“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்

1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்?

மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன அழிப்பு, இடப்பெயர்வுகள், அகதிகள் உருவாக்கம், இராணுவமயமாதல் எனப் பல்வேறு அழிவுகள், பாதிப்புகள், துயர நினைவுகள் ஆகியவற்றுக்குக் காரணமான யுத்தம் இது. ஏற்கனவே இருந்து வந்த இன அடிப்படையிலான வெறுப்புகள், பிளவுகள் ஆகியன இன்று அதிகமாகியுள்ளன. இன ஒற்றுமை மேலும் சிதைந்துள்ளது. அரசியல் தீர்வுகள் எனும் திசையிலளொரு சிறிதளவும் முன்னோக்கிய நகர்வு இல்லை.

2.இலங்கை முஸ்லிம்கள், தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இரண்டு சமுதாயத்தினரதும் அரசியல் இயங்கு நிலை தொடபில் உங்கள் அவதானம் என்ன?

இரு சமூகங்களும் இரண்டு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூகங்கள். பெரும்பான்மைத் தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்கொண்டுள்ள மதங்கள். தமிழக முஸ்லிம்கள் தங்களின் முஸ்லிம் அடையாளத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில் தமிழர் எனும் இன அடையாளத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை. முஸ்லிம் என்பதை மத அடையாளமாகவும், தமிழர் என்பதை இன அடையாளமாகவும் காண்கின்றனர். அங்கே உருது பேசுகிற முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். அவர்களும் கூட தம்மைத் தமிழர்களாகவே முன்னிறுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு உருது பேசும் முஸ்லிம் வழியில் வந்தவர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட அவ்வளவுபேரும் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதிலும், தமிழை நேசிப்பவர்களாயினும், தமிழுக்குப் பங்களிப்புகள் செதவர்களாயினும் தம்மைத் தமிழர்களாக முன்னிறுத்திக் கொள்வதில்லை. இங்கே தமிழ் பேசும் பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்கின்றனர்.

அடையாள உருவாக்கம் என்பது இயற்கையானது அல்ல. அது அரசியல் மற்றும் வரலாற்றின் ஊடாக அமையும் ஒரு கட்டமைப்பு (construction) என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இங்கிருந்த பவுத்த தேசியத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி நிறுத்திக்கொள்ளும் முகமாக சென்ற இருநூற்றாண்டுகளில் எதிர்வினை ஆற்றிய தமிழ்த் தேசியம் தன்னை மிகவும் இறுக்கமாகச் சைவ அடையாளத்துடன் பிணைத்துக் கொண்டது. தமிழைச் சைவத்துடன் பிரிக்க இயலாமற் செய்தது இப்படித் தமிழ் பேசும் மக்கள் இரண்டு இனங்களாகப் பிரிந்து கிடக்க நேரிட்டுள்ளது. மூன்று இனங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர் என்றும் சொல்லலாம். மலையகத் தமிழர்களும் தம்மைத் தனித் தேசிய இனமாகத்தானே உணர்கின்றனர். வரலாறு முழுவதிலுமே இங்கு பெரும்பான்மையாக உள்ள தமிழ்ச் சைவம் தன்னை இந்தியாவிலுள்ள சைவத்துடனேயே அடையாளம் கண்டு உறவையும் பேணி வந்தது. எனவே இங்கு தமிழர்கள் மத்தியில் மொழியைக் காட்டிலும் மதம் அடையாள உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.  

3.இலங்கையில் அப்படியான ஒரு நிலை ஏற்பட்டதன் பின்னணி என்ன?

வரலாறு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றேன். சமீபமான ஒரு இருநூறாண்டு கால வரலாறு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் நடந்ததுபோல இங்கொரு சுதந்திரப் போராட்டமும் நடக்கவில்லை. போராட்டம் இல்லாமலேயே இங்கொரு சுதந்திரம் கிடைத்தது. மிகப் பெரிய இந்து முஸ்லிம் கலவரத்துடன்தான் இந்தியாவில் சுதந்திரம் விடிந்தது என்றாலும் 1947 க்கு முந்திய ஒரு 30 ஆண்டுகாலம் காந்தி என்கிற ஒரு மனிதரின் தலைமையின் கீழ் நடந்த சுதந்திரப் போரட்டம் மிக முக்கியமான ஒன்று.

மதச்சார்பின்மை என்பதற்கும் சமூக நல்லிணக்கம் என்பதற்கும் ஒரு அடையாளமாக உலக வரலாற்றில் திகழ்பவர் மகாத்மா காந்தி. சுமார் 22 ஆண்டுகள் அவர் தென் ஆப்ரிக்காவில் இருந்தார். ஒரு இந்திய முஸ்லிம் வணிகரின் வழக்குரைஞராகத்தான் அவர் அங்கு சென்றார். அவரது ஆண்டு வருமானம் அப்போது 6000 பவுண்டு. அன்று அது மிகப் பெரிய தொகை. தனது பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த காந்தி இரண்டு கம்யூன்களை உருவாகினார். அந்தக் கம்யூன்களில் பல மொழி பேசுகிற பல சாதி மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்கள் இருந்தன. எல்லோரது வருமானமும் ஒன்றாக்கப்பட்டு எல்லோரும் ஒரே மாதிரியான உணவு, உடை, வாழ்க்கை என எல்லோரும் எல்லாவற்றையும் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். வேலைகளையும் அவ்வாறே பகிர்ந்து கொண்டனர். இந்தியா என்பது பல மொழி பேசுகிற, பல நம்பிக்கைகளைக் கடைபிடிக்கிற ஒரு நாடு என்கிற கருத்து மிக அழமாக அவருக்கு அங்கு பதிந்தது. அவர் நடத்திய பத்திரிக்கை ஆங்கிலம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளி வந்தது.

இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபடுவது என அவர் முடிவெடுத்தபோது அங்கு பெரிய அளவில் பிரிட்டிஷ் எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. திலகர், அரவிந்தர் முதலான உயர் சாதி இந்துக்கள் தலைமையில் நடந்த அந்தப் போராட்டத்தில் அடித்தள மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் ஈடுபடுத்தப்படவில்லை. வெகுஜனப் போராட்டமாக அது மாறவில்லை. குதிராம் போஸ் போன்ற இந்து இளைஞர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றுவிட்டுத் தூக்கு மேடை ஏறியபோது தம் இறுதி ஆசையாகக் கையில் பகவத் கீதையை வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் அளவுக்கு அன்று சுதந்திரப் போராட்டம் இந்து மயமாகித் தன் வெகுஜனத் தன்மையை இழந்திருந்தது.

அபோது குடும்பத்தோடு இந்தியா புறப்பட்ட காந்தி திலகர், அரவிந்தர் எல்லோரையும் தவிர்த்துவிட்டு கோபால கிருஷ்ண கோகலே என்கிற மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத, தீண்டாமை முதலான சமூகக் கொடுமைகளை ஏற்காத ஒரு தலைவரிடம் ஆலோசனை கேட்டார். “நீ இந்தியாவை முதலில் புரிந்து கொள். அது தென் ஆப்ரிகா போல ஒரு சின்ன நாடு கிடையாது. பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடு இது. பலமாதிரிப் பிரச்சினைகள் உள்ள நாடு இது. ஒரு இரண்டாண்டு காலமாவது இந்திய மக்களைக் கவனித்துப் பின் அரசியலில் இறங்கு..” என்கிற ரீதியில் அவரது அறிவுரை அமைந்தது.

அப்படியே இரண்டாண்டு காலம் இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள். பிரச்சினைகள் எல்லாவற்றையும் கவனித்து, முடிந்தவரை பங்கு பெற்று விட்டு அவர் முதன் முதலில் அறிவித்த போராட்டம் ‘கிலாஃபத் இயக்கம்’தான். ஆம் உலகளாவிய ஒரு முஸ்லிம் பிரச்சினையைத்தான் முதலில் எடுத்தார் அவர். பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் இந்தியாவுக்குள் இருந்த அக்காலத்தில் பெரிய அளவில் இருந்த முஸ்லிம்களை விட்டுவிட்டு நடத்தும் எந்தப் போராட்டமும் ஒற்றுமைக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்தார். உணர்த்தினார்.

அப்படி ஒரு இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கட்டமைத்த போது, அதைக் கண்டு கலங்கிய இந்துமதவாத அமைப்பினர்தான் ஐந்து முறை முயன்று ஆறாம் முறை அவரைக் கொன்று தீர்த்தனர். காந்தி இந்து மதத்தை முழுமையாக நம்பியவர். ஏற்றவர். இராம பக்தர். அதே நேரத்தில், “என் மதம் எப்படி இன்னொருவர் மதமாக முடியும்?” என பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனச் சொன்னவர்களை நோக்கிக் கேட்டு அவர்களின் அம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்கிற நபிகள் நாயகத்தின் கூற்றிற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாக இருந்தவர். அவரது துயர முடிவுக்குப் பின் என்னென்னவோ நடந்துவிட்டன. அடுத்த ஒரு முப்பதாண்டு காலமும் கூட அவர் உருவாக்கியிருந்த இந்தக் கருத்தியல் அடித்தளம் அவ்வளவு எளிதாகச் சிதையவில்லை.

நாம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் வீதம் 6 சதம். இலங்கையில் உள்ளதைக் காட்டிலும் கொஞ்சம்தான் குறைவு. எனினும் இங்கே தமிழ் அடையாளத்தை அவர்கள் துறக்க இயலாமற் போனதில் இங்கு உருவான திராவிடக் கருத்தாக்கத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. முஸ்லிம்களை உள்ளடக்கியே இங்கு திராவிட இயக்க வழியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த தி.மு.க முதலான இயக்கங்களும் தம் அரசியலைச் செய்தன. காலமெல்லாம் கடவுள் மறுப்புப் பேசிக் கொண்டிருந்த தந்தை பெரியார் இன்னொரு பக்கம் “இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” எனக் கூறி சாதி, தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் முஸ்லிமாக மாறுங்கள் என்றெல்லாம் பேசியதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. ம.பொ.சிவஞானம் என அங்கொருவர் இருந்தார். அவர்தான் திராவிட தேசியத்தை எதிர்த்துத் தமிழ்த் தேசியம் ஒன்றை இந்து அடையாளத்துடன் முன்வைக்க முயன்று தோற்றார்.

இங்கே அப்படியான முஸ்லிம்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியச் சொல்லாடல் எழவே இல்லை. இங்கே உருவான சைவத்தை முதன்மைப் படுத்திய தமிழ்த் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் இன்றளவும் இங்குள்ள பஞ்சம சாதியினர், மலையகத்தார், முஸ்லிம்கள் யாரையும் உள்ளடக்குவது பற்றிய பிரக்ஞை கொண்டிருக்கவில்லை.

போர் இந்தப் பிளவைக் கூர்மைப்படுத்தித்தான் உள்ளதே ஒழிய குறைக்கவில்லை. புலிகளின் கையில் அதிகாரம் இருந்தபோது நாங்கள் சாதி, மதம் என்கிற வேறுபாடுகளை எல்லாம் ஒழித்துவிட்டோம் எனச் சொன்னார்கள். ஆனாலும் போரின் ஊடாக தமிழ் – முஸ்லிம் பிளவு அதிகரித்துக் கொண்டுதான் போனது. இன்று இரண்டு நாட்களுக்கு முன் நான் கிழக்கு மாகாணம் சென்று வந்தேன். முஸ்லிம் நண்பர்கள் பலரையும் சந்தித்தேன். கிட்டத் தட்ட எல்லா தமிழ் முஸ்லிம்களுமே இன்று வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்கவில்லை. வெளிப்படையாக அப்படிச் சொல்லாதவர்களும் கூடத் துருவிக் கேட்கும்போது, “அது நடக்கப் போவதில்லை. எதற்காக அதைப் பற்றிப் பேச வேண்டும்” என்றுதான் சொல்கிறார்கள். அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்களே அப்படிச் சொன்னதாக ஒரு நண்பர் கூறினார்.

4. இந்த நிலை மாற வாய்ப்பு உள்ளது எனக் கருதுகிறீர்களா?

