizing massive resources) இப்படியான கொள்ளை நோய்களைச் (pandemics) சமாளிக்கும் திறன் அவைகளுக்குத்தான் உள்ளன. முதலாளிய அமைப்புகள் இந்த அம்சத்தில் சோஷலிச அமைப்புகளுக்கு இணையாக இல்லை என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது.

4.எல்லாவற்றையும்விட முக்கியமான அம்சம் என்னவெனில் பொதுப் பிரச்சினைகளுக்குப் (public problems) பொதுத் தீர்வுகள்தான் (public solutions) வழிகாணமுடியும் என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது. அரசுக் கட்டுப்பாடு இல்லாத தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு முதலாளிய அரசு (a crony capitalist state) பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க இயலாது என்பது இன்று உறுதியாகியுள்ளது. உலகமயம் (globalisation) குலைந்துள்ள இன்றைய நிலையில் எதிர்காலம் என்பது உலக வளங்கள் (resources) இன்னும் சிறந்த முறையில் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு (egalitarian distribution), பொதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட (public Control) சமத்துவ அமைப்பைக் கோருகிறது.krauze-neolib

சமூக வளங்கள் மற்றும் தேவைகள் மீது இன்னும் அதிகமான அரசுக் கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், தனியார் மூலதனத்தின் வரைமுறையற்ற வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்தல் முதலியன நவதாராளவாதம் மற்றும் முதலாளியத்தின் ரசிகர்களை எரிச்சலூட்டும் என்பது உண்மையே. ஆனால் இன்று நாம் சந்தித்த அனுபவங்கள் நமக்கு வேறுபல சாத்தியங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. இன்று கொரோனாவைச் சமாளிக்க ஸ்பெயின் அரசு அந்த நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை எல்லாம் நாட்டுடைமை ஆக்கிய்யுள்ளது இந்தத் திசையில் உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

சமூக – பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொரோனா வைரஸ் தாக்குதலும் 

அ.மார்க்ஸ், Awareness Centre for Corona Preventive Action  (ACCP)

“பொருளாதார ஏற்றத் தாழ்வின் கொடும் விளைவுகளை இன்னும் ஆழமாக்குகிறது இந்தக் கொரான வைரஸ் தாக்குதல்” – நியூயார்க் டைம்ஸ் (மார்ச் 25, 2020). வருமானம் குறைந்த நிலையில் உள்ள மக்கள்தான் பல்வேறுவகைகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளதையும்  அது சுட்டிக் காட்டுகிறது.

நியூயார்க் டைம்சின் இந்தக் கூற்றை நாம் இப்படித் தலைகீழாக மாற்றிச் சொன்னாலும் பொருந்தும். கொரோனா வைரஸ் தாக்குதலின் கொடும் விளைவுகளை இன்னும் அதிகமாக்குகிறது இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வு. இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அமெரிக்க சமூக அரசியல் பின்னணியில் அவர்கள் இதைச் சொல்கின்றனர். எனினும் இங்கும் அது பொருந்தும்.

நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களில் வருமானம் குறைந்த எளியவர்கள்தான் அதிகம். ஒரு வேளை அவர்கள் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பித்து இருந்தாலும் பணி இழப்பின் விளைவாகக் குடும்பத்தோடு துன்புறுபவர்களாகவும் அவர்கள்தான் உள்ளனர் என்கின்றனர் இக் கட்டுரை ஆசிரியர்களான மேக்ஸ் பிஷரும் எம்மா புபோலாவும்.

கொரோனோ வைரஸின் பரவலிலும்,  அதன் உயிர் பாதிப்புத் திறன் பெருகிக் கொண்டே போவதிலும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெரும்பங்கு வகிப்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. இன்ஃப்ளூயென்சா பரவல் குறித்து ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் ஏழ்மை, சமத்துவமின்மை ஆகியன நோய்த் தொற்றுப் பரவலிலும் இறப்பு வீத அதிகரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதை நிறுவியுள்ளன.

அது மட்டுமல்ல. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள இது தொடர்பான ஆய்வு மையம் ஒன்றின் இயக்குனர்களில் ஒருவரான பொது நலத்துறை அறிஞர் (public health expert) நிகோல் ஏ. எர்ரட், “ஏற்கனவே உள்ள சமூக ஏற்றத் தாழ்வினால் ஏற்படும் பாதிப்புகள், இப்படியான பேரழிவுகளின் ஊடாக மேலும் மோசமாகின்றது” என்கிறார். இது எப்படி.?

ஒவ்வொரு வருமானம் குறைந்த குடும்பமும் இப்படியான கொள்ளை நோய்ப் பரவலின்போது உள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை எல்லாம் மீறிச் செயல்பட பல்வேறு சமூகக் காரணங்களால் உந்தித் தள்ளப்படுகின்றனர் என்பதுதான். இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளல் அவசியம். நீங்கள் கட்டுப்பாடுகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என அவர்கள் மீதே நாம் எளிதாகக் குற்றம் சுமத்தி அகன்றுவிட இயலாது..

கொரோனா தாக்குதலில் இன்று வயதானவர்களும், ஏற்கனவே பல்வேறு வகைகளில் நோய்களின் தாக்குதலுக்கு ஆட்பட்டு இருப்பவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிவோம். தற்போது சில நாடுகள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்த் தாக்குதலால் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிடுவது குறித்த செய்திகளும் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டுள்ளன.

