சாதியத்தை ஆதரித்தாரா காந்தி?

(2009 ம் ஆண்டு எழுதியது. காந்தியை ஒரு வரி கூடப் படிக்காமலும். அறிய முற்படாமலும் அவர் மீது மிகப் பெரிய ஒரு வெறுப்பு கட்டமைக்கப்பட்டது ஒரு மிகப் பெரிய வரலாற்று அபத்தம். அவற்றில் ஒன்றுதான் அவர் வருணாசிரமத்தை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்பது. வருணாசிரமத்தை அவர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டபோதும் கூட அதை அவர் கடைபிடித்ததில்லை. அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே அவரது

கம்யூனில் (தென் ஆப்ரிகா) மலம் அள்ளியது)
இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டாக அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.
scavenger Gandhi
சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் இருந்த ஏழை எளிய மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசு” ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை” (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,

“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்” என்பது.

இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா இக் கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.

1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.

மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).

சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண / அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் முதலானோர் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.

“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே” பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “அழுந்தியவர்கள்” (depressed) அல்ல; மாறாக “அழுத்தப்பட்டவர்கள்” (suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: காந்தி தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).

“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி நீலகண்ட சித்தாந்தியார் என்பவர் எழுதிய“தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” முதலிய வசை நூற்கள் வெளியிடப்பட்டன (1932). காந்தி தமிழகம் வந்தபோது சிதம்பரம் கோவில் ஆலயக் கதவுகளை தீட்சிதர்கள் சாத்தினர். “காந்தி திரும்பிப் போ’ எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குத்தூசி குருசாமி அவர்கள் தன் பத்திரிகையில் அவற்றை வெளியிட்டார்.

காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).

மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கீதை சில குறிப்புகள்

கீதையை ‘ராஷ்ட்ரீய கிரந்தமாக’ அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம் ஆண்டைக் கொண்டாடிய ‘பகவத் கீதை பிரேரண உத்சவ’த்தில் அவர் இதைவற்புறுத்தியுள்ளார். என்றைக்கு அமெரிக்கத் தலைவர் ஒபாமாவுக்கு மோடி கீதையைப் பரிசளித்தாரோ அப்போதே அது ஒரு தேசியப் புனித நூல் என்பதற்குக் கால்கோள் இடப்பட்டுவிட்டது எனவும் அது மனதுக்கு மட்டுமல்ல உடம்புக்கும் நல்லது எனவும் குறிப்பாய் மனநோய் உள்ளவர்கள் (depression) அவசியம் படிப்பது நல்லது என்கிற ரீதியிலும் பேசியுள்ளார். இதற்கு மாயாவதி, கருணாநிதி, மம்தா முதலானவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மம்தா சொல்லியுள்ளது போல ஒரு மதச் சார்பற்ற ஜனநாயக நாட்டிற்குஅரசியல் சட்டம்தான் தேசிய நூல். ஏதாவது ஒரு மதத்தினர் தம் புனித நூலாக ஏற்றுக் கொண்டதைத்தேசியப் புனித நூலாகவும் அறிவிக்க வேண்டுமானால் முதலில் அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த நாட்டை அந்தக் குறிப்பிட்ட மதத்தைக் கடைபிடிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும். வெறும்31 சதம் வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி அப்படிச் செய்ய முடியுமா என்பது ஒருபுறம் இருக்க இந்துத்துவவாதிகள் தம் hidden agenda வை நிறைவேற்றுவதற்கு இப்படி ஒவ்வொன்றாக நூல் விட்டுப் பார்ப்பதுவழக்கம் என்பது நமக்குத் தெரியாததல்ல.

இது நிற்க. கீதை குறித்து சில செய்திகள்.

  1. கீதை மகாபாரத்தத்தின் ஏராளமான கிளை நூல்களில் ஒன்று. மகாபாரத்ததின்.இதிகாசக் கட்டமைப்பிற்கு முற்றிலும் பொருந்தாத ஒரு தத்துவக் கதையாடல் அது. மொழி நடையிலும்அது முழு நூலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. மகாபாரதம் தோன்றி நீண்ட காலத்திற்குப்பின் உருவான குப்தர் காலத்துச் செவ்வியல் சமஸ்கிருத மொழியில் வெளிப்படும் அதன் காலம்,அதாவது அது இறுதி வடிவம் பெற்ற காலம் கி.பி 3ம் நூ. அதாவது அதன் வயது இப்போது அதிகபட்சம்1700 ஆண்டுகள். 5051 ஆண்டுகள் என்பதெல்லாம் வழக்கமாக இந்துத்துவவாதிகள் அடிக்கும் அறிவியலுக்குப் புறம்பான கப்சாக்களில் ஒன்று.
  2. வேதங்களை பிரமாணமாகக் கொண்ட பார்ப்பன மதத்தில் அதிருப்தியுற்று உருவான சிரமண மதங்கள் பால் மக்கள் ஈர்க்கப்படதன் பின்னணியில் அதை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இடைச் செருகல்தான் கீதை. பவுத்தம் முதலியன முன்வைத்த ‘கன்மம்’ (கர்மம்) முதலான கோட்பாடுகளுக்குள் பிராமணீய, குறிப்பாக வருணக் கோட்பாட்டைக் கொணர்ந்து, அந்த அம்சத்திற்கு அழுத்தம் கொடுத்து உருவானதுதான் கீதை. மிகவும் நுணுக்கமாகவும், தந்திரமாகவும் இது மேற்கொள்ளப்படுள்ளது.நற் செயல்களின் ஊடாகவே இறுதி விடுதலை அடைய இயலும் என்கிற போதி சத்துவக் கோட்பாட்டிற்குமாறாக ‘பக்தி’யின் மூலம் இறையடி சேர்தல்” என்கிற இந்துத்துவ அணுகலுக்கும் இங்குகால்கோள் இடப்படுகிறது. (புத்த) தர்மம் என்பதற்குப் பதிலாக வருண தருமம் (சுதர்மம்)என்கிற கருத்தாக்கமும் முன்மொழியப் படுகிறது. ‘சுதர்மம்’ எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பவுத்தம் முன் வைக்கப்பட்ட பாலி மொழியில் சொல் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  3. மகாபாரத்ததில் கீதை இடம்பெறும் சூழல் (context) இதுதான். எதிரேநிற்கும் ரத்த உறவினர்களைக் கொன்று குவித்து என்ன சாதிக்கப் போகிறோம் என நொந்து சலித்துக்கொள்கிறான் பார்த்தன். வில்லையும் அமபையும் வீசி எறிகிறான். அன்று செல்வாக்குடன் எழுந்த பவுத்த அறம், பார்த்தனின் கூற்றாக, இந்த வடிவில் விவாதத்தின் பரபக்கமாக முன்வைக்கப்படுகிறது. போரினால் வருணம் தருமம் எல்லாம் அழியுமே என்றும் சொல்கிறான். இல்லை சுயதருமம், அதாவது உன் வருண தர்மத்தை நீ காப்பதேமுக்திக்கு வழி என்று பதிலுறுக்கிறான் கிருஷ்ணன். பயன் கருதாமால், என்ன விளையும் என்பதைநோக்காமல் உன் கடமையை, அதாவது பிறவித் தொழிலைச் செய் எனக் கூறி, பித்துற்று நின்ற பார்த்தனைஊக்குவிக்கிறான். ஆத்மா அழியாது போரில் விளையும் மரணங்களைக் கருதாது உன் கொலைத் தொழிலைத்தொடர் என உபதேசிக்கிறான். அப்படியும் திருப்தியுறாது நிற்கும் பார்த்தனிடம் தன் விசுவரூபம்காட்டி அவனைப் பிரமிக்க வைத்துத் தன் வாதததை நிலை நிறுத்துகிறான். தன் நியாயத்தை நிலைநாட்ட பரமாத்மனுக்கு தன் தர்க்க பலம் மட்டும் போதவில்லை.
  4. இதே போன்ற தருணத்தில் பவுத்தம் என்ன தீர்வை முன்வைக்கிறது? புத்தரின் வரலாற்றில் ஓர் சம்பவம். ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட நாள் பகை. அப்போதைக்கப்போது பிரச்சினை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சினை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம்.முடிவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளோவோ மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.