மாறினால் நல்லதுதான். பவுத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு முன் மற்றவர்கள் ஒன்றாக இணைவது நல்லதுதானே. ஆனால் இன்று பிரச்சினை முற்றிலும் எதிரான நிலை நோக்கி அல்லவா போய்க் கொண்டுள்ளது. நான் இங்கு வந்த அன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒன்றைச் சொல்லியிருந்தார். இன்று இங்கு ஏற்பட்டுள்ள ஆதிக்கப்போட்டியில் மைத்ரிபால அரசு கவிழ்ந்து மீண்டும் ராஜபக்சே அதிகாரத்திற்கு வரக் கூடிய நிலை உருவாகியுள்ளது பற்றி அவர் சொல்லியுள்ள ஒரு கருத்தை நான் முகநூலில் பார்த்தேன். ”ராஜபக்சே பற்றி சிங்கம் புலி என்கிற ரீதியில் சிலர் பேசுகிறார்கள். அவர் ஒரு தேசியவாதி அவ்வளவுதான். வெளிநாட்டு மதங்களை ஆதரிப்பவர்கள்தான் இப்படிச் சொல்லுகிறார்கள்..” என்கிற ரீதியில் அவர் கருத்து இருந்தது. நண்பர் ஒருவரிடம் இதைக் கேட்டபோது அவர் சொன்னார். அரசியல் ரீதியில் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அதை மனதில் வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்…”

இங்குள்ள தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தமிழ்த் தேசியத்துடன் எப்போதும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் இருந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தந்தை எனச் சொல்லப்படும் தந்தை செல்வா அவர்களே ஒரு கிறிஸ்தவர்தான். போர்க்காலத்திலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். தந்தை செல்வாவோ, இல்லை அமிர்தலிங்கமோ இல்லை பிரபாகரனோ இவர்கள் யாரும் இதுவரை தமிழ்க் கிறிஸ்தவர்களை அயல்நாட்டு மதத்தவர், அயல்நாட்டிலிருந்து வந்த மதங்கள் என்றெல்லாம் சொல்லாடியதாகத் தெரியவில்லை. எங்கள் நாட்டில்தான் இப்படியான அரசியல் சொல்லாடல்கள் இதுவரை உதிர்க்கப்பட்டு வந்தன. விக்னேஸ்வரன் அவர்களின் இந்தப் பேச்சை மூத்த பத்திரிகாசிரியர் தனபாலசிங்கம் அவர்கள் முகநூலில் விமர்சித்திருந்தார். அடுத்த நாள் அவருக்கு ஒரு நீண்ட மறுப்பை மறவன்புலவு சச்சிதானந்தம் எழுதி இருந்தார். அப்படி எல்லாம் சொல்லிவிடாதீர்கள், வெளிநாட்டு மதங்கள் இங்கே பெரிய அளவில் மதமாற்றங்கள் செய்கிறார்கள் என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.

சிவசேனா என்பது இந்தியாவில் உள்ள மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் இயக்கங்களில் ஒன்று. அந்தப் பெயரில் சச்சிதானந்தம் இங்கு இயக்கம் அமைக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் காக்கி யூனிஃபார்ம் எல்லாம் போட்டுக் கொண்டு இந்தியாவில் உள்ள மதவாத இயக்கங்களைப்போல போஸ் கொடுக்கிறார். மதமாற்றம் செய்கிறார்கள் எனச் சொல்லி சிறுபான்மை மத வெறுப்பை கக்குவதும் ஒரு அப்பட்டமான இந்திய இந்துத்துவ ‘ஸ்டைல்’தான். யாழ்ப்பாண வீதிகளில் நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கு இந்த அமைப்பு பசுவதை எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டி இருந்ததைப் பார்த்தேன். இதுவும் இந்திய இந்துத்துவவாதிகளின் அணுகல்முறைதானே. இதுவரை இங்கு பசுவதை எதிர்ப்பு, மாட்டுக்கற்றி சாப்பிடக் கூட்டாது என்றெல்லாம் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? தமிழ்நாட்டில் தீவிர புலி ஆதரவாளரான காசி ஆனந்தன் மகாராஷ்டிரத்திலிருந்து சிவசேனா இயக்கத்தவரை அழைத்து வந்து மாநாடு போடுகிறார்.

பொதுபல சேனா இலங்கையில் மாநாடு நடத்துகிறது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற இயக்கம் நடத்தும் பிக்கு விராத்து அழைக்கப்படுகிறார். பொதுபல சேனா போருக்குப் பின் இப்போது இலங்கையில் முஸ்லிம்களை இலக்காக்கி தாக்குதல் நடத்துகிறது. இன்னொரு பக்கம் இப்படி சிவசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம்களை இலக்காக்கி பசுவதை முதலானவற்றைப் பேசுகின்றன. இதெல்லாம் போருக்குப் பின் இப்போது இங்கு உருவாகியுள்ள புதிய, ஆபத்தான் போக்குகள்.

5.இலங்கையில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லிம்களைதமிழ் பேசும் மக்கள்என்று அழைக்கிறார்கள். அப்படியான அழைப்புக்குள் உட்படுத்துவது சரிதானா? அல்லது அவர்களை இனரீதியாகப் பார்ப்பது சரியா?

என்னைப் பொருத்தமட்டில் அடையாளம் (Identity) எவ்வளவுக்கு எவ்வளவு விரிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சமூகத்திற்கு நல்லது.  அடையாளம் சுருங்கச் சுருங்க உறுதியாக அது இனவாத அரசியலுக்கே உரமாகும். எனவே நாம் விரிந்த அடையாளத்திற்குள் போவது நல்ல விடயம்தான். அவ்வாறு விரிந்த அடையாளத்திற்குள் போவது என்பது நமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக இருக்கிற போதுதான் சிறு இனங்கள் தம் இன அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் ‘நாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று அறிவிக்க நேர்ந்தது அப்படித்தான். அதை வெறுமனே சொன்னதோடு அவர் நிற்கவில்லை. தீண்டாமைக்குக் காரணமான இந்து மதத்தை விட்டு வெளியேறவும் சொன்னார். ஆக விரிவான அடையாளம் என்பது யாரொருவரின் தனித்துவத்தையும் அழித்துக் கொள்வது அல்ல.  விரிவான அடையாளம் வேண்டும், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் முதலில் மற்றவர்களின் தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டும். அப்படி ஏற்காத நிலையில் பல உள் அடையாளங்கள் தன்னைத் தீவிரமாக வெளிப்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாது.

எனவே மக்கள் மத்தியில் இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் பெரும்பான்மை மக்களின் பங்கும் பொறுப்பும் அதிகமாகிறது. நான் அடிக்கடி காந்தியைப் பற்றிச் சொல்லுகிறேன் என நினைக்காதீர்கள். சமூக ஒற்றுமை என்பதைச் சாத்தியமாக்கியதில் அவர்தான் இன்று மிக முக்கியமான, பின்பற்றப்பட வேண்டிய ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவர் தனது பெரும்பான்மை இந்து அடையாளத்தை மறைத்துக் கொண்டதில்லை. தன்னை ஒரு இராம பக்தராக அடையாளப் படுத்திக் கொண்ட அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைத்து மதத்தினரும் இருந்தனர், அனைத்து மொழியினரும் இருந்தனர். ‘வைஷ்ணவ ஜனதோ’ எனப் பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் “கிருஸ்துவைப் பாடலாமா?” என்கிறார். “நல்ல கருத்து வாருங்கள் பாடுவோம்” என்கிறார் காந்தி. இன்னொருவர் அல்லா வைப் புகழ்ந்து பாடுகிறார்.

இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர நாளன்று ‘பசுவதைத் தடைச் சட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை இந்துத்துவவாதிகள் முன்வைக்கின்றனர். பெரிய அளவில் அந்தக் கோரிக்கை பிரச்சாரம் செயப்படுகிறது. அப்படியான சட்டம் இயற்ற வேண்டும் என ஏராளமான தந்திகள் அடிக்கப்படுகின்றன. காந்தி தங்கியிருந்த நிலையத்திற்கு துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வல்லபாய் படேல் வருகிறார். கூட வந்த உதவியாளர் ஒரு பெரிய மூட்டையைக் கொண்டு வந்து வைத்துப் பிரித்துக் காட்டுகிறார். அவ்வளவும் பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என வற்புறுத்தும் தந்திகள். அவற்றைப் பார்த்துவிட்டு காந்தி, “ஆமாம். எனக்கும் இப்படி நிறையத் தந்திகள் வந்துள்ளன. நான் சின்ன வயது முதல் கோமாதா வணக்கம் செய்து வருபவன். ஆனால் என்னுடைய மதம் எப்படி இன்னொருவரின் மதமாக இருக்க முடியும்?” – எனக் கேட்கிறார். அவ்வளவுதான். அந்தக் கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் காந்தியை இந்து மதவதிகள் கொல்கின்றனர். அதற்கும் அடுத்தடுத்த மாதங்களில் இந்திய மாநிலங்கள் பலவும் மதமாற்றத் தடைச் சட்டங்களை இயற்றுகின்றன. பெரும்பான்மை மதம் அல்லது இனத்திலிருந்து இப்படிப் பேசும் குரல்கள் எழ வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? பெரும்பான்மை மத, இன வாதங்கள் என்பன மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் அதிகாரம் பெறுவதற்கான வழிகள் ஆகி விடுகின்றன. அதுதான் பிரச்சினையே.

அரசியல் – politics- எனும் கருத்தாக்கம் polity- polys – poly எனப் பன்மைத்துவம் எனும் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். பலரும் இணைந்து ஒன்றாக வாழும் கலை என்பதுதான் politics – அரசியல் என்பது. இன்றோ மக்களைப் பிரித்து, எதிர் எதிராக நிறுத்தி அதன் மூலம் அதிகாரம் பெறுவதைக் குறிப்பதே அரசியல் என்றாகிவிட்டது.

உலக அளவிலும் இன்று அரசியல் இப்படித்தானே இருக்கிறது. முதலாளித்துவம் X சோஷலிசம் அல்லது நேட்டோ X வார்சா ஒப்பந்த நாடுகள் அல்லது அமெரிக்கா X சோவியத் யூனியன் என உலகம் இரு துருவங்களாக எதிர் எதிராக நின்ற பனிப்போர்க் காலத்தைக் காட்டிலும் இன்றைய ஒரு துருவ உலகம் அநீதியான ஒன்றாகத்தானே ஆகியுள்ளது. பேரழிவு ஆயுங்களை வைத்திருந்தார் எனவும், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமானார் என்றும் சொல்லி ஈராக் மீது படை எடுத்து, அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட்ட ஜனாதிபதியைத் தூக்கிலேற்றி…..ஏன்னென்ன நடந்துவிட்டது இந்தச் சில ஆண்டுகளில்… கடைசியாக அந்தக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க இயலாமற் போன போது. “intelligence failure – எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது” எனச் சொல்லிப் புன்னகைக்க முடிகிறதே அவர்களால். பெரும்பான்மை மக்களுக்கும்கூட பன்மைத்துவம் காப்பாற்றப்படுவதே நல்லது என்பதை உலகம் உணர வேண்டும். இன்றைய ஒரு துருவ உலகத்தில்தானே சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், சங்கம் வைத்துப் போராடும் உரிமை, இலவசக் கல்வி, மருத்துவம்….. எனப் போராடிப் பெற்ற எல்லா சமூகப் பாதுகாப்புகளும் நாசமாக்கப்பட்டன.

6. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, காத்தான்குடி, எறாவூர் முதலான இடங்களில் முஸ்லிம்கள் படுகொலை செயப்பட்டது இப்படியான யுத்த பாதிப்புச் செய்தி இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறது?

நான் முதன் முதலாக இலங்கை வந்தபோது அப்போதுதான் போர் முடிந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்திற்குச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனினும் பேரா ந.இரவீந்திரன் மற்றும் அவருக்குத் தெரிந்த ஒரு தமிழ் உயர் அரசு அதிகாரி ஆகியோரின் உதவியால் யாழ்ப்பாணம் மட்டுமின்றி முள்வேலி முகாம்கள் மற்றும் போரழிவுகள் நடைபெற்ற பகுதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். மாவீரர் கல்லறைகள், திலீபன் நினைவுச் சின்னம் எல்லாமும் அப்போது சிதைக்கப்படாமல் இருந்தன. காத்தான்குடியில் அந்தப் பள்ளிவாசலுக்கும் சென்று அப்பகுதி மக்களையும் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் வெறிச்சோடிக் கிடந்த முஸ்லிம் பகுதி மட்டுமல்லாமல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழும் புத்தளம் அகதி முகாம்களுக்கும் நண்பர் சிராஜ் மசூர் என்னை அழைத்துச் சென்றார். அப்படியான அகதிக் குழந்தைகள் பயிலும் ஒரு முஸ்லிம் பள்ளிக்கும் சென்றேன்.

மனதை உருக்கிய அக்காட்சிகளை இரண்டு மூன்று இதழ்களிலும் எழுதினேன். அக்கட்டுரைகள் வெளிவந்தவுடன் அவற்றில் சில கொழும்பு ‘தினக்குரல்’ நாளிதழில் உடனுக்குடன் வெளிவந்தன. குமுதம் வார இதழில் வெளிவந்த திலீபன் நினைவுச் சின்னம் பற்றிய என் கட்டுரை ‘தினக்குரலில்’ மறு வெளீயீடு கண்டபோது ராஜபக்‌ஷே அரசு அதை இடித்தது என அப்போது அதன் ஆசிரியராக இருந்த தனபால சிங்கம் அவர்கள் சொன்னார்.