கொரோனா தாக்குதலால் மரணம் அடையும் வாய்ப்பு அதிகமானவர்கள் பட்டியலிலும் கூட ஏற்கனவே நோய்த் தாக்குதல்கள், வயது மூப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாகப்  பொருளாதார நிலையில் தாழ்ந்து உள்ளவர்கள்தான் (low socioeconomic status) உள்ளனர் என்பதும் இன்று பலராலும் சுட்டிக் காட்டப்படுகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்நோய்த் தாக்குதல் ஏற்படுத்தும் விளைவுகளைப் பத்து மடங்குவரை அதிகமாக்குகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது,

இந்தத் தாக்குதலால் பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிக உயிர் ஆபத்து ஏற்படுத்துகிறது எனச் சொல்லப்பட்டாலும் எதார்த்தத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்குமே கோரோனா தாக்குதல் ஏற்படும்போது உயிராபத்து அதிகமாகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவியல் வளர்ச்சியின் ஊடாக முன்னர் குணமாக்குவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்த  நோய்களுக்கும் கூட இப்போது மருந்துகள் கண்டு பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன என்பது உண்மைதான். ஆனால் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக  நாம் இந்த நோய்களை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாதவர்களாகவே தொடர்கிறோம்

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு உரிய நலப்பாதுகாப்புகள் அளிப்பது இன்று நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நவதாராளவாத மாற்றங்கள் (Neo Liberal Economic Policies) இதற்குக் காரணமாகியுள்ளன. சமீபத்தில் இதை எதிர்த்து இத்தாலியின் மிலன் நகரில் வேலை நிறுத்தம் நடந்ததை நியூயார்க் டைம்ஸ் இதழ் சுட்டிக் காட்டுகிறது. இந்திய, தமிழகச் சூழல்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வெளி மாநிலங்களிலிருந்து வந்து எந்தப் பாதுகாப்பும் இன்றி உழைக்கும் தொழிலாளிகளின் நிலை இன்னும் மோசம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து கொண்டுள்ளபோது சென்னை மகிந்திரா சிட்டியில் ஜார்கண்டைச் சேர்ந்த 25 தொழிலாளிகள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதாகவும் உடனடியாக ஏதும் உதவிகள் செய்யுமாறும் நண்பர்களிடமிருந்து தகவல் வருகின்றது. கொரோனாவை முன்னிட்டு எந்த முன்னேற்பாடுகள் மற்றும் மாற்று ஏற்படுகளும் இன்றி இன்று அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதும், ஒட்டுமொத்தமாகச் சமூக முடக்கம் ஆணையிடப் பட்டுள்ளதும் இத்தகைய நிலக்குக் காரணமாகியுள்ளன. சமூக முடக்கம் இன்று தவிர்க்க இயலாதது என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அது அடித்தளமக்கள் மத்தியில் ஏற்படுத்த உள்ள உடனடி மற்றும் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றிய கவலை ஏதும் அரசுகளுக்கு இல்லை.

கொரோனா வைரஸ் குறித்து முதலில் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று இது ஒரு “great Leveller” என்பது. அதாவது இந்த வைரஸ் பணக்காரர் / ஏழை; ஆதிக்க சாதியினர் / தாழ்ந்த சாதியினர் ; ஆண்கள் / பெண்கள் என்றெல்லாம் வேறுபாடு காட்டாமல் எல்லோரையும் சமமாகத் தாக்குவதன் ஊடாக மிகப்பெரிய சமத்துவத்தை நிலைநாட்டும் கருவியாக அமைகிறது எனக் கூறப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் உட்பட இந் நோய்த் தாக்குதலுக்கு ஆட்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இப்படிச் சொல்வதெல்லாம் படு அபத்தம். நோய்த் தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழலுக்குள் யார் வந்தாலும் அவர்களை இந்நோய்க் கிருமிகள் தாக்கும் என்கிற வகையில் மட்டுமே இது உண்மை. மற்றபடி இப்படியாக வேண்டிய பொருள்களைச் சேமித்து வைத்துக் கொண்டு, வீட்டில் வீடியோ பார்த்துக் கொண்டும், செல்போன்களை நோண்டிக் கொண்டும் நேரத்தைக் கடத்தும் சொகுசு இன்று யாருக்கு வாய்க்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். உடல் நலம் தொடர்பாக ஊதியத்துடன் கூடிய விடுப்புகளைப் (sick leave) பெறும் நிலை இன்று பெரும்பாலான தொழிலாளிகளுக்குக் கிடையாது. மூடப்பட்டுள்ள கடைகள், ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் யாருக்கும் இப்படிக் கடைகள் மூடப்பட்ட காலத்திற்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. துப்;புறவு செய்பவர்கள், தெருக்களில் காய்கறிகள் விற்போர் முதலியவர்கள் உடல்கவசம் முதலான குறைந்தபட்ச பாதுகாப்புகளும் இல்லாமல்தான் இன்று வீதிகளில் அலைகின்றனர்.

“Social distancing”, “self-isolation”, “stocking up” – முதலானவையும் இன்று வெற்று வசனங்கள்தான். ஓரளவேனும் வசதி உள்ளவர்கள்தான் இதை எல்லாம் சாதித்துக் கொள்கின்றனர். பொருள்களை வாங்கி “ஸ்டாக்” பண்ணுவது என்பதெல்லாம் அன்றாடம் காய்ச்சிகளுக்குச் சாத்தியமில்லை. கிராமப்புற மக்களிடம் முதல் ஒருவாரத்திற்குப் பின் கையில் அன்றாடச் செலவுகளுக்குக் காசில்லாமல் இருப்பதை நான் நேரில் பார்த்துக் கொண்டுள்ளேன். சென்ற நிதி ஆண்டு குறித்த ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கையின்படி இந்தியாவில் அக் காலகட்டதில் உருவான சொத்தில் 73% சமூகத்தில் மேல்தட்டில் உள்ள 1% மக்களுக்கே போய்ச் சேர்ந்துள்ளது. இந்நிலையில் ‘குவாரன்டைன்’ எனும் கருத்தக்கம் எல்லாம் உண்மையில் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகத்தான் உள்ளது. வீடுகளும், குடும்ப ஆதரவுகளும் அற்று வீதியில் வாழ்பவர்களின் நிலை குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.

கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களின் நிலை இன்னும் மோசமானது. நமது சிறைகள், மனநோய்விடுதிகள் முதலியன குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாதவை. மிக நெருக்கமாக இங்கே மக்கள் அடைக்கப் பட்டுள்ளனர். social distancing, self-isolation என எதுவும் இங்கே சாத்தியமில்லை. 4.5 இலட்சம் பேர்கள் இன்று இந்திய சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ளனர். இன்று உச்சநீதிமன்றம் ஏழாண்டுகள் வரை தண்டனை பெற்றுச் சிறையில் அடைபட்டுள்ளவர்களைப் பிணையில் விடுதலை செய்ய ஆணையிட்டுள்ளது. ஆனால் இது எந்தப் பெரிய பலனையும் சிறைக்கைதிகளுக்கு விளைவித்து விடவில்லை. ஒட்டு மொத்தத்தில் சில ஆயிரம் பேர்களே இன்று இந்தியா முழுவதும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், அதிலும் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படக் கூடிய நிலையையும் பார்த்தோம். வயது மூத்தவர்களை இந்த நோய் அதிகம் பாதிக்கும் என அறிவோம். சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இயற்கை வயதைக் காட்டிலும் பத்தாண்டுகள் கூடுதலாக மூப்படைந்து விட்டவர்கள் எனும் அளவிற்குப் பலவீனமாக இருப்பார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனநோய் விடுதிகளின் நிலை குறித்து இங்கு யாரும் பேசுவது இல்லை. சமீபத்தில் கொரோனா காலத்தில் மனநோய்விடுதிகளில் உள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து டாக்டர் அரவிந்தன் சிவகுமார் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேளையாக இந்தக் கொரோனா தாக்குதல் இந்தியாவில் பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்த நேர்ந்தால் என்ன மாதிரி விளைவுகள் இப்படிச் சிறைச்சாலைகள், மனநோய் விடுதிகள் ஆகியவற்றில் விளைவிக்கும் என்பதை யோசித்தால் அச்சமாக உள்ளது..

இந்திய நகர்ப்புறங்களில் 40 இலட்சம் பேர்கள் வீடற்று வாழ்கின்றனர். 70 இலட்சம் பேர்கள் அனுமதியற்ற குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இங்கு ஆதாரங்களாகச் சுட்டிக் காட்டியுள்ள கட்டுரைகளில் ஒன்றில் ஒரு மருத்துவர் அன்று தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்மணி பற்றிச் சொல்லியுள்ளது பதிவாகியுள்ளது. அந்த வயதான பெண்மணிக்கு முதல் பரிசோதனையில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. வீட்டில் அவரைத் தனியே வைக்கச் சொல்லி அந்த மருத்துவர் பரிந்துரைக்கிறார். தன் வீட்டில் தனி அறைகள் ஏதும் கிடையாது. எல்லோரும் குடிசைக்குள் ஒன்றாகத்தான் படுத்து உறங்க வேண்டும். வெளியில் படுக்க வைத்தாலும் தேள், பாம்புகளின் ஆபத்து இருப்பதால் அதுவும் முடியாது என்கிறார் அவரைச் சிகிச்சைக்கு அழைத்து வந்த அவரது மகள். மொத்தத்தில் நோய்த் தாக்குதல் உடையவர்களைத் தனிமைப்படுத்தப்படுவது என்பது இப்படிச் சென்னை போன்ற பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகள், ஒண்டுக் குடித்தன வீடுகள் எல்லாவற்றிலும் கூட சாத்தியமே இல்லை. கிராமப்புறங்களிலும் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலும் இது சாத்தியமில்லை.

இது குறித்து யோசிக்கும்போது குடிசைகளில் விபத்துக்கள், வெளியேற்றங்கள் முதலான பிரச்சினைகளை ஒட்டி அது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க அம்மாதிரியான பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்தின. சென்னையில் உள்ள சேரிப் பகுதிகளில் ஒன்றான மக்கீஸ் கார்டன் போன்ற இடங்களில் கூவம் நதிக் கரையில் அப்படித்தான் நெருக்கமாக இடைவெளி இல்லாமல் குடிசைகள் உள்ளன. எந்த வசதிகளும் அற்ற இந்தக் குடிசைகளில் நெருக்கமாக வாழும் இந்த எளிய மக்களிடம் “social distancing” என்றெல்லாம் உச்சரிக்க எத்தனை இரும்பு நெஞ்சம் நமக்கு இருக்க வேண்டும்?

இன்று உச்சரிக்கப்படும் இன்னொரு வசனம் “Work-From-Home (WFH)” அதாவது வீட்டிலிருந்து கொண்டு  வேலை செய்வது. ஆனால்  இது முழுக்க முழுக்க அலுவலக மேசைகளில் அமர்ந்து வேலை செய்யும் white collar jobs இல் உள்ளவர்களுக்குத்தான் சாத்தியம். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வேலைக்கு வரவேண்டாம் என அனுப்பப் படுகிறார்கள். அவர்கள் மூலம் நோய்த் தொற்று ஏதும் பரவிவிடக் கூடாது என்கிற அச்சம் வீட்டுக் காரர்களுக்கு. அத்தகைய அச்சம் நியாயம் என்றே கொண்டாலும் வீட்டுக்காரர்களில் எத்தனை பேர்கள் அவர்களுக்கு அந்த இடைக்காலத்திற்கான ஊதியம் அளிக்கப் போகிறார்கள்? துப்புறவுத் தொழிலாளிகளுக்குக் குறைந்தபட்சம் முழுமையான உடற் கவச ஆடைகளையாவது நமது நகர நிர்வாகங்கள் அளித்துள்ளனவா?

வீடுகளுக்குள் இல்லாமல் வெளி வேலைகளைச் செய்யும் வேலையாட்களாக இருந்தபோதும் இந்தப் பணியாளர்கள் ஊரடங்குக் காலத்தில் வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை.. தினம் அவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து பணி இடத்திற்குச் செல்ல இப்போது பஸ், இரயில் போக்குவரத்துகளும் கிடையாது.

கொரோனா தாக்குதல் தனக்கு உள்ளதா என ஐயப்படுவோர் அதை உறுதி செய்துகொள்வதும் எளிதாக இருப்பதில்லை. எனக்குத் தெரிந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவ மனை தவிர  வேறு எந்தத் தனியார் மருத்துவமனையும் இலவசச் சோதனை எதனையும் அறிவிக்கவில்லை.. குறைந்தது 4000 ரூ இந்தச் சோதனைக்குத் தொடக்கத்தில் வசூலிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் சோதனைகள் செய்தாலும் அங்கு சோதனைக்கு வருகிறவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்ததற்கு ஏதேனும் ஆதாரம் காட்ட வேண்டும் எனத் தொடக்கத்தில் கோரப்பட்டது நினைவிருக்கலாம். ஏதோ இன்றளவும் இந்த நோய் ஐரோபிய நாடுகளைத் தாக்கியுள்ளது போல இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில் தன் வீரியத்தைக் காட்டவில்லை. அப்படியான தாக்குதல் ஏற்பட்டிருந்தால் இங்கு என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும்  இயலவில்லை.