இனக்குழு மரபுப்படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவதே அது. புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:

i. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது.இந்த மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
ii. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
iii. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று.

5. புத்த தருமத்தை ஏற்று அரசாண்ட அசோகரின் காலத்தில் போர்கள் நிறுத்தப்பட்டன.போர்ப் படைகள் கலைக்கப்பட்டு வீரர்கள் ஆக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பவுத்தஆட்சி அழிக்கப்பட்டு மீண்டும் போர், கொள்ளை முதலான கூறுகளுடன் சுங்க வம்சம் தொடங்கிஉருவான இந்துத்துவப் புந்துயிர்ப்பின் பின்னணியில் உருவானதுதான் கீதை. இன்றளவும்நேருவை எதிர்த்து இந்துத்துவம் வெறியுடன் முன்வைக்கும் ஐந்து காரணிகள் இவைதான்: i.அண்டை நாடுகளுடனான உறவுகளில் பஞ்சசீலம் (அதாவது அறம் சார்ந்த நட்புறவு) ii.இராணுவத் தன்மையற்ற அரசு (Non Military State) iii. அயலுறவில் அணி சேராக் கொள்கை iv.திட்டமிட்ட பொருளாதாரம் vவ். சோஷலிசம் ஆகியன அவரது ஆளுகையின் அடிப்படைகளாக இருந்தனஎன்பதுதான் (பார்க்க: ஆர்.எஸ்.எஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் தற்போது பா.ஜ.க எம்.பியுமான தாருண் விஜய் ,டிசம்பர் 12, 2014 ஃப்ரன்ட்லைன் இதழில் எழுதியுள்ளகட்டுரை).

போர்வெறியுடன் கூடிய ஒரு இராணுவத் தன்மை மிக்க அரசின் அடையாளமாகவே இன்று கீதை பா.ஜ.க அரசால் முன்வைக்கப்படுகிறது.

6. கி.பி9ம் நூற்றாண்டில் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் நாடெங்கும் கீதையைப் பரப்பியது வருணதருமத்தை நிலைநாட்டும் பொருட்டு என்பார் பிரேம்நாத் பசாஸ் (இந்திய வரலாற்றில்பகவத் கீதை, விடியல் பதிப்பகம்).

7. காந்தியின் வருகைக்கு முந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மீண்டும் பகவத்கீதை கொண்டாடப்பட்டது. திலகர், அரவிந்தர், பாரதி என எல்லோரும் கீதைக்கு உரை எழுதினர். ‘அனுஷீலன் சமிதி’ போன்ற தொடக்க காலத் தீவிர இயக்கங்கள் தனிநபர்தீவிரவாதத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்களைக் கொன்று அவர்களை நாட்டை விட்டுவிரட்டுவது என்கிற நிலை எடுத்துச் செயல்பட்ட போது அவர்களுக்கு உந்து சக்தியாகஇருந்தது கீதை. மிலேச்சர்களின் ஆட்சியில் வருண தர்மம் அழிகிறது. அந்த ஆட்சியை ஒழிப்பதே இன்றைய கடமை. பலனை எதிர்நோக்காமல் கருமத்தைச் செய் என உணர்ச்சியூட்ட கீதைபயன்படுத்தப்பட்டது. அரவிந்தரின் மாணிக்டோலாத் தோட்டத்தில் வெடி குண்டுகள்மட்டுமல்ல கீதைப் பிரதிகளும் கிடந்தன. குதிராம் போஸ் போன்றோர் தூக்கு மரம் ஏறுமுன் கடைசி ஆசை என்ன எனக் கேட்டபோது கையில் கீதையுடன் மரணத்தைத் தழுவ வேண்டும்என்றனர். (விரிவுக்குப் பார்க்க என் முதல் நூலான ‘சிற்றிலக்கியங்கள் சிலகுறிப்புகள்’. அதிலுள்ள ‘பாரதியும் பகவத்கீதை’யும் கட்டுரை. இரண்டாம் பதிப்பு புலம் வெளியீடு).

