மெக்காலே கல்விமுறை அவதூறுகளும் உண்மையும்

மோடி அரசின் இன்றைய கல்விக் கொள்கை எவ்வாறு எளிய மக்களுக்கு எதிரானதாகவும், கார்பொரேட்களுக்குச் சாதகமாகவும் , மக்களைத் தரம்பிரிப்பதாகவும் உள்ளது என்பதை எழுதினால் அதை இந்துத்துவம் எப்படி எதிர்கொள்கிறது…..

சிம்பிள். “எல்லாம் அந்த ஆங்கில மெக்காலே சாக்கடையைவிட நல்லாத்தான் இருக்கும். மூடு.” –

இப்படிச் சொல்லி தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நோக்கில் முப்வைக்கப்படும் நமது கருத்துக்கள் முரட்டுத்தனமாக ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுகின்றன.

இதற்கு மெக்காலே கல்விமுறை குறித்து இங்கே பல பத்து வருடங்களாகப் பார்ப்பன எழுத்தாளர்கள் எழுதி வைத்து, பின் ‘காலச்சுவடு’, ‘தி இந்து’ வகையறாக்களால் அவ்வப்போது ஊதி ஊதி தீ மூட்டப்பட்ட கருத்துக்கள் பின்னணியாக அமைகின்றன.

அதென்ன மெக்காலே கல்விமுறை என்று கேட்டால் அவர்கள் ஒன்றைத்தான் சொல்வார்கள். “அது ஆங்கிலேயருக்குத் தேவையான குமாஸ்தாக்ககளை உருவாக்குகிற கல்விமுறை”

ஆங்கிலேயர்கள் குமாஸ்தாக்களைத் தயாரிக்கத்தான் நவீன கல்விமுறையைக் கொண்டுவந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும். நேற்று வாஜ்பாயியும் இன்று நரேந்திர மோடியும் கொண்டு வரும் கல்விமுறை உலகாளும் எஜமானர்களை உருவாக்குவதற்கான கல்வி முறையா?

இன்று அவர்கள் கொண்டுவரும் கல்விமுறை உள்ளூர் முதலாளிகளுக்கு மட்டுமல்ல உலக முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்கானதுதானே?

நம் மாணவர்களைத் தரம்பிரித்து ஒரு சாரரை வெறும் திறன் பயிற்சியாளர்களாக ஆக்கும் கல்வி முறைதானே இவர்கள் உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை. மெக்காலேக்கு முன்னால் இங்கு என்ன கல்விமுறை இங்கிருந்தது. இவர்களின் குருகுலக் கல்விமுறையின் லட்சணத்தைப் புரிந்து கொள்வதற்கு ஏகலைவன், சம்புகன் முதலானோரின் வரலாறுகள் போதாதா?

பெண்களுக்கு அன்று கல்வி வாய்ப்பிருந்ததா? தேவதாசிகளுக்குத்தானே அன்று கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.  அதுவும் அவர்களிடம் வருபவர்களை எல்லா வகைகளிலும் மகிழ்வூட்டுவதற்கான கல்விதானே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பண்டைய இந்தியாவில் நாளந்தாவிலும், விக்கிரமசீலத்திலும் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழல்கங்கள் பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. குருகுல முறை போல வருணம் பார்த்து சாதி பார்த்து குருவின் வீட்டிற்குச் சென்று சேவை செய்து அவருக்குத் தெரிந்த பாடத்தை மட்டுமே கற்றுவரும் கல்விமுறை அல்ல பண்டைய பௌத்தக் கல்வி முறை. அவை நவீனபாணியிலான பல்கலைக் கழகங்களின் வடிவில் அமைந்தவை. பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்துறைப்பட்ட கல்வியாளர்கள் ஓரிடத்தில் கூடி அங்கு பல திசைகளிலிருந்தும் வந்த மாணவர்களுக்கு அறிவூட்டிய நவீன வகைக் கல்விச்சாலைகள் அவை. குருகுலக் கல்வியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது அது.