நமது நாட்டில் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, அமெரிக்காவிலேயே முழு இன்சூரன்ஸ் பாதுகாப்பு உடையவர்கள் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் குறைந்தவர்கள்தான். இங்கு இது மிகக் குறைவு, தவிரவும் இது போன்ற கொள்ளை நோய்கள் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களின் விதிகளுக்குள் வருவதில்லை

நமது நாடு ஏற்கனவே மதம், சாதி, தீண்டாமை எனப் பிளவுற்றிருக்கும் ஒன்று. கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் வெறும் உடல் சார்ந்த தாக்குதல்களோடு நிறுத்திக் கொள்வதில்லை. இப்படி இங்கு அது ஏற்கனவே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் ஊதிப் பெருக்குவதற்கும் இது இட்டுச் செல்லும். இங்குள்ள பொருளாதார, சாதீய ஏற்றத் தாழ்வுகளெல்லாம் இதனூடாக மேலும் அதிகமாகும். மதவாத இந்துத்துவ சக்திகள் இன்று கொரோனோ தாக்குதலையும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினையாக ஆக்கியிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.

மக்கள் அவர்கள் ஏழைகள் ஆனாலும் பணக்காரர்கள் ஆனாலும், பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள், அடித்தளச் சாதியினர், மேல்தட்டினர் என்றெல்லாம் பார்க்காமல் யார் பாதிப்புக்குள்ளானாலும் சிறந்த மருத்துவம் அளித்துப் பாதுகாத்தல்தான் எல்லா மக்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் ஆய்வாளர் ஸ்வென் எரிக் மாமெலுன். 1918இல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய ஸ்பானிஷ் ஃப்ளூ குறித்து விரிவாக ஆய்வு செய்தவர் அவர். அந்த இன்ஃப்ளூயென்சா தொற்று முதலில் தாக்கியது ஏழை எளியவர்களைத்தான். ஆனால் இரண்டாவது அலைத் தாக்குதல் நிகழ்ந்தபோது மிகப் பெரிய அளவில் பணக்காரர்கள் பலியாயினர். ‘சமூக ஏற்றத் தாழ்வுகளை அரசியலாரும் பொது நல அதிகாரவர்க்கமும் கணக்கில் கொள்ளாததே அந்த மிகப் பெரிய அழிவுக்குக் காரணமானது.“ என மாமெலுன் கூறியுள்ளது கவனத்துக்குரியது.

References

 Max Fisher and Emma Bubola, As Coronavirus Deepens Inequality, Inequality Worsens Its Spread, March 15, 2020,  NYTimes.

Zhonghua Liu Xing Bing Xue Za Zhi. 2020 Feb 17;41(2):145-151. doi: 10.3760/cma.j.issn.0254-6450.2020.02.003. [Epub ahead of print].

Epidemiological Sociology and the Social Shaping of Population Health, Journal of Health and Social Behavior, December 1, 2008.

Pallavi Pundir, Coronavirus is Going to Come Down Hard on India, Especially its Poor,   18, March 2020.

Abby Vesoulis, Coronovirus May Disproportionately Hurt the Poor Anfd That’d Bad for Everyone, March 11, 2020

.The response of the working class to the coronavirus pandemic,World Socialist Web cite, 11 March 2020,

Aravindan Sivakumar, Lives matter the most , more than the ciphers and statistics,   countercurrents.org, April 07, 2020        

கொரோனாவும் சிறுபான்மையினரும்

முஸ்லிம்களுக்கு மருத்துவம் இல்லை! கர்ப்பிணிகளாயின் அட்மிஷன் இல்லை!! அம்மா உணவகத்தில் உணவு இல்லை!!!

(கொரோனா  தடுப்புப்விழிப்புணர்வுக்காக அமைத்துச் செயல்பட்டுவரும் “Awareness Centre for Corona Preventive Action  (ACCP) சார்பாக நேற்று ) ஏப்ரல் 08,2020  மாலை பேசிய உரை)

“கொரோனா தடுப்பு விழிப்புணர்வுச் செயல்பாட்டு மையம்” சார்பாக எல்லோருக்கும் வணக்கம்.

இன்று உலகம் மிகப் பெரிய அழிவு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. எத்தனையோ துறைகளில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்த உலகம் இன்று கோரோனா முன் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் நம்மால் இன்னும் எந்தத் தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியான ஒரு சூழலில்தான் இன்று இந்தப் பேரழிவை எதிர்கொண்டு சமாளிக்கும் பணியில் நம்மைப் போன்றவர்களும் அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி உள்ளது. அந்த வகையில் உருவானதுதான் நமது இந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வுச் செயல்பாட்டு மையம்.