8. காந்தி விடுதலைப் போரின் திசையை மாற்றினார். அவரும் கீதைக்கு உரைஎழுதினார், அந்த வரலாறு காவியத் தன்மை கொண்டது. (எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூலிலுள்ள’காந்தியும் இந்துமதமும்’ கட்டுரையில் விரிவாக அது குறித்து எழுதியுள்ளேன்). “இங்கு என் உரையில் சற்று அதிக உரிமை எடுத்துள்ளேன். சென்ற அத்தியாயங்கள் ஏறத் தாழகீதையின் எளிய மொழி பெயர்ப்பாகவே அமைந்தன. இங்கோ பொது அர்த்தத்தை விளக்குவதன்பொருட்டுச் சில கருத்துக்களைச் சேர்த்துள்ளேன். சுலோகங்கள் சில விடுபட்டுள்ளன.ஆயினும் பயனுள்ள எதுவும் தவிர்க்கப் படவில்லை.” எனப் பகிரங்கமாக அறிவித்துஅவர் கீதை உரை என்கிற பெயரில் புதிய கீதை ஒன்றை எழுதினார். கீதையில் ஆங்காங்கு வெளிப்படும் அவருக்குச் சாதகமான கருத்துக்களைத்தொகுத்து கீதையை செயல், கடமை, தொண்டு ஆகியவற்றை வலியுறுத்தும் நூலாக முன்வைத்தார். பார்த்தன் போரை மறுத்துரைக்கும் முதல் அத்தியாயத்திற்கு ‘அர்ஜுனன் துக்கம்’ எனத்தலைப்பிட்டு நாம் அனைவரும் அர்ஜுனனைப் போலப் போரைக் கண்டு துக்கப்பட வேண்டும் என்றார்.நூலின் பரபக்க வாதததையே நூலின் பூர்வபக்க நியாயமாக உரை எழுதியவர் காந்தி ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இதற்காக அவர் இந்துத்துவவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்து மத விரோதி எனக் குற்றம் சாட்டப்பட்டர். கிறிஸ்தவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்றும் ஏசப்பட்டார். காந்தி அதற்கு இப்படிப் பதிலிறுத்தார்:

“அஹிம்சைய அதன் உச்ச பட்ச வடிவத்தில் வற்புறுத்துவதால் என்னை இந்து எனச் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் என்னை இந்து வேடமிட்டுள்ள கிறிஸ்தவன் என்கிறார்கள். கீதையை கலப்படமற்ற அகிம்சையைப் போதிக்கும் மகா காவியமாக நான் பொருள் கொள்வதற்காக அவர்கள் என்னைக் கீதையைத் திரிப்பதாகவும் கடுமையாக விமர்சிக்கின்றனர். கீதை சில நேரங்களில் கொலை செய்வதையும் ஒரு கடமையாகச் சொல்வதாக எனது இந்து நண்பர்கள் சிலர் சொல்லவும் செய்கின்றனர். அன்று ஒரு கற்றறிந்த சாஸ்திரியார் கீதை குறித்த என் விளக்கத்தை மிகவும் அலட்சியமாக ஒதுக்கி, ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையே என்றென்றும் நடந்து கொண்டுள்ள போட்ராட்டம் மற்றும் அந்தப் போரில் எந்தத் தயக்கமும் இரக்கமும் இன்றி தீமையை அழித்தொழிப்பது ஆகியவைதான் கீதை சொல்லும் செய்தி என்று கூறப்படும் விளக்கத்தின் மீது யாரும் சான்றளிக்கத் தேவையில்லை’ எனக் கூறினார்…. எனது மதம் என்பது என்னைப் படைத்தவனுக்கும் எனக்குமான தனிப்பட்ட விஷயம். நான் ஒரு இந்து. இந்துக்கள் அவ்வளவு பேரும் என்னை ஒதுக்கினாலும் கூட என்னை இந்து அல்லாதவனாக்க இயலாது…” (Young India, May 29, 1924).

கீதை குறித்து காந்தி சொன்னது சரியா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சினை. ஒரு பிரதியை எவ்வாறு வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கீதையை முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள் உண்மையில் கீதையை எப்படிப் பொருள் கொள்ள விரும்புகின்றனர் என்பதுதான் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.

மோடி நேருவை வெறுப்பதில் என்ன வியப்பு?

சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது. படேல் இன்னும் சிறந்த பிரதமராக இருந்திருக்க முடியும்” என்பது.

நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல.. ஜனவரி 29, 2004ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணை போனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியது” என்றது நினைவுக்கு வருகிறது.

இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச் சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது.

படேல், நேரு ஆகிய இருவர் மீதும் காந்திக்கு அன்பு இருந்த போதிலும் அவர் நேருவையே பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தது குறித்து ஜூடித் பிரவுன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இரு காரணங்களைச் சொல்வர். ஒன்று நேரு படேலைக் காட்டிலும் பன்னாட்டளவில் அறியப்பட்டவர் மட்டுமல்ல புகழ் பெற்றவருங் கூட. அடுத்து நேரு பலதரப்பட்ட அரசியல் சமூகங்களுடனும் உரையாடும் தகுதி பெற்றவர் என்பது. அதாவது பலதரப்பினரையும் கூடுதலாக உள்ளடக்கும் தன்மை பெற்றவர் நேரு. உலக அளவில் புகழ் பெற்ற, பெரிய குடும்பத்தில் பிறந்த நேரு, தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அச்சிடாமல் சிறுபான்மையினரின் உருது மொழியில் மட்டுமே அச்சிட்டது அவரது இந்த உள்ளடக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா சுதந்திரமடைந்த ஆறு மாதத்திற்குள் காந்தி இறந்து போகிறார். பின்னாளில் ‘ஜனசங்” ஆக வடிவெடுத்த இன்றைய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் அன்று காங்கிரசிலும் அரசிலும் பங்கேற்றிருந்தனர். அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலது சாரிச் சார்புடையவர்கள். ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.

அம்பேத்கருக்கு வாக்களித்தபடி இந்து திருமணச் சட்டம் உட்படப் பலவற்றை அவரால் நிறைவேற்ற இயலாமல் இருந்தது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டபோது அது பின்னாளில் மிகப் பெரிய ஆபத்தாக உருப் பெறப் போவது குறித்து நண்பர் ஒருவருக்கு நேரு எழுதிய கடிதம் மனதை உருக்கும். “பந்த்ஜி (உ.பி.முதல்வர்) நினைத்தால் அந்தச் சிலைகளை அங்கிருந்து அகற்றிவிட இயலும். செய்ய மாட்டேன் என்கிறாரே…” என்கிற தொனியில் அக் கடிதம் எழுதப்பட்டிருக்கும்.

எனினும் எல்லோரையும் அனுசரித்து, தனது கொள்கையை விடாமல் இந்த நாட்டை மதச் சார்பற்ற திசையில் கொண்டு சென்றது நேருவின் முதல் மகத்தான சாதனை. இந்து திருமணச் சட்ட வரைவில் கையொப்பமிட இயலாது எனச் சொன்ன ராஜேந்திரப் பிரசாத்தின் கருத்தை மீறி அச்சட்டத்தைப் பிரித்துத் தனித் தனியாக தன் காலத்திலேயே நிறைவேற்றவும் செய்தார்.

நேரு உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தத்தம் மாநிலத்தில் எவ்வளவு உயர் பதவிகளை நிரப்பியுள்ளனர், அதில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கி இருந்தார். ம.பி முதல்வர் சுக்லா, முஸ்லிம்களில் சிலர் தவறான போக்கைக் கையாளுகின்றனர் என எழுதியபோது, அப்படி இருந்தால் அதற்குப் பெரும்பான்மைச் சமூகத்தவரான நமக்குத்தான் அதிகப் பொறுப்புள்ளது, சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெரும்பான்மைச் சமூகம் பெற வேண்டும் எனப் பதில் எழுதினார்.