படத்துடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழகத்திலும் கவனம் பெற்றன. எனினும் தமிழகத்தில் அன்றிருந்த ஈழ ஆதரவு எழுச்சி என்பது காத்தான்குடி மற்றும் எறாவூர் முதலான இடங்களில் அப்பாவி முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதையும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் முகாம்களில் படும் துயரையும் நான் எழுதியபோது அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்ல எனது ஈழ அனுபவங்கள் தொடர்பாக தமிழகத்தில் நடத்தப்பட்ட நான்கு கூட்டங்களில் இரண்டில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வந்து கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தனர். புலிகளின் இத்தகைய செயற்பாடுகளை விமர்சிப்பது என்பது இன்றளவும் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அங்கு பேசப்படவே இல்லை. இதில் இன்னும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இங்கு தமிழ்ழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களும் கூட இன்றளவும் அதை அதற்குரிய அழுத்தத்துடன் பேசவில்லை என்பதுதான். 

7. தமிழக மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை உணர்ந்துள்ளார்களா?

பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அளவிலேயே இங்குள்ள மக்களின் அவதானமும் ஆதரவும் உள்ளது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தனித்துவமான பாதிப்புகள் தமிழ்த் தேசிய இயக்கங்களால் மூடி மறைக்கப்பட்டன என்பதே உணமை. மற்றவர்களும் அதைப் பேசத் தயங்கினர். இன்றளவும் அத் தயக்கம் உள்ளது. மனித உரிமை அமைப்புகளும் பேசவில்லை. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது. அதைப் பேசுவதும் கண்டிப்பதும் முதன்மையானது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க இயலாது. ஆனால் முஸ்லிம்களின் துயரங்கள் இங்கு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். என்னைப்  பொருத்த மட்டில் என் நூல்களில் நான் இரண்டையும் எழுதியுள்ளேன். சொல்லப்போனால் நான் மட்டுமே அவற்ரை எழுதியுள்ளேன்.

8.இலங்கையினுடைய இனப் பிரச்சினைக்கு ஆயுதங்களை வழங்கி அதனை ஓர் ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டமையின் முழுப் பொறுப்பும் இந்தியாவின் மீதே சாட்டப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு அவதானம் கொள்கிறீர்கள்?

ஈழப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கியது, அவர்க்ளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. இந்தியாவைப் பின்தளமாக வைத்துச் செயல்படுத்த எல்லா அனுமதிகளையும் வழங்கியது, ஈழ ஆயுத அமைப்புகள் இங்கே ஆயுதப் படை முகாம்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்தின என்பதெல்லாம் உண்மை. ஆனால் ஆயுதப் போரட்டத்தையே இந்தியாதான் உருவாக்கி நடத்தியது என்பதை ஏற்க இயலாது. ஈழ ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த உறவை ராஜிவ் காந்தி கொலைக்கு முன், பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கவும் வேண்டும். ராஜிவ் காந்தி கொலைக்குப் பின் இங்கு ஈழத் தமிழர்கள் கடுமையான கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். அகதிகள் முகாம்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் பேர் திருப்பி அனுப்பப் பட்டனர்.

இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனி ஈழம் பிரித்துக் கொடுப்பது என்பது இந்தியாவின் அஜென்டாவாக என்றைக்குமே இருந்தது இல்லை. இருக்கவும் முடியாது. அப்படித் தனி ஈழம் பிரிவது என்பது இந்தியாவிற்குள்ளும் அப்படியான பிரிவினை எண்ணங்களை ஊக்குவிக்கும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.

பின் ஏன் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்குத் தொடக்கத்தில் இந்தியா ஆதரவாக இருந்தது என்றால் அதனூடாக இலங்கையைச் சீனாவின் பக்கம் சாய விடாமல் தன் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடுதான்.

ஆயுதப் போராட்டக் குழுக்கள் இந்தியாவில் முகாம்களை அமைத்துக் கொள்ளவும். பயிற்சி பெறவும் அனுமதித்த போதும் கூட அவை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன எனச் சொல்ல முடியாது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது.

9. இலங்கையைத் தமிழீழம் எனப் பிரிப்பதற்குத் தமிழ்நாட்டுத் தலைவர்கள்தான் அதிகம் கோஷம் எழுப்புபவர்களாக இருக்கின்றனர். இதற்குப் பின்னணி என்ன?

எல்லாத் தமிழ்நாட்டுத் தலைவர்களும் அப்படி எனச் சொல்ல முடியாது. இங்குள்ள தமிழ்த் தேசிய அமைப்பினர்தான் அப்படித் தீவிர கோஷம் எழுப்புகின்றவர்களாக உள்ளனர். காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றாக இருக்கும் இலங்கை என்கிற கருத்தாக்கம் கொண்டவைதான். கம்யூனிஸ்டுகளைப் பொருத்தமட்டில் சுயாட்சி உரிமையுடன் கூடிய ஒன்றாக இருகும் இலங்கை என்பதுதான் அவர்களின் நோக்கம். தமிழ்த் தேசியர்கள் தனித் தமிழ் ஈழம் எனக் கோருவதில் வியப்பில்லை. அவர்கள் இங்குள்ள தமிழர் பிரச்சினையைப் பேசுவதைக் காட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பேசுவதே அதிகம் என நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படி அவர்கள் பேசுவது என்பதில் அவர்கள், அதாவது இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்களளை என்றைக்கும் கணக்கில் கொண்டதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றி அவர்கள் என்றைக்கும் பேசியதில்லை. விடுதலைப் புலிகளால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி யாராவது பேசினால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் ஆனால்தான் புலிகள் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தவே செய்வர்.

10. நீங்கள் நினைக்கிறீர்களா முஸ்லிம்கள் அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று?

நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ்நாட்டு முஸ்லிம்களில் கூட ஒரு குறிப்பிட்ட அளவு உருது பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத் தட்ட அவ்வளவு பேரும் தமிழ் பேசுகிறவர்கள்தான். தமிழ் பேசுபவர்களாக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்த ஒரு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை இவர்களின்  ஆதரவும் இருந்தது. இப்போதுதான் அது முழுக்க முழுக்க சிதைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் முஸ்லிம்களும் கூட தமிழீழக் குழுக்களில் இருந்துள்ளனர். மிகச் சிலர் முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளனர். முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களுக்குப் பின்பே முற்றிலும் இந்த ஒற்றுமை சிதைந்தது. முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் எனச் சொல்வதை ஏற்க இஅலாது. ஒரு சிலர் காட்டுக் கொடுத்திருக்கலாம். ஏன் தமிழர்களிலும் கூடத்தான் பலர் காட்டிக் கொடுத்துள்ளனர். அப்படியான காட்டிக் கொடுத்தவர்கள், உளவு சொன்னவர்கள் ஆகியோரைப் புலிகள் தண்டித்தும் உள்ளனர். ஆனால் அவ்வாறு காட்டிக் கொடுத்தவர்கள் இந்துத் தமிழர்களாக இருந்தால் காட்டிக் கொடுத்த அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் என்கிறபோது ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமூகமே அல்லவா தாக்கப்பட்டது.

11. அவ்வாறு ஒரு சில சம்பவங்களுக்காக ஒரு சமூகத்தயே, ஒரு பூர்வீகத்தையே வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?

உறுதியாக அப்படி இருக்க முடியாது. அது கண்டிக்கத் தக்கது. தொடக்கம் முதல் தமீழீழப் போராட்டம் ஒரு வகையில் சைவக் கருத்தியல் சார்ந்து உருவானது இதற்கொரு அடிப்படையாக இருக்கலாம். இன்று மறவன்புலவு சச்சிதானந்தம் முதலானோரின் முயற்சிகள் மேலும் இந்தப் பிளவை வலுப்படுத்தவே செய்யும்.

12. பல மாநிலங்கள் கொண்ட இந்தியாவைப் புறந்தள்ளி இலங்கையில் ஒரு தனி நாட்டை உருவாக்க இயலுமா?

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை ஒரு சின்னஞ் சிறு நாடு என்பதாலேயே இந்தியாவைச் சார்ந்தே இலங்கை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியா ஒரு வலுவான, அணு ஆயுத பலம் கொண்ட வளர்ந்து வரும் நாடு என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் உறவு சுமுகமாக உள்ளது எனச் சொல்ல முடியாது. இன்னொரு அணு ஆயுத பலமுள்ள பாகிஸ்தானுக்கும் அதற்குமுள்ள பகை முற்றுகிறது. அதேபோலத்தான் சீனாவும். பல வகைகளில் இந்தியாவைக் காட்டிலும் வலுவாக உள்ள நாடான சீனாவுடனும் அதற்கு நல்ல உறவில்லை. தங்களின் உள் நாட்டு அரசியலில் அளவுக்கு மீறித் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டை நேபாளமும் இந்தியா மீது வைக்கிறது. எனவே கடல் எல்லை இல்லாத அந்த இமயமலை ஓர நாடு இப்போது சீனாவுடன் அதிகம் நெருக்கம் பேணுவதைக் காணலாம். இந்தியாவின் துணையுடன் உருவான வங்க தேசத்திற்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவும் அத்தனை சீராக இல்லை. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்த ஆயுதக் குழு ஒன்றின் உதவியுடன் மாலத்தீவில் ஒரு அரசு கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா தலையிட்டு அம்முயற்சியை முறியடித்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்கு ஒரு அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது இந்தியாவால் அப்படித் தலையிட முடியவில்லை.  இப்போது அதை வேடிக்கை பார்க்க மட்டுமே அதனால் முடிந்தது. சீனப் போர்க் கப்பல் ஒன்று மாலத்தீவிற்கு அருகாக நிறுத்தப்பட்டதோடு மெலிதான ஒரு எச்ச்சரிக்கையையும் அது செய்தபோது இந்திய்யா ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே இந்தியா ஒரு வலுவான பெரிய நாடான போதிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகள் அவை எவ்வளவு சிறிய நாடாயினும், அந்தச் சிறிய நாடுகள் இந்தியாவை நம்பித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இலங்கையின் உள்நாட்டு அரசியல் இந்தியாவின் நிலைபாட்டைப் பொறுத்து அமைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதல்ல. இந்தியாவைப் பொறுத்த மட்டில் இலங்கை துண்டாவதை அது பொதுவாக விரும்பாது. ஏன் என்பதை முன்பே சொல்லியுள்ளேன்.

13. இந்தியாவில் உருவாகியுள்ள பாரதீய ஜனதா கட்சியிலான ஆட்சி இலங்கையின் உள்நாட்டு அரசியலில் என்ன மாதிரியான தாக்கங்களை விளைவிக்கலாம்?

இலங்கை, இந்தியா இரண்டுமே இப்போது பெரும்பான்மை மதவாத ஆட்சிகள் நடக்கும் நாடுகள். ஆனால் இந்தியாவை ஆளும் பெரும்பான்மை மதம் இலங்கையில் ஒரு சிறுபான்மை மதம். எனினும் இப்போதைக்கு இரண்டு நாட்டிலும் உள்ள பெரும்பான்மை மதங்களும் அவரவர் நாட்டில் முஸ்லிம்களை எதிராக நிறுத்தி அரசியல் செய்யக் கூடியவையாக உள்ளன. நான் சற்று முன் சொன்னது போல இந்தியா இலங்கை துண்டாடப்படுவதை விரும்புவதில்லை. ஒரு வேளை இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைப்பு எனும் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியை இந்தியா செய்யலாம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த இணைப்புக்கு ஆதரவில்லாத நிலையில் ஒரு வேளை பா.ஜ.க தலைமையிலான இந்தியா அந்த இணைப்பை வலியுறுத்தலாம்.

14. உலகெங்கிலும் இவ்வாறு பிரிவினைக் கோரிக்கைகள் உருவாகி வலுப்பெற்று வருவது குறித்து உங்கள் கருத்தென்ன?