அரசுடன் இணைந்து நோய்ப் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சில கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவது மட்டுமின்றி, அரசுகள் தங்களின் சார்பு நிலைகளின் விளைவாகப் புறக்கணிக்கும் துறைகளிலும் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி உள்ளது. அந்த வகையில்தான் இந்த அமைப்பின் சார்பாக இரண்டு நாள் முன்னர். மதிப்பிற்குரிய மருத்துவர் அமலோற்பவநாதன் அவர்களின் இந்த நோய் மற்றும் அதை எதிர்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு உரையை ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான தரவுகளையும் குறிப்புகளையும் நமது தோழர்கள் இவ் அமைப்பின் தளத்திலும் இந்த முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர். இம்முயற்சியில் ஒத்துழைக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொள்ளை நோய்கள் ஒன்றும் உலகிற்குப் புதிதல்ல. கடந்த நூற்றாண்டுகளில் இப்படியான கொள்ளை நோய்களில் இலட்சக் கணக்கில் மக்கள் மடிந்துள்ளனர். உரிய வைத்தியம், தடுப்பு மருந்துகள் இல்லாமல் நோய் முற்றியவுடன் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே விட்டுவிட்டு மக்கள் அனைவரும் தம் கிராமங்களிலிருந்து வெளியேறி எங்கேனும் தொலைதூரத்திற்குச் சென்று ஒர் ஆறுமாதம் அல்லது ஒரு வருடத்திற்குப் பின் ஊர்களுக்குக்குத் திரும்பி வந்த வரலாறுகள் உண்டு. எல்லாத் தொற்று நோய்களுக்கும் இம்மாதிரி நோய் தோன்றி ஒரு உச்ச கட்டத்தை அடைந்து, அதனூடாக எதிர்ப்பு சக்திகள் உருவாகி நோய் தானாக வலுவிழக்கும் நிலைதான் முற் காலங்களில் இருந்துள்ளது. இன்று பிரச்சினை என்னவெனில் மருத்துவ வசதிகள் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதும் மக்கள் இடப்பெயர்வும் இயக்கமும் உலக அளவில் இருப்பதும் நோய்  அதி வேகமாக உலகம் முழுவதும் பரவி விடுவதுதான். முதன் முதலில் இன்றைய கொரோனா தாக்குதல் மிகப் பெரிய அளவில் வெடித்த சீனாவின் வூகான் மாவட்டத்திலிருந்து உலகெங்கும் ஒரு நாளைக்கு 120 விமானங்கள் – Flights – செல்கின்றன என்பதைப் பார்த்தோம். கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம் ஆகியவற்றுக்காக உலகம் பூராவும் மக்கள் புலம் பெயர்வதும், பயணிப்பதும் இன்று உலகை, ஒரு கிராமம் ஆக்கியுள்ளன. எனவே எந்தக் கொள்ளை நோய் வந்தாலும் அது இப்போது உலக அளவில் அதி வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையை எட்டிவிட்டோம். இந்நிலையில் இதை எதிர்கொள்ளும் செயல்பாடுகளும் இன்று நாம் உலக அளவில் ஒன்றுபட்டு ஒரே நோக்குடன் மேற்கொள்ளும் செயல்பாடுகளாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் நாம் தவறினால் வரலாறு காணாத பேரிழப்புகளை நாம் சந்திப்பது உறுதி.

டி 2

பெரிய அளவில் அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்த போதிலும் இப்படியான கொள்ளை நோய்க் கொடுந் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பெருந்தடையாக இருப்பது இன்று உலகில் வேரூன்றி கிடக்கும் இன மத வெறுப்புகள்தான். இந்த வெறுப்பு அரசியலை நாம் உரிய முறையில் எதிர்கொள்ளாவிட்டால் பேரிழப்புகளைச் சந்திப்பது உறுதி. அந்த வகையில்தான் இன்று நாம் இந்தக் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எந்த அளவு முக்கியம் அளிக்கிறோமோ அதே அளவு இந்த வெறுப்பு அரசியலை எதிர்கொள்வதற்கும் முக்கியம் அளிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கட்சி, மற்றும் அரசியல் வெஏறுபாடுகள் இல்லாமல் இன்று நாம் அரசோடு ஒத்துழைக்க வேண்டிய அம்சங்களில் ஒத்துழைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் இங்கு கடந்தகால அரசியல் நோக்கங்களுக்காவும், குறுகிய பலன்களுக்காகவும் வளர்துவிடப்பட்ட மதவாத, இனவாத அரசியல் நமது ஒன்றுபட்ட முயற்சிகளைக் கவிழ்ப்பதாகவும், அழிப்பதாகவும் உள்ளது. கொரோனா தாக்குதல் பரவிக்கொண்டுள்ள நிலையில் போதிய தயாரிப்புகள், தடுப்புகள் ஆகியவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், ஒரே நேரத்தில் பண் ட பாத்திரங்களைத் தட்டி ஓசை எழுப்புவது, விளக்குக் கொளுத்திப் பிடிப்பது என்பது போன்ற அர்த்தமற்ற செயல்பாடுகளை அரசே முன்னின்று செயல்படுத்தும்போது, நாம் அவற்றில் பங்கேற்காதபோதும் எதிர்ப்பதில்லை.

ஆனால் இவற்றின் ஊடாக இன்று வழக்கமான வெறுப்பு அரசியலை சில அமைப்புகள் மேற்கொள்வதும், அதை அரசுகள் கண்டிக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் ஒரு இகழ்ச்சிப் புன்னகையோடு வேடிக்கை பார்ப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. இது குறித்த கவனத்தை நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

உலக அளவில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வெறுப்பு அரசியலைச் செய்கிறார். ‘சைனா வைரஸ்’, ‘வூகான் வைரஸ்’ எனத் தொடர்ந்து அவர் பொது வெளிகளில் பேசினார். ஒரு ‘பயோ வார்’ திட்டத்துடன் சீனாதான் இந்த கோவிட் 19 எனும் வைரசைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பியது எனும் ஆதாரமற்ற தகவல் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகளும் அரசியலாரும் பரப்பினர். ஆனால் வூகானில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வந்த விளையாட்டு வீரர்கள்தான இந்த நோயை இங்கும் கொண்டு வந்தனர் எனச் சீன வெளியுறவு அமைச்சர் பதிலடி கொடுத்தார்.