ஒரு திறந்த பன்மைச் சமூகம் என்பதற்கு அப்பால் இங்கு ஜனநாயக விழுமியங்கள் வேர் கொள்வதிலும் நேருவின் பங்கு முக்கியமானது. மொழி வாரி மாநிலம் அமைத்தது, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இங்கு ஆங்கிலம் நீடிக்கும் என உறுதி மொழி அளித்தது, இருநூறாண்டு கால காலனிய ஆட்சியில் சீரழிந்திருந்த தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது முதலான அம்சங்களிலும் நேருவின் தொலை நோக்குப் பார்வைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அரசுத் திட்டமிடலின் கீழ் இயங்கும் தொழிற் துறையின் மூலமாகத்தான் அடித்தள மக்கள் பயன்பெறுவர் என்கிற வகையில் அவர் சோவியத் ரஷ்யாவின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளை நமது சூழலுக்குத் தக வடிவமைத்தார்.

கார்பொரேட்களின் வேட்பாளரான மோடி போன்றோரால் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் மொழிவாரி மாநிலங்களையும் நடைமுறைப் படுத்திய நேருவை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?

“குறித்துக் கொள்ளுங்கள் இந்தியாவிற்கு ஆபத்து கம்யூனிஸ்டுளால் வரப் போவதில்லை. வலது சாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அது வரப் போகிறது….. பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதத்தைக் காட்டுலும் ஆபத்தானது..” என்றெல்லாம் சொன்ன நேருவை மோடிகள் எதிர்ப்பதில் என்ன வியப்பு?

மோடிபேச்சின் இரண்டாவது அம்சம் படேலை ஒரு இந்துத்துவவாதியாகச் சுவீகரித்துக் கொள்வது.

படேலை நேரு அளவிற்கு பன்மைத் தன்மையைப் போற்றுபவராக ஏற்க இயலாதபோதும் அவரை இந்துத்துவச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது.

ஆர்.எஸ்.எஸ் மீது படேலுக்கு ஒரு அனுதாபம் இருந்தபோதும், அவ்வமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்கிற நேருவின் கருத்தை அவர் ஏற்காத போதும், இந்துத்துவ சக்திகளின் வழிமுறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக காந்தி கொலையை அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக இந்துத்துவவாதிகள் படேலிடம் இரக்கத்தை எதிர்பார்த்தபோது அவரது பதில்கள் இப்படி அமைந்தன:

“(இந்துத்துவவாதிகளின்) பேச்சுக்கள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக உள்ளன. இந்துக்களை உற்சாகப் படுத்துவதற்காகவும் அமைப்பாக்குவதற்காகவும் இப்படி விஷத்தைப் பரப்ப வேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்க வேண்டியதாயிற்று….. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்….” – இவை படேல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கருக்கு எழுதிய கடித வாசகங்கள் (செப் 11, 1948).

“காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை ஆகியவற்றின் பங்கு குறித்து………எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த இரு அமைப்புகளின் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள் உருவாக்கியிருந்த சூழலே இந்த அதிர்ச்சியளிக்கும் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது…” – இவை படேல் இந்து மகா சபைத் தலைவர்களில் ஒருவரானா ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடித வாசகங்கள் (ஜூலை 18, 1948).

டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்,எஸ்,எஸ் குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், ”பாசிசத்திற்குக் காரணமாகக் கூடிய இரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ் கைக்கொண்டுள்ளது” என இவர்களைப் பாசிஸ்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தன்னைச் சின்ன சர்தார் என அழைத்துக் கொள்ளும் மோடிக்கு, படேலின் இறுதிச் சடங்கில் நேரு கலந்துகொண்ட செய்தி தெரியாதது போலவே இவையும் தெரியாது போலும்.

காந்தியடிகளும் மதசார்பின்மையும்

(மதவெறிக்குப் பலியான மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் பிலிப், டிமோதி என்கிற அவரது இரு குழந்தைகளின் நினைவாக நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் ஆற்றிய உரை)

இங்கே ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும், அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் நன்றி.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கு இந்த நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படும் யாரும் அவரவர் விருப்பப்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எந்த ஒரு மதத்தையும் கடைபிடிப்பதற்கும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்கிற நிலை இருந்தபோதும், மதத்தைப் பரப்புகிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி, ஒடிஷா மாநிலத்தில் அடித்தள மக்கள் மத்தியில் தொழுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த தியாக மனப்பான்மை உடைய ஒரு மருத்துவரும், அவரது சிறு குழந்தைகள் இருவரும் எரித்துக் கொல்லப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு களங்கம். தாங்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை, மருத்துவ சேவைதான் ஆற்றி வந்தோம் என, கொல்லபட்ட மருத்துவர் ஸ்டெய்ன்சின் மனைவி கிளாடிஸ் அவர்கள் கூறியபோதும், இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இந்தக் கொலைகளுக்கு மதமாற்றமும் ஒரு காரணமாக இருந்தது என்கிற மதவெறிப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டது வேதனைக்குரியது.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்துள்ள நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மதச் சார்பர்ற ஜனநாயகக் குடியரசாக நமது நாடு ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு நமது அரசியல் சட்டம் அடிப்படையாக உள்ளது. நமது அரசியல் சட்டத்தின் 25,26,27 வது பிரிவுகள் இந்த நாட்டின் குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக்கியுள்ளது.

பல்வேறுபட்ட மதத்தினரும் வாழ்கிற ஒரு நாடு என்கிற வகையில் இத்தகைய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியதில் மகாத்மா காந்திக்கு முக்கிய பங்குண்டு. அவரது கருத்துக்களும், அரசியலும் மட்டுமின்றி அவரது வாழ்வும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மறுப்பது அல்ல. அதற்கு பெயர் நாத்திகம் அல்லது இறை மறுப்புக் கோட்பாடு, மாறாக மதச்சார்பின்மை என்பதில் எதேனும் ஒரு மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிப்பதற்குத் தடை இல்லை. அதேபோலப் பிற மதங்களைத் தீவிரமாகக் கடைபிடிக்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்பதையும், இந்த மத விஷயங்களில் அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது என்பதையும் நாம் ஏற்பதுதான் மதச்சார்பின்மை.