உண்மைதான் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து ஸ்காட்லந்து பிரான்சிலிருந்து அல்சேஸ், ஸ்பெயிலினிலிருந்து கேடலோனியா எனக் கிட்டத்தட்ட 14 பிரிவினைக் கோரிக்கைகள் இன்று மேலெழுந்துள்ளது உண்மைதான். ஆனால் இன்று எழுந்துள்ள இந்தப் பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் சென்ற நூற்றாண்டில் உருவான பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் உள்ள ஒரு வேறுபாட்டை நீங்கள் காண வேண்டும். முந்திய நூற்றாண்டில், இலங்கை உட்பட உருவான பிரிவினைக் கோரிக்கைகள் இன ஒடுக்கு முறை, இன வெறுப்பு அதனடிப்பட்டையிலான வன்முறைகள் என்கிற பின்னணியில் உருவானவை. கடும் பகை, ஆயுதப் போராட்டங்கள், அப்பாவிகள் கொல்லப்படுதல் என்பதாக அவை அமைந்தன. இன்று உருவாகும் பிரிவினைக் கோரிக்கைகள் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி, பெரிய இராணுவ வலிமை தேவை இல்லாத சூழல் முதலான பின்னணிகளில் சுயேச்சையான அரசியல், பொருளாதார நிர்வாகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் முன்வக்கும் கோரிக்கைகள். இவற்றில் பெரும்பாலும் வன்முறையில்லை. இந்தக் கோரிக்கைகள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் வாப்புகளை உள்ளட்டக்கியவையாக உள்ளன. இந்த வேறுபாட்டையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்கள் முன் நண்பர் ஒருவருடன் கிழக்கு மாகாணத்தில் காரில் வந்து கொண்டிருந்தேன். வாகனத்தை ஓட்டியவண்னம் எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த முஸ்லிம் ஓட்டுநர் சொன்ன்னார்: “இனங்களுக்குள் வேறுபாடு இங்கே அதிகரித்துக் கொண்டே போகிறது. தனித்தனியாய்ப் போறது நல்லதுதான். ஆனா இங்கே உள்ள இந்த மூன்று இன மக்களும் தனித்தனையாய்ப் பிரிந்து ஆளுவதற்கு உரிய மாதிரி இங்கே நிலப் பரப்பும் சனச் செறிவும் இல்லை. அதுதான் பிரச்சினை..”

15. இந்திய இராணுவத்தின் இலங்கை மீதான படை எடுப்பு, இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றை நீங்கள் எவ்வாறு பார்க்குறீர்கள்?

அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய இராணுவம் பல அத்து மீறல்களை மேற்கொண்டது. ஓரு ஆக்ரமிப்பு இராணுவம் எப்படிஎல்லாம் நடந்து கொள்ளுமோ அந்த அளவுக்கு அதன் அத்துமீறல்கள் இருந்தன. ஆனாலும் அதை இலங்கை மீதான இந்தியப் படை எடுப்பு என்பதாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஜெயவர்த்தனா அரசின் ஒத்துழைப்புடன், அனுமதியுடன் நுழைந்த படைதான் ‘இந்திய அமைதி காப்புப் படை’ (IPKF). ஜெயவர்த்தனா ராஜீவ் காந்தியை விட புத்திசாலி. இந்தியப் படைகளை வைத்துத் தன் திட்டத்தை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பொருத்த மட்டில் அதில் இருந்த சில நல்ல கூறுகளும் கூட இன்னும் நிறைவேற்றப்படாமலும், உடனடி எதிர்காலத்திலும் கூட நிறைவேற்றப்படும் வாப்பும் இல்லாமல்தானே உள்ளன.

16. இலங்கை அனுசரணையுடந்தான் வந்தார்களா, இல்லை அவர்களே ஆதிக்கமாகத்தான் வந்தார்களா?

பிரேமதாசாவின் காலத்தில் இந்திய விமானப் படை இலங்கை எல்லைக்குள் நுழைந்து உணவுப் பொதிகளைப் போட்டுச் சென்றது என்பதை ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதைக் காட்டிலும் இந்தியா இலங்கைக்கு அளித்த ஒரு எச்சரிக்கை என்றுதான் பார்க்க வேண்டும். ஜெயவர்த்தனா, நான் சற்று முன் சொன்னது போல, இந்த மிரட்டலை மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். உள்ளே வந்த இந்தியப் படை ஒரு கட்டத்தில் அதுவாகவே, பெரிய இழப்புகளுடன், வெளியேற நேர்ந்தது.

17. இறுதி யுத்தத்தில் இந்தியா வழி நடத்தியதாகவும், உதவிகள் வழங்கியதாகவும் இந்திய தமிழ்த் தலைவர்கள் சொல்கிறார்கள். இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்.

அப்படியான குற்றச்சாட்டில் உண்மைகள் உள்ளன. அதே நேரத்தில் அந்தக் குற்றச்சாட்டில் பல சற்று மிகைப்படுத்தியும் முன்வைக்கப்பட்டன; இன்றும் முன்வைக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் அதன் முன்னாள் பிரதமர் ஒருவரைப் புலிகள் கொன்றது என்பது புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோப ரீதியான தவறு. அதனால் அவர்களுக்கு இழப்புகள்தான் மிஞ்சினவே ஒழிய பலன் ஏதும் இல்லை.  

18. இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு என நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சற்று முன் நான் பயணம் செய்த ஒரு வாகன ஓட்டுநர் சொன்னதைக் குறிப்பிட்டேன். இங்கு மூன்று தேசியங்கள் பேசப்படுகின்றன. மலையகத் தமிழர்களையும் சேர்த்தால் நான்கு. தமிழ் பேசும் மக்கள் என மொழி அடிப்படையில் ஒன்றிணைவதற்கான வாப்பு குறிந்து கொண்டே போகிறதே ஒழிய கூடவில்லை. ஆனால் இப்படியான தேசியங்களின் அடிப்படையில் இந்தச் சின்னத் தீவைப் பிரிப்பதற்கான புவி இயல் சாத்தியங்களும் இல்லை. போர் முடிந்து இங்கு வந்து சென்றபோது நான் எழுதிய எல்லாவற்றிலும் வடக்கு – கிழக்கு இணைந்த காணி மற்றும் போலீஸ் அதிகாரமுள்ள முழுமையான சுயாட்சியுடன் கூடிய இலங்கை என்கிற கருதைத்தான் முன்வைத்திருந்தேன். இப்போது பார்க்கும்போது அதுவும் கூடச் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதை முஸ்லிம்கள் முழுமையாகப் புறக்கணிப்பதை அவர்களுடனான உரையாடல்களின் ஊடாகக் காண முடிந்தது. இதற்கு அவர்களை மட்டும் குற்றஞ்சாட்டிப் பயனில்லை. இப்போது வடக்கு தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்துத்துவ தமிழ் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களுக்கும் தமிழ்ச் சைவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் சாத்தியங்களை மேலும் குறைத்துள்ளது. போருக்கு முன் தமிழ்த் தேசியத்தை விமர்சிக்கும்போது அதன் சைவப் பின்புலத்தைத்தான் என்னைப் போன்றவர்கள் முன்வைத்தோம். அதைவிட இன்று உருவாகிவரும் இந்திய பாணியிலான இந்துத்துத்துவ தமிழ்த் தேசியம் இன்னும் பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது. தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மேலும் சிதைவதற்கே இது இட்டுச் செல்லும்.  

19. தமிழ்நாடு பிரியவேண்டும் என்பதில் எந்த அளவு ஆதவும் எதிர்ப்பும் உள்ளது?

இதுபோன்ற விடயங்களில் உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த அளவுக்குச் சாத்தியம் என்கிற கேள்வியோடு தொடர்புடையதுதான்  இப்படியானவற்றிற்கான மக்களின் ஆதரவு என்பது. வாய்ப்பு உள்ளது என்கிற போது வெளிப்படுகிற ஆதரவுக்கான அளவைக் காட்டிலும் வாய்ப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிறபோது ஆதரவு குறைவாகவே இருக்கும். பொதுவாகத் தமிழ்நாடு இன ரீதியாக அதன் தனித்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரம்பரியம் உள்ள ஒன்று. இன்று ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதில் தீவிரமான ஒன்று. இந்த நோக்கில் அதன் நடவடிக்கைகள் பலவும் தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்துவதன் ஊடாக இந்தத் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடித்துவிடலாம் என இந்துத்துவ தேசியம் நினைத்து அதைத் தீவிரப் படுத்துகிறது. தமிழ்த் தேசியம் இந்தச் சூழலைச் சரியாக விளங்கிக் கொள்ளாத நிலை தொடர்ந்தால் இந்துத்துவ தேசியத்திற்கு அது பலியாவது உறுதி. இந்துத்துவ தேசியத்தை வலுவாக எதிர்க்க வேண்டுமானால் தமிழ்த் தேசியம் அதிலிருந்து தன்னை வெளிப்படையாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். இந்துத்துவமயமாக்கும் முயற்சியை அது கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படியான சாத்தியங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் தமிழ்த் தேசியம் இன்றில்லை.

20. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பார்வை என்னவாக உள்ளது?

தமிழக மீனவர்கள் மிக்க நெருக்கடியில் உள்ளனர்.  பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட சமூகம் அது. சுமார் 7,000 கிமீ நீளமுள்ள கடற்கரையை உடைய நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசில் மீன்வளத்துறைக்கு ஒரு அமைச்சகம் கூட இல்லை. தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கைக்கும் இந்திய அரசு செவி மடுப்பதில்லை. இந்நிலையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சில திட்டங்கள் மேலும் கவலை அளிக்கக் கூடியவையாக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கடல் எல்லையில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் மீன் பிடிக்க உரிமை அளிக்கும் திட்டம், அதற்குரிய வகையில் மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கும் ‘சாகர்மாலா’ திட்டம் முதலியன அவற்றில் சில. இவை மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியவை.

தமிழக மீனவர்களைப் பொருத்த மட்டில் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இது மிகவும் சிக்கலான ஒன்று. இதை முழுமையாகத் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனச் சொல்ல முடியாது. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்கிறது என ஒரு ஒற்றை வாப்பாடாகவே இங்குள்ள தமிழ்த் தேசியம் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடல் எல்லையில் பாரம்பரிய உரிமை உண்டு என்பதையும், கடல் எல்லை என்பது நில எல்லை போல வேலி போட்டுத் தடுத்துவிட முடியாத ஒன்று என்பதும் உண்மை. பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் இந்திய மீனவர்கள் பெரிய எந்திரப் படகுகளில் வந்து மீன்பிடிப்பதால் எங்களால் அவர்களுடன் போட்டி போட இயலவில்லை. எங்கள் வலைகளை எல்லாம் அவர்களின் பெரும் படகுகள் அழித்துவிடுகின்றன எனப் புகார் கூறும் இலங்கை மீனவர்கள் யாரும் சிங்களர்கள் அல்ல, அவர்கள் பெரும்பாலும் தமிழ் மீனவர்கள் என்கிற உண்மை தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. விளக்கிச் சொல்லும்போது வியப்பார்கள். இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.

நிறையப் பிரச்சினைகள் அறைகுறைப் புரிதலுடந்தான் எதிர்கொள்ளப் படுகின்றன. தமிழக முஸ்லிம்கள் பலருக்கும் கூடப் போரின் ஊடாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்ட கதை எல்லாம் தெரியாது.

21. யுத்தத்திற்குப் பிறகு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இலங்கையின் யுத்த முடிவு என்பதை உலகளவில் அதே காலகட்டத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களுடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். உலக அளவில் ஆயுதப் போராட்டங்கள் இப்போது பின்னடைவை அடைந்துள்ளன. ஷைனிங் பாத், ஹமாஸ் எனப் பல இயக்கங்கள் இப்போது ஆயுதப் போரட்டத்தைக் கைவிட்டுள்ளன. இன்னொரு பக்கம் மார்க்சியம் பொது உடைமை, மதச்சார்பின்மை, இன ஒற்றுமை முதலான மேன்மை மிக்க பல கருத்தாக்கங்கள் இன்று பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. உலகெங்கிலும் ‘இஸ்லாமிய வெறுப்பு’ (islamophobia) என்பது இன்று லாபம் கொழிக்கும் ஒரு தொழிலாகவே ஆகியுள்ளது. பௌத்த பேரினவாதம், இந்துத்துவம் முதலான மத அடிப்படைவாதங்களின் எழுச்சிக் காலமாக இந்த நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இப்படியான இயக்கங்களுக்கு இன்று நிதி ஒரு பொருட்டாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் ராமகிருஷ்ணா மிஷன் எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளது. அன்று நான் அக்கறைப்பற்றுவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஒரு இடத்தில் இந்தியச் சாமியார் ஒருவர் எதோ ஒரு மடத்திற்காக வாங்கி வேலி போட்டப்பட்டிருந்த இடத்தை நண்பர் ஒருவர் காட்டினார். புதிய வடிவில் பெரும்பான்மை மதவாதம் மேலெழுந்து வரும் கால கட்டம் இது. பாரம்பரியமாக நம் மக்கள் மத்தியில் மத, சாதி, இன வேறுபாடுகளைத் தாண்டி இருந்த ஒற்றுமைகள் எல்லாம் பாழாகி வரும் காலகட்டம் இது. இன ஒற்றுமையும், நல்லிணக்கமும் அழிந்து போவது என்பது இன்று ஒரு உலகளாவிய போக்காகவே உள்ளது. மார்க்சீயத்தின் வீழ்ச்சி என்பது என்னைப் பொருத்த மட்டில் இந்த வகையில் மிகப் பெரிய ஒரு இழப்பு. மார்க்சியத்தின் வீழ்ச்சி என்பது உண்மையில் அது மார்க்சியத்தின் அல்லது சோவியத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல. உலகளாவிய முற்போக்குச் சிந்தனைகள் அனைத்தின் வீழ்ச்சி அது.