மெக்காலே சதித் திட்டத்துடன் இங்கே ஆங்கிலக் கல்விமுறையைப் புகுத்தினார் என “நிரூபிப்பதற்காக” இந்துத்துவவாதிகளால் செய்யப்பட்ட ஒரு Qப்ராட் தான் அடுத்து உள்ள இந்தப் படம்.செய்யப்பட்ட ஃப்ராட்

இந்தப் படத்தைப் பாருங்கள் இப்படி ஒரு ருபாக்கூர் தகவல் ஒன்று சிலகாலம் முன் இங்கே வைக்கப்பட்டது. 1835 ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே பேசிய உரை இது எனக் குறிப்பிடப்பட்டது.

இதில் மெக்காலே கூறியதாகச் சொல்லப்படும் கருத்தின் சுருக்கம் இதுதான்:

“நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் கூடக் கிடையாது. ஒரு திருடர் கிடையாது. மிக்க வளமான நாடு. உயர்ந்த ஆன்மீக மதிப்பீடுகள் கொண்ட நாடு. அதை வென்று அடிமைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு முதலில் அதன் இந்த வலிமையை உடைத்துத் தகர்த்தாக வேண்டும். அதனுடைய முதுகெலும்பாக உள்ள அதன் ஆன்மீக கலாச்சார மதிப்பீடுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு நான் முன்வைக்கும் திட்டம் என்னவென்றால் அதன் பண்டைய கல்விமுறையை முதலில் தகர்க்க வேண்டும்.. அதனிடத்தில் ஆங்கிலக் கல்விமுறையை வைத்தால் தங்களுடைய கலாச்சாரம் முதலியவைதான் உயர்ந்தது என்கிற சுய பெருமிதத்தை அவர்கள் இழப்பார்கள்”

-என்பதுதான் மெக்காலேயின் உரையாக இந்த ஃப்ராட் கள் முன்வைத்த செய்தி. அதாவது மெக்காலே இந்தியாவை அடிமைப்படுத்துவதற்காக ஆங்கிலேயக் கல்விமுறையை ஒரு சதி நோக்குடன் இங்கே புகுத்தினார் என்கிற கதையை உருவாக்குவதற்கு இது முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் வருகைக்கு முன்னதாக இங்கே திருட்டுப் பயங்கள் முதலியன இல்லாமல் வளம் கொழித்திருந்ததாகவும் ஒரு ஆகச் சிறந்த கல்விமுறை இந்திய மக்களுக்கு இருந்ததாகவும் அது மெக்காலேயால் இந்தச் சதி நோக்கத்துடன் தகர்க்கப்பட்டது என்னபது பொருள்.

முதலில் இங்கு சொல்லப்படும் இந்தக் கருத்துக்கள் எல்லாமே தவறு.

1. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கே விரிவான எல்லா மக்களுக்குமான ஒரு கல்வி முறை இருந்ததில்லை. இங்கிருந்த குருகுலக் கல்விமுறையில் ஆக உயர்ந்த மேற்சாதி மேற்தட்டினரே கல்வி கற்றனர். மோத்தத்தில் அப்படிக் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை ஒரு 5% கூடத் தேறாது..

2. இந்தக் காலகட்டத்தில் இதில் சொல்லப்படுகிறபடி இந்தியாவில் வளம் கொழிக்கும் நிலை இல்லை. ஏற்கனவே அவை பஞ்சம் முதலியவற்றாலும் பிரிட்டிஷ் வணிகக் கொள்ளை முதலியவற்றாலும் இந்திய வளங்கள் சூறையாடப்படிருந்தன. சற்றுப் பிந்திய காலகட்டத்தில் நியூயார்க் ட்றிப்யூன் இதழில் கார்ல் மார்க்ஸ் இங்கிருந்த சுரண்டல், வறுமை நிலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளதை நான் கார்ல் மார்க்ஸ் பற்றிய கட்டுரைத் தொடரில் மொழியாக்கித் தந்துள்ளேன்.

3. மெக்காலே அப்படியெல்லாம் ஜி.யூ.போப், வீரமா முனிவர் அல்லது கால்டுவெல் போல ‘திருக்குறள்’ முதலான இந்திய அறிவுச் செல்வங்களால்ல் ஈர்க்கப்பட்ட ஒரு அறிஞர் அல்ல. அவர் ஒரு கம்பெனி அதிகாரி. பிரிட்டிஷ் ஐரோப்பியப் பெருமிதங்களைச் சுமந்த ஒரு வெள்ளை பீரோக்ரட்தான் மெக்காலே.