காந்தியடிகளுக்கு முன் SECULARISM (மதச்சார்பின்மை) என்பது தத்துவ வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கம். தத்துவ வரலாற்றில் இடைக்காலம் அல்லது மத்திய காலத்தை “தத்துவம் மதத்திற்கு அடிமையான காலம்” என்பார்கள். அரசு, கல்வி, மருத்துவம், இலக்கியம், தத்துவம் எல்லாமே மதத்திற்குக் கட்டுபட்டிருந்த காலகட்டம் அது. 15ம் நூற்றாண்டு வாக்கில் நியூட்டன், கலீலியோ, தெகார்த்தே போன்ற அறிவியலாளர்கள் பகுத்தறிவின் அடிப்படையில் உலகை விளக்கத் தலைப்பட்டனர். மறுமலர்ச்சிக் காலம் எனச் சொல்லப்படும் இக்காலகட்டத்தில் அரசு, மருத்துவம், இலக்கியம், தத்துவம் என்பதெல்லாம் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இவ்வாறு மதத்தையும் தத்துவத்தையும் தனித்தனியே பிரிப்பதைத்தான் Secular என்கிற சொல்லின் மூலம் குறிப்பிட்டு வந்தனர்.

இவ்வாறு தத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கத்தை அரசியலுக்குப் பிரயோகித்தவர் காந்தி. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறக்கூடிய நிலை ஏற்பட்டபோது எதிர்கால இந்தியா எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு அரசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை காந்தி எடுத்தார். உருவாகும் புதிய குடியரசை மதத்திலிருந்து பிரித்துவிடவேண்டும் என்றார். ஆனால் இன்னொரு சாரர் இந்தியா, இங்குள்ள பெரும்பான்மை மதமாகிய இந்துமதத்தைச் சார்ந்த அரசாக அமைய வேண்டும் என்றனர். புதிய இந்தியா, ‘இந்து ராஷ்டிரமாக’ அமைய வேண்டும் என்றனர்.

ஆனாலும் மக்கள் மத்தியில் பெருஞ் செல்வாக்குடன் “தேசத் தந்தையாக” ஏற்றம் பெற்றிருந்த காந்தியின் கருத்தே வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அவர் மிகப் பெரிய விலை கொடுக்க நேரந்தது. இந்து ராஷ்டிரம் வேண்டியவர்கள் அவரைக் கொன்றார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததால்தான் காந்தியைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் அளித்தபோதும் உண்மை அதுவல்ல. பாகிஸ்தான் என்கிற பேச்சு இல்லாதபோதே 1930 தொடங்கி குறைந்த பட்சம் ஐந்து முறை அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தி வரையறுத்த தேசியத்திற்கும், அவரைக் கொலை செய்தவர்கள் வரையறுத்த தேசியத்திற்கும் இருந்த வேறுபாடே இந்தக் கொலை முயற்சிகளின் பின்புலமாக இருந்தது.

காந்தி வரையறுத்த தேசியத்தில் இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், இன்னும் பல மொழியினர், சாதியினர் எல்லோரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம உரிமைகளுடன் வாழ உரிமை பெற்றிருந்தனர். இப்படி எல்லோரையும் உள்ளடக்கி நின்றதால் அவரது தேசியம் “உள்ளடக்கும் தேசியம்” (inclusive nationalism) என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்கிற எல்லோரும் சம உரிமை பெற்ற இதியர்கள். இதை “புவிசார் தேசியம்” (territorial nationalism) என்பார்கள்.ஆனால் காந்திக்கு எதிர்நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை “விலக்கிய” ஒரு தேசியத்தை (exclusive nationalism) முன்வைத்தனர். இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்ந்த போதிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம் நிலையினராக. சம உரிமைகள் இல்லாதவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதனை அவர்கள் “கலாச்சார தேசியம்” (cultural nationalism) என அழைத்துக் கொண்டனர்.

காந்தி தனது மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரவலாக்கி மக்களின் ஒப்புதலை அதற்குப் பெற்றார். தங்கள் விருப்பம் சாத்தியமில்லமற் போனதைக் கண்டவர்கள் அவரைக் கொன்றார்கள். அவர்கள் பிற மதத்தாரைப் பொறாதவர்கள். சிறுபான்மை மக்களின் உறிமைகளை மதிக்காதவர்கள்.காந்தி பிற மதங்களை மதித்த போதிலும் தன்னை ஒரு இந்து என அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார். சுட்டு வீழ்த்தப்படும்போதும் “ஹேராம்” என்று கூறித்தான் மண்ணில் வீழ்ந்தார், அந்த வகையில் மதச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தன அவரது வாழ்வும் அரசியலும்.

நமது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி இங்குள்ள பிற மதத்தினரை உள்வாங்கி உட்செரிக்க வேண்டும் (aasimilate) என்பார். அதாவது மற்றவர்கள் தங்கள் வித்தியாசங்களை, அடையாளங்களைத் துறந்து பெரும்பான்மையினருடன் அய்க்கியமானால்தான் அவர்களைக் குடிமக்களாக ஏற்க முடியும் என்கிறார். ஆனால் காந்தியோ.

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. “சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுல்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.” என்பார். மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று அவர்களோடு சமமாக வாழ்வதும் இப்படிக் குடிமக்களின் சம உரிமையை ஏற்உ, மத விஷயங்களிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதுந்தான் காந்தி அடிகள் முன்வைத்த மதச்சார்பின்மை.

மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துக்கள்– தமிழில்: அ.மார்க்ஸ்

1933 தொடங்கி காந்தியடிகள் தன் எழுத்துக்கள், உரைகள் மற்றும் உரையாடல்களில் மதச்சார்பின்மை குறித்தும் மதசார்பற்ற அரசு குறித்தும் அதிகம் பேசத் தொடங்கினார். காந்தியியல் ஆய்வாளரான அனில் நவ்ர்யா இவற்றைத் தொகுத்துள்ளார்.

1. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக 1933ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் மத்திய சட்டமன்றம் ஒரு சட்ட வரைவை முன்வைத்தது. “மனித குலத்தின் அற உணர்வுக்கு ஒவ்வாத ஒரு வழமைக்கான (அதாவது தீண்டாமைக்கான)” ஒப்புதலை, “மதச்சார்பற்ற சட்ட” அணுகல்முறை ரத்து செய்வதைத் தான் வரவேற்பதாகக் காந்தி கூறினார். 1933 மே 6 அன்று, “ஒரு மதச்சார்பற்ற அரசின் சட்டம் (தீண்டாமைக்கு) ஒப்புதல் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அளிக்கக் கூடவும் கூடாது” என்றார். தேவை இல்லாமல் அரசு இது போல மத விஷயங்களில் தலையிடக் கூடாது என இதற்கு தீண்டாமையை ஆதரிப்போரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, “(இது போன்ற) பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு மதத்திலும் கூடத் தலையீடு செய்ய வேண்டி உள்ளது. தேவை இல்லாத தலையீட்டை மட்டுமே அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.