எங்கள் நாட்டில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் எனும் வகுப்புவாத வன்முறை இயக்கம் முற்போக்குச் சிந்தனைகள் ஓங்கியிருந்த சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆனால் மிகத் தீவிரமாகத் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. இன்று சாதகமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதன் பின்னணியில் மிகவும் வெளிப்படையாக வெளிவந்து செயல்படுகிறது.

மொத்தத்தில் பிற்போக்குப் பிளவுவாத சக்திகள் வெளிப்படையாக இயங்கும் காலம் இது. இந்தப் புரிதலோடுதான் நாம் இயங்க வேண்டும்.

22. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவ சக்திகளும், இலங்கையில் அதிகரித்து வரும் பவுத்த சக்திகளும், இவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா?

இந்தியாவில் உருவான பவுத்த மதம் இந்தியாவில் அழிந்தது. புத்தர் மறைந்த சுமார் 700 ஆண்டுகளில் அந்த அழிவு துவங்கியது. புஷ்ய மித்திர சுங்கன் எனும் இந்து மன்னனின் காலத்தில் பவுத்த பிக்குகளின் தலைகளுக்கு விலை கூறி பவுத்தம் அழிக்கப்பட்ட வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளார். சுமார் 12, 13ம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவில் பவுத்தம் ஓரளவு செழித்திருந்தது. பின்னர் அதன் சுவடுகள் இல்லாமற் போயின. பவுத்தர்களின் ஆகப் புண்ணிய தலமாகிய புத்தகயா ஒரு இந்து வழிபடு தலமாக மாற்றப்பட்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அநகாரிக தர்மபாலா பிரிவு கவுன்சில் வரை சென்று வழக்காடி அதை மீட்டார். அதே தர்மபாலாதான் இன்றைய சிங்கள பவுத்த தேசிய எழுச்சியின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

அநகாரிக தர்மபாலா, கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி முதலானோர் இந்திய மதங்களில் ஆர்வம் கொண்டு அவற்றின் புத்தெழுச்சிக்குக் காரணமானவர்கள் என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அந்தப் பின்னணியில்தான் சிங்களப் பேரினவாதம், இந்துத்துவ பாங்கரவாதமும் தழைத்தன. பவுத்தத்தில் ‘இறை’ (God), ‘ஆன்மா’ முதலான கருத்தாக்கங்கள் கிடையாது. புத்தர் தன்னை ஒரு இறைத்தூதர் என்றும் கூட அறிவித்துக் கொண்டதில்லை. இறைவாக்கு என அவர் எதையும் சொன்னதும் இல்லை. சென்ற இடமெல்லாம் அறம் உரைத்துச் சென்ற “ததாகதர்” (வழிப்போக்கர்) அவர்.

ஆனாலும் அது ஒரு மதமாக ஆக்கப்பட்ட போது அதற்குக் கடவுள் தேவையிருந்தது, வழிபாடுகள் தேவையாயின. சடங்குகளும் தேவையாயின. எனவே அது ஆங்காங்கு மரபு வழியில் வணங்கப்பட்ட தெய்வங்களையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்டது. இன்றளவும் பவுத்த ஆலயங்களில் இந்துக் கடவுளர் வணங்கப்படுவது அப்படித்தான். பவுத்தம் ஒரு ஆசிய மதம். ஆசியாவில் காணப்படும் மதங்கள், வழிபாடுகள் ஆகியவற்றை அது ஆங்காங்கு இணைத்துக் கொண்டது. கீழைத் தேய மதங்கள் ஒரு வகையில் இப்படி inclusive ஆனவை; செமிடிக் மதங்கள் அப்படி அல்ல. அவை exclusive ஆனவை.

இந்தியாவில் இந்து மதத்தைப் பொருத்த மட்டில் இப்போது பவுத்தம் ஒரு எதிரியே அல்ல. பவுத்தத்தை அது முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. எனவேதான் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசம், தன்னால் உள்வாங்க இயலாததாகவும், பரவும் சாத்தியமுள்ளதாகவும் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களையே தன் முக்கிய எதிரியாகக் கருதுகிறது. 

அந்த வகையில் போருக்குப் பிந்திய இன்றைய சூழலை உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்காக்கி இன்றைய இனவாத பவுத்தமும் இந்துத்துவமும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. போருக்குபின் உருவான பொதுபல சேனா போன்ற அமைப்புகள் இன்று முஸ்லிம்களை முதன்மை இலக்காக்கிச் செயல்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாண்டுகளுக்கு முன் பொதுபல சேனா இங்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் மியான்மரில் இருந்து முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிக்கு விராத்து அழைக்கப்பட்டதை அறிவீர்கள் அம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அழைக்கப்பட்டுகந்தச் செய்தி வெளியானவுடன் அது ரத்து செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். இலங்கை பவுத்த இனவாதம் முஸ்லிம்களை இலக்காக்கும்போது இந்திய இந்துத்துவம் அதனுடன் கைகோர்க்கத் தயங்காது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 23. இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள இடதுசாரி இயக்கங்கள் பூரண அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

உண்மைதான். வாசுதேவ நாணயக்காரா போன்றவர்கள் ஏதும் பேசுவதில்லை. ஜே.வி.பி யும் ஒரு இனவாத இயக்கமாகவே மாறியது. உலக அளவில் இன்று இடதுசாரி இயக்கங்கள் பல்வீனமடைந்துள்ளன. இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மத்தியிலும் இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் ஒரு உள்ளார்ந்த வெறுப்பு உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுபான்மை மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கென இப்போது கட்சிக்குள் அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் முத்தலாக் பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டபோது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் பெற்ற தலைவர் சண்முகதாசன் (சண்) எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.

24. ஈழப் போராட்டம் தோல்விஅடைந்து விட்டதா உங்கள் பார்வையில்?

ஈழப் போராட்டம் அடிப்படையில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம். அதற்கான நியாயங்கள் அதனிடம் இருந்தன. இன்னும் இருக்கின்றன. எனினும் அதன் வழிமுறைகளில் பல தவறுகள் இருந்தன. தனி ஈழம் என்கிற கோரிக்கை பல்வேறு அம்சங்களில் தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது உண்மைதான்.

25. தமிழ்ச் சமூகம் எதிலிருந்து எழும்ப வேண்டி இருக்கிறது?

“தமிழ்ச் சமூகம்” என நீங்கள் பொதுவாக தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிச் சொன்னது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ச் சமூகத்ததிற்கென பொதுப் பிரச்சினைகள் உள்ளதையே அது காட்டுகிறது. தமிழ்ச் சமூகத்திற்கென ஒரு பொது எதிரி உள்ளதையும் அது ஏற்கிறது. அதுதான் பேரினவாதம். காணி ஆக்ரமிப்பு, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், மொழிஉரிமை, இராணுவ நீக்கம் முதலான அம்சங்களில் ஒன்றுபட்டு எழுதலுக்கு தமிழ்ச் சமூகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்

பார்ப்பனீயத்தாலும் சைவத்தாலும் அழிக்கப்பட்டுத் தமிழ் மண்ணிலிருந்து துடைக்கப்பட்ட பவுத்தத்தைப் புத்துயிர்க்கும் நோக்கில் சென்ற 150 ஆண்டு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டுப் பலரும் பங்காற்றியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி, அயோத்திதாசர், அநகாரிக தர்மபாலா, பேராசிரியர் லட்சுமி நரசு, தந்தை பெரியார், அறிஞர் சிங்காரவேலர் முதலானோரைக் குறிப்பிட்டுச் செல்லலாம். உ.வே.சா அவர்கள் விரிந்த முன்னுரையுடன் பதிப்பித்த மணிமேகலை, கோபாலய்யரின் உரையுடன் வெளிவந்த வீர சோழியம், மயிலை சீனி வேங்கடசாமி, பேரா.சோ.ந.கந்தசாமி முதலானோரின் பதிப்பு முயற்சிகள் மற்றும் நூலாக்கங்கள் ஆகியன இன்னொரு பக்கம் பவுத்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

எனினும் பவுத்தப் புத்துயிர்ப்பு இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் சற்றே தொய்வுற்று இருந்தது என்றே சொல்ல வேண்டும். எழும்பூர் கென்னத் லேனில் அமைந்துள்ள புத்த மையம் இலங்கை சிங்கள பவுத்தர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவது. மற்றபடி தமிழகத்தில் பெரிய அளவில் வவுத்த வழிகாட்டுத் தலங்கள், ஒரு மதத்தின் இருப்பிற்குத் தேவையான சமூக ஒன்று கூடல் மையங்கள் இங்கு போதிய அளவில் கிடையாது. இல்லை எனவே சொல்லலாம். இத்தனைக்கும் எத்தனையோ புத்த சிலைகள் ஆங்காங்கு மண்ணுக்கடியில் புதையுண்டு கிடந்து கண்டு பிடிக்கப்படுவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இடைக்காலத்தில் அயோத்திதாசரின் மகன், அன்பு பொன்னோவியம், தங்கவயல் வாணிதாசன், பெரியவர் சுந்தரராஜன் ஆகியோர் தம்மப் பணியைத் தொடர்ந்தாலும் வீச்சுடன் செயல்பாடுகள் இல்லை.

இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன் ‘எங்கிருந்தோ வந்தான்….. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..’ என்பதைப்போல இங்கு வந்துதித்தார் பெரியவர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள். அவர் பூர்வாசிரமம் அறியேன். எப்போதாவது அறிய முனைந்தபோது மிகச் சுருக்கமான பதிலே கிடைத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் சென்னையை மையமாகக் கொண்டு தம்மப் பணி மீண்டும் துளிர்த்தது. பவுத்தத்தில் ஆர்வமுடையவர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களை ஒருங்கிணைத்தார் பெரியவர் கிருஷ்ணன். நந்தனம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜெயபாலன், எங்களோடு சுயமரியாதை இயக்கத்தில் பணி செய்த என் அன்பிற்குரிய நடராஜன், தங்கவயல் வாணிதாசன் …. என இன்னும் பல பவுத்த ஆர்வலர்கள் அவரால் ஒன்றிணைக்கப்பட்டனர்.

‘போதிமுரசு’ என்றொரு காலாண்டு இதழும் உருவானது. ‘மெத்தா’ பதிப்பகம் தம்ம நூல்களை வெளியிட என உருவாக்கப்பட்டது. ‘தமிழ்நாடு பவுத்த சங்கம்’ அமைக்கப்பட்டு அதில் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார் கிருஷ்ணன். சங்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய பிக்கு போதிபாலர்.

அப்படித்தான் ஒருநாள் என்னையும் தேடிவந்தார் பெரியவர் கிருஷ்ணன். நான் பேறு பெற்றேன். எனது ‘புத்தம் சரணம்’ நூலை மெத்தா பதிப்பகத்தில் வெளியிட வேண்டும் என்றார். பணிந்து ஏற்றுக் கொண்டேன். “ஒரு சிறந்த தம்மப் பணியாகக் கருதி இந்நூலை வெளீயிடுகிறோம்” என முன்னுரைத்து அந்நூல் அவர்களாலும் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணன் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகங்கத்துடன் ஒருங்கிணைந்து பவுத்தவியல் கருத்தரங்குகளையும் அவ்வப்போது  நடத்தி வருகிறார். அவற்றில் நானும் மறக்காமல் அழைக்கப்படுவதுண்டு.

மெத்தா பதிப்பகம் Life and Consciousness உட்பட 8 ஆங்கில நூல்கள் (இவற்றில் சில முக்கிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து வெளியிடப் பட்டவை), நாகார்ஜுனரின் ‘சுரில்லேகா’ உட்பட 30 தமிழ் நூல்கள், லட்சுமி நரசுவின் ‘பௌத்தம் என்றால் என்ன?’ உட்பட 10 மொழியாக நூல்கள், ‘தீபவம்சம்’ உட்பட பிக்கு போதிபாலரின் 6 நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

ஏதாவது முக்கிய பவுத்த நூல் என அடையாளம் காட்டினால் அவற்றை உடன் ஆர்வத்துடன் வெளியிடுகின்றனர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு இப்போது அச்சில் இல்லாத நூலொன்று என் சேகரத்தில் இருந்தது. முன்னாள் பர்மிய பிரதமர் ஊநு வின் ‘புத்தர் பிரான்’ எனும் அந்நூல் ஊநு அவர்கள் வங்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆற்றிய உரை. நான்கு மொழிகளில் அது மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் தமிழும் ஒன்று.  அந்நூலை நான் நகலெடுத்து அனுப்பி அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தபோது அடுத்த சில வாராங்களில் அதுவும் மெத்தா வெளியீடாகப் புதிய நூலாகியது.

# # #

இருளில் ஒளியும் செஞ்சுடர், ஜே.கே – ஒரு பௌத்தரின் நோக்கில், பௌத்த வாழ்வியல் சடங்குகள், நாகார்ஜுனரின் சுரில்லேகா, திபேத்திய மரணநூல், லட்சுமி நரசுவின் பவுத்தம் என்றால் என்ன?, தலாய்லாமாவின் சொற்பொழிவுகள், தாமரை மலர்ச் சூத்திரம், பௌத்தத்தின் பார்வையில் இந்திய ஞான மரபுகள் முதலான நூல்கள் மற்றும் மொழியாக்கங்கள் பெரியவர் கிருஷ்ணன் அவர்களால் ஆக்கப்பட்டவை. (இது முழுமையான பட்டியல் அல்ல).

கிருஷ்ணனின் சில நூல்கள் ‘காலச்சுவடு’ வெளியீடாகவும் வந்துள்ளன.

கிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் எழுதியுள்ள ‘இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா’ எனும் நூல் ஆர்.எஸ்.எஸ்சின் எடுபிடிகளில் ஒருவரான ம. வெங்கடேசன் எனும் நபர் எழுதியுள்ள ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் ஒரு அபத்த நூலுக்கு எழுதப்பட்ட உடனடியான மறுப்புரை. “பிறக்கும்போது இந்து மதத்தில் பிறந்தேன், சாகும்போது அதில் சாக மாட்டேன்’ எனச் சொல்லி பவுத்தம் தழுவியவரும், ‘சாதிக்கோட்டையில் பிளவை ஏற்படுத்த வேண்டுமானால் பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சிறிதும் இடம் கொடாத வேத சாத்திரங்களுக்கு வெடிவைத்தே ஆக வேண்டும்’ எனவும், ‘(இந்து மதப்) புனிதநூல்கள், புராண சாத்திரங்கள் புனிதமானவையோ. அதிகாரபூர்வமானவையோ அல்ல எனச் சட்டபூர்வமாகச் செய்ய வேண்டும்’ எனவும் ‘பார்ப்பனீயத்தையும் முதலாளியத்தையும்’ இரு பெரும் எதிரிகள் என அடையாளம் காட்டியவருமான அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவவாதியாகச் சித்திரித்து எழுதுவது அம்பேத்கர் அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அவமானம். இதற்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராத நிலையில் அந்தப் பணியைத் தன் மேற் போட்டுக் கொண்டு கிருஷ்ணன் அவர்கள் உடன் எழுதிய அற்புதமான நூல்தான் இது.
# # #

பவுத்தத்தின் மீதும் அம்பேத்கரின் மீதும் ஒரு சேர பற்றும் மதிப்பும் உள்ள ஒருவரின் மனம் இந்த அவதூறால் எத்தனை நொந்து போகும் என்பதற்கு ஒரு வாழும் சாட்சியாக உள்ள அறிஞர் கிருஷ்ணன் அவர்களின் இந்நூலை நேற்று வெளியிட்டுப் பேசும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்றே உணர்ச்சிவயப்பட்டுத்தான் என்னால் அங்கு அந்த உரையை நிகழ்த்த முடிந்தது.

மறைந்த பௌத்த பிக்கு வண,போதிபாலா அவர்கள் மதுரையிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையடிவாரக் கிராமமான குட்லாம்பட்டி எனும் பகுதியில் உருவாக்கியுள்ள ஒரு பௌத்த வணக்கத் தலம்தான் ‘தம்ம விஜய மகா விகாரை’. அமைதி தவழும் அந்த  மலை அடிவாரத்தில்தான் நேற்று அந்த நிகழ்வு நடை பெற்றது.

நேற்றைய நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பன்மொழி அறிஞரும் சிங்களத்தில் மட்டுமின்றித் தமிழிலும்30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவருமான விஜயரத்னே, இலங்கையிலிருந்து வந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்று வரும் வண.பிக்கு மங்கல தேரர், காந்தியியல் அறிஞர் செயப்பிரகாசம், பாலி மொழியிலிருந்து பௌத்த நூல்களை மொழியாக்கம் செய்யும் பேரா. செயப்பிரகாசம், மணிமேகலை ஆய்வாளர் பேரா. அரங்கமல்லிகா, தங்கவயல் வாணிதாசன், பவுத்த ஆய்வாளர் பேரா. ஜெயபாலன் முதலான பலரும் வந்திருந்தனர்.

காலை 11 மணி அளவில் அங்கிருந்த பவுத்த ஆலயத்தில் முறைப்படி பவுத்த வழிபாட்டை வண. போதிபாலர் தொடங்கி வைத்தார். பவுத்தம் தழுவியோர் ஆலய வளாகத்தில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்திலும் எங்களைப் போன்றோர் வெளியே பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலி்களிலும் அமர்ந்திருந்தோம்.

மதிய உணவுக்குப் பின் சுமார் 2.30 மணி அளவில் வண.போதிபாலர் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நூல் வெளீயீடுகள். பின் உரையாற்றுவோருக்கு ஒளிபெற்றவரின் திரு உருக்கள் வழங்கப்பட்டன. பின் சர்வ சமய வழிபாடு நடைபெற்றது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ. பவுத்த மதங்களின் தோத்திரப் பாடல்களும் புனித வசனங்களும் தமிழில் வாசிக்கப்பட்டன.பின் அனைவரும் சுருக்கமாக உரையாற்றினர்.

இறுதியில் முத்தாய்ப்பாக அமைந்தது பெரியவர் ஓ.ரா.ந கிருஷ்ணன் அவர்களின் உரை.

“இந்து மதத்தின் மீது எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை. இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா எனும் மறுப்பு நூலில் நான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத்தான் சொல்லியுள்ளேனே தவிர இந்து மதத்தின் மீது எங்கும் வசையாக எதையும் சொல்லிவிடவில்லை. பவுத்தத்தில் துவேஷம் / வெறுப்புக்கு இடமில்லை. அன்பு, கருணை என்பது தவிர பவுத்தத்தில் வேறெதற்கும் இடமில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். என் அன்பிற்குரிய நண்பர்கள், அம்பேத்கர் பற்றாளர்கள் காந்தி மீது காட்டும் பகை மற்றும் வெறுப்பு எனக்குக் கவலை அளிக்கிறது.

உண்ணாவிரதத்தின் மூலம் காந்தி அம்பேத்கரின் கோரிக்கையை செயல்படுத்த விடாமல் செய்தது (கிட்டத் தட்ட) நூறு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். அவர் இந்து மதத்தைத் திருத்திவிட முடியும் என நம்பினார். அது பொய்த்துவிட்டது. யாருடைய நம்பிக்கைதான் முற்றிலும் நிறைவேறி விட்டது? இந்தப் பகை தேவையற்றது. நமக்கு இன்று அண்ணல் அம்பேத்கரும் வேண்டும். கார்ல் மார்க்சும் வேண்டும். காந்தியும் வேண்டும். தயவு செய்து இதை எல்லோரும் சிந்திக்கப் பணிந்து வேண்டுகிறேன்..”

பேசும்போது பெரியவர் கிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் பெயரைச் சொல்லாவிடாலும் நாம் தந்தை பெரியாரையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியான ஒரு பகைக்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகி வருவதை உணர்கிறேன். சமூக ஊடகங்களிலும் இந்தக் குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

பவுத்தத்தில் வெறுப்புக்கோ பகைக்கோ இடமில்லை.

கூட்டம் முடிந்த பின் பெரியவர் கிருஷ்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு ,”இன்று உங்கள் பேச்சு மனசைத் தொட்டது சார். நீங்கள் சொன்னது மிக முக்கியமான செய்தி..” எனச் சொன்னபோது என் கண்கள் நீரை உகுத்தன. கடைசிச் சொற்கள் தொண்டைக்குள்ளேயே அடங்கின. அருகில் நின்றிருந்த நண்பர் பல்னீசின் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தன.

அயோத்தியில் இருந்தது பௌத்த விகாரை ! இது என்ன புது கலாட்டா?

‘விண்ணளாவ இராமர் கோவில் எழுகிறது” என அமித்ஷா முழக்கம் இட்டபடி அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கிவிட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் அது இது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்ற மே 11 அன்று பழைய இடிமானங்களின் மீது இராமர் கோவில் கட்டுவதற்கான முதற்படியாக இடிபாடுகளைத் தோண்டி சமனப் படுத்துவதற்கான வேலைகள் தொடங்கின. பொறுப்பேற்று செயல்படுத்திக் கொண்டுள்ள வினோத் பன்சால் என்பவர், ”அகழ்வாய்வு முக்கியத்துவம் வாய்ந்த பல பொருள்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டே உள்ளன” என தினம் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்தடி உயர சிவலிங்கம், கருப்புக் கற்களால் ஆன ஏழு தூண்கள், சிவப்புக் கற்களால் ஆன ஆறு தூண்கள், உடைந்துபோன பல கடவுளர் சிலைகள் …..” – இப்படி.

சங்கிகள் சும்மா இருப்பர்களா? அவர்கள் பங்கிற்கு விஷத்தைக் கக்கத் தொடங்கினார்கள்..

“நாங்கள் அப்போதே சொன்னோம் அங்கு இராமர் கோவில்தான் இருந்தது. அதை இடித்து விட்டுத்தான்  பாபரின் தளபதி மீர்பாகி அங்கே மசூதியைக் கட்டினான் என்றோம். ஆனால் இந்த பிபின் சந்திரா. சர்வபள்ளி கோபால், ரொமிலா தப்பார், இர்ஃபான் ஹபீப் முதலான கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியர்கள் அதை மறுத்தார்கள். அதன் விளைவாக என்னென்ன நடந்து முடிந்து விட்டன. எத்தனை இரத்தம் இங்கே சிந்த வேண்டியதாயிற்று…” – என்றெல்லாம் அவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். இந்த அறிஞர்கள் மீது பெரு மதிப்பு கொண்ட நாம் எல்லோரும் வேதனையோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒன்றை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிஞர்கள் யாரும் அங்கே பாபர் மசூதிக்கு முன்னதாக எந்தக் கட்டுமானங்களும் இல்லை எனச் சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் அங்கு இதற்கு முன் ஏதாவது இருந்திருந்தால், அல்லது ஏதாவது இடிக்கப்பட்ட கட்டிடத் தூண்கள் மசூதி கட்டப் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது இந்து ஆலயங்களில் இருந்தவை அல்ல. அது பௌத்த விகாரை அல்லது சமணத் தலங்களில் இருந்தவையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

சங்கிகள் தங்களின் வெறுப்புக் கதையாடல்களை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற வாரத்தில் அவர்களால் வெளியிடப்பட்ட படங்களை எல்லாம பார்த்த பௌத்த மதத்தவர்கள் அவர்களின் கதையை மறுத்தபோது எல்லோரும் அதிர்ந்தார்கள். என்ன நடக்கிறது எனக் கூர்ந்து பார்த்தோம். தோண்டியபோது கிடைத்ததாக நீங்கள் சொல்லும் தூண்கள் முதலியன அஜந்தா, எல்லோரா பனாரசில் இருக்கும் பௌத்தக் கட்டுமானங்களில் உள்ள தூண்களின் பாணியிலேயே உள்ளன. அவற்றை பாதுகாப்பாக வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலிருந்து இப்போது வரத் தொடங்கியுள்ளன. பௌத்த மதத்தினர் பலரும் பிரதமர் மோடி உட்படப் பலருக்கும் தொடர்பு கொண்டு இதனை வற்புறுத்தியுள்ளனர். உலகப் பாரம்பரியங்களைக் காப்பதற்கான “யுனெஸ்கோ” அமைப்பைத் தலையிடுமாறு வற்புறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி உதித் ராஜ், “இன்று வெளிவந்துள்ள இந்தத் தூண்கள் பற்றிய உண்மைகளின் அடிப்படையில் நான் ஒன்றும் “நம்பிக்கைகள்தான் முக்கியம்” எனச் சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியெல்லாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் வல்லுனர்களைக் கொண்டு இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். தொல்லியல் ஆய்வுக் கழக (ASI) மேற்பார்வையில் முழுமையாக அகழ்ந்து பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இப்படியான கருத்து வருவது இது முதல்முறை அல்ல. முன்னதாகச் சென்ற முறை (2014 -19) பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கட்சி எம்.பிக்களில் ஒருவரான சாவித்ரி பாய் புலே என்பவர், “அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவிலும் வேண்டாம். மசூதியும் வேண்டாம். பேசாமல் புத்த நினைவிடமாக அதை ஆக்கிவிடலாம்” எனக் கூறியதும், அயோத்தியைச் சேர்ந்த வினித் குமார் மௌர்யா என்பவர் அப்பகுதியை “அயோத்தி புத்த விகாரை” என அறிவிக்குமாறு வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத் தக்கன.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த அயோத்தி என்பது ஒரு மிகப் பழைய நகரம். குறைந்த பட்சமாக அதன் காலத்தை நிர்ணயித்தாலும் கூட கி.மு 500 அளவிலிருந்து அந்நகரம் முக்கியமான ஒன்றாக வரலாற்றில் காணப்படுகிறது என வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர் (அதற்கும் முன்னதாகச் சொல்பவர்களும் உண்டு). அதாவது புத்தர், மகாவீரர் காலத்திலிருந்து உள்ள நகரம். இந்த இருவருமே அயோத்தி வந்து தங்கியதாக அவர்களின் நம்பிக்கைகள் உள்ளன. புத்தர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் அங்கிருந்ததாகக் கூறுகின்றனர். சமண தீர்த்தங்கரர்களில் ஐவர் அயோத்தியில் பிறந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.

பழம் சீன யாத்ரீகர்களான பாகியான், யுவான் சுவாங் இருவருமே அயோத்தியை ஒரு பௌத்த மையமாகவே குறிக்கின்றனர். அப்போது அதன் உண்மையான பழம் பெயரான “சாகேத்” (சமஸ்கிருதத்தில் ‘சாகேதா’) என அது அழைக்கப்பட்டது. “ஹே ராம்” திரைப்படத்தில் காந்தியைக் கொல்லப்போகும் கமலஹாசன் நடிக்கும் பாத்திரத்தின் பெயர் சாகேத் ராம் என்பது நினைவு. சாவஸ்தி – பிரதிஸ்தனம் மற்றும், ராஜகிருகம் – வாரணாசி எனும் இரு முக்கிய வணிகப் பாதைகள் சந்திக்கும் புள்ளியாக சாகேத் இருந்துள்ளது. சம்யுத்த நிகாயம், வினய பிடகம், சுத்த நிபாதம் முதலான பௌத்தத்தின் மூன்று புனித நூல்களில் சாகேத் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிராவஸ்தி எனும் சரித்திரப் புகழ்பெற்ற நகரம் சாகேத்தில் இருந்து 6 யோசனைத் தூரத்தில் இருந்தது என்றும் பதிவு இருக்கிறது. புகழ்பெற்ற பௌத்த அறிஞர் அஸ்வ கோஷர் தன்னை “சாகேத்தின் மகன்” எனச் சொல்லிக் கொண்டார். மாமன்னர் அசோகர் காலத்திய 200 தூபங்கள் அங்கே நிறுவப்பட்டிருந்தன என அவர் குறிப்பிடுகிறார்.

1862 – 63 ஆம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தொடங்கி ஃப்யூரர், பி.பி.லால் எனப் பல அகழ்வாய்வு நிபுணர்களால் கிட்டத்தட்ட 5 முறைகள் அயோத்தியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் அந்நகரின் பௌத்த சமணப் பழைமைகள்தான் உறுதி செய்யப்படுகிறதே ஒழிய ராமர் கோவில் இருந்ததற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ரஜபுத்திரர்கள் ஆட்சி அங்கே சிலகாலம் நடந்துள்ளது அப்போதுதான் சாகேத்திற்கு அயோத்தி எனும் பெயர் பிரபலமாக்கப் பட்டிருக்கலாம் என ஒரு கருத்து உண்டு. அப்போதும் இராமர் கோவில் ஏதும் அங்கிருந்ததாகப் பதிவுகள் எதுவும் கண்ணில் படவில்லை. பாபர் காலத்தில் அவருக்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்தான் புகழ்பெற்ற கவிஞர் கோஸ்வாமி துளசிதாசரால் (கி.பி 1532 -1623) இராமனின் வரலாறான ‘ராமச்சந்திர மானஸ்’ எனும் முக்கிய காவியம் இயற்றப்படுகிறது. அதில் எங்கும் அயோத்தியில் கோவில் இருந்து இடிக்கப்பட்டதாக எல்லாம் குறிப்பு இல்லை.  

ஆக பாரம்பரியமாக ‘சாகேத்’ எனும் பெயருடைய சமண பௌத்த நகரமாகத்தான் அது இருந்துள்ளது. அதன்பின் நானூறு ஆண்டுகளுக்கு முன் அங்கு முஸ்லிம் ஆட்சியின்போது பாபர் மசூதி கட்டப்பட்டதுதான் வரலாறாக உள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபைசாபாத் மாவட்டமாக இருந்ததுதான் இப்போது யோகி ஆதித்யநாத்தால் அயோத்தி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி எனும் பெயர் இடைக் காலத்தில் ரஜபுத்திரர்கள் ஆண்டபோது புழக்கத்திற்கு வந்திருக்கலாம். தற்போது இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னதாக இராமர் கோவில் இருந்ததற்கு எந்தப் புதிய ஆதாரமும் கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது அகழ்வில் கிடைத்துள்ள தூண்கள் முதலியன மசூதியை இடித்த நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த வகையிலும் உதவாது. அங்கு ஏதோ ஒரு காலத்தில் இராமர் கோவில் இருந்தது என வாதிடுவதற்கும் அவை உதவாது. பாரம்பரியத்தில் சிரவண மதங்கள்ன் சாகேத் நகரமாக இன்றைய அயோத்தி இருந்து வந்ததற்கு ஆதாரமாக மட்டுமே அவை அமையலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு குற்ற நடவடிக்கை, அங்கே மீண்டும் மசூதி நிறுவப்படாமல் ஆக்கப்பட்டது அநீதி என்கிற கருத்து எங்கிருந்து வருகிறது என்றால் இப்படி 400 ஆண்டுகள் இருந்து, தொழுகை நடத்தப்பட்ட ஒரு தொழுகைக் தலத்தை இடித்தது குற்றம் என்பதும், அந்த அடிப்படையில் மீண்டும் அங்கு மசூதியே கட்டப்பட வேண்டும் என்பதும்தான். நமது அடிப்படைச் சட்டங்களின்படி 400 ஆண்டுகளுக்குப் பின்னெல்லாம் யாரும் எந்த உரிமையும் கோர முடியாது என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும். சமீபத்திய தீர்ப்பைப் பொருத்தமட்டில் நானூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் தொழுகைத் தலமாக இருந்த ஒரு கட்டுமானம் வன்முறையாக இடிக்கப்பட்டதை நியாயப் படுத்துவதெற்கெல்லாம் இன்று அவர்கள் ஏக ஆர்பாட்டமாகச் சுட்டிக் காட்டும் இப்போது தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தூண்கள் உதவாது.

சரி. யாரும் பழைய கதையைப் பேச விரும்பவில்லை. இப்படியான சர்ச்சை ஒன்று கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த வரலாற்றை இங்கு சொல்ல முனைந்துள்ளேன். அவ்வளவே.

ஒரு பிற்குறிப்புடன் முடித்துக் கொள்கிறேன்.

இன்று வடநாட்டில் உள்ள தலித் அறிவுஜீவிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாறு குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்திலிருந்து இதைத் தொடங்குகின்றனர். இந்திய வரலாறை இந்து – முஸ்லிம் போராட்டமாக சங்கப் பரிவாரங்கள் முன் வைப்பதை அம்பேத்கர் ஏற்பதில்லை. இங்கிருந்த அடிப்படை முரண்பாடு வைதீகத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள முரண்பாடுதான் என்பதை அவர்பல ஆதாரங்களுடன் வலியுறுத்தி உள்ளார். புஷ்ய மித்திர சுங்கன் போன்ற பார்ப்பன மன்னர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது. ஒரு சாகேத் எனும் பௌத்த நகரம் இப்படி வன்முறையாக இடிபாடுகள் செய்து அயோத்தியாவாக மாற்றப்படுவதை ஏற்கமுடியாது என இன்று யோகி சிக்கந்த், சுனந்தா கே. தத்தா ராய் முதலான தலித் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

மதச்சார்பின்மை என்பது என்ன?

அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது

அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமையையும் உறுதி செய்கிறது.

1.பிரித்து நிறுத்தல் : மதநிறுவனங்களையும் அரசு நிறுவனங்களையும் தனித்தனியே நிறுத்துதல். பொதுப்புலத்தில் மதம் பங்கேற்கலாம். ஆனால் சமூகத்தில் எந்த மதமும் எந்த வகையிலும் கூடுதல் முக்கியத்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்த முடியாது.

2. தேர்வுச் சுதந்திரம் : பிறருக்கு எந்த இடையூறும் இன்றி யாரொருவரும் தம் நம்பிக்கையைக் கடைபிடிக்கும் உரிமை. அது மட்டுமல்ல அவர் விருப்பம்போல அதை மாற்றிக் கொள்வதற்கோ, அல்லது, எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்வதற்கோ உள்ள உரிமை. இதையே மனச்சாட்சித் சுதந்திரம் என்கிறோம்.

3. சமத்துவம் : ஒருவரின் மத நம்பிக்கையோ இல்லை அல்லது எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இன்மையோ அவருக்கு எந்த வகையிலும் கூடுதல் உரிமைகளை அனுபவிப்பதற்கோ அல்லது ஏதேனும் உரிமைகள் தடுக்கப்படுவதற்கோ காரணமாகக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நம்பிக்கையாளர்களை மட்டுமல்ல நம்பிக்கை அற்றவர்களின் உரிமைகளையும்  பாதுகாப்பது

மதச்சார்பின்மை என்பது ஒருவரது மதம் மற்றும் இதர நம்பிக்கைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதற்கு உறுதி அளிப்பது. மற்றவர்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாதவரை யாரொருவரும் தன் மதத்தைக் கடைபிடிக்கும் உரிமையைப் பாதுகாப்பது. எந்த ஒரு நம்பிக்கையையும் ஒரு தனிமனிதர் கடைபிடிப்பதற்கான உரிமை என்பது இன்னொரு பக்கம் எந்த ஒரு நம்பிக்கையையும் ஏற்காமலிருக்கும் சுதந்திரத்தை வழங்குவதும் ஆகும்,

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளை அளிக்காது. அதேபோல அதனாலேயே யாரொருவரின் எந்த உரிமையும் பாதிக்கப்படவும் காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளையும் அளிக்காது. அதேபோல அவரது எந்த உரிமையும் பாதிக்கப்படவும் அது காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது மதம் சார்ந்த கோரிக்கைகளைக் காட்டிலும் உலகளாவிய மனித உரிமைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள், ஓரினப் புணர்ச்சியை நடைமுறையில் கொண்டவர்கள் (LGBT), மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற எல்லாவிதமான சிறுபான்மையினரும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை உயர்த்திப் பிடிக்கிறது. சட்டரீதியான இப்படியான சமத்துவம் என்பது ஏதேனும் ஒரு மத அல்லது தத்துவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் அப்படியான நம்பிக்கைகள் இல்லதவர்களும் சம உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்கிறது.

பொதுச் சேவைகளை அனுபவிக்கும் உரிமைகளை எல்லோருக்கும் உறுதி செய்வது

பள்ளிகள், மருத்துவச் சேவைகள், காவல்துறை மற்றும் இதர அரசுச் சேவைகள் ஆகியவற்றைப் மக்கள் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். நடைமுறைப் பயன்பாட்டில் இத்தகைய பொதுச் சேவைகள் அனைத்தும் மதச் சார்பற்றவையாக இருப்பது அவசியம். மத நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மைகளின் அடிப்படையில் இச்சேவைகளை யாருக்கும் மறுக்கக் கூடாது. அரசு நிதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்துள்ளனதாகவோ, எந்த ஒரு நம்பிக்கையையும் உயர்த்திப் பிடிப்பதாகவோ இருக்கக் கூடாது. பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோர்களது மதங்களின் அடிப்படையில் பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை ஒன்றாகத் தர வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், ஏதிலியர் விடுதிகள் போன்ற ஏதேனும் ஒரு பொது நிறுவனம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்பை ஏதேனும் ஒரு சேவைக்கு அனுமதித்தால் அந்தச் சேவை எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அமைப்பு தன் நம்பிக்கைகள அங்குள்ளவர்களின் மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நாத்திகம் அல்ல

விபூதி பூசுவது, ஹிஜாப் அணிவது, மத அடையாளத்தை வெளிப்படுத்தும் தலைப்பாகை முதலான மத நம்பிக்கை உடையவர்கள் பொது வெளியில் அவற்றைக் கடைபிடிக்கவும் வெளிப்படுத்தவும் உள்ள உரிமையைத் தடை செய்யக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பதில் எந்த ஒரு குறிப்பான நம்பிக்கை அல்லது அமைப்பிற்கும் கூடுதல் உரிமைகளை அளிக்க முடியாது. ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் விவாதிக்கப்படுவதற்கு இடமுண்டு.