சரி மெக்காலே இவ்வாறு பேசியது உண்மையா?

இந்த உரையை அவர் 1835 பிப் 02ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசினார் என்பது அபத்தம். மெக்காலே 1834 லேயே இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆளுநருக்கு ஆலோசகர் எனும் பதவியை ஏற்க இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டுவிட்டார். 1838 வரை அவர் இங்கிலாந்து செல்லவில்லை.

சரி ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்து கொண்டு அந்த உரையை ஆற்றியிருப்பார், ஊர் பெயர் மட்டும் தப்பாகிவிட்டது எனக் கொள்ளலாமா? அதுவும் இல்லை. அன்றைய தேதியில் அவர் ஆற்றிய ஒரு முக்கியமான உரையில் (the ‘Minute [on Indian education] by the Hon’ble T.B. Macaulay, dated February 2, 1835) இந்தச் சொற்கள் எதுவும் கிடையாது.

அதோடு மெக்காலே பேசியதாகக் கூறப்படும் இந்த உரையின் மொழி மிக்க நவீனமானது. அன்றைய மொழிநடை அல்ல அது. மெக்காலேயின் கடிதங்கள் பல தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன (Letters of Thomas Babington Macaulay). அவற்றிலும் இந்த வாசகங்கள் இல்லை.

மெக்காலே ஒரு சதி நோக்குடன் ஒரு கல்விமுறையைப் புகுத்தி நம்மை அழித்துவிட்டதாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கே அறிவு கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், ஒரு உயர்ந்த கல்விமுறை இருந்ததாகவும், அதை அழித்து பிரிட்டிஷ் கவி முறையை இங்கு புகுத்தியதாகவும் சொல்ல என்னென்ன டுபாகூர் களை எல்லாம் சங்கி மூளைகள் செய்கின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எதை வேண்டுமானாலும் உண்மையாகச் சித்திரித்து “போஸ்ட்கள்” போட்டுவிடலாம் என்கிற காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஃப்ராட் வேலைதான் இது.

 (Ref: Anirban Mitra, The Infamous Macaulay Speech That Never Was, The Wire, Feb 19,2017)

மெக்காலே கல்வி முறை உருவானதன் பின்னணி : சில குறிப்புகள்

ஏற்கனவே இங்கு புகுத்தப்பட்டுள்ள கருத்துக்களைக் கொஞ்சம் நம் மூளையிலிருந்து கழற்றி எறிந்துவிட்டுத் திறந்த மனத்துடன் நாம் மெக்காலேயின் (தாமஸ் பேபிங்டன் மெக்காலே 1800 – 1859) காலகட்டத்திற்குச் செல்வோம். அவர் இந்தியாவிற்கு வந்து முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்ட காலம் 1834- 1838. அப்போது கப்பல் பயணம்தான். வருவதற்கும் போவதற்கும் பயணக் காலம் குறைந்த பட்சம் 6 மாதங்கள் என வைத்துக் கொண்டாலும் அவர் இங்கிருந்த காலம் சுமார் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள்தான். இந்த மூன்றான்டுகளில் அவர் இங்கு மேற்கொண்ட முக்கிய பணிகள் மூன்று. அவை:

1.புதிய ஆங்கிலக் கல்விச் சட்டம் (1935) இயற்றியது,

2.குற்ற நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) உருவாக்கியது, 3.ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்தியர்களுக்கும் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்று (கறுப்புச் சட்டம்) இயற்றியது ஆகியனவே அவர் இங்கு செய்த பணிகள்.

அவர் வந்த காலகட்டதில் இங்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் சுதந்திரப்போர் எனக் கூறப்படும் 1857 பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு முந்திய காலகட்டம் அது. அப்போது இங்கு நேரடியான பிரிட்டிஷ் அரசியின் ஆட்சி நடைபெறவில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை. ஆங்காங்கு பல்வேறு மொழிகள், பண்பாடுகள், தேச வழமைகள் என்பதாக இந்தியா தொடர்ந்தது.