2. 1935, ஜன, 27 அன்று மத்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்தியில் பேசும்போது, “ஒட்டுமொத்தமான இந்துச் சமுதாயமே தீண்டாமை ஒழிப்பிற்கு எதிராக இருந்தபோதும், ஒரு மதச் சார்பற்ற சட்டமன்றம் இத்தகைய கண்ணோட்டத்தைச் சகித்துக் கொள்ளக்கூடாது என்றே நான் அறிவுரைப்பேன்” என்றார்.

3. 1942, ஜன, 20 அன்று, பாகிஸ்தான் பிரிவினைத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது காந்தி கூறியது: “நிதி வருமானம், சுகாதாரம், காவல்துறை, நீதித்துறை, பொது நிலையங்களைப் பயன்படுத்துதல் முதலானவற்றில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன கருத்து முரண்பாடு இருக்க முடியும்? மதப் பயன்பாடுகள், நம்பிக்கைகள், அவற்றைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மட்டுமே வேறுபாடுகள் இருக்க முடியும். ஒரு மதச் சார்பர்ற அரசுக்கு அது குறித்துக் கவலை இல்லை”.

4. 1946 செப்டம்பரில் ஒரு கிறிஸ்தவ மதபோதகரிடம் காந்தி இவ்வாறு கூறினார்: “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தை அரசிடமிருந்து பிரித்து விடுவேன். நான் மதத்தின் பெயரால் ஆணையிடுவேன். மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விஷயம். அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசு மக்களின் பொது நலம், ஆரோக்கியம், அயல் உறவுகள், நாணயம் அச்சிடல் முதலானவற்றை மட்டுமே பார்த்துக்கொள்ளுமே ஒழிய, எக்காரணம் கொண்டும் அவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. அது (மத நம்பிக்கை) தனிப்பட்டவர்களின் பிரச்சினையாகவே இருக்கும்”

5. சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள், கொல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியைச் சேர்ந்த ரெவரென்ட் கெல்லாஸிடம் உரையாடும்போது, “அரசு மதச்சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. பொது நிதியிலிருந்து மதக் கல்வி பயிற்றுவிப்பதை அது எந்நாளும் அனுமதிக்காது. எந்த ஒரு குடிமகன் அல்லது குடிமகளும் நாட்டின் பொதுச் சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் வரை, எந்த ஒரு மத நம்பிக்கையையும் கடைபிடிக்க அவருக்கு உரிமை உண்டு. மதப் பிரச்சாரப் பணியில் எந்த (அரசு) தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால் அந்நிய ஆட்சியில் இருந்ததுபோல எந்த மத அமைப்பும் அரசுச் சலுகைகளைப் பெற இயலாது” என்றார்.

6. ஆக 17, 1947 அன்று காந்தி, நார்கேல்டங்காவில் பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய உரை: “(எதிர்கால இந்தியாவில்) மத வேறுபாடுகளின்றி எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும். அரசு முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கும். மத நிறுவனம் எதற்கும் அரசு ஆதரவு இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாகக் கருதப்படுவர்.”

7. ஆக், 22, 1947, கொல்கத்தா தேசபந்து பூங்காவில் ஆற்றிய உரை: “மதம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அப்படி அது முறையாக நடைமுறைப்படுத்தபட்டால் அரசியலில் எந்தச் சிக்கலும் ஏற்படாது… அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மதச் சார்பற்ற அரசை உருவாக்க மனப்பூர்வமாகச் செயல்பட்டால், நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இயலும். அது உலகுக்கே வழிகாட்டியாக அமையும்.”

8. 1947 நவ 15 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “எல்லாக் குடிமக்களும் சம உரிமை பெறும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசை”த் தன் குறிக்கோளாக அறிவித்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த தீர்மானங்களை இயற்றியது. அன்றைய மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி அதை வரவேற்று ஒவ்வொரு தீர்மானத்தையும் விளக்கி உரையாற்றினார்.

9. 1947 நவ 28: சோமநாதபுரம் கோவிலை அரசுச் செலவில் சீர்திருத்திக் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த காந்தி, குருநானக் பிறந்த நாள் உரையாற்றும்போது, “எல்லோருக்குமான அரசாக நாம் இதை உருவாக்கியுள்ளோம். இது ஒரு மதச்சார்பற்ற அரசு. அதாவது எந்த மதத்தையும் சாராத அரசு. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மத அரசும் அல்ல இது. எனவே மத அடிப்படையில் அது தன் நிதியைச் செலவிடாது” என்றார்.

10. கொல்லப்படுவதற்கு ஆறு நாட்கள் முன் (ஜன 24, 1948), “ஒரு மதச் சார்பற்ற அரசிற்கு ஆலோசனைகள் சொல்லி, வழிநடத்த சேவையும் அர்ப்பணிப்பும் மிக்க, ஆக்க பூர்வமான, நன்கு திரட்டப்பட்ட அமைப்பு ஒன்று தேவை. அமைச்சர்கள் அவர்களிடமிருந்து உற்சாகம் பெற்று வழிநடத்தப்பட வேண்டும்.” என்கிற பொருளில் எழுதினார்.

மேற்குறித்த காந்தியின் கருத்துக்கள் அனைத்தும், அவரது இறுதிக்காலத்தில், மதச்சார்பர்ற இந்தியா குறித்து அவர் முன்வைத்தவை. Secularism என்கிற ஒரு தத்துவ வகையினத்தை (philosophical category), ஒரு அரசியல் சொல்லாடலாக (political discourse) மாற்றியமைத்த காந்தியின் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

1. மதத்திலிருந்து அரசைப் பிரித்துவிட வேண்டும்.

2. மத நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் அரசுத் தலையீடு இருக்காது.

3. மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒன்றால் வழிநடத்தப்படும் மக்கள் பொதுச் சட்டத்தை மீறாத வகையில் தமது நம்பிக்கைகளைக் கடை பிடிக்கலாம். பிரச்சாரம் செய்யலாம்.

4. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அரசின் ஆதரவோ, அரசு நிதியிலிருந்து உதவிகளோ இருக்காது.

5. மத விஷயங்களில் அரசு தலையிடாது என்ற போதிலும், தீண்டாமை முதலான அடிப்படை மானிட நெறிகளுக்குப் புறம்பான வழமைகளை ஒரு மதம் கடைபிடிக்கும்போது அதில் தலையிட்டு அதை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு.