நேற்றிரவு (06-04-2020) ‘டைம்ஸ்’ குரூப்பின் உமேஷ் இசால்கர் பெயரில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் குறிப்பு முகநூலில் இங்குள்ள ஒரு மருத்துவரால் பகிரப்பட்டிருந்தது, மும்பை – புனே மருத்துவமனை ஒன்றில், டெல்லியில் நடந்த சர்ச்சைக்குரிய தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவர் விபத்தொன்றில் சிக்கி அனுமதிக்கப்படுகிறார். அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் 40 பேர்கள் இன்று கொரோனா தாக்குதலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் இன் பாக்சில் வந்து “டாக்டர் அது தவறான செய்தி, உடனே அதை நீக்குங்கள்” என்கிறார். இது நான் நேற்று இரவு 12 மணிக்குப் பார்த்தது. அந்த நண்பரை இன்பாக்சில் தொடர்பு கொண்டு என்ன விடயம் என்றேன். அவர் வேறொரு ‘க்ளிப்பிங்’ இன்று எனக்கு அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி குறித்து ‘அவுட்லுக்’ இதழ் விசாரித்து அது தவறான தகவல் என எழுதியுள்ளது. அந்த மருத்துவ மனையின் பெயர் “டி.ஒய்.. படீல் ஹாஸ்பிடல்”. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என இன்று அங்கு 92 பேர்கள் குவாரன்டைனில் உள்ளனர் என்கிற வரையில் ‘டைம்ஸ் குரூப்’ செய்தி உண்மை. ஆனால் எப்படி அவ்வளவு பேர்கள் பாதிக்கப்பட்டர்கள் என்றால் விபத்துகாளான ஒரு டாக்ஸி டிரைவருக்கு சிகிச்சை அளித்தபோது ஏற்கனவே அவரைப் பாதித்திருந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அப்படி எல்லோருக்கும் பரவி இருக்கிறது.. ஆனால் அந்த டாக்சி டிரைவருக்கும் தப்லிகி ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதுமட்டுமல்ல அவர் ஒரு முஸ்லிமும் இல்லை என்பதுதான் அந்தச் செய்தி. ஆனால் அத்ற்குள் அந்தப் பதிவின் அடிப்படையில் முஸ்லிம்கள் மீது அத்தனை வெறுப்பு கக்கப் பட்டிருந்தது,

இந்த மாதிரிச் செய்திகள் பரவுவதில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தவறு எனத் தெரிந்தாலும் வெளியிட்டவர்கள் அதற்கு வருத்தம் தெரிவிப்பதும் இல்லை. நான்கு நாட்கள் முன்னர் ஒரு தமிழ் சேனல் டெல்லி தப்லலிகி ஜமாத் கூடுகை பற்றிய ஒரு 5 நிமிடச் செய்தியை வெளியிட்டது.. அதில் சொல்லப்பட்ட செய்திகளில் ஒன்று அந்தக் கூடுகையில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அகமதுவும் கலந்து கொண்டார் என்பது அந்தக் கூடுகை சென்ற மாதம் நடந்தது. ஃபக்ருதீன் அகமது பல ஆண்டுகளுக்கும் முன்பு அவர் பதவியில் இருக்கும்போதே இறந்து போனார். இதைச் சுட்டிக்காட்டிக் கண்டனங்கள் பெரிய அளவில் தெரிவிக்கப் பட்டுள்ள போதும் இன்றளவும் அதற்குக் காரணமானவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இப்படியான சந்தர்ப்பங்களில் மீடியா தரப்பில் சொலப்படும் சமாதானம் என்னவெனில் அப்படியான தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தால் அந்த சானலின் ‘ரெபுடேஷன்’ போய்விடுமாம். ஒரு சமுதாயம், அதுவும் சிறுபான்மைச் சமுதாயத்தின் ‘ரெபுடேஷன்’ பாதிக்கப்படுகிறதே என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. ஒரு சிறுபான்மைச் சமுதாயம் இப்படியான வெறுப்புத் தாக்குதலுக்கு ஆளாகும்போது அது என்ன மாதிரி பாதிப்புகளை எல்லாம் அம்மக்களுக்கு விளைவிக்கும் என்பது பற்றி இங்கு யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கவலைப்படுவதில்லை.

ஆனால் இப்படி ஒரு சமுதாயமே இன்று குற்றம் சாட்டப்படும்போது, ஒரு அரசே இப்படியான பொய் அவதூறுகளுக்குப் பக்கபலமாக இருக்கும்போது என்ன ஆகிறது? அந்தச் சமுதாயம் இன்று அச்சத்தில் உறைந்துள்ளது. அந்த மக்கள் இன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இப்றகீம் சையத் எனும் நண்பர் ஒரு பதிவைச் செய்துள்ளார். கோவைக்கு அவர் எதோ காரணமாகச் செல்கிறார். காலையில் அவர் அங்குள்ள தமிழக அரசின் ‘அம்மா உண்வகத்தில்’ உணவருந்தச் சென்று வரிசையில் நிற்கிறார். கொரோனாவை முன்னிட்டு இடைவெளி விட்டு வரிசையில் நின்றிருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது சிலர் அங்கு நின்ற அத்தனை பேரிலும் இவரை மட்டும் கூப்பிட்டு ஓரமாகப் போகச் சொல்லுகின்றனர். இவர் காரணம் புரியாமல், “அடுத்தது நான்தான். வாங்கிக் கொண்டு போகிறேன்” என்கிறார். ஆனால் அவர் அங்கிருந்து கட்டாயமாக வரிசையிலிருந்து அகலும் நிலை ஏற்படுகிறது. காரணம்? “நீ முஸ்லிம்..”

இன்னொரு முஸ்லிம் நண்பர் சொல்கிறார். பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கடைக்கு மூணு அட்டை முட்டை அனுப்ப வேண்டும் என அவர் ஒரு ‘ஆர்டர்’ தருகிறார் அவர். வழக்கமாக முட்டை ஏற்றி வரும் ஆட்டோ காரருக்கு போன் செய்து சொல்கிறார். அவர் முடியாது என்கிறார். இவர் மறுபடியும் சரி கொஞ்ச நேரம் கழித்தாவது கொண்டுபோய்க் கொடு என்கிறார். “பாய்! மன்னிச்சிடுங்க. நான் பள்ளிவாசல் பக்கம் எல்லாம் சவாரி வரமாட்டேன். நீங்க வந்து பைக்கில வச்து கட்டி எடுத்துட்டுப் போயிடுங்க..” என்கிறார் அவர்.

தந்தை பெரியார் மூட நம்பிக்கைகளைக் கண்டித்து ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து, “அமெரிக்காவில் கூடத்தான் அப்படி நடக்குது..”என்றார். உடனே பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? “ஏன் அமெரிக்காவிலே முட்டாப் பசங்களே இருக்க மாட்டாங்களா?”..நேற்று ஒரு செய்தியைப் படித்தபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது. அந்தச் செய்தி இதுதான்: 5G டவர்கள் அதி வேகமாக ‘டேடா’ க்களை அனுப்புவதால் அதன் மூலம் வேகமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதுதான் அது. படு அபத்தமான ஒரு சந்தேகம் அது. ஆனால் நேற்று இங்கிலாந்தில் ஐந்து 5G டவர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. அதெல்லாம் கூடப் பரவாயில்லை. டவர்களோடு போச்சு. ஒரு சமுதாயமே இப்படி குற்றவாளிக் கூண்டுக்குள் நிறுத்தப்படும்போது?

காவல்துறையும் விதிவிக்கல்ல. பெரிய அளவில் இந்த வெறுப்பு அரசியலுக்கு அது பலியாகி உள்ளது நேற்று இளம் தமிழகத்தைச் சேர்ந்த ரஃபீக்ராஜாவின் தந்தை அப்துல் ரஹீம் கொல்லப் பட்டுள்ளார். ரஹீம் 70 வயதுப் பெரியவர். அவர் எந்நாளும் முஸ்லிம் அடையாளங்களை, தாடி வைப்பது, தொப்பி போடுவது என்பதை எல்லாம் பின்பற்றியதில்லை. சமீபத்தில் அவர் பேரன் ஒருவர் இப்படியான வெறுப்புப் பின்னணியில் கொல்லப்படுகிறார். அதற்குப் பின் தன் இறுதிக் காலத்தில் அவர் தொப்பி, அணிந்துள்ளார். தாடியும் வைத்துள்ளார்.

இப்படி சிறுபான்மை மக்கள் தங்களின் அடையாளங்களை இப்போது தீவிரமாகத் தரித்துக் கொள்வது பற்றிய ஒரு உளவியல் ஆய்வு உண்டு. இதைப் ‘பதுங்கு குழி’ மனப்பானமை என  மனோவியலாளர்கள் வகைப் படுத்துகொன்றனர். அடையாளங்கள் என்பன மனிதர்களின் உளம் சார்ந்த ஒரு அடிப்படையான உரிமை. அது பறிபோகும்போது தங்களால் அதைக் காக்க முடியவில்லையே என்கிற நிலை அவர்களை வாட்டுகிறது, மிகப் பெரிய உளவியல் பிரச்சினையாக அது அமைகிறது. தமது அடையாளங்களையும் தனித்துவங்களையும் காப்பாற்றும் முகமாக அவர்கள் ஆண்களாயின் தாடி வைத்துக் கொள்ளுதல், தொப்[பி அணிதல், ஐந்து வேளை தொழுதல். பெண்களாயின் ஹிஜாப் அணிதல்… என்கிற வகைகளில் அவர்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

டி 3

ரஃபீக்கின் தந்தை அப்துல் ரஹீமின் கதைக்கு வருவோம்.. கருப்பாயி ஊரணி பகுதியில் அவரது கறிக்கடைஉள்ளது. அந்தப் பகுதியில் ஆதிக்க சாதியினர் மத்தியில் இப்போது மதவாத பாஜக வலுவாக உள்ளது. அச்சத்தோடுதான் சாலையோரத்தில் உள்ள தன் கடையை அவர் நடத்திக் கொண்டுள்ளார். தற்போது எடப்படி அரசு கடந்த சில நாட்களாக கரிக்கடையைத் தடை செய்தவுடன் அவர் கறி வியாபாரத்தை நிறுத்தியுள்ளார். கடையை மூடிவிட்டு நேற்று பாதுகாப்பாக கடைக்குள் தங்கி இருந்தவரைத்தான் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அவர் இறந்து போயுள்ளார். இது நேற்று நடந்தது.

நாடெங்கிலும் முஸ்லிம்கள் கொரானாவை ஒட்டிய இன்றைய  கெடுபிடிகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனவும் அவர்களைச் சோதனைக்கு அழைத்துச் செல்ல வரும் போலீஸ்காரர்களைத் தக்குகிறார்கள், முகத்தில் உமிழ்கின்றனர் என்றும் செய்திகள் பரப்புவதிலும் உண்மைகள் இல்லை. போலீஸ்காரர்கள் முகத்தில் உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அபத்தமான அவதூறு இது.

கோவில்பட்டி கயத்தாரில் அப்படித்தான் இரண்டு நாள் முன்னர் ஒரு செய்தி பரவியது. ஒரு குடும்பத்தினர் கோரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என அளிக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்ல வந்த அதிகாரிகளை முஸ்லிம் இளைஞர்கள் அடித்தார்கள் என்பதுதான் அச்செய்தி. எழுத்தாளர் சம்ஷுதீன் ஹீரா உண்மை நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இப்போது அளித்துள்ளார். இன்று பரப்பப் படும் வெறுப்புச் செய்திகளை ஒட்டி அங்குள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்றின்மீது பக்கத்து வீடுகளிலிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் போகிறது.. அந்த வீட்டில் கொரோனா தொற்று உள்ளவர்கள் உள்ளார்கள் என. இரவில் போலீஸ் வந்து எல்லோரையும் வேனில் ஏறச் சொல்லி ஏக அமர்க்களம் பண்ணுகிறார்கள், தெருவெங்கும் மக்கள் வெளியில் வந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த வீட்டில் வயதுக்கு வந்த மூன்று இளம் பெண்கள் உள்ளனர் எனவும் இரவில் வரமாடோம், காலையில் வருகிறோம் எனவும் சொல்கிறார்கள் .சரி எனக் காலையில் காவல்துறை வருகிறது. முஸ்லிம் வீட்டினர் வேனில் ஏறும்போது ஒரு கோரிக்கை வைக்கின்றனர். பெண்கள் வேனில் ஏறும்போது போட்டோ  எடுக்கக் கூடாது என்பதுதான் அந்தக் கோரிக்கை. போலீஸ் ஒத்துக் கொள்கிறது. ஆனால் இளம் பெண்கள் வேனில் ஏறும்போது மஃப்டியில் இருந்த ஒருவர் படம் எடுக்கிறார். அந்த வீட்டுப் பையன்கள் அவரை அடித்துவிடுகின்றனர்.