மெக்காலே இங்கு வருவதற்கு முன்பே ஆங்கிலக் கல்விச்சட்டம் உருவாக்குவதற்கு இங்கொரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு இரு சரிபாதிகளாகப் பிரிந்து இரு எதிர் எதிர்க் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு குழு அப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போதுமானது என்றது. அப்போதுள்ள நிலை என்றால் ஒரு பக்கம் சமஸ்கிருதக் கல்வி, இன்னொறு பக்கம் முகலாய ஆட்சிகள் இருந்த பகுதிகளில் பெர்சியன் மற்றும் அரபிக் கல்விகள். மற்றொரு குழு ஆங்கிலக் கல்வியை முன்மொழிந்தது. கல்வித் திட்டம் வகுக்கும் பொறுப்பை ஏற்குமுன் மெக்காலே முதலில் இதற்கொரு முடிவு காணுதல் அவசியம் என்றார்,

இப்போது அன்றைய உலகக் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சற்றுக் காண்போம். நவீனத்துவம், மறுமலர்ச்சி என்றெல்லாம் சொல்லும் புதிய விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு விழிப்புணர்வு உருவாகாத மூட நம்பிக்கைகளின் நாடாக இந்தியா இருந்தது என்பதைத் தனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பலமுறை, ஆம் பலமுறை தந்தை பெரியார் சுட்டிக் காட்டி இருப்பதை நாம் அறிவோம். தத்துவ வளர்ச்சியின் வரலாற்றில் மேலை நாடுகளில் உருவான “அறிவொளிக்காலம்” (Enlightenment) எனப்படும் தத்துவ மறுமலர்ச்சி இங்கு உருவாகவே இல்லை. சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோருடைய காலத்தோடு இங்கு தத்துவ வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பௌத்த தத்துவ வளர்ச்சிகளும் காஞ்சி மற்றும் அமராவதி காலத்துடன் தேக்கமுறுகிறது.

கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில் குருகுலக் கல்விக்கு மாற்றாக பௌத்தம் உருவாக்கிய நாளந்தா, விக்ரமஷீலம் முதலான பல்கலைக் கழகங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் மேலை நாடுகளில் உருவாகியிருந்த அறிவொளிக்கால விழிப்புணர்வு கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

முதல் முதலாக நவீன மாதிரியான பல்கலைக் கழகம் என்கிற கருத்தாக்கம் அங்குதான் உருவானது. ஜெர்மனி இதில் முக்கிய பங்கு வகித்தது. புகழ்பெற்ற தத்துவ ஞாநிகள் ஃபிச்டே , ஹம்போல்ட் முதலானோர்அதற்கான Blue Print ஐ உருவாக்கித் தந்த வரலாற்றை லியோடார்ட் விரிவாக விளக்கியுள்ளார் (பார்க்க :எனது பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகள்).

பல்வேறு புதிய கல்வித்துறைகள் உருவான இச்சூழலில் ஏற்கனவே கல்வி என்றால் லத்தீன் / கிரேக்க மொழிகளில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனும் நிலை அங்கு இவ்வாறு தகர்ந்தது. பதிலாக நவீன மொழிகள் கல்வி மொழிகளாயின.

இங்கும் அப்படியான ஒரு புதிய கல்விமுறை உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு அறிமுகப்படுத்திய நவீன மாற்றங்களின் ஊடாக அது நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் வணிகத் தொடர்பு மற்றும் அதை ஒட்டி மதம் பரப்ப இங்குவந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களின் வழியாக நவீன கல்வி வளர்ச்சி இங்கே அரும்பத் தொடங்கியது. அது சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகளைத் தவிர்த்து ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு நவீன கல்வியை இங்கே பெரிய அளவில் அறிமுகப் படுத்தியது.கல்வி முறையில் இங்கு பாரம்பரியமாக இங்கே நிலவிய சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை முதலான ஒடுக்குமுறைகள் ஆகியன நிபந்தனையாக்கபடாத ஒரு கல்வி முறையாகவும் அது இருந்தது.