6. ஒருவர் மதச் சார்பற்றதாக இருப்பது, அல்லது ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கடைபிடிப்பது என்பது அவர் தனது மத நம்பிக்கையைத் தீவிரமாகக் கடைபிடிபதற்கு எதிரானதல்ல.

சஞ்சை சுப்பிரமணியத்தைக் கொஞ்சம் வாசிப்போம்

வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர் அறிமுகமாகவில்லை ஆயினும் அவர்களளவிற்கு மிக முக்கியமானவர் சஞ்சய். சமகால அரசியலில் வரலாறு மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்றைய சூழலில், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனத்தை (obscurantism) எதிர்கொள்ள கொசாம்பி, ரொமிலா முதலானோர் பெரிதும் உதவினர். 15 முதல்18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திய “நவீனத்துவ” வரலாற்றாசிரியரான சஞ்சையின் “இணைப்புண்ட வரலாறு” (connected history) எனும் கருத்தாக்கத்தையும் வாசித்துச் செரித்திருந்தோமானால் இந்தியச் சூழலில் ‘மதச்சார்பின்மையின்’ பொருளை நாம் இன்னும் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கவும், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனங்களை இன்னும் கூர்மையாக எதிர் கொண்டிருக்கவும் இயலும் எனத் தோன்றுகிறது.

இந்த நோக்கில்தான் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ‘தீராநதி’ இதழில் இரு மாதங்கள் சஞ்சை சுபிரமணியம் குறித்தும், அவரது வரலாற்றுக் கோட்பாடு குறித்தும் எளிய முறையில் கவனம் ஈர்த்திருந்தேன், எனினும் தொடர்ந்து அதனை அடுத்த கட்டத்திற்கு என்னாலும் கொண்டு செல்ல இயலவில்லை.

வரலாற்றைத் தேசிய எல்லைக்குள்ளோ, இல்லை ஒரு பண்பாட்டு எல்லைக்குள்ளோ மட்டும் சுருக்கி விடாமல் உலகளாவிய தொடர்புகளுடன் இணைத்துப் புரிந்து கொள்வதன் மீது சஞ்சை கவனத்தை ஈர்க்கிறார். வரலாறு என்பது நமக்கு வேத, சங்க காலங்களுடனோ, இராமயண, மகாபாரதங்களுடனோ, இல்லை பவுத்த, சமண, சோழ காலங்களுடனோ முடிந்துவிடவில்லை. இன்றைய இந்திய உருவாக்கத்தில் இந்தக் காலங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலங்களும் மிக மிக முக்கியமானவை. எனினும் நாம் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. ஏராளமான இலக்கியங்கள், வரலாறு எழுது முயற்சிகள், மத, தத்துவச் சொல்லாடல்கள், சகல துறைகளிலும் வெளிநாட்டாரின் தொடர்புகள் நிகழ்ந்த இக்காலகட்டம் மிகமிக முக்கியமான ஒன்று. இந்தக் காலகட்டத்தையும், இன்றைய வரலாற்றுருவாக்கத்தில் அதன் பங்களிப்பையும் விளங்கிக் கொள்ள சஞ்சையின் அணுகல் முறைகளும் அவர் இது தொடர்பாக எழுதியுள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட நூற்களும் பெரிதும் உதவும்.

சஞ்சையின் மிகச் சில கட்டுரைகள், விவாதங்கள், நேர்காணல்கள், அவரது நூற்கள் குறித்த விமர்சனங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘அவுட்லுக்’ இதழில் அஷிஷ் நந்தியின் கருத்துக்களை மிகக் கடுமையாக அவர் விமர்சித்து எழுதிய குறுங்கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று,

“மதச்சார்பின்மை” எனும் கருத்தாக்கம் மேலைச் சூழலிலும் இங்கும் எப்படி வேறுபட்டு உள்ளது என்பது குறித்த அவரது கவன ஈர்ப்பும், இவற்றை ஒன்றே போலக் கருதி ஒன்றை மற்றவற்றால் அளக்க முயல்வதின் பிழைகளையும் சஞ்சை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது மிக முக்கியமான ஒன்று, மேலைச் சூழலில் உள்ளது போன்ற இறுக்கமாக வரையறுக்கப்பட்ட மதக் கட்டமைப்பு இங்கிருந்ததில்லை. மேலைச் சூழலில் secularism என்பது இந்த மத இறுக்கத்திலிருந்து நிறுவனங்களைப் பிரித்து நிறுத்துவதாக இருந்தது. அந்தத் தேவையை மக்கள் எளிதில் உணரக் கூடிய நிலை அங்கிருந்தது. இங்கு அப்படி இறுக்கமாக வரையறுக்கப்பட்ட ஒற்றை மதம் இல்லாதது ஒரு பக்கம், பல்வேறு வலிமையான மக்கட் தொகுதிகளுக்கிடையிலான (communities) அதிகார ஊடாட்டம் முதலியன அந்தத் தேவையை இங்கு உருவாக்கவில்லை. இத்தகைய மக்கட் தொகுதிகள், நாடு, பெரிய நாடு, வலங்கை, இடங்கை முதலான அமைப்புகள் ஆகியன ஒருவகையான ‘போட்டி இறையாண்மைகளாக’ (contested sovereignty) அமைந்திருந்தன. இது இங்கு ஒருவகையான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி இருந்ததும் மேலைச் சூழலில் நடந்தது போன்ற ஒரு secularisation இங்கு உருவாகாமற் போனதற்கான காரணங்கள் எனலாம். இது குறித்தெல்லாம் நாம் மேலும் விளங்கிக் கொள்ள சஞ்சை நமக்குப் பெரிதும் பயன்பட வாய்ப்புள்ளது.

இங்கு secularisation என்பது வெறுமனே மதத்திலிருந்து நிறுவனங்களைப் பிரிப்பது என்கிற அளவில் நிற்காமல், மேலும் அதிகமான ஆழமும், முக்கியத்துவமும் மிக்க கருத்தாக்கமாக உள்ளது; அது முற்றிலும் ஒரு இந்திய வகைப்பட்ட கருத்தாக்கம் என்னும் சஞ்சையின் கருத்து, அசிஷ் நந்தி போன்றோரின் இந்துப் பாரம்பரியமே secular ஆனது என்னும் கருத்திலிருந்து மிக நுண்மையாகவும், வன்மையாகவும் வேறுபடுவது குறிப்பிடத் தக்கது. அதாவது நந்தி போன்றோர் secularism குறித்த மேலைக் கருத்தாக்கத்தை அப்படியே ஏற்று அது இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்தது எனச் சொல்ல, சஞ்சையோ இங்கு secularism என்பதன் பொருளே வேறு எனச் சொல்வதிலுள்ள நுணுக்கமான வேறுபாடு முக்கியமானது.