இதுதான் பிரச்சினை. செய்தி எப்படிப் பரவுகிறது? நோய்த்தொற்று உள்ளவர்களை செய்தி அறிந்து போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்தபோது முஸ்லிம்கள் தாக்கிவிடுகிறார்கள் என்று. ஆனால் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் உள்ள நிறைய செய்திகள் மறைக்கப்பட்டுதான் இப்படியான செய்திகள் பரவுகின்றன. இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின்னாலும் ஒரு கதையுள்ளது. அப்படி அந்தப் பெண்களை போட்டோ எடுத்தவர் போலீஸ்காரரே இல்லை. அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் ஏன் இளம் முஸ்லிம் பெண்களை அங்கு வைத்து மருத்துவத் துறையினர் ‘போட்டோ’ எடுக்க வேண்டும்? பதில் இல்லை. ஆத்திரத்தில் தாக்கிவிடார்களே ஒழிய குற்றத்தை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவில் அக்குடும்பம் ஒத்துழைத்துள்ளது..

இப்படியான ஒரு பின்னணியில்தான் சென்ற வாரம் மதுரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முஸ்தபா ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவில் தொழிலாளியாக இருந்த முஸ்தபா ஊரடங்கை ஒட்டி சொந்த ஊர் வந்து மதுரை முல்லை நகர் பகுதியில் உள்ள தன் அக்கா வீட்டில் தங்குகிறார். உடல் நலிவுற்று வீட்டில் இருந்த அவரை கொரோனா நோயாளி எனச் சொல்லி அங்குள்ளவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். அவரைக் காவல்துறை ஒரு குற்றவாளியைப்போல தெருவே வேடிக்கை பார்க்குமாறு இழுத்துச் சென்று சோதிக்கிறார்கள். அவரிடம் கொரோனா தாக்குதல் எல்லாம் இல்லை. வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் புகார் செய்ய மறுபடியும் அவர் போலீஸ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு சோதனை செய்யப்படுகிறார். மறுபடியும் ‘நெகட்டிவ்’ ‘ரிசல்ட்’தான். மறுபடியும் திருப்பி அனுப்புகின்றனர். நொந்துபோன முஸ்தபா விடிகாலையில் சுமார் 6 கிமீ நடந்து சென்று வந்து கொண்டிருந்த ரயில் முன் வீழ்ந்து செத்துப் போகிறார்.

இப்படி எளிய மக்கள் மட்டுமல்ல. புகழ்பெற்றவர்களாக இருந்த போதும்  இன்று நிலைமை இதுதான். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவும் இன்று ஆங்காங்கு அவமானப் படுத்தப் படுவது நிகழ்கிறது அவரது தந்தை  ஆந்திராவைச் சேர்ந்தவர், தாய் ஒரு சீனப்பெண்ணாம் அதனால் போகும் இடமெல்லாம் அவர், “சீனச்சி”, “அரை சீனச்சி”, “சிங்கி” இப்படியெல்லாம் இழிவுபடுத்தப் படுகிறார்.. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய முக வடிவம் உள்ள யாரும் இன்று இப்படி ‘சீனர்கள்’ எனச் சொல்லி இழிவு செய்யப்படும் நிலை உள்ளது..

‘வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை ஒன்று நேற்று கண்ணில் பட்டது. பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் நடந்த ஒரு உரையாடலைக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். “ஆசிய மாணவர்கள் எல்லோரையும் குவாரண்டைனில் வைக்கப் போறாங்களாம்..”.என்கிறது ஒரு குழந்தை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது சைனீஸ் உணவுவிடுதிகளில் யாரும் சாப்பிடுவதில்லை. எனப் புலம்புகிறார் ஒரு சீனக் கடைகாரர்..

முதன் முதலில் சீனாவில் இந்த கொரோனா வைரஸ் பெருந் தாக்குதலை ஏற்படுத்தியபோது அமெரிக்க அரசின் வணிகத்துறைச் செயலர் வில்பர் ரோஸ் சொன்னது : “சீனாவில் வந்துள்ள இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி நாம் நமது நாட்டில் (அமெரிக்க்கா) வேலைவாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.” இப்படி அவர் சொன்னபோது அவர் அறிந்திருக்கவில்லை – அதைவிடப் பெரிய கொரோனா தாக்குதலை அவர்கள் விரைவில் சந்திக்கப்போகிறார்கள் என்று.

வரலாறு பூறாவும் எப்போதெல்லாம் கொள்ளை நோய்த் தாக்குதல்கள் நடந்துள்ளனவோ அப்போதெல்லாம் அதைஒட்டிப் பெரிய அளவில் “மற்றமை” மீதான வெறுப்பும் கூடவே கட்டமைக்கப் பட்டுள்ளது. அந்தக் கால பிளேக் நோயிலிருந்து சமீபத்திய ‘எய்ட்ஸ்’ வரைக்கும் வரலாறு அப்படித்தான் இருந்துள்ளது.

19 ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியரான பார்த்தோல்ட் ஜார்ஜ் நெய்புர் கூறியதைப் போல, “மனித மனத்தின் ஆக வன்முறையானதும் கொடூரமானதுமான கூறுகள் மேலெழுவது என்பது பிளேக் முதலான கொள்ளை நோய்த் தாக்குதல்கள் ஏற்படும்போதுதான் நிகழ்கிறது”. 1950 களில் ஃப்ரான்ஸ் நாட்டு வரலாற்றாசிரியர் ரெனே பேய்ச்ரெல் சொன்னார்: “கொள்ளைநோய்கள் வர்க்க வெறுப்புகளை விசிறி விடுகின்றன..இத்தகைய உணர்வுகள் நம் மனத்தோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கொள்ளை நோய்களின் போது அவை வெடித்து வெளிப்படுகின்றன”.. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஃப்ரான்ஸ் தேச வரலாற்றாசிரியர் கார்லோ கின்ஸ்பெர்க் சொன்னார்: ”நமது அச்சங்கள், வெறுப்புகள், மன அழுத்தங்கள் ஆகிய அனைத்தையும் கொட்டித் தீர்ப்பதும், ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து யார்மீதாவது பழி சுமத்தி ஆறுதல் அடைவதும் நம் பண்பு.  இந்தமாதிரியான் கொள்ளைநோய்த் தாக்குதல் காலங்களில்தான் இது அதிகமாக வெளிப்படுகிறது.“

வெறுப்பு உமிழ்தல்களுக்கு இப்படியான விளக்கங்கள் அளிப்பது அவசியம்தான். ஆனால் விளக்கம் அளிப்பது மட்டுமே போதுமானதல்ல.