மெக்காலே இந்த இரண்டாவது போக்கை ஆதரித்தார். உயர் கல்வி ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வி ஆங்காங்குள்ள தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கற்கும் கல்வியை அவ்வாறு கற்கும் இந்தியர்கள் தத்தம் தாய்மொழிக்குக் கொண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

“இந்திய மக்களை எப்போதுமே நமக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எப்போதுமே அறிவிலிகளாகவும் தற்குறிகளாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை நோக்கி ஆசைப்படாத ஒரு அறிவை மட்டும் அவர்களுக்குத் தந்தால் போதும் என்கிறோமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை விதைத்துவிட்டு அதற்கு வழி இல்லாமல் செய்யப்போகிறோமா? இந்தக் கேள்விகளில் யாதொன்றுக்காவது ‘ஆம்’ என யார் பதிலளிக்கப் போகிறார்கள்? எனினும் இந்த நாட்டு மக்களை உயர் பதவிகளிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க விரும்பும் யாரும் இதில் ஏதேனும் ஒன்றிற்காகவாவது ‘ஆம்’ எனப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு அச்சங்கள் இல்லை. கடமையின் பாதை இதோ தெளிவாக நம் முன்… அதுவே பேரறிவின் பாதை…தேசச் செழுமையின் பாதை.. தேசப் பெருமையின் பாதை..”- என்பதாக அவர் உரை அமைந்திருந்தது.

அன்று உருவாகியிருந்த ஒருவகை உலகளாவிய (utilitarian liberal universalism -Rudolphs) போக்குடன் இசைந்ததாக நமது கல்வியை நவீனப்படுத்துவது என்பதாக அவரது பார்வை அமைந்தது என்பது இங்கே கவனத்துக்குரியது. “சுவையிலும், ஒழுக்கத்திலும், கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் ஆங்கிலேயத் தன்மை மிக்க” இந்தியர்களையும் இந்தியாவையும் உருவாக்குதல் குறித்து மெக்காலே பேசியதை நாம் இப்படியும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி, தீண்டாமை, மதம், பல கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவை நவீன உலகிற்கு இட்டுச் செல்லுதல் என்பதான ஒரு நோக்கம் அதில் வெளிப்படுவதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ஆனால் 1850 க்குப் பின் இங்கு நிலைமை மாறியது. நவீன இந்தியாவின் முக்கியமான திருப்பப் புள்ளிகளில் ஒன்று 1857. சிப்பாய்க் கலகம், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி, முதல் சுதந்திரப் போர் என்றெல்லாம் பலவாறாகச் சித்திரிக்கப்படும் இந்த எழுச்சி கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடன்றி இந்திய ஆளுகை பற்றிய காலனிய அரசின் அணுகல் முறையில் சில முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது. வில்லியம் பென்டிக், மெக்காலே, டல்ஹவுசி முதலானோரால் 1830 -50 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாராளப் பொதுமை என்பதிலிருந்து சற்றே பின்வாங்கும் நிலையை விக்டோரியா மகாராணியின் பிரகடனம் (1858) வெளிப்படுத்தியது. 1857 எழுச்சியை அவர்கள் கொடுங் கரங் கொண்டு ஒடுக்கியபோதும் இந்திய மக்களின் எதிர்ப்பின் வன்மை அவர்களின் ஈரக்குலைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.

இனி இந்தியர்களின் தேச வழமைகளில் தலையிடுதல், வாரிசு இல்லை என்றெல்லாம் சொல்லி வன்முறையாக அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றல் (doctrine of lapse) என்பதையெல்லாம் கைவிட்டு, வேறுவகை அணுகல் முறைகளைக் கைக்கொண்டு தங்களின் காலனியச் சுரண்டலைத் தொடர்வது என்கிற நிலைக்கு இட்டுச் சென்றது.

விக்டோரியா மகாராணியின் அறிக்கை,

“இனி மதநம்பிக்கை, மற்றும் (அவை சார்ந்த) வழமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கும் சலுகைகள் காட்டுவதோ, இல்லை அவற்றின் அடிப்படையில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதோ இருக்காது. எல்லோரும் ஒன்றேபோல சமமான, பாரபட்சமற்ற சட்டப் பாதுகாப்புகளைப் பெறுவர். இனி எமது ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் உள்ள யாரும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு வழமைகளில் தலையிடக் கூடாது என உறுதியாக ஆணையிடப்படுவர்” – எனப் பிரகடனப் படுத்தியது குறிப்பிடத் தக்கது.