நவம்பர் 30, 2013 ஆங்கில இந்து நாளிதழில் வெளி வந்துள்ள சஞ்சை சுப்பிரமணியத்தின் நேர்காணலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நேர்கண்டது : வைஜு நவ்ரேன்.

‘Indian secularism is about mediating between different communities’

Professor Sanjay Subrahmanyam, eminent Indian historian, has been elected to the Collège de France in Paris, a prestigious centre of learning, where he will hold a Chair in Early Modern World History. Educated at the Delhi School of Economics, Professor Subrahmanyam taught economics and history in India, France and the U.K. before joining the University of California, Los Angeles (UCLA) in 2004 as Professor and Doshi Chair of Indian History. Earlier, in 2002, he was the first holder of the Chair in Indian History and Culture at Oxford. He was elected to the American Academy of Arts and Sciences in 2009. He spoke to Vaiju Naravane. Excerpts:

You are a historian of Modernity. What are the kinds of shifts and upheavals we are witnessing today?

In terms of political organisation, there have been many shifts and upheavals. The world I’m dealing with in the 17th century is still really one of monarchies. But the changes today are also visible in the technologies in movement and transportation, changes in notions of distance, social relations and what social groups are, down to the level of the family.

What about past and present migration patterns? How have these changed in the long term? How has the debate on migration changed?

Earlier, there were waves of migration that took place in the context of empire-building and imperial expansion. For instance, migration to colonial America, and even in the late 19th and early 20th centuries, was broadly within a matrix of imperial expansion. There were arguments made that we might not accept today: that these were “empty lands” being settled — arguments that were still being made in Australia in the 1940s and 1950s. After World War I and the Depression, European or white migration became a minority phenomenon. What we are looking at now are often population movements from non-European parts of the world, and it is not being done in the context of political restructuring. Today’s constituted states are thus resisting, wishing to shape developments, preferring one type of migrant to another — racially, professionally, etc. However, if the world population density remains unequally distributed like this, there have to be adjustments. But it’s one thing to make broad arguments and another to come down to the fact of how people move and how they are allowed to move.

Do you see a great deal of international tension in the coming years? And how does that link up with the fear of Islam and migration? Are we going to see dual, interlinked tensions?

Yes, certainly. Currently, in the U.S., their main obsession is with population movements from Latin America, but in Europe, the matter is posed differently. At times, this question of Islam is an excuse. Look at the question of the Roma, or “gypsies.” This has nothing to do with Islam, yet absurd ideas, medieval myths of them being child stealers, are resurfacing. This is suggestive of a larger paranoia. In France and Italy, for instance, there are many Bangladeshis, but the public often does not perceive them as Muslims. On the other hand, the Turks, with whom the West has had dealings for a very long time, and who made efforts over the 20th century to abandon a part of their culture to become “western,” got nowhere when they tried to enter the European Union. Apparently, Greece has more in common with Europe than Turkey!

The question of immigration leads me to secularism, which has been one of your concerns. What is the main difference in the way secularism is practised in India and in France?

First, there are differences linked to the concepts of secularism and “laicité” and, second, with the institutional practices as they exist today. The conditions of the emergence of laicité are to be seen in the context of the religious wars — and a history going back to the French Revolution and its aftermath, where it was thought that the Catholic Church had a hold on power that posed a problem at various levels. Therefore, we get the argument that the State had to be extracted from the Church’s grasp. Even today, when the problem of Muslims and Islam is posed, it’s actually posed subconsciously in the context of the Catholic Church. When they talk of the veil or the voile in France, they are really thinking of the Catholic nuns, and many French see Islam as a symbol of oppression of women, as they once saw the Church.

In India, we are dealing with a situation where for a very long period of time, ever since the establishment of the first Muslim polities, you had a kind of shifting equilibrium between many different communities. Since there was no such thing as a constituted Hinduism with defining institutions, nobody ever saw the problem as extracting the state from religion as such. It was actually the problem of mediating and finding a balance between different communities and groups. The metaphor was often that of the king as the doctor and the kingdom as the body, where the doctor balances the humours in the body.

Is the flurry of anti-Islam and anti-mosque laws passed in France, Belgium or Switzerland a case of excess, of not respecting the balance between the many communities and forces that make up society?

Yes, it is a question of whether they are capable of redefining for themselves their way of thinking. Can France, in particular, get out of this “laicité” bind? Because it is really not the appropriate language with which to talk about relationships between communities. What French republicanism has produced is an extreme form of inflexibility, where they don’t have the appropriate conceptual tools to deal with a sizeable non-Christian minority. I once suggested to the great ire of the readers of Le Monde that the French might even want to look for institutional solutions in India.

How do you look at French schizophrenia — on the one hand, they are obsessed with the idea of decline and, on the other, of rebuilding their greatness through the propagation of the French language and culture overseas?

It’s not entirely unique to France. The division of Germany allowed France the space to develop their cultural shadow during four decades after the war. The Germans have largely given up on language, and now accept English while the British console themselves with the idea that the Americans have become their heirs. The problem for France is that there is no “overseas France” that really emerged. Moreover, the French have a system that is heavily dominated by the state even with regard to cultural production. So, when people talk of decline they are actually talking of the relative decline of the French state. France is facing a world that is hostile to state activity — Europe itself is diluting the powers of individual states. The question is: can we imagine a France where the state plays a lesser role? Even writers and thinkers like Pierre Bourdieu were ultimately the social products of state intervention, exemplifying its triumph whether they were critical of the state or not. They were not the products of strong civil society institutions.

You have been elected to the Chair in the Early Modern World History at the Collège de France. What are the specific issues on which you have decided to focus?

The Chair has been given a very broad definition and you then pick an overall theme for each year. The theme for this year is global history in the 17th century. The way in which history has typically been organised at the Collège de France has been either as national histories or “civilizational histories.” So, this is something of an experiment. They felt they were interested in my approach over the last 15 to 20 years, looking into histories on a more flexible basis, what I call “connected histories” — flexible histories from a geographical perspective.

Could you share some of the topics with us?

This year’s topics include the so-called global crisis in the 17th century, which some see as related to climate change, for instance. But I shall also treat specific questions. For instance, the 17th century is a great moment for the history of piracy.

A Frenchman called Alexandre Exquemelin wrote the most famous book on the subject. It was a phenomenon which had to do with the political conditions and contested sovereignty in Europe, and in particular, England in the context of the civil war; where you get contested sovereignty. Piracy is often a question of contested sovereignty, of a breakdown of the state.