எல்லாவிதமான மத நம்பிக்கை உடையவர்களும் , நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாகவும், சமத்துவமாகவும் வாழும் வாய்ப்புள்ள ஒரு ஆகச் சிறந்த ஆட்சி முறை என்பது மதச் சார்பற்ற ஆளுகையே.

கோவிட் 19 ஐ எதிர்கொள்வதில் மோடி எங்கே தவறு செய்தார்? எப்படி அதை ஈடுகட்ட வேண்டும்?

(ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரை – தமிழாக்கம் மட்டும் நான்)

கோவிட் 19 தாக்குதல் குறித்து இப்படியான நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் வல்லுனர்கள் சிலரின் உரை ஒன்றைக் கேட்டேன். தொடக்கத்தில் முதல்முறையாக அரசு அறிவித்த தனிமைப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை (lockdown) நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் பயனுடையதாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இதனூடாகக் கிடைத்த பலனைத் தக்க வைக்கும் திசையில் அரசு தொடர்ந்து செயல்படவில்லை. நோய்த் தாக்குதல் குறித்த சோதனைகளைப் பெரிய அளவில் மேற்கொள்ளுதல், நோய்ப்பரவல் அதிகம் சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுதல்,  நோயைக் கையாள்வதற்குத் திறமான மருத்துவமனைகளைக் கண்டறிதல். நம்பத்தகுந்த, துல்லியமான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புதல் முதலான நடவடிக்கைகளுக்கு இந்தக் கால அவகாசத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளத் தவறியது,

இந்த ‘லாக்டவுனின்’ சமூக / பொருளாதார அம்சங்கள் இப்போது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. தனது குழப்பமான நடவடிக்கைகளின் ஊடாக மத்திய அரசு ஒரே கணத்தில் மக்களை வேலைகளும் வாழ்வாதாரங்களும் இல்லாதவர்களாக ஆக்கியது. நான்கே மணி நேர அவகாசத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை, ஊர்கியம், உணவு, தங்குமிடம் எல்லாம் பறிபோய் தங்கள் வீடுகளிலிருந்து தொலைதூரத்தில் கையறு நிலையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல. பொது ஆரோக்கியம் எனும் நோக்கிலும்கூட இந்த முதல் ‘லாகவுட்’ மிக மோசமாகத் திட்டமிடப் பட்டது. மார்ச் மாத நடுவில் தமது வீடுகளுக்குத் திரும்ப விரும்பிக் காத்திருந்த தொழிலாளிகளில் சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். உரிய கால அவகாசம் கொடுத்து ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நோய்த்தொற்று இல்லாமல் அப்போதே வீடு திரும்பி இருப்பர்.

ஒன்றரை மாதம் தாமதமாக இப்போது தவறைச் சரி செய்யும் நோக்கில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்போது  அவ்வாறு திரும்பிவரும் ஆயிரக் கணக்கானோர் இந்தக் கொலைகார வைரசைச் சுமந்தவர்களாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இப்போது பொறுப்பு மாநில அரசுகளின் தலைகளில் சுமத்தப்பட்டுவிட்டது. இந்திய –பாக் பிரிவினைக் கால இழப்புகளுக்குப் பின் நாமே ஏற்படுத்திக் கொண்ட மிகப் பெரிய அழிவாக இது ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி ஆனதற்கான அனைத்துப் பொறுப்பும் பிரதமருடையதே.

இந்த ‘லாக் டவுன்’ எவ்வாறு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பதில் வெளிப்படையான ஒரு வர்க்கச் சார்பு உள்ளது. ஏற்கனவே ஆழப் பதிந்திருந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் இப்போது இன்னும் ஆழமாகி உள்ளன. வேலை மற்றும் வருமான இழப்புக்கள் கோடிக்கணக்கான தொழிலாளி வர்க்கத்தினரை முற்றிலும் எல்லாவற்றையும் இழந்தவர்களாக்கி உள்ளது. அவர்களுக்கு இப்போது போதுமான உணவும் இல்லை. உண்ணக் கிடைப்பதும் தரமானதில்லை. அவர்களின் இன்றைய உணவு அவர்களை கோவிட் 19க்கு மட்டுமல்லாமல் இன்னும்  எத்தனை நோய்கள் உள்ளனவோ அத்தனைக்கும் வாய்ப்பாக்கியுள்ளது.

இந்தக் கொடுந் தொற்றைப் பொருத்த மட்டில் இன்னும் எத்தனையோ தவறுகளை மோடி அரசு செய்துள்ளது. இந்தத் தவறுகள் அம்மக்களின் இழப்புகளை இன்னும் கொடுமையாக்கின. நமது பொருளாதாரம் கலகலத்துக் கிடக்கிறது. நமது சமூகக் கட்டமைப்பும் பலவீனமாகித் தளர்ந்துள்ளது. நமது மருத்துவ நல அமைப்போ இன்னும் வலுவிழந்துள்ளது.

எனினும் இன்னும் கூட மோடி அரசு செய்யக்கூடிய சரியான செயல்பாடுகள் உண்டு. இந்த வகையில் நான் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கில் பேசிய வல்லுனர்கள் முன்வைத்த ஐந்து முக்கிய கருத்துக்கள் இங்கே குறிப்பிடத் தக்கன.

முதலாவதாக எல்லாம் சரியாக உள்ளது என திருப்தி கொள்வது முற்றிலும் அபத்தம்.இதுவரைக்கும் இந்த வைரஸ் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் ஆழமாகப் பரவவில்லை. அஸ்சாம், ஒடிஷா, சட்டிஸ்கார் முதலான மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆட்ப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமில்லை. ஆனால் வரும் மாதங்களில் இந்த நிலை மாறலாம். இந்த மாநிலங்களில் வைரஸ் தாக்குதலின் அளவு அதிகரிக்கும்போதுதான் இம்மாநிலங்களின் மருத்துவ நல அமைப்பு எத்தனை பலவீனமாக உள்ளன என்பது அம்பலமாகும்.

அடுத்து நமது ‘இந்திய மருத்துவ ஆய்வுக் குழும’ அமைப்பிற்கு (ICMR system) வெளியிலிருந்து செயல்படும் இந்தியாவின் தலைசிறந்த தொற்றுநோய்ச் சிகிச்சை வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்களின் திறமைகளையும் சேவைகளையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் HIV மற்றும் H1N1 வைரஸ் தாக்குதல்கள், இளம்பிள்ளைவாதம் ஆகியவற்றை கட்டுக்குக் கொண்டு வருவதில் இப்படியானவர்கள் பங்களித்துள்ளனர். அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அவர்களது இந்த அனுபவங்களும் அறிவும் பயன்படும். இப்போதும் அதைச் செய்ய முடியும்.

மூன்றாவதாக, இது வெறுமனே ஒரு மருத்துவம் சார்ந்த பிரச்சினை மட்டுமே அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினையும் கூட ஏற்கனவே இந்தத் தொற்று குடி, குடியின் விளைவான குடும்பப் பிரச்சினைகள், தற்கொலை ஆகியவற்றின் அதிகரிப்பிற்கும் காரணமாகியுள்ளது. நோய், மரணம் ஆகியவற்றைப் போலவே ஏழ்மை, வேலையின்மை ஆகியனவும் இந்த நோய்த் தொற்றின் தவிர்க்க இயலாத பின்விளைவுகள்தான். எனவே இது வெறுமனே வெறும் மருத்துவ நல வல்லுனர்கள், அல்லது பொருளாதார நிபுணர்களால் மட்டும் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினை அல்ல. சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் ஆகியோரையும் அரசு கலந்தாலோசிப்பது முக்கியம்.

நான்காவதாக மோடி அரசு எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆணையிடும் அதன் வழக்கமான ‘control-and-command’ வடிவில் இந்தப் பிரச்சினையையும் கையாளக் கூடாது. மோடி அரசு இப்போது உள்ளதைக் காட்டிலும் அதிகமாக மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். மாநிலங்களைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூடுதல் நிதி உதவியையும் அளித்திட வேண்டும். மாநிலங்கள்தான் கொரோனாவை எதிர்த்த போராட்டங்களை நேரில் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆளுகை மிகப் பெரிய அளவில் மைய நீக்கம் செய்யப்பட வேண்டும். மத்தியிலிருந்து மாநிலத்திற்கும்,  மாநிலங்களிலிருந்து முனிசிபாலிடிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். பில்வாரா போன்ற மாவட்டங்களிலும், கேரளம் போன்ற மாநிலங்களிலும் கொரோனா தாக்குதல் பெரிய அளவில் முறியடிக்கப் பட்டுள்ளதென்றால் கீழிருந்து மேல்நோக்கிய அணுகல் முறையும் உள்ளூர்த் தலைமைகளின் திறமான செயல்பாடுகளும்தான் அவற்றுக்குக் காரணம் என்பதை மனம் கொள்ள வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மோடி அரசு அதிகாரங்களை மத்தியில் இருத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கொள்ளை நோயைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றையும் தனது “ஷோ” ஆக நடத்திக் கொள்ளும் பிரதமரின் செயல்பாடுகள் பிரச்சினைக்குரிய ஒன்று. உள்துறை அமைச்சரின் செயல்பாடுகளும் அப்படித்தான் உள்ளன. உடனடி எதிகாலத்தில் அரசு எவ்வாறு செயல்படப்போகிறது என ஒரு மரியாதைக்குரிய ஊடகவியலாளர் கேட்டபோது அவர் சொல்கிறார் :”கோவிட் தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் உள்துறை அமைச்சகத்தை எதுவும் கேட்க வேண்டாம். அதை விட்டுவிடுங்கள்..”.

ஐந்தாவதாக இந்தக் கொடுந்தொற்றை எதிர்கொள்வது எனபதைப் பொருத்தமட்டில் ஒருவரோடு ஒருவர் இணைந்து நின்று செயல்படுவது இன்று அவசியமாகிறது. அதிகாரத்தில் இருந்த இந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு தொண்டு நிறுவனங்களின் (NGOs) மீது உச்சகட்ட வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டி வந்தது. இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தொண்டு நிறுவனங்கள் ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான பணிகளின் மீது  மோடி அரசின் கவனம் திரும்ப வேண்டும். கைவிடப்பட்டவர்களுக்கு உணவு சமைத்துத் தருவதாகட்டும், மருத்துவத் துறை உதவிகளில் ஆகட்டும், அவர்கள் தங்குவதற்கு உதவுவதில் ஆகட்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ தந்து தைரியம் ஊட்டுவதிலாகட்டும் கடந்த சில வாரங்களில் சிவில் சமூகம் மிகப் பெரிய அளவில் பங்காற்றியுள்ளது.

எதிர்காலத்தை யோசிக்கும்போது ஓர் உண்மை நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது நம் நாடு அதிக அளவில் இளம் மக்களைக் கொண்டுள்ள ஒன்று. கொரோனாவினால் ஏற்படும் உயிர்ப்பலி அந்தவகையில் குறைவாக இருக்கும் என நம்பலாம். அப்படிக் கொரோனா தாக்குதல் நிற்கும்போது நாம் நமது பொருளாதாரம், சமூகம், நமது மருத்துவநல அமைப்பு ஆகிய அனைத்தையும் மிகக் கவனமாகச் சீரமைத்தாக வேண்டும். இந்த மீள்கட்டமைப்பு சரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமானால் மத்திய அரசின் செயல்பாடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைய வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் மட்டுமல்ல நிதியையும் அளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம், சிவில் சமூக அமைப்புச் செயல்பாடுகள் ஆகியன செழித்து வளர இடம் கொடுக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகள்யும் முடக்குவதை நிறுத்த வேண்டும்.பிரதமரின் செயல்பாடுகளும் பெரிதும் மாற்றம் அடைய வேண்டும். அவர் கவனம் கொடுத்து மாற்றுக் கருத்துக்களைக் கேட்பதும், இன்னும் அகன்ற அளவில் பலரையும் கலந்தாலோசிப்பதும் அவசியம். தன்னிச்சையாகவும் அதிகம் யோசிக்காமலும் முடிவெடுப்பதையும் அவர் தவிர்க்கவும் வேண்டும்.

அறிவியல் மற்றும் நிர்வாகத் திறன் ஏராளமாக உள்ள நாடு நம்முடையது. கொரோனாவுக்குப் பிந்திய உலகில் வாழ்வது என்பதில் இப்படியானவர்களில் அறிவுரையை பிரதமரும், மத்திய அரசும் கேட்டு நடக்கத் தவறக் கூடாது என்பதுதான் நான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட வல்லுனர்களின் உரையிலிருந்து நான் புரிந்து கொண்டது. ஆனால் பிரதமரும் அரசும் அத்தகைய அகன்ற இதயமும் திறந்த மனமும் கொண்டுள்ளார்களா என்பது  வேறு கதை

( What Modi Got Wrong On Covid-19 And How He Can Fix It, Ramachandra Guha.NDTV.com, May 12, 202o)