உலகளாவிய பொதுமை என்பதான பயன்பாட்டுவாதிகளின் (utilitarian) அணுகல் முறைகளிலிருந்து சற்றே விலகுதல் என 1957 க்குப் பின் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு மக்களின் தனித்துவமான மதம் சார்ந்த ஒழுகல் முறைகள், சாதி முதலான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன சட்டப் பாதுகாப்புகளுடன் இங்கு தொடர வாய்ப்பாக்கியது. இந்தியச் சனாதனத்துடன் பிரிட்டிஷ் ஆளுகை சமரசம் செய்து கொண்ட பின்னணி இதுதான்.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

மெக்காலே குறித்த சங்கிகளின் ஃப்ராட்பரப்புரைகள்

மெக்காலே இந்தியாவில் உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த அறிவு விகர்ச்சிக்கு உரிய வகையில் ஒரு பொதுக்கல்வி முறையை உருவாக்கினார்.

எனினும் சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட முதல் (1857) புரட்சிக்குப் பின் இந்தியர்களைக் கையாள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி சில எச்சரிக்கைகளைக் கடை பிடித்தது. அவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாமே பாராட்டுக்குரியவை அல்ல. குறிப்பாக இங்குள்ள சாதி, தீண்டாமை முதலான தேச வழமைகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடுவதில்லை என எடுத்த முடிவு அடித்தள மக்களைப் பொருத்த மட்டில் பெரிய இழப்பாகவே இருந்தது.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

இந்தப் புதிய கல்விமுறைக்கு இணையாக இங்கு இன்னொரு அறிவுப் புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வடமொழிகளும் தென்மொழிகளும் முற்றிலும் வெவ்வேறான தனித்தன்மைகள் கொண்டவை என்கிற ஆய்வுகள், சிந்து வெளி அகழ்வுகள் முதலியன இந்திய மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை உருவாக்கின.

அச்சுக்கலையின் ஊடாக இதுகாறும் அழிந்துகொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த தமிழ் சிரமண நூல்களில் எஞ்சியவை காப்பாற்றப்பட்டன.

புதிய கல்விமுறை இங்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குச் சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வை முந்திய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். அறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தனது ஆசான் மாயவரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலக் கல்வி பயின்றது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அறுபதாயிரம் பாடல்கள் இயற்றியவர் என அறியப்படும் மீனாட்சி சுந்தரனாரிடம் கல்வி கற்றுத்தேறிய உ.வெ,சா அடுத்து அன்று புதிய ஆங்கில முறை நவீனக் கல்லூரியாக உருவாகியிருந்த குடந்தை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர்தான் சீவகசிந்தாமணி முதலான சிரமண மரபில் வந்த பெருங்காப்பியங்கள் முதலானவற்றின் இருப்பையே அறிகிறார். பல ஆண்டுகள் பாரம்பரியக் கல்வியைக் கற்றிருந்தபோதிலும் அவற்றை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அவரது தன்வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.

நவீன பத்திப்புக் கலையின் ஊடாகவே சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சா முதலான நம் தமிழறிஞர்கள் பல சிதைந்து அழிந்து கொண்டிருந்த தமிழ் நூல்களைக் காப்பாற்றி நம் தலைமுறைகளுக்குக் கையளித்தனர்.

டாக்டர் அம்பேத்கர் போன்ற அடித்தளச் சமூகத்திலிருந்து உருவான அறிஞர் பெருமக்கள் புத்தருக்குப் பின் அதுகாறும் கண்டிராத புதிய விழிப்புணர்வு உருவாவதற்கும் காரணமாயினர்.

151 thoughts on “மெக்காலே கல்விமுறை அவதூறுகளும் உண்மையும்

  1. What i don’t understood is in reality how you’re now not really a lot more smartly-favored than you might be now. You’re very intelligent. You understand therefore significantly in terms of this topic, produced me personally believe it from a lot of numerous angles. Its like women and men are not interested except it is one thing to accomplish with Woman gaga! Your own stuffs outstanding. Always care for